Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞான சித்தியார் பகுதி- 2.4

66. ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவு கொண்டு காரணன் அருளானாகில் கதிப்பவர் இல்லையாகும்.
நாரணன் முதலாய் உள்ள சுரர் நரர் நாகர்க்கு எல்லாம்
சீர்அணி குருசந்தானச் செய்தியும் சென்றிடாவே.

இறைவன் தனது அளவற்ற கருணையினால் திருஉருவம் கொண்டு ஆரணங்களையும், ஆகமங்களையும் அருளிச் செய்திலனேல் உயிர்கள் வீடு பேறு அடைதல் இயலாது ஆகும். திருமால் முதலிய தேவர்கட்கும் மானுடர்க்கும் நாகர் முதலியோர்க்கும் சிறப்புடைய குரு மரபில் வைத்து அருள் பாலிப்பதும் செல்லாதாகும்.

கதிப்பவர்- நற்கதி அடைவர். குரு சந்தானச் செய்தி- ஆசிரியத் திருமரபில் வைத்து அருள் உபதேசம் வழங்குதல். இறைவன் உருவத் திருமேனி கொள்ள வேண்டுவதன் இன்றியமையாமை இப்பாடலில் கூறப்பட்டது. உயிர்கள் உணர்த்தினால் அன்றித் தாமாக உணரமாட்டாதவை. ஆதலால் மறைகளும் ஆகமங்களும் குருமரபும் அவற்றுக்குத் துணையாதல் வேண்டும் என்பது கருத்து.

67. உருஅருள்; குணங்களோடும் உணர்வு அருள்; உருவில் தோன்றும்
கருமமும் அருள்; அரன்தன் கரசரணாதி சாங்கம்
தரும் அருள்; உபாங்கம் எல்லாம் தான் அருள் தனக்கு ஒன்று இன்றி
அருளுரு உயிர்க்கு என்றே ஆக்கினன் அசிந்தன் அன்றே.

சிவபெருமானின் திருவடிவம் அருளே. ஆதலால் அவனுடைய ஐந்தொழில்களும் அத்திருவருளில் இருந்து தோன்றுகின்ற பண்புகளும் அருளே ஆகும். அவன் திருஉருவில் காட்சி தருகின்ற திருக்கை, திருவடி முதலிய உறுப்புக்களும் அத்திருவடிவில் அவன் ஏந்தியுள்ள மான், மழு மூவிலைச் சூலம் ஆகியனவும் அருளே வடிவானவை ஆகும். அவன் உடுத்தியுள்ள ஆடையும் புனைந்துள்ள மாலையும் போன்றனவும் அருளின் வடிவே ஆகும். தனக்கு என அவன் திருவடிவம் மேற்கொள்வது இலன். அவன் மேற்கொள்ளும் திருமேனி உயிர்களின் பொருட்டே ஆகும்.

உரு- திருமேனி. குணங்கள்- இறைவனுக்கு உரிய எண்குணங்கள். கருமம்- அவனது ஐந்தொழில்கள். கரசரணாதி- திருக்கை திருவடி முதலியன. சாங்கம்- உறுப்பை விட்டு நீங்காது அவன் ஏந்தியுள்ள மூவிகைச் சூலம், மான், மழு முதலியன. உபாங்கம்- உறுப்பில் பூண்டுள்ள ஆடை, மாலை போன்றவை. அசிந்தன்- உயிர்களின் சிந்தனைக்கு எட்டாதவன்.

68. உலகினை இறந்து நின்றது அரன் உரு என்பது ஓரார்;
உலகு அவன் உருவில் தோன்றி ஒடுங்கிடும் என்றும் ஓரார்;
உலகினுக்கு உயிரும் ஆகி உலகும் ஆய் நின்றது ஓரார்;
உலகினில் ஒருவன் என்பர் உருவினை உணரார் எல்லாம்.

தனது திருவருளால் இறைவன் திருமேனி கொண்டது உயிர்களின் பொருட்டே. எனினும் அரன் திருவடிவம் உலகினைக் கடந்தது என்பதை இவ்வுலகினர் உணரமாட்டார். இறைவன் திரு உருவில் இருந்தே உலகம் தோன்றி ஒடுங்கும் என்பதனையும் உணரார். இறைவனே உலகத்துக்கு உயிராய் விளங்குகிறான் என்பதனையும், அவனே உலகு ஆக நின்றதனையும் உணரார்.. இவ்வாறு சிவபெருமானின் இயல்பினை உணராத மாந்தர் தாம் கூறும் கடவுளரில் சிவபிரானும் ஒருவன் என்று கொள்வர்.

சுருதிகள் சிவபெருமானை விசுவாதிகள் (உலகைக் கடந்தவன்) என்றும், விசுவகாரணன் (உலகத்தோற்றத்துக்குக் காரணமானவன்) என்றும், விசுவ அந்தர்யாமி (உலகத்துக்கு உள்ளே நிறைந்தவன்) என்றும் விசுவரூபி (உலகே வடிவானவன்) என்றும் கூறுவதை உணராத மாந்தர் சிவபெருமானையும் தாம் கூறும் ஏனைக் கடவுளரில் ஒருவன் என்றே அறியாமையால் கூறுவர் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது.

69. தேவரின் ஒருவன் என்பர். திருஉரு சிவனே; தேவர்
மூவராய் நின்றது ஓரார்; முதல் உருப்பாதி மாதர்
ஆவதும் உணரார்; ஆதி அரி அயற்கு அறிய ஒண்ணா
மேவுஉரு நிலையும் ஓரார்; அவன் உரு விளையும் ஓரார்.

சிவபெருமானுடைய திரு உருவத்தினையும் அவனுடைய மேம்பாட்டையும் அறிய இயலாதவர் நான்முகன், திருமால், உருத்திரன் என்னும் மூவரில் அவனும் ஒருவன் என்பார். சிவபெருமானே அருளராயும் நின்றதை இவர் உணரார். மாது ஒரு பாகனாய் அருளுவரை இவர்கள் உணரார். திருமாலும் நான்முகனும் திருமுடியும் திருவருளைத் தேடிக் காணாத பெருமை உடையவன் சிவபெருமான் என்பதை இவர்கள் உணரார். அருவமும் உருவமும் அரு உருவமும் ஆகிய அவற்றைக் கடந்தவனாகவும் இருப்பவன் சிவபெருமான் என்பதை இவர்கள் உணரார்.

70. போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்;
யோகியாய் யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்;
வேகி ஆனாற் போல் செய்த வினையினை வீட்டல் ஓரார்;
ஊகியா முடர் எல்லாம் உம்பரின் ஒருவன் என்பர்.

சிவபெருமான் திருமேனி கொள்ளும் போது போக வடிவம் மேற்கொண்டு உயிர்களுக்கு இன்ப வாழ்க்கையை அருளுவான் என்பதையும் உணரமாட்டார். சில நேரங்களில் அவன் யோகத் திருமேனி மேற்கொண்டு உயிர்களுக்கு வீடு பேறு அருளுவதையும் மாட்டார்கள். மற்றும் சில நேரங்களில் சிவபெருமான் கொண்டவனைப் போல் திருமேனி தாங்கி உயிர்களின் வினைகள் கெடுப்பான் என்பதையும் இவர்கள் உணரமாட்டார்கள். இவ்வாறு இறைவன் திருமேனி கொள்ளும் முறைமையினை ஆராய்ந்து வலிமை இல்லாதார் சிவபெருமானைத் தேவர்களில் ஒருவனாகக் கொள்ளுவார்.

சிவபெருமானே ஒப்பற்ற இறைவன் என்பதை அறியாதவர்கள் அவர்கள் மற்றைத் தேவர்களுடன் ஒருங்கு வைத்து எண்ணும் தவறினைச் செய்பவர்கள் என்பது கருத்து. வேகி- வேகம் உடையவன். வீட்டல்- அழித்தல்.

71. ஒன்றோடு ஒன்று ஒவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு
நின்றலால் உலகம் நீங்கி நின்றனன் என்றும் ஓரார்;
அன்றி அவ்வேடம் எல்லாம் அருள்புரி தொழில் என்று ஓரார்
கொன்றது வினையைக் கொன்று நின்ற அக்குணம் என்று ஓரார்.

ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட போக வடிவம், யோக வடிவம், வடிவம் ஆகியவற்றை சிவபிரான் தானே தரித்துக் கொண்டு நிற்கிறார் அவன் உலகத்தினைக் கடந்தவன் என்பதனையும் இல்லையோர் உணரமாட்டார்கள். அதுவும் அல்லாமல் வேகவடிவம் இறைவன் சிலரை ஒறுத்தனன் என்பதற்குப் பொருள் அவர்களுடைய தீவினையை நீக்கி அவர்களுக்கு அருள் பாலித்தான் என்பதுவே என இவர்கள் அறியார்.

அருளே வடிவமான சிவபெருமான் சிலர் மீது சினம் கொண்டு அவர்களைக் கொன்றான் என்பது பொருந்துமா என்ற வினாவிற்கு இப்பாடல் விடையளிக்கிறது. இறைவன் உயிர்களை ஒறுப்பதும் அவற்றின் வினையைக் கெடுப்பதற்கே என்று ஆசிரியர் விளக்கினார்.

72. நாயகன் கண்நயப்பால் நாயகி புதைப்ப, எங்கும்
பாய் இருள் ஆகிமூட, பரிந்து உலகினுக்கு நெற்றித்
தூயநேத்திரத்தினாலே சுடர் ஒளி கொடுத்த பண்பின்,
தேயம் ஆர் ஒளிகள் எல்லாம் சிவன் உருத் தேசது என்னார்.

ஒரு சமயம் இறைவி தன் திருவுள்ள மகிழ்ச்சியினால் இறைவனது இரு கண்களையும் தனது இரு கரங்களால் மூடித் திருவிளையாட்டு அயர்ந்தாள். அப்போது உலகு எங்கும் இருள் பரந்து மூடியது. உலகத்தில் உள்ளார்களிடத்தில் கொண்ட பரிவினால் இறைவன் தனது தூய்மையான நெற்றிக் கண்ணைத் திறந்தனன். அப்பொழுதே உலகம் முழுவதும் ஒளி படர்ந்தது. இவ்வாறு அருளிய சிவபிரானுடைய திருமேனியே பேரொளிப் பிழம்பு என்று இவர்கள் அறிந்திலர். நயப்பு- மகிழ்ச்சி, பாய்தல்- பரந்தல், தேயம்- உலகம், தேசு- ஒளி.

73. கண்ணுதல் யோகு இருப்ப காமன் நின்றிடவேட் கைக்கு
விண்உறு தேவர் ஆதி மெலிந்தமை ஓரார்; மால்தான்
எண்ணிவேள் மதனை ஏவ எரிவிழித்து இமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து உயிர்க்குப் பேரின்பம் அளித்தது ஓரார்.

ஒரு சமயம் நெற்றிக்கண்ணினை உடைய சிவபெருமான் யோகத்தில் இருந்தருளினன். அப்பொழுது இன்பச் சுவைக்கு அதிதெய்வமாகிய மன்மதன் இருந்த போதும் உலகில் இன்ப வேட்கை இல்லாது நலியலாயிற்று. இதைக் கண்ணுற்ற திருமால் மன்மதனை ஏவிச்சிவபெருமான் மீதுமலர்க்கணை தொடுக்குமாறு தூண்டினான். சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை நோக்க அவன் எரிந்து சாம்பலானான். அதன் பின்னர் சிவபெருமான் மலை அரையன் பெற்ற உமையம்மையைக் கூடி உலகத்து உயிர்களுக்கு இன்பச் சுவையை அளித்தருளினான். இந்த நிகழ்ச்சியினையும் இவர்கள் உணரார்.

இறைவன் உலகினுக்கு உயிராய் நின்றான் என்று 68-வது பாடலில் கூறப்பட்டது. அதனை இவ்விரண்டு நிகழ்ச்சிகளால் ஆசிரியர் விளக்கினார்.

74. படைப்பு ஆதித் தொழிலும் பத்தர்க்கு அருளும்பா வனையும் நூலும்
இடப்பாகம் மாத ராளோடு இயைந்து உயிர்க்கு இன்பம் என்றும்
அடைப்பானாம் அதுவும் முத்தி அளித்திடும் யோகும் பாசம்
துடைப்பானாம் தொழிலும் மேனி தொடக்கானேல் சொல் ஓணாதே,
படைப்பு முதலிய ஐந்தொழில்கள் இயற்றுவதற்கும், மெய்யடியார்க்கு அருளுதல் பொருட்டு இறைவன் செய்யும் பாவனையாகிய ஊன நடனம் இயற்றுவதற்கும் ஆரணம் ஆகமங்களாகிய நூற்களை இயற்றுவதற்கும் உயிர்களுக்கு இன்பம் தருவதற்காக உமையம்மையோடு இயைந்திருக்க வேண்டுதற்கும், உயிர்களுக்கு வீடுபேறு அளிக்க யோகத்தில் இருந்து காட்ட வேண்டுதற்கும், உயிர்களின் பாசத்தைத் துடைப்பதாகிய தொழிலுக்கும் இறைவனுக்கு உருவத் திருமேனி இன்றியமையாததாயிற்று.

மாதவச் சிவஞான முனிவர் படைப்பாகிய ஆதி தொழில் என்று வாதுள ஆகமத்தில் கூறிய செய்திகளையும் தமது உரையில் விரிவாகச் சொல்லுவது மிக்க நயமுடையது.

75. உருமேனி தரித்துக் கொண்டது என்றலும் உரு இறந்த
அருமேனி அதுவும் கண்டோம் அரு- உரு ஆன போது
திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தம்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே.

இறைவனுக்கு உருவத் திருமேனி உண்டு என்பதனையும், அதனை அவனாகவே எடுத்துக் கொள்ளுவான் என்பதையும் இதுவரையில் சொன்ன பாடல்களில் கண்டோம். உருவம் என்பது பருவடிவும், அருவம் என்பது அதனது நுட்பத்தையும் குறிப்பன. ஆதலால் உருவத் திருமேனி உண்டு என்ற அளவிலே உருவைக் கடந்த அருவத் திருமேனியும் இறைவனுக்கு உண்டு என்பதை அறிந்தோம். இவை இரண்டும் உள்ளனவாகையால் இரண்டுக்கும் பொதுவாகிய அருஉருவத் திருமேனியும் இறைவனுக்கு உண்டு என்பது பெறப்படும். எனவே இறைவன் இம்மூன்று திருமேனிகளும் உடையவன் என்பது விளங்கும். அவையும் மாயையினால் ஆகிய நம்முடைய கருமேனியைக் கழிக்க வந்த கருணையின் வடிவமே ஆகும்.

76. அத்துவா மூர்த்தி ஆக அறைகுவது என்னை? என்னின்
நித்தனாய் நிறைந்து அவற்றின் நீங்கிடா நிலைமையானும்
சித்துடன் அசித்திற்கு எல்லாம் சேட்டிதன் ஆதலானும்
வைத்ததாம் அத்துவாவும் வடிவுஎன மறைகள் எல்லாம்

இறைவனின் திருமேனி மாயையின் வடிவம் அன்று அருள் வடிவமே ஆகும் எனின் ஆகமங்கள் யாவும் இறைவனை அத்துவாமூர்த்தி என்று கூறுதல் எவ்வாறு பொருந்தும் என்று சிலர் வினவக்கூடும். இறைவன் என்றும் உள்ளவன். ஆயினும் ஆறு அத்துவாக்கள் உள்ளும் நிறைந்து அவற்றை விட்டு நீங்காத நிலைமை உடையவன். அறிவுடைப் பொருள் அறிவற்ற பொருள் ஆகியவற்றையும் உடனாய் நின்று இயக்குபவன். இவ்வாறு ஒன்றாயும், உடனாயும், வேறாயும் நிற்கும் இறைவனை அத்துவாமூர்த்தி என்று ஆகமங்கள் ஏற்றுரையாகக் கூறின.

இறைவனுடைய அத்துவா மூர்த்தம் அவனுடைய உபசாரத் திருமேனி என்று வழங்கப்பெறும்.

77. மந்திரம் அத்து வாவின் மிகுத்து ஒரு வடிவம் ஆகத்
தந்தது என் அரனுக்கு? என்னின் சகத்தினுக்கு உபா தானங்கள்
விந்து மோ கினி மான் மூன்றாம்; இவற்றின் மேலாகி விந்துச்
சிந்தை ஆர் அதீதம் ஆன சிவசத்தி சேர்ந்து நிற்கும்.

இறைவனுக்கு அத்துவா வடிவம் உண்டு எனக் கூறுகின்ற அருள் நூல்கள் மந்திரங்களை அவற்றுள் சிறப்பானது என்று கூறுவது ஏன்? என்ற வினா எழும். உலகிற்கு முதற்காரணங்கள் தூய மாயை தூவா மாயை, பிரகிருதி மாயை என்று மூன்றாகக் கூறப்பெறும். இவற்றுள் தூய மாயையே மிக உயர்ந்ததாகும். சிந்தையைக் கடந்த சிவசத்தி தூயமாயையைப் பொருந்தி நிற்கும்.

உபாதானம்- முதற்காரணம். விந்து- தூயமாயை மோகினி- தூவா மாயை, மான்- பிருகிருதி மாயை.

78. சுத்தம் ஆம் விந்துத் தன்னில் தேரன்றிய ஆதலானும்
சத்திதான் பிரேரித் துப்பின் தான் அதிட்டித்துக் கொண்டே
அத்தினால் புத்தி முத்தி அளித்தலால் அரனுக்கு என்றே
வைத்த ஆம்- மந்திரங்கள் வடிவு என மறைகள் எல்லாம்.

மந்திரங்கள் என்பன தூயமாயையில் தோன்றியன. அவை சிவசத்தியால் செலுத்தப்படுவன. மந்திரங்களைக் கணித்தவர்களுக்கு அதன் பயனைக் கொடுத்தற் பொருட்டு அவற்றையே வாயிலாகக் கொண்டு உயிர்களுக்கு இன்பமும் வீடு பேறும் அளித்தலாகிய பயனைத் தருவன. இக்காரணங்களால் ஆகமங்கள் யாவும் சிவபெருமானுக்கு மந்திர வடிவம் சிறப்பு உரிமை உடையது என்று கூறுகின்றன.

மந்திரங்கள் பதினொன்று என்பர். அவற்றைப் பஞ்ச பிரமமந்திரம் என்றும் சடங்க மந்திரம் என்றும் வகைப்படுத்துவர். பிரேரித்தல்- செலுத்துதல், அதிட்டித்தல்- இடம் கொள்ளுதல்.

79. மந்திரம் அதனில் பஞ்ச வடிவமாகத்
தந்திரம் சொன்னவாறு இங்கு ஏன்? எனில் சாற்றக் கேள் நீ
முந்திய தோற்றத் தாலும் மந்திர மூலத்தாலும்
அந்தம் இல் சத்தி ஆதிக்கு இசைத்தலும் ஆகும் அன்றே.

மந்திரங்கள் யாவற்றுள்ளும் பஞ்சப் பிரம மந்திரங்களின் வடிவையே ஆகமங்கள் சிறந்து எடுத்துக் கூறுகின்றன. அது ஏனெனில் ஏனைய மந்திரங்களுக்கு எல்லாம் முற்பட்டுத் தோன்றியதனாலும், அவற்றுக்கு மூலம் ஆதலாலும், அழிவற்ற ஆதிசத்திக்கு இம்மந்திரங்கள் உபசார வடிவமாகக் கொள்ளப்படும்.

தந்திரம்- ஆகமங்கள். அந்தமில் சத்தி ஆதிக்கு என்ற சொற்களை அந்தமில் ஆதி சத்திக்கு என்று மாற்றி வைத்துப் பொருள் கூற வேண்டும் என்று சிவஞான முனிவர் உரை வரைகிறார்.

80. அயன் தனை ஆதி ஆக அரன் உரு என்பது என்னை?
பயந்திடும் சத்தி ஆதி பதிதலால் படைப்பு மூலம்
முயன்றனர் இவரே ஆயின் முன்னவன் தன்னை முற்றும்
நயந்திடும்; அவன் இவர்க்கு நண்ணுவது ஒரோவொன்று ஆமே.

நான்முகன் முதல் ஐந்து தனித்தனி தேவர்களை சிவபெருமானின் திருவருளால் மேற்கொண்ட வடிவங்களே என்று ஆகமங்களில் கூறப்படுகின்றமை எவ்வாறு பொருந்தும் என்று சிலர் கேட்பர். படைப்பு முதலிய ஐந்தொழில்களையும் செய்கின்ற ஐந்து சிவ சத்திகள் ஒவ்வொன்றும் நான்முகன் முதலிய ஒவ்வொருவரிடமும் பதிந்து நின்று அவர்களைச் செலுத்துகின்றனர். அந்த இயைபைக் கருதி இவ்வாறு ஆகமங்கள் ஏற்றுரையாகக் கூறுகின்றன. ஐந்தொழில்களையும் நான்முகன் முதலிய ஐவரே செய்திடுவார் என்னில் தலைவனாகிய இறைவன் வேண்டப்படான். முன்னவனாகிய சிவபெருமானே ஐந்தொழில்களையும் இயற்றுவான். நான்முகன் முதலியோர் ஒவ்வொரு தொழிலையே இயற்றுதற்கு உரியர்.

செனனி, ரோதயித்திரி, ஆரணி என்று சத்திகள் மூன்றாகக் கூறப்படும். இவற்றுள் செனனி உலகத்தைப் படைக்கும். ரோதயித்திரி உலகத்தைக் காத்திடும். ஆரணி என்பது உலகத்தை ஒடுக்கும்.

No comments:

Post a Comment