Friday 18 August 2017

நம் வாழ்வை விருத்தியாக்கும் விருத்தபுரீஸ்வரர் !



நாம் விரும்பும் வரங்களை அருள்பவர், நமது வாழ்க்கையை விருத்தி யாக்குபவர் ஆதலால் அந்த இறைவனுக்கு அருள்மிகு விருத்த புரீஸ்வரர் என்று திருநாமம். தன்னுடைய இல்லாள் ஸ்ரீதர்மசம்வர்த் தினியுடன் இவர் கோயில் கொண்டிருக்கும் தலம்- அன்னவாசல்.
புதுக்கோட்டையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலம், அப்பர் பெருமானால் பாடப் பெற்றதாம். ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் ஆலயம், பலகோடி ஆண்டுகளுக்கு முன் பூதங்களால் கட்டப்பட்டது என்பது செவி வழித் தகவல். புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் கீழ் வரும் இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம் வில்வம்;  நாகப் பிரதிஷ்டையுடன் திகழ்கிறது.
குழந்தைகளை ஸ்வாமிக்குத் தத்துக்கொடுக்கும் பிரார்த்தனை, இந்தக் கோயிலின் சிறப்பம்சம். இந்தப் பிரார்த்தனைக்காக வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், முன்னதாக அரிசி, வெல்லம், எள் ஆகிய மூன்றையும் கலந்து எடுத்துச் சென்று, வில்வமரத்தை வலம் வந்து மரத்துக்கு அருகில் சமர்ப்பிக்கிறார்கள் (இதை, சுற்றிப்போடுதல் என்கின்றனர்). அதன் பிறகு, ஸ்வாமி சந்நிதானத்தில் குழந்தையை தத்துக் கொடுக்கும் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். இதனால், குழந்தைகள் கல்வி-கேள்விகளிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள்; அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வழிபாடுகளுக்கு மட்டுமல்ல விழாக்களுக்கும் பேர் போனது ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் ஆலயம். இங்கு மாசி மகம், 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் அமாவாசை முடிந்ததும் காப்பு கட்டுகிறார்கள். விழாவையட்டி அனுதினமும் சிறப்பு வழிபாடுகளும் ஸ்வாமி வீதியுலாவும் நடைபெறுகின்றன. மகத்துக்கு முதல் நாளன்று தேரோட்டம். மாசிமகத்தன்று, திருஊரணி எனப்படும் கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது பக்தர்கள், குளத்தில் நீராடி முளைப்பாரி எடுத்து வேண்டிக்கொள்கிறார்கள். இந்த முளைப்பாரியை தங்களின் விளைநிலங்களில் போட்டால் விளைச்சல் செழிக்கும் என்பது நம்பிக்கை.
அதேபோல், மாசி மகத்தன்று கர்ப்பிணிப் பெண்கள் சுவாமியின் தீர்த்தத்தைப் பருகினால், பிரசவம் நல்லபடியாக அமையும் என்கிறார்கள். அன்று ஸ்ரீவிருத்தபுரீஸ்வரருக்கு மாவிளக்கு ஏற்றி, எதை நினைத்து நாம் பிரார்த்தித்தாலும், அந்தப் பிரார்த்தனை விரைவில் நிறைவேறுமாம்!
நாமும் மாசிமகத்தன்று விருத்தபுரீஸ்வரரை தரிசித்து வழிபட்டு மகத்தான வாழ்வு பெறுவோம்.

No comments:

Post a Comment