116. இங்கு நாம் சிலர்க்கு பூசை இயற்றினால், இவர்களோ வந்து
அங்குவான் தருவார்? அன்றேல் அத்தெய்வம் அத்தனைக்காண்;
எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது
அங்கு நாம் செய்யும் செய்திக்கு ஆணைவைப்பால் அளிப்பன்.
உலக வாழ்க்கையில் தாய் தந்தை ஆசிரியர் ஆகியோரை நாம் வழிபடுகிறோம். அந்த வழிபாட்டின் பயனை மறுமையிலே நமக்குத் தருவதற்கு அவர்கள் வல்லவர் அல்லர். அது போன்றே உலகத்தார் கொண்ட முப்பத்து முக்கோடி தேவர்க்கும் செய்யப்படும் வழிபாட்டின் பயனை அத்தெய்வங்கள் வழங்க வல்லன அல்ல. சிவபிரான் ஆகிய முதல்வனே தன் ஆணையைத் தனது ஏவல் நிற்கும் அந்தந்த தெய்வத்தின் இடத்து வைத்துப் பயனை வழங்குவான்.
117. காண்பவன் சிவனேயானால் அவன் அடிக்கு அன்பு செய்கை
மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்து செய் அறங்கள் எல்லாம்
வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே.
மேற்கூறியவற்றால் எந்தக் கடவுளை வழிபட்டாலும் அதனை அறிந்து அருள வல்லவன் சிவபிரானே என்பது தெளிவுறும். எனவே சிவபிரானின் திருவடிகளை அன்புடன் வணங்குவதே மாண்புடைய பேரறம் ஆகும். சிவபிரானின் திருவடியை மறந்து செய்கின்ற அறச் செயல்கள் எல்லாம் வீண் செயலாகவே முடியும். ஏனெனில் அறம் என்பது சிவபெருமானால் விதிக்கப்பட்டவற்றைச் செய்தலும் விலக்கப்பட்டவற்றை நீக்குதலும் ஆகும். இவ்வாறு அன்பு செய்யும் மெய்யடியார்க்கு விருப்பு வெறுப்பைக் கடந்தவனாகிய சிவபிரானே திருவருள் பாலிப்பான். எனவே அத்தகைய வழிபாட்டை மேற் கொள்வாயாக.
118. தாபர சங்கமங்கள் என்று இரண்டு உருவில் நின்று,
மாபரன், பூசை கொண்டு மன்னுயிர்க்கு அருளை வைப்பன்.
நீபரன் தன்னை நெஞ்சில் நினைவையேல், நிறைந்த பூசை;
ஆய் பரம் பொருளை நாளும் அர்ச்சி நீ அன்பு செய்தே
இயங்கியல் வடிவம், நிலைஇயல் வடிவம் என்று இரண்டு வடிவங்களைத் தாங்கி பெருமைக்குரிய சிவபெருமான் உயிர்கள் இயற்றும் வழிபாட்டை ஏற்றுக் கொண்டு அவற்றுக்குத் தன்னுடைய அருளை வழங்குவான். இத்தகைய வழிபாடுகள் புறவழிபாடுகள். இறைவனை உள்ளத்தின் உள்ளே கண்டு அகவழிபாடு செய்வோர்க்கு அப்பெருமானே அருள் பாலிப்பான். எனவே பரம்பொருளாகிய சிவபெருமானை நாள்தோறும் போற்றி அன்போடு வழிபடுவாயாக.
சிவனடியார்கள் வழிபாடு செய்யும் போது அதனை மூன்று வகையாகச் செய்வார்கள் என்று பெரியோர் வகைப்படுத்துவர். அவை குருவழிபாடு, லிங்க வழிபாடு, சங்கம வழிபாடு என்பன. சங்கமம் என்ற சொல் இயக்கும் இயல்பு உடையது என்ற நேரடிப் பொருளைத் தரும், இங்கு அச்சொல் மெய்யடியார்களைக் குறித்தது. திருக் கோவிலில் எழுந்தருளி உள்ள சிவலிங்கத் திருமேனியை வழிபடுவது தாபரம் என்ற வகையில் அடங்கும். ஏனெனில் அத்திருமேனி நிலை இயல் வடிவத்தைக் கொண்டது. குரு சங்கம வழிபாடுகள் இரண்டும் ஒன்றாக சங்கம வழிபாட்டுள் அடங்கும். இவை தவிர அகவழிபாடு ஆற்றுதல் கொள்ளப்படும்.
119. அரன் அடிக்கு அன்பர் செய்யும் பாவமும் அறமது ஆகும்;
பரன் அடிக்கு அன்பு இலாதார் புண்ணியம் பாவம் ஆகும்;
வரம் உடைத் தக்கவ் செய்த மாவேள்வி தீமை ஆகி;
நரரினில் பாலன் செய்த பாதகம் நன்மை ஆய்த்தே,
சிவபெருமானுடைய திருவடிக்கு அன்பு பூண்ட மெய்யடியார்கள் வழிபாடு செய்யும் காலத்தில் அவர்கள் செய்கிற பாவச் செயல்களும் அறமே ஆகும். தலைவனாகிய சிவனது திருவடிகளுக்கு அன்பு இல்லாதவர்கள் செய்யும் புண்ணியங்களும் பாவமே ஆகும். தன்தவ வலிமையால் பல வரங்களைப் பெற்ற தக்கன் இயற்றத் தொடங்கிய சிறந்த வேள்வி பாவச் செயலாக முடிந்தது. சிறிய பெருந்தகையான சண்டீசர் தமது தந்தையின் காலைத் தடிந்த பாதகம் நன்மையாக முடிந்தது.
சிவபெருமானை ஒதுக்கி விட்டுத் தன் முனைப்போடு வேள்வி செய்யத் தொடங்கினான் தக்கன். அந்த வேள்வி அவனுக்கு நன்மையைத் தராமல் தீமையில் முடிந்தது. இந்த வரலாறு கந்த புராணத்தில் இடம் பெறுகிறது
சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய சண்டீசர் மணலைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்துப் பாலால் திருமஞ்சனம் ஆட்டி வழிபட்டார். அதனைத் தடுக்க முயன்ற தமது தந்தையின் காலை அருகில் கிடந்த சிறு கோலால் எறிந்தார். அதுவே வாளாகித் தந்தையின் கால்கள் இரண்டையும் துணித்து எறிந்தது. இவ்வாறு பெரியபுராணத்தில் கூறப்படுகிறது.
120. மறைகள் ஈசன்சொல்; அச்சொல் வழிவாரா உயிரை வைக்கும்
சிறைகள் மா நிரயம்; இட்ட பணிசெய்வோர் செல்வத்தோடும்
உறையும் மாபதிகள் உம்பர் உலகங்கள்; யோனிக்கு எல்லாம்
இறைவன் ஆணையினால் இன்பத் துன்பங்கள் இயைவதாகும்.
மறைகள் சிவபெருமானால் அருளப்பட்டவை. மறைகளில் விதித்த வழிப்படி நடவாத உயிர்களைச் சிறையிட்டு வைப்பதற்காக அமைக்கப்பட்ட இடமே நிரயம் என்பர். துறக்கம் என்பது மறைநெறி வழுவாது நடந்த உயிர்கள் இன்பத்தோடு வாழ்வதற்கு இறைவனால் அமைக்கப் பட்டதாம். இது போன்றே பிற உலகுகளில் வாழ்கிற உயிர்களுக்கும் இறைவன் தனது ஆணையால் இன்ப துன்பங்களை ஊட்டுவான்.
121. ஆணையால் அவனி மன்னன் அருமறை முறைசெய்யாரை
ஆணையின் தண்டம் செய்தும் அரும்சிறை இட்டும் வைப்பன்;
ஆணையின் வழிசெல்வோருக்கு அரும்பதி செல்வம் நல்கி
ஆணையும் வைப்பன்; எங்கும் ஆணையே ஆணை யேகாண் !
உலகத்தை ஆள்கின்ற வேந்தர்கள் அவர்களுடைய ஆணைகட்கு ஏற்ப நடவாதாரை ஒறுத்தும் சிறையிட்டும் வைப்பார்கள். அதே வேந்தர்கள் தம்முடைய ஆணைக்கு இணங்க நடப்பவர்களைப் பாராட்டி அவர்களுக்கு மாளிகையும் செல்வமும் அளித்து அதிகாரமும் வழங்கி வாழ்விப்பார்கள். இவ்வுலகில் ஒப்பற்ற பெருவேந்தனாகிய இறைவனும் இவ்வாறே தண்டம் செய்தும் தகுதிக்கு ஏற்ப உயர்த்தியும் தன் ஆணையை நடத்தி அருளுவான்.
122. அரசனும் செய்வது அருள்வழி- அரும்பாவங்கள்
தரையுளோர் செய்யில், தீய தண்டலின் வைத்து தண்டத்து
உரைசெய்து தீர்ப்பன்; பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்;
நிரயமும் சேரார்; அந்த நிரயம் முன் நீர்மை ஈது ஆம்.
உலகத்து அரசர்கள் செய்யும் தண்டத் தொழிலும் அவன் வழங்கும் வரிசைகளும் இறைவனின் அருள்வழியே நடப்பதாகும். நாட்டில் உள்ளோர் பாதகங்கள் செய்தால் அரசன் அவர்களுக்குக் கொடிய தண்டனையை வழங்குவான். அதற்கு மேலும் கொடுமை செய்தால் அதனினும் கடுமையாகத் தண்டிப்பேன் என்று கூறி அச்சுறுத்தி அவர்களைத் திருத்துவான். இறைவனும் பாவம் செய்தவர்களை நரகத்தில் இடுவது அவர்களைத் திருத்துவதன் பொருட்டேயாகும். இவ்வாறு ஒறுக்கப்பட்டவர் இறைவனின் ஆணைப்படி நடப்பார்கள். தாம் நிரயத்தைச் சேராமல் இருக்கும் வண்ணம் ஒழுகுவார்கள்.
பாவம் செய்தால் தண்டனை வழங்குவான் என்று கூறவே புண்ணியம் செய்தால் அதற்குரிய மேம்பாட்டை வழங்குவான் என்பதும் பெறப்படும்.
இந்த மூன்று பாடல்களாலும் முன்னர் 94- வது பாடலில் தராபதி போல (அரசனைப் போல)த் தருவான் என்று கூறிய கருத்து ஆசிரியரால் விரித்துரைக்கப்பட்டது.
123. அருளினால் உரைத்த நூலின் வழிவாராது அதன்மம் செய்யின்
இருள்உலாம் நிரயத் துன்பத்து இட்டு இரும் பாவம் தீர்ப்பன்;
பொருள் உலாம் சுவர்க்கம் ஆதி போகத்தால் புணியம் தீர்ப்பன்;
மருள்உலாம் மலங்கள் தீர்க்கும் மருந்து இவை வயித்திய நாதன்
இறைவன் தன்னுடைய அருளினால் உரைத்த நூல்களின் வழி நில்லாது ஒருவன் பாவம் செய்வானாகில் அவனை இருள் செறிந்த நரகத்தில் இட்டுத் துன்பத்தை நுகர வைத்து அவனுடைய பெரும் பாவத்தினைத் தீர்ப்பான். அந்நூல்களில் உரைக்கப்பட்ட ஒழுக்கத்தின் வழி நின்றவனை இன்ப நுகர்வுக்கு உரிய துறக்கத்தில் இட்டு அவன் செய்த புண்ணியத்தினைத் தீர்ப்பான். பாவம் புண்ணியம் என்ற இரண்டு வினைகளுமே உயிர்கள் கட்டில் அகப்பட்டுப் பிறந்து இறந்து வருவதற்குக் காரணமான நோய்கள். ஆதலால் வைத்தியநாதனாகிய சிவபெருமான் அந்த நோயைத் தக்க மருந்தால் தீர்ந்து அருளுவான்.
வேதாகம நூல்வழி நில்லாமை பாவம். நூல் வழி நின்று அருள் வழி நில்லாமை புண்ணியம். இரண்டும் உயிர்க்கு நோய். ஆகையால் அவற்றால் பந்தம் உறாமைப் பொருட்டு சிவபிரனாகிய வைத்தியன் இன்ப துன்பங்களாகிய மருந்தை நுகர்விப்பான் என்பது மாதவச் சிவஞான முனிவருடைய உரை. தீராத நோயாகிய பிறவிப் பெரும் பிணியைத் தீர்த்தலால் சிவபெருமான் வைத்தியநாதன் எனப்பட்டான்.
124. மருத்துவன் உரைத்த நூலின் வழிவரின் பிணிகள் வாரா;
வருத்திடும் பிணிகள் தப்பின் தப்பிய வழியும் செய்யத்
திருத்தினன் மருந்து செய்யாது உறும்பிணி சென்றும் தீர்ப்பன்;
உரைத்தநூல் சிவனும் இன்னே உறுங்கன்மம் ஊட்டித் தீர்ப்பன்
உடல் கூற்று இயல் உணர்ந்த மருத்துவ நூலில் விதிக்கப்பட்டபடி வாழ்ந்தால் நோய்கள் வரமாட்டா. அந்த நெறி தவறி வாழ்வார்க்கு நோய் தோன்றி உடலை வருத்தும். நோய் தோன்றிய பின்னரும் மருத்துவன் மருந்து கொடுத்து அந்நோயைத் தணிப்பான். சில நேரங்களில் மருந்து இன்றியும் கொடை, வழிபாடு முதலியன செய்வித்தும் நோயைத் தணிப்பான். இது போன்றே சிவபிரானும் உயிர்களைப் பொருந்திய இருவினையாகிய நோயைப் பல திறத்தானும் ஊட்டித் தீர்ப்பான்.
திருப்புள்ளிருக்கு வேளூர்ப் பதிகத்தில் அப்பரடிகள் இறைவனை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீரா நோய் தீர்த்து அருளவல்லான் என்று போற்றுவதை இங்கு நினைவு கூர்க.
125. மண்ணுளே சிலவியாதி மருத்துவன் அருத்தியோடும்
திண்ணமாய் அறுத்துக் கீறித் தீர்த்திடும் சிலநோயெல்லாம்
கண்ணிய கட்டி பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன்;
அண்ணலும் இன்பத் துன்பம் அருத்தியே வினை அறுப்பன்.
மருத்துவன் இவ்வுலகில் தோன்றுகின்ற சில நோய்களை அக்கரையோடும் திண்ணமாகவும் கத்தியால் கீறியும் அறுத்தும் தீர்ப்பான். வேறு சில நோய்களுக்கு வெல்லமும், பாலும் கலந்த மருந்துகளைத் தந்து தீர்ப்பான். அது போலவேஇறைவனும் உயிர்களின் இருவினையாகிய நோய்களைத் தீர்க்கும் பொழுது வினைப் பயனுக்கு ஏற்றபடி அவற்றுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுத்து அறுத்து நீக்குவான்.
இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் ஆகையால் அவன் உயிர்களுக்கு அதனதன் வினைப் பயனுக்கு ஏற்பவே இன்பத் துன்பங்களை ஊட்டுவான் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது. இம்மூன்று பாடல்களாலும் முன்னர் 94-ம் பாடலில் தரணிபோல (மருத்துவன் போல) இறைவனே வினைப்பயன்களைத் தீர்ப்பான் என்பது விளக்கப்பட்டது.
126. பூதனா சரீரம் போனால் புரி அட்ட ரூபந்தானே
யாதனா சரீரம் ஆகி இன்பத்துன்பங்கள் எல்லாம்
நாதனார் ஆணை உய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத்
தீது இலா அணுவாய்யோனி சேர்ந்திடும்- சீவன் எல்லாம்.
உலகத்தில் நாம் தாங்கிய உடல்கள் ஐம்பூதக் கூட்டத்தால் ஆயவை. இப்பரு உடம்பை விட்ட நுண்ணுடம்பைப் பற்றிக் கொள்கின்றன. அதன் பிறகு வினைப் பயன்களை அனுபவித்தற்கு உரிய வெவ்வேறு உடல்கள் உள்ளன. ஆதலால் இறைவனின் ஆணைப்படி வினைக்கு ஏற்ற உடம்புகளைப் பெற்றுத் துறக்கத்தில் சென்று இன்பத்தையும், நிரயத்தில் சென்று துன்பத்தையும் நுகர்கின்றன. வினைப்பயனை ஆங்கு நுகர்ந்த பிறகு மீண்டும் நுண்ணுடம் போடு நில உலகத்துக்கு வந்து தன்வினைப் பயனுக்கு ஏற்ற பிறப்பினை எடுக்கும்.
பூதனாசரீரம் ஐம்பெரும் பூதங்களின் கலப்பினால் ஆகிய பருஉடம்பு, இது தூல உடம்பு எனப்படும். புரியட்ட ரூபம் என்பது நுண்ணுடம்பு, இதனைப் புரியட்ட காயம் என்றும் கூறுவர். தன் மாத்திரைகள் ஐந்தும், மனம் புத்தி அகங்காரம் எனும் இம்மூன்றும் ஆக எட்டும் கூடி உளதாவது நுண்ணுடம்பு. இதனைச் சூக்கும உடம்பு என்றும் கூறுவர்.
யாதனா சரீரம் என்பது நிரயத்தில் சென்று துன்பத்தில் அழுந்துவதற்கு உரிய உடம்பு ஆகும். துறக்கத்தில் சென்று இன்பங்களை நுகர்வதற்கு உரிய உடல் பூதசார உடல் எனப்படும். துறக்க நிரயங்களில் சென்று இன்ப துன்பங்களைத்துய்த்த பிறகு எஞ்சியிருக்கும் வினைப் பயன்களைத் துய்ப்பதற்கு என உயிர்கள் மீண்டும் நில உலகிற்கு நுண்ணுடம்பைப் பற்றிக் கொண்டு வந்து பிறக்கின்றன என்பர்.
துறக்கப்படாத உடலைத் துறந்து வெந்தூதுவரோடு, இறப்பன், இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து, பிறப்பன் பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர், மறப்பன் கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே என்ற அப்பர் அடிகளின் தனித் திருவிருத்தம் இங்கு நினையத் தக்கது.
127. உடல்விடா யோனி பற்றி உதிப்பினும் உதிக்கும்; ஒன்றில்
படர்வுறாது உறும்பாவத்தால் பாடாணம் போல் கிடந்து
கடனதாம் காலம் சென்றால் கடுநர கதனில் வீழ்ந்து அங்கு
இடர் உறும்-உருவம் கன்மத்து அளவினில் எடுக்கும் அன்றே.
உயிர்கள் தாம் செய்த வினைகளின் வன்மை மென்மைக்கு ஏற்ப வேறு ஓர் உடம்பை எடுக்கும். அதாவது இப்பரு உடம்பை விட்ட பிறகு யாதனா உடம்பை விட்டு நீங்கிய உயிர் மீண்டும் இவ்வுலகத்தில் பரு உடம்பு கொண்டு தோன்றாமல் மற்றொரு யாதனா உடம்பில் புகுதலும் கூடும். சில வேளைகளில் இவ்வுடம்பினை விட்டு நீங்கிய அளவிலே மற்றொரு கருப்பையில் தங்கி மீண்டும் பிறத்தலும் உண்டு. சில வேளைகளில் வேறு உடம்பில் சேராமல் மிகுந்த பாவம் செய்ததனால் கல்லைப் போலக் கிடத்தலும் உண்டு. அவ்வாறு கல்லைப் போலக் கிடந்த உயிர் உரிய காலம் கழிந்ததன் பின் கொடிய நிரயத்தில் சென்று துயர் உழன்று அதன் பின்னர்ப் பிறத்தலும் உண்டு.
உயிர்கள் உடம்பு விட்டு உடம்பு மாறுவது இவ்வாறு தான் நிகழும் என்று வரையறுத்துக் கூற இயலாது என்ற கருத்து இப்பாடலில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு முந்திய பாடலில் கூறிய முறைமையிலும் அல்லது அதற்கு மாறுபட்டும் தத்தம் வினைக்கு ஏற்ப உயிர்கள் மாறிப் பிறந்து வரும். இவை எல்லாம் இடைவிடாது நிகழ்தலும் உண்டு. இடைவிட்டு நிகழ்தலும் உண்டு என்கிறார் சிவஞான முனிவர். பாடாணம்- கல்
128. பன்னகம் அண்டசங்கள் பரகாயந் தன்னில் பாய்வோர்
துன்னுதோல் முட்டை யாக்கை துறந்து செல்வதுவே போல
உன்னிய உயிர்கள் தூல உடல்விட்டு வானினூடு
மன்னிடும் நனவு மாறிக் கனவினை மருவு மாபோல்.
பாம்பு தன்னுடைய தோலை உரித்து விட்டுப் புதிய தோலோடு செல்லுவது போலவும், பறவை முட்டையை உடைத்துக் கொண்டு வெளியேறிப் போவதைப் போலவும், கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றல் கைவரப் பெற்றோர் தம் உடலை விட்டு வேறு ஒரு உடம்புக்குச் செல்வது போலவும் நிலைபெற்ற உயிர்கள் தம்முடைய உடம்பை விட்டு மற்றொரு உடம்போடு துறக்கத்தையோ, நிரயத்தையோ சென்று சேரும். அவ்வாறு சேரும் போது நனவு உணர்வு மாறிக் கனவு தோன்றுவது போல அவ்வுயிர்களின் அறிவும் வேறுபட்டு நிற்கும்.
பாம்பு தோலுரித்தல் என்ற உவமை உயிர் ஒரு பரு உடலை விட்டு மற்றொரு பரு உடலைச் சேருவதற்கு எடுத்துக் காட்டாயிற்று. முட்டையில் இருந்த பறவை வேறு இடத்துக்குச் செல்லும் என்ற உவமை இவ்வுடலை விட்ட உயிர் துறக்கத்திற்கோ, நிரயத்திற்கோ இடம் மாறிச் செல்லும் என்பதற்கு எடுத்துக் காட்டாயிற்று. பரகாயப் பிரவேசம் எனப்படும் கூடு விட்டுக் கூடுபாய்வது என்ற உவமை உயிர்கள் அச்சு மாறிப் பிறக்கும் என்பதற்கு எடுத்துக் காட்டப்பட்டது. நனவிலிருந்து கனவுக்குச் செல்லுவது உயிர்களின் அறிவு வேறுபட்டு வருவதற்கு உவமையாயிற்று, பன்னகம்- பாம்பு, அண்டசங்கள்- முட்டைகள்.
129. தன்மமோடு அதன்மம் ஆகி தான் இருபயனும் தந்து
நன்மை தீமையினும் இன்பத் துன்பினும் நாடிக்காண
முன்னமே ஆன்மா வின்தன் மும்மலத்து ஒன்றதாகி
கன்மமும் மூலம் காட்டிக் காமிய மலமாய் - நிற்கும்.
முந்திய பிறவிகளில் ஆன்மாக்கள் ஈட்டிய கன்மம் எனப்படுவது தருமம், அதருமம் என்று இரு வகைப்படும். அவற்றிற்கு ஏற்ப இரண்டு வகைக்கும் உரிய பயன்களைத் தரும். இவ்வாறு பயன் தருவதனால் அதற்கு ஒரு முதற் காரணம் உண்டு என்பது பெறப்படும். மும்மலங்களில் ஒன்றாக இக்கான்மிய மலம் வைத்து எண்ணப்படும் நன்மை, தீமை ஆகிய காரணங்களாலும் இன்பம், துன்பம் ஆகிய காரியங்களாலும் இருவினை அனுமான அளவையினால் அறியப்படும்.
மாதவச் சிவஞான முனிவர் கான்மியம் என்பது காமியம் என மருவிற்று என்று உரை கூறுவார்.
130. இருவினை- அநாதி ஆதி இயற்றலால் நுகர்வால் அந்தம்
வரும்; மலம் சார்ந்து மாயா உருவுகள் மருவி ஆர்த்துத்
தருசெயல் முறைமை யாலே தான்பல பேதம் காட்டி
அருவதாய் நின்று அரன்தன் ஆணையின்- அமர்ந்து செல்லும்
இருவினை எனப்படுவன ஒரு வகையால் காலப் பழமைக்கும் எட்டாத தொன்மை உடையது. அதாவது இடையறாது ஓடும் ஆற்றின் வெள்ளப் பெருக்குப் போலத் தொடர்ந்து வருவது, இரு வினைகளும் தோற்றம் உடையனவும் ஆகும். ஏனெனில் உயிர்கள் மனம், மொழி மெய்களால் ஈட்டுவனவே இருவினைகளாகும். இரு வினைகளுக்கும் முடிவு உண்டு. ஏனெனில் வினைகளின் பயனை இறைவன் உயிருக்கு ஊட்டும் போது அவற்றை நுகர்ந்து அவ்வினைகளை உயிர்கள் தீர்க்கின்றன. ஆணவமலத்தோடு சேர்ந்து மாயையின் காரியங்களாகிய உடங்களைத் தோற்றுவித்து உயிர்களைப் பிணித்துப் பலவேறுபட்ட வேறுபாடுகளைக் காட்டி அவ்வினைகள் அருவாக நின்று இறைவனுடைய ஆணையின் வண்ணம் செயல்படும் இயல்பு உடையன ஆகும்.
இந்த இரண்டு செய்யுள்களாலும் இருவினையின் இயல்பு இத்தகையது என்று ஆசிரியரால் எடுத்துரைக்கப்பட்டது. மேலே 91- வது பாடலில் அலகிலா உயிர்கள் கன்மத்து ஆணையின் அமர்ந்து செல்ல எனக் கூறப்பட்டது இங்கே மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இது முடிந்தது முடித்தல் என்னும் உத்தி என்பார் சிவஞான முனிவர்.
131. சங்கமம் தாபரங்கள் தத்தம் கன் மத்துக்கு ஈடா
அங்கு உருயோனி மாறும் அச்சுமாறாது இங்கு என்னின்
இங்குமானுடர் இயற்றும் புண்ணியத்து இன்ப ஈட்டம்
அங்குவான் சுரர்களாயோ நரர்களாய் அருந்துவாரோ.
மக்கள் விலங்குகள் போன்ற இயங்கியல் பொருள்களும், மரங்கள் கொடிகள் போன்ற நிலையியல் பொருள்களுமாகிய உயிர்கள் தாம் தாம் செய்த வினைக்கு ஈடாக வேறு வேறு பிறவினை எடுக்கும். அவ்வாறு பிறவி எடுக்கும் போது அதனுடைய வடிவமும் மாறும். உயிர்கள் மறுபிறப்பு எடுக்கும் போது அவற்றின் உடல் மாறாது என்று கூறினால், மானிடராய்ப் பிறந்து செய்த புண்ணியத்தின் பயனை வானுலகத்தினில் சென்று தேவர்களாக இருந்து நுகர்வார்களோ அன்றி மானுடர்களாக இருந்தே வானுலக இன்பங்களை நுகர்வார்களோ?
இதனால் சொல்லியது பட்டாசாரியன் தெய்வ யோனி மானுட யோனி ஆகாது என்றும், மானுட யோனி தாவரங்கள் ஆகாது என்றும் அந்தந்த யோனி அந்தந்த யோனியாகவே சனிக்கும். அது ஒழிந்து அச்சு மாறாது என்றும் சொல்ல ! அவனை மறுத்து அச்சுமாறிப் பிறக்கும் என்னும் முறைமையும் அறிவித்தது என்பது நிரம்ப அழகிய தேசிகரின் உரை. இதே கருத்தை சிவஞான சித்தியார் சுபக்கத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பில் திரு ஜே. எம். நல்லசாமி பிள்ளை வலியுறுத்துகிறார்.
132. நரர்களாய்த் துய்ப்பர் என்னின் நரர்பதி சுரர் உலோகம்;
சுரர்களாய்த் துய்ப்பர் என்னின் சொன்ன அச்சு அழியும் ஆகும்
சுரர்களாய்ப் பலன்கள் துய்த்துத் தாம் இங்குத் தோன்றும் போது
நரர்களாய்ப் பிறப்பர் ஞாலத்து அமரராய் நண்ணிடாரே.
வானுலகத்தில் மானுட வடிவம் கொண்டே இவ்வுலகத்தில் செய்த புண்ணியப் பயன்களை நுகர்வார்கள் என்றால் அதனை வானுலகு என்று சொல்வது பொருந்தாது. அதுவும் இம்மண்ணுலகே எனல் வேண்டும். அவ்வாறு அன்று, தேவர்களாகவே இருந்து துய்ப்பார்கள் எனில் அவர்களின் வடிவம் மாறிற்று என்றே கொள்ள வேண்டும். தேவர்களாகிய வானுலகத்தில் சேர்ந்து தாம் செய்த நல்வினைப் பயனை நுகர்ந்து கழித்த பிறகு மீண்டும் அவர்கள் இவ்வுலகில் பிறப்பார் எனின் மானுடராகவே பிறப்பார். வானவர் வடிவம் கொண்டு இவ்வுலகத்தில் பிறந்திடார்.
133. வண்டுகளாகி மாறும் மயிர்க்குட்டி; மற்றோர் செந்துப்
பண்டைய உருவந்தானே வேட்டுவனாய்ப் பிறக்கும்;
கண்டுகொள் யோனி எல்லாம் கன்மத்தான் மாறும் என்றே
கொண்டன சமயம் எல்லாம்; இச்சொல் நீ கொண்டது எங்கே?
கம்பளிப் பூச்சிகள் எனப்படும் மயிர்க்குட்டிப் புழுக்கள் சிலகாலம் சென்ற பின் வண்டுகள் ஆவதைக் காண்கிறோம். இது போன்றே சில புழுவகைகள் குளவி வடிவு கொண்டு மாறுவதையும் பார்க்கிறோம். இதிலிருந்து பிறப்புகள் யாவும் வினைக்கு ஏற்ப மாறுபடும் என்பதனைக் கண்டு கொள்க. இவ்வாறு வினையின் பயனுக்கு ஏற்பப் பிறப்புகள் மாறிவரும் என்றே எல்லாச் சமயங்களும் கொண்டன. இதற்கு மாறான கருத்தை நீ எங்கிருந்து பெற்றாய்?
134. அகலியை கல்லதானாள்; அரிபலபிறவி ஆனான்;
பகலவன் குலத்தில் தோன்றிப் பார் எலாம் முழுதும் ஆண்டு
நிகர்இலா அரசன் ஆகும், சிலந்தி நீடுலகம் போற்றச்
சகமதில் எலிதான் அன்றோ மாவலி ஆய்த்துத் தானே.
கோதம முனிவரின் சாபப்படி அகலிகை கல்லாக மாறினாள். பிறகு முனிவரின் சாபத்தால் திருமால் பல பிறவிகளை எடுத்தார். சிலந்திப் பூச்சி தான் செய்த நற்செயலால் சூரிய குலத்தில் பேரரசனாகப் பிறந்து கோச்செங்கணான் என்ற பெயர் தாங்கி உலகெலாம் ஆண்டான். எலிஒன்று திருமறைக் காட்டில் இறைவன் திருமுன்பு எரிந்த திருவிளக்கைத் தன் மூக்கால் தூண்ட அது அடுத்த பிறவியில் மாவலியாய்த் தோன்றி மூவுலகங்களையும் ஆண்டது.
135. செப்பினாய் மாற வேறு சிலர்விதி யாலே; கன்மால்
வைப்புறும் யோனி எல்லாம் மாறிவந்திடா இங்கு என்னின்
எப்படி யானும் செய்திக்கு இறைகரியாவன் என்றே
முற்பட மொழிந்தேன்; எல்லாம் முதல்வன் தன் விதியே ஆகும்.
அகலிகை, திருமால், கோச்செங்கட்சோழன் மாவலி ஆகியோருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் வினையினால் மட்டுமன்றி சாபத்தினாலும் நேர்ந்தவனாகும். அதனால் வினைப்பயன் காரணமாக உயிர்கள் கருப்பை மாறிப் பிறந்திடா என்று நீ மறுத்தல் கூடும். எவ்வகையாலும் உயிர்களின் வினைகளுக்கு எல்லாம் இறைவனே சான்றாவான் என்று முன்பே கூறப்பட்டது. எனவே சாபத்தின் பயன் ஆயினும் வினையின் பயனாயினும் இறைவன் ஆணை வழியே உயிர்களை வந்து பற்றும் என்பதே உண்மையாகும்.
மேல் 120-ஆம் பாடலில் இறைவன் ஆணையினால் இன்ப துன்பங்கள் இயைவதாகும் என்று கூறியதனை ஆசிரியர் இங்கு நினைவுறுத்தினார். கரி- சான்று, முதல்வன் தன் விதி- இறைவனது ஆணை

No comments:
Post a Comment