Friday 18 August 2017

அரச நீதி சொல்லும் அர்த்தசாஸ்திரம்!

தினெட்டு வித்யைகளில் ஒன்று அர்த்தசாஸ்திரம். இதில், அரசு மற்றும் அரசன் குறித்த நெறிமுறைகள் முழுமையாகத் தென்படும். பொருளாதாரத்தின் அடித்தளத்திலும் இதன் செயல்பாடு செம்மையாக இருக்கும். அறம், பொருள் ஆகிய இரண்டும் உலக வாழ்க்கையின் செழிப்புக்கு
ஆதாரம் என்பதால், இம்மையில் அர்த்த சாஸ்திரத்துக்கு தனியிடம் உண்டு. தர்மசாஸ்திரமும் அர்த்தசாஸ்திரமும் இரட்டையர்கள்; இணைந்து செயல்படும் இயல்புகளில் ஒன்று இல்லாமல் மற்றொன்று வாழாது.
பிற்காலத்தில் வந்த நீதி சாஸ்திரங்களுக்கு அர்த்த சாஸ்திரமே ஆதாரம். அர்த்தசாஸ்திரத்தை அறிமுகம் செய்தவர்கள் அநேகம் பேர் இருந்தாலும் சாணக்கியனின் அர்த்தசாஸ்திரத்துக்கு தனியிடம் உண்டு. அது, முக்காலத்திலும் செயல்படும் தகுதி பெற்றது. வாழப் பிறந்தவர்கள் அத்தனைபேரும் சிறப்புடன் வாழ வழி சொல்வதுடன், அற வழி வாழ்க்கைக்கு அர்த்தசாஸ்திரத்தின் பங்கை விளக்கி, அதன் பெருமையை நிலைநிறுத்துகிறது.
'சாணக்கியன் என்றோர் அந்தணர் தோன்றுவார். அரசர்களான ஒன்பது நந்தர்களையும் அவர்களது வாரிசுகளையும் தூய்மைப்படுத்துவார். அர்த்தசாஸ்திரத்தை, அதாவது அரசநீதியை தொகுத்து உலகுக்கு அளிப்பார்’ என்று சாணக்கியனின் வரவை முன்னமே எடுத்துரைக்கிறது விஷ்ணுபுராணம்.
'உலகை உய்விக்க அர்த்தசாஸ்திரத்தை அறிமுகம் செய்வான் சாணக்கியன். அவனுக்கு கௌடில்யன் என்ற பெயரும் உண்டு’ என்று ஸ்ரீதரஸ்வாமி தனது உரையில் கூறுகிறார் (உத்திரிஷ்யதிதான் கௌடில்ய).
அரசியல் கொந்தளிப்பை மையமாகக் கொண்ட சரித்திர நாடகம்- முத்ராராஷசம். அதை எழுதியவர் விசாகதத்தன். நந்தர்களது அரசவையில் அவமானத்தை சந்தித்த சாணக்கியனின் கோபம், நந்த வம்சத்தை அகற்றி சந்திரகுப்தனை அரசனாக்கி, குப்த சாம்ராஜ்ஜியத்தை தோற்றுவித்தது (கெள்டில்ய: குடிலமதி: ஸஏஷ ஏனக் ரோதக்நௌப்ரஸபதாஹி நந்தவம்ச).
ஒரு சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி, மற்றொன்றின் எழுச்சி இவை இரண்டையும் தனியரு மனிதனின் சிந்தனை நடைமுறைப்படுத்தியது. சரித்திரத்தில் அவரைப்போன்று மற்றொருவர் பிறக்கவில்லை என்பது சாணக்கியனின் தனித்தன்மைக்கு எடுத்துக்காட்டு.
நந்த வம்ச பேரரசின் அமைச்சராக இருந்தவர் ராக்ஷசன். நந்த அரசு வீழ்ந்தாலும் சாணக்கியன் அமைத்த சந்திரகுப்த அரசை வீழ்த்தும் முயற்சியை ராக்ஷசன் கைவிடவில்லை. தனது முயற்சி, அமரர்களான நந்த அரசர்களை மகிழ வைக்கும் என்ற நம்பிக்கையில், முழுமூச்சுடன் எதிர்க்கத் துணிந்தான் ராக்ஷசன்.
நந்த அரசர்கள் மறைந்தும்கூட அவர்கள் மீது பக்தியும் பாசமும் செலுத்தும் ராக்ஷசன், சந்திரகுப்தனுக்கு மந்திரியானால், அவனது அரசு நிலைத்திருக்கும்; தனது முயற்சியும் பயனுள்ளதாக மாறும் என்கிற எண்ணத்தில், எதிரியையும் நண்பனாக்கி, சந்திரகுப்தனுக்கு மந்திரியாக்கும் திறமை சாணக்கியனிடம் இருந்தது.
அதேபோல்,  சந்திரகுப்தனை அழிக்க எதிரிகளால் அனுப்பப்பட்ட விஷ கன்யகையை (கன்னிகையை?) அடையாளம் கண்டுகொண்டார் சாணக்கியன். சந்திர குப்தனுடன் இருந்துகொண்டே அவனுக்குக் குழிபறித்த  சாமந்த அரசனையும், நாக கன்யகையையும் சந்திக்க வைத்து, அதன் மூலம் அவனை அழித்து சந்திரகுப்தனுக்கு நிம்மதியளித்தார் சாணக்கியன்.
திட்டம், அதுகுறித்த செயல்பாடு, வேளை அத்தனையும் சாணக்கியனிடம் ரகசியமாகவே இருக்கும். அதேபோல், திட்டத்துக்கு உகந்தவாறு சூழலை உருவாக்கி, அதற்கேற்ப மற்றவர்களைச் செயல்படுத்தும் திறனும் சாணக்கியனிடம் உண்டு. மற்றவரின் உதவியைத் தேடிப் போகாமல், அவர்களைத் தன்னிடம் அடைக்கலமாகும்படி செய்து, வெற்றியை ஈட்டும் பாங்கும் அவரிடம் இருந்தது.
ஆமாம்... சாதாரண நிலையில் இருந்த சந்திரகுப்தனை, தனது செல்வாக்கால் அரசனாக்கி, அதை அழியாமல் காப்பாற்ற அரண் அமைத்து, சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்தவர் அவர். ராஜகுருவாக இருந்தாலும் பர்ண சாலையில் வாழ்ந்தார். உலக சுகங்களில் பற்றற்று விளங் கினார். சமுதாய சீர்திருத்தவாதியாக தென்பட்டார்.
'சணகனின் புதல்வன்’ என்ற பொருளில் சாணக்கியன் என்று அவர் அழைக்கப்பட்டார். வெற்றியை எட்டுவதற்கு நெளிவுசுளிவோடு செயல்படும் திறனைப் பெற்றிருந்ததால், 'கௌடில்யன்’ என்ற பெயர் பிரசித்தமானது.
இக்கட்டான சூழலில், அரசைத் தூய்மைப்படுத்த அந்தணனும் ஆயுதம் ஏந்தலாம் என்கிறது தர்மசாஸ்திரம். அதன் வெளிப்பாடுதான் பரசுராம அவதாரம். கௌரவிக்க வேண்டியவர்களை அவமானப்படுத்தும் அரசன், சமுதாயத்துக்கு இழுக்கானவன். தனது அவமானத்தை சாக்காக வைத்து, அரசைத் தூய்மைப்படுத்தினார் சாணக் கியன். மற்றவர்களது பார்வையில் அவரது கோபம் காரணமாகப்பட்டது!
வேத காலத்தில் அரசும் இல்லை, அரசனும் இல்லை, ஆட்சியும் இல்லை. அறம் ஆண்டது. அறத்தோடு இணைந்த சிந்தனை, அழகான வாழ்க்கையை சுவைக்க வைத்தது. போட்டி- பொறாமை தலைதூக்கவில்லை. ஆகவே, சமுதாயம் கொந்தளிப்பை சந்திக்கவில்லை. காலப்போக்கில் அறம் செயலிழந்து போக, தவறான சிந்தனைகள் மனதில் இடம்பிடிக்க ஆரம்பித்தன. அது வலுப்பெற்று, பலசாலியானவன் பலவீனனை ஆட் கொண்டு துன்புறுத்தினான். சின்ன மீன் பெரிய மீனை விழுங்குவது போல், 'மத்ஸந்யாயம்’ சமுதாயத்தில் வேரூன்றிவிட்டது. அப்போது சீர்திருத்த தலைவன் ஒருவன் தேவைப்பட்டான். இந்த நிலையே, அரசன் என்பவனின் தோற்றத்துக்கு வித்திட்டது. அவர்களை சீர்திருத்தும் கருவியாக அர்த்த சாஸ்திரம் பயன்பட்டது என்ற தகவல் சாஸ்திரத்தில் உண்டு (தண்டாபாவே பரித்வம்சி மத்யந்யாய: ப்ரவர்த்ததெ).
எங்கு நீதியும் அடக்குதலும் செயலிழந்து விட்டதோ, அங்கு மத்ஸயன்யாயம்... அதாவது, பலசாலி பலவீனனை விழுங்குவான். அங்கு தண்டம் பலன் அளிக்கும் என்கிறது அர்த்த சாஸ்திரம். அறத்திலிருந்து விலகி அக்கிரமத்தில் நுழைந்தவனை அடக்க அர்த்தசாஸ்திரமும் அரசும் தோன்றின என்கிறது சாஸ்திரம்.
தேசத்தின் அழிவுக்குக் காரணம் கடவுள் என்பதில் சாணக்கியனுக்கு உடன்பாடில்லை; வாழும் மக்கள்தான் காரணம் என்பார். இதை, 'மக்களின் செயல்பாடு ப்ரக்ருதிவ்யசனம்’ என்ற தலைப்பில் தனது நூலில் உறுதி செய்கிறார் (மந்திரி புரோஹிதாதி...). அமைச்சர்களின் செயல்பாடுகளில் இருக்கும் தூய்மை (அமாத்ய...), மக்களின் அறத்துடன் இணைந்த நடைமுறை (ஜனபதமூலா...) ஆகியவையே வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் ஆதாரம் என்பது அவரது கணிப்பு.  அரசனானவன் திறமையான அமைச்சர்களை நியமிக்க வேண்டும். அவர்களது பரிந்துரையை மதிக்க வேண்டும். இவை, நிலையான அரசுக்கு நிச்சயம் தேவை என்பார் (குர்வீத...தேஷாம்ச மசருணுயாத்மதம்).
தனித்தனியே பலபேரின் அறிவுரையை உள்வாங்கி சேமித்து, அவற்றை தனது சிந்தனையில் அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் அரசனுக்கு இருக்கவேண்டும் என்று வற்புறுத்துவார் சாணக்கியன். அரசன் தனது அரசை விரிவுபடுத்துவதில் முனைய வேண்டும். இருப்பது போதும் என்று இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மற்றவர்களது படையெடுப்பால் அல்லது தங்களின் தேசத்தை விரிவுப்படுத்திக்கொள்ளும் அவர்களது ஆசை யால் இவனது அரசு பறிபோய்விடும் (ஸந்துஷ்ட:சமணீபதி.நஷ்ட:). அதற்காக மற்ற நாட்டு அரசர்களுடன் பகை தலை தூக்கிவிடாமல், ஸந்தி செய்துகொள்ள வேண்டும் என்பார் சாணக்கியன்.
பயத்தாலும் உடன்பாடு நிகழும். நல்ல காரியங்களைப் பகிர்ந்துகொள்வதிலும் உடன்பாடு உண்டு. பொருளாதார அடிப்படையிலும் ஸந்தி உண்டு. இதில் கடைசி ஸந்தி உயர்ந்தது. அது நிலையாக இருக்கும். மற்றவை, காலப்போக்கில் நம்பிக்கை இழக்கவைக்கலாம் என்பார். ஸந்தி என்பது நல்ல எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல; அரசியல் தந்திரம் என்கிறார் அவர் (ஸந்தி:ந....). நிபந்தனையை முன்வைத்து நட்பை உறுதி செய்வது  ஸந்தி என்று அதன் உயர்வை சுட்டிக்காட்டி, ஒருவன் தனது அரசின் ஸ்திரத்தன்மையைக் கட்டிக்காக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
துஷ்டரை தண்டிக்க வேண்டும். நல்லவரை கௌரவிக்க வேண்டும். நெறிமுறையோடு பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். தன்னை அண்டியவர்களிடம் பாகுபாடு பாராட்டக் கூடாது. தேசத்தின் பாதுகாப்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற ஐந்து வேள்விகளை அரசன் ஏற்க வேண்டும் என்பார் அவர் (துஷ்டஸ்யதண்ட:...).
அறிஞன், மேதாவி, படித்தவன், அந்த தேசத்தவன், தூய்மையானவன், குறிப்பாக செயலில் சுத்தமானவன், உண்மை பேசுபவன், ஒழுக்கமானவன், நட்பு மற்றும் பண்போடு திகழ்பவன், தைரியசாலி, எல்லோரிடமும் சுமுகமாகப் பழகுபவன்... ஆகிய இத்தனை குணங்களும் தகுதிகளும் அமைச்சர்களிடம் இருக்கவேண்டும் என்பது சாணக்கியனின் அறிவுரை.
அரசியல் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக இருக்க வேண்டும். அதன் வெளிப்பாடு, பலன் கிடைத்தபிறகே நிகழவேண்டும். அதற்கு முன்பாக அது பரஸ்யமாகக் கூடாது என்பார் அவர் (கார்யாணிஅத்யந்தம்...)
அதேபோல் நல்ல குலத்தில் பிறப்பு, பேசும் திறன், இனிமையாகப் பேசும் இயல்பு, கட்டளையை அப்படியே நிறைவேற்றும் திறன், ஞாபக சக்தி ஆகியன ஓர் அரச தூதனுக்கான தகுதிகள் என்பார் அவர்.
அரசாங்கத்தின் வரவு- செலவுகள் லாப நோக்குடன் செயல்படவேண்டும். பொருளாதாரம், அரசின் ஸ்திரத் தன்மைக்கு உறுதுணையாக இருப்பதால், அதில் கவனம் வேண்டும் என்பது அவரது அறிவுரை.
உலகவியல், ஆன்மிகம் என்ற வாழ்க்கையின் இரண்டு பகுதிகளில், உலகவியலின் நிறைவை உறுதிப்படுத்தும் வகையில், நான்கு புருஷார்த்தங்களில் முதல் இரண்டை... அதாவது, தர்மார்த்தங்களை (அறம், பொருள்) கையாள வேண்டிய நடைமுறையை வரையறுத்தவர் சாணக்கியர்.
அறம்- பொருள் குறித்த அறிவப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவார். அவை இரண்டுக்கு மட்டுமே 'வித்யை’ என்கிற அந்தஸ்து உண்டு என்பார் (தத்வித்யானாம்...).
அவரவர் அறங்களை கட்டிக்காக்க அரசன் உதவ வேண்டும். ஸ்வதர்மம் அவனது முன்னேற்றத்துக்கு அவசியம். மற்றவர் அதில் தலையிடாமல் காப்பாற்ற வேண்டும் என்று விளக்குவார் (தஸ்மாத்ஸ்வதர்மம்...).
ஒவ்வொருவரும் தங்களுக்குரிய அறத்தின்படி வாழ்க்கையை அமைத்து, குறிக்கோளை எட்டவேண்டும் என்ற கண்ணனின் வார்த்தைக்கேற்ப, சாணக்கியரின் நல்லுரைகள் சிரஞ்ஜீவியாகத் திகழ்கிறது. தாறுமாறான இன்றையச் சூழலுக்கு அவரது அர்த்தசாஸ்திரம் நல்வழி காட்டும்.

No comments:

Post a Comment