Friday, 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞான சித்தியார் பகுதி- 2.2

40. வைகரி செவியில் கேட்ப தாய், அத்த வசனம் ஆகி,
மெய்தரும்; உதான வாயு மேவிட விளைந்த வன்னம்,
பொய்யற அடைவு உடைத்தாய், புந்திகா ரணமது ஆகி,
ஐயம் இல் பிராண வாயு அடைந்துஎழுந்து, அடைவு உடைத்தாம்.

முந்திய பாடலில் கூறப்பட்ட நான்கு வகை வாக்குகளில் வைகரி எனப்படுவது சொல்லுவோன் செவிக்கும் கேட்போன் செவிக்கும் கேட்பதாய் இருக்கும். பொருளை உணர்த்தும் சொல்லாக விளங்கும். சொல்லுபவனும் கேட்பவனும் அறிவு விளக்கம் பெறுவதற்குக் காரணமாக இருக்கும். உடம்பிலே தோன்றுகின்ற உதானன் எனும் காற்று உந்தி எழுவதால் இது தோன்றும். நுட்பமாகப் பிரிந்து பல வøயாகத் தோன்றுகின்ற எழுத்துக்களை உடையதாகும். இது உயிர்க்காற்றால் மேல் எழுந்து பொய்மை இலாமல் புறத்தே ஒலிவடிவாக வருகின்ற இயல்பினை உடையதாகும். அத்தம்- பொருள். பொய்யற்ற- திரிபின்றி. அடைவு- முறைமை நால்வகை வாக்குகளும் பற்றிக் கூறத் தொடங்குகிற ஆசிரியர் முதலில் பருமையான வைகரி வாக்கைக் குறிப்பிட்டது ஒடுக்க முறைமை பற்றி என்கிறார் சிவஞான முனிவர். தோற்ற முறைமை பற்றிக் கூறினால் முதலில் சூக்குமை வாக்கைப் பற்றி ஆசிரியர் கூறியிருப்பார். வைகரி என்ற சொல் விகாரப்பட்டு அதாவது வேற்றுமைப்பட்டுத் தோன்றும் வாக்கு என்ற பொருளைத் தரும்.

41. உள்உணர் ஓசை ஆகி, செவியினில் உறுதல் செய்யாது-
ஒள்ளிய பிராண வாயு விருத்தியை உடையது அன்றி,
தெள்ளிய அக்கரங்கள் சிந்திடும் செயலது இன்றி-
மெள்ளவே எழுவது, ஆகும் மத்திமை, வேற தாயே.

மத்திமை வாக்கு என்பது செவியில் கேட்கப்படாததாய் மெல்லிய ஒலி உடையதாக சொல்லுபவருடைய கழுத்தில் விளங்குவதாக அவர் தனக்குள்ளே உணர்கின்ற ஓசையாகும். உயிர்க் காற்றின் தொழிற்பாடு இல்லாமல் உதானன் என்னும் காற்றின் தொழிற்பாடு மட்டிலுமே உடையது. ஆகையினால் எழுத்துக்கள் நுட்பமாகத் தோன்றிடும் எனவே பல், நா, இதழ் முதலிய உறுப்புகளில் பட்டு வெளியிலே தோன்றாத இயல்புடையது இம் மத்திமை என்னும் வாக்கு.
பாடலின் இறுதி அடியில் வேறதாய் என்று கூறியது இதற்கு முன் கூறப்பட்ட வைகரி வாக்குக்கும் இதன் பின் ஆசிரியர் கூற இருக்கிற பைசந்தி வாக்கிற்கும் வேறாக என்ற பொருளைத் தரும்.

42. வேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறு விபாகம் ஆகி,
தோற்றுதல் அடைவு ஒடுக்கி, சொயம்பிர காசம் ஆகி,-
சாற்றிய மயிலின் அண்டம் தரித்திடும் சலமே போன்று- அங்கு
ஆற்றவே உடையதாகி, பைசந்தி, அமர்ந்து நிற்கும்.

பைசந்தி வாக்கு எனப்படுவது மயிலின் முட்டையை ஒத்தது என்று உவமை கூறப்படும். மயிலின் நிறங்கள் யாவும் மயில் முட்டையில் உள்ள நீரில் அடங்கி இருக்கின்றன. எனினும் அவை தனித்தனி தோன்றாமல் ஒடுங்கி உள்ளன. அது போலவே பல வகைப்பட்ட எழுத்துக்களும் பிரிந்து தோன்றுவதற்கு மத்திமையே காரணம் ஆயினும் அவை சிறிதும் தெரியாதவாறு தன்னுள் அடக்கிக் கொண்டு சிந்தையின் நிற்றலும் நிருவிகற்ப உணர்வுக்குக் காரணமாக நிற்றலும் ஆகிய இரண்டு இயல்புகளையும் உடையதாகி விளங்கும். வன்னம், - எழுத்து, நிறம் என்று இரு பொருள் பட நின்றது.

விபாகம் - பிரிவு, சுயம்பிரகாசம்- தானாக ஒளியுடையதாதல்.

43. சூக்கும வாக்கது உள்ஓர் சோதியாய், அழிவது இன்றி,
ஆக்கிடும், அதிகாரத்திற்கு அழிவினை, தன்னைக் கண்டால்,
நீக்கம் இல் அறிவு, ஆனந்தம், முதன்மை, நித் தியம்உடைத்தாய்,
போக்கொடு வரவு இளைப்பும் விகாரமும் புருடன் இன்று; ஆம்.

சூக்கும வாக்கு என்பது மூவகை உடம்பினுக்குள்ளே சொல்லுவதற்கு அரிய அறிவு வடிவாய் விளங்குவது, இதற்கு முன் கூறப்பட்ட வைகரி, மத்திமை, பைசந்தி என்பனவற்றைப் போல் தோன்றுதலும் ஒடுங்குதலும் இல்லாதது. அதனால் சூக்குமை நிலைபேறு உடையது. மற்றைய மூன்று வாக்குகளையும் இதுவே தோற்றுவிக்கும். சூக்குமை வாக்கை உள்ளபடி உணர்ந்தவனுக்கு நீங்காத பேரறிவும், ஆனந்தமும், விடுதலையும் நிலைபேறும் தரவல்லது. இறப்பும் பிறப்பும் அதனால் வரும் இளைப்பும் வேறுபாடுகளும் இல்லாமல் ஆக்கும் இயல்பு உடையது.

சூக்கும வாக்கு பரசரீரம் எனப்பட்ட காரண உடம்பு, கஞ்சுக உடம்பு, பூதஉடம்பு இவற்றினுக்குள்ளே நாத மாத்திரையாக விளங்குவதனால் அது சுத்தமாயா வடிவமாக நிலைபெறும் எனப்பட்டது.

44. நிகழ்ந்திடும் வாக்கு நான்கும் நிவிர்த்தாதி கலையைப் பற்றித்
திகழ்ந்திடும் அஞ்ச தாக; செயல்பரி ணாமம் அன்று
புகழ்ந்திடும் விருத்தி ஆகும் படம்குடில் ஆனால் போல;
மகிழ்ந்திடும் பிரமம்; அன்று மாமாயை என்பர் நல்லோர்.

இவ்வாறு கூறப்பட்ட நான்கு வாக்குகளும் நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளையும் பற்றுக்கோடாகக் கொண்டு ஐந்தாக விளங்கும். இவை சிவ தத்துவம் முதலிய ஐந்து தத்துவங்களில் இருக்கும். சூக்குமை ஒன்றே ஐந்து வகைப்படுவது, விருத்தி என்ற காரியப்பாடே அன்றிப் பரிணாமம் என்ற வகையில் அடங்குவன அல்ல. விருத்தி என்ற காரியப் பாட்டிற்கு எடுத்துக் காட்டு துணியே கூடாரமானது போல என்பதாகும். சத்தப் பிரமவாதிகள் இதனையே பிரமம் என்பர். சைவசித்தாந்தத்தின் படி தூய மாயையின் வடிவு எனப்படும்.

ஒரு பொருள் மற்றொரு பொருளாகக் காரியப் பட்டுத் தோன்றும் போது அநத மாற்றம் பல பெயர்களைப் பெறும். இவற்றுள் சமுதாயம் ஆரம்பம், விவர்த்தனம் என்பன. சைவ சித்தாந்தத்தில் ஏற்கப்படுவன அல்ல. சைவசித்தாந்தத்தில் ஏற்கப்படும் காரியப்பாடுகள் பரிணாமம், விருத்தி என்ற இரண்டே ஆகும். பரிணாமம் என்பது ஒன்று திரிந்து மற்றொன்றாக மாறுவதைக் குறிக்கும். அதுவும் இரண்டு வகைப்படும். ஒன்று முழுவதும் பரிணாமப்படுதல் எனவும் மற்றொன்று ஒரு பகுதியே பரிணாமப்படுதல் எனவும் கொள்ளப்பெறும். பால் தயிராக உறைவது முற்றிலும் பரிணாமப்படுதலுக்கு எடுத்துக் காட்டு நெய்யில் புழு தோன்றுவது ஒரு பகுதி பரிணாமப்படுவதற்கு எடுத்துக்காட்டு. சுத்தமாயையின் காரியம் விருத்தி எனப்படும். அசுத்த மாயையின் காரியம் பரிணாமம் எனப்படும்.
ஐந்து கலைகள் என்பன பருமையிலிருந்து நுட்பத்தை நோக்கிவரிசைப் படுத்திக் கூறும் போது நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை எனப்படும். ஐந்து கலைகளில் உள்ள உலகங்கட்கும் வாக்குகள் முறையே வைகரி மத்திமை பைசந்தி சூக்குமை அதிசூக்குமை என்பனவாகும்.

பாடலின் இறுதி அடியில் சத்தப்பிரம வாதிகளின் கொள்கையை ஆசிரியர் மறுத்தார். அவர்களின் கொள்கைப்படி வாக்குகளே பிரமம் எனப்படும். நல்லோர் ஆகிய சைவ சித்தாந்திகள் அவற்றைப் பிரமம் என்று கொள்ளுவதில்லை. இவை சுத்த மாயாவடிவம் என்றே கொள்ளப்படும்.

45. வித்தைகள் வித்தையீசர் சதாசிவர் என்று இவர்க்கு
வைத்துறும் பதங்கள், வன்னம், புவனங்கள், மந்தி ரங்கள்
தத்துவம், சரீரம் போகம், கரணங்கள் தாம் எலாமும்
உய்த்திடும், வைந்த வம்தான், உபாதானமாகி நின்றே,

மேலே கூறப்பட்ட வாக்குகளுக்கு மட்டிலுமே அல்லாமல் வைந் தவம் எனப்படும் தூயமாயை, மந்திரேசுரர் மந்திரமயேசுரர் அணு சதாசிவர் ஆகிய இவர்களுக்கு வேண்டப்படும் அத்துவாக்களுக்கும் முதற்காரணமாக இருந்தே செலுத்தும் அத்துவாக்கள் என்பன எழுத்துக்களும் பதங்களும், மந்திரங்களும், தத்துவங்களும், புவனங்களும், உடல் நுகர்வு கரணங்கள் ஆகியவையும் என்க.

வித்தைகள் என்றது மந்திரேசுரரை, அவர்கள் சுத்தவித்தியா தத்துவத்தில் இருப்பவர். வித்தை ஈசர் என்பது மந்திரமயேசுரரை, அவர்கள் அநந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர். ஏகஉருத்திரர், திரிமூர்த்தர், சீகண்டர், சிகண்டி என்னும் எண்மர் ஆவர். இவர்கள் யாவரும் ஈசுர தத்துவத்தில் வாழ்பவர் என்பர்.

சதாசிவர் என்றது இங்கே அணுசதாசிவரைக் குறித்தது. அவர்கள் பிரணவர், சாதாக்கியர், தீர்த்தர், காரணர், சுசீலர், ஈசர், சூக்குமர், காலர், தேகேசுரர், அம்பு என்னும் பதின்மர் ஆவர். இவர்கள் சாதாக்கிய தத்துவத்தில் வாழ்ந்து சதாசிவ மூர்த்தியை வழிபடுவோர் ஆவர்.

மந்திரேசுரர் மந்திரமயேசுரர் அணுசதாசிவர் ஆகிய இவர்களுக்கு வேண்டிய பதம், வன்னம், புவனம் தத்துவம், உடல், நுகர் பொருள்கள், கருவிகள் ஆகிய அத்துவாக்கள் யாவற்றுக்கும் தூய மாயையே முதற் காரணம் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது.

46. மூவகை அணுக்க ளுக்கும் முறைமையில் விந்து ஞானம்
மேவினது இல்லை ஆகில், விளங்கிய ஞானம் இன்றாம்;
ஓவிட விந்து ஞானம், உதிப்பதுஓர் ஞானம் உண்டேல்,
சேவுயர் கொடியி னான்தன் சேவடி சேரலாமே.

மேலே கூறப்பட்ட வாக்குகள் யாவும் மந்திரேசுரர் மந்திரமயேசுரர் அணுசதாசிவர் ஆகியோருக்கு மட்டும் அல்லாமல் மூன்று வகை உயிர்களுக்கும் முறையாகப் பொருந்தவில்லையாயின் அவர்களுக்கு விளங்கிய ஞானம் இல்லையாகும். ஆதலால் அனைவருக்கும் வாக்குகளின் துணை இன்றியமையாது வேண்டப்படும். ஏனெனில் வாக்குகளின் துணை இன்றியமையாது வேண்டப்படும். ஏனெனில் வாக்குகளின் துணையைக் கொண்வே சவிகற்ப ஞானம் தோன்றும். இவ்வாக்குகள் தன்னிலும் வேறாக ஒருவரால் காணப்பட்டு நீங்கும் எனில் அந்நிலையில் அவனுக்கு மெய்யுணர்வு தோன்றும். அவன் விடைக் கொடியை உயர்த்திய சிவ பெருமானது திருவடியைச் சென்று சேர்வான்.

அணுக்கள்- உயிர்கள், மூவகை அணுக்கள் என்றது விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர் என்பவர்களே ஆகும். இவர்கள் முறையே ஒரு மலம் உடையார், இருமலம் உடையார், மும்மலம் உடையார் எனப்படுவர். வாக்குகள் வழியாக வரும் அறிவு உலகத்துப்பொருள்களை அறிவதற்கே துணையாக இருக்கும் என்பதும், அதனை நீங்கிய அறிவு பேரின்பத்தை நல்கி இறைவன் திருவடியில் சேர்க்கும் என்பதும் இப்பாடலால் உணர்த்தப்பட்டன. திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் இறைவனை வாக்கிறந்த பூரணமாய் என்று கூறியதை இங்கே நினைவுகூர்க.

47. அருவினில் உருவம் தோன்றி அங்காங்கி பாவம் ஆகி,
உருவினில் உருவமாயே உதித்திடும்; உலகம் எல்லாம்,
பெருகிடும் சுருங்கும்; பேதா பேதமோடு அபேதம் ஆகும்;
ஒருவனே எல்லாம் ஆகி அல்லவாய் உடனும் ஆவன்.

யாவற்றினும் நுண்ணியதாகிய மாயையிலிருந்து கலை முதலிய தத்துவங்கள் தோன்றும். அதன் பின்னர் அவற்றினும் பருமை உடைய மூலப்பகுதியும் அதனினும் பருமையாகிய குணதத்துவமும் தோன்றும். இவ்வாறு நுட்பத்திலிருந்து பருமை நோக்கியே எல்லாப் பொருள்களும் தோன்றி ஐம்பூதங்களகவும் ஆண் பெண் முதலிய உயிர்க் கூட்டங்களாகவும் வளர்ந்தும் தேய்ந்தும் வரும். இவையாவும் பரிணாமப்பட்டுத் தோன்றுவதால் ஒரு வகையில் வேற்றுமையும் மற்றொரு வகையில் வேற்றுமை இன்றியும் விளங்கும். உள்ளதே தோன்றும் என்ற முறையில் வேற்றுமை இன்றியே தோன்றும். இவை யாவும் இறைவன் திருமுன்பே அவன் திருவுள்ளக் குறிப்பாலேயே தோன்றுவன ஆதலால் இறைவன் உலகத்துப் பொருள்களோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்பான்.

அங்கம் - உறுப்பு. அங்கி- உறுப்பினை உடையது; உயிர். நையாயிகர் கொள்கையின் அடிப்படையில் காரண காரியப் பொருள்கள் பெரும்பாலும் தம்முள் வேற்றுமை உடையன என்பது பொருந்தாது. ஆதலால் உலகத்துப் பொருள்கள் வேறும் அன்று என்று அக்கொள்கையை விலக்கினார். பேதா பேதத்தையும் அபேதத்தையும் உடன்பட்டார். இறைவன் முன்னிலையிலே உலகம் தோன்றும் என்பது மேலே 39-வது பாடலில் சின்னவன் தன் சன்னதி தன்னில் நின்றே தோன்றும் என்பதனை வலியுறுத்திற்று.

48. அருஉரு ஈனாதாகும்; விகாரமும் அவிகா ரத்தின்
வருவதும் இல்லை என்னின் வான், வளி ஆதி பூதம்
தருவது தன்னின் மேக சலனசத் தங்க ளோடும்
உருவமின் உருமேறு எல்லாம் உதித்திடும்; உணர்ந்து கொள்ளே.

அருவப் பொருள் உருவப் பொருளைத் தோற்றுவிக்காது. மாறுபாடு அற்ற பொருளில் இருந்து மாறுபாடு உடைய பொருளும் தோன்றாது. அதாவது உங்கள் கொள்கைப்படி மாயை வேறுபாடு அற்றது அதிலிருந்து வேறுபட்ட பொருள்கள் எவ்வாறு தோன்றும்? என்று சிலர் தடை எழுப்புவர். ஐம்பூதங்களில் வானம் என்பது அருவாகவும் வேற்றுமை அற்றதாகவும் உள்ளது. மற்றைய பூதங்களான காற்று முதலிய நான்கும் வானில் இருந்தே தோன்றுகின்றன என்பதை நீங்களும் உடன்படுகிறீர்கள். அருவமும் வேறுபாடு அற்றதும் ஆகிய விண்ணில் மேகங்களும் அசைவும் ஓசைகளும் உடைய மின்னல் முதலியனவும் தோன்றுகின்றன. எனவே அருவமான மாயையிலிருந்து உலகத்துப் பொருள்கள் யாவும் தோன்றும் என்ற கொள்கையும் பொருத்தமுடையதே. அவிகாரம்- வேறுபாடு அற்றது. வளி- காற்று. உருமேறு- இடி.

49. மண்ணினில் கடாதி எல்லாம் வருவது, குலாலனாலே;
எண்ணிய உருவம் எல்லாம் இயற்றுவன், ஈசன் தானும்;
கண்ணுகாரியங்கள் எல்லாம் காரணம் அதனில் காண்பன்;
பண்ணுவது எங்கே நின்று? இங்கு, என்றிடில், பகரக்கேள், நீ.

மண்ணினில் இருந்து குயவன் குடம் பானை முதலியவற்றைத் தோற்றுவித்தல் போல இறைவனும் மாயையிலிருந்து தான் நினைத்த உருவங்களை எல்லாம் இயற்றுவான் என்றீர்கள். குயவன் தான் தோற்றுவிக்கிற யாவற்றையும் முதற்காரணமாகிய மண்ணிலிருந்தும் துணைக் காரணமாகிய சக்கரத்தின் துணை கொண்டும் தோற்றுவிக்கிறான். இறைவன் எவற்றிலிருந்து உலகைத் தோற்றுவிக்கிறான் என்று சிலர் கேட்பர். அதற்கு உரிய விடையைக் கூறுகிறேன் கேட்பாயாக.

கடாதி- குடம் முதலியன. குலாலன்- குயவன். கண்ணுகாரியங்கள்- கருதிய காரியங்கள்.

50. சீலமோ உலகம் போல தெரிப்பரிது; அதனால் நிற்கும்
கோலமும் அறிவார் இல்லை; ஆயினும் கூறக்கேள் நீ;
ஞாலம் ஏழினையும் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும்
காலமே போலக் கொள் நீ நிலைசெயல் கடவுட் கண்ணே.

உலகத்துப் பொருளைச் சொல்லால் கூறி உணர்த்துதல் இயலும். ஆனால் இறைவனின் இயல்போ அவ்வாறு கூறுவதற்கு அரியது. ஏனெனில் அவன் சொல்லையும் மனத்தையும் கடந்து நிற்பவன். இறைவனுடைய இயல்புகளை முழுவதும் அறிந்தவரும் இலர். ஆயினும் உவமை காட்டி அவனுடைய தன்மை இத்தகையது என்று காட்டி ஒருவகையாகக் கூறி விளக்க முற்படுவேன். அதனைக் கேட்பாயாக. உலகம் ஏழினையும் தோற்றுவித்து நிலை நிறுத்திப் பின்னர் அழித்திடுவது காலமே என்பது எல்லாரும் ஏற்றுக் கொள்வது. அத்தகைய காலத்திற்குப் பற்றுக்கோடு ஆவது எதுவும் இல்லை. ஆனால் காலம் எல்லாச் செயல்களுக்கும் பற்றுக்கோடு ஆகும்.

இறைவனும் இவ்வுலகத்தைச் செயற்படுத்தும் போது தான் யாவற்றுக்கும் பற்றுக் கோடாகவும் தனக்கு ஒரு பற்றுக்கோடு இல்லாதவனாகவும் நின்று தன் சத்தியினாõல் யாவற்றையும் செய்வான் என்று உணர்க.

51. கற்றநூல் பொருளும் சொல்லும் கருத்தினில் அடங்கித் தோன்றும்
பெற்றியும், சாக்கி ராதி உயிரினில் பிறந்து ஒடுக்கம்
உற்றதும் போல, எல்லா உலகமும் உதித்து ஒடுங்க,
பற்றொடு; பற்றது இன்றி நின்றனன், பரனும் அன்றே,

பல நூல்களை ஒருவன் கற்ற போது அவற்றின் பொருளும் சொல்லும் புத்தி தத்துவத்தை ஒட்டி நின்று ஆன்ம அறிவில் ஒடுங்கிப் பின்னர் வேண்டுங்கால் தோன்றும். ஆயினும் இவற்றால் ஆன்ம அறிவு தொடக்குறுதல் இல்லை. அது போலவே உலகங்கள் யாவற்றையும் தோற்றுவித்து அழிக்கும் இறைவன் அவற்றால் தொடக்குறுதல் இல்லை. உயிர் என்பது ஐந்து நிலை வேறுபாடுகளுக்கு உட்படுவது. அவை நனவு முதலியன. இவை நிகழ்வதற்குக் காரணம் கருவிகள் ஆன்மாவோடு கூடுதலும் பிரிதலும், இந்த நிலை வேறுபாடுகளால் ஆன்மாவும் தொடக்குறுவது போல் இறைவனும் உலகங்கள் அனைத்தும் தன்பால் ஒடுங்கி உதிப்பத் தானும் இலயம் போகம் அதிகாரம் என்னும் மூன்று நிலைவேறுபாடுகளுக்கு உட்பட்டும் நிற்பான்.

இந்தப் பாடலில் இறைவன் பற்றொடு நின்றே பற்றது இன்றி நின்றனன் என்ற கருத்து விளக்கப்படுகிறது. இறைவன் பற்று இன்றி நின்றதற்குக் கற்ற நூல் பொருளும் சொல்லும் கருத்தினில் அடங்கித் தோன்றும் பெற்றி ஆசிரியரால் உவமையாகக் கூறப்படுகிறது. கற்ற நூலின் பொருளும் சொல்லும் ஆன்மாவின் அறிவில் பதிந்து கிடந்து மீண்டும் தோன்றும் போது அறிவில் மாற்றம் ஏதும் நிகழ்வதில்லை. அதாவது ஒரு முறை படித்து அறிவில் பதிந்த பாடலை ஒரு முறை கூறியவுடன் அறிவிலிருந்து அது அழிவதில்லை. அது போல இறைவன் பற்று இன்றி நின்றான் என்றார்.

நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு அடங்கல் என்பன ஆன்மாவின் ஐந்து நிலைவேறுபாடுகள் எனப்படும். அவை முறையே சாக்கிரம் சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என வழங்கும். நிலை வேறுபாட்டை வடமொழியில் அவத்தை என்பர். இந்த நிலை வேறுபாடுகள் கருவிகள் உயிரோடு கூடுவதாலும் பிரிவதாலும் ஏற்படுகின்றன. இவற்றால் ஆன்மா நிலை வேறுபாடுகளை அடைகிறது. இறைவனும் இவ்வுலகத்தைத் தோற்றுவித்து நிலை நிறுத்தி ஒடுக்கும் போது இலயம் போகம் அதிகாரம் என்ற மூன்று நிலை வேறுபாடுகளை அடைகிறான் என்பர். அது பாடலில் பற்றொடு நின்றனன் என்ற சொற்களால் குறிப்பிடப்பட்டது.

இவ்விரண்டு கருத்துக்களையும் எதிர் நிரல் நிறையாகக் கொள்க என்று சிவஞான முனிவர் உரைவரைந்தார்.

52. உயிர் அவை ஒடுங்கிப் பின்னும் உதிப்பது என் அரன்பால் என்னில்
செயிர் உறு மலத்தின் ஆகும்; சிதைந்தது ஏது என்னில் சித்தத்து
அயர்வு ஒழிகாரியங்கள் அழியும்; காரணம் கிடக்கும்;
பயில்தரு காரியம்பின் பண்டுபோல் பண்ணும் - ஈசன்

உயிர்கள் யாவும் தமக்கு ஒடுக்கம் வந்த போது ஒடுக்கத்தைச் செய்கிற கடவுளிடத்தில் ஒடுங்கி, மீளவும் தோன்றும் போது அவனிடத்தில் இருந்தே தோன்றும் என்கிறீர்கள். அது எதற்காக என்று சிலர் வினவுதல் கூடும். உயிர்களோடு தோற்றமில் காலந் தொட்டே பொருந்திய குற்றமாகிய ஆணவ மலம் உயிர்களை விட்டு நீங்குவதற்காக உலகம் மீளவும் இறைவனால் தோற்றுவிக்கப்படுகிறது. உயிர்களைப் பொருந்திய ஆணவ மலம் சிதைந்து ஒழியவில்லை எனில் ஒடுக்கம் நிகழ்ந்த போது அழிந்தது யாது? என்று மேலும் ஒரு வினா எழும். உயிர்கள் பிறவிப் பெருங்கடலை நீந்துவதனால் இளைப்படைந்து விடுகின்றன. அவ்வாறு அயர்வினைத் தந்த காரியங்கள் அழியும். அவையும் அழியும் எனினும் தத்தமது காரணங்களில் வினையோடு ஒடுங்கி நிற்கும். தோற்றுவிக்கும் காலத்து இறைவன் இவற்றை ஒடுங்கியவாறே தோன்றுமாறு செய்வான்.

மீண்டும் தோற்றுவிக்கப்படுவதானால் உலகம் ஏன் ஒடுக்கப்படல் வேண்டும்? உயிரைக் கட்டி நின்ற ஆணவமலம் ஒடுக்க காலத்திலும் அழிய வில்லையானால் அழிந்தது தான் எது என்று கேட்பவர்களுக்கு விடையாக இப்பாடலை ஆசிரியர் அருளினார். உலகம் என்பது உயிரோடு கூடிய உலகம் என்று உரை வரைந்தார் சிவஞான முனிவர். சித்தத்து அயர்வு உறு என்பது உயிரின் அறிவினிடத்து நிகழ்ந்த இளைப்பு எனப் பொருள்படும். இதன் பின் வரும் 57வது பாடலில் ஆக்கம் அவ்வவர் கன்மம் எல்லாம் கழித்திடல் என்ற பகுதியில் இக்கருத்து ஆசிரியரால் மேலும் விளக்கப்படுகிறது.

53. தோற்றுவித்து அளித்துப் பின்னும் துடைத்தருள் தொழில்கள் மூன்றும்
போற்றவே உடையன், ஈசன் புகுந்தது விகாரம் என்னில்?
சாற்றிய கதிரோன் நிற்க, தாமரை அலரும்; காந்தம்
காற்றிடும் கனலை; நீரும் கரந்திடும்- காசி னிக்கே.

இப்பெரிய உலகத்தைத் தோற்றுவிப்பதும், நிலை நிறுத்துவதும், அதன் பின்னர் ஒடுக்குவதும் ஆகிய மூன்று தொழில்களையும் சிவபெருமானாகிய இறைவன் ஒருவனே செய்வான் என்கிறீர்கள். இச் செயல்களில் ஈடுபடுகிற அவன் வேறுபடுவான் அல்லனோ என்று சிலர் வினாவுவர். இறைவன் வேறுபாடு அடையமாட்டான். வானத்தில் தோன்றும் கதிரவன் தன் நிலையில் திரியாது இயங்குகிறான். கதிரவன் தோன்றியதும் இவ்வுலகில் உள்ள சூரிய காந்தக் கற்கள் நெருப்பைக் கக்குகின்றன. தாமரை இதழ்கள் மலர்கின்றன. நிலத்தில் உள்ள நீர் ஆங்காங்கு வற்றுகிறது. உலகத்தில் இந்த மாற்றங்கள் ஏற்படும் போதும் கதிரவன் மாற்றம் இன்றியே விளங்குகிறான். அதுபோலவே தான் மாற்றம் இன்றி நின்றே இறைவன் இவ்வுலகத்தை முத்தொழிற்படுத்துவான்.

காலுதல் என்பது உமிழ்தல் என்று பொருள் தரும். கான்றிடும் என்பது இங்கு பிறவினை வாய்பாட்டால் காற்றிடும் என்று வந்தது. விகாரம்- வேறுபாடு.

No comments:

Post a Comment