Wednesday 30 August 2017

சதுரகிரி யாத்திரை ! - 7

ச ட்டை முனிவர், தன் ஐந்து சீடர்களுடன் சதுரகிரி வனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். சந்தன மகாலிங்கரை தரிசனம் செய்து வைத்து விட்டு, அதற்கு அப்பால் உள்ள ஒரு வனத்துக்கு அவர்களைக் கூட்டிச் சென்றார். அப்போது குறிப்பிட்ட ஒரு மரத்தில் இருந்த ஒரே ஒரு பழம் மட்டும், அந்தப் பகுதியில் நல்ல மணம் பரப்பியது. சீடர்களுள் ஒருவனுக்கு அந்தப் பழத்தை உண்ணும் ஆசை ஏற்பட்டது. அதைப் பறிக்க அவசரமாக முற்பட்டான். உடனே, சட்டை முனிவர் தன் கைகளை அசைத்து அவனைத் தடுத்தார்.
‘‘கூடாது சீடா... அந்தப் பழத்தைப் பறித்து உண்ணும் ஆசை உங்கள் எவருக்குமே ஏற்படக் கூடாது. அது சந்தன மகாலிங்கத்தின் அருளாசியால் உண்டான பழம். இந்த வனத்தில் வசித்து வரும் கௌமார முனிவர் என்பவர் ஒரு வருட காலம் தவம் இருந்து இந்தப் பழத்தைப் புசிப்பது வழக்கம். அவருக்கே உரித்தான இந்தப் பழத்தை உண்ண எவரேனும் முற்பட்டு, அவருடைய கடும் சாபத்துக்கு உள்ளாக வேண்டாம்!’’ என்ற சட்டை முனிவர், ‘‘ஒரு முறை பஞ்சபாண்டவர்கள், வனத்துக்கு வந்து இத்தகைய ஒரு பழத்தைப் பறித்து உண்ண முற்பட்டு, பெரும் துன்பத்துக்கு உள்ளானதாக ஒரு கதை உண்டு!’’ என்று நிறுத்தினார்.
சீடர்கள், ‘‘அந்தச் சம்பவத்தைச் சொல்லுங்களேன்’’ என்று ஆவலானார்கள்.
சட்டை முனிவர் ஆரம்பித்தார்: ‘‘துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்றதன் காரணமாக பஞ்ச பாண்டவர்கள் தங்கள் மனைவி பாஞ்சாலியுடன் பன்னிரண்டு வருடம் வனவாசம் போக நேரிட்டது. இந்தச் சூழ்நிலையில் ஒரு நாள் வனத்தில் உலவிக் கொண்டிருந்தபோது அழகான ஒரு சோலையைக் கண்டாள் பாஞ்சாலி. முனிவர்கள் பலரும் அங்கே தவம் புரிந்து கொண்டிருந்தனர். அழகான அந்த வனத்தில் நெல்லி மரத்தில் ஒரே ஒரு கனி மட்டும் பழுத்திருப்பதைப் பார்த்தாள். அந்த அபூர்வக் கனியைக் கண்ணுற்ற அடுத்த கணமே அதைப் பறித்து உண்டு மகிழ வேண்டும் என்கிற ஆவல் பாஞ்சாலிக்குப் பிறந்தது. தனது ஆசையை, உடன் இருந்த அர்ஜுனனிடம் கொஞ்சலாகத் தெரிவித்தாள்.
அவ்வளவுதான்! பாஞ்சாலியின் ஆசையை உத்தரவாக ஏற்று, அந்த அபூர்வ நெல்லிக் கனியை உடனே கொய்து, அவளிடம் கொடுத்தான் அர்ஜுனன். இந்தக் காட்சியைக் காண நேர்ந்த அங்கிருந்த முனிவர்கள் பதைபதைத்தனர். அவர்கள் அர்ஜுனனைப் பார்த்து, ‘‘என்ன ஒரு அபசாரமான செயலைச் செய்து விட்டீர்கள். இந்தக் கனி மித்திர மகா முனிவருக்கானது. இந்த நெல்லி மரம், தெய்வ சங்கல்பத்தால் உருவானது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இந்த மரத்தில் இத்தகைய ஒரு நெல்லிக் கனி பழுக்கும். மித்திர முனிவர் இந்த நெல்லி மரத்தின் அடியில் தவம் இருக்கும்போது, அந்தக் கனி தானாகவே அவர் கையில் விழும். பிறகு, அவர் இறைவனின் பிரசாதமாக அதை உண்பார். இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த ஒரு கனியை எடுத்து, ஒரு பெண் கேட்டாள் என்பதற்காக உண்ணக் கொடுத்து விட்டீர்களே?’’ என்றனர் கோபத்துடன்.
இதைக் கேட்டு அர்ஜுனனும் பாஞ்சாலியும் நடுங்கினர். பாஞ்சாலி, தன் கையில் இருந்த கனியைப் பார்த்து மிரண்டாள். அழுதாள். அர்ஜுனன் தவித்தான். அங்கு கூடி விட்ட முனிவர்களைப் பார்த்து, ‘‘பெண்ணின் சொல்லில் மதி மயங்கி இப்படி ஒரு அபசார காரியம் செய்யத் துணிந்து விட்டேன். விதியின் பயனாக வனவாசத்தில் உள்ள எங்களுக்கு இந்த நிகழ்வு ஒரு கரும்புள்ளியாகி விடக் கூடாது. முனிவரின் சாபம் வேறு எங்களை வாட்டித் தள்ளும். உடனேயே இதிலிருந்து எப்பாடு பட்டாவது மீள வேண்டும்!’’ என்று புலம்பிக் கொண்டிருக்கும்போதே தருமர் உள்ளிட்ட சகோதரர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். நிலைமையை அறிந்தனர்.
இந்த இக்கட்டில் இருந்து மீள்வதற்கு, ஆபத்பாந்தவனான கண்ணபிரானை அனைவரும் வேண்ட... சத்யபாமாவுடன் ஸ்ரீகண்ண பிரான் அங்கே எழுந்தருளினார். விஷயத்தை அனைவரும் விளக்கிச் சொல்ல... மாயக் கண்ணனின் அருளாசியால் அந்தக் கனி மீண்டும் மரத்திலேயே ஒட்டிக் கொண்டது. சாபத்தில் இருந்து பஞ்சபாண்டவர்கள் மீண்டனர்!’’ என்று அர்ஜுனன்- பாஞ்சாலி சம்பந்தப்பட்ட கதையைச் சீடர்களுக்குச் சொல்லி முடித்தார் சட்டை முனிவர். இந்த சட்டை முனிவர் வசித்து வந்த குகை, சந்தன மகாலிங்கம் சந்நிதிக்கு அருகே உள்ளது.
சதுரகிரியில் இனி முக்கியமாக தரிசிக்க வேண்டி யவை சுந்தர மகாலிங்கம் திருக்கோயில், சந்தன மகா லிங்கம் திருக்கோயில், பெரிய மகாலிங்கம் சந்நிதி ஆகியவை (ரெட்டை லிங்க சந்நிதியை ஏற்கெனவே தரிசித்து விட்டோம்). இவை தவிர, ஆங்காங்கே இருக்கிற சிறு சிறு தெய்வங்களையும் போகிற போக் கில் தரிசிக்கலாம்.
சதுரகிரிக்குப் பிரதானமாக இருப்பது சுந்தர மகாலிங்கம் திருக்கோயில். இங்கு காளி, மாரி, நாகர், சப்தகன்னியர், நந்தீஸ்வரர், ஆனந்தவல்லி அம்மன் போன்ற தெய்வங்களுக்கும் சந்நிதி உண்டு. காலசந்தி 6 மணிக்கு, உச்சிகாலம் நண்பகல் 12 மணிக்கு, சாயரட்சை மாலை 4 மணிக்கு, அர்த்தஜாமம் மாலை 6 மணிக்கு (மலைக் கோயில் என்பதால் அர்த்தஜாமம் சீக்கிரமே நடந்து முடிந்து விடும்) என தினமும் நான்கு கால பூஜை சுந்தர மகாலிங்கத்துக்குச் சிறப்பாக நடந்து வருகிறது. பெரியவர் மாரிமுத்து பூசாரியும் அவர் மகன்கள் சக்திவேல், வையாபுரி ஆகியோரும் இங்கே தினமும் பொறுப்பாக பூஜைகளை நடத்தி வருகிறார்கள். ஆராதனையின்போது சங்கு ஒலித்து சங்கரனை வணங்குகிறார்கள் பூசாரிகள்.
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இங்கு வந்து சுந்தர மகாலிங்கத்தின் அருள் பெறும் பக்தர்கள் அதிகம். இது போன்ற விசேஷ தினங்களில் டீக்கடை, அர்ச்சனைப் பொருட்கள் விற்கும் கடை, டிபன் கடை, நொறுக்குத் தீனிக் கடைகள் போன்றவை முளைத்து விடுகின்றன. பக்தர்களிடம் இருந்து பிச்சை பெறுவதற்காக எண்ணற்ற துறவிகளும் வருகின்றனர். இவர்கள் சிவநாமம் ஜபித்தும், பஜனைப் பாடல்கள் பாடியும், சங்கு ஊதியும் பக்தர்களிடம் இருந்து பிச்சை பெறுகிறார்கள்.
சுந்தர மகாலிங்கம் ஆலயத்தில் அவரது அருளாசியைப் பெறுமுன் நாம் தரிசிக்கும் ஒரு முக்கியமான சந்நிதி- சுந்தரலிங்கம் அல்லது சுந்தரமூர்த்தியின் திருச்சந்நிதி. லிங்கத் திருமேனி. இவருக்கு நடைபெறும் அபிஷேகங்களும் ஆரத்தியும் அற்புதமானவை.
பக்தர்கள் வேண்டும் வரம் அருளி, அருள் பாலித்து வரும் சுந்தரலிங்கத்தின் திருச்சந்நிதி முன், திருவிழா காலங்களில் வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் பக்தர்களால் பாடப்படும் பாடல் கள், நமசிவாய கோஷ முழக்கங்கள் ஆகியவை சதுரகிரி முழுதும் பரவி எதிரொலிக்கும். எங்கெங்கிருந்தெல்லாமோ இங்கு வந்து திரளும் பக்தர்கள் தங்களது பக்திப் பெருக்கை இந்தப் பரவெளியில் பகிர்ந்து கொள்வார்கள். இந்தக் காட்சியைக் காண அவன் அருள் வேண்டும். இனி, லிங்கத் திருமேனியான சுந்தரலிங்கம், இங்கு வந்து குடிகொண்ட கதையைப் பார்ப்போமா?
சித்தர்களில் சிறப்பு பெற்றவரான அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப் பட்டது இந்த சுந்தர லிங்கத் திருமேனி. சதுரகிரியில், தான் தங்கி இருந்தபோது, நித்தமும் வழிபடுவதற்காக அகத்தியர் இந்த லிங்கத்தை ஸ்தாபித்தார். சரி... சதுரகிரிக்கு அகத்தியர் வந்தது ஏன்?
கயிலாய மலையில் இறைவனுக்கும் இறைவிக்கும் நடந்த விமரிசையான திருமணத்தை நாம் அறிவோம். நந்தி தேவர், விநாயகர், முருகன், பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள் உள்பட எண்ணற்ற ரிஷிகளும் முனிவர் களும் ‘இந்தத் திருமணக் காட்சியைக் காண்பது பெரும் பேறு’ என்கிற ஆவலோடு கயிலாய மலைக்கு வந்து குவிந்தனர். தேவலோகம் மற்றும் மண்ணுலகில் உள்ள அனைவரும் அங்கே கடல் போல் திரண்டிருந்தனர். கயிலை என்பது வட முனை. இத்தகைய ஒரு முனையில் மட்டும் கூட்டம் பெருத்தால் என்ன ஆகும்? வடதிசை தாழ்ந்தது; தென்திசை உயர்ந்தது. ‘ஒரு பக்கத்தில் மட்டும் ஏராளமானோர் இப்படி வந்து குவிகிறார்களே... சமமாக என்னால் நிலை நிறுத்த முடியவில்லையே’ என்று பூமாதேவி பரிதவித்தாள். மண நாயகனான மகேஸ்வரன் நிலைமையை உணர்ந்தார். இந்த நிலையில் உதவக் கூடியவர், அகத்திய மாமுனியே என்று தெளிந்தார். குறுமுனி அகத்தியரை அருகே அழைத்தார் ஈசன். திருமண வேலைகளில் பொறுப்பு தரப் போகிறார் போலிருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் மகேசன் அருகே மனம் குதூகலிக்க ஓடினார் அகத்தியர். அவரிடம், ‘‘எம் திருமணம் இனிதே நடைபெறுவதற்கு உம்மால் ஓர் உதவி ஆக வேண்டி உள்ளது அகத்தியரே!’’ என்றார் இறைவன். ‘‘மகாதேவா... தங்களது திருமணக் காட்சி கண்டு அருள் பெற விரைந்தோடி வந்த எம்மால் உமக்கு ஓர் உதவியா? உத்தரவிடுங்கள்... எதுவானாலும் உடன் செய்கிறேன்!’’ என்றார்.
‘‘சித்த புருஷரே... எம் திருமணக் காட்சி காண எட்டுத் திக்கில் இருந்தும் திருத்தொண்டர்கள் இங்கே திரண்டு வந்துள்ளதால், யாம் இருக்கும் இந்த வட திசை சற்றே தாழ்ந்துள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் பூமாதேவி பரிதவிக்கிறாள். தாங்கள் உடனே தென்திசை சென்று அங்கு தங்கி இருப்பீர்கள் என்றால் பூமி சமம் ஆகும். தாங்கள் சற்றும் தாமதியாமல் தென்திசை செல்லுங்கள். தங்களால் மட்டுமே இது சாத்தியம்!’’ என்றார் சர்வேஸ்வரன். அகத்தியர் மனம் வருந்தினார். ‘‘இறைவா... அப்படி என்றால் தங்களது திருமணக் கோலம் காண வேண்டும் என்கிற எனது ஆசை?’’
‘‘கவலைப்படாதே... நீ எந்தத் தலத்தில் எமது திருமணக் கோலத் தைக் காண நினைக்கிறாயோ, அங்கெல்லாம் உமையம்மையுடன் உனக்குத் திருமணக் காட்சி தந்தருள்கிறேன்!’’ என்றார் இறைவன். பிறகு, அங்கிருந்து புறப்பட்ட அகத்தியர் பொதிகை மலைக்கு வர... அதனால் பூமி சமமானது. இறைவனின் திருமணமும் இனிதே நிறைவேறியது. பொதிகையில் இருந்து புறப்பட்ட அகத்தியர் குற்றாலம் வந்தார். அங்குள்ள ஆலயங்களில் வழிபட்டார். குற்றாலத்தின் இயற்கை அழகில் மயங்கி, சில காலம் அங்கு தங்கி இருந்தார். அப்போதுதான் சதுரகிரி பற்றி அவர் கேள்விப்பட்டார்.

No comments:

Post a Comment