Friday, 18 August 2017

ஜாதகத்தில் சூரிய பலம் வேண்டுமா... வியாசர்பாடிக்கு வாருங்கள்!


ந்து தர்மத்தின் அடிப்படை வேதங்கள்தான். எண்ணற்ற ரிஷிகளால் கண்டறியப்பட்டு, வாய் மொழி வழியாக தங்கள் சீடர்களுக்கு உபதேசித்த மந்திரங்களை, பிற்காலத்தில் தோன்றிய வியாசர் வேதங்களைப் பகுத்து வைத்ததுடன், அந்த வேத மந்திரங்கள் காலங்காலமாக மக்களுக்குப் பயன்படும் வகையில் தமது சீடர்களுக்கு உபதேசித்துச் சென்றுள்ளார்.


வேதங்களைப் பகுத்ததால் வேத வியாசர் என்ற சிறப்பினைப் பெற்ற வியாசர், தம்முடைய சீடர்களுக்கு வேதங்களை உபதேசித்த தலம் எது தெரியுமா? சென்னை மாநகரின் ஒரு பகுதியான வியாசர்பாடிதான் அந்தத் தலம். 

வியாசர்பாடியின் ஒரு பகுதியில்தான் அக்காலத்தில் நைமிசாரண்யம் என்ற பகுதி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நைமிசாரண்யத்தில் முனிவர்கள் ஜாதுல்யா யாகம் நடத்த வேண்டும் என்றும், அந்த யாகத்தை வியாச முனிவரே நடத்தித் தர வேண்டும் என்றும் விரும்பினார்கள். 

முனிவர்களின் விருப்பத்தை நிறைவேற்று வதற்காக நைமிசாரண்யத்துக்கு வருகை தந்த வியாசர், யாகம் முடிந்த பிறகும் நைமிசாரண் யத்தில் இருந்து செல்லாமல் அங்கேயே ஆசிரமம் அமைத்து தங்கியிருக்க முடிவு செய்தார். காரணம், கலியில் வேத தர்மங்கள் மெள்ள மெள்ள மறைந்து, உலகத்தில் அதர்மம் பெருகிவிடும். மக்கள் பலவகையிலும் துன்பப்படுவார்கள். அந்த நிலைமை ஏற்படாமல் தடுத்து, மக்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில், வேதப் பாசறை அமைத்து வேதங்கள் காலாகாலத்துக்கும் நிலைத்திருக்கும் வகையில் தகுதியான பல நூறு சீடர்களை உருவாக்கினார். வேதங்களின் சாராம்சங்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக பதினெட்டு புராணங்கள், மகா பாரதம், பிரம்ம சூத்திரம் போன்ற பல நூல்களை இயற்றினார். மேலும், தம் சீடர்களில் சுமந்த மகரிஷிக்கு ரிக் வேதத்தையும், யஜுர்வேதத்தை வைசம்பாயன மகரிஷிக்கும், சாமவேதத்தை ஜைமினி மகரிஷிக்கும், அதர்வண வேதத்தை பைல மகரிஷிக்கும் உபதேசித்தார். மேலும் தம்முடைய மகனான சுகப்பிரம்ம மகரிஷி மூலமாக ஸ்ரீமத் பாகவதத்தையும் இயற்றும்படிச் செய்தார்.
இப்படி மண்ணுலக மக்களின் நன்மைக்காக மகத்தான சேவை ஆற்றிய தம்முடைய தந்தையைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஆஷாட பூர்ணிமா, குரு பூர்ணிமா, வியாச பூஜை என்றெல்லாம் போற்றப் பெறும் ஒரு நாளை ஏற்படுத்தி, அன்று குருவை வழிபடும் ஞான மரபை உருவாக்கி வைத்திருக்கிறார் சுகப்பிரம்ம மகரிஷி.

வியாச மகரிஷி வேதங்களை உபதேசிப்பதற்கு நைமிசாரண்யமாக இருந்த வியாசர்பாடியைத் தேர்வு செய்ய என்ன காரணம்? அந்தத் தலத்துக்கு அப்படி என்ன தனிச் சிறப்பு?

தனிச் சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தலத்தில் சூரிய தேவன் தவம் இயற்றி, சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அதற்குச் சாட்சியாக சுமார் 5,000 வருடங்கள் பழைமையான ஓர் ஆலயம் இன்றைக்கும் அருளொளி பரப்பி நிற்கின்றது.   

அந்த வரலாறு சொல்வது என்ன?

ஆதவன் தேடி வந்த பானுபுரம்

வியாசரின் பெயரில் அழைக்கப்படும் வியாசர்பாடி, அவர் இந்தத் தலத்துக்கு வருவதற்கு முன்பாக பானுபுரம் என்று அழைக்கப்பட்டது. சூரியன் தனக்கேற்பட்ட சாபம் நீங்கி, இழந்த தேவ அந்தஸ்தைத் திரும்பப் பெற, சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தவம் இருந்த தலம். இங்கு சூரியனால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஈசன் அருள்மிகு இரவீஸ்வரர் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். அம்பிகையின் திருநாமம் அருள்மிகு மரகதாம்பிகை.

ஒருமுறை சூரியனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாத சூரியனின் மனைவி உஷாதேவி, தன்னைப் போலவே ஒருத்தியை உருவாக்கி, அவளுக்கு பிரத்யுஷா என்ற பெயரிட்டு சூரியனிடம் அனுப்பிவிட்டு, ஒரு குதிரையின் வடிவம்கொண்டு வனத்துக்குச் சென்று விடுகிறாள். ஒரு கட்டத்தில் தன்னுடன் இருப்பது உஷாதேவி இல்லை என்ற உண்மைச் சூரியனுக்குத் தெரியவருகிறது.

கோபத்துடன் வேகமும்கொண்ட சூரியன் தன் மனைவி யைத் தேடிக்கொண்டு புறப்பட்டார். வழியில் பிரம்ம தேவர் எதிர்ப்பட்டார். மனைவி தன்னை ஏமாற்றிச் சென்ற ஆத்திரத்தில் இருந்த சூரியன், வழியில் எதிர்ப்பட்ட பிரம்ம தேவரை நமஸ்கரிக்காமல் சென்றுவிடுகிறார். 

தம்மை மதிக்காமல் செல்லும் சூரியனின் போக்கு பிரம்ம தேவருக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. எனவே, சூரியன் மனிதனாகப் பிறந்து சித்தம் மயங்கி அலையும்படி சாபம் கொடுக்கிறார். தான் செய்த தவற்றை உணர்ந்த சூரியன், பிரம்ம தேவரைப் பணிந்து சாப விமோசனம் கேட்டார். அதற்குப் பிரம்ம தேவர் நாரதரிடம் கேட்டுக்கொள்ளும்படி கூறிவிட்டார். 

சூரியன் நாரதரிடம் ஆலோசனை கேட்டார். சூரியனைப் பூமிக்குச் செல்லும்படிக்கூறிய நாரதர், பூமியில் ஒரு வன்னி மரத்தினடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார்.  நாரதர் கூறியபடியே பூமிக்கு வந்த சூரியன், இந்தத் தலத்தில் ஒரு வன்னி மரத்தினடியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன் காரணமாகவே இந்தத் தலத்துக்கு முற்காலத்தில் பானுபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சூரியன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இரவீஸ்வரரை, தை மாத ரத சப்தமியன்று  வியாச முனிவர் பூஜித்து வழிபடுகிறார் என்பது ஐதீகம். மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்திருக்கும் ஆலயத்துக்குள் செல்கிறோம். கருவறையில் ஐயன் இரவீஸ்வரர் அற்புதமாகக் காட்சி தருகிறார். ஒவ்வொரு நாளும் காலையில் 6 முதல் 6.30 மணி வரையில்  சூரியன் தன் கிரணங்களால் ஐயனின் திருமேனியைச் சில நிமிடங்கள் தழுவி வழிபட்ட பிறகே தன் பயணத்தைத் தொடர்கிறார். அன்றாடம் நடைபெறும் இந்த அற்புதக் காட்சியை தரிசிக்கவே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
முனைக் காத்த பெருமாள்

ஐயனின் கருவறைக்கு நேராக, பெருமாள் சந்நிதி அமைந்திருக்கிறது. வியாச முனிவர் மகாபாரதத்தைச் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமான் தம் தந்தத்தினால் மேருமலையில் எழுதியதாகவும், அப்போது தந்தத்தின் கூரிய முனை மழுங்கிவிடாதபடி பெருமாள் காத்து அருளியதால்,  தனிச் சந்நிதியில் ‘முனைக் காத்த பெருமாள்’ என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார்.

விநாயகர், வள்ளி - தேவயானை சமேத முருகப்பெருமான், கால பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்கை போன்ற பரிவாரத் தெய்வங்களின் சந்நிதிகளையும் தரிசிக்கலாம். ஐயாயிரம் ஆண்டுகளாக வற்றாத கிணறு இந்த ஆலயத்தின் அதிசயம். ஜாதகத்தில் சூரிய பலம் குறைந்தவர்கள், இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி, இரவீஸ்வரரை வழிபட்டால், சூரியனின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

வற்றாத கிணறும் வன்னி மரமும்!

சூரியனால் ஏற்படுத்தப்பட்ட சூரிய தீர்த்தம் என்னும் திருக்குளம் இன்று போதிய பராமரிப்பு இல்லாமல் வறண்டு காணப்படுவது மனதுக்கு வருத்தம் தருகிறது. விரைவில் இந்தச் சூரிய தீர்த்தக் குளம் புதுப்பொலிவு பெற்று, தன்னில் நீராடுபவர் களின் பாவங்களைப் போக்க வேண்டும் என்று இரவீஸ்வரரைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி நமக்குத் தோன்றவில்லை.

ஆலயத்தின் அர்ச்சகர் சிவகுமார் சிவாசார்ய ரிடம் பேசினோம். ‘`சூரியனுக்குப் பிரம்ம தேவரால் ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. துவாபர யுகத்தைச் சேர்ந்த கோயில் என்பதால், சுமார் 5,500 வருடங்களுக்கு முற்பட்ட தலமாகப் போற்றப் படுகிறது. நள மகாராஜா தமயந்தியை விட்டுவிட்டுக் காட்டுக்குச் சென்றதற்குச் சாட்சி சொன்ன வன்னி மரமும், சிவலிங்கமும், கிணறும் இன்றைக்கும் சாட்சியாக இருப்பது வியப்புக்குரிய சிறப்பு’’ என்றார்.

கலைத்துறையில் சிறந்து விளங்க...

வேத முனிவருக்கு வில்வ மாலை!

பெருமாளின் சந்நிதியை அடுத்து வியாச முனிவரின் சந்நிதியையும் நாம் தரிசிக்கலாம். புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்துகொண்டு, கையில் ஓலைச் சுவடி ஏந்தியபடி காட்சி தருகிறார் வியாச முனிவர். அவரை தரிசித்து வழிபட்டு அவருடைய ஆசியைப் பெற்ற பிறகே பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் வழக்கம் இந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் காணப்படுகிறது. மேலும், பௌர்ணமி தினத்தில் வியாசருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபட்டால், கலைத்துறையில் பிரகாசிக்கலாம் என்றொரு நம்பிக்கை நிலவுவதால், பல புதுமுகங்களும், புகழ்பெறத் துடிக்கும் பிற கலைத்துறையினரும் பௌர்ணமி நாளில் இங்கே வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment