Friday 18 August 2017

சகல பாவங்களும் நீங்கும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்!


                 சிவராத்திரி சிறப்பு தரிசனம்!
ஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது திருவைக்காவூர். ஒருகாலத்தில், இந்தப் பகுதி வில்வ மரங்கள் கொண்ட அடர்ந்த வனமாகத் திகழ்ந்தது. ஒருமுறை, அமாவாசை நாளில், வேடன் ஒருவன் மானை விரட்டி வந்தான். அந்த மான், அங்கே தங்கி தவம் மேற்கொண்ட முனிவரின் ஆஸ்ரமத்தில், தஞ்சம் புகுந்தது.
வேகவேகமாக வந்த வேடன், 'இந்த மானை நான்தான் விரட்டி வந்தேன்; எனவே, எனக்கு உரியது இது’ என வாதிட்டான். இதில் கோபமான முனிவர், 'என்னிடம் அடைக்கலமான மானைக் காப்பது என் கடமை’ என்று கூறினார். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், ஆஸ்ரமத்துக்குள் நுழைய முயன்றான் வேடன். உடனே, தனது தவ வலிமையால், அங்கே புலி ஒன்றை வரச் செய்தார் முனிவர். அதைக் கண்டு அரண்டுபோன வேடன், அலறியடித்துக் கொண்டு ஓடி, வில்வ மரம் ஒன்றில் ஏறி அமர்ந்துகொண்டான். அன்றைய இரவு முழுவதும், மரத்தில் இருந்தபடி, வில்வ இலைகளைப் பறித்துக் கீழே போட்டபடியே இருந்தான்.
அந்த மரத்தடியில், சுயம்பு மூர்த்தமாக லிங்கத் திருமேனி ஒன்று இருந்தது. அவன் பறித்துப் போட்ட வில்வ இலைகள், லிங்கத்தின் மீது விழ... அதில் மகிழ்ந்த சிவனார், அவனை மன்னித்தார்; அத்துடன் அவனுக்கு முக்தி வழங்கியருளினார் என்கிறது ஸ்தல புராணம்!
அருமையான ஆலயம்; ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீவில்வவனநாதர்.
இங்கு, நந்திதேவர் கோயில் வாசலைப் பார்த்தபடி இருப்பது விசேஷம் என்பர். வேடனைக் காக்க வேண்டி, எமனை உள்ளே விடாமல் தடுத்தாராம் நந்திதேவர். மேலும், நந்திதேவர் விட்ட பெருமூச்சில், பறந்தடித்து விழுந் தானாம் எமதருமன். அந்த இடத்தில் உண்டான திருக்குளத்துக்கு, எம தீர்த்தம் என்று பெயர். இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடி, சிவனாரை வணங்கினால், ஆயுள் பலம் கூடும்; மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்; நோய்கள் நீங்கி, நிம்மதியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்!
இந்தத் தலத்தில் சிவபெருமான், திருமால், பிரம்மா மூவரும் சேர்ந்து வேடனுக்கு மோட்சம் அளித்தனராம். எனவே, இங்கு வந்து வணங்கினால், மூவரின் பேரருளும் கிடைக்கப் பெறலாம். இன்னொரு விஷயம்... துவார பாலகர்களுக்குப் பதிலாக, எமதருமனை விரட்டுவதற்காகக் கையில் கழி எடுத்து விரட்டுகிற பாவனையில் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
தமிழகத்தில் மகாசிவராத்திரி விழாவை கோலாகலமாகக் கொண்டாடும் ஆலயங்களுள், முக்கியமானது திருவைக்காவூர் திருத்தலம். இங்கே சிவராத்திரி நாளில், நான்கு கால பூஜைகள் சிறப்புற நடைபெறும். முதல் நாள் மதியத்தில் துவங்கி, மறுநாள் விடிய விடிய சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள் என அமர்க்களப்படும். இந்த பூஜையில் கலந்துகொண்டு, ஸ்ரீவில்வவனநாதரை வணங்கினால், சகல பாவங்களும் தீரும்; சந்தோஷம் நிலைக்கும் என்று குதூகலம் பொங்கத் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
மகாசிவராத்திரி நாளில், நான்கு கால பூஜைகளில், நான்கு வித நைவேத்தியங்கள் படைத்து வணங்கினால், சகல பாவங்களும் நீங்கி, சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்! 

No comments:

Post a Comment