Wednesday, 23 August 2017

சதுரகிரி யாத்திரை ! - 6


பாம்புகளை மாலையாக அணிந்த சாட்சாத் பரமேஸ்வரனை - கண் கண்ட அந்த தெய்வத்தைக் காணப் பிடிக்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் ஆண்டாள். அதே நேரம் அவளது கணவன் ஆனந்தசுந்தரனோ, தன் இஷ்ட தெய்வத்தை - அனுதினமும் தான் போற்றிப் புகழ் பாடும் கயிலைவாசனைத் தரிசித்த இன்பத்தில் திளைத்து ஆனந்த மயக்கம் கொண்டிருந்தான். அவனது உதடுகள் ‘நமசிவாய... நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தை விடாமல் உச்சரித்துக் கொண்டே இருந்தன.
நீறு பூத்த நெற்றியோடு துலங்கும் அந்த முக்கண்ணனின் முகத்தைக் காணப் பிடிக்காமல் ஒதுங்கினாள், திருமால் பக்தையான ஆண்டாள். இது கண்டு அவளின் மேல் பரிவு ஏற்பட்டது ஈஸ்வரனுக்கு! உலகத்துக்கே அப்பன் அல்லவா! வேண்டப்பட்டவர், வேண்டப்படாதவர் என்றெல்லாம் அவனுக்கு ஏது பாரபட்சம்? எனவே, அனுதாபப்பட்டார் ஆண்டாளின் மேல். அவளுக்கு அருள் தர விரும்பினார் ஆதிசிவன்.
தனக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருக்கும் ஆண்டாளிடம், ‘‘எதற்காக அம்மா இந்தக் காட்டில் இத்தனை நாளாக நீ தவம் புரிந்து வந்தாய்? என்னைச் சற்றுத் திரும்பிப் பாரம்மா’’ என்றார், சர்வலோக ரட்சகன்.
இந்த லோகநாயகனின் தரிசனத்துக்காக - அருள் பார்வைக்காக எத்தனையோ முனிவர்களும் ரிஷிகளும் கணக்கற்ற ஆண்டுகள் தவம் இருப்பதை புராணங்கள் வாயிலாக அறிந்தும், கண் முன்னே பிரத்யட்சமாகக் காட்சி தந்த அந்த ஆண்டவன் மேல் ஆண்டாளுக்கு அன்பு ஏற்படவில்லை. தப்பித் தவறியும்கூட சிவன் இருக்கும் பக்கம் தனது பார்வை சென்று விடாதபடி கவனமாக இருந்தாள்.
எனினும், தனக்கும் கணவனுக்கும் தனித் தனியே இருக்கும் வெறித்தனமான சிவ- விஷ்ணு பக்தி பற்றி சர்வேஸ்வரனிடம் விலாவாரியாகச் சொன்னாள் ஆண்டாள். பிறகு, ‘‘எப்போதும் சுடுகாட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் பிட்சாண்டியான உன்னைக் குறித்து ஒன்றும் நான் தவம் இருக்கவில்லை. என் கணவர்தான், அறியாமையின் காரணமாக ‘நமசிவாய... நமசிவாய’ என்று பிதற்றி, நித்தமும் உன்னைக் கொண்டாடி வருகிறார். ஆனால், நான் அப்படி இல்லை. சாட்சாத் அந்த ஸ்ரீமந் நாராயணன்தான், இந்த அகிலத்தின் சகல இயக்கங்களுக்கும் காரணம் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த மகத்துவத்தை என் கணவர் என்று புரிந்து கொள்ளப் போகிறாரோ, தெரியவில்லை. என் அபிமான தெய்வம்- அன்றாடம் நான் துதிக்கும் அந்த ஸ்ரீமந் நாராயணனின் தரிசனம் வேண்டித்தான் இந்த சதுரகிரியில் தவம் இருந்து வருகிறேன்’’ என்றாள், வேறெங்கோ பார்த்தபடி அலட்சிய பாவத்துடன்.

மந்தகாசப் புன்னகையுடன் இதைக் கேட்ட பரமேஸ்வரன், பதில் எதுவும் சொல்லாமல் ஓரடிதான் முன்னால் எடுத்து வைத்திருப்பார்... அடுத்த கணம் அந்த வனமே பிராகாசமானது போல் ஒரு விநாடி பெரிய மின்னல் ஏற்பட்டுச் சட்டென்று மறைந்தது. தன் கண்களைக் கூசச் செய்த அந்தத் திடீர் மின்னல் எவ்வாறு ஏற்பட்டது என்று அறிவதற்காகப் பின்பக்கம் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள் ஆண்டாள். அங்கே _ தான் கண்ட காட்சியை அவளால் நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்டு, புருவங்களை அகல விரித்து மீண்டும் உற்றுப் பார்த்தாள்.
இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவள் கண்களுக்கு முன் _ நவரத்தினம் பதித்த கிரீடம் தரித்து, ஒளி வீசும் மணி மாலைகளை அணிந்து, கஸ்தூரி திலகத்தை நெற்றியில் இட்டு, பீதாம்பர ஆடை உடுத்தி, சங்கு- சக்கரம் முதலான ஆயுதங்களை அதற்குரிய திருக்கரங்களில் ஏந்தி, மார்பிலே மணம் கமழும் துளசி மாலை துலங்க _ சாட்சாத் ஸ்ரீமந் நாராயணன் புன்னகை ததும்பும் செவ்விதழோடு ஆண்டாளுக்குக் காட்சி அளித்துக் கொண்டிருந்தார்.
பிரமிப்பு அகலாமல் கண்களில் ஆனந்தம் பொங்க பார்த்துக் கொண்டே இருந்தாள். பேச்சு எதுவும் வராமல், கண் களில் இருந்து நீர் தாரை தாரையாக வழிய ஆண்டாள் நின்று கொண்டிருந்தபோது, கருணை பொங்கும் விழிகளுடன் அவளைக் கனிவுடன் பார்த்தார் பரந்தாமன். ‘‘ஆண்டாள்... உனது தவத்தைக் கண்டு வியந்தேன். எதற்காக என்னைக் குறித்து நீ தவம் இருந்தாய்? உனக்கு அருள் பாலிக்கவே தற்போது உன் முன் வந்துள்ளேன். என்ன வரம் வேண்டும் உனக்கு? கேள், தயக்கம் இல்லாமல்!’’ என்றார் மாலவன் மலர்ச்சியுடன்.
‘‘பெருமானே! உன் தரிசனம் எனக்குக் கிடைத்ததே பெரும் பாக்கியம். அமரரும் பெற இயலாத அரிய பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். இந்த இன்பத்தைத் தவிர, எனக்கு வேறென்ன வரம் வேண்டும்? இந்தப் பூவுலகிலே நான் படித்து ஆராய்ந்த நூல்கள் அனைத்தும் உலகின் பரம்பொருள் நீதான் என்று உரைக்கின்றன. ஆனால், என் கணவரோ, உன்னை ஏற்றுக் கொள்ளாமல் ‘சிவமே பரம்பொருள்’ என்று புலம்பி வருகிறார். ‘ஒரே குடும்பத்தில் இருந்து வரும் நாம், ஒவ்வொரு கடவுளைத் தனித் தனியே உரிமை கொண்டாடி வருவது இனிய இல்லறத்துக்கு உகந்ததல்ல’ என்று இருவரும் கூடி அவ்வப்போது விவாதித்து வருவோம். கடைசியில், எந்தக் கடவுளை வழிபடுவது என்கிற தீர்மானமான ஒரு முடிவுக்கு வர முடியாமல் கலைந்து விடுவோம். ‘சிவ வழிபாடே சிறந்தது’ என்கிற கொள்கையில் அவர் தெளிவாக இருப்பார்; உன்னைக் குறித்த எனது வழிபாட்டு முறையில் நான் தெளிவாக இருப்பேன்.
கணவன்- மனைவி ஆகிய எங்கள் இருவருக்கும் எப்போதும் இந்த தர்க்கம்தான்.
இதற்கு நிரந்தரமான ஒரு தீர்வு காண்பதற்கு, ‘இருவரும் அவரவரது இஷ்ட தெய்வங்களைக் குறித்து தவம் இருப்போம். பரம்பொருள் எதுவெனத் தெரிந்து கொள்வோம்’ என்று தீர்மானித்து, பன்னெடுங்காலமாக சித்தர்கள் வசித்து வரும் இந்த சதுரகிரிக்கு வந்து எங்கள் தவத்தைத் தொடர்ந்தோம். ஆனால், ‘பரம்பொருள் ஒன்றே’ என்பது இங்கும் நிரூபணம் ஆகாமல், தனித் தனியே தரிசனம் கிடைக்கப் பெற்றோம். சிவ தரிசனத்தில் அவர் திளைத்தார்; சங்கு - சக்ரதாரியான உன் காட்சியில் நான் பூரித்துக் கொண்டிருக்கிறேன். உண்மையை எனக்கு விளக்க வேண்டுகிறேன். பரம்பொருள் என்பது பரமனா? பரந்தாமனா? தாங்கள்தான் அருள வேண்டும்’’ என்றாள் ஆண்டாள், அமைதியாக.
ஆனந்தசுந்தரனும் கண் கொட்டாமல் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். பாற்கடல்வாசனான அந்தப் பரந்தாமன், தம்பதியர் இருவரையும் தீர்க்கமான பார்வை பார்த்தார். பிறகு, ‘‘இறைபக்தியில் எந்நேரமும் திளைத்து இன்பம் துய்த்து வரும் ஈடில்லா தம்பதியரே... உங்களின் அன்புக்கும் பண்புக்கும் கட்டுப்பட்டு யாம் இப்போது உங்கள் முன் தரிசனம் தந்தோம். ஆண்டாள்..! உங்களுக்குள் இருக்கும் சந்தேகத்தை என் முன் கேள்வியாக இப்போது என்னிடம் வைத்தாய். ‘பரம்பொருள் என்பது பரமனா? பரந்தாமனா?’ என்று கேட்டாய். உங்களின் சந்தேகத்தை நீங்கள் இருவரும் உணரும் வண்ணம் இப்போது போக்குகிறோம். உங்களுக்காக மட்டுமல்ல... இந்த உலகமே அறியும் வண்ணம் மீண்டும் பிரத்யட்சமாகக் காட்சி தருகிறோம்’’ என்று பரந்தாமன் சொன்ன அடுத்த விநாடி, அதே நிலையிலேயே- அதே இடத்தில் சங்கரநாராயணராகக் காட்சி தந்தார்.
சங்கரனும் (சிவனும்) நாராயணனும் இணைந்த அந்த வடிவத்தைக் கண்ணுற்ற ஆனந்தசுந்தரனும் ஆண்டாளும் திகைப்பு அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களின் ஐயத்தைப் போக்க நினைத்த சங்கரநாராயணர், ‘‘என் வடிவத்தைக் கண்டு திகைக்காதீர்கள். சிவன் வேறு; விஷ்ணு வேறு என்று தனித் தனியே கொண்டாடுபவர்கள் அறியாமை உடையவர்கள். அவர்களுக்குப் போதிய பக்குவம் வரவில்லை என்றுதான் பொருள். இரண்டும் ஒன்றே. இந்தத் தெளிவு பெற்றவரே முழுமையான மனிதர் ஆகிறார்.
எங்களின் ஒருமைப்பாட்டைப் பற்றி வேதங்கள் முழங்குகின்றன. யானே சங்கரன்; யானே நாராயணர்; யானே சங்கரநாராயணர். எளிதாகச் சொல்வதானால் அறியாமையில் இருப்பவர்கள்தான் சங்கரன் என்றும், நாராயணன் என்றும் தனித் தனியே கொண்டாடு கிறார்கள். அனைத்தும் கடந்த மகரிஷிகளுக்கு யாம் சங்கரநாராயணர். இனி, எம்மில் பேதம் வேண்டாம்!’’ என்று எடுத்துச் சொல்லி, வேதாந்த மற்றும் சித்தாந்தக் கருத்துகளை இருவருக்கும் எடுத்துச் சொன்னார் சங்கரநாராயணர்.
சங்கரநாராயணர் எடுத்துச் சொன்ன கருத்துகளைக் கேட்ட பிறகுதான் ஆனந்தசுந்தரனும் ஆண்டாளும் தெளிந்தார்கள். கைகளைக் கூப்பித் தொழுதார்கள். அந்த வடிவத்தின் முன் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினார்கள். பிறகு, ‘‘சிவன் வேறு; விஷ்ணு வேறு என்று இத்தனை நாட்களாக ஒரு வித மயக்கத்தில் இருந்த எங்களை ஆட்கொண்டு அறநெறி போதித்த இறைவா... இரண்டு வடிவமும் ஒன்றேதான் என்று இது நாள் வரை எங்களுக்குப் புரியாமல் போனதில் மனம் கூசுகிறோம். இப்போது தெளிவைத் தந்து விட்டீர்கள். தாங்கள் எங்களுக்காக ஓர் உபாயம் செய்ய வேண்டும்’’ என்றனர்.
‘‘சொல்லுங்கள். என்ன உபாயம்?’’ என்றார் சங்கரநாராயணர்.
‘‘அடுத்தடுத்து எங்களுக்குக் காட்சி தந்தது போல் தாங்கள் இரட்டை மூர்த்தி வடிவில் இங்கு எழுந்தருள வேண்டும். என்றென்றும் இங்கே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் மழை பொழிய வேண்டும்’’ என்று வேண்டினர்.
அடுத்த கணம், சங்கரநாராயணர் காட்சி தந்து கொண்டிருந்த அந்த இடத்தில் பெரும் ஒளி வெள்ளம் ஏற்பட்டது. அந்த ஒளி வெள்ளம் அடங்கிய பிறகு இரட்டை லிங்கங்கள் அங்கு காட்சி தந்தன (லிங்கங்கள் சுயம்புவாகத் தோன்றினாலும், பின்னாளில் முறையாக இதை பிரதிஷ்டை செய்து பூஜைகளைத் தொடர்ந்தவர் சித்தர் ராமதேவர்). இந்த லிங்கத் திருமேனிகளுக்கு நித்தமும் பூஜைகள் செய்து வழிபட்டு வரலாயினர் இருவரும்.
நாட்கள் ஓடின. ஒரு தினத்தில் சிவ கணங்கள் புஷ்பக விமானத்தில் வந்து, ஆனந்த சுந்தரனையும் ஆண்டாளையும் விமானத்தில் ஏற்றி சிவலோக வாழ்வுக்கு அழைத்துச் சென்றனர். சதுரகிரியில் வசித்து வந்த தவசீலரும் சித்த புருஷருமான ராமதேவர் இந்த இரட்டை லிங்கங்களை தொடர்ந்து பூஜித்து வரலானார். இதன் அருகேதான் ராமதேவர் ஆசிரமம் அமைத்து வழிபட்டு வந்தார். இந்த இரட்டை லிங்கம் சந்நிதிக்கு நேராகத் தெரியும் உயர்ந்த மலையில் ராமதேவர் குகை இருக்கிறது.
தாணிப்பாறையில் இருந்து சதுரகிரியின் உச்சிக்குச் செல்லும் யாத்திரையில் முக்கியத்துவம் வாய்ந்த ரெட்டை லிங்க சந்நிதியை தரிசித்து விட்டோம். சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கத் திருமேனிகளை தரிசிக்க உள்ளம் விழைகிறது. ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என்று யாத்திரை தொடர்கிறது.
அடுத்து பெரியபசுக் கிடை, நவ்வா ஊத்து (இதை நாவல் ஊத்து என்றும் சொல்கிறார்கள். இந்த ஊத்தில் தண்ணீர் எப்போதும் இருக்குமாம்), ஆசனப் பாறை (ஓர் ஆள் வசதியாகச் சாய்ந்து படுத்துக் கொள்ளலாம் போல் இருக்கும் ஒரு பாறைக்கு இந்தப் பெயர். இயற்கையாக அமைந்த பாறை. சித்தர்கள் பலரும் இதில் அமர்ந்திருப்பார்கள் என்று கருதப்படுவதால், பக்தர்கள் இதில் அமர்வது கூடாதாம்), பச்சரிசிமேடு, குளிராட்டி (மரங்கள் அடர்ந்த இந்தப் பகுதியில் சற்று நேரம் அமர்ந்தால் ‘சிலுசிலு’வென குளிர் எடுக்குமாம்!), சின்னபசுக் கிடை, ஆற்றோரப் பேச்சியம்மன் போன்ற பகுதிகளைக் கடந்து செல்கிறோம். சமமான தரையில் கொஞ்சம் தூரம் நடந்தால் பிலாவடிக் கருப்பர் வருகிறார்.
ஒரு விஷயம் தெரியுமா? பஞ்சபாண்டவர்களுக்கும் இந்த சதுரகிரிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதுவும் அர்ஜுனனும் பாஞ்சாலியும் ஒரு நாள் தனியே இந்த வனத்தில் இருந்தபோது நடந்த சம்பவம்... யதேச்சையாக நடந்த இந்தச் சம்பவத்தைக் கண்டு பஞ்ச பாண்டவர்கள் பதற... கடைசியில் கண்ண பரமாத்மா வந்து அவர்களைக் காப்பாற்றினார்.
என்ன சம்பவம் அது?

No comments:

Post a Comment