வில்வமும் வாழையும்!
மகாவிஷ்ணுவின் இதயத்தில் இருந்து தோன்றியவர்; பாற்கடலைக் கடையும்போது, திருமகளுக்கு முன்னதாகத் தோன்றியவர்; அத்திரி முனிவர்-அனுசுயாதேவி தம்பதிக்கு மகனாக அவதரித்தவர்; நவக்கிரகங்களில் சுபக் கிரகர்; சிவனாரின் முக்கண்களில் இடது கண்ணாகத் திகழ்பவர்; மூன்று வகை நாடிகளில் இடைகலை நாடியாக உள்ளவர்; மூவகை குணங்களில் சாத்விக குணத்துக்குச் சொந்தக்காரர் என்றெல்லாம் சந்திரனைப் போற்றுகின்றன புராணங்கள்.
மன்மதனின் வெண்கொற்றக் குடையாகவும், மருத்துவ குணம் கொண்ட பயிர்களைச் செழிக்கச் செய்பவராகவும், பராசக்தியின் அம்சமாகவும், மிகுந்த அழகு உடையவராகவும், நவக்கிரகங்களில் 2-ஆம் இடத்தைப் பெற்றவருமாகிய சந்திரபகவானுக்கு உரிய திருத்தலம்... திங்களூர்!
கும்பகோணத்தில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில் உள்ளது திங்களூர். இங்கே ஸ்ரீபெரியநாயகி சமேதராக திருக்கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகயிலாச நாதர். திருநாவுக்கரசர் பாடிப்பரவிய இந்த ஆலயம், கி.பி.7-ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையதாம். இங்கே தனிச்சந்நிதியில் அருளும் சந்திரனுக்கு சிறப்பிடம் உண்டு.
அஸ்வினி முதலான தன்னுடைய 27 பெண்களையும் சந்திரனுக்கு மணம் செய்து வைத்தான் தட்சன். இவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அளவற்ற பிரியம் கொண்டிருந்தான் சந்திரன். மற்றவர்கள் தந்தையிடம் சென்று முறையிட, கோபத்தில் சந்திரனைச் சபித்தார் தட்சன். சாபத்தின் விளைவால் களையிழந்த (தேய்ந்துபோன) சந்திரன் இந்தத் தலத்து இறைவனை தவம் செய்து வழிபட, சிவனருளால் வளரும் சக்தி பெற்றான் என்கிறது தல புராணம். இந்த ஆலயம், வில்வம்-வாழை என இரண்டு ஸ்தல விருட்சங்களுடன் திகழ்வது விசேஷம்.
'ஏக வில்வம் சிவார்ப்பணம்' என்பர். அத்தனை மகத்துவம் வாய்ந்தது வில்வம். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பிசின், பட்டை, ஓடு... அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை! உடற்சூட்டைத் தணிக்கும் வல்லமை வில்வத்தில் உண்டு. ஜுரம், சளி, வயிற்றுக்கடுப்பு முதலான பிணிகளில் இருந்து நிவாரணம் தரக்கூடியது வில்வம் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.
வில்வப் பூவை 'கூவிளம்' என்கிறது குறிஞ்சிப்பாடல். கபிலர் இயற்றிய இந்தப் பாடலுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையில், கூவிளம் என்று தெளிவுறக் குறிப்பிட்டுள்ளார். தவிர, யாப்பிலக்கணத்தில் கூவிளம், 'கூவிளந்தண்பூ' எனும் அசைச் சீர்களுக்கான வாய்ப்பாடாகவும் அமைந்துள்ளது சிறப்பு.
தில்லைச் சிற்றம்பலத்தில் வில்வத்தின் இலைகள் தொடுக்கப்பட்ட கண்ணியைப் பொன்னால் செய்து, அணுக்கத் திருவறையில் அருவுருவாகிய ஆண்டவனுக்குச் சூட்டியுள்ளனர். வில்வத்தை சிவபிரான் சூடும் மலராகப் பாடியுள்ளார் சுந்தரர்.
திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள அரகண்டநல்லூர்- ஸ்ரீஅரையணியேசர் ஆலயம், திருவஹீந்திரபுரம்- ஸ்ரீதேவநாத சுவாமி திருக்கோயில், மதுரை மாவட்டம் திருவேடகத்தில் உள்ள திருஏடகநாதர் ஆலயம், திருமோகூர்- ஸ்ரீகாளமேகப் பெருமாள் கோயில், நாகை மாவட்டம் திருக்கடையூர்- ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயம் மற்றும் சிறுபுலியூரில் உள்ள ஆறுமுகக் கடலமுதன் போன்ற ஆலயங்கள் பலவற்றிலும் ஸ்தல விருட்சமாகத் திகழ்கிறது வில்வம்!
சரி... திங்களூரின் ஸ்தல விருட்சமாக வாழை இடம் பெற்றது எப்படி? இதற்கு, அப்பூதியடிகளின் மைந்தன் பாம்பு கடித்து இறந்துபோக, திருநாவுக் கரசரின் பதிகத்தால் அவன் உயிர்பெற்ற வரலாறை காரணமாகக் கூறுகிறது ஸ்தலபுராணம்.
தேக ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் வாழைப்பழத்தில் அடங்கியுள்ளன. வாழைத்தண்டு சிறுநீரகக் கோளாறை நீக்கவல்லது. வாழை மட்டையின் சாற்றைக் கொண்டு, நாகத்தின் விஷத்தையே முறிக்க முடியுமாம்! இன்றைக்கும் வாழை இலையில் சாப்பிடுகிற வழக்கம் உண்டு. வாழை இலையில் உணவு சாப்பிட்டால், பித்தம் உள்ளிட்ட மொத்தக் குறைபாடுகளும் நீங்கும் என்கின்றனர் சான்றோர். வாழைப் பூவைப் பெண்கள் சாப்பிட்டுவந்தால், மாதாந்திரக் கோளாறுகள் நீங்கும்; மாதவிடாய் காலத்தை ஒழுங்குக்கு கொண்டுவரும்.
திங்களூரில் மட்டுமின்றி, திருவையாறில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள திருப் பழனம்- ஸ்ரீஆபத்சகாயநாதர், திருச்சி மண்ணச்ச நல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலியில் அருளும் ஞீலிவனநாதர், ஆடுதுறை- ஸ்ரீஆபத் சகாயேஸ்வரர் மற்றும் குடவாசல்- ஸ்ரீகோணேஸ்வரர் ஆலயத்திலும் வாழையே ஸ்தல விருட்சம்!
வில்வம் மற்றும் வாழையை ஸ்தல விருட்சமாகக் கொண்ட ஆலயத்தை வலம் வந்து வணங்குங்கள்; வளம் பெறுங்கள்!
|
Friday, 18 August 2017
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment