சுந்தரருக்கு வருத்தமான வருத்தம் - இறைவனிடம் எதை வேண்டிக்கொள்ள வேண்டும் என்று அறியாமல், எதைக் கேட்பது என்று புரியாமல், வெறுமே வடிவத்தைத் தேடி, இருவர் காலத்தை விரயம் செய்துவிட்டார்களே என்று!
மாவாய்ப் பிளந்தானும் மலர்மிசை யானும்ஆவா அவர் தேடித் திரிந்து அலமந்தார்பூவார்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்த்தேவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே
வருத்தத்துடன் அவர் நிறுத்திவிடவில்லை. அடி முடி தேடிய ஹரி அயன் போலல்லாமல், பரமனாரிடம் தவநெறியைத் தனக்கு அருளும்படி இறைஞ்சினார். பக்தர் கேட்டதைத் தராமல் இருப்பாரா பரமனார்?
விண்ணார்ந்தன மேகங்கள் நின்று பொழியமண்ணாரக் கொணர்ந்தெற்றி ஓர் பெண்ணைவடபால்பண்ணார் மொழிப் பாவையர் ஆடுந்துறையூர்அண்ணா உனை வேண்டிக்கொள்வேன்தவநெறியே
- என்று தக்க ராகப் பண்ணில் சுந்தரர் தொழுது பணிந்தவுடன், தவநெறியைத் தந்தார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு மேற்கு- வடமேற்காக, சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ளது. பண்ருட்டி- புதுப்பேட்டை- அரசூர் சாலையில் சென்று, தொடர்ந்து கரும்பூர் சாலையில் திரும்பி சிறிது தூரம் சென்றால், திருத்துறையூர்! விழுப்புரம்- கடலூர் அல்லது பண்ருட்டி- விழுப்புரம் வழிகளில் உள்ள தலம்.
திருத்தளூர் எனும் பெயரே புழக்கத்தில் உள்ளது. பாஸ்கர க்ஷேத்திரம், ஞான சக்தி பீடம் என்றும் வழங்கப்படும் திருத்துறையூர், நடுநாட்டுத் தலமாகும். சிறிய ஊர்.
திருக்கோயில் முன்பு நிற்கிறோம். கோபுரம் இல்லை. முகப்பு மட்டுமே! நுழைவாயிலைக் கடந்ததும் நமக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி. அடுத்து உள்ள உள்வாயிலையும் கடக்கிறோம். பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி மண்டபம். இதைச் சுற்றிலும் கம்பிகள் அமைத்து, பூச்செடிகளெல்லாம் வைத்து அழகுபடுத்தியிருக்கிறார்கள்.
நாம் இப்போது நிற்கும் இந்தப் பகுதியே, உள்பிராகாரமும் ஆகும். விசாலமான பிராகாரம்! வலம் வருவோமா?
மேற்குப் பார்த்த கோயில். எனவே, இப்போது நாம் நிற்பது மேற்குத் திருச்சுற்று. வலம் தொடர, வடமேற்குப் பகுதியில் தெற்குப் பார்த்த அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் சந்நிதி. சங்கு- சக்ரதாரியாக, அபய- வர ஹஸ்தம் தாங்கி, நின்ற திருக்கோலத்தில் கோலாகலமாகப் பெருமாள் தரிசனம். அடுத்து... வள்ளி- தெய்வானை சமேத முருகன். பன்னிரு கரங்களுடன், அபய-வரஹஸ்தராக, மயில் மீது அமர்ந்திருக்கிறார். அடுத்து, பால முருகன் சந்நிதி; நின்ற கோலத்தில், பாச- அங்குசம், அபய- வரம் ஆகியன கொண்ட நான்கு திருக்கரங்களுடன். முருகனுக்கு வலப்பக்கம் பார்த்திருக்கிறது மயில்.
துறையூருக்குத் திருப்புகழ் உண்டு.
பூரித்தன பாரச்சடை வேதக் குழலாள் பத்தர்கள்பூசைக்கு இயல்வாள் பத்தினி சிவகாமிபூமிக் கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளிப் புணர்போகர்க்கு உபதேசித்தருள் குருநாதாசூரக்குவடு ஆழித் தவிடாய் முட்ட அசுரர்க்கிடசோர்வில் கதிர் விட்டருள் விறல்வீராதோகைச்செயலாள் பொற்பிரகாசக் குறமான்முத்தொடுசோதித்துறையூர் நத்திய பெருமாளே
- என்று அருணகிரியார் பாடுகிறார்.
வடகிழக்குப் பகுதியில் நவக்கிரகங்கள். அடுத்து யாகசாலை. தொடர்ந்து, ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியலிங்கம், ஸ்ரீசூரியன்.
கிழக்குத் திருச்சுற்றில், எழில்மிக்க நந்தவனம். தெற்குச் சுற்றில் திரும்பி நடக்க, நடுப்பகுதியில் நால்வர் பெருமக்கள்; வடக்குப் பார்த்தவர்களாக! மீண்டும் மேற்குச் சுற்றில் திரும்புகிறோம். ஐயப்பன் சந்நிதியும் பற்பல லிங்கங்களும். வலம் வந்து, நந்தியைப் பணிந்து, மூலவர் கருவறைக்குச் செல்கிறோம். பெரிய முன் மண்டபம். மண்டப நுழைவாயிலின் ஒருபுறம் ஸித்தி- புத்தி உடனாய ஸ்ரீவிநாயகர்; மறுபுறம் வள்ளி- தெய்வானை உடனாய சுப்ரமணியர். வாயிலின் மேலே, சுந்தரர் அருள்பெறும் காட்சி, சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
மண்டபத்துள் சென்றால், தெற்கு நோக்கிய நடராஜர் சபை. பிராகாரத்தில் எழுந்தருளியிருக்கும் சைவ நால்வர் பெருமக்கள், அங்கிருந்தபடியே ஆடல்வல்லானை வணங்கும் வகையில், இடையே உள்வாயில். அர்த்த மண்டபம் அடைந்து, அங்கிருந்தபடி உள்ளே நோக்க... அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர். துறையூர்நாதர், தவநெறி ஆளுடையார் என்றும் இவருக்குப் பெயர் உண்டு.
அதென்ன சிஷ்டகுருநாதேஸ்வரர்? சுந்தரருக்கு தவநெறி தந்து குருவாக ஆட்கொண்டதால், இப்படியரு பெயர்.
வட்ட வடிவ ஆவுடையார் கொண்ட கம்பீரமான சிவலிங்கத் திருமேனி. நமச்சிவாயனை வணங்கியபடியே மண்டபம் அடைந்து, மூலவர் கருவறையை வலம் வருகிறோம். கோஷ்ட மூர்த்தங்களாக ஸ்ரீதுர்கை, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிநாயகர்.
இவர் சாதாரண விநாயகர் இல்லை... சாட்சி விநாயகர். அருகிலேயே ஸ்ரீஉமாமகேஸ்வரர், சுந்தரருக்குத் தவநெறி தந்த காட்சி, கல்சிற்பமாக மிளிர்கிறது. சுந்தரர் எது வேண்டுமானாலும் சிவனாரிடம் கேட்பார்; சிவனாரும் மறுப்பேதும் சொல்லாமல் அவர் கேட்டதைக் கொடுப்பார். இவ்வாறு நடக்கும் அருள் சாகசத்துக்கு சாட்சியாக விநாயகரும் எழுந்தருளுவார். இங்கேயும், ஆண்டானுக்கும் அடியாருக்கும் நடைபெற்ற அருள் விளையாடலில், சாட்சித் திருக்கோலம் கொண்டவராக விநாயகர். கோஷ்ட மூர்த்தங்களில் துர்கைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் பெரிதாக எடுத்துக் கட்டப்பட்ட சந்நிதிகள்.
கருவறை வெளிச்சுவரில் நிறைய கல்வெட்டுகள். பிராகாரத்தில் நின்று பார்க்கும்போது, கருவறை விமானத்தின் எழிலும் கம்பீரமும் புரிபடுகின்றன.
மூலவர் முன்மண்டபத் தூண்களில் அழகழகான சிற்பங்கள். ஒன்று நம்மைப் பெரிதும் கவரவல்லது. சுந்தரர், ஆற்றில் ஓடத்தில் வருவது போன்ற காட்சி. என்ன இது?
திருத்துறையூர் தலம், பெண்ணை ஆற்றின் கரையில் உள்ளது. தமது பதிகப் பாடல்களில், 'பெண்ணை வடபால்' என்று குறிப்பிடுகிறார் சுந்தரர். அதாவது, பெண்ணைக்கு வடக்கே உள்ள துறையூர். இப்போதோ, துறையூருக்கு வடக்கே பெண்ணை. ஆமாம், அந்தக் காலத்தில் ஊருக்குத் தென்பால் ஓடிய பெண்ணாறு, இப்போது ஊருக்கு வடக்கே ஓடுகிறது (தற்போது பழைய ஆற்றினை, மலட்டாறு என்கின்றனர்).
சுந்தரர், திருநாவலூர்த் திருத்தலத்தில் அவதரித்து, வளர்ந்தார். புத்தூரில் மணம் பேசித் திருமணம் நடக்கவிருந்த நேரத்தில், கிழவனாக வந்த இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அடியாரானார். திருவெண்ணெய் நல்லூரில் அருள் கிடைத்து, பரமனுடைய பணியாகப் பாடத் தொடங்கினார். பின்னர் திருநாவலூர் திரும்பி அங்கிருந்தார். வெவ்வேறு தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவனாரை வழிபடவேண்டும் எனும் பேரவாவில், நாவலூரிலிருந்து புறப் பட்டார். அடுத்ததாகத் திருத்துறையூர் அடைந்தார். அப்படி வந்த போது, பெண்ணாற்றைக் கடக்க, ஓடத்தில் பயணித்ததாக செவிவழிச் செய்தி. மண்டபத் தூண் சிற்பம், இந்தத் தகவலை உறுதி செய்கிறது.
துறையூர்நாதர் திருக்கோயிலின் உற்ஸவ மூர்த்தங்கள் வெகு அழகு. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரதோஷ நாயகர், ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீமுருகர், ஸ்ரீஐயப்பன், நால்வர், பராசக்தி, ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் தீர்த்தவாரி ஸ்வாமி- அம்பாள் சூலம், மாணிக்கவாசகர் என்று திருவுருவங்கள். சாட்டையைக் கையில் பிடித்த குதிரைச் சொக்கரும் உள்ளார்.
மூலவர் முன்மண்டபம் தாண்டி, உள்வாயில் வழியே அம்பாள் சந்நிதியை அடைகிறோம். வடக்குப் பார்த்த சந்நிதி. பிரம்மாண்ட புராணத்தின் திருக்ஷேத்திர காண்டத்தில், ஞானசக்திபீடமாக திருத்துறையூர் விவரிக்கப்பட்டுள்ளது. சந்நிதி முகப்பில், இருபுறமும் ஸ்வாமி வாகனங்கள். அடுத்துள்ள மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும். துவார விநாயகரையும் தண்டபாணியையும் வழிபட்டு உள்ளே நோக்க... ஸ்ரீசிவலோக நாயகி. நின்ற திருக்கோல அன்னை. இவள் ஞான நாயகி. குருவான சுவாமியின் ஞான சக்தியாக அம்பாள் திகழ்கிறாள். எதிரில் கோயிலின் தலமரமான கொன்றை. அருகில் அகத்தியர் வழிபட்ட லிங்கம்.
இந்தத் தலத்தில்தான், அருணந்தி சிவாச்சார்யர் அவதரித்து வாழ்ந்தார். ஆதிசைவர் குலத்துதித்த இவர், அனைத்து ஆகமங்களையும் கற்றுத் தெளிந்து, சகலாகம பண்டி தர் எனப்பட்டார். துறையூரிலேயே தங்கி பலருக்கும் சிவ தீட்சை அளித்தார். மெய்கண்ட தேவர் எனும் ஆச்சாரியரைப் பற்றிக் கேள்வியுற்று, அவரைக் காணவேண்டும் என்று போனார். இவர் சற்றே இறுமாப்புடன் வருவதைக் கண்ட தேவர், தம்முடைய மாணவர்களுக்கு சைவ சித்தாந்தத்தின் பசு-பாசம்-பதி என்னும் தத்துவத்தை விளக்கத் தொடங்கினார்.
பாசம் என்பதை விளக்கும் போது, அதற்கான ஆணவப் பொருளை எடுத்துக்காட்ட, எதிரில் வந்த சகலாகம பண்டிதரைக் காட்டினார். பண்டிதரோ, உடனடியாக செருக்கு அடங்கி பக்குவப்பட்டார். மெய்கண்ட தேவர், தாம் இயற்றிய 'சிவ ஞான போதம்' எனும் சித்தாந்தப் பெருநூலை போதித்து, ஞான தீட்சையும் அளித்தார். பண்டிதர், போதத்துக்கு மேலும் விளக்கமாக 'சிவ ஞான சித்தியார்' எனும் நூலை இயற்றி இறைவன் சந்நிதியில் வைத்தார். மெய்கண்ட தேவர், பண்டிதருக்கு, அருள்நந்தி என்னும் திருநாமம் சூட்டினார். அருணந்தி(அருள் நந்தி) இயற்றிய சிவஞான சித்தியார் நூலும், அவரின் மற்றொரு நூலான இருபா இருபது என்ற நூலும் சைவ சாத்திரங்கள் எனப்படும் 14 நூல்களில் அடங்கும். அருணந்தி சிவாச்சார்யரின் சமாதிக் கோயில், சிஷ்டகுருநாதேஸ்வரர் ஆலயத்துக்கு எதிரிலுள்ளது. இவரது பரம்பரையைச் சேர்ந்தவர்களே இப்போதும் கோயிலில் பூஜை செய்கின்றனர்.
நாரதர், வசிஷ்டர், அகத்தியர் போன்ற மகாமுனிவர்களும், பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பீமனும் திருத்துறையூரில் வழிபட்டதாக தலபுராணம் சொல்கிறது. பாஸ்கர க்ஷேத்திரம் எனும் பெயர், சூரியன் வழிபட்டதைக் குறிக்கிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 5 முதல் 10-ஆம் தேதி வரை, சூரியக் கதிர்கள் ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளில் வந்து பணிகின்றன. இந்த ஊர் தீர்த்தமும் சூரிய தீர்த்தம். கோயிலுக்கு எதிரிலேயே குளம். சூரியனுடைய அருளை வேண்டுவோரும், தத்தமது பெயர்களில் சூரியனின் பெயர் அமையப் பெற்றவர்களும், இங்கே வந்து வழிபட்டால், அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்கின்றன புராணங்கள்.
கோயிலின் குருக்கள், அதிசயமான புகைப் படம் ஒன்றைக் காட்டினார். 1944-46-ஆம் ஆண்டுவாக்கில் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதாம்! அப்போதுதான திருப்பணிக்கு முன்னதாக எடுத்த புகைப்படம் அது.
அந்தக் காலத்தில், சாட்சி விநாயகருக்கு மேலே ஒரு சந்நிதி இருந்துள்ளது. படிகள் ஏறிப் போகவேண்டிய அமைப்பு. உற்றுப் பார்த்தால், சீர்காழி சட்டைநாதர் சந்நிதி போன்ற தோற்றம். படிகளேறி, விமானப் பகுதியில் இருந்த சந்நிதிக்குச் சென்றிருப்பார்கள் போலும்! அதாவது, சுந்தரருக்கு விமானத்திலிருந்து ரிஷபாரூடராகக் காட்சி கொடுத்த திருக்கோலத்தை வழிபடும் வகை! 40-களின் திருப்பணி காலத்தில் விஷயம் சரியாகத் தெரியாமலோ, கட்டுமானக் கடினங்கள் கருதியோ, அந்த உயரச் சந்நிதி காணாமல் போய்விட்டது.
ஸ்ரீசிஷ்டகுருநாதரைப் பணிந்து வெளியே வருகிறோம். பக்தர்கள் கேட்டால் அதற்கேற்ப பகவான் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதை உணர்த்தும் கோயில்- ஸ்வாமி.
பரவசத்துடன் நிற்கும்போது, கோயிலின் வெளியே அஷ்டபுஜ (எட்டுக் கரங்கள்) பத்திரகாளி தரிசனம் கிட்டுகிறது. சிறப்புமிக்க காளி சந்நிதி, பிரார்த்தனை தலம். அதுவும் பௌர்ணமியில், என்ன நேர்ந்து கொண்டாலும் நடத்திக் கொடுப்பாள் இவள்.
காளி சந்நிதி அருகில் நிற்கும்போது, இளைஞர் கூட்டமொன்று சிஷ்டகுருநாதர் ஆலயத்தில் நுழைவதைக் காண்கிறோம். விசாரித்தால் கிடைத்த தகவல் சுவாரஸ்யமோ சுவாரஸ்யம். இறைவனே குருவாக அமர்ந்த தலமல்லவா! அதனால் தேர்வு எழுதுபவர்கள், நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்கள் போன்றோர் வந்து வழிபட்டு வேண்டி நின்றால் வெற்றி நிச்சயமாம்! சிஷ்டகுருநாதரைப் பற்றிக் கொள்வதற்காக அப்படியரு கூட்டம் உள்ளே போக, பிரியாவிடை பெறுகிறோம்.
No comments:
Post a Comment