Wednesday 30 August 2017

நல்லன அருளும் நந்தி தரிசனம்!


ந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இவர் ஒரு சித்தர். இளமையும் திட்பமும் வாய்ந்தவர். சாந்தமான குணம் படைத்தவர். தர்மத்தின் வடிவமாய்த் திகழ்பவர். ஒப்புவமை இல்லாத பெருமை நிறைந்தவர். இந்திராதி தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றி துதிக்கப்படுபவர்.

`சிவாயநம' எனும் ஐந்தெழுத்தின்  உருவத்தைக் கொண்டவர். அதாவது, பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர். ஊழிக்காலத்தில் இறைவனுக்கு வாகனமாக இருந்து அவரைத் தாங்கும் பேறு பெற்றவர். நிரந்தரமான இடத்தை உடையவர். வில்லாளிகளில் மேன்மை உடையவர். பிறரால் வெற்றிபெற முடியாதவர்.

க்காலத்திலும் சிவபெருமானை வணங்கிய தோற்றத்துடனும், அவரது திருமுகத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும்படியான வரத்தைப் பெற்றவர். ஸ்ரீநந்திதேவர், இறைவனிடம் சென்று தேவர்களின் குறைகளை முறையிட்டு அவர்களின் துன்பத்தைப் போக்குபவர். அதனால்தான் பிரதோஷ காலத்தில் ஸ்ரீநந்தி எம்பெருமானுக்கு முதலில் பூஜை நிகழ்கிறது.

சிவ தரிசனத்தில் முதலாவதாக நாம் செய்ய வேண்டியதும் மிக முக்கியமானதாகக் கருதப்படுவதும் ஸ்ரீநந்தி எம்பெருமானைத் தரிசிப்பதே ஆகும். நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே இறைவனைத் தரிசிப்பது, நமது வேண்டுகோளை நந்தி எம்பெருமான் ஈசனுக்குத் தகுந்த நேரத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லி நிறைவேற்றி வைப்பார் என்பதால்தான்.

ந்தி எம்பெருமானுக்குத் திவ்விய வடிவமும், நெற்றிக்கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானையுரியும், இரண்டு புயங்களில் மானும் மழுவும் உள்ளன. மான் வேகத்தைக் குறிக்கிறது; மழு வீரத்தைக் குறிக்கிறது என்பர். எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வுபடுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரம் நந்தி எம்பெருமானுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ந்தி எம்பெருமான், சிவபெருமானிடம் இருந்து சிவ ஆகமங்களைத் தெரிந்து நமக்கு அருளினார் என்பர். தப்பிதம் செய்தாரை தண்டிக்கும் அதிகாரம் இவருக்குண்டு. இவர் சிவ சந்நிதியில் காவல் இருக்கிறார். இவரது அனுமதி பெற்றுதான் சிவபெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.
ந்தி தட்சயாகத்தின்போது சிவனாரைப் பழித்துப் பேசிய தட்சனையும் உடனிருந்த தேவர்களையும் சபித்தார். இவர், சிவயோகத்தில் மிக வல்லவர். திருமந்திரம் அருளிய திருமூலருக்கு ஸ்ரீநந்தி எம்பெருமான் ஒன்பது வேத ஆகமங்களை விளக்கி அருளினார். அதன்பின், திருமூலர் பூலோகத்துக்கு வந்து மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகம் புரிந்தார்.

திருமூலர், தமது திருமந்திரத்தில் ஸ்ரீநந்திதேவரை சைவ சமயத்துக்குத் தனி நாயகன் என்று குறிப்பிடுகிறார். மேலும், `சிவபெருமானின் சீடர்களில் முதல்நிலை உடையவர் நந்தி; அவரால்தான் நான் ஆசிரியன் ஆனேன்' என்றும் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீநந்தி எம்பெருமானுக்கு சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர் ஆகிய ஏழு பேர் மாணவர்களாக இருந்தனர். எட்டாவது மாணவராக திருமூலர் திகழ்கிறார். இந்த எட்டு சீடர்களும் சைவ சமயத்தின் மேன்மையை விளக்கவும், சிவ வழிபாட்டினை பரப்பவும், சிவப்பரம்பொருளின் பெருமையைப் பற்றியும், ஸ்ரீநந்தி எம்பெருமானின் மரபினைப் பற்றியும், தங்கள் அனுபவத்தின் மூலம் எடுத்துச்சொல்வதற்காக நமது தேசத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தனர்.

ஸ்ரீ
நந்தி எம்பெருமான், சிவபெருமானிடத்தில் உபதேசம் பெற்றவராதலால் இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தெரிசனிகளும், சத்தியஞான தெரிசனிகளிடமிருந்து மெய்க்கண்டாரும் உபதேசம் பெற்றனர். இது குரு பரம்பரை அல்லது திருக்கயிலாய பரம்பரை எனக் கூறப்படும்.

ருத்திரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்கவாத்யப் ப்ரியன், சிவ வாகனன், கருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன் ஆகியன நந்திதேவரின் திருப்பெயர்கள்.

மிழக மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நந்தி எம்பெருமானை `விடைரூப'மாக வணங்கியதற்குச் சான்றுகள் உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இத்தகைய சிறப்புகளோடு திகழும் நந்திதேவரை பிரதோஷக் காலத்தில் தரிசித்து வழிபட்டு அவரின் திருவருளைப் பெறுவது, நமது வாழ்வைச் சிறப்பாக்கும்.  பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு நந்திதேவரைத் தரிசித்து, நல்லன எல்லாவற்றையும் வரமாகப் பெற்று மகிழுங்கள்.

வைப்பூருக்கும் சென்று வாருங்கள்!


‘தடை நீங்க நடைபோடலாம் திருமருகலுக்கு’- சோழ மண்டல கிராமப்புறங்களில் இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கும் சொல்வழக்கு இது. சீர்காழிச் சிவக் கொழுந்தாம் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி, அதனால் மகிழ்ந்த சிவபெருமான், செட்டிப்பெண் ஒருத்தியின் தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேற திருவருள் புரிந்த தலம் திருமருகல். இந்தத் தலத்துக்கு வந்து ஸ்வாமியை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி எழுந்ததே மேற்காணும் சொல்வழக்கு.

திருமருகல் மட்டுமின்றி வேறொரு தலத்துக்கும் இந்தத் திருக் கதையுடன் தொடர்பு உண்டு. அதுபற்றி அறியுமுன், திருமருகலின் மகிமையையும், செட்டிப் பெண் அருள்பெற்ற திருக்கதையையும் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

நாகை மாவட்டத்தில், தெற்கே புத்தாறும் வடக்கில் முடி கொண்டான் ஆறும் பாய்ந்தோட, இந்த நதிகளால் வளம் கொழிக்கும் ஊராகத் திகழ்கிறது திருமருகல். இங்கே, அருள்மிகு செளந்திரநாயகியுடன் திருக்கோயில் கொண்டிருக்கிறார், அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார மூவராலும் பாடல்பெற்ற இந்தத் தலத்தின் விருட்சம், வாழை. இந்த மரத்தின் கன்றுகளை கோயிலைத் தவிர வேறெங்கு பயிரிட்டாலும் வளராது என்பது, அதிசயம்! இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பம்சம், அருள்மிகு சுரம்தீர்த்த விநாயகர். இவரைப் பிரார்த்தித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினால், சுரநோய் நீங்கும் என்கிறார்கள். 

அதுமட்டுமா? இங்குள்ள தீர்த்தங்களும் மகத்துவம் மிக்கவை யாய் திகழ்கின்றன. வரலட்சுமி நோன்பு நாளில் லட்சுமி தீர்த்தத்தில் மூழ்கி மாணிக்கவண்ணரை தரிசித்தால், கடன் தொல்லை தீரும். சீராளன் தீர்த்தத்தில் நீராடி வேண்டிக்கொண் டால் புத்திரப் பேறு வாய்க்கும். சந்திரபுஷ்கரணியில் நீராடி வழிபட்டால், சகல நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், இவ்வூரின் எல்லைக்குள் பாம்புகள் தீண்டி எவரும் இறந்தது இல்லை என்ற தகவலையும் பகிர்ந்துகொண்டார்கள், உள்ளூர் பக்தர்கள்.
முன்னொரு காலத்தில் குசகேது என்ற மன்னன் இந்தப் பகுதியை ஆண்டுவந்தான். அப்போது, மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. குடிமக்கள் செய்தொழில் இல்லாமல் பசி, பட்டினியால் வாடினர். அரசனோ மழை வேண்டி அன்னதானம், சொர்ண தானம் யாவும் செய்தான். பூஜைகள் செய்து வேத பாராயணம் செய்தான். அடியாரை வழிபட்டான். சோமவாரம், பிரதோஷம், சிவராத்திரி முதலிய விரதங்கள் மேற்கொண் டான் எனினும் மழை பொழியவில்லை. 
 
மனம் ஒடிந்த மன்னன் தற்கொலை செய்துகொள்ள முயன் றான்.  மக்களுக்காக மன்னன் தன் உயிர்துறக்க துணிந்ததை கண்டு இறைவன் திருமருகலைச் சுற்றி ரத்தினம், மாணிக்கம், முத்து, நெல் என மழையாய் பொழிவித்தார். ரத்தின மழை பொழிந்ததால் இங்குள்ள சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
பதிகமும் பரமனின் திருவருளும்!

திருமருகல் அருகில் உள்ள வைப்பூரில் வாழ்ந்த தாமன் செட்டியாருக்கு ஏழு அழகான பெண் பிள்ளைகள் இருந்தார்கள்.  அவர்களில் ஒருவரை முறைமாமனுக்கு திருமணம் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்த தாமன் செட்டியார் பொன், பொருளை வாங்கிக் கொண்டு, கெட்டவராக இருந்தாலும் வேறு மாப்பிள்ளைகளுக்கே ஆறு பெண்களையும் மணம் முடித்துக் கொடுத்தான்.  பொருள் ஆசையால் சொல் தவறி, முறை தவறி தந்தை நடப்பதை என்னி வருந்திய ஏழாவது பெண்ணான ‘கன்னி’ இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல், தன் முறைமாமனுடன் திருமருகலுக்குச் சென்றாள்.  அங்கு ஒரு மடத்தில் தங்கிய இருவரும், ஒருவர் மீது ஒருவர் விரல் படாமல் இருக்க நடுவில் ஒரு தர்ப்பையை வைத்துவிட்டு உறங்கினர்.  ஆனால், விதியின் விளையாட்டால் முறைமாமனை பாம்பு தீண்ட அவன் இறந்து கிடந்தான்.  விடிந்து கண் விழித்துப் பார்த்த கன்னி, அப்போதும் அவனை தொடாமல் இறைவனை நெஞ்சுருக வேண்டி `ஆலகால விஷத்தை உண்டவனே... உன்னை நம்பி மணமாலை சூடவந்த எனக்கு ஏன் இந்த கொடுமை? மருகல் பெருமானே! நீதான் எனக்கு வழிகாட்ட வேண்டும்' என்று கதறி அழுது, பரமனைத் தொழுதாள்.
அந்த  தருணத்தில் அங்கு வந்த திருஞான சம்பந்தர் அவளது கதையை கேட்டு வருந்தி, `இச்சூழ்நிலையிலும் இந்த பெண் இறைவனை எண்ணியே ‘தடையாய்,  விடையாய், மருகலு டையாய், வீரக் கழல் அணிந்த வேம்பே என்றேல் லாம் இறைவனை பாடுகிறாளே... இவள் இன்னலை தீர்த்திட வேண்டும்’ என்று எண்ணிப் பாடுகிறார்,

சடையா யெனுமால் சரணி யெனுமால்
வுடையா யெனுமால் வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவளுள் மெலிவே 

என்று தொடங்கி 11 பாடல்களை அவர் பாடி முடித்தபோது, முறைமாமன் கண் விழித்து எழுந்தான்.  விரும்பிய முறைமாமனுடன் செட்டிப் பெண்ணின் திருமணம் இனிதே அத்தலத்தில் நடந்து முடிந்தது.  இன்றைக்கும் கோயிலில் செட்டிப் பெண், செட்டிப் பிள்ளை திருமணம் நடந்த மண்டபம் தனியே அமைந்திருக்கிறது. இருவருக்கும் தனித் தனியே கோயிலில் சிலைகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரைப் பெருவிழா பத்தாவது நாளில் செட்டிப் பெண் கல்யாணம் நடைபெறுகிறது. மணக் கோலத்தில் பல்லாக்கில் வீதியுலா நடைபெறுகிறது.  திருவிழாவைக் காண திரளான மக்கள் கூடு கிறார்கள்.  திருமண தடை அகற்றும் திருத்தலம் என்ற நம்பிக்கையோடு இறைவனைத் தரிசித்து பயனடைகிறார்கள்.

செட்டிப் பெண் வாழ்ந்து தினமும் பூஜித்த ஜம்புநாதர் சுவாமிக் கோயில், திருமருகல் அருகே வைப்பூர் எனும் ஊரில் உள்ளது.  அங்கு சென்ற போது, பழைமையான அந்த கோயிலின் திருப்பணி ஆரம்ப நிலையில் இருந்தது. கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வுபெற்றும், கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவதற்காக ஓய்வின்றி உழைத்து வரும் அன்பர் இராமலிங்கத்தைச் சந்தித்தோம், 

“செட்டிப் பெண் வாழ்ந்த இத்தலம் சிதிலம் அடைந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. கோயிலின் சுற்றுப்புறங்கள் திறந்தவெளி கழிப்பிட மாகவும், குடிமகன்களின் களியாட்ட கூடமாகவும் மாறியதை கண்டு வேதனை அடைந்தோம்.
  
நல்லவர்களின் துணையோடு கோயிலை புதுப் பிக்கும் முயற்சியில், பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் ஒருவர் ஒரு பகுதி செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறார். மீதி செலவுக்கு என்ன செய்வது என்று தெரியலை.  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் புதுப்பொலிவு பெறுவது, எந்நாளோ?” என்று ஏக்கத்துடன் முடித்தார்.  

திருமருகல் கோயிலில் செட்டிப் பெண் மண்டபத்தில் தடை நீங்கி திருமணம் செய்யும் புதுமணத் தம்பதியினர் அப்படியே வைப்பூருக்கும் சென்று தரிசித்து, ஐயனின் திருகோயில் புதுப் பொலிவு பெற பிரார்த்திக்கலாமே!


உங்கள் கவனத்துக்கு

திருமருகல்

ஸ்வாமி: அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் 

அம்பாள்:
 அருள்மிகு செளந்திர நாயகி.

சிறப்பு பிரார்த்தனை:
 இத்தலத்துக்கு வந்து ஸ்வாமி-அம்பாளைத் தரிசித்து வழிபட, திருமணத் தடைகள் நீங்கும். மேலும் நோய்கள் நீங்க சுரம் தீர்த்த விநாயகரையும், கடன் தொல்லைகள் நீங்க மணிவண்ணரையும் வழிபட்டுச் செல்கிறார்கள்.

பாடியவர்கள்:
 அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர்

நடை திறக்கும் நேரம்: காலை 7 முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?:  
மயிலாடுதுறை திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையி8ல் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் கங்களாஞ்சேரி எனும் ஊர் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இருந்து இடப் புறமாக கிளைபிரிந்து செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவு பயணித்தால், வைப்பூரை அடையலாம். இங்கே தரிசனத்தை முடித்துவிட்டு திருமருகலுக்குச் செல்லலாம். இரண்டு கோயில்களும் சுமார் 4 கி.மீ. தூர இடைவெளியில் அமைந்துள்ளன.

ஐந்து பிரதோஷங்கள்... ரோஜாப்பூ மாலை... கல்யாண பிரார்த்தனை!


நந்தி ரூபத்தில் சிவபெருமான் காட்சி தந்த திருத்தலம்


ங்கடங்களைத் தீர்க்கும்  மும்மூர்த்திகளில் ஒருவரான   எம்பெருமான் சிவனுக்கு எண்ணிலடங்காத ஆலயங்கள் இருக்கின்றன. அப்படி, சிவனின் புகழ்பாடும் புண்ணியத் தலங்களில், சென்னை - ஆதம்பாக்கத்தில் இருக்கும் ஆவுடைநாயகி உடனுறை  நந்தீஸ்வரர்  ஆலயமும் ஒன்று. 

``பன்னெடுங்காலத்துக்கு முன், இந்தப் பரங்கிமலையில் சிவனாரின் எண்ணற்ற பக்தர்களும் அடியார்களும் வாழ்ந்து வந்தார்கள். அப்போது, சிவபக்தரான பிருங்கி முனிவர் சிவபெருமானைக் காண  இந்த மலையில் கடும் தவம் புரிந்திருக்கிறார். பிருங்கிமுனிவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான், நந்திரூபத்தில் காட்சி அளித்து, மோட்சம் நல்கியிருக்கிறார். 

இந்தத் திருக்கதையை அங்கு வாழ்ந்து வந்த மக்கள் கூற, அப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் ‘ஆதணி’ என்பவன் கேட்டு மெய்சிலிர்த்து, சிவனாருக்குக் கோயில் எழுப்பினான் என்கிறது தலவரலாறு. ‘ஆதணி’  என்ற அந்த மன்னனின் பெயரைத் தாங்கிய இந்தப் பகுதி ஆதணிபாக்கம் என அழைக்கப்பட்டு, அது பின்னர் திரிந்து ‘ஆதம்பாக்கம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது . இத்தலம் சுமார் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கு அருளோச்சும் மூலவரின் திருப்பெயர் - அருள்மிகு நந்தீஸ்வரர்; அம்பாளின் திருநாமம்- அருள்மிகு ஆவுடைநாயகி. கோயிலின் வரலாற் றைச் சொல்லும் கல்வெட்டுக்கள் இன்றும் கோயிலின் பிராகாரங்களில் கம்பீரமாக மிளிர்கின்றன” என பக்தியுடன் தலவரலாற்றை விவரித்தார் கோயிலின்  குருக்கள் சீதாராம்.

இங்கு மூலவர் ஸ்ரீ நந்தீஸ்வரர் 4 அடி உயரத்தில், பிரமாண்ட லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்புரிய, இறைவி ச்ரஆவுடைநாயகி தென்திசை நோக்கியவண்ணம் தன் கருணைக் கடாக்ஷத்தை பக்தர்களுக்கு நல்குகிறாள். 

அம்பாள் ஆவுடையாகவும், இறைவன் நந்தியாகவும் பெயர்கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம்  இது என்பது சிறப்பு. தவிர, இங்கு மும்மூர்த்தியரான சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருப்பதும் சிறப்பு என்கின்றனர் உள்ளூர் பக்தர்கள். 

மிகவும் பழைமையான கோயில். உள்ளே நுழைந்தவுடன் எதிரிலேயே கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணமுடிகிறது. சற்று உள்ளே நுழைந்தால், நந்தி, ஸித்தி விநாயகர், நர்த்தன விநாயகர், பாலமுருகன், தக்ஷிணாமூர்த்தி, சுந்தர விநாயகர், பைரவர், சூரியன், நாகதேவதை, ராகு, காளஹஸ்தீஸ்வரர், கேது, மஹாவிஷ்ணு, வள்ளி தேவசேனா சமேத  சிவசுப்பிரமணியன், பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் ஆகிய பரிவாரத் தெய்வங்களுக்குத் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத் தூண்களில் மீன் சிற்பம், கண்ணப்ப நாயனார், காமதேனு, மாருதி, நரசிம்மர் எனப் பல சிற்பங்கள் இருப்பது, தலத்தின் பழைமையைப் பறைசாற்றுகிறது.
“இங்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் எல்லா ஸோம வாரமும், ருத்ர த்ரிசதி அர்ச்சனையும் மஹா தீபாராதனையும்  சிறப்பாக நடைபெறு கின்றன. பிரதோஷத்தின்போது, இங்கு பசு வலம் வருவது அற்புதமான நிகழ்ச்சி! உற்ஸவ மூர்த்திகள் திருவுலா,வேதபாராயண முற்றோதுதல், உபன்யாசங்கள் ஆகியவை சிவனுக்குரிய உற்ஸவ நாட்களில் சிறப்பாக நடைபெறுகின்றன. இதைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆலயத்துக்குக் கிழக்கு - தெற்கு என இருபுறமும் வாசல் இருப்பதைக் காணலாம்” என்று பூரிப்புடன்  நம்மிடம் கூறினார் பக்தர் பாலச்சந்தர்.

ஆலயத்தின் மூலவர் வரப்பிரசாதி. குறிப்பாக, ஐந்து பிரதோஷ தினங்கள் இந்தத் தலத்துக்கு வந்திருந்து மூலவருக்கும் நந்திக்கும் ரோஜாப்பூ மாலைகளைச் சமர்ப்பித்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கும் என்கிறார்கள். இங்கு கோயிலின் தலவிருட்சமான வில்வ மரத்தில், பெண்கள் குழந்தை வரம் வேண்டி, தொட்டில் கட்டிப் பிரார்த்தித்துக்கொண்டால்,  குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சகல செல்வங்களையும், திருமணத் தடை நீக்கும் வரத்தையும் தரும் ஆதம்பாக்கம் ஸ்ரீஆவுடைநாயகி உடனுறை ஸ்ரீ நந்தீஸ்வரரைச் சென்று தரிசித்து, கல்யாண வரம் பெற்று வாருங்கள்.

உங்கள் கவனத்துக்கு

ஸ்வாமி: ஸ்ரீ நந்தீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீ ஆவுடைநாயகி

தலவிருட்சம்:
 வில்வம்

ஆலயச் சிறப்பு: அம்பாள் ஆவுடையாகவும், இறைவன் நந்தியாகவும் பெயர்கொண்டு விளங்கும் திருத்தலம்

சிறப்பு வழிபாடு: ஐந்து பிரதோஷ தினங்கள் இங்கு வந்து ஸ்வாமிக்கும் நந்திதேவருக்கும் ரோஜாப்பூ மாலை அணிவித்து வழிபட்டால், கல்யாண 
வரம் கைகூடும்.

எப்படிச் செல்வது?: சென்னை-தாம்பரத்தில் இருந்து பரங்கிமலை செல்வதற்கு ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு. பரங்கிமலை ரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது (ஆதம்பாக்கம்) நந்தீஸ்வரர் ஆலயம். 

நடை திறந்திருக்கும் நேரம்:
 விழாக் காலங்கள் தவிர, அனைத்து தினங்களிலும் காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயிலின்  நடை திறந்திருக்கும்.

தசரதருக்கு பிள்ளை வரம் தந்த திருத்தலம்!


ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்


‘அது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பது ஆன்றோர் வாக்கு. அப்படி மனிதராகப் பிறந்துவிட்டாலே முழுமை அடைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. தன் பேர் சொல்ல ஒரு குழந்தை பிறந்தால்தான் பிறவியின் பயன் முழுமையடையும். அப்படி, குழந்தைச் செல்வம் கிடைக்காமல் வேறுபல செல்வங்கள் என்ன கிடைத்தாலும், எவ்வளவு கிடைத்தாலும் அதனால் பயன் ஏதும் இல்லை என்கின்றன ஞானநூல்கள்.
இந்தக் கருத்துக்குச் சான்றாக தசரத சக்கரவர்த்தியைச் சொல்லலாம். தேவாதி தேவர் களே உதவிக்கு அழைக்கும் அளவுக்கு வல்லமை பெற்ற மன்னர், ஒரே தருணத்தில் பத்து ரதங்களைச் செலுத்தும் திறமை கொண்டவர் என்பதால் ‘தாசரதீ’ என்று சிறப்பிக்கப் பட்டவர், மக்களின் மனம் கவர்ந்த மாமன்னர். இப்படிப் பல சிறப்புகள் இருந்தாலும் அவையாவும் தசரதரை மனம் மகிழச் செய்யவில்லை. காரணம், வெகுகாலமாக குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்ததுதான்!

ஒருமுறை வேட்டைக்குச் சென்றார் தசரதர். அங்கே, நதி தீரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. யானை நீர் பருகும் சத்தம்தான் அது எனக் கருதிய தசரதர், அந்த திசை நோக்கி கணை தொடுத்தார். ஆனால், அம்பு தாக்கியதோ இளைஞன் ஒருவனை.  அவனுடைய அலறலைக் கேட்டபிறகே, தனது தவறு உறைத்தது தசரதருக்கு. ஓடோடிச் சென்று இளைஞனை மடியில் தாங்கிக்கொண்டார். பெற்றோருக்காக தான் குடுவையில் சேகரித்த தண்ணீரை அவர்களிடம் சேர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டு உயிரைவிட்டான் இளைஞன். தசரதரும் குடிநீரைக் கொண்டு சென்றார். மகன் இறந்துவிட்டதை பெற்றோரிடம் தெரிவித்தார்.  கலங்கிக் கதறிய இளைஞனின் பெற்றோர், ‘நீயும் புத்திர சோகத்தால் உயிரை விடுவாய்’ என்று தசரதரை சபித்தார்கள்.

அந்த சாபத்தைக் கேட்டு வருத்தம் கொள்ள வேண்டிய தசரதர், மகிழ்ச்சி அடைந்தாராம். புத்திர சோகம் உண்டென்றால், புத்திர பாக்கியம் நிச்சயம் அல்லவா? அதை எண்ணி மகிழ்ந்தாராம். அந்த அளவுக்கு, பிள்ளை பாக்கியத்துக்காக ஏங்கியவர் தசரதச் சக்கரவர்த்தி. அவரின் ஏக்கம் விலகும் காலமும் கனிந்தது.

ஒருநாள், தன்னுடைய குலகுருவான வசிஷ்ட மகரிஷியைச் சந்தித்த தசரதர், அவரிடம் தனது மனக் குறையைப் பகிர்ந்துகொண்டார். பிள்ளை பாக்கியம் கிடைப்பதற்கான வழிபாடு குறித்தும் குருநாதரிடம் வேண்டினார். வசிஷ்டர் அவரிடம், ‘‘கிழக்கில் இருந்து வடக்காகத் திரும்பும் நதியின் கரையில் சிவாலயம் அமைத்து, அந்தத் திருத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால், சிவனருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’’ என்று அருள் புரிந்தார்.

குருநாதர் சொன்னபடியே, பரத கண்டத்தின் தெற்கு பாகத்தில் கமண்டல நதியானது கிழக்கில் இருந்து வடக்காகப் பாய்வதை அறிந்த தசரத சக்கரவர்த்தி, இந்த நதி தீரத்துக்கு வந்தார். குறிப்பிட்ட இடத்தில், மிக அழகாக சிவாலயம் ஒன்றைக் கட்டினார். பின்னர் கலைக்கோட்டு முனிவரின் வழிகாட்டலுடன் மிக பிரமாண்டமாக  புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தினார். அதன் பலனாக ஒன்றுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர், தசரத சக்கரவர்த்திக்கு.

தசரதர் அருள்பெற்ற அந்தத் தலத்தில், அவர் நடத்திய யாகத்தின் பெயரையே ஏற்று அருள்மிகு புத்திர காமேட்டீஸ்வரராக, தன்னைத் தேடி வரும் அன்பர் களுக்கு பிள்ளை வரம் முதலாக சகல வரங்களையும் வாரி வழங்கும் வள்ளலாக அருள்பாலித்துக் கொண்டிருக் கிறார் தென்னாடுடைய சிவபெருமான்.

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது ஆரணி. ஊருக்குள் நுழையும் போதே ஆற்றுப்பாலத்துக்கு இடப்புறத்தில் கோயிலைத் தரிசிக்க இயலும். பெரும்பாலானோர், பேருந்து நிலையத் தில் இருந்து நடந்தே செல்கின்றனர். ஆட்டோவிலும் செல்லலாம்.
கமண்டல நதி,  சிவ அம்சமாகவே திகழ்ந்த ஜமதக்னி முனிவரால் உருவானது என்பதால், இந்த நதி தீரமும் அதன் கரையில் அமைந்திருக்கும் புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலய தரிசனமும் அதிக விசேஷம் வாய்ந்தவையாய் திகழ்கின்றன. நதிக் கரையில் வடக்குமுகமாக விநாயகரும் தெற்குமுகமாக ஆஞ்சநேயரும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். அரசமரத்தடி மேடையில் நாகர்கள் பிரதிஷ்டையையும் தரிசிக்க முடிகிறது. ராஜ கோபுரத்துக்கு நேர் எதிரில் தசரத மகாராஜாவுக்கும் தனிச் சந்நிதி உண்டு. உள்ளே யோக நிலையில் வீற்றிருக்கிறார் அவர்.

பல்லவர் கால கட்டட பாணியில் அமைந்திருக் க்கும் ஆலயத்தின் உள்ளே கருவறை கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மதேவர், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகியோரும் அழகு திருக்கோலத்தில் அருள்கிறார்கள். மேலும் நடராஜ மூர்த்தி, வீரபத்திரர், காளிதேவி, தேவியருடன் முருகப் பெருமான், கிருஷ்ணர், சகஸ்ரலிங்கேஸ்வரர், ரேணுகாதேவி, நவகிரகங்கள், அறுபத்துமூவர் ஆகியோரையும் இந்த ஆலயத்தில் தரிசிக்க முடிகிறது. சனி பகவான் மற்றும் சூரிய தேவனுக்கு தனிச் சந்நிதிகள் உள்ளன. ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், லட்சதீபம், நாக சதுர்த்தி ஆகிய வைபவங்கள் வெகுகோலாகலமாகக் கொண் டாடப்படும் இக்கோயிலில் தைப்பொங்கல் திருநாளன்று நிகழும் ஆற்றுப்படி திருவிழா மிகப் பிரசித்திப்பெற்ற ஒன்று.

குழந்தைப் பேறு வேண்டுவோர், இங்கு வந்து ஸ்வாமி-அம்பாளை வேண்டிக் கொள்வதுடன் 6 திங்கட்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். முதல் திங்களன்று சிவ வழிபாடு முடித்து ஒரு குழந்தைக்கு அன்னதானம் செய்ய வேண்டும். 2-வது திங்களன்று இரண்டு குழந்தைகள், 3-வது திங்களன்று மூன்று குழந்தைகள் என்ற கணக்கில் ஒவ்வொரு  திங்களன்றும் உரிய எண்ணிக்கை யிலான குழந்தைகளுக்கு அன்னதானம் செய்து, 6-வது வாரம் 6 குழந்தைகளுக்கு அன்னதானம் என்று பூர்த்தி செய்ய வேண்டும். அன்று கோயிலுக்கு வந்து ஸ்வாமிக்கு தயிர் அபிஷேகம் செய்து, வெண்பொங்கல் சமர்ப்பித்து வழிபட வேண்டும். இதன் பலனாக, சிவனருள் கைகூடும்; விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த தலத்தில் ஆனி பெளர்ணமியில் நிகழும் புத்திர காமேஷ்டி யாகத்திலும் கலந்துகொண்டு வழிபடுவது கூடுதல் விசேஷம்!
திருமண வரம் வேண்டும் பக்தர்கள் கோயிலில் உள்ள  அரசு-வேம்பு மரங்களில் மஞ்சள் கயிறு கட்டிப் பிரார்த்தித்துச் செல்கின்றனர். அதேபோல், இங்கே, நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், சர்ப்பதோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஐப்பசி அன்னாபிஷேகமும் இந்தக் கோயிலில் விசேஷம்.  வரும்  ஐப்பசி அன்னாபிஷேகத்  திருநாள். அன்று, ஆரணிக்குச் சென்று புத்திரகாமேட்டீஸ் வரரைக் கண்ணாரத் தரிசித்து, மனதார வழிபட்டு வரம் பெற்று வாருங்கள்.

உங்கள் கவனத்துக்கு

ஸ்வாமி: ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீபெரிய நாயகி

தலவிருட்சம்: பவளமல்லி

திருத்தலச் சிறப்பு: ஜமதக்னி முனிவர் உருவாக்கிய கமண்டல நதி பாயும் தலம்; பிள்ளை வரம் வேண்டி தசரதர் யாகம் செய்த திருத்தலம்.

சிறப்பு வழிபாடு: இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை தரிசிப்பதுடன், தொடர்ந்து ஆறு திங்கட் கிழமைகள் விரதம் இருந்து வழிபட்டால், விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும்; நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

எப்படிச் செல்வது?: திருவண்ணாமலையில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது ஆரணி. ஊருக்குள் நுழையும்போதே ஆற்றுப் பாலத்துக்கு இடப்புறத்தில் கோயிலைத் தரிசிக்க இயலும். பெரும்பாலானோர், பேருந்து நிலையத்தில் இருந்து நடந்தே செல்கின்றனர். ஆட்டோவிலும் செல்லலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் கோயிலின்  நடை திறந்திருக்கும்.

சங்கடம் தீர்க்கும் சனி பிரதோஷம்


ழியா வரம் வேண்டி அசுரர்களுடன் சேர்ந்து தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் உருவானது. அந்த விஷம் உலகை அழித்துவிடாதபடி, அதை ஒன்றுதிரட்டி அருந்தி விட்டார் சிவபெருமான். அதைக்கண்டு பதறிய பார்வதி தேவி, விஷம் உள்ளே இறங்கிவிடாமல் கழுத்தைப் பற்றி, விஷம் அவருடைய கண்டத்தில், அதாவது கழுத்திலேயே தங்கும்படி செய்தாள். இதையொட்டியே சிவனாருக்கு திருநீலகண்டன் என்றும் திருப்பெயர் உண்டு.
விஷம் அருந்திய சிவப்பரம்பொருளின் அருளாடல் தொடர்ந்தது.   அதீத களைப்பு மேலிட்டதுபோல் அப்படியே படுத்துவிட்டார் சிவனார். இதனால் ஆதிசக்தி முதலாக அண்டபகிரண்டமும் கலக்கம் அடைந்தது. விரைவிலேயே அவர்கள் கலக்கம் நீங்கும் வகையில் கண்விழித்த சிவனார், ஆனந்த தாண்டவம் புரிந்தார். அப்படி, அவர் ஆனந்தத்துடன் திருநடனம் புரிந்தது பிரதோஷ காலம். 

பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி தினத்தில்; களைப்புற்றவராக அவர் பள்ளிகொண்டது துவாதசித் திருநாளில். உலக உயிர்கள் மேன்மையுறும்பொருட்டு அவர் சந்தியா தாண்டவம் ஆடியது... திரயோதசி புண்ணிய தினத்தில், பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா காலத்தில்! 

புனிதமான இந்தக் காலத்தையே பிரதோஷ வேளையாகக் கருதி, சிவபூஜை செய்து வழிபடுகிறோம். தொடர்ந்து 14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் சிவாலய தரிசனத்தை முறைப்படி செய்பவர்கள், சாரூப பதவி பெற்று சிவ கணங்களாகத் திகழ்வர் என்கின்றன புராணங்கள்! அதிலும் சனிக்கிழமையுடன் இணைந்து வரும் சனி பிரதோஷம் மிகச் சிறப்பானது. சிவபெருமான் விஷம் அருந்தி சயனித்து எழுந்து, ஒரு சனிக்கிழமை மாலையில்தான் முதன் முதலாக சந்தியா தாண்டவத்தை நிகழ்த்தினார் என்பதால், சனிக் கிழமை வரும் பிரதோஷம் மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப் படுகிறது.

உஜ்ஜயினியில் நிகழ்ந்த ஒரு திருக்கதையைப் படித்தால், சனிப் பிரதோஷத்தின் மகத்துவம் இன்னும் தெளிவாக விளங்கும்.

சனிப் பிரதோஷத்தை மெச்சிய ஆஞ்சநேயர்

உஜ்ஜயினி நாட்டின் அரசர் சந்திரசேனன்; உஜ்ஜயினி ஈஸ்வரனான வீரமாஹாளர் மீது அதீத பக்தி கொண்டவர். ஒருமுறை இவரது அரண்மனைக்கு வந்த மாணிபத்திரர் என்ற சிவகணநாதர், மன்னனுக்கு உயரிய சிந்தாமணி ரத்தினம் ஒன்றை பரிசளித்தார்.

அந்த ரத்தினம் மிகவும் மகத்துவமானது. அதன் உன்னதத்தை அறிந்த அண்டை நாட்டு வேந்தர்கள், ரத்தினத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இல்லையேல் போர் மூளும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அவர்களது இந்த அறைகூவலை சந்திரசேனன் கண்டுகொள்ளவே இல்லை.
 
அதனால் கோபம் கொண்ட அந்த மன்னர்கள் பெரும்படையுடன் வந்து உஜ்ஜயினியை  முற்றுகையிட்டனர். எந்த நேரமும் போர் மூளும் அபாயம்.

ஆனால், உஜ்ஜயினி மன்னரான சந்திரசேனன் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. வீரமாகாளர் கோயிலுக்குச் சென்றார். முறைப்படி பூஜை செய்து, முப்புரம் எரித்தவனை முழு மனதோடு தியானம் செய்தார். அரசர் செய்த அத்தனை பூஜைகளையும் அங்கே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான், யாதவ குலச் சிறுவன் ஒருவன். உடனே அவன் மனதில், ‘நாமும் இதே போல பூஜை செய்ய வேண்டும்!’ என்ற எண்ணம் உண்டானது. வீடு திரும்பினான்.

மறுநாள் பொழுது விடிந்தது. சிவபூஜையை ஆரம்பித்தான். கருங்கல் ஒன்றை எடுத்து, சிவலிங்கம் போல நட்டு வைத்தான். மணலையும் பச்சை இலைகளையும் பூஜைப் பொருட்களாக எடுத்து வைத்துக் கொண்டான். ‘சந்தனம், மாலை, அபிஷேகத் தீர்த்தம், தூபம், தீபம், சாமிக்கு உண்டான ஆபரணம், ஆடை, நைவேத்திய சாதம்’ என்று சொல்லி மணலையும் பச்சை இலைகளையும் தனித் தனியே பங்கீடு செய்து பிரித்து வைத்துக் கொண்டான். அவற்றால் அன்போடு அரனை பூஜை செய்தான். பூஜை முடிந்ததும் தியானத்திலும் ஆழ்ந்தான்.
நேரம் இரவு ஆனது. அவனின் தாயார் சாப்பிட அழைத்தாள். தியானத்தில் இருந்தவன், அவள் மீண்டும் மீண்டும் குரல்கொடுத்தும் பதிலே சொல்லவில்லை. ஆதலால், கோபத்துடன் வெளியே வந்தாள். அவனை நன்கு அடித்ததுடன், சிவலிங்கமாக அவன் வைத்து பூஜித்த கருங்கல்லையும் பிடுங்கி எறிந்து, வீட்டுக்குள் சென்று படுத்துத் தூங்கி விட்டாள்.

அவள் மகனோ... ‘‘ஐயோ, என் ஸ்வாமியை எடுத்து எறிந்து விட்டாளே அம்மா!’’ என்று கதறித் துடித்து மயங்கி விழுந்தான். இரண்டு நாழிகை (48 நிமிடங்கள்) ஆயிற்று. அவனுக்கு மயக்கம் தெளிந்தது. மெள்ள நிதானித்து எழுந்தான். அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. வீடெங்கும் ரத்தினமும் தங்கமும் இறைந்து கிடந்தன. அவன் அம்மாவால் எடுத்து எறியப்பட்ட கல்லால் ஆன சிவலிங்கமும், ரத்தின மயமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. சிறுவன் ஆனந்தத்தில் மிதந்தான். சிறுவனின் தாயார் திடீரென்று விழித்தெழுந்தாள். வீடு முழுவதும் தங்கம் மற்றும் ரத்தின மயமாக இருந்ததைக் கண்டு வியந்தாள்.

தகவல் அரசருக்கும் எட்டியது. அரசர் உடனே ஆயர்சேரிக்குக் கிளம்பினார். அங்கே எழுந்தருளி இருந்த இறைவனை வலம் வந்து வணங்கினார். யாதவச் சிறுவனை நெஞ்சோடு நெஞ்சாகத் தழுவிக் கொண்டார். ஊரார் எல்லாம் சிவ நாம கோஷம் செய்தார்கள். 

ஊருக்குள் கேட்ட மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கேட்டு பகை அரசர்கள் திகைப்பில் ஆழ்ந்தார்கள். ஒற்றர்களை அனுப்பி காரணத்தை தெரிந்து கொண்டவர்கள், சிவனருளை அறிந்து சிலிர்த்தார்கள். படைகளைத் திருப்பி அனுப்பி விட்டு, ஊருக்குள் வந்து சந்திரசேனனிடம் மன்னிப்பு வேண்டியதுடன், யாதவச் சிறுவனின் பக்திக்காகத் தோன்றி அருள் புரிந்த சிவலிங்கத் தையும் தரிசித்து மகிழ்ந்தார்கள். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த அந்த நேரத்தில், ஆஞ்சநேயர் அங்கு வந்தார். அவருக்கு சகல மரியாதைகளும் செய்து வழிபட்டார் சந்திரசேனன்.

யாதவச் சிறுவனை நெஞ்சோடு தழுவி அணைத்துக் கொண்டார் ஆஞ்சநேயர். ‘‘மன்னர்களே! அனைவரும் கேளுங்கள்! ஒன்றும் தெரியாத இந்தச் சிறுவனின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவபெருமான் தரிசனம் தந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? இதற்குக் காரணம், சந்திரசேன மகாராஜா சனிப் பிரதோஷம் அன்று சிவபெருமானைப் பூஜை செய்ததைப் பார்த்து, இந்தச் சிறுவனும் சிவ பூஜை செய்ததுதான். சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததனால் அடையும் பலன், இந்த அளவோடு நின்றுவிடாது.

இந்தச் சிறுவனின் பரம்பரையில் எட்டாவது தலைமுறையில் மஹாவிஷ்ணு, ‘கிருஷ்ணன்’ என்ற திருநாமத்துடன் அவதாரம் செய்வார். அவரை வளர்க்க இருக்கும் நந்தன் என்னும் ஆயர்கோன் ஒருவன், இந்தக் குலம் பெருமை அடையுமாறு தோன்றுவான். இன்று முதல் இந்தச் சிறுவனை ‘ஸ்ரீதரன்’ என்று அழையுங்கள்!’’ என்ற ஆஞ்சநேயர், ஸ்ரீதரனுக்குச் சிவ பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளை உபதேசித்துச் சென்றார்.

சனிப் பிரதோஷ பூஜையை தரிசித்ததற்கே இவ்வளவு பலன் என்றால், விரதம் இருந்து பூஜிப்ப வர்கள் அடையும் பலனை அளவிட முடியுமா?

சனிப் பிரதோஷத்தின் சிறப்பை அறிந்தோம். இனி பிரதோஷ தினத்தில் நந்தியெம்பெருமானை வழிபடுவது பற்றி அறிவோம்.

நந்தி தரிசனம்!

பிரதோஷ வேளையில் நந்திக் குத் தனிச் சிறப்பு உண்டு. இந்த வேளையில், மூல வரை நந்தியம் பெருமானின் கொம்புகளுக்கு இடையேயுள்ள இடைவெளியின் வழியே தரிசித்து வணங்கவேண்டும்.

சிவபெருமான் விஷம் உண்டு சயனித்துத் திருவிளையாடல் புரிந்த பிறகு எழுந்து, அம்பிகை தரிசிக்கும்படி சந்தியா நிருத்தம் ஆட, அதைக்கண்ட நந்திதேவர், ஆனந்த நிலையால் உடல் பருத்தார். அதனால், கயிலாயமே மறைக்கப்பெற்றது. நந்தியின் கொம்புகளுக்கு இடையே இருந்த இடைவெளியில், ஈசனின் நடனத்தைத் தேவர்கள் கண்டுகளித்தார்களாம். இதையொட்டியே, பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே பெருமானைத் தரிசிக்கிறோம்.

இந்த வேளையில், அறுகம்புல்லை மாலையாகக் கட்டி நந்திக்குச் சாற்றவேண்டும். வில்வம், மருக்கொழுந்து, மல்லிகை ஆகிய மலர்களாலும் அலங்காரம் செய்வார்கள்

நந்திக்குக் காப்பரிசி எதற்கு?

தேவர்களும் அசுரர்களும் ஆலகால விஷத்துக்கு பயந்து கயிலாயத்துக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டபோது, ‘‘பயப்படாதீர்கள்!’’ என்று அபயம் அளித்த சிவபெருமான், எதிரில் இருந்த நந்திகேஸ்வரனை அழைத்து, ‘‘அந்த ஆலகால விஷத்தை இங்கே கொண்டு வா!’’ என்றார் (இப்படியும் சொல்வதுண்டு).

ஈசனை வணங்கி விடை பெற்ற நந்திபகவான், ஆலகால விஷத்தை நெருங்கினார். அதன் வெம்மை மாறியது. அதை எடுத்துக் கொண்டு வந்து ஈஸ்வரனிடம் தந்தார். ஈசன் அதை வாங்கி உண்டார். அருகில் இருந்த அம்பிகை, சிவபெருமானின் கழுத்தை மென்மையாகத் தொட்டதால், விஷம் அங்கேயே நின்று விட்டது. இதைப் பார்த்த நந்தி பகவான் கேலியாகச் சிரித்தார். ‘‘ஹே! இந்த விஷம் அவ்வளவு கடுமையானதா? சர்வ சாதாரணமாக நான் எடுத்து வந்த விஷமான இதற்கு, கொல்லும் அளவுக்குச் சக்தி இருக்கிறதா என்ன?’’ என எகத்தாளமாகப் பேசினார்.

உடனே சிவபெருமான், ‘‘நந்தி! இங்கு வா!’’ என்று அழைத்து, விஷத்தை வாங்கி உண்ட தன் கையை விரித்து, ‘‘இதை முகர்ந்து பார்!’’ என்றார். நந்தி பகவான் முகர்ந்தார். அதே விநாடியில் சுயநினைவை இழந்தார். கீழே விழுந்தார். எழுந்தார். அழுதார். சிரித்தார். பித்துப் பிடித்தவர் போலப் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து சுற்றித் திரிந்தார். உலகின் அனைத்து ஜீவராசி களுக்கும் தாயான உமாதேவி அதைக் கண்டு வருந்தினாள். ‘‘ஸ்வாமி! நந்திக்கு இப்படிப்பட்ட தண்டனை தரலாமா? போதும்... மன்னித்து விடுங்கள்!’’ என வேண்டினாள்.

‘‘உமாதேவி! ஆணவத்துடன் பேசியதால் அவனை அடக்கவே அவ்வாறு செய்தோம். விஷத்தின் வாசனையை முகர்ந்ததற்கே இந்தப் பாடுபடுகிறான் என்றால், அதை உண்டால் என்ன பாடுபட்டிருப்பான்? அதை அவனுக்குக் காட்டவே இவ்வாறு செய்தோம். அரிசியைப் பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்துக் கொடு. அவன் தெளிவு பெற்றுப் பழைய நிலையை அடைவான்!’’ என்றார் சிவபெருமான். அவரது சொற்படியே செய்தாள் அம்பிகை. அதை உண்ட நந்தி பழையபடி சுயநிலையை அடைந்தார். அன்று முதல் பிரதோஷ நாளன்று, நந்திக்குக் காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.

முந்தி வரம் தரும் நந்தி தரிசனம் என்பார்கள். ‘நந்தியின் நாமம் நமசிவாயவே’ எனப் பாடிப்பரவி யுள்ளார் திருஞானசம்பந்த பெருமான். நந்தி என்பதற்கு வளர்வது என்று பொருள். ஞானத்தி லும், குணத்திலும் உயர்ந்தவர்களை நந்திகள் என்றழைப்பது உண்டு. நம் வாழ்வு செழிக்க, ஞானம் வளர இறைவனின் திருவருள் தேவை. நந்தி தரிசனம் அதற்கு உதவும். இந்த நவம்பர் மாதத்தில் 12 மற்றும் 26 ஆகிய தினங்கள் சனி பிரதோஷமாக வருவது நாம் செய்த பாக்கியம். இந்த தினங்களில்  உரிய நேரத்தில் சிவாலயம் சென்று வணங்குவதுடன், நம் வாழ்வு செழிக்க நந்தியையும் வணங்கி, அவர் மூலம் சிவனாரிடத்து வரம்பெற்று மகிழ்வோம். நந்தியின் நல்லருளை பூரணமாகப் பெற்று மகிழ ஏதுவாக, நந்தியெம் பெருமான் குறித்த சிறப்பு தகவல்களையும் தலங்களையும் தெரிந்து கொள்வோமா?

திருவையாறு புராணம் திருமழப்பாடியில் சிலாதல முனிவருக்கு மகனாகத் தோன்றிய சைலாதி என்பவரே, தனது ஒப்பற்ற தவத்தால் நந்தியாகும் பேறு பெற்றார் என்கிறது.

திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாண விழா சிறப்பு மிக்கதாகும். நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் ஆகும்  என்பது சொல்வழக்கு. இதற்கேற்ப நந்தி கல்யாணத்தைத் தரிசிக்க இந்தத் தலத்தில் பெரும் கூட்டம் கூடும்.

நந்தி திருமணம் முடிந்து சுமார் ஒருமாத காலத்துக்குப் பிறகு, முனிவர்களின் ஆசியைப் பெறுவதற்காக சுற்றிலும் உள்ள ஆசிரமங்களுக்கு மணமக்களை ஐயாறப்பர் அழைத்துச் செல்வார். அவை: திருவையாறில் சிலாதர் ஆசிரமம், திருப்பழனத்தில் கவுசிகர் ஆசிரமம், திருச்சோற்றுத் துறையில் கவுதமர் ஆசிரமம், திருவேதிக் குடியில் வியாசராசிரமம், திருக்கண்டியூரில் சதாதய ராச்சிரமம், திருப்பூந்துருத்தியில் காசியபராசிரமம், திருநெய்த்தானத்தில் பிருகு முனிவராசிரமம் ஆகியன.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் நந்திதேவரின் வரலாற்றை விவரிக்கும் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவை சோழர்காலத்து கலைப்பணியாகும்.

மயிலாடுதுறையில் அருள்மிகு மயூரநாத ஸ்வாமி ஆலயத்தில் குடைவரையில் திருமணக் கோலத்துடன் அருளும் அதிகார நந்தி தேவரைக் காணலாம்.

* திருக்கழுக்குன்றம், மயிலை ஆகிய தலங்களில் வெள்ளியாலான அதிகார நந்தி வாகனங்கள் உண்டு. திருக்கழுக்குன்றத்தில், சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாள் காலையில் வேதகிரீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் வலம் வருகிறார்.

திருவையாறு புராணத்தில் நந்திதேவர் சிவனாரை வேண்டி குரங்கு முகம் பெற்றதாக தகவல் உண்டு. காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தில் குரங்கு முகத்துடன் கூடியவராக அதிகார நந்தியை அமைத்து வழிபடுகின்றனர். 

* நந்தனாருக்காக நந்தி விலகிய தலம் தில்லை. திருவலம் தலமும் நந்தி விலகி அமர்ந்த தலமாகும். திருவைகாவூரில் நந்தியெம்பெருமான் திரு முகத்தை சற்றே திருப்பிவைத்திருப்பார். 

கர்நாடக மாநிலம், பெங்களூருக்குச் சென்றால், அங்குள்ள பசவன்குடி நந்தி கோயிலுக்குச் செல்லாமல் வரக்கூடாது என்பார்கள். ‘பஸவ’ என்ற கன்னட சொல்லுக்கு ‘நந்தி’ என்று பொருள். ஆமாம், இந்தத் தலத்தின் சிறப்பம்சம் நந்திதான். சுமார் 16 அடி உயரம், 21 அடி நீளத்தில் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார் இங்குள்ள நந்தியெம்பெருமான்.

இன்றைக்கும் இந்த நந்தியெம்பெருமானுக்காக இப்பகுதி விவசாயிகள் ஒன்றுசேர்ந்து, வருடம் தோறும் கார்த்திகை மாதம் கடைசி திங்களன்று நிலக்கடலைத் திருவிழா நடத்துகிறார்கள். இதனால் நிலக்கடலை அமோகமாக விளையும் என்பது நம்பிக்கை. 

இங்குள்ள நந்தி பகவான், ஸ்ரீபார்வதி- பரமேஸ்வரரை தரிசிக்கும் நிலையில், இமயமலை இருக்கும் வடதிசை நோக்கி காட்சி தருவது சிறப்பம்சம். நந்தியின் வலக் காலின் அடியில் தபேலா போன்ற ஓர் இசைக் கருவி இருக்கிறது. அதன் அடியில் ஒரு தாமரைப்பூ. அதன் அடியில் தான் ‘ரிஷபா நதி’ என்றொரு நதி உற்பத்தியாகி காசி- கங்கையில் சங்கமமாவதாக ஐதீகம்.

நெல்லை- தூத்துக்குடி சாலையில், நெல்லையில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் முறப்பநாடு. இங்குள்ள ஸ்ரீகயிலாசநாதர் திருக் கோயிலில் குதிரை முகத்துடன் திகழும் நந்தியைத் தரிசிக்கலாம்.

பிரமாண்டத்தில் நம்மை மலைக்கவைப்பவர் தஞ்சை நந்தியெம் பெருமான். ராஜராஜன் வைத்த நந்தி, காலப் போக்கில் சிதைந்துவிட..., பின்னர் வந்த நாயக்கர்கள் நந்தி அமைத்து, மண்டபம் எழுப்பினர்.

எத்தனை பிரதோஷங்கள்?!
நித்ய பிரதோஷம்: ஒவ்வொரு நாளும் சுமார் மாலை 4.30 மணிக்குமேல் 6.00 மணிக்குள் தினமும் உள்ள மாலை நேரமான சந்தியா காலமே நித்ய பிரதோஷம்.

பக்ஷப் பிரதோஷம்: மாதம் தோறும் வளர்பிறை திரயோதசி நாட்களில் வரும் பிரதோஷம் பக்ஷப் பிரதோஷம் எனப்படும்.

மாதப் பிரதோஷம்: மாதம்தோறும் தேய்பிறை திரயோதசி நாட்களில் வரும் பிரதோஷம் மாதப் பிரதோஷம் ஆகும்.

சோமப் பிரதோஷம்: திரயோதசி திருநாள், திங்கட்கிழமையுடன் சேர்ந்து வந்தால், சோமப் பிரதோஷம் ஆகும்.
சனிப் பிரதோஷம்: சனிக் கிழமையுடன் சேர்ந்து வருவது சனிப் பிரதோஷம். 

பிரளயப் பிரதோஷம்: பிரளயத்தின் போது, அழித்தல் தொழிலின் பொருட்டும் மீண்டும் படைத்தலின் பொருட்டும் திருநடனம் புரிவார் சிவபெருமான். பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் அந்த ஆதி சிவனிடத்தில் ஐக்கியமாகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளயப் பிரதோஷம் ஆகும்.

இன்னல்கள் நீக்கும் இரண்டாம் காசி!


குபேர சனீஸ்வரர் அருளும் நடுசத்திரம் சிவாலயம்!


விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். இந்த ஊரில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- ஸ்ரீஅன்னபூரணி திருக் கோயிலை, ‘இந்தியாவின் இரண்டாவது காசி’ என்றே கொண்டாடுகிறார்கள் இங்குள்ள சிவ பக்தர்கள்.

சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர் களால் கட்டப்பட்ட கோயில் இது. தற்போது கோயில் அமைந்துள்ள இடம்,  அப்போது வனமாக இருந்திருக்கிறது. இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து காசிக்குச் செல்லும் பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். கோயிலின் அருகிலேயே ஓர் அருமையான நீர்நிலை உள்ளது. இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு, காசிக்குச் செல்லும் மக்களுக்கு ஏதுவாக இந்த ஆலயத்தை காசியில் உள்ளது போன்றே வடிவமைத்திருக்கின்றனர். இந்த வழியாகக்  காசிக்குச் செல்பவர்கள் இந்த ஆலயத்தில் தங்கி, இங்குள்ள சிவபெருமானை தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கம். 

பாண்டிய மன்னர்கள், அப்போதிருந்த குறுநில மன்னர்களான எட்டையபுரம் ஜமீன்தார்களிடம்  ஆலய நிர்வாகத்தை ஒப்படைத்தனர். அவர்களது காலத்துக்குப் பின், ஏழாயிரம்பண்ணை ஜமீனிடம் பராமரிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. இவர்கள் சில தலைமுறைகளாக இந்தக் கோயிலைப் பாதுகாத்து வந்துள்ளனர். அதன்பின், இந்த ஆலயம் செவல்பட்டி ஜமீன் வசம் ஒப்படைக்கப் பட்டது. கடைசியாக, ஹரிச்சந்திர நாயுடு என்பவர் இந்தக் கோயிலின்  திருப் பணிகளைக் கவனித்து வந்ததாகச் சொல்கிறார்கள், இந்த ஊர்ப் பெரியவர்கள். தற்போது இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ளது.

இந்தத் திருத்தலத்தின் சந்நிதியில் மட்டுமே காசிக்கு அடுத்தபடியாக அன்னபூரணி அம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலம் பாண்டியர்களால் கட்டப்பட்டது என்பதற்குச் சான்றாக, இங்குள்ள தூண்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் தலவிருட்சம் வில்வ மரம்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பு... சிவனுக்கு எதிரே உள்ள நந்தீஸ்வரரின் ஒரு கண் சிவனைப் பார்த்தவாறும், மற்றொரு கண் அன்னபூரணியைப் பார்த்தவாறும் தலைசாய்த்து அமைந்திருக்கிறது. மேலும், இத்திருத்தலத்தின் கன்னி மூலையில் பிள்ளையாரும், வாயு மூலையில் வள்ளி- தெய்வானை சமேதராக முருகனும் அமைந்து உள்ளனர். மேலும், ஈசான்ய மூலையில் பைரவர் உள்ளார். அக்னி மூலையில் மடப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில் அமைந்துள்ள கொடி மரத்தின் அடிப்பாகம் தாமரைப் பூ போன்ற வடிவமைப்புடன் உள்ளது.

இத்திருத்தலத்தில், குபேர சனீஸ்வரர் தனித்து அருள்பாலிக்கிறார். நந்திதேவரைப் போன்று இவரும்,  தன் தலையைச் சற்றே சாய்த்தவாறு அருட்கோலம் கொண்டிருக்கிறார். இவர் சந்நிதியின் அருகில், வற்றாத நூபுரகங்கை தீர்த்தக் கிணறும் உள்ளது. மேலும், சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து, காளை வாகனத்தில் அமர்ந் திருப்பது, வேறு சிவாலயங்களில் காண்பதற்கரிய சிறப்பம்சம்! 

ஆலயத்தைச் சுற்றியுள்ள கல்தூண்களில் பெருமாள், ஹனுமான், நாகம்மாள் எனப் பல தெய்வங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு தென் திசை நோக்கிய குருபகவானும், சிவனுக்கு நேர் எதிராக வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் சந்திரனும் அமைந்துள்ளார்கள்.
இத்திருத்தலத்தில் அன்னபூரணி அம்பிகை, காலபைரவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் மற்றும் குபேர சனீஸ்வர பகவான் அனைவரும் தென் திசை நோக்கி அமைந்திருப்பது மற்றொரு தனிச் சிறப்பாகும்.

தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வெள்ளைப் பூசணிக்காய் ஒன்றை (தடியங்காய்) இரண்டாகப் பிளந்து, வெள்ளை மிளகு 108 எடுத்து பாதியாகப் பிரித்து பூசணிக்காயில் வைத்து, இலுப்பை எண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றினால், தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.

இதுதவிர, திருமண வரம் வேண்டிவரும் பெண்கள், பிரதோஷ நாளில் எலுமிச்சை மாலையை அன்னபூரணியம்மாளுக்குச் சூடி, சுவாமியை தரிசித்துவிட்டுச் சென்றால், நல்ல வரன் அமையும். அதேபோன்று, ஆண்கள் தொடர்ந்து 3 பிரதோஷங்களுக்கு இங்கு வந்து, அன்னபூரணி அம்மைக்கு பூமாலை சமர்ப்பித்து வழிபட்டுச் சென்றால், விரைவில் திருமண மாலை தோள்சேரும். குழந்தை வரம் இல்லாதவர்கள் இளநீர் வாங்கி வந்து, அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் அமையும் என்பது நம்பிக்கை.

சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி பூஜை ஆகியவை இங்கு வெகு சிறப் பாகக் கொண்டாடப்படுகின்றன. இத்தலத்தில் ஒவ்வொரு நாளும் ஒருகால பூஜை நடைபெறுகிறது.ஒவ்வொரு மாதமும் விசேஷ தினங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. 

உங்கள் கவனத்துக்கு
ஸ்வாமி :ஸ்ரீகாசிவிஸ்வநாதர்

அம்பாள் :ஸ்ரீஅன்னபூரணி 
        
தலவிருட்சம் : வில்வமரம்

தலச் சிறப்பு: இரண்டாவது காசி எனச் சிறப்பிக்கப்படும் திருத்தலம். ஒரு கண்ணால் ஸ்வாமியையும், மற்றொரு  கண்ணால் அம்பாளையும் தரிசிக்கும் பாவனையில் நந்தி தலைசாய்த்து அமைந்த க்ஷேத்திரம். காளை மீது அமர்ந்த சண்டிகேஸ்வரரும், குபேர சனீஸ்வரரும் அருளும் திருக்கோயில் இது.

பிரார்த்தனைச் சிறப்பு: தொழில் நஷ்டம் நீங்க தேய்பிறை அஷ்டமி வழிபாடு, கல்யாண வரம் பெற அன்னபூரணிக்கு எலுமிச்சை மாலை சமர்ப்பித்து செய்யும் பிரார்த்தனை, பிரதோஷ தரிசனம், குழந்தை வரம் தரும் இளநீர் அபிஷேகம் ஆகியவை இந்தத் தலத்தில் நிகழும் சிறப்புப் பிரார்த்தனைகள். 

வழித்தடம்: சாத்தூரிலிருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம் பண்ணை வழியாகச் செல்லும் சாலையில் சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். 

சிவகாசியிலிருந்து சங்கரன்கோவிலுக்குச் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் உள்ளது குகன்பாறை. அங்கிருந்து கிழக்குப்புறமாக 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை  6 மணியிலிருந்து 12 மணி வரை; மாலை 4 மணியிலிருந்து 7.30 மணி வரை. விசேஷ நாட்களில் கூடுதலான நேரம் திறந்திருக்கும்.

மாங்கல்ய பலம் அருளும் அம்பிகை - பிறவிப் பிணி தீர்க்கும் ஈஸ்வரன்!திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம்


ன்னை நாடி வரும் அன்பர்களின் உடற்பிணி களை மட்டுமின்றி பிறவிப் பிணியையும் தீர்க்கும் ஸ்ரீபிறவிமருந்தீஸ்வரராக எனும் திருநாமம் கொண்டு சிவனார் அருள்பாலிக்கும் தலம்.... அஸ்வினி நட்சத்திரக் காரர்கள் வழிபடவேண்டிய அற்புத க்ஷேத்திரம்... நடராஜ பெருமான் சுந்தர தாண்டவராய் அருளோச்சும் திருவூர்... நவகிரகங்களும் வந்து வழிபட்டதால் நவகிரகபுரம் என்றும், வில்வ மரங்கள் நிறைந்ததால் வில்வாரண்யம் என்றும் போற்றப்படும் திருத்தலம்...
- இவ்வளவு மகத்துவங்களைத் தன்னகத்தே கொண்ட சிவத்தலம் எது தெரியுமா? நாகை மாவட்டத்தில் அமைந்த திருத்துறைப்பூண்டிதான் அந்தத் தலம். இங்குள்ள இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்றும் ஒரு திருப்பெயர் உண்டு.
 
முன்னொரு காலத்தில் படைப்புத் தொழிலைப் புரியும் பிரம்மாவுக்கும், கலைஞானத்தை வழங்கும் கலைவாணிக்கும் இடையே ஒரு வாக்குவாதம் நிகழ்ந்தது. தமது படைப்புத் தொழிலே மேன்மையானது என்றார் பிரம்மன். ஆனால், சரஸ்வதிதேவியோ தான் மனிதர்களுக்கு வழங்கும் அறிவே அனைத்திலும் உயர்ந்தது என்று வாதிட்டாள். இவ்வாறு அவர்கள் வாதம் புரிந்துகொண்டிருக்கும் தருணத்தில், தேவகுருவான பிரகஸ்பதி அங்கே வந்தார். அவர், ‘‘அறிவை வழங்கும் சரஸ்வதியே உயர்ந்தவர்’’ என்று கூறினார்.
இதைக் கேட்டதும் பிரம்மன் தனது தவறை உணர்ந்தார். படைப்பின் அங்கமாகிய உயிர் களுக்கு உரிய ஞானம் கிட்டும்போதுதான், அவை உயர்வு பெறுகின்றன என்பதை புரிந்துகொண் டார். இதுவரையிலும் அறியாமையில் உழன்று தேவியுடன் தர்க்கம் செய்ததற்காக வருந்தினார். அறியாமை நீங்கிட தவமியற்ற முடிவு செய்தார். பூலோகத்தில் வில்வ மரங்கள் நிறைந்த ஓரிடத்துக்கு வந்து, அங்கே தீர்த்தம் உருவாக்கி, அதன் கரையில் நின்றபடி ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தவாறு தவத்தில் ஆழ்ந்தார். பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் சுயம்புமூர்த்தி யாக தோன்றினார். மேலும், பிரம்மாவின் ரஜோ குணத்தை நீக்கி, அவருக்கு பல வரங்களையும் கொடுத்தருளினார். ஆகவே, அந்தத் தலத்துக்கு பிரம்மபுரி என்றும், அங்கே அருள் வழங்கும் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்றும் திருப் பெயர் உண்டானது.

சிவ தரிசனத்தால் மகிழந்த பிரம்மதேவன் இந்த தலத்தில் சிவனுக்கு ஒன்றும் அம்பிகைக்கு ஒன்றுமாக தனித்தனிச் சந்நிதிகள் அமைத்தாராம். அதுமட்டுமா? அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் அமிர்த புஷ்கரணியை உண்டாக்கி, அதன் தீர்த்தத் தைக் கொண்டு தினமும் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து ஆறுகால பூஜைகள் நடத்தி வழிபட்டராம். பின்னர், சித்திரை மாதம் சிவாச்சார்யர்களைக் கொண்டு சிறப்பு பூஜை செய்தபிறகு பிரம்மலோகம் சென்றடைந்ததாக தலபுராணம் சொல்கிறது. 

அதிஅற்புதமாக அமைந்திருக்கிறது ஸ்ரீபிறவி மருந்தீஸ்வரர் ஆலயம். அம்பிகையின் திருநாமம் அருள்மிகு பெரியநாயகி. மாங்கல்ய பலம் அருளும் மங்கல நாயகி இவள்.
ஒருகாலத்தில் விருபாக்ஷன் என்றொரு அசுரன், தன் மனைவி ஜல்லிகையுடன் வராஹ பர்வத குகையில் வசித்துவந்தான். ஒருமுறை, தந்தையின் சிராத்தத்துக்காக காசியில் இருந்து கங்கை தீர்த்தத்தை சேகரித்துக்கொண்டு இவ்வழியே வந்துகொண்டிருந்த  அந்தணச் சிறுவன் ஒருவனை விழுங்க முற்பட்டான் விருபாக்ஷன்.  ஏற்கெனவே அவன் நர மாமிசம் புசிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ஜல்லிகை, இம்முறையும் அவனைத் தடுத்து எச்சரித்தாள்,  ஆனாலும் விருபாக்ஷன் கேட்கவில்லை; சிறுவனை விழுங்கி விட்டான்; அதன் பலனாக இறந்தும் போனான். 

ஜல்லிகை கதறியழுதாள். இந்நிலையில் அவ்வழியே கண்வ மகரிஷி வருகைதர, அவரிடம் தன் நிலையைக் கூறி புலம்பினாள். அவளை ஆறுதல் படுத்திய மஹரிஷி,   தமது தவவலிமையால் அசுரனின் வயிற்றில் இருந்து அந்தணச் சிறுவனை உயிர்ப்பெற்று எழச் செய்தார். அவனிடம் குமரிக்குச்  சென்று தந்தைக்கான கடமையை பூர்த்திசெய்யும்படி பணித்தார். மேலும் ஜல்லிகையை வில்வாரண்யம் க்ஷேத்திரத்துக்குச் சென்று அமிர்தபுஷ்கரணியில் நீராடி, அங்கே அருள்பாலிக்கும் அம்பிகையை வழிபடும்படி அறிவுறுத்தினார். அதன்படியே, வில்வாரண்யம் வந்து அமிர்த புஷ்கரணியில் நீராடி பெரிய நாயகியை வழிபட்டாள் ஜல்லிகை. அவளுக்கு அம்பாள் அருள்புரிந்தாள்; விருபாக்ஷன் உயிர்த்து எழுந்தான். ஜல்லிகையின் மாங்கலயத்தை காத்தருளியதால் அமிர்த புஷ்கரணிக்கு  மாங்கல்ய புஷ்கரணி என்ற சிறப்புப் பெயரும் வழங்காலாயிற்று. 

மேலும், தன்னைப்போலவே இந்தத் தலத்துக்கு வந்து மாங்கல்ய தீர்த்தத்தில் நீராடி அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அருளும் படி வேண்டிக்கொண்டாள் ஜல்லிகை. அப்படியே அருள்செய்தாள் அம்பிகை. ஆகவே, இந்தத் தலத்துக்கு வந்து மாங்கல்ய தீர்த்தமாம் அமிர்த புஷ்கரணியில் நீராடி அம்பாளை வழிபட்டால், மாங்லய பலம் பெருகும், மங்கல வாழ்வு ஸித்திக்கும் என்பது ஐதீகம். இந்த தீர்த்தத்தின் கீழ்க்கரையில் வேதாரண்யேஸ்வரர் திருமணக்கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சியளிக்கும் நிலையிலும், லிங்கத் திருவுருவோடும் கோயில் கொண்டுள்ளார்.
    
இக்கோயிலில் சிவகாமவல்லியுடன் அருளும் நடராஜர், சுந்தரத் தாண்டவர் என்று அழைக்கப்படு கிறார். இந்தத் தலம் தவம் புரிவதற்கு ஏற்ற தலம் என்பதை அறிந்த அகத்தியர், வாமதேவர், காசிபர், அத்திரி, பரத்வாஜர், கௌதமர், விசுவாமித்திரர், ஜமதக்கினி, வசிட்டர் ஆகிய ஒன்பது முனிவர் கள் இங்கே தனித்தனியாக தீர்த்தம் உருவாக்கி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து சாயுஜ்ய பதவி வேண்டி ஆயிரம் ஆண்டுகள் தவமியற்றினர். அவர்கள் தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி ஆனந்த தாண்டவம் ஆடினார். மேலும் அவர்களுக்கு பிறவாநிலையைத் தந்து முக்தி அளித்தார்.  அவர்களின் வேண்டுதலுக்கு  இணங்க, சித்ரா பெளர்ணமியில் இங்கு வந்து நவதீர்த்தங்களில் நீராடி தம்மை தரிசிக்கும் அன்பர்களுக்கும் பிறவா வரம் அருள்வதற்காக,  சந்திர சூடாமணித் தாண்டவராக இங்கு அருள்கிறாராம் நடராஜபெருமான்!
இந்த சுந்தரத்தாண்டவரின் சந்நிதியை அடுத்து இரண்டாவது திருச்சுற்று அமைந்துள்ளது. அங்கே யாகசாலையும் மண்டபமும், தல விருட்சமாகிய வில்வமரங்களும் அமைந்துள்ளன. உட்சுற்றில் தெற்கு புறத்தில் வரசித்தி விநாயகரும், தீர்த்தவிடங்க விநாயகரும், நர்த்தன விநாயகரும் அடுத்தடுத்து நமக்கு அருள்பாலிக்கின்றனர்.  அவர்களைக் கடந்து வலமாக வந்தால், தேவியருடன் முருகன் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து கஜலட்சுமி, ஜகசம்ஹார மூர்த்தியைத் தரிசிக்கலாம். மூலவர் கருவறைக்கு தெற்குப்புறத்தில் தனிச் சந்நிதியில் சோமாஸ்கந்த மூர்த்தியையும் தரிசிக்கலாம். மேலும் கருவறையை சுற்றும் பிராகாரத்தில் துர்கை, பிரம்மன், பைரவர், நவகிரகங்கள், சூரியன், தட்சிணாமூர்த்தி, நால்வர் பெருமக்கள் ஆகியோரைத் தரிசிக்கலாம். தாண்டவ விநாயகரின் திருவுருவம் கண்ணையும் கருத்தையும் கவரும் திருக்கோலம்! தவிரவும், இக்கோயிலில் ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, ஆறுமுகன் ஆகியோருக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

இப்படி, பல சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தலத்தில் நிகழும் சித்திரை திருவிழாவையும், அந்த விழாவையொட்டி நிகழும் ரிஷபவாகன காட்சி,  தியாகேச பெருமானின் வசந்த உற்ஸவம், பக்த காட்சி, பாத தரிசனம், பஞ்சமுகவாத்திய கச்சேரி ஆகியவையும் அவசியம் தரிசிக்கவேண்டியவை. 


உங்கள் கவனத்துக்கு

ஸ்வாமி: அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர்

அம்பாள்: அருள்மிகு பெரியநாயகி

ஸ்தல விருட்சம்: வில்வம்

சிறப்பு வழிபாடு: இந்தத் தலத்துக்கு வந்து மாங்கல்ய தீர்த்தமாம் அமிர்த புஷ்கரணியில் நீராடி அம்பாளை வழிபட்டால், மாங்லய பலம் பெருகும், மங்கல வாழ்வு ஸித்திக்கும் என்பது ஐதீகம். பிறவி மருந்தீஸ்வரரை வழிபட உடல், உள்ளப் பிணிகள் யாவும் நீங்கும்.

நடை திறக்கும் நேரம்:
 காலை 8 முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 முதல் இரவு 8 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?: 
 திருவாரூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருத்துறைப்பூண்டி. பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவிலேயே திருக்கோயில் உள்ளது.

பிணிக்கு மருந்தாகும் பிரசாதத் திருநீறு!


திருச்சி மாவட்டம் - திருப்பராய்த்துறையில், விஸ்தாரமாக ஓடுவதால் அகண்ட காவிரி, என்று அழைக்கப்படும் காவிரி நதியின் தென் கரையில் அமைந்திருக்கும் பராய்த்துறை நாதர் சிவாலயம், பாடல் பெற்ற தலம் ஆகும். இங்குள்ள இறைவனுக்கு, ‘தாருகாவனேஸ்வரர்’ என்ற திருப்பெயரும் உண்டு.

 முற்காலத்தில் இப்பகுதி ‘தாருகாவனம்’ என அழைக்கப்பட்டது. அக்காலத்தில் அங்கு இருந்த முனிவர்கள், பல வகையான வேள்விகளைச் செய்துவந்தனர். தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்ற எண்ணத்தில், சிவபெருமானை மதிக்கத் தவறினர். அவர்களின் இறுமாப்பை அடக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், பிட்சாடனர் கோலத்தில் தாருகாவனத்துக்கு வந்தார். பிட்சாடனராக இருந்தாலும், பேரழகுடன் திகழ்ந்த சிவனாரிடம் மனதைப் பறிகொடுத்தனர் முனிவர்களின் பத்தினிகள்.
இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் பிட்சாடனரை அழிக்க மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்தில் இருந்து புலியைத் தோற்றுவித்து அவர் மீது ஏவினர். பிட்சாடனர் அதைக் கொன்று, அதன் தோலை ஆடையாக அணிந்துகொண்டார். பிறகு மானை ஏவுகின்றனர்.  பிட்சாடனர் மானை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக்கொண்டார். பின்னர், முனிவர்கள் பாம்புகளை ஏவ,  அவற்றை தனது அணிகலன்களாக ஆக்கிக் கொண்டார், பிட்சாடனர்.
இதனால் கோபம் கொண்ட முனிவர்கள், பரமனாரின் மீது பூதகணங்களை ஏவினார்கள். ஆனால், அந்த முயற்சியும் தோல்வியுற்றது. நிறைவாக, வந்திருப்பவர் சிவபெருமான்தான் என்று உணர்ந்த முனிவர்கள், இறுமாப்பு நீங்கி மன்னிப்பு வேண்டினர். சிவபெருமானும் அவர்களை மன்னித்து, சுயம்புலிங்கமாக தாருகாவனத்தில் எழுந்தருளினார். பராய் மரங்கள் சூழ்ந்த பகுதியில் எழுந்தருளியதால், ‘திருப்பராய்த்துறை நாதர்’ என்றும் திருப்பெயர் கொண்டார்.

இங்கு வள்ளி-தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமானை, அருணகிரிநாதர் தம்முடைய திருப்புகழில் போற்றிப் பாடி இருக்கிறார்.

கோயிலின் ஸ்தல விருட்சம் பராய் மரம்.  இந்த தெய்விக மரத்தைச் சுற்றிவந்து வழிபடும்போது, புற்றுநோயைக் குணப்படுத்தும் சில நுண்துகள்களை வெளியிடுவதாக நம்புகின்றனர் பக்தர்கள். மேலும், இந்த மரத்தை வலம் வந்து வழிபடுவதால்,  தோல் நோய்கள் குணமடையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஏழுநிலை ராஜகோபுரத்துடனும், ஐந்துநிலை முதன்மை கோபுரத்துடனும் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் இறைவன் சுயம்புலிங்கமாகக் காட்சி தருகிறார். இறைவி ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை எனும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். 

பிட்சாடனராக வந்த சிவபெருமானின் திருவுருவத்தையும் ஆலயத்தில் தரிசிக்கலாம். கோயிலின் பிராகாரத்தில் உள்ள தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகரின் திருஉருவங்களும், திருப்பணி செய்தவர்களின் திருவுருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு, தன் தேவியை மடியில் அமர்த்தியபடி அருளும் ஸ்ரீவல்லப உச்சிஷ்ட கணபதியையும் தரிசிக்கலாம்.
மேலும் வலம்புரி விநாயகர், சப்த கன்னியர், அறுபத்து மூவர், சோமாஸ்கந்தர், மகா கணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிரம்மா, துர்கை, கஜலட்சுமி, பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதியையொட்டி அமைந்துள்ள மண்டபத்தூண்களில், ஈசனின் ஊர்த்துவத் தாண்டவம் மற்றும் காளிதேவியின் சிற்பங்களைக் காணலாம்.

குறைகள் நீங்கப்பெறும் தலம்
தொடர்ந்து 8 திங்கட்கிழமைகள் இந்தக் கோயிலுக்கு வந்து,  நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, சிவனாரின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியைப் பிரசாதமாகப் பெற்று உடலில் பூசிக்கொண்டால், தீராத சருமநோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்குள்ள பஞ்சபூத சக்திகளின் உருவம் பதிக்கப்பட்ட தூண் ஒன்றில் கைவைத்து வேண்டினால், நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே நிலவுகிறது
விசேஷ தினங்கள்
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முதல்நாள் ‘முதல் முழுக்கு விழா’ கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இறைவன் ரிஷபாரூடராக அம்பிகையோடு காவிரிக் கரையில் எழுந்தருளி பக்தர்களுக்குத்  தீர்த்தம் வழங்குவார். நதிக்கரை தலம் என்பதால், பித்ருக்கள் ஆராதனைக்கும் உகந்த தலம் இது எனச் சொல்கிறார்கள் பெரியோர்கள். 

பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். நாமும் பராய்த்துறைக்குச் சென்று  நாதனை வேண்டி, பாவங்கள் நீங்கப்பெறுவோம். 

படங்கள்: தே.தீட்ஷித்

உங்கள் கவனத்துக்கு... 

மூலவர்: ஸ்ரீதிருப்பராய்த்துறை நாதர் (தாருகாவனேஸ்வரர்)

அம்பாள்: ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை எப்படிச் செல்வது? திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது, திருப்பராய்த்துறை. திருச்சி - சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பராய்த்துறை செல்ல நகரப் பேருந்துகள் உள்ளன. திருப்பராய்த் துறை பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது  கோயில்.

நடை திறந்திருக்கும் நேரம்: தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை; மாலை 4 முதல் இரவு  8 மணி வரை.

உங்கள் குழந்தைக்கு ராசியான... நட்சத்திர பெயர் எழுத்துகள்!


ஞானிகள், முனிவர்கள், தவசிகள், மகான்கள் ஆகியோர் தங்களது மெய்ஞானத்தால் ஜோதிட சாஸ்திரத்தைக் கண்டுபிடித்து, அதை வருங்காலச் சந்ததியினர் பயன்படுத்தி, நன்மை பெறும் விதமாக, நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள்.
அவர்கள், தங்களின் ஞானக்கண்ணால் வான் மண்டலத்தை ஆராய்ந்து அதை 12 ராசிகளாகப் பிரித்து, அந்த ராசிகளை 27 நட்சத்திரங்களாக வகுத்து, ஒவ்வொரு நட்சத்திரம் குறித்தும், அந்த நட்சத்திரத்தில் பிறந்த மனிதர்களின் குணாதிசயம் குறித்தும் விரிவாகச் சொல்லியுள்ளார்கள்.

நட்சத்திர பலம் என்பது மிக முக்கியமாகும். இதை தாரா (நட்சத்திரம்) பலம் என்றும் அழைப்பார்கள். நட்சத்திரமும் நட்சத்திரத்தின் அதிபதியான கிரகமும் நட்சத்திரம் உள்ள ராசியின் அதிபதியும் வலுத்திருப்பார்கள் என்றால் சுப பலன்கள் அதிகம் உண்டாகும்.

அதேபோல், பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டே தசா விவரம் அறியப்படுகிறது. குறிப்பாக ஒருவர் பரணி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு முதல் தசை சுக்கிர தசையாக அமையும். 

அதேநேரம் தசை, புக்தி, அந்தரங்கள் அளிக்கும் நற்பலன்களும்... குறிப்பிட்ட அந்த தசை, புக்தி மற்றும் அந்தரத்தை நடத்தும் கிரகம் எந்த நட்சத்திரத்தில் பலமாக உள்ளதோ, அதைப் பொறுத்தே அமையும். இதையே கிரகசார பலம் என்பார்கள்.

மேலும் ஒருவரது ஜன்ம நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரத்தில் கிரகங்கள் உலவுகின்றன என்பதைப் பார்த்து ஜோதிடப் பலன்கள் சொல்லப்படுகின்றன.

மேலும், `நாள் நட்சத்திரம் (தாரா பலம்) பார்த்து, சந்திர பலம் (சந்திரன் எத்தனையாவது ராசியில் உள்ளது என்பதை) பார்த்துத் தொடங்கும் காரியம் வெற்றி பெறும்' என்பது பாரம்பர்யமாக நாம் கடைப்பிடித்துவரும் வழக்கமாகும். ஆகவே, நட்சத்திரம் மிக முக்கியமான ஒன்றாகும். 

நாம் இந்த இணைப்பில், ஒவ்வொரு நட்சத்திரத்தையும், அதில் பிறந்தவர்களின் பொதுவான குண இயல்பு களையும், குழந்தைகளின் ஜன்ம நட்சத்திரத்துக்கு உகந்த நாம நட்சத்திர எழுத்துகளையும் தெரிந்துகொள்வோம்.

இங்கு தரப்படும் பலன்கள் பொதுவானவையே; ஜாதகப்படி மாறவும் செய்யும். ஜன்ம லக்னம், லக்னாதிபதி, லக்னத்தைப் பார்க்கும் கிரகங்கள், லக்னத்தில் உள்ள கிரகங்கள், லக்னாதிபதியுடன் சேர்ந்த கிரகங்கள் ஆகியவற்றின் பலத்தை ஒட்டி ஜாதகரின் குணாதிசயம் அமையும் என்பதை மறக்கலாகாது.  

லக்னத்தைவிட, சந்திர ராசியின் பலம் அதிகம் உள்ளவர்களுக்கும் நட்சத்திரப் பலம் அதிகம் உள்ளவர்களுக்கும் இந்தப் பலன்கள் பெருமளவுக்குப் பொருத்தமாகவே அமையும்.

அசுவினி 

இது கேதுவின் நட்சத்திரம். மேஷ ராசியில் இந்த நட்சத்திரம் அமைகிறது. மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். ஆகவே, இவர்களுக்கு கேது, செவ்வாய் ஆகிய கிரகங்களின் குணம் அமையும்.

அழகான தோற்றம் அமையும். செல்வம் சேரும். எல்லோராலும் விரும்பப்படுவார்கள். ஆளுமைத் திறனும்,  செயலில் வேகமும் இருக்கும். திடீர் திடீரென கோபம் வரும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு இருக்கும். சாஸ்திரச் சம்பிரதாயங்களில் நாட்டம் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சு, சே, சோ, லா ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பு.
முதல் பாதம்: சு
2-ம் பாதம்: சே 
3-ம் பாதம்: சோ 
4-ம் பாதம்: லா 

உதாரணமாக அசுவினி நட்சத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு சுப்பிரமணி, சுதர்சனன் என்றும், பெண் குழந்தைக்கு சுலோசனா, சுகுமாரி என்றும் பெயர்வைப்பது சிறப்பாகும். 
சரஸ்வதி தேவியை வழிபடுவது சிறப்பு. அதிர்ஷ்டக்கல்: வைடூரியம்.

 பரணி 

சுக்கிரனின் நட்சத்திரம். செவ்வாயின் ராசி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன், செவ்வாய் ஆகியோரது தாக்கம் அதிகம் இருக்கும். 

இவர்கள் நிதானமாக நடந்துகொள்வார்கள். உண்மையை அதிகம் பேசுவார்கள். படிப்பு நன்கு அமையும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். வாழ்க்கையை நன்கு அனுபவிப்பார்கள். பெண்களிடமும் மனைவியிடமும் பாசமுள்ளவர்கள். சொத்துகள் சேரும். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு, கலைத் துறையில் ஆர்வம் அதிகம் இருக்கும். பிறரிடம் மென்மையாகப் பேசிப் பழகுவார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு லி, ல, லே, லோ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.
முதல் பாதம்: லி
2-ம் பாதம்: ல 
3-ம் பாதம்: லே
4-ம் பாதம்: லோ

செவ்வாய்க் கிழமைகளில், நட்சத்திரத் தேவதையான துர்கையம்மனை வழிபடுவது சிறப்பு. இவர்களுக்கான அதிர்ஷ்டக் கல்: வைரம்.

 கிருத்திகை 

இது சூரியனின் நட்சத்திரமாகும். கிருத்திகை 1-ம் பாதம் மேஷத்திலும், 2, 3, மற்றும் 4-ம் பாதம் ரிஷபத்திலும் அமையும். மேஷ கிருத்திகை விசேஷம்.

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு நிர்வாகத் திறமை இருக்கும். அதிர்ஷ்டம் கூடும். எதிர்ப்புகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். மந்திரங்களை உச்சரிக்கும் ஆற்றல் ஏற்படும். அரசாங்கத்தில் உயர் பொறுப்புகளைப் பெறும் தகுதி உண்டாகும். சூரியனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் பகைவர்கள் என்பதால், ரிஷபத்தில் பிறந்த கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு, மனதில் வீண் பயம் உண்டாகும்.சொத்துகள் சேரும் என்றாலும் அவற்றில் ஏதேனும் பிரச்னை இருக்கும். இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு அ, இ, உ, எ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது நல்லது.
முதல் பாதம்: அ
2-ம் பாதம்: இ 
3-ம் பாதம்: உ 
4-ம் பாதம்: எ 

அக்னி பகவானை வழிபடுவதும் ஹோமம், யாகங்களில் கலந்துகொள்வதும் சிறப்பு. மாணிக்கம் அணியலாம்.

 ரோகிணி 

நட்சத்திர நாயகன் சந்திரன். ராசி நாயகன் சுக்கிரன். சந்திரன் உச்சம்பெறும் நட்சத்திரம் இது. எல்லா சுப காரியங்களுக்கும் ஏற்றது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாய்மை உள்ளவர்களாக இருப்பார்கள். மனோ காரகன் வலுத்திருப்பதால் மனோபலம் உண்டாகும். தர்ம குணமும் இரக்க சுபாவமும் நிறைந்திருக்கும். கலை ஞானம் உண்டாகும். முக வசீகரம் ஏற்படும். கண்களால் பிறரைக் கவருவார்கள். இனிமையான பேச்சு அமையும். தகவல் தொடர்பு இனங்களால் ஆதாயம் கிடைக்கும். சந்திரன், பெண் கிரகம் ஆவதாலும் பெண் ராசியில் இருப்பதாலும் அதிக பலம் பெற்றிருப்பதாலும் மென்மையான குணம் அமையும். பெண்களால் நலம் ஏற்படும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். 

இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒ, வ, வி, வூ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் சூட்டலாம்.
முதல் பாதம்: ஒ
2-ம் பாதம்: வ 
3-ம் பாதம்: வி 
4-ம் பாதம்: வூ 

பிரம்மனை வழிபடுவது விசேஷம். வைடூரியம் அதிர்ஷ்டம் தரும்.

 மிருகசீரிஷம் 

செவ்வாயின் நட்சத்திரம் இது. இந்த நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷபத்திலும், மீதமுள்ள இரண்டு பாதங்கள் மிதுனத்திலும் அமையும்.

ரிஷப ராசியில் பிறந்த மிருகசீரிஷ நட்சத்திரக் காரர்களுக்கு செல்வ வளம் கூடும். கோபம் வரும் என்றாலும் உடனே தணிந்துவிடும். நல்ல பேச்சாளர்களாவார்கள். பிறருக்காக உழைப்பார்கள். வீண் செலவுகள் ஏற்படும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். மிதுன ராசியில் பிறந்த மிருக சீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு ராசி அதிபதி புதனாக அமைவதால், எதிரிகள் இருப்பார்கள். விடாமுயற்சி இருக்கும். பேச்சாற்றல் உண்டாகும். எனினும், சில நேரங்களில் வீணாகப் பேசிப் பொழுதைக் கழிப்பார்கள்.இந்த நட்சத்திரக் காரர்களுக்கு வே, வோ, க, கி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பு.
முதல் பாதம்: வே
2-ம் பாதம்: வோ 
3-ம் பாதம்: க 
4-ம் பாதம்: கி

சந்திரனை வழிபடுவது சிறப்பு. பெளர்ணமி பூஜை செய்வதும் கிரிவலம் வருவதும் நல்லது. பவழம் அணிவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும்.

 திருவாதிரை 

நட்சத்திர நாயகன் ராகு. ராசி நாயகன் புதன். பெயரிலேயே `திரு' உள்ள நட்சத்திரம் இது.

எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்வார்கள். சுய பலமும் அதிகம் இருக்கும். கரும்பாம்பின் நட்சத்திரம் இது என்பதால், பழிவாங்கும் குணமும் கோபமும் இருக்கும். புதனின் ராசியில் ராகுவின் நட்சத்திரம் என்பதால் பிற மொழிகளில் பாண்டித்தியம் உண்டாகும். புதியவற்றை அறியும் ஆர்வம் கூடும். சாமர்த்தியமான வழிகளில் பொருள் திரட்டுவார்கள். திருவாதிரை 1, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, இறை வழிபாட்டில் ஈடுபாடு கூடும். 

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கு, க, ஞ, ச ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது விசேஷம்.
முதல் பாதம்: கு
2-ம் பாதம்: க 
3-ம் பாதம்: ஞ 
4-ம் பாதம்: ச

ருத்திரனை (ஐந்து முகம் கொண்ட சிவனார்) வழிபடுவதன் மூலம் வாழ்வில் சிறந்த முன்னேற்றம் காணலாம். கோமேதகக் கல் அதிர்ஷ்டம் அளிப்பதாக அமையும்.

 புனர்பூசம் 

நட்சத்திர நாயகன் குரு. 

ராசி நாயகன்-முதல் மூன்று பாதங்களுக்கு புதன்; 4-ம் பாதத்துக்கு சந்திரன்.

புனர்பூசம்-மிதுன ராசியில் பிறந்தவர்கள் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசமாட்டார்கள்.

புனர்பூசம் கடக ராசியில் பிறந்தவர்கள் நன்னடத்தை உள்ளவர்களாக இருப்பார்கள். ஆசாரம், அனுஷ்டானத்தில் ஈடுபாடு இருக்கும். புனிதமான காரியங்களில் ஈடுபடுவார்கள். புனித நதிகளில் நீராடும் பாக்கியம் கிடைக்கும். அறிவாற்றல் நிறைந்திருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கே, கோ, ஹ, ஹி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் சூட்டலாம்.
முதல் பாதம்: கே
2-ம் பாதம்: கோ 
3-ம் பாதம்: ஹ 
4-ம் பாதம்: ஹி

விநாயக வழிபாடு, வினைகள் தீர்க்கும். விருந்தினர் உபசரிப்பால் நலம் உண்டாகும். கனக புஷ்பராகக் கல் அணியலாம்.

 பூசம் 

நட்சத்திர அதிபதி சனி. ராசி அதிபதி சந்திரன்.

நேர்மையானவர்கள். நற்கல்வி அமையும். உயர் குணங்கள் இருக்கும். செல்வமும் புகழும் சேரும். எனினும் இந்த நட்சத்திரக்காரர்கள், சோம்பலைக் குறைத்துக்கொள்வது நல்லது. 

இவர்கள், வழக்கறிஞராகவோ, நியாயத்தை எடுத்துரைப்பவராகவோ இருப்பார்கள். பழைய பொருட்களை விரும்பிச் சேமித்து வைப்பார்கள். சொத்துகள் சேரும். நீர் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும்.  பழைய நூல்கள், கல்வெட்டுகள், மூதாதையரின் வாழ்க்கை முறை ஆகியவைக் குறித்து அறிவதில் நாட்டம் இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கு, ஹே, ஹோ, ட ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: கு
2-ம் பாதம்: ஹே 
3-ம் பாதம்: ஹோ 
4-ம் பாதம்: ட

நட்சத்திர அதி தேவதையான குரு பகவானை வழிபடுவது சிறப்பாகும். நீலக்கல் அணியலாம்.

 ஆயில்யம் 

நட்சத்திர நாயகன் புதன். ராசி நாயகன் சந்திரன்.

இந்த நட்சத்திரக் காரர்கள் மதி வளம் நிறைந்தவர்கள். படிப்பு நன்கு அமையும். வியாபார தந்திரம் அறிவார்கள். மன வலிமை உள்ளவர்கள். சந்தோஷமாக வாழ்வார்கள். அழகிய வீடு அமையும். வாகன யோகம் உண்டு. எழுத்தாற்றல் உண்டாகும்; இலக்கியவாதிகளாகத் திகழ்வர். 

இவர்களுக்கு கடல் சார் வாணிபம் லாபம் தரும். எதற்கும் உணர்ச்சிவசப்படுவார்கள். நண்பர்களால் நலம் பெறுவார்கள். தகவல்தொடர்பு இனங்களால் வருவாய் கிடைக்கும். திரைகடலோடி திரவியம் தேடும் பாக்கியம் கிடைக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு டி, டு, டே, டோ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது விசேஷம்.
முதல் பாதம்: டி
2-ம் பாதம்: டு
3-ம் பாதம்: டே 
4-ம் பாதம்: டோ

ஆதிசேஷனை வழிபடுவதால், நற்பலன்கள் கைகூடும். மரகதக் கல் (பச்சை) அணியலாம்.

 மகம் 

இது மகா நட்சத்திரம். இதன் நாயகன் கேது. ராசி நாயகன் சூரியன்.

இந்த நட்சத்திரக் காரர்கள் மூலிகை, மருத்துவம் பற்றிய ஞானம் உள்ளவர்கள். உயர்பதவி யோகம் வாய்க்கப்பெற்றவர்கள். ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். ஆத்ம ஞானம் கூடும். தியானம், யோகா, ஜோதிடம் ஆகியவற்றில் நாட்டம் இருக்கும். ஸித்தி பெறும் யோகம் உண்டு. 

இவர்களுக்கு மன உற்சாகம் நிறைந்திருக்கும். செல்வந்தர்கள் ஆவார்கள். கொள்கைப்பிடிப்பு இருக்கும். இயற்கையை நேசிப்பார்கள். காடு, மலைகளில் வாழப்பிடிக்கும். நியாயத்துக்காகப் பாடுபடுவார்கள். பாத்திரமறிந்து உதவுவார்கள்.
ம, மி, மு, மே ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: ம
2-ம் பாதம்: மி
3-ம் பாதம்: மு 
4-ம் பாதம்: மே

சுக்கிரனை வழிபடுவது நல்லது. நீலக்கல் அணிவதால் நலம் உண்டாகும்.

 பூரம் 

நட்சத்திர நாயகன் சுக்கிரன். ராசி நாயகன் சூரியன்.

சுக்கிரனும் சூரியனும் ஒருவருக்கொருவர் பகைவர் ஆவார்கள். ஆகவே, வாழ்வில்  எதிர்ப்புகள் இருக்கும். எனினும் சமாளிப்பார்கள். கலைகளில் ஈடுபாடு உண்டாகும். இனிமையான பேச்சு அமையும். தர்மக் காரியங்களில் நாட்டம் உண்டாகும். உயர் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். வியாபாரம் லாபம் தரும். அழகான தோற்றம் அமையும். லாகிரி வஸ்துகளைப் பயன்படுத்துவார்கள். தன்னையும் தன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வார்கள். வாழ்க்கைத் துணைவரால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் சங்கடங்கள் சூழும்.

இந்த நட்சத்திரக் காரர்களுக்கு மோ, ட, டி, டு ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது நல்லது.
முதல் பாதம்: மோ
2-ம் பாதம்: ட
3-ம் பாதம்: டி 
4-ம் பாதம்: டு

நட்சத்திர அதிதேவதையான அன்னை பார்வதி தேவியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். வைரக்கல் அணியலாம்.

 உத்திரம் 

நட்சத்திர நாயகன் சூரியன். உத்திரம் 1-ம் பாதத்துக்கு ராசி நாயகன் சூரியன்; 2, 3 மற்றும் 4-ம் பாதத்துக்கு நாயகன் புதன்.

சிம்ம ராசியில் பிறந்த உத்திரம் 1-ம் பாத நட்சத்திரக்காரர்களுக்கு உயர் பதவி யோகம் கிடைக்கும். அரசாங்கத்தாரால் நன்மைகளும் ஏற்படும். நிர்வாகத் திறமை உண்டாகும். தந்தையால் நலம் ஏற்படும். சட்டென்று கோபம் வந்துவிடும். எனினும் அது நியாயமானதாகவே இருக்கும்.கன்னி ராசியில் பிறந்த உத்திர நட்சத்திரக்காரர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். வியாபார யுக்தி தெரியவரும். பிறந்த ஊரிலும் வெளியூரிலும் புகழ்பெறுவார்கள். பொதுப் பணியாளர்களாக இருப்பார்கள். உத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, செல்வ வளம் நிறைந்திருக்கும்.

டே, டோ, ப, பி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது நல்லது.
முதல் பாதம்: டே
2-ம் பாதம்: டோ    
3-ம் பாதம்: ப 
4-ம் பாதம்: பி

சூரியனை வழிபடுவது நல்லது. மாணிக்கம் அணியலாம்.

 அஸ்தம் 

நட்சத்திர நாயகன் சந்திரன்.  ராசி நாயகன் புதன்.

படிப்பு நன்கு அமையும். சிந்தனை திறன் கூடும். சிறந்த எழுத்தாளர்கள் ஆவார்கள். வியாபார நுணுக்கம் மிகுந்திருக்கும். வயதானாலும் இளமையாகக் காட்சி அளிப்பார்கள். வாழ்க்கையின் பிற்பகுதியில் செல்வந்தர் ஆவார்கள். ஊக்கமுடனும் ஆர்வமுடனும் உழைப்பார்கள். நன்றி மறக்க மாட்டார்கள். சிறந்தக் கல்வியாளராகத் திகழ்வார்கள். பிறருக்கு ஆலோசனைகள் சொல்வார்கள். மத்தியஸ்தர்களாக இருப்பார்கள். இவர்களுக்குத் தரகு மூலம் வருவாய் கிடைக்கும். பணம் திரட்டுவதில் அதிக ஆர்வம் இருக்கும்.

பு, ஷ, நா, டா ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பு.
முதல் பாதம்: பு
2-ம் பாதம்: ஷ
3-ம் பாதம்: நா 
4-ம் பாதம்: டா

நட்சத்திர அதிதேவதையான சாஸ்தாவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெறலாம். 

வெண் முத்து அணியலாம்.

 சித்திரை 

நட்சத்திர நாயகன் செவ்வாய். சித்திரை 1, 2 பாதங்களுக்கு ராசி அதிபதி புதன். சித்திரை 3, 4 பாதங்களுக்கு ராசி அதிபதி சுக்கிரன்.

கன்னி ராசிக்காரர்கள் யோசித்துச் செலவு செய்வார்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பவர்கள். எனவே, கஞ்சர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.

துலா ராசிக் காரர்களுக்கு நல்ல நண்பர்கள் அமைவார்கள். எந்த விஷயத்துக்காகவும் மற்றவர்களைச் சார்ந்து இருக்க மாட்டார்கள்; சுய உழைப்பால் முன்னேறுவார்கள். பயணங்களில் அதீத ஆர்வம் இருக்கும். அழகிய ஆடை - அணிமணிகள் அணிவதில் ஈடுபாடு உண்டாகும். தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்றவற்றால் தொழிலில் லாபம் கிடைக்கும்.

பே, போ, ர, ரி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பு.
முதல் பாதம்: பே
2-ம் பாதம்: போ
3-ம் பாதம்: ர 
4-ம் பாதம்: ரி

நட்சத்திர அதிதேவதையான துவஷ்டாவை வழிபடுவது நல்லது. செம்பவழம் அணிவது விசேஷம்.

 சுவாதி 

நட்சத்திர நாயகன் ராகு.  ராசி நாயகன் சுக்கிரன்.

இந்த நட்சத்திரக் காரர்கள், பிறரிடம் நன்கு பழகுவார்கள். தர்ம குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். பயணம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வெளி மாநிலம், வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் திரட்டும் யோகம் உண்டாகும். கலைஞானம் உண்டாகும். புதியவற்றைக் கண்டுபிடிப்பார்கள். 

இவர்கள், பிற மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத் திகழ்வார்கள். பெற்றோருக்கு உதவி புரிவார்கள். கலை நுணுக்கமுள்ள நூதனமானப் பொருட்களை விரும்பி வாங்குவார்கள். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். ஏராளமான பணம் சேரும்.

ரு, ரே, ரோ, தா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்து அமைவது சிறப்பு.
முதல் பாதம்: ரு
2-ம் பாதம்: ரே
3-ம் பாதம்: ரோ 
4-ம் பாதம்: தா

நட்சத்திர அதிதேவதையான வாயு பகவானை வழிபடுவது நல்லது. கோமேதகக் கல் அணியலாம்.

 விசாகம் 

நட்சத்திர நாயகன் குரு.  விசாகம் 1, 2, 3 ஆகிய பாதங்களுக்கு ராசி அதிபதி சுக்கிரன் ஆவார். விசாகம் 4-ம் பாதத்துக்கு ராசி அதிபதி செவ்வாய் ஆவார்.

துலா ராசிக் காரர்களுக்கு எதிரிகள் இருப்பார்கள். வீண் அலைச்சல் ஏற்படும். ஏற்றம் - இறக்கம் இரண்டுமே வாழ்வில் சமமாக இருக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ரசிகர்களாக இருப்பார்கள்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பேச்சாற்றல் நிறைந்திருக்கும். பலருக்கு ஆலோசனை சொல்லும் தகுதி உண்டாகும். நன்மக்கட்பேறும் மக்களால் நன்மையும் ஏற்படும். அதிர்ஷ்டசாலி. மந்திரச் சித்தி உண்டாகும். நல்ல குடும்பம் அமையும்.
தி, து, தே, தோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்து அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: தி
2-ம் பாதம்: து
3-ம் பாதம்: தே 
4-ம் பாதம்: தோ

நட்சத்திர அதிதேவதையான சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது. புஷ்பராகக் கல் அதிர்ஷ்டமானது.

 அனுஷம் 

நட்சத்திர நாயகன் சனி.  ராசி நாயகன் செவ்வாய்.

இந்த நட்சத்திரக் காரர்கள் பொறுமையாக, யோசித்துச் செயல்படுவார்கள். தெய்வப்பணிகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும். உயர்ந்தவர்களால் பாராட்டப்படுவார்கள். வெளிநாட்டில் வாழும் யோகமும் வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் திரட்டும் யோகமும் உண்டாகும். பயணம் செய்வதில் விருப்பம் அதிகம் இருக்கும். பெற்றோருக்கு நன்றியுடன் நடந்துகொள்வார்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபடும் யோகம் உண்டாகும். மகான்கள் தரிசனம் கிடைக்கும். சிலருக்கு மந்திர ஸித்தி ஏற்பட வாய்ப்பு உண்டு. பலருக்கும் நல்ல ஆலோசனைகளை வழங்குவார்கள்.

ந, நி, நு, நே ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது விசேஷம்.
முதல் பாதம்: ந
2-ம் பாதம்: நி
3-ம் பாதம்: நு 
4-ம் பாதம்: நே

நட்சத்திர அதிதேவதையான மகா லட்சுமியை வழிபடுவது நல்லது. நீலக்கல் அணிவது சிறப்பு.

 கேட்டை 

நட்சத்திர நாயகன் புதன்.  ராசி நாயகன் செவ்வாய்.

செவ்வாய்க்கு, புதன் பகைவர் ஆவார். இதனால் எதிர்ப்புகள், தடைகள், குறுக்கீடுகள் இருக்கும். கோபம் அதிகம் வரும். கோபத்தைக் குறைத்துக் கொள்ள தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபடுவது நல்லது. 

இவர்களுக்கு பொருளாதார நிலை சீராக இராது. ஜல சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படலாம். எழுத்தாற்றல் உண்டாகும். ஏஜென்ஸி மூலம் பணம் கிடைக்கும். படிப்பில் சிறு தடை ஏற்பட்டு பின்னர் தொடரும். பொருள் திரட்டுவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். என்றாலும் விசேஷமான பண வரவுக்கு இடமிராது.

தோ, ய, யி, யு ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமையும்படி பார்த்துக் கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: தோ
2-ம் பாதம்: ய
3-ம் பாதம்: யி 
4-ம் பாதம்: யு
நட்சத்திர அதிதேவதையான இந்திரனை வழிபடுவதால், நல்ல பலன்கள் கிடைக்கும். மரகதக்கல் (பச்சை) அணியலாம்.

 மூலம் 

நட்சத்திர நாயகன் கேது. ராசி நாயகன் குரு.

இவர்கள் உடல் பலம் மிகுந்தவர்கள். மன பலமும் கூடும். பிறருக்கு உதவுவார்கள். முன்கோபம் உள்ளவர்கள். ஆன்மிகம், அறநிலையம், ஜோதிடம் ஆகியவற்றில் ஆர்வம் உண்டாகும். 

குருவும் கேதுவும் ஆன்மிகக் கிரகங்கள் என்பதாலும், குருவின் ராசியில் சந்திரன் இருப்பதாலும் தெய்வப் பணிகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகும். உடற்பயிற்சியில் நாட்டம் கூடும். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் திரட்டும் யோகம் பலருக்கு அமையும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவும், அரசுப் பணியாளராகும் வாய்ப்பும் உண்டு.

எ, யோ, ப, பி என்ற எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்து அமைவது விசேஷமாகும்.
முதல் பாதம்: எ
2-ம் பாதம்: யோ
3-ம் பாதம்: ப 
4-ம் பாதம்: பி

ருத்திரனையும், பிரஜாபதியையும் வழிபடுவது நல்லது. வைடூரியக் கல் அணியலாம்.

 பூராடம் 

நட்சத்திர நாயகன் சுக்கிரன்.  ராசி நாயகன் குரு.

தோற்றப்பொலிவு இருக்கும். அழகு அம்சங்களில் ஈடுபாடு உண்டாகும். தாயிடமும் மனைவியிடமும் பாசம் அதிகம் இருக்கும். உண்மையையே அதிகம் பேசுவார்கள். பயணத்தில் நாட்டம் இருக்கும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். எதிரிகள் இருப்பார்கள். கலைத்துறைகளில் ஈடுபாடு உண்டாகும். பேச்சில் இனிமையும் திறமையும் உண்டு. ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். வாகன யோகம் உண்டாகும். எல்லோரிடமும் அன்புடன் பழகுவார்கள். தெய்வக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பால் பயன் பெறுவார்கள்.

பு, த, ப, ட என்ற எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்து அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: பு
2-ம் பாதம்: த
3-ம் பாதம்: ப 
4-ம் பாதம்: ட

நட்சத்திர அதிதேவதையான வருணனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வசந்தம் உண்டாகும். வைரக்கல் அணியலாம்.

 உத்திராடம் 

நட்சத்திர நாயகன் சூரியன். ராசி நாயகன் உத்திராடம் 1-ம் பாதத்துக்கு குரு. 2, 3, 4 ஆகிய பாதங்களுக்கு சனி அதிபதி ஆவார்.

தனுசு ராசியில் பிறந்த உத்திராட நட்சத்திரக்காரர்கள் தர்மக் குணம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். உயர் பதவி யோகம் உண்டாகும். ஆத்ம ஞானம் கூடும். தொலைதூரப் பயணத்தால் அனுகூலம் உண்டு.

மகர ராசியில் பிறந்த உத்திராட நட்சத்திரக்காரர்கள், வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவார்கள். பெரியோர்களிடமே வாக்குவாதம் செய்யும் அளவுக்கு தைரியம் உண்டு. பதவியில் சறுக்கல் ஏற்படலாம். 

இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, பே, போ, ஜ, ஜி  ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: பே
2-ம் பாதம்: போ
3-ம் பாதம்: ஜ 
4-ம் பாதம்: ஜி

விநாயகரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம். மாணிக்கக் கல் அணியலாம்.

 திருவோணம் 

நட்சத்திர நாயகன் சந்திரன். ராசி நாயகன் சனி. இந்த இரண்டு கிரகங்களின் குணங்களும் இவர்களிடம் தென்படும்.

அறிவாற்றல் கூடும். புகழோடு வாழ்வார்கள். ஒழுக்கம் இருக்கும். ஆண்கள் பெண்களாலும், பெண்கள் ஆண்களாலும் விரும்பப்படுவார்கள். இல்லற வாழ்க்கை இனிக்கும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கூட்டாளிகள் மூலம் அனுகூலம் ஏற்படும். பயணிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்த சிலருக்கு ஜாதக பலமும் இருக்குமானால் வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் திரட்டும் யோகம் உண்டாகும்.  திருமாலின் அருள் கிடைக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜு, ஜே, ஜோ, சு ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: ஜு
2-ம் பாதம்: ஜே
3-ம் பாதம்: ஜோ 
4-ம் பாதம்: சு

மகாவிஷ்ணுவை வழிபட்டால், நன்மைகள் பெருகும். வெண்முத்து அணியலாம்.

 அவிட்டம் 

நட்சத்திர நாயகன் செவ்வாய். ராசி நாயகன் சனி.

இந்த நட்சத்திர அன்பர்கள், எதற்கும் அஞ்சமாட்டார்கள். பெருந்தன்மை கொண்டவர். கலைகளில் ஆர்வம் இருக்கும். மகர ராசிக்காரர்களுக்கு தலை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். மதிப்பு சற்று குறையும். மருத்துவச் செலவுகள் கூடும்.  சொத்துகள் சேரும். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்த கும்ப ராசிக்காரர்களுக்கு, தொழில் ரீதியாக நல்ல பெயர் கிடைக்கும். இவர்கள், கடும் முயற்சியால் வெற்றி பெறுவார்கள். சிலருக்கு, மண வாழ்க்கை பாதிக்க வாய்ப்பு உண்டு; சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும்.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு க, கி, கு, கே ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் சூட்டலாம்.

முதல் பாதம்: க
2-வது பாதம்: கி
3-வது பாதம்: கு 
4-வது பாதம்: கே
இவர்கள், தங்களது நட்சத்திர அதிதேவதையான வசுக்களை வழிபடுவது நல்லது. செம்பவழக் கல்லை அணியலாம்.

 சதயம் 

நட்சத்திர நாயகன் ராகு. ராசி நாயகன் சனி.

ராகு, சனியைப் போல் பலன் கொடுப்பார் என்பார்கள். சனி வீட்டில் உள்ள ராகுவின் நட்சத்திரம் என்பதால் படிப்பு நன்கு வரும். 

ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டாகும். துணிச்சல் உள்ளவர்கள். வாதம்புரியும் திறமை உண்டாகும். 

அரசாங்கத்தின் பாராட்டுகள், பரிசுகள் ஆகியவற்றைப் பெறுவார்கள். புதுமையை அதிகம் விரும்புவார்கள். ராகு பலம் ஜாதகத்தில் கூடியிருக்குமானால், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். சிறந்த வழக்கறிஞராக முடியும். கணிதத்தில் அதிக நாட்டம் இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கோ, ஸ, ஸி, ஸு ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பு.
முதல் பாதம்: கோ
2-வது பாதம்: ஸ
3-வது பாதம்: ஸி 
4-வது பாதம்: ஸு

நட்சத்திர அதிதேவதையான யமதர்மனை வழிபடுவதால், நலம் உண்டாகும். இந்த நட்சத்திரக்காரர்கள், கோமேதகம் அணியலாம்.

 பூரட்டாதி 

நட்சத்திர நாயகன் குரு.  ராசி நாயகன் முதல் மூன்று பாதங்களுக்கு சனி. 4-ம் பாதத்துக்கு குரு.

கும்ப ராசிக் காரர்களுக்குப் பேச்சில் திறமைக் கூடும். வாக்குப் பலிதமும் உண்டாகும். குடும்பத்தாரால் அனுகூலம் ஏற்படும். ஏராளமான பணமும் பொருளும் சேரும். மருத்துவத் துறையில் ஈடுபாடு உண்டாகும். நல்ல எண்ணங்கள் இருக்கும்.
மீன ராசிக்காரர்களுக்கு புத்திசாலித்தனம் நிறைந்திருக்கும். வாழ்வின் பின்பகுதியில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தர்மகாரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.

பூரட்டாதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஸே, ஸோ, த, தி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது விசேஷம்
முதல் பாதம்: ஸே
2-வது பாதம்: ஸோ
3-வது பாதம்: த 
4-வது பாதம்: தி

குபேரனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். புஷ்பராகக் கல் அணியலாம்.

 உத்திரட்டாதி 

நட்சத்திர நாயகன் சனி.ராசி நாயகன் குரு.

தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும். வேதம் பயின்றவர்களுக்கு உதவுவார்கள். திறமைசாலிகளாக விளங்குவார்கள். படிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். சில நேரங்களில் பிறர் மனம் புண்படும்படி பேசிவிடுவார்கள். பிறகு அதை நினைத்து வருத்தப்படவும் செய்வார்கள். சனியின் நட்சத்திரம் இது என்பதால், எதிலும் அவசரப்படாமல் நிதானமாகவே யோசித்து ஈடுபடுவார்கள். வெளிமாநிலம், வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டு.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு து, ஸ்ரீ, தி, த ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: து
2-வது பாதம்: ஸ்ரீ
3-வது பாதம்: தி 
4-வது பாதம்: த

நட்சத்திர அதிதேவதையான காமதேனுவை வழிபடுவது நல்லது. பசுவுக்கும் கன்றுக்கும் உணவளிப்பது சிறப்பாகும். நீலக்கல் அணியலாம்.

 ரேவதி 

நட்சத்திர நாயகன் புதன். ராசி நாயகன் குரு.

இதில் பிறப்பவர்கள் மதிப்பும், அந்தஸ்தும், புகழும் நிரம்பப் பெற்றவர்களாகத் திகழ்வார்கள். எதையும் யோசித்து நிதானமாகச் செய்வார்கள். சிறந்த அறிவாற்றல் உண்டாகும். பிறருடைய சொத்தையும் பொருளையும் பாதுகாப்பார்கள். துணிச்சலானவர்கள். 

கடல் வாணிபம் மூலம் லாபம் பெறுவார்கள். ஜலப்பொருட்கள் மூலமும் ஆதாயம் கிடைக்கும். இவர்கள், வியாபார நுணுக்கம் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தே, தோ, ச, சி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவதால் விசேஷ பலன்கள் உண்டாகும்.
முதல் பாதம்: தே
2-வது பாதம்: தோ
3-வது பாதம்: ச 
4-வது பாதம்: சி

நட்சத்திர அதிதேவதையான சனி பகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வெற்றிகள் அதிகரிக்கும். இவர்கள், பச்சை மரகதக்கல் அணிவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும்.