Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞானபோதம் பகுதி-1



நூல்முகம்: இவ்வுலகம், முதலில் சில பக்கங்களும் முடிவில் சில பக்கங்களும் இல்லாத நிலையில் கிடைத்த ஒரு சுவையான புதினம் போன்றது.

இடைப்பகுதியில் உள்ள கதைப் போக்கினை வைத்தே அதன் தொடக்கம் இன்னதாக இருக்கலாம் என்றும் இப்படித்தான் இக்கதை முடியும் என்றும் உணர்ந்து சொல்லலாம் அல்லவா? அதுபோல, நமக்குக் கிடைத்துள்ள இவ்வுலகின் அமைப்பையும் இதன் தன்மையையும் கொண்டே, இவ்வுலகின் முதலும் முடிவும் இவ்வாறாம் எனவும், இது வந்த நோக்கம் இன்னது எனவும், இதனை ஆக்கியோன் இயல்பு இது எனவும், இதனால் பயன்கொள்ளும் நமது இயல்பு இது எனவும், இதனால் அடையத் தக்க முடிந்த பயன் இது எனவும் ஆராய்ந்து சொல்லுதல் கூடும்.

அவ்வாறு ஆய்ந்து உணர்ந்து சொல்லும் நூல்களே தத்துவ நூல்களாகும்.


சிவஞானபோத நூலின் சிறப்பு

இந்நாட்டில் தோன்றி வழங்கி வரும் தத்துவத்துறை நூல்களுள் தலைசிறந்த அறிவுநூலாக விளங்குவது சிவஞான போதம் ஆகும். இந்நூல் அளவிற் சிறியது; சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையது; அளக்கலாகா மலையையே தன்னுள் அடக்கிக் காட்டும் ஆடி போல அறிவு நூல்களின் பொருளனைத்தையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு நிற்பது; சித்தாந்த சைவத்தின் முப்பொருள் உண்மைகளை எடுத்து முறைப்படுத்தி வழங்குவது.

சிவஞான போத நூலுக்கு முன்னரே ஞானாமிர்தம் போன்ற சிறந்த சித்தாந்த நூல்கள் தோன்றியிருந்தனவாயினும், அவையெல்லாம் சித்தாந்தப் பொருளை முழுமையாக எடுத்துக் கொண்டு தத்துவ நூலுக்குரிய ஆய்வு முறையில் மேற்கோள் ஏதுக்களுடன் நூற்பா வடிவில் அமைத்துத் திட்ப நுட்பமுற விளக்கிச் செல்லும் போக்கினை உடையன அல்ல. அதனால் அம்முறையில் அமைந்த சிவஞான போதம் சித்தாந்த முதல் நூல் எனப் போற்றப் பெறுகின்றது. இந்நூலை முறையாக உணர்ந்தவர் சித்தாந்தத்தை முழுமையாக உணர்ந்தவராவார்.

நூல் ஆசிரியர்

இந்நூலை அருளிச் செய்த ஆசிரியர் மெய்கண்டார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் திருவெண்ணெய்நல்லூரில் அருளாசானாய் விளங்கியவர்.

மெய்கண்டார் என்பது அவருக்கு வழங்கும் சிறப்புப் பெயராகும். பொய்யைப் பொய் என்று கண்டு நீக்கி மெய்யைக் கண்ட காரணத்தால் அச்சிறப்புப் பெயரைப் பெற்றார். அவரது இயற் பெயர் சுவேதனப் பெருமாள் என்பது.

அவருக்கு மாணவராகத் திகழ்ந்து நூல் இயற்றியவர் இருவர். ஒருவர் துறையூர் அருள்நந்தி சிவனார். அவர் தம் ஆசிரியர் செய்தருளிய முதல் நூலுக்கு வழிநூலாகச் சிவஞான சித்தியார் என்னும் பெருநூலையும், இருபா இருபஃது என்னும் சிறுநூலையும் செய்தனர். மற்றவர் திருவதிகை மனவாசகம் கடந்தார் என்பவர். அவர் உண்மை விளக்கம் என்னும் நூலைச் செய்தார்.

இவ்விரு பெருமக்களும் தம் ஆசிரியரின் சிறப்பினைத் தம் நூலுள் இனிது விளங்க எடுத்துக் காட்டியுள்ளனர். மானிட உருவில் வந்த சிவம் என்றும், சிவஞானக் கதிரோன் என்றும், மெய் காட்டும் வித்தகர் என்றும் வியந்து போற்றியுள்ளனர்.

நூலின் பெயர்: ஆசிரியர் மெய்கண்டார் இந்நூலின் பெயர் இது என்று எங்கும் சுட்டவில்லை. அவரது மாணவராகிய அருள்நந்தி சிவம் தம் ஆசிரியப்பிரானாகிய மெய்கண்டாரையும் அவரது நூலையும் தம் நூலிற் குறிப்பிடுகிறார்; ஆயின் நூற்பெயரைக் கிளந்து கூறாமல் மெய்கண்டான் நூல் என்றே கூறிச் செல்கிறார்.

அருள் நந்தி சிவனாரின் மாணவருக்கு மாணவராய் வந்த உமாபதி சிவனார் சிவப்பிரகாசம் என்னும் சார்பு நூலைச் செய்தார். அவரே அந்நூலின் பாயிரத்தில் தெரித்த குரு முதல்வர் உயர் சிவஞானபோதம் செப்பினர் என இந்நூற் பெயரை எடுத்தோதினார். சிவஞான போதம் என்பது காரணப் பெயர். அப்பெயரில் சிவம், ஞானம், போதம் என்னும் மூன்று சொற்கள் உள்ளன. ஞானம் என்பது அறிவு. அறிவு மூன்று வகையாய் நிகழும். அவை ஐயம், திரிபு, உண்மை என்பன. ஒரு பொருளை இதுவோ அதுவோ என இரட்டுற அறிதல் ஐயமாய் அறிதலாகும். ஒன்றை மற்றொன்றாக மாறி அறிதல் திரிபாய் அறிதலாகும். இவ்விரு குற்றமும் இன்றி ஒரு பொருளை உள்ளவாறு அறிதலே உண்மையாய் அறிதலாகும். உண்மையறிவே ஞானம் எனப்படும்.

உலகிற்கு முதலாகிய கடவுளை முதற்பொருள் என்றும் மெய்ப்பொருள் என்றும் கூறுதல் பொதுப்படக் கூறும் வழக்கமாகும். சிவம் என்னும் தனிப்பெயரால் கூறுதலே சிறப்பு வழக்கமாகும். சிவமாகிய அம்முதற் பொருளை உள்ளவாறு உணரும் அறிவு சிவஞானம் எனப்படும். சிவத்தை உணரும் ஞானம் எனச் சுருங்கச் சொல்லலாம். போதம் என்பது போதித்தல். போதித்தலாவது, ஐயம் திரிபுகளை நீக்கி மாணவர்க்குத் தெளிவுண்டாகுமாறு உணர்த்துதல். எனவே சிவத்தை உணரும் ஞானத்தைப் பக்குவமுடைய மாணவர்க்கு ஐயந்திரிபின்றி உணர்த்துதலைக் கருதி எழுந்தது இந்நூல் என்பது இனிது விளங்கும்.

நூல் அமைந்துள்ள முறை

இந்நூல் பன்னிரண்டு நூற்பாக்களால் ஆனது. நூற்பாக்கள் மூன்றடி அல்லது நான்கடி உடையன. நூற்பாக்களில் உள்ள மொத்த அடிகள் நாற்பது.

நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் செய்த பாயிரம் உள்ளது. அதில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றும், அவையடக்கச் செய்யுள் ஒன்றுமாக இரண்டு செய்யுட்கள் உள்ளன.

நூற்பாக்களின் பொருள் பின் வருவோர்க்கு ஐயம், திரிபுகளுக்கு இடமின்றி விளங்குதற்பொருட்டு ஆசிரியரே ஒவ்வொரு நூற்பாவுக்கும் கருத்துரையும், சுருக்கமான பொழிப்புரையும் செய்துள்ளார். அப்பொழிப்புரை வார்த்திகம் எனப்படும். வார்த்திகப் பொழிப்புரை பின்வருமாறு அமைந்துள்ளது.

ஒவ்வொரு நூற்பாவையும் ஆசிரியர் அதன் பொருள் நிலையை வைத்துப் பல கூறுகளாக வகுத்துக் கொள்கிறார். அவ்வாறு வகுத்துக் கொள்ளும் கூறு அல்லது பகுதி, அதிகரணம் எனப்படும்.

ஒவ்வொரு கூறிலும் மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு என்னும் மூன்று உறுப்புகள் இடம்பெறும்.

மேற்கோள் என்பது நூற்பாவிலிருந்து பெறப்படும் கருத்தமைவு. ஏது என்பது அம்மேற்கோளை நிறுவுவதற்கு ஆசிரியர் உரைப்பது. எடுத்துக்காட்டு என்பது அவ்வேதுவை வலியுறுத்துதற்கு வருவது. இம்மூன்றனுள் மேற்கோளும் ஏதுவும் உரைநடையாய் அமைந்தவை. எடுத்துக்காட்டு செய்யுளாய் அமைந்தது

சைவ சித்தாந்தப் பொருள் நிலை

சைவ சமயத்தின் தத்துவக் கொள்கை, சைவ சித்தாந்தம் என வழங்கும். சித்தாந்தம் என்பதற்கு முடிந்த முடிபு என்பது பொருள். எனவே சைவ சமயம் இறை பற்றியும், உயிர் பற்றியும், உயிரைப் பிணித்துள்ள தளை பற்றியும் கண்டறிந்த, முற்ற முடிந்த மெய்ம்மைகளே சைவ சித்தாந்தம் ஆகும். இந்நூலைக் கற்கப் புகுமுன், சைவ சித்தாந்த அடிப்படையைத் தெரிந்து கொள்ளுதல் நல்லது. அவ்வடிப்படைப் பொருள் நிலையைப் பின்வருமாறு கூறலாம்.

உயிர்கள்: அறியும் தன்மை உடையது உயிர். உயிர்கள் எண்ணிறந்தனவாய் உள்ளன. அவை ஒரு காலத்தில் தோன்றியன அல்ல; இறைவனால் படைக்கப்பட்டனவும் அல்ல; இறைவன் என்று உண்டோ அன்றே அவையும் உள்ளன. தோற்றம் இல்லையாதலால் அவற்றிற்கு அழிவும் இல்லை. எனவே உயிர்கள் என்றும் உள்ளவையாகும்.

ஆணவம்:

அத்தகைய உயிர்களிடம் அவற்றை மறைத்து நிற்பதாகிய ஓர் அழுக்கு இயற்கையாகவே உள்ளது. அரிசியை உமி மூடி மறைத்திருப்பதைப் போன்றது இது. அரிசி உள்ள அன்றே உமியாகிய குற்றமும் அதனுடன் பொருந்தியிருப்பதைப் போல உயிர்கள் உள்ள அன்றே அவ்வழுக்கும் உடனாய் உள்ளது. அதனை ஆணவ மலம் என்ற பெயரால் குறிப்பர். மலம்- அழுக்கு.

உயிர்கள் முதற்கண் ஆணவ மலத்தோடு கூடியே இருந்தன. அது கேவல நிலை எனப்படும். அந்நிலையில் உயிர்கள் அறிவும் செயலும் இன்றித் தாயின் கருப்பையில் கிடக்கும் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப் போல முழு அறியாமையில் மூழ்கிக் கிடந்தன.

மாயை:

இவ்வாறு ஆணவ மலத்தால் மறைப்புண்டு அதனால் அறியாமை எய்தித் துன்புறும் உயிர்களின் நிலை கண்டு இரங்கிய இறைவன் அம்மலத்தை நீக்குவதற்குத் திருவுளம் கொள்கிறான். அதன் பொருட்டு அவ்வுயிர்களை உலக வாழ்விற் செலுத்துகிறான்; அவை தங்குவதற்கு உடம்பையும், அறிவதற்கு ஐம்பொறி முதலிய கருவிகளையும், இயங்குவதற்கு உலகத்தையும், நுகர்வதற்கு உலகப் பொருள்களையும் படைத்துக் கொடுக்கிறான்.

குடமாகிய காரியத்தைக் குயவன் களிமண்ணிலிருந்து செய்வதுபோல, உடம்பு முதலிய இக்காரியங்களை இறைவன் மாயை என்னும் மூலப்பொருளிலிருந்து உண்டாக்குகிறான். அம்மாயை என்னும் பொருளும் என்றும் உள்ளதேயாம்.

ஆணவ மலத்தோடு கூடியிருந்த உயிர்கள் இப்பொழுது மாயையோடும் கூடி நிற்கின்றன. இதுதான் பிறப்புநிலை, சகல நிலை என்று கூறப்படும்.

இந்நிலையில் உயிர்கள் உடம்பாலும், உடம்பில் அமைந்த கருவிகளாலும், வாழ்க்கைச் சூழலாலும் ஓரளவு அறியாமை நீங்கி அறிவு விளக்கம் பெற்று வருவதைக் காணலாம். எனவே இவ்வுலகம் அறிவை வளர்க்கும் பள்ளிக்கூடம் போல்வது எனலாம்.

கன்மம்: அறிவும் செயலும் இன்றிக் கிடந்த கேவல நிலையினின்றும் இறையருளால் சகல நிலைக்கு வந்த உயிர்கள் சிற்றறிவும் சிறு தொழிலும் உடையனவாய், தம் மனம் மொழி மெய்களினால் நல்லனவும் தீயனவும் ஆகிய செயல்களைச் செய்கின்றன. அவையே கன்மம் எனப் பெயர் பெறுகின்றன.

இறைவன் அவ்வவ்வுயிர்கள் செய்த கன்மத்திற்கு ஏற்ப அவற்றிற்குப் பிறப்புக்களையும் இன்ப துன்பங்களையும் அளிக்கின்றான்.

உயிர்கள் தாம் பெற்ற மாயையின் காரியமாகிய கருவிகளால் மாயையின் காரியங்களாகிய உலகப்பொருள்களை அறிந்தும் நுகர்ந்தும் அவற்றை மேலும் மேலும் பெற வேண்டும் என முயன்றும் வினைகளைச் செய்து உலக வாழ்வில் கட்டுண்டு நிற்கின்றன.

உயிர்களை உலகத்தோடு பிணித்து நிற்பவை மாயையும் கன்மமும், அவை வருவதற்கு மூலமாகிய ஆணவமும் ஆகும் அது பற்றியே அம்மூன்றும் கட்டு, தளை, பாசம் என்னும் சொற்களால் குறிக்கப்படுகின்றன. இச் சொற்கள் யாவும் ஒரு பொருள் உடையன.

ஒரு கட்டினை நீக்க இரு கட்டுகளை இடுதல்: முதற்கண் உயிர்கள் ஆணவம் என்னும் ஒரு கட்டுடன் இருந்தன. அக்கட்டிகனை நீக்குவதற்காக மாயை, கன்மம் என்னும் இரு கட்டுகளைச் சேர்க்கின்றான் இறைவன்.

அவிழ்த்தற்கு அரிய ஒரு கட்டினை அவிழ்ப்பதற்கு நடைமுறையில் நாம் கையாளும் வழி, அதனைக் காட்டிலும் இறுக்கமாக மற்றொரு கட்டினைப் போடுவது தான். அதனால் முதற்கட்டுத் தானே நெகிழ்ந்துவிடும் அல்லவா? அதுபோல இறைவன் ஆணவக் கட்டினை நெகிழ்விப்பதற்காகவே மாயை, கன்மங்களாகிய இரு கட்டுகளை இடுகின்றான் என அறியலாம்.

அழுக்கை அழுக்கால் நீக்குதல்:

ஆணவம் அழுக்கு ஆதலின் அதனை நீக்குவதற்கு மாயை கன்மங்களாகிய இரண்டு அழுக்குகளைச் சேர்க்கின்றான் என்றும் கூறலாம். ஆடையிலுள்ள அழுக்கைப் போக்குவதற்குச் சோப்புக்கட்டியை வைத்துத் தேய்க்கிறோம். அதுவும் அழுக்குத்தானே. அவ்வழுக்கு ஆடையிலுள்ள அழுக்கை நீக்க உதவுகிறது. அதுபோல, ஆணவமாகிய அழுக்கை நீக்குவதற்கு மாயை, கன்மங்களாகிய அழுக்குகள் உதவுகின்றன என அறியலாம். இவை மூன்றும் அழுக்காதல் பற்றி மும்மலங்கள் என வழங்கப்படுகின்றன.

பாசம், பசு, பதி:

ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் பாசம் (கட்டு) எனப் பார்த்தோம். இப் பாசத்திற் கட்டுண்டு நிற்கும் உயிர்கள் பசுக்கள் எனப்படும். பசு என்ற சொல்லுக்குக் கட்டப்பட்டது என்பது பொருள்; இவ்வாறு கட்டுண்ட உயிர்களைக் காக்கும் தலைவன் ஆதலின் இறைவன் பதி எனப்படுவான். பதி என்பதற்குக் காப்பவன் என்பது பொருள். பதி, பசு, பாசம் என்னும் இவையே சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள்களாகும். அவை என்றும் உள்ளன என்பதனை,

பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி

இருவகை இயல்புகள்

சைவ சித்தாந்தத்தில் பொருளுக்கு இரு வகையான இயல்புகள் சொல்லப்பெறும். அவை உண்மையியல்பு, பொதுவியல்பு என்பன. உண்மையியல்பு, சொரூப லக்கணம் எனப்படும். பொதுவியல்பு தடத்த லக்கணம் எனப்படும்.

ஒரு பொருளுக்கு இயற்கையில் உள்ள தன்மையே உண்மையியல்பு அல்லது சொரூப லக்கணம். ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சேர்க்கையால் உண்டாகும் தன்மை பொதுவியல்பு அல்லது தடத்த லக்கணம்.

நீர் குளிர்தல் இயல்பாய் உள்ளது. ஆதலால் குளிர்ச்சி நீருக்கு உண்மையியல்பு ஆகும். நீர் சுடுதல், தீயாகிய பிறிதொரு பொருளின் சேர்க்கையால் நிகழ்வது. ஆதலால் சூடு நீருக்குப் பொதுவியல்பு ஆகும்.

உண்மையியல்பு இயற்கையாதலின் அது பொருளை விட்டு எக்காலத்தும் நீங்குவதில்லை. பொதுவியல்பு ஒரு காரணம் பற்றி இடையில் வந்தது. ஆதலின் அக்காரணம் நீங்கியபோது அதுவும் நீங்குவதாகும்.

இவ்விரு வகை இயல்பும் முப்பொருள்களுக்கும் தனித்தனியே சொல்லப்பெறும்.

சிவஞான போதத்தில் பதியின் பொதுவியல்பை இரண்டாம் நூற்பாவும் ஐந்தாம் நூற்பாவும் கூறும்; அதன் உண்மையியல்பை ஆறாம் நூற்பா உணர்த்தும். பசுவாகிய உயிரின் பொதுவியல்பு நான்காம் நூற்பாவிலும், உண்மையியல்பு ஏழாம் நூற்பாவிலும் கூறப்படும். பாசமாகிய ஆணவம், மாயை, கன்மம் என்பவற்றின் இயல்புகளை நான்காம் நூற்பாவில் காணலாம்.

பொருள்களின் இயல்பை உணர்ந்தாலே அவற்றுள் நமக்கு உறவாவது எப்பொருள், பகையாய் இருப்பது எப்பொருள் என்பதைத் தெரிந்து கொள்ள இயலும்; பகையைப் பகையென்று தெரிந்து நீங்கி அதனால் வரும் துன்பத்தினின்றும் விடுபட்டு, உறவோடு கூடி இன்புறும் நிலை உண்டாகும்.

பெத்தம், முத்தி:

உயிருக்கு இறை உறவுப் பொருள்; தளை பகைப்பொருள். இறை இன்பப்பொருள்; தளை துன்பப் பொருள். தளையோடு கூடியிருப்பதே உயிருக்குக் கட்டுநிலை. இது பெத்த நிலை எனவும் வழங்கும். (கட்டு எனப் பொருள்படும் பந்தம் என்ற சொல்லே பெந்தம் என்றாகிப் பின் பெத்தம் எனத் திரிந்தது.) தளையினின்றும் விடுபட்டு இனிய உறவாகிய இறைவனைச் சார்ந்து இன்புறுதலே முத்தி நிலையாகும்.

சித்தாந்தப் பொருள்களைப் பெத்தம், முத்தி என்னும் இரு நிலைகளில் வைத்து விளங்க உணர்த்தும் விழுமிய நூல் சிவஞான போதம்.

இவ்வடிப்படைகளைக் கருத்திற் கொண்டு இனி நூலுள் புகுவோம்.

சிறப்புப் பாயிரம்

மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போல், ஈண்டிய
பெரும் பெயர்க் கடவுளின் கண்டு கண் ணிருள்தீர்ந்து
அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வு அற நந்தி முனிகணத்து அளித்த
உயர்சிவ ஞானபோதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணைச் சுவேதவனன்
பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த
தவர் அடி புனைந்த தலைமை யோனே.

இதன் பொருள்:

விரிந்த இடமாகிய உலகில் வந்து கவியும் பெரிய இருள் கெடும்படி காலையில் சூரியன் தோன்றுகிறது. அது தோன்றாவிடில் கண்ணொளி காணும் ஆற்றலைப் பெறமாட்டாது. அந்தச் சூரியனைப் போன்றது இந்தச் சிவஞான போத நூல்.

சூரியன் உதவியால் கண் உருவத்தை முதலில் பொதுவாகவும் பின் சிறப்பாகவும் காணுதல் போல, இந்நூலின் உதவியால் கடவுள் உயிர் முதலிய பொருள்களின் இயல்புகளை முன்னர் பொதுவாகவும் பின்னர் சிறப்பாகவும் உணர்தல் உண்டாகும்.

முன்னே திருக்கயிலையில் நந்தி பெருமான் சிவஞான போத நூலை முனிவர்களுக்கு உபதேசித்தருளினார். சீவான்மா, பரமான்மா ஆகிய இரண்டின் இயல்பையும் முதலில் பொதுவாக உணர்ந்து அதனால் அகவிருளாகிய ஆணவ மலம் தீர்ந்து, பின்னர் கடவுளது திருவருளால் அவ்விரண்டின் இயல்பையும் சிறப்பாக உணர்ந்து அதனால் மலவாசனை நீங்கிச் சிவானுபவம் பெறுதற் பொருட்டாக அவர்களுக்கு அந்நூலை நந்தி அளித்தருளினார்.

ஏனைய நூல்களுக்கெல்லாம் மேற்பட்டு விளங்குவதாகிய சிவஞான போதம் என்னும் அவ்வடமொழி நூலைத் தமிழில் உரைத்தவர் திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியிருந்த அருட்குரவர்; சுவேதவனப் பெருமாள் என்னும் இயற்பெயரை உடையவர்; பொய்ப் பொருளை யெல்லாம் கண்டு கழித்து மெய்ப் பொருளைத் தெளிந்த காரணத்தால் மெய்கண்டார் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவர். பிறவியாகிய பகையினை வென்ற அரிய தவத்தோர்களும் தன்னை வந்து வணங்கும் படியான தலைமையினை உடையவர்.

பதவுரை

மலர்தலை உலகின் - விரிந்த இடத்தையுடைய உலகத்தில் பரந்துள்ள
மாயிருள் - பெரிய இருள்
துமிய - கெடும்படியாக
பலர் புகழ் ஞாயிறு - பல சமயத்தவராலும் புகழப்படுகின்ற சூரியன்
படரின் அல்லது - தோன்றினாலன்றி
காண்டல் செல்லாக் கண் போல் - உருத்தைக் காணமாட்டாத கண் போல

(இவ்வாறு, சூரியன் வந்தாலன்றிக் காணமாட்டாத கண்போல எனக் கண்ணை உவமையாக வைத்துக் கூறியிருந்தாலும், கண் உருவத்தைக் காணும்படி தோன்றிய சூரியனைப் போல எனச் சூரியனையே இங்கு உவமையாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.)

அருந்துயர்க் குரம்பையின் - பொறுத்தற்கரிய துன்பத்தைச் செய்யும், குடில் போன்றதாகிய உடம்பு முதலியவற்றை ஏதுவாகக் கொண்டு ஆன்மா நாடி - சீவான்மா ஆகிய உயிர், பரமான்மா ஆகிய கடவுள் என்னும் இரண்டன் இயல்பையும் அனுமான அளவையால் ஆராய்ந்து பொதுவாக உணர்ந்து (அவ்வாறு இரு ஆன்மாக்களின் பொதுவியல்பை உணர்ந்ததன் பயனாக) கண் இருள் தீர்ந்து - கருதி உணரத்தக்கதாக உள்ள, அகவிருளாகிய ஆணவ மலத்தினின்றும் நீங்கி (பின்னர்) ஈண்டிய பெரும்பெயர்க் கடவுளின் - எல்லா நூற்பொருள்களையும் தம்மிடத்து அடக்கிக் கொண்டுள்ள, பெரும் பெயர் எனப்படும் மகா வாக்கியங்களால் உணர்த்தப்படும் கடவுளின் திருவருளால் கண்டு - மேற்கூறிய சீவான்மா, பரமான்மாக்களின் சிறப்பியல்பை அனுபவமாகக் கண்டுணர்ந்து மயர்வு அற - (ஆணவ மலம் முன்னரே நீங்கிய போதிலும் அதன் வாசனை நீங்காமையால் அம் மலவாசனை செய்கின்ற) மயக்கமானது நீங்கிச் சிவானுபவம் பெறுதற் பொருட்டு நந்தி முனிகணத்து அளித்த - திருநந்தி தேவர் சனற்குமாரர் முதலிய முனிவர் கூட்டத்திற்குச் சிவஞானபோத நூலை அளித்தருளினார். அங்ஙனம் அளித்தருளிய உயர்சிவஞான போதம் - ஏனைய நூல்களுக்கெல்லாம் மேற்பட்டு விளங்குவதாகிய அவ் வடமொழிச் சிவஞான போத நூலை
உரைத்தோன் - தமிழில் மொழிபெயர்த்துக் கூறி வார்த்திகம் என்னும் பொழிப்புரை செய்தவர்
பெண்ணைப் புனல்சூழ் - பெண்ணையாற்று நீரால் சூழப் பெற்ற வெண்ணை - திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியிருந்தவரும் சுவேதவனன் - சுவேதவனப் பெருமாள் என்னும் இயற்பெயரை உடையவரும் பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன் - பொய்ப் பொருளையெல்லாம் கண்டு கழித்து மெய்ப்பொருளைத் தெளிந்த காரணத்தால் பெற்ற மெய்கண்ட தேவன் என்னும் சிறப்புப் பெயரை உடையவரும் பவம் - பிறவியாகிய
நனிவன் பகை - மிக வலிய பகையினை
கடந்த - வென்ற
தவர் - அரிய தவத்தோர்களும்
அடி புனைந்த - தனது திருவடிகளைத் தங்கள் தலைமேற் புனைந்து கொள்ளும்படியான
தலைமையோன் - தலைமைத் தன்மை உடையவரும் ஆகிய அருட்குரவர் ஆவார்.

விளக்கம்:

இச் சிறப்புப் பாயிரச் செய்யுள், நூலுக்கு முன்னுரையாக அமைந்துள்ளது, நூலைப் பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளைத் தருகிறது.

இப்பாயிரத்தைச் செய்தவர் இன்னார் என்பது தெரியவில்லை. இது பிற்காலத்துப் பெரியார் ஒருவர் செய்ததாக இருத்தல் வேண்டும்.

நூலுக்கு ஞாயிறு உவமை:

பரந்த புற இருளைக் காலை வானில் எழுகின்ற ஞாயிறு போக்குகிறது. அதுபோல் ஞானநூல் தன்னைக் கற்றுணரும் மாணாக்கரது பெரிய அகவிருளைப் போக்க வல்லதாகும். அது பற்றியே ஞான நூலை ஞாயிற்றோடு ஒப்பிட்டுக் கூறுவாராயினர் பெரியோர். சேக்கிழார் தமது நூலைப் பற்றிக் குறிப்பிடும்போது அது கதிரவனைப் போல அகவிருளைப் போக்குவது என்று கூறியுள்ளார். அவ்வாறே இச்சிறப்புப் பாயிரச் செய்யுள் சிவஞான போத நூலை ஞாயிற்றோடு ஒப்பிட்டுக் கூறுகிறது. இவ்வொப்புமையில் உள்ள பொருத்தத்தைக் காண்போம்.

உலகத்து இருள் விளக்கு முதலிய பிற ஒளிகளால் முற்றிலும் நீங்காது; ஞாயிற்றினாலேயே முற்ற நீங்கும். அதுபோல அகவிருகளாகிய அஞ்ஞானம் பிற சமய நூல்களால் முற்றிலும் நீங்காது; சிவஞான போதம் ஆகிய இந்நூலினாலேயே முற்ற நீங்குவதாகும்.

சூரியர் பன்னிருவர் என்பது புராண மரபு. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு சூரியனாகப் பன்னிரண்டு மாதங்களிலும் தோன்றுகின்ற சூரியர் பன்னிருவர் என்று புராணம் கூறும். அதன்படி, ஞாயிறு ஒன்றாயினும் அதனைப் பன்னிரண்டாக வைத்துக் கூறுதல் போல, சிவஞானபோத நூலும் ஒன்றாயினும் அதன் உட்பிரிவாகிய நூற்பாக்கள் பன்னிரண்டாயின.

இருவகைப் பயன்:

மேலும் ஒரு பொருத்தத்தைச் சுட்டலாம். ஞாயிற்றின் வரவினால் கண்ணிற்கு இரண்டு வகையான பயன்கள் கிடைக்கின்றன. ஒன்று கண்க்ணிடத்தில் உள்ள இருள் நீங்குவது. மற்றொன்று கண் பொருள்களைக் காண முடிவது. அதுபோலச் சிவஞானபோத நூலினாலே ஆன்மா இரண்டு பயன்களைப் பெறுகிறது. முதலாவதாக, இந்நூலைக் கேட்பதனால் ஆன்மாவிடத்தில் உள்ள அகவிருளாகிய ஆணவ மலம் நீங்குகிறது. இரண்டாவதாக, இறைவன் உயிர் உலகம் ஆகிய முப்பொருள்களின் இயல்பையும் ஆன்மா உணர்ந்து கொள்ள முடிகிறது.

இருவகைக் காட்சி:

ஞாயிற்றின் தோற்றத்தால் கண் பொருள்களைக் காணவல்லதாகிறது என்று கூறினோம். கண் பொருளைக் காண்பதாகிய காட்சியில் இரு வகை உண்டு. அவை பொதுக்காட்சி, சிறப்புக் காட்சி என்பன. சூரியவொளியின் உதவியால் கண்பொருளைக் காணும்போது முதலில் இஃது ஓர் உருவம் என்பது மட்டுமே தெரியும். இவ்வாறு பொதுவாக உணர்தல் பொதுக்காட்சி எனப்படும். இங்ஙனம் முதலில் பொதுவாகக் கண்ட பொருளைப் பின்னர் மனம், புத்தி முதலிய உட்கருவிகள் ஆராய்ந்து இஃது இன்னது என்று சிறப்பாக அறுதியிட்டு உணரும். சிறப்பாக உணரும்போதுதான் பொருளின் பெயர், தொழில் முதலிய வேறுபாடுகள் தெரிய வரும். முன்னர்க் கூறிய பொதுக் காட்சியில் இவ்வேறுபாடுகள் தெரிதல் இல்லை. இவ்வேறுபாடுகள் தெரியும்படியாகப் பொருளைச் சிறப்பாகக் காணும் காட்சி சிறப்புக் காட்சி எனப்படும். இவ்விருவகைக் காட்சிக்கும் ஏதுவாக இருப்பது ஞாயிறு என்பதை மறத்தலாகாது.

இருவகை உணர்வு:

இனி, சிவஞான போத நூலைக் கேட்பதனால் ஆன்மா ஆணவ மலமாகிய அகவிருள் நீங்கி முப்பொருள் உணர்ந்து கொள்ள இயலும் என முன்னே கூறினோம். பொருளியல்பை உள்ளவாறு உணர்ந்து கொள்ளுதலே ஞானம் எனப்படும். அந்த ஞானத்தில் இரு நிலைகள் உண்டு. முதலில் பொருள்களது இயல்பை ஆராய்ச்சி அளவிலே பொதுவாக உணர்தல் உண்டாகும். பின்னர் அதனை அனுபவத்தில் உண்மையாக உணர்தல் வேண்டும். எனவே இந்த நூலைக் கேட்கும்பொழுது முதலில் ஆராய்ச்சியுணர்வும், அதன்பின் அனுபவ உணர்வும் தோன்றும் என்பது விளங்கும்.

ஞாயிற்றின் உதவியால் கண்ணுக்கு முதலில் பொதுக்காட்சியும் பின்னர் சிறப்புக் காட்சியும் நிகழ்தல் போல, இந்நூலைக் கேட்பதனால் முதலில் பொதுவாக உணர்தலாகிய ஆராய்ச்சியும் பின்னர் சிறப்பாக உணர்தலாகிய அனுபவமும் நிகழும் என இம்முறையில் ஞாயிற்றிற்கும் சிவஞான போத நூலுக்கும் உள்ள பொருத்தத்தை உணர்ந்து கொள்ளலாம்..

உயர் சிவஞான போதம்:

ஞானநூல்களைப் பயில்வதற்குப் பலர் முன்வருவதில்லை. அவர்கள் உலகியலிலே தோய்ந்திருப்பதுதான் அதற்குக் காரணம். உலகியல் நாட்டம் உள்ள வரையில் ஞானப் பொருளை அறிந்து கொள்வதில் விருப்பம் தோன்றாது. உலகியலில் அடிபட்டு வரவர அதன்மீது சிறிது சிறிதாக உவர்ப்புத் தோன்றும். பொருள், பொருள் என்று அலைந்து வாழ்நாளைப் போக்கிவிட்டோமே என்ற வருத்தம் ஏற்படும். சமய வாழ்வில் தானாக ஈடுபாடு உண்டாகும். அந்நிலையில் உள்ளோர் தீக்கை பெற்றுச் சமய நூல்களை முறையாக ஓதி வருவர்; கோயில் வழிபாட்டினை மேற்கொள்வர்; அடியவர்களுக்குப் பணி செய்வதில் ஆர்வம் காட்டுவர். இப்படி நிலையைக் கடந்தவர் ஆன்மார்த்த பூசையில் உண்மையான அன்போடு மெய்ம் மறந்து ஈடுபடுவர்; தியானத்தில் ஒன்றி நிற்பர். அந்நிலையில் அவர்கள் மனத்தில் மண்டிக் கிடந்த ஆசை, சினம், பொறாமை முதலிய மாசுகள் அகலும்; மனம் தூய்மை பெறும்.

இவ்வாறு சமய வொழுக்கத்தில் நின்று மனப் பக்குவம் எய்திய தகுதியாளரே சிவஞானபோதநூலைக் கேட்டற்கு உரியர். அவர்களுக்கே சிவஞானபோத நூற்பொருள் உள்ளவாறு விளங்கும். ஏனையோர் அதனைப் பயிலுதல் கூடாது என்பது கருத்தன்று. அவர்கள் பயின்றாலும் அவர்களுக்குச் சொற்பொருள் விளங்குமேயன்றி அனுபவப் பொருள் சிறிதும் கைவராது. உயர்ந்த பக்குவம் உடையவர்க்கே இந்நூல் உணர்த்தத் தக்கது என்பது கருதியே உயர் சிவஞான போதம் என இந்நூல் உயர் என்ற அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டது.

நூலாசிரியர் பெருமை: வெண்காடு என்ற தலம் வடமொழியில் சுவேத வனம் எனப்படும். அத்தலத்தில் உள்ள இறைவனுக்குச் சுவேத வனப் பெருமாள் என்பது பெயர்.

மெய்கண்டாரது பெற்றோர் திருவெண்காட்டிற்குச் சென்று பெருமானை முறையாக வழிபட்டு அதன் பயனாக அவரை மகவாகப் பெற்று மகிழ்ந்தனர். அந்த அருந்தவ மகவுக்கு வெண்காட்டுப் பெருமானது திருப்பெயரையே சூட்டி சுவேத வனப் பெருமாள் என்று அழைத்தனர்.

அரும் பெறல் மைந்தராய்த் தோன்றிய சுவேத வனப் பெருமாளை அவரது அம்மான் தமது ஊராகிய திருவெண்ணெய் நல்லூருக்குத் தாயுடன் அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். பிறந்தது பெண்ணாகடம் என்றாலும், திருவெண்ணெய் நல்லூரே அவர் வாழ் இடம் ஆயிற்று. அது பற்றியே அவரை வெண்ணைச் சுவேதவனன் என்று இப்பாயிரம் குறிப்பிடுகிறது.

அவர் பொய்ச் சமயங்களின் பொருளையெல்லாம் கண்டு கழித்து, மெய்ச் சமயப் பொருளைத் தெளிந்து இறையனுபவம் கைகூடி நின்றவர் என்பதை, மெய்கண்ட தேவர் என்னும் சிறப்புப் பெயர் உணர்த்துகிறது.

தவமுதிர்ச்சியுடையோர் அவரது திருவடிகள் தங்கள் தலைமேற் பொருந்தும்படி இறைஞ்சும் தலைமைப்பாடு உடையவர் என்பதை இறுதியடி உணர்த்தி நிற்கிறது.

மங்கல வாழ்த்து

ஆசிரியர் மெய்கண்டார் தமது வழிபடு கடவுளாகிய விநாயகப் பெருமானை- பொல்லாப் பிள்ளையார் என்னும் திருப்பெயரோடு திருவெண்ணெய்நல்லூரில் உள்ளவரை- வணங்கி நூலைத் தொடங்குகிறார்.

இடையூறு நீக்கித் தம் அடியவர் கருத்தினை இனிது முற்றுவிக்கும் விநாயகக் கடவுளை முதற்கண் வணங்கியே நூலைத் தொடங்குதலாகிய மரபினைப் போற்றி ஆசிரியர் செய்த மங்கல வாழ்த்து இது.

கல்லால் நிழல் மலை
வில்லால் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே.

இதன் பொருள்:

கல்லால மரத்தின் நிழலில் யோக வடிவம் கொண்டு எழுந்தருளியிருந்து, ஞான நூற் பொருளில் ஏற்பட்ட ஐயம் திரிபுகளைப் போக்கித் தெளிவித்தவர் சிவபெருமான். அவர் மேலும் மேலும் அருள் புரிதற் பொருட்டுப் பொல்லாய் பிள்ளையாரது திருவடிகள் ஆகிய தாமரை மலர்களை நல்லார் தம் தலைமேல் சூடிக்கொள்வர்.

பதவுரை: கல் ஆல் நிழல் - கல்லால மரத்தின் நிழலில் எழுந்தருளியிருந்து.
மலைவு இல்லார் - முன்பொரு சமயத்தில் சைவாகமங்களின் பொருள் குறித்து ஐயுற்று வினாவிய நந்தி பெருமானுக்கும் மற்றொரு சமயத்தில் மெய்ப்பொருள் குறித்து வினாவிய முனிவர் நால்வருக்கும் ஐயந் திரிபுகள் இல்லையாகும் படி செய்து தெளிவினைத் தந்தவர் சிவபெருமான்.
அருளிய - அம்முதல் ஆசிரியராகிய இறைவர் தமக்கு அருள் புரிதற் பொருட்டு
நல்லார்- மெய்யன்பர்கள்
பொல்லார்இணைமலர் - பொல்லாப் பிள்ளையாரது திருவடிகளாகிய இரு மலர்களை
புனைவர் - தங்கள் தலைமேல் சூடிக் கொள்வர்.

விளக்கம்:

கல்லால் நிழற் கடவுள்:

யோக வடிவம் கொண்ட இறைவர் தட்சிணாமூர்த்தி எனப்படுவார். தமிழில் அவரைத் தொன்முகக் கடவுள் என்பர். தெற்கு நோக்கியிருத்தல் பற்றி இப்பெயர்கள் அமைந்தன. இறைவர் அவ்வடிவங் கொள்ளுதல், பக்குவம் உடையவர்களுக்கு மெய்யுணர்வினை அளித்து வீடு அருளுதற் பொருட்டாகும்.

இறைவர் கல்லாலின் நிழலில் அமர்ந்து முனிவர் நால்வருக்கு ஏற்பட்ட மலைவுகளைப் போக்கி உண்மைப் பொருளை உணர்த்தியருளினார் என்று திருவிளையாடற்புராணம் முதலிய நூல்கள் கூறும். சிவாகமப் பொருள் பற்றி ஐயமுற்று வினவிய நந்தி பெருமானுக்கு அவ்வையத்தை நீக்கி உண்மையை அறிவுறுத்தினார் என்று சைவாகமங்கள் கூறும்.

சிவபெருமான் யோகியாய் இருந்து, வீடு காதலிப்போர்க்கு அதனை அருளும் திறம் உடையவர் என்று கூறிய இதனால், இந்நூல் வீட்டு நெறியை உணர்த்துவது என்பதைப் பெற வைத்தார் ஆசிரியர்.

மலை வில்லார்:

மலைவில்லார் என்பதை மலைவு இல்லார் எனப்பிரித்தல் வேண்டும். ஐயம் திரிபுகளாகிய மலைவுகளை இல்லையாகச் செய்பவர் என்பது பொருள்.

அத்தொடரை அவ்வாறு பிரிக்காமல் மலை வில்லார் என்றே கொண்டு, மேரு மலையை வில்லாக வளைத்து அசுரரை அழித்து உலகினர்க்கு வாழ்வளித்தவர் என்றும் பொருள் கொள்ளலாம். அவ்வாறு பொருள் கொண்டால், கல்லால் நிழலில் வீற்றிருந்து வீட்டின்பத்தையும். மலையை வில்லாக வளைத்துப் பகையை வென்று உலக இன்பத்தையும் அளிப்பவராகிய அவரே முழுதற்கடவுள் என்பது அமைகின்றது.

அருளிய - இருபொருள்:

அருளிய என்பது இருபொருள் படும்படி நிற்கின்றது. ஒரு பொருள் அருள வேண்டி என்பது. அப்பொருள் கொண்டால் கல்லால் நிழலில் அமர்ந்த இறைவர் தமக்கு அருள வேண்டி நல்லார் பிள்ளையாரை வழிபடுவர் என்னும் பொருள் கிடைக்கும். மற்றொரு பொருள் தந்தருளிய என்பது. அதன்படி கல்லால் நிழலில் அமர்ந்த இறைவர் தந்தருளிய பிள்ளையாரை வழிபடுவர் என்னும் பொருள் அமைவதாகும். பிள்ளையாரை இறைவர் அளித்தருளினார் என்பதனை தனதடி வழிபடும் அவர் இடர் கடி கணபதி வர அருளினன் என ஞானசம்பந்தர் குறித்தருளினார் இவ்விரு பொருள்களும் பொருத்தம் உடையனவே யாம்.

பொல்லார்:

திருவெண்ணெய்நல்லூரில் கோயில் கொண்டுள்ள விநாயகக் கடவுளுக்குப் பொல்லாப் பிள்ளையார் என்பது திருப்பெயர். உளி கொண்டு கல்லிற் செதுக்குதல் பொள்ளுதல் எனப்படும். பொளிதல் என்றும் வரும். அவ்வாறு உளியாற் பொளிந்து செய்யப்படாது தாமே உருக்கொண்டு தோன்றியவர் ஆதலின் அப்பெருமான் பொள்ளார் எனப்பட்டார். அப்பெயரே பின்னாளில் பொல்லார் என மருவியது. ஆசிரியர் மெய்கண்டார் அவரை வழிபட்டு மெய்யுணர்வில் முழுமை நிலையை எய்தினார் என்பர்.

நல்லார்:

கல்லால் நிழற் கடவுளது அருளை வேண்டி, அவர் தந்தருளிய பிள்ளையாரை வழிபடுவோரை நல்லார் என்று குறிப்பிட்டார் ஆசிரியர். நல்லவராவார், ஞானாசிரியர் உணர்த்திய உபதேசப் பொருளைக் கேட்டுப் பின் சிந்தித்துத் தெளிவு பெற்றவர். பக்குவ முதிர்ச்சியுடையவர். அத்தகையவரே வீடு பேறாகிய பயனை விரும்பி அதற்காக இறைவரது அருளை வேண்டி நிற்போராவார்.

திருவடிகளைச் சூடுதல் என்பதன் பொருள்:

கடவுளது திருவடிகளைத் தலைமேற் சூடுதல் என்பதன் பொருளைப் பார்ப்போம்.

இறைவன் யாவற்றையும் ஒருங்கே இடைவிடாது அறிந்து நிற்கும் பேரறிவு உடையவன். அவனது அறிவாற்றல் ஞானசத்தி எனப்படும். அவன் தன் நினைப்பு அளவில் எல்லாம் செய்யவல்ல பேராற்றல் உடையவன். அவனது செயலாற்றல் கிரியாசத்தி எனப்படும்.

இறைவனைப் போல உயிர்களும் அறிவும் செயலும் உடையன. ஆயின் அவை சிற்றறிவாயும் சிறு தொழிலாயும் உள்ளன. மேலும் உயிர்களின் அறிவாகிய ஞானசத்தியும், செயலாகிய கிரியாசத்தியும் தாமே செயற்படுவன அல்ல. இறைவனது ஞானசத்தி உணர்த்தவே, உயிர்களது ஞானசத்தி அறியும்; இறைவனது கிரியாசத்தி செலுத்தவே உயிர்களது கிரியாசத்தி செயற்படும்.

இதனால் உயிர்களது ஞானசத்தியும் கிரியாசத்தியும், இறைவனது ஞானசத்தி கிரியாசத்திகளின் வழிப்பட்டே நிற்றற்கு உரியன என்பது விளங்கும். சுருங்கக் கூறின், இறைவன் இன்றி உயிர்கள் அமையா என்பதே உண்மை.

இவ்வுண்மையை அறியாமையினால் உலக மக்கள் தாமே அறிந்தும் செய்தும் வருவதாக எண்ணித் திரிவர். ஆயின் உண்மையை உணர்ந்த பெரியோர் இறைவனையே தமது வாழ் முதலாகக் கருதுவர். தம் வழியில் நில்லாது அவனது அருள் வழியில் நிற்பர்.

இறைவனுக்கு இரண்டு திருவடிகளாகச் சொல்லப் பெறுவன அவனது ஞானசத்தியும் கிரியா சத்தியுமேயாகும். அத்திருவடிகளைச் சூடிக்கொள்ளுதல்- தலைமேற் பொருந்த வைத்தல் என்பது, அந்த ஞானசத்தி, கிரியாசத்திகளில் தனது ஞானசத்தியையும் கிரியா சத்தியையும் அடங்கச் செய்தலாகும். அஃதாவது, தன் முனைப்பெற்று, தன் செயலாற்று அருள் வழியே அடங்கி நிற்றலாகும். மேலே கூறிய நல்லார்க்கு அன்றி ஏனையோர்க்கு இந்நிலை கைகூடாது என்பதைச் சொல்ல வேண்டா.

நல்லார் பிள்ளையாரை வழிபடுவர் என்றதனால் யாமும் அவ்வாறே வழிபடுவோம் என்பது கருத்தாயிற்று.

ஞானசம்பந்தர் வழியில்:

கல்லால் நிழலில் அமர்ந்த கடவுளையன்றிப் பிறிதொரு தெய்வத்தை நல்லார் வழிபடார் என்னும் பொருள்பட,

கல்லால் நீழல்
அல்லாத் தேவை
நல்லார் பேணார்

என்றருளினார் ஞானசம்பந்தப் பிள்ளையார். அவர் எதிர்மறை வகையால் உணர்த்திய அக் கருத்தையே நம் ஆசிரியர் இங்கு உடன்பாட்டு வகையில் வைத்து, கல்லால் நிழற் கடவுளின் அருளை நாடி நல்லார் வழிபடுவர் என்றார். இக்கடவுள் வாழ்த்தின் சொல்லும் பொருளும் ஞானசம்பந்தர் வாக்கினை அடியொற்றி அமைந்தன எனலாம்.

அவையடக்கம்

மங்கல வாழ்த்தினையடுத்து அவையடக்கம் கூறுகின்றார் ஆசிரியர். அச்செய்யுள் வருமாறு:

வெண்பா:

தம்மை உணர்ந்து தமைஉடைய தன் உணர்வார்
எம்மை உடைமை எமை இகழார்;- தம்மை
உணரார் உணரார்: உடங்குஇயைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்.

இதன் பொருள்:

முதலில் தமது இயல்பினை உணர்ந்து, பின் தம்மை உடையனவாகிய தலைவனது- இறைவனது இயல்பைத் தெளிய உணர்ந்தவர் உயர்ந்தோர். அவர் எம்மை ஆளாக உடையவர். ஆதலால் அவர் எமது குறையை நோக்கி இகழாது இந்நூலினை ஏற்றுக் கொள்வர்.

இனி, தம் இயல்பையே உணரமாட்டாதவர் தலைவனையும் உணரமாட்டாதவரேயாவர். அவர்கள் தம்முள் ஒன்றுபடுதலின்றி ஒருவரோடொருவர் மாறுபட்டு மறுத்துப் போவர். அவர்கள் எம்மையும் எமது நூலையும் இகழ்தல் இயல்பே. ஆதலால் அவர்கள் கூறும் இகழ் உரையை யாம் ஒரு பொருளாக மதியோம்.

பதவுரை;

தம்மை உணர்ந்து - முதலில் ஆன்மாவாகிய தமது இயல்பை உணர்ந்து
தமை உடைய தன் உணர்வார் - பின், தம்மை அடிமையாக உடைய இறைவனது இயல்பை உள்ளவாறு உணர்ந்த சித்தாந்த சைவர்களாகிய பெருமக்கள்
எம்மைஉடைமை - எம்மைத் தமக்கு அடிமையாக உடையவர்கள் ஆகையால்
எமை இகழார் - எமது குறை நோக்கி எம்மை இகழ்தல் செய்யார். (எம்மால் செய்யப்பட்ட இந்நூலையும் இகழாது ஏற்றுக் கொள்வர். )
தம்மை உணரார் - இனி, தமது இயல்பையே உணர மாட்டாதவர் ஏனைச் சமய நூலார்.
உணரார் - அவர்கள் தலைவனாகிய இறைவனையும் உணர மாட்டாதவரே யாவர்.
உடங்கு இயைந்து தம்மின் புணராமை - அவர்கள் ஓரிடத்தில் கூட்டமாகக் கூடித் தம் முள் ஒற்றுமையின்றி ஒருவரையொருவர் மறுத்து ஆரவாரம் செய்வர். (ஆதலால் அவர்கள் எம்மையும் எமது நூலையும் இகழ்தல் இயல்பு.)
புறன் கேளாம் - அவர்கள் எம்மை இகழ்ந்து கூறும் மொழிகளை யாம் ஒரு பொருளாகக் கொள்வோர்.

விளக்கம்:

தாம் என்னும் சொல் உயிர்களையும், தான் என்னும் சொல் இறைவனையும் குறிப்பன. அவை முதலடியில் தம் எனவும், தன் எனவும் நின்றன.

பதியாகிய இறைவன் யாவற்றையும் உடையவன் ஆவான். அறிவற்ற பாசங்கள் அவனுக்கு உடைமையாய் உள்ளன. அறிவுள்ள பசுக்கள்- உயிர்கள் அவனுக்கு அடிமையாய் உள்ளன. பாசம் மூன்றனுள் மாயையும் கன்மமுமே இறைவனுக்கு உடைமை எனப்படும். இருள் போன்றதாகிய ஆணவமலம் இறைவனுக்கு மறுதலைப் பொருள் - பகைப் பொருள் ஆதலால் அதனை உடைமை என்று கூறுதல் இல்லை; அதனோடு இறைவனுக்கு இயைபு உண்டு என்றும் கொள்ளுதல் இல்லை.

தன்னை உணர்தல்:

ஞான நெறியில் உயிர் தன்னை உணர்தல் என்பது அடிப்படையானது.

1. தான் ஒரு பொருள் உண்டு என உணர்தல்

2. தான் அறிவுடைய குணிப்பொருள் என்று உணர்தல்

3. தான் அறிவிக்க அறியும் அறிவாய் இருத்தலை உணர்தல்

4. அறிவிக்கும் இறைவனையின்றித் தனக்கு அறிவும் செயலும் இல்லை என்று உணர்தல்.

5. தான் அவனது வழி நிற்றற்கு உரியவன் என்பதை உணர்தல் ஆகிய இவையெல்லாம் தன்னை உணர்தலாகும்.

தலைவனை உணர்தல்:

இனி, தனக்கு மேலாகத் தன்னை உடையவனாகிய தலைவன் ஒருவன் உளன் எனவும், அவன் பசு பாசங்களுக்கு அப்பாற்பட்டவன் எனவும், சிறிதும் திரிபு எய்தாதவன் எனவும், அவன் எல்லா அறிவும் எல்லா வல்லமையும் உடையவன் எனவும், பாசக் கடற்குள்ளே வீழ்ந்த உயிர்களைக் கைகொடுத்து ஏற்றுகின்ற கரையிலாத மாக்கருணை உடையன் எனவும், பந்தம் அறுத்து ஆளாக்கிப் பணி கொள்ள வல்லவன் எனவும் உணர்தலே தலைவனை உணர்தலாகும்.

நல்லாசிரியரை அடைந்து அவர் சொல்லும் அருளுரையைக் கேட்டல் வாயிலாகவே தன்னையும் தலைவனையும் உணரும் நிலை வாய்ப்பதாகும்.

பெருமக்கள் நிலை:

தன்னையும், தலைவனையும் உள்ளவாறு உணர்தலே மெய்யுணர்வு என்றும், ஞானம் என்றும் கூறப்படும். இம் மெய்யுணர்வு முதலில் பொதுவாகவும், பின்னர் ஐயமாகவும், முடிவில் தெளிவாகவும் நிகழும். தெளிவுணர்வே அனுபவம் என்பது. தெளிவுணர்வு பெற்றவர் இறைவனை அனுபவித்து உணர்ந்தவர். அவர் தம்வசம் இழந்து இறைவன் வசமாய் நிற்பர். அவரை இறைவன் தானாகச் செய்வான். ஆதலால் அவர் சிவமே யாவர். அத்தகைய பெருமக்களையே தம்மையுணர்நது தமையுடைய தன் உணர்வார் எனக் குறித்தருளினார் ஆசிரியர்.

பணிமொழி:

அப்பெருமக்கள் சிவனுக்கு அடிமை; யாம் அவர்க்கு அடிமை என்று கூறினார் ஆசிரியர். அடியேம் ஆகிய எம்மிடத்தில் அப்பெரியோர் அருள் உடையராதல் இயல்பே யாதலால் அவ்வருள் காரணமாக இகழ்தலைச் செய்யார் என்றார். எனவே எம்மிடத்துள்ள குற்றங்களை நோக்காது, குணங்களையே நோக்கி எமது நூலைத் திருத்தி ஏற்றுக் கொள்வர் என்பது கருத்து. இவ்வாறு ஆசிரியர் கூறுதலின் அவையடக்கம் ஆயிற்று.

நம் மெய்கண்டதேவர் மேற்குறித்த பெருமக்களின் நிலையை எய்தியவரேயாவர். ஆயினும், தன்முனைப்பற்ற தன்மையோடு விளங்கினாராதலின், தாழ்வெனும் தன்மையோடு இவ்வாறு பணிமொழி கூறுகின்றார்.

பிற சமயத்தார் நிலை:

முன்னிரண்டடிகளில் சித்தாந்த சைவத்தில் நின்ற தலைமக்களின் உயர்வைப் புலப்படுத்திய ஆசிரியர் பின்னிரண்டடிகளில் ஏனைச் சமய வாதிகளின் நிலையை வெளிப்படுத்துகின்றார். தம்மை உணரார் என அவர்களைச் சுட்டுகின்றார். தம்மியல்பை முற்ற உணராமல் ஒரு பகுதியே உணர்ந்தவர் என்பது பொருளாகும். முதலடியில் தம்மை உணர்ந்து என்றதனால் சித்தாந்த சைவரே தம்மியல்பை முற்ற உணர்ந்தவர் என்பதைப் பெற வைத்தார். அவரல்லாத பிற சமயத்தாரையெல்லாம் தம்மை உணரார் என்ற சிறிய தொடரில் அடக்கி வைத்தார்.

கேளாம் புறன்:

ஆன்மாவாகிய தம்முடைய இயல்பைத் தெளிய உணராமையே உலகில் பல்வேறு சமயங்கள் தோன்றுவதற்குக் காரணமாகும். பிற சமயத்தார் முற்ற உணராமல் ஒரு பகுதியே உணர்ந்து அதனையே முழுவுண்மையாகக் கருதித் தம்முள் ஒருவரையொருவர் மறுத்தப் பூசலிடுவர்.

அவர்கள் நிலை, யானை கண்ட குருடர் நிலை போன்றதாகும். கண்ணுடையவன் ஒருவன் குருடர் நிலை கண்டு இரங்கி அவரிடம் சென்று உண்மையை எடுத்துக் கூறித் தெளிவிக்க முயன்றால் அவர்கள் அதனை ஏற்காமல் இகழவே செய்வர். அதுபோல யாம் பிற சமயத்தார்க்கு இந்நூலால் உண்மை இது என்று உணர்த்தினால் அவர்கள் அதனைக் கொள்ளாமல் இகழ்ந்து போவர். அதனை யாமும் பொருளாகக் கொள்ளோம் என்பாராய், கேளாம் புறன் என்றார் ஆசிரியர்.

ஞானசம்பந்தர் வழியில்:

இக்கூற்று, ஞானசம்பந்தர் வாக்கினைப் பின்பற்றி அமைந்தது எனலாம். சம்பந்தர் பிற சமயத்தாரைக் குறிப்பிட்டு, அவர்தம் புறனுரை யாதொன்றும் கொள்ளேன் என்றாற் போலப் பலவிடத்தும் கூறிச் செல்லுதல் காணத்தக்கது.

முதல் நூற்பா

முதற் கடவுள் ஒருவர் உண்டு என்பதை நிறுவுவது முதல் நூற்பாவின் குறிக்கோள். காணப்பட்ட உலகைக் கொண்டு காணப்படாத கடவுளின் இருப்பை உணர்த்துகிறார் ஆசிரியர்.

நூற்பாவின் முற்பகுதி, இவ்வுலகைத் தோற்றுவித்து நடத்தும் முதற் கடவுள் உண்டு என்பதைப் பொது வகையால் நிறுவும். பிற்பகுதி, அம்முதற் கடவுள் முற்றழிப்பைச் செய்பவனாய் உள்ள சிவபெருமானேயன்றிப் பிறர் அல்லர் எனச் சிறப்பு வகையால் நிலை நாட்டும்.

இனி, நூற்பாவை நோக்குவோம்.

நூற்பா

அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

இந்த நூற்பா எதனைக் கூற எழுந்தது என்பதனைக் கருத்துரையுட் கூறுகின்றார் ஆசிரியர்.

ஆசிரியர் கூறும் கருத்துரை

என்பது சூத்திரம். என் நூதலிற்றோ எனின், சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நூதலிற்று.

கருத்துரையின் பொருள்

பிரமன், மால், உருத்திரன் ஆகிய மூவரையும் மும்மூர்த்திகள் என்பர். அவர்கள் சிவபெருமானது ஆணை வழி நின்று, முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை ஓர் எல்லையளவில் செய்வர்.

அவர்களுள் உருத்திரன் தான் செய்த புண்ணிய மிகுதியால் சிவனுக்குரிய உருவத்தையும், தொழிலையும், உருத்திரன் என்னும் பெயரையும் பெற்று, அவனது சங்காரத் தொழிலை ஒரு பகுதியளவில் மட்டும் செய்வான். அவன் செய்வது ஏகதேச சங்காரம் எனப்படும். (ஏகதேசம்- பகுதி)

அம்மூவரும் ஒவ்வொரு தொழிலுக்கே உரியவராக, சிவபெருமான் ஒருவனே முத்தொழிலுக்கும் முதல்வனாய் நின்று இறுதிக் காலத்தில் எல்லாவற்றையும் எஞ்சாமல் ஒடுக்குகின்ற முற்றழிப்பைச் செய்வான். முற்றழிப்பு மகாசங்காரம் எனப்படும். அதனைச் செய்பவன் மகா சங்கார காரணன் எனப்படுகின்றான்.

மகாசங்காரம் ஆகிய முற்றழிப்பைச் செய்யும் முதல்வனையே முதற் கடவுளாக உடையது இவ்வுலகம் என்பது மேலே உள்ள கருத்துரையின் பொருளாகும்.

நூற்பாவின் பொருள்:

இவ்வுலகம் ஒரு தொகுதிப் பொருள். ஒருவன், ஒருத்தி, ஒன்று என்பவற்றின் கூட்டமே உலகம். எனவே, அது பல பகுதிகள் கூடி அமைந்தது என்பது விளங்கும். மேலும், நம் அறிவினால் சுட்டி அறியப்படுவதாகவும் உள்ளது.

இவ்வாறு பகதிகளை உடையதாயும், சுட்டியறியப்படுவதாயும் இருத்தலால், இவ்வுலகம் தோன்றுதல், நிற்றல், அழிதல் ஆகிய முத் தொழில்களை உடையது என்பது விளங்கும்.

அறிவற்றதாகிய உலகம் தானே தோன்றி நின்று அழியும் என்றல் பொருந்தாது. அதனை தோற்றுவித்து நடத்துவதற்கு ஒரு பேரறிவாளன் இருத்தல் வேண்டும்.

இவ்வுலகம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு ஒடுங்கியிருந்தது. முன்பு அதனை அவ்வாறு ஒடுங்குமாறு செய்தவனே மீள அதனைத் தோற்றுவிப்பவனும் ஆவான்.

எனவே ஒடுக்கத்தைச் செய்பவனாகிய அழித்தற் கடவுளே உலகிற் முதற் கடவுள் ஆவான் என்றும், ஏனையோர் முதல்வர் அல்லர் என்றும் ஆராய்ச்சியில் வல்லோர் கூறுவர்.

பதவுரை:

அவன் அவள் அது எனும் அவை - அவன், அவள் என்று சுட்டிக் குறிப்பிடும் உயர்திணைப் பொருள்களையும், அது என்று சுட்டிக் குறிப்பிடும் அஃறிணைப் பொருள்களையும் தனது பகுதிகளாக உடைய இவ்வுலகமாகிய தொகுதி
மூவினைமையின் - தேதான்றி, நின்று, அழியும் தன்மை உடையதாய் இருத்தலின்
தோற்றிய திதியே - அஃது உள்பொருளேயாகும்; மேலும் ஒருவன் தோற்றுவித்ததாகும்.
ஒடுங்கிய உளதாம் - இவ் வுலகம், தான் தோன்றுவதற்கு முன்பு அவனிடத்தில் ஒடுங்கி நின்றது. ஒடுங்குதற்கு இடமாய் நின்ற அவனிடத்தினின்றும் அது மீளத் தோன்றுவதாகும்.
மலத்தால் - தன்னிடம் ஒடுங்கி நின்ற இவ்வுலகத்தை அவன் தோற்றுவிப்பது எதன் பொருட்டு எனில், உயிர்களைப் பற்றியுள்ள ஆணவ மலமாகிய மாசினை நீக்குதற் பொருட்டேயாகும்.
அந்தம் ஆதி - முற்றழிப்புக் காலத்தில் இவ்வுலகத்தையெல்லாம் தன்னிடம் ஒடுக்கி முடிவை உண்டாக்குகின்ற அழித்தற் கடவுளே முதல்வன்; ஏனையோர் முதல்வர் அல்லர். என்மனார் புலவர் - இவ்வாறு கூறுவர் அளவை நூல் உணர்ந்த அறிஞர்.

சிறப்புரை:

அவை என்பதற்குத் தொகுதி என்பது பொருள். மக்கள் பலர் திரண்டு கூடியுள்ள இடத்தை அவை என்றும், அவைக்களம் என்றும் குறிப்பிடும் வழக்கினை இங்கு நினைவு கூரலாம்.

தோற்றிய என்பதற்குத் தோற்றுவித்த என்பது பொருளாகும். தோன்றிய எனத் தன்வினையாகக் கூறாமல், தோற்றிய எனப் பிற வினையாகக் கூறியதனால், இவ்வுலகம் தானே தோன்றாது என்பதும், தன்னைச் செயற்படுத்தும் முதல்வன் ஒருவனை உடையது என்பதும் உணர்த்தப்பட்டது.

திதி என்னும் வடசொல்லுக்கு நேரான பொருள் நிலை என்பது. இவ்விடத்தில் அச்சொல் அப்பொருளைத் தராமல், உள்ளது என்னும் பொருளைத் தந்தது.

ஒடுங்கி என்பது பெயர். ஒடுங்குதற்கு இடமாய் உள்ளவன் என்று அது பொருள்படும்.

ஒடுங்கி உளதாம் என்ற தொடரை ஒடுங்கியினின்று உளதாம் என அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்.

மலத்து என்பதனை மலத்தால் என வைத்துக் கொள்ள வேண்டும்.

நோயால் மருத்துவரை அணுகினான் என்றால், நோய் நீங்குதல் காரணமாக மருத்துவரை அணுகினான் என்று பொருள் கொள்கிறோம். வறுமையால் வள்ளலை நாடினான் என்றால், வறுமை நீங்குதல் காரணமாக வள்ளலை நாடினான் எனப் பொருள் கொள்கிறோம். அவ்வாறே இங்கும் மலத்தால் உளதாம் என்பதற்கு மலம் நீங்குதல் காரணாக உலகம் உளதாயிற்று எனப் பொருள் கொள்ள வேண்டும்.

அந்தம் என்றால் முடிவு; ஆதி என்றால் முதல் என நாம் அறிவோம். ஆனால் அச்சொற்கள் இங்குக் குறிக்கும் பொருள் அவையல்ல. அந்தத்தைச் செய்பவனை அழித்தற் கடவுளை அந்தம் என்றார் ஆசிரியர்; முதலாய் நிற்பவனை- முதற் கடவுளை ஆதி என்றார். எனவே அந்தம் ஆதி என்ற தொடரால், முற்றழிப்பைச் செய்பவனே முதற் கடவுள் என்றாராயிற்று.

அந்தமே ஆதி என ஏகாரம் சேர்த்துக் கூறுதல் ஆசிரியர் கருத்து. ஆயினும், அந்த ஏகாரத்தைத் தொகுத்து அந்தம் ஆதி என்றார்.

கூறுகள்:

இந்நூற்பாவின் பொருளை மூன்று கூறுகளாக வகுத்துக் கொண்டு விளக்குகிறார் ஆசிரியர். அக் கூறுகளும் அவற்றில் அமைந்த பொருள்களும் வருமாறு:

கூறு பொருள்

முதற்கூறு 1. உலகம் முத்தொழில் உடையது
இரண்டாம் கூறு 2. உலகம் உள் பொருள்
3. உலகம் செய்வோனை உடையது
4. அச் செய்வோன் அழித்தற்கடவுளே
மூன்றாம் கூறு 5. அழித்தற் கடவுளே உலகிற் முதல்
இனி, இவற்றைத் தனித்தனியாய் எடுத்து விளக்குவோம்.

முதற் கூறு

உலகம் முத்தொழிலை உடையது

உலகம் நிற்றலை உடையது என்பது மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதற்குத் தோற்றமும் அழிவும் உண்டு என்பதை எவ்வாறு துணிவது? உலகின் தோற்றமும் இறுதியும் நம் காட்சிக்குப் புலனாவதில்லை என்பதனாலயே அவையில்லை எனலாமா? நில்லா வுலகம் எனவும், மன்னாவுலகம் எனவும் அதன் நிலையாமையை உயர்ந்தோர் உணர்த்தியுள்ளனர்.

அனுமானம்:

காட்சிக்கு வராதவற்றை உண்டு எனத் துணிவதற்கு ஒரு வழியுண்டு. அதுவே கருதி உணர்தல் என்னும் வழி. வடமொழியில் அதனை அனுமானம் என்பர்.

கருதலாவது, நேரே காணப்படாமல் மறைந்திருக்கின்ற பொருளை அதனை விட்டு நீங்காத மற்றொரு பொருளை ஏதுவாகக் கொண்டு துணிவதாகும். நெடுந்தொலைவில் உள்ள மலை மேல் புகை தோன்றுதலைக் கொண்டு அங்கே நெருப்பு உண்டு என்று துணிகிறோம் . நெருப்பை நேரே காணவில்லையாயினும் அதனை விட்டு நீங்காத புகையை ஏதுவாகக் கொண்டு அங்கே நெருப்பு இருப்பதை உய்த்து அறிகிறோம்.

இவ்வாறு கருதி உணர்வதாகிய அனுமானத்தைப் பயன்படுத்தி உலகிற்குத் தோற்றமும் அழிவும் உண்டு என்பதை நிறுவலாம், மெய்கண்டார் அம்முறையைத் தான் மேற்கொள்கிறார்.

அவயவப் பகுப்பு உடையதாதல்:

குடம், ஆடை முதலிய பொருள்கள் தோன்றுவதையும் அழிவதையும் கண்கூடாகப் பார்க்கின்றோம். அப்பொருள்களின் தன்மையை உற்றுநோக்கினால் சில உண்மைகள் புலனாகும்.

முதலாவது உண்மை, அவை பல பகுதிகளால் ஆணவை என்பது. பகுதிகளை ஒன்று சேர்க்கும் பொழுதுபொருள் தோன்றுகிறது. அவை பிரிக்கப்படும்பொழுது பொருள் அழிவுறுகிறது. குடத்தைச் சிறுசிறு துண்டுகளாக உடைத்து விடலாம். ஆடையைப் பல பகுதிகளாகக் கிழிக்கலாம்; நூல்களாகப் பிரிக்கலாம். எனவே பகுதிகளின் சேர்க்கைதான் பொருளின் தோற்றம் என்பதும், பகுதிகளின் நீக்கம்தான் பொருளின் அழிவு என்பதும் விளங்கும்.

பகுதிகளை இணைத்து உண்டாக்குகின்ற பொருள்கள் யாவும் செயப்படு பொருள்கள் ஆகின்றன. அவற்றைக் காரியப் பொருள்கள் என்பர். எனவே செயப்படு பொருளாகிய காரியம் எல்லாம் அவயவப் பகுப்பு உடையன என்பதும், அவயவப் பகுப்பு உடையன எல்லாம் தோன்றி நின்று அழியும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

சுட்டியறியப்படுதல்:

மற்றோர் உண்மையைப் பார்ப்போம். மேற்கூறிய, குடம், ஆடை முதலிய காரியப் பொருள்களெல்லாம் நம்மால் சுட்டியறியப்படுவனவாகவும் உள்ளன.

சுட்டியறிதல் என்பது, எல்லையுடைய, வரையறைக்கு உட்பட்ட பொருள்களை இஃது இன்னது என அளவிட்டு அறிவது.

நாம் காணும் பொருள்கள் யாவும் இடம், காலம் என்னும் எல்லையுடையனவாய், இன்னது என வரையறுத்துச் சுட்டி உணரப்படுவனவாய் உள்ளன. இவ்வாறு நம்மறிவால் சுட்டியறியப்படும் பொருள்கள் எல்லாம் தோன்றி நின்று அழியும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இவ்வுண்மைகளைக் கொண்டு நாம் பின்வரும் முடிவுக்கு வருகிறோம். அவயவப் பகுப்பு உடையதாதல், சுட்டியறியப்படுதல் ஆகிய தன்மைகள் தோன்றி நின்று அழிவனவாகிய பொருள்களை விட்டு என்றும் நீங்காதவை என்பதுதான் அம்முடிவு.

நீங்காத அத்தன்மைகளை ஏதுவாகக் கொண்டு, அத்தன்மைகளையுடைய பொருள் எதுவாயினும் அது தோற்ற அழிவுகளுக்கு உரியது என்று முடிவு செய்யலாம். நீங்காத புகையை ஏதுவாகக் கொண்டு நெருப்பு இருப்பதைத் துணிதல் போன்றதே இது.

அனுமானம் ஆகிய இம்முறையில், துணிப்படும் பொருள் மேற்கோள் எனப்படும். அதனைத் துணிதற்கு உதவியாக அதனை விட்டு நீங்காதிருக்கும் பொருள் ஏது எனப்படும்.

மேற்கொள் : குடம், ஆடை முதலியன தோன்றி நின்று அழியும்.
ஏது : அவயவப் பகுப்பும், சுட்டியறியப்படுதலும் உடைமையால்.

உலகம் தோன்றி அழியும் என்பதை அனுமானத்தால் நிறுவுதல்:

இனி, இவ்வனுமானத்தை இப்பெரிய பரந்துபட்ட உலகத்தொடு பொருத்திப் பார்ப்போம்.

இவ்வுலகத்தின் தோற்றமும் அழிவும் நமக்குப் புலனாகவில்லை. ஆயின், தோன்றியழியும் பொருள்களைவிட்டு நீங்காத தன்மைகள் இவ்வுலகத்தினிடத்திலும் நீங்காமல் பொருந்தியிருக்கின்றன என்பது உறுதியாகப் புலனாகிறது. அஃதாவது, அவயவப் பகுப்பு உடைமை, சுட்டியறியப்படுதல் ஆகிய தன்மைகள் இவ்வுலகத்தினிடமும் காணப்படுகின்றன.

இவ்வுலகம் ஒரு தனி நிலைப்பொருள் அன்று; பல பொருள்களின் கூட்டமாய் உள்ள ஒரு தொகுதிப் பொருளேயாகும். உலகமாகிய தொகுதியைப் பல பகுதிகளாகப் பிரித்து விடலாம். அவன், அவள் என்பவனாகிய உயர்திணைப் பொருள்களும், அது என்பதாகிய அஃறிணைப் பொருள்களும் எனப் பகுத்து விடலாம். எனவே உலகம் என்பதும் குடம் ஆடை முதலியன போல அவயவப் பகுப்பு உடையதே என்பது விளங்கும்.

இனி இவ்வுலகம் குடம் ஆடை முதலியன போல இடம், காலம் என்னும் வரையறைக்கு உட்பட்டதாய், நம் அறிவினால் இன்னது எனச் சுட்டியறியப்படுவதாய் இருப்பது தெளிவு.

இத்தன்மைகளை உடைமையால் இவ்வுலகமும் தோன்றி நின்று அழியக் கூடியதே என்பதை எளிதில் உய்த்தறியலாம். இதனைப் பின்வருமாறு அமைத்துக் காட்டலாம்.

மேற்கோள் : உலகம் தோன்றல், நிற்றல், அழிதல் என்னும் முத்தொழில்களை உடையது.

ஏது : அவயவப் பகுப்பும் சுட்டியறியப்படுதலும் உடைமையால்

எடுத்துக்காட்டு : எது எது அவயவப் பகுப்பும் சுட்டியறியப்படுதலும் உடையதோ அது அது தோன்றுதல், நிற்றல், அழிதல் ஆகிய மூவினைகளை உடையது.

குடம் ஆடை முதலியன போல,

இவ்வாறு அனுமானம் ஆகிய வழியை மேற்கொண்டு, உலகம் முத்தொழிலுக்கு உட்பட்டது என்பதை நிறுவுகிறார் ஆசிரியர். ஆயின் அவர் அனுமானத்தை நூற்பாவில் வெளிப்படையாக அமைக்கவில்லை.

குறிப்பு ஏதுக்கள்

அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் என்னும் முதலடிக்கு, அவன் அவள் அது என இவ்வாறு அமைந்த உலகம் முத்தொழிலை உடையது என்பது பொருள். இங்கு மேற்கோள், அஃதாவது உலகம் முத்தொழில் உடையது என்பது வெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ளது. அதனைத் துணிதற்கு இன்றியமையாத ஏதுக்கள் அவயவப் பகுப்பும் சுட்டியறியப்படுதலும் ஆகியவை. அவை வெளிப்படச் சொல்லப் பொறாமை காணலாம். அவ்வேதுக்களைத் தனித்தனியாக எடுத்துச் சொல்லவில்லையாயினும், உலகத்திற்கு அடைமொழியாக அமைத்த அவன் அவள் அது எனும் என்ற தொடரில் அவ்வேதுக்களைக் குறிப்பாக அமைத்துள்ள நுட்பம் நோக்குதற்குரியது.

உலகம் என வாளா கூறாது அவன் அவள் அது எனும் அவை என அடைகொடுத்துக் கூறினமையால், அவன் அவள் அது என்பனவாகிய பகுதிகளை உடையதாய்- அவயவப் பகுப்பு உடையதாய் உலகம் உள்ளது என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். மேலும் அவன் முதலிய சுட்டுப்பெயரால் கூறினமையால் உலகம் சுட்டியறியப் படுவதாய் உள்ளது என்பனதயும் குறிப்பால் பெற வைத்தார்.

இவ்வாறு குறிப்பு ஏதுக்களால் உலகம் முத்தொழில் உடையது என்பதை நிறுவினார் ஆசிரியர்.

இப்பொருளின் ஐயம் ஏற்படா வகையில் தெளிவுறுத்தற்கு ஆசிரியர் வரைந்த பொழிப்புரையை இனிப் பார்ப்போம். அப்பொழிப்புரை மேற்கோளும் ஏதுவுமாய் அமைந்துள்ளது.

மேற்கோள்

ஈண்டு உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று
சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம்
உடைத்து - என்றது

ஏது

தோற்றமும் ஈறும் உள்ளதன் பாலே கிடத்தலின்

மேற்கோள் விளக்கம்

நூற்பாவில் உலகத்திற்கு அடைமொழி கொடுத்துக் கூறியது போலவே இம்மேற்கோளிலும் பிரபஞ்சம் என வாளா கூறாது, ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் என அடைமொழி சேர்த்துக் கூறி ஏதுக்களைக் குறிப்பால் பெற வைக்கிறார்.

ஒருவன் ஒருத்தி ஒன்று எனப்பட்ட பிரபஞ்சம் என்றதனால் உலகம் பலவாகப் பிரிக்கப்படும் தன்மையை உடையது என்பதையும், சுட்டப்பட்ட பிரபஞ்சம் என்றதனால் சுட்டியறியப்படும் தன்மை உடையது என்பதையும் குறிப்பாய் உணர்த்தி, உலகம் முத்தொழில் உடையது என்பதை இங்கும் உணர வைக்கிறார்.

ஏது விளக்கம்

வெளிப்படை ஏது:

மேற்கோளைத் துணிவதற்குக் குறிப்பு ஏதுக்களே போதியனவாக இருக்க, அவற்றால் தெளிவ பெறமாட்டாத மாணவரின் அறிவு நிலையைக் கருத்திற் கொண்டு இங்கு வெளிப்டை ஏது ஒன்றையும் தருகின்றார். தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின், என்பதுஅவ் வெளிப்படை ஏது. அதன்பொருள், தோன்றுதலும் அழிதலும் நிற்றல் தொழிலின் பக்கத்திலேயே கண்கூடாய் அறியக் கிடத்தலின் என்பது.

குடம், ஆடை முதலிய பொருள்கள் இப்பொழுது நிற்பனவாய்க் காணப்படுகின்றன. இவை முன்னே தோன்றுதல் தொழிலையும் பின்னே அழிதல் தொழிலையும் உடையன என்பதை அறியாதார் யார்? நம் உடம்பையே எடுத்துக் கொள்வோம். இவ்வுடம்பு இப்பொழுது நிற்கிறது. இது முன்னே தோன்றியது என்பதையும் அறிவோம்; பின்னே ஒரு நாளில் அழியும் என்பதையும் உறுதியாக அறிவோம்.

எனவே, உள்ளது என உணரப்படுவன எல்லாம் முன்னே தோற்றத்தையும் பின்னே அழிவையும் உடையன என்பதில் ஐயமில்லை. ஆதலின், இப்பொழுது நிற்பதாக- உள்ளதாக உணரப்படும் இப்பெரியவுலகமும் தோற்ற அழிவுகளை உடையது என்பதில் என்ன ஐயம்?

இவ்வாறு வெளிப்படை ஏதுவை அமைத்த ஆசிரியர் அதனை மேலும் விளக்குதற்கு எடுத்துக் காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக்காட்டு

வெண்பா

1. பூதாதி ஈறும் முதலும் துணையாகப்
பேதாய், திதி ஆகும்; பெற்றிமையின் -ஓதாரோ
ஒன்று ஒன்றில் தோன்றி உளதாய் இறக் கண்டும்
அன்று என்றும் உண்டு என்ன ஆய்ந்து.

இதன் பொருள்:

உலகம் இன்றுபோல என்றும் இருக்கும் எனக்கொண்டு மயங்கி நிற்கின்ற பேதைமை உடைய மாணவனே, பொருள்களெல்லாம் முன்னே தோற்றத்தையும் பின்னே அழிவையும் உடன்கொண்டு இடையே சிறிது காலம் நிற்பன என்னும் உண்மையைக் காட்சியினாலேயே நீ கண்டு கொள்ளலாமே என்று ஆசிரியர் உணர்த்துகிறார்.

அதனைக்கேட்ட மாணவனுக்கு ஓர் ஐயம் எழுகிறது, உலகத்தில் ஒன்று அழியுங்கால் மற்றொன்று தோன்றுவதைப் பார்க்கிறோம். நாள்தோறும், ஏன், கணந்தோறும் கணக்கில்லாத உடல்கள் மடிய, அதே நேரத்தில் கணக்கில்லாத உடல்கள் பிறந்து விடுவதையும் அறிகின்றோம். அவ்வாறிருக்க, உலகத் தொகுதி முழுவதும் ஒரு காலத்தே ஒருங்கே தோன்றும் என்பதையும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு சேர அழிந்து போகும் என்பதையும் எப்படி நம்புவது? என்பதே அவ்ஐயம். அதனைத் தெளிவிக்கும் முறையில் பின்வருமாறு கூறுகிறார் ஆசிரியர்.

பல

வாகிய ஓரினப் பொருள்கள் ஒவ்வொரு காலத்தில் ஒருங்கே தோன்றி, ஒருங்கே நின்று, ஒருங்கே அழிதலைக் காட்சியிற் காணலாம். புல், பூண்டு முதலியவை ஒரு காலத்தில் ஒருங்கே தோன்றிச் செழித்து வளருகின்றன; மற்றொரு காலத்தில் வேரோடு அழிந்தொழிகின்றன. ஓர் இனத்தைச் சேர்ந்த வித்துக்கள் மழைக்காலத்தில் ஒருங்கே முளையைத் தோற்றுவிக்க, அவை ஒருங்கே வளர்ந்து பயிராகிப் பயன் தந்து, பின் தம் கால எல்லையில் ஒருங்கே அழிதலையும் காண்கிறோம். அது போல இப்பொழுது நிற்பதாகிய இவ்வுலகமும் அதற்குரிய காலம் வரும்போது முழுவதுமாய் அழியும் என்பதை அறிவாயாக. பதவுரை:

பேதாய் - உலகம் தோற்றமும் அழிவும் இன்றி என்றும் இருப்பது என்று கூறும் உலகாயதரது கொள்கையை உண்மையென நம்பி, மயங்குகின்ற பேதைமையை உடைய மாணவனே,

பூதாதி - பூதங்களை முதற்காரணமாக உடைய, அவற்றால் ஆக்கப் பெற்ற உலகப் பொருள்கள் யாவும்.

முதலும் ஈறும் துணையாகத் திதி ஆகும் - முன்னே தோற்றமும் பின்னே அழிவும் நிகழ, இடையில் சில காலம் நிலைத்து நிற்பன ஆகின்றன.

உலகப் பொருள்களுக்கு உள்ள இந் நிலைமையே உலகுக்கும் உரியதாகும். ஏனென்றால் உலகமும் பூதங்களால் ஆனதுதானே. உலகம் தோன்றி இடையில் நின்று, பின் அழியக்கூடியது என்பது இதனால் விளங்கும்.

உலகப் பொருள்கள் சில தோன்றச் சில நிற்கின்றன; வேறு சில அழிகின்றனவேயன்றி எல்லாம ஒருங்கே தோன்றுதலும், ஒருங்கே அழிதலும் இல்லையே. அதுபோல, இப்பெரியவுலகமும் ஒரு பகுதி தோன்றும்; ஒரு பகுதி நிற்கும்; ஒரு பகுதி அழியும் என்று கொண்டால் என்ன? உலகம் முழுதும் ஒரு காலத்தே தோன்றும்; ஒரு காலத்தே ஒருங்கே அழியும் என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்? என்ற ஐயத்திற்கு இனி விடை கூறுகிறார் ஆசிரியர்.

ஒன்று ஒன்றில் - ஒவ்வொரு காலத்தில்

பெற்றிமையின் - (எண்ணற்ற பொருள்கள்) இனம் என்ற தன்மையினால்

தோன்றி உளதாய் இறக் கண்டும் - ஒருங்கே தோன்றி, ஒருங்கே நின்று, ஒருங்கே அழிவதைக் காண்கின்றோம். (புல், பூண்டு, பயிர்கள் முதலியவற்றை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்) இதனை அறிந்திருந்தும்,

என்றும் - என்றாயினும்

அன்று உண்டு என்ன - உலகத்திற்கும் ஒருங்கே அழியும் காலம் வரும்; பின் ஒருங்கே தோன்றும் காலம் வரும் என்று

ஆய்ந்து ஓதாரோ - ஆராய்ந்து கூற மாட்டார்களோ அறிவுடையோர்?

சிறப்புரை:

பூதாதி என்பது பூத ஆதி எனப் பிரிந்து, பூதங்களை ஆதியாக - முதற்காரணமாக உடைய உலகப் பொருள்களை உணர்த்தி நின்றது.

திதி என்பது நிலைத்தொழில்.

பெற்றிமை - தன்மை; இங்கு, இனத்தைக் குறித்தது.

ஒன்று ஒன்றில் என அடுக்கிக் குறிப்பிட்டது காலத்தையாகும்.

தோன்றி உளதாய் இற என்பதில் ஒவ்வொன்றோடும் ஒருங்கே என்பதைச் சேர்த்து ஒருங்கே தோன்றி ஒருங்கே உளதாய் ஒருங்கே இற என வைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.

இவ்வாறு குறிப்பாகவும் வெளிப்படையாகவும் அமைத்த ஏதுக்களாலும், எடுத்துக்காட்டினாலும் உலகம் தோன்றல், நிற்றல், அழிதல் என்னும் மூவினையுடையது என்பதை நிறுவினார் ஆசிரியர்.

இரண்டாம் கூறு

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் என்ற இரண்டாம் அடியின் விளக்கமாக இவ்விரண்டாம் கூறு அமைகிறது.

இதன் கருத்து உணர்த்துவாராய் ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு:

இனி இல்லதற்குத் தோற்றம் இன்மையின், உள்ளதற்குச்
செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின், ஒடுங்கின
சங்காரத்தின் அல்லது உற்பத்தியில்லை- என்றது.

இரண்டு ஏதுக்களும் ஒரு மேற்கோளும்:

இஃது இரண்டு ஏதுக்களும் ஒரு மேற்கோளுமாக அமைந்துள்ளது. இல்லதற்குத் தோற்றம் இன்மையின் என்பது ஓர் ஏது. உள்ளதற்குச் செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின் என்பது மற்றோர் ஏது. ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தியில்லை என்பது இவ்விரு ஏதுக்களின் வழியாக நிறுவப் பெறுகின்ற மேற்கோள்.

முதல் ஏதுவினால் உலகம் உள்பொருள் என்ற கருத்துப் பெறப்படும். இரண்டாம் ஏதுவினால் உலகம் செய்வோனை உடையது என்ற கருத்துப் பெறப்படும். இவ்விரு கருத்துக்களின் வழியாக உலகத்தை ஒடுக்குதலும் மீளத் தோற்றுவித்தலும் ஆகிய செயலைச் செய்வோன் அழித்தற் கடவுளே என்பதாகிய மேற்கோளை நிறுவுவார் ஆசிரியர். இனி, விளக்கமாகக் காண்போம்.

விளக்கம்

உலகம் உள்பொருள்:

உலகம் இல்பொருள் எனவும், சூனியம் எனவும் சொல்லுகிற கொள்கைகள் உண்டு. சைவ சித்தாந்தம் அவற்றை ஏற்பதில்லை. உலகம் இல்லாத பொருளன்று. உண்மையில் உள்ளதே என்றும், அஃது அனுபவமாக உணரப்படுவதே என்றும் அது கூறும்.

மெய்கண்டார் உலகம் உள்ளது என்பதனை நூற்பாவில் திதியே என்பதனால் குறிப்பிட்டார். இங்கு இல்லதற்குத் தோற்றம் இன்மையின் என்னும் ஏதுவினாலும் நிறுவுகிறார். இல்லாதது எக்காலத்தும் இல்லாததேயாம். அஃது ஒரு காலத்தும் தோன்ற மாட்டாது. முயலின் தலையில் கொம்பு இல்லாதது ஆதலில் அஃது என்றும் தோன்றாது. ஆயின் உலகம் தோன்றுதல் உடையது என்பதை முற்பகுதியில் பார்த்தோம். ஆகவே தோன்றுதல் உடைய உலகத்தை இல்பொருள் என்றல் பொருந்தாது. அஃது உள்ளதேயாம்.

சற்காரிய வாதம்:

இங்கே ஓர் வினா எழுதல் கூடும். உலகம் உள்ளதாயின் தோன்ற வேண்டுவது எதற்கு? அதுதான் உள்ளதாயிற்றே என்பதே அல்வினா. சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படையாக உள்ள ஒன்றை விளங்கிக் கொண்டால் அவ்வினா பொருளற்றது என்பது புலனாகும். அவ்வடிப்படையே சற்காரிய வாதம் என்பது.

உள்ளது தோன்றும் என்பது சற்காரிய வாதம் ஆகும். அஃதாவது, முன்னேயே உள்ளது பின்னே செயப்படு பொருளாய்த் தோன்றும் என்பதாம். சத் - உள்ளது; காரியம் - செயப்படு பொருளாய்த் தோன்றுதல்.

எனவே தோன்றுகின்ற காரியப்பொருள் யாவும் தோன்றுவதற்கு முன்னேயும் உள்ளது என்து கொள்ளப்படும். அதன்படி, குடமாகிய காரியம் தோன்றுவதற்கு முன்னேயே மண்ணில் இருந்தது. பிற காரியப் பொருள்களும் இவ்வாறேயாம் எனக் கூறுதலே சற்காரிய வாதம்.

குடம் முன்பு இல்லாதிருந்து பின்பு தோன்றிற்று எனக் கொண்டால் என்னை என்று வினவலாம். அவ்வாறு கொண்டால், இல்லாதது தோன்றும் என்று ஆகிக் குடம் மண்ணிலிருந்துதான் தோன்ற வேண்டும் என்ற வரன் முறையின்றி, எதுவும் எதிலிருந்தும் தோன்றலாம் என்று ஆகி விடும், அவ்வாறு இன்றி, இது இதிலிருந்து தான் தோன்றும். வேறொன்றிலிருந்து தோன்றாது என்னும் வரையறையே எங்கும் இருக்கிறது. ஆகவே இல்லது தோன்றும் என்றல் பொருந்தாது.

பொருளுக்கு இரு நிலைகள்:

தோன்றுதல் உடைய பொருள்களுக்கு இரு நிலைமைகள் உண்டு. ஒன்று, புலனாகாது நுட்பமாய் நிற்கும் நிலை. அது காரண நிலை எனப்படும். மற்றொன்று, புலப்படுவதாய்ப் பருமையாய் நிற்கும் நிலை. இது காரிய நிலை எனப்படும். இவ்விரண்டு நிலைகளிலும் பொருள் உள்ளதேயாம்.

புலனாகாத நிலையில் உள்ளது புலப்படும் நிலைக்கு வரும்பொழுது பொருள் தோன்றிற்று என்கிறோம். மண்ணாகிய காரணத்தில் புலனாகா நிலையிலிருந்த குடம் வனைவோன் செயலால் புலப்படும் நிலையை அடைந்தபோது குடம் தோன்றிற்று என்று சொல்கிறோம்.

இந்த முறையிலேயே, உள்ளதாகிய உலகம் தோன்றும் என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. அதன்பொருள் புலனாகாத நிலையில் இருந்த உலகம் புலப்படும் நிலையை அடையும் என்பதேயாம். ஆகவே உலகம் உள்ளதாயின் தோன்ற வேண்டுவது எதற்கு? அதுதான் உள்ளதாயிற்றே என்ற வினா பொருளற்றதாகும்.

தோற்றம் என்பது புலனாகாது உள்ள பொருள் புலப்படும் நிலையை அடைதலேயாகும் எனக் கண்டோம். அவ்வாறே அழிவு என்பதும் புலனாகி நின்ற பொருள் புலனாகாத நிலையை அடைவதேயன்றி அடியோடு இல்லாமற் போதல் அன்று. உள்ளது போகாது இல்லது வாராது என்பது சற்காரிய வாதத்தில் கூறப்படும் உறுதியான முடிவு.

உலகம் செய்வோனை உடையது:

இல்லதற்குத் தோற்றம் இன்மையின் என்னும் ஏதுவினால் சற்காரிய வாதத்தை நினைவுறுத்தி உலகம் உள்பொருள் என்பதை நிறுவிய ஆசிரியர், உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின், என்னும் ஏதுவினால் உலகம் செய்வோனை உடையது என்பதை நிறுவ முற்படுகிறார்.

இவ்வேதுவின் கருத்து, உள்ளதாய்ச் செயற்படும் பொருள்யாவும் செய்வோரை உடையன. ஆதலால், அத்தன்மை வாய்ந்த உலகமும் செய்வோனை உடையதே என்பதாம். இக்கருத்துப் பற்றியே நூற்பாவில் தோன்றிய எனத் தன்வினையாகக் கூறாமல் தோற்றிய எனப் பிறவினையாகக் குறிப்பிட்டார் ஆசிரியர். உலகம் ஒருவனால் தோற்றுவிக்கப்பட்டது என்பது கருத்து.

மண்ணில் உள்ளதாகிய குடம் சடம் (அறிவற்றது) ஆதலின் அது தானே செயற்பட முடியாது. அதனைத் தோற்றுவிப்பதற்கு அறிவுடைய வனைவோன் ஒருவன் வேண்டும். அவ்வாறே அறிவற்றதாகிய உலகம் மூவினை உடையதாயினும் அது தானே தோன்றித் தானே அழியும் என்றல் கூடாது, உள்பொருளாகிய அதனைத் தோற்றுவித்து அழித்தற்கு ஒருவன் வேண்டும்.

இவ்வாறு உலகிற்குச் செய்வோனாகிய முதல்வன் ஒருவன் உண்டு என்பதை நிறுவுகிறார் ஆசிரியர்.

அம் முதல்வன் அழித்தற் கடவுளே:

இனி அம் முதல்வன் யாவன்? என்ற வினா இயல்பாக எழுகிறது. அதற்கு விடையிறுப்பாராய், அம் முதல்வன் சங்கார காரணனே என உணர்த்துகிறார் ஆசிரியர். ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தியில்லை என்ற மேற்கோளில் இவ்விடை அமைந்துள்ளது.

இம் மேற்கோளில், சங்காரம் என்ற சொல் சங்காரத்தைச் செய்பவனைக் குறித்து நின்றது.

ஒடுங்கின சங்காரம் என்பது ஒடுங்குதற்கு இடமாய் நின்ற சங்காரக் கடவுள் எனப் பொருள் தந்தது.

பிறத்தற்கு இடமாய் நின்ற வீட்டினைப் பிறந்த வீடு என்றும் புகுதற்கு இடமாய் நின்ற வீட்டினைப் புகுந்த வீடு என்றும் சொல்லுகிற வழக்குப் போல, உலகமானது ஒடுங்குதற்கு இடமாய் நின்ற கடவுளை ஒடுங்கின சங்காரம் எனக் குறித்தார் ஆசிரியர்.

ஒடுக்கியவனே மீளத் தோற்றுவிப்பான்:

எது எங்கு ஒடுங்குகிறதோ அது அங்கிருந்தே தோன்றும் என்பதே முறைமை. மண்ணில் சென்று ஒடுங்கிய குடம் மீள மண்ணிலிருந்தே தோன்றும். பிற பிற பொருள்களும் தாம் தாம் ஒடுங்கிய அவ்வவ்விடங்களிலிருந்தே தோன்றும். அம்முறைக்கேற்ப உலகம் சங்கார காரணனிடத்தே ஒடுங்குதலால் அவனிடத்தினின்றே தோன்றும் என்பதாயிற்று.

இங்கே ஓர் வினா எழும். உலகம் சங்கார காரணனிடத்தில் ஒடுங்கும் என்று ஏன் கொள்ள வேண்டும். படைத்தலைச் செய்பவனாகிய சிருட்டி காரணனிடத்தில் அல்லது, காத்தலைச் செய்பவனாகிய திதி காரணனிடத்தில் ஒடுங்கும் என்று கொண்டால் என்னை என வினவலாம். அவ்வாறு கொள்ளுதல் பொருந்தாது. ஏன் பொருந்தாது என்பதைப் பார்ப்போம்.

படைத்தற் கடவுளும் காத்தற் கடவுளும் அத்தொழிலுக்கு மட்டும் உரிமையுடையவர். ஆனால் அழித்தற் கடவுளோ எல்லாத் தொழில்களையும் செய்ய வல்ல முதன்மையுடையவன். எங்ஙனம் எனில், அழித்தற் கடவுள் முற்றழிப்பைச் செய்கின்ற காலத்தில் எல்லா வுலகங்களோடும் கூட அவ்விருவரையும் அழிப்பான் என்றே கொள்ளுதல் வேண்டும். அவ்வாறின்றி அவரை அழியாது நிறுத்தி வைப்பான் எனில் அதனை முற்றழிப்பு என்று எங்ஙனம் சொல்ல முடியும்?

ஆதலால் எல்லாம் ஒடுங்கி நிற்கும் அந்நிலையில் அவன் ஒருவனே ஒடுங்காது நிற்பவன் ஆகிறான். ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவிக்க வேண்டிய காலத்தில், அழித்தற் கடவுளையன்றி வேறொருவர் இல்லாமையால் அவனே தோற்றுவிப்பான் என்பது சொல்லாமலே விளங்கும். இதனையே ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தியில்லை என உணர்த்தினார் ஆசிரியர்.

இதுகாறும் கூறியவற்றால், படைத்தற் கடவுள், காத்தற் கடவுள் என்போரும் முற்றழிப்புக் காலத்தில் உலகத்தோடு ஒப்ப ஒடுங்குபவரே என்பதும், அவர்களிடத்தில் உலகம் ஒடுங்கும் என்றல் பொருந்தாது என்பதும், எல்லாவற்றையும் தன்பால் ஒடுக்கியும் மீளத் தோற்றுவித்தும் நடத்துகின்ற முதல்வன் அழித்தற் கடவுளே என்பதும் நன்கு விளங்கும்.

இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்த எடுத்துக்காட்டுச் செய்யுளைக் காண்போம்.

எடுத்துக்காட்டு - 1

வெண்பா

2. இலயித்த தன்னில் இலயித்தது ஆம் மலத்தால்;
இலயித்த வாறுஉளதா வேண்டும்;- இலயித்தது
அத்திதியில் என்னின் அழியாது; அவை அழிவது
அத்திதியும் ஆதியும் ஆம் அங்கு

முற்பகுதியின் பொருள்:

ஒடுங்கிய உலகம் தான் ஒடுங்குதற்கு இடமாய் நின்ற சங்கார காரணனிடமிருந்தே மீளத் தோன்றுவதாம்.

ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றுதல் எதற்கு எனில், உயிர்களைப் பற்றியுள்ள ஆணவ மலம் நீங்கும் நிலையை அடைதற் பொருட்டேயாகும்.

அவ்வாறு தோன்றுங்கால் வேறு புதிய வுலகம் தோன்றும் என்னாமல் ஒடுங்கிய வுலகமே மீளத் தோன்றும் என்பது ஏன் எனில் எது எத்தன்மையுடையதாக நின்று ஒடுங்கிற்றோ அது அத்தன்மையுடையதாக மீளவும் தோன்றுதலையே யாவரும் எதிர்பார்க்கின்றனர். அஃதாவது, நெல்லவிதைப்போர் நெல் விளையும் என்பதை நோக்கியே அதனை விதைக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்தபடி நெல் விளைகிறதேயன்றி, முறை பிறழ்ந்து நெல் கமுகாய் நீள்வதில்லை.

ஒடுங்கியதே மீளத்தோன்றும் என்னும் நியதி இல்லையென்றால் நெல் விதைக்க வேறொன்று விளைய வேண்டும். அங்ஙனம் ஒரு போதும் நிகழ்வதில்லை, ஆதலால் ஒடுங்கிய உலகமே மீளத் தோன்றுமன்றி வேறு உலகம் தோன்றாது என அறிதல் வேண்டும்.

பிற்பகுதியின் பொருள்:

இதுவரை கூறியபொருள் வெண்பாவின் முதற்பகுதியில் உள்ளது. பிற்பகுதி மறுப்புரையாக- மாறுபட்ட கருத்துக்கு மறுமொழியாக உள்ளது.

உலகம் சங்கார காரணனிடத்தே ஒடுங்கும் என்பதை உடன்படாமல், திதிகாரணன் ஆகிய மாயோனிடத்தில் ஒடுங்கி அவனிடத்திலிருந்தே தோன்றும் என்பார் கூறும் வழக்குரையை ஆசிரியர் இங்கு மறுக்கின்றார்.

உலகம் ஒடுங்கியது திதி காரணனிடத்தில் என்று கூறினால் அவன் சங்கார காரணன் என்றல்லவா ஆகிறான்? அவனைத் திதி காரணன் என்றால் மாறுகோள் உரையாம். திதியாகிய காத்தல் தொழிலுக்கு மட்டும் உரியவனாதல் பற்றி யன்றோ அவன் திதி காரணன் எனப்படுகின்றான்? ஆதலால் அவனிடத்தில் உலகம் ஒடுங்காது.

அந்தத் திதிக்கடவுளும் மற்றும் படைப்புக்கடவுளும் தோன்றும் இடமாகிய அச் சங்கார காரணனிடத்திலேயே அவ்விருவரோடும் கூட அனைத்து உலகமும் ஒடுங்குவதாகும்.

பதவுரை:

இலயித்தது - முன்பு ஒடுங்கியதாகிய உலகம்

இலயித்த தன்னில் - தான் ஒடுங்கி நின்ற அவ்விடத்திலிருந்தே

ஆம் - மீளத் தோன்றுவதாகும். (ஒடுங்கிய உலகமே மீளத் தோன்றும் என்று கூறுவது ஏன்? வேறு புதிய உலகம் தோன்றும் என்று கொண்டால் என்ன? என்று கேட்கலாம். இதற்கான விடை வருமாறு:)

இலயித்தவாறு உளதா வேண்டும் - முன்பு எவ்வாறு நின்று ஒடுங்கிற்றோ அவ்வாறு மீண்டும் உண்டாதலையே யாவரும் விரும்புவர்.

(நெல் விதைத்தால் நெல் விளையும் என்று எதிர் நோக்கியே அதை விதைக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்தபடி, ஒடுங்கிய நெல்லே முளைத்துத் தழைத்து விளைகிறது. வேறொன்று விளையவில்லை. அதுபோல, ஒடுங்கிய உலகமே மீளத்தோன்றும் அன்றி வேறு புதிய உலகம் தோன்றாது என அறியலாம்.

இனி, ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றுவது எதற்காக? என வினவலாம். இதற்கான விடை வருமாறு:)

மலத்தால் - உயிர்களைப் பற்றியுள்ள ஆணவ மலம் நீங்கும் நிலையை அடைதல் பொருட்டு உலகம் மீளத் தோன்ற வேண்டியுள்ளது.

(உலகம் தான் ஒடுங்கிய இடத்தினின்று மீளத் தோன்றும் என முதலடியில் கூறப்பட்டது. அஃது ஒடுங்கிய இடம் எது? சிவபெருமான் அழித்தற் கடவுள் என்பது யாவரும் அறிந்தது. அவனே அனைத்தையும் அழிப்பவன். முற்றழிப்பைச் செய்து இறுதியில் அவன் ஒருவனே எஞ்சி நிற்பவன். அவனிடத்திலேயே எல்லாம் ஒடுங்கி நிற்கும். ஆகவே சங்காரக் கடவுளாகிய அவனே உலகம் ஒடுங்குதற்கு இடமாவான் என்பதும், அவனிடத்திருந்தே உலகம் மீளத் தோன்றும் என்பதும் பெறப்படும்.

எது எங்கே ஒடுங்கிற்று அது அங்கு நின்றே தோன்றும் என்பது நியதி. குடம் மண்ணில் சூக்குமமாய் ஒடுங்கியுள்ளது. அது தான் ஒடுங்கிய இடமாகிய மண்ணிலிருந்தே தோன்றும். அதுபோல, உலகம் தான் ஒடுங்கிய இடமாகிய சங்காரக் கடவுளிடமிருந்தே தோன்றும். என்பதே முறை. ஆனால் மால்நெறியினர் இதனை உடன்படாமல், உலகம் மாயோனிடத்தில் ஒடுங்கும் என்றும் அவனிடத்திலிருந்தே தோன்றும் என்றும் வழக்கிடுவர். அதனை மறுத்தற்கு இனி வரும் பகுதியைச் கூறுகிறார் ஆசிரியர்.)

இலயித்தது அத்திதியில் என்னின் - உலகம் ஒடுங்கியது காத்தற் கடவுளாகிய அவனிடத்தில் என்று கூறினால்

அழியாது - அவன் காத்தல் தொழிலுக்கு மட்டும் உரியவனாதல் பற்றி அல்லவா அவனைக் காத்தற் கடவுள் என்று குறிப்பிடுகின்றர். ஆகவே அழித்தல் தொழிலுக்கு உரியவனாகாத அவனிடத்தில் உலகம் ஒடுங்காது.

அவை அழிவது அத்திதியும் ஆதியும் ஆம் அங்கு - உலகத் தொகுதி முழுவதும் ஒடுங்குவது, மேற்கூறிய காத்தற் கடவுளும் மற்றும் படைப்புக் கடவுளும் தோன்றும் இடமாகிய அச்சங்காரக் கடவுளிடத்தேயாகும். மேலும் அவை தோன்றுவதும் அவனிடத்திலிருந்தே யாகும்.

விளக்கம்

மும்மூர்த்திகளுள் இருவரை மட்டுமே இங்குக் குறிப்பிட்டாலும் மூன்றாமவனாகிய உருத்திரனையும் கொள்ள வேண்டும், ஒரு பகுதியை மட்டும் அழித்தலைச் செய்யும் ஏகதேச சங்கார காரணனாகிய அவ்வுருத்திரனும் இங்குக் கூறப்பட்ட படைப்புக் கடவுளாகிய பிரமனும் காத்தற் கடவுளாகிய மாயோனும் போலவே மகாசங்கார காரணனிடத்தில் ஒடுங்கி நிற்பான் என்பதாம்.

செய்யுளின் பிற்பகுதியில் உள்ள திதி, ஆதி என்ற சொற்கள் திதியை (காத்தலைச்) செய்யும் கடவுளையும், ஆதியை (படைத்தலைச்) செய்யும் கடவுளையும் குறித்தன.

மகாசங்கார காரணனாகிய முதல்வன், பிறர் எல்லாம் ஒடுங்கவும், தான் ஒருவனேயாய்த் தனித்து நிலைபெற்று நிற்பான் என்பதை

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்:
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே:
ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்:
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.

என வரும் தேவாரத்தால் அறியலாம்.

மூன்று காரணங்கள்:

காரியப் பொருளுக்கு மூன்று காரணங்கள் இன்றியமையாதன. அவை முதற் காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் என்பன. குடம் என்னும் காரியத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு மண் முதற் காரணம்: சக்கரம், கழி முதலிய கருவிகள் துணைக்காரணம்; வனைவோன் நிமித்த காரணம்.

காரியப் பொருள்கள் ஒடுங்கும் காலத்தில் தத்தம் முதற் காரணத்தில் ஒடுங்குமேயன்றிப் பிறகாரணங்களில் ஒடுங்குதல் இல்லை. குடம் தன் முதற்காரணமாகிய மண்ணில் ஒடுங்குமன்றிப் பிறவற்றில் ஒடுங்காது. பிற காரியங்களும் அவ்வாறே யாம்.

உலகமாகிய செயப்படு பொருளுக்கு முதற்காரணம் மாயை என்பது, துணைக்காரணம் இறைவனது சத்தியும், உயிர்களது வினையும். நிமித்த காரணம் இறைவன்.

உலகம் ஒடுங்கும் இடம்:

உலகம் ஒடுங்குங் காலத்தில் தன் முதற் காரணமாகிய மாயையில் ஒடுங்குமன்றிப் பிறவற்றில் ஒடுங்காது.

அங்ஙனமாகவும், உலகம் நிமித்த காரணமாகிய சங்காரக் கடவுளிடத்தே ஒடுங்கும் என்று சொல்வது எவ்வாறு பொருந்தும் என்னும் ஐயம் நிகழ்தல் இயல்வே இவ்விடத்தில் ஒன்றை அறிந்து கொண்டால் அவ்வையம் தீர்ந்து விடும்.

கிழங்கிலிருந்து தோன்றிய தாமரையை, அக் கிழங்கிற்கு ஆதாரமாய் உள்ள சேற்றினின்றும் தோன்றியதாகச் சொல்லுகிறோம். சேற்றில் முளைத்த செந்தாமரை என்னும் வழக்கு இதனைக் காட்டும்.

நிலத்திற் கிடந்த வித்து விளைந்தபொழுது அவ்வித்திற்கு ஆதாரமாய் உள்ள நிலம் விளைந்தது எனக் கூறுகிறோம்.

அம்முறையிலேயே உலகம் சங்கார காரணனிடத்தில் ஒடுங்கும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் உலகம் ஒடுங்குவது தனது முதற் காரணமாகிய மாயையிலேதான். அது மீளத்தோன்றுவதும் மாயையிலிருந்தே என்பதை அறிதல் வேண்டும். ஆயினும் மாயையிலே தோன்றி, மீண்டும் மாயையிலே ஒடுங்குவதாகிய உலகத்தை அம்மாயைக்கு ஆதாரமாய் உள்ள சங்கார காரணனிடத்தே தோன்றி மீண்டும் அவனிடத்தே ஒடுங்குவதாகக் கூறுவதும் முறைமையேயாம்.

எடுத்துக்காட்டு - 2

வெண்பா

3. வித்துஉண்டா மூலம் முளைத்தவா, தாரகமாம்
அத்தன் தாள் நிற்றல் அவர் வினையால்- வித்தகமாம்;
வேட்டுவனாம் அப் புழுப்போல் வேண்டுருவைத் தான்கொடுத்துக்
கூட்டானே மண்போல் குளிர்ந்து.

முன் இரண்டடிகளின் பொருள்:

விதையானது நிலத்தினுட் பொருந்திக் கிடப்பது போல முதற் காரணமாகிய மாயை தனக்கு நிலைக்களமான சிவனது சத்திக்குள் பொருந்தி நிற்கிறது. நிலம் குளிர்ந்தபொழுது அவ்விதையினின்றும் முளை தோன்றுவது போல, அச் சிவசத்தி விரும்பிய பொழுது அம் மாயையினின்றும் உலகம் தோன்றும்.

மாயை, இறைவனது சத்தியை நிலைக்களமாகக் கொண்டு நிற்பதால், அம்மாயை இறைவன் விரும்பிய வழியே உலகத்தைத் தோற்றுவிக்குமேயன்றித் தானே உலகத்தைத் தோற்றுவிக்காது என்பதை உணர்தல் வேண்டும்.

உவமையைப் பொருளோடு பின்வருமாறு பொருத்திக் கொள்ள வேண்டும்

உவமை - பொருள்
வித்து - மாயை
முளை - உலகம்
நிலம் - இறைவனது சத்தி

இறைவனது சத்தியை அவனது திருவடியாகச் சொல்லுதல் மரபு ஆதலின் அத்தன்தாள் என்றார்.

இறைவன் உலகத்தைப் படைக்குங்கால் முழுவதும் நல்லனவே அமையும் படியாகப் படைக்காமல், நல்லனவும் தீயனவும் கலந்து விளங்கும்படி படைக்கக் காரணம் என்ன? என்பதற்கு விடையாக அவர் வினையால் என்றார். உயிர்கள் செய்கிற வினைகள் நல்லனவேயாக அமையாமல் நல்வினையும் தீவினையுமாக விரவி அமைவதால், அவற்றிற்கு ஏற்றவாறு நன்மை தீமைகளாகிய பயன்களை அவ்வுயிர்கள் பெறுதற்பொருட்டு இவ்வுலகு நல்லனவும் தீயனவும் கலந்து அமையும் படியாகப் படைக்கப்பட்டது என்பது கருத்து.

பின் இரண்டடிகளின் பொருள்:

குளவியாக வேண்டும் என விரும்புகின்ற மகவாகிய புழுவிற்கு அதன் தாயாகிய குளவி வேண்டுவனவற்றைச் செய்து அதற்கு அவ்வுருவத்தைக் கொடுத்தல் போல, இறைவனும் உயிர்கள் தம்தம் வினைக்கு ஏற்றபடி அடைய விரும்பும் பிறப்பைக் கொடுத்து, அப் பிறப்பில் அவை அடையத் தக்க பயன்களையும் கூட்டுவிப்பான்.

வேட்டுவன்- குளவி; வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் என்னும் திருமுறைத் தொடருக்கு விளக்கமாக இப்பகுதி அமைகின்றது.

பதவுரை:

3. வித்து - விதை
உண்டா - தனக்கு இடமாகிய நிலத்தினுள் பொருந்தி யிருக்க,
மூலம் - முளை
முளைத்தவா - அதிலிருந்து தோன்றிய பான்மை போல
தராகம் ஆம் - (உலகிற்கு முதற்காரணமாகிய மாயை) தனக்கு நிலைக்களமான
அத்தன் தாள் - இறைவனது சத்தியினுள்
நிற்றல் - பொருந்தி நிற்றலால்
மண் போல் - (மேற்கூறிய விதை முளைக்கும்படியாக) நிலம் குளிர்ந்தாற் போல
குளிர்ந்து - (அச்சத்தி, தன்னிடமுள்ள மாயையினின்றும் உலகம் தோன்றும்படியாக) விரும்புதலைச் செய்த பொழுது
அவன் வினையால் - அவ்வவ் வுயிர்களின் வினை காரணமாக
வித்தகம் ஆம் - பல்வேறு வடிவினதாய் உள்ள, மயக்கினைத் தருவதாய் உள்ள இவ்வியத்தகு உலகம் அம்மாøயியினின்றும் விரிந்து தோன்றும்.

வேட்டுவன் ஆம் - (குளவி பிறக்கும் பொழுது புழுவாகப் பிறக்கும். அது பின் வளர்ந்து குளவியாகும். அவ்வாறு) குளவியாக வேண்டும் என விரும்புகின்ற

அப் புழுப் போல் - மகவாகிய அப்புழுவுக்குத் தாயாகிய குளவி அஃது அங்ஙனம் ஆதற்கு வேண்டுவனவற்றைச் செய்து கொடுத்தல் போல

வேண்டு உருவை - உயிர்கள் தம் வினை காரணமாக வேண்டுகின்றவற்றை

தான் கொடுத்துக் கூட்டானே - (இறைவன்) அவை வேண்டியவாறே படைத்துக் கொடுக்க மாட்டானோ?

இவ்வாறு உயிர்களுக்காக உலகைப் படைத்து, அவை விரும்பும் பிறப்பைக் கொடுத்து, அப் பிறப்பில் நுகரத் தக்க பயன்களையும்கூட்டு விக்கின்ற அக்கடவுள் அத் தொழில்களால் இளைப்பும், சலிப்பும், மகிழ்ச்சியும், வருத்தமும் போன்ற விகாரங்களை (நிலை வேறுபாடுகளை) அடைவானோ என்னும் ஐயத்தை அடுத்து வரும் எடுத்துக் காட்டுச் செய்யுளால் போக்குகிறார்.

எடுத்துக்காட்டு -3

வெண்பா

4. நோக்காது நோக்கி நொடித்து அன்றே காலத்தின்
தாக்காது நின்று உளத்தின் கண்டு இறைவன்- ஆக்காதே
கண்ட நனவுணர்வில் கண்ட கனவு உணரக்
கண்டவனின் இற்று; இன்றாம் கட்டு.

இதன் பொருள்:

காலத்தை இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்றெல்லாம் வேறுபடுத்தி வழங்கினாலும் உண்மையில் கால தத்துவம் சிறிதும் வேறுபாடின்றியே நிற்பதாகும்; அவ்வாறு நின்று பொருள்களை ஆக்குதல், அழித்தல் முதலியவற்றைச் செய்யும். அக்கால தத்துவம் போல இறைவனும் தன்னியல்பில் சிறிதும் வேறுபடாமலே நின்று படைத்தல் முதலிய தொழில்களைச் செய்வான்.

அவன் உலகத்தைப் படையாமல் படைப்பான்; காவாமல் காப்பான்; அழிக்காமல் அழிப்பான். இத்தொழில்களால் அவன் கட்டுறுதல் இல்லை; திரிபு எய்தலும் இல்லை. இஃது எது போன்றது எனில், கற்ற நூலின் பொருளும் சொல்லும் நினைவில் தோன்றி ஒடுங்கினாலும் அதனால் தன் தன்மை திரியாத உயிரறிவின் இயல்பு போன்றது எனலாம்.

மற்றும், விழிப்பு நிலையில் முன்பு தான் கண்ட கனவை உணர்ந்தபோது அக்கனவினால் எவ்வித மாற்றமும் அடையாதவனது தன்மை போன்றது என்றும் கூறலாம்.

பதவுரை:

காலத்தின் - (காலதத்துவம் இறந்த காலம் என்றும், நிகழ்காலம் என்றும், எதிர்காலம் என்றும் இன்னும் பல பிரிவாகவும் வேறுபட்டாலும் உண்மையில் வேறுபடாது ஒன்றாயே நிற்கும்) அக்காலத்தும் போல,

இறைவன் - முதல்வன்

தாக்காது நின்று - தன் நிலையில் சிறிதும் வேறுபடாது நின்று

ஆக்காதே கண்டு - படையாமல் படைத்து

நோக்காது நோக்கி - காவாமல் காத்து

(நொடியாது) நொடித்து -அழிக்காமல் அழித்து நிற்றலால் (அத்தொழில்களைச் செய்தும்)

கட்டு இன்றாம் - அவன் கட்டு இல்லாதவன் ஆவான்.

(முதல்வன் என்றும் விகாரம் எய்துதல் இன்றி நிருவிகாரியாகவே நிற்பான் என்பது கூறப்பட்டது.

இறைவனது இத்தன்மைக்கு மேலும் இரண்டு உவமைகள் கூறுகின்றார் ஆசிரியர்.

அவனது தன்மை எது போலும் எனின்,)

உளத்தின் - ஒருவன் கற்ற நூலினது பொருளும் சொல்லும் அவனது நினைவிற்கு வரும் பொழுது அதனால் தன் தன்மை திரியாத உயிரறிவின் தன்மை போல்வதும்

கண்ட நனவுணர்வில் கண்ட கனவு உணரக் கண்டவனின் - விழிப்புணர்வில் முன்பு தான் கண்ட கனவை உணர்ந்தபோது அக்கனவினால் மாற்றம் எய்தாத அவனது தன்மை போல்வதும் ஆகிய

இற்று - இத்தன்மைத்து.

விளக்கம்

இச் செய்யுளில் மூன்று உவமைகள் வந்துள்ளன. முதல் உவமை காலத்தின் என்பது. இரண்டாவது உவமை உளத்தின் என்பது மூன்றாவது உவமை நனவுணர்வில் கண்ட கனவுணரக் கண்டவனின் என்பது.

நோக்குதல் - காத்தல்; நொடித்தல் - அழித்தல். ஆக்காதே கண்டு, நோக்காது நோக்கி, நொடியது நொடித்து என அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

நினைப்பு அளவில் செய்தல்:

இறைவன் படையாமல் படைத்து, காவாமல் காத்து, அழிக்காமல் அழித்து நிற்பான் என்பதன் பொருள், அத்தொழில்களையெல்லாம் அவன் கருவிகளைக் கொண்டு வருந்திச் செய்யாது, இவ்வாறு ஆகுக என எண்ணுகிற தன் நினைப்பு மாத்திரத்தாலே செய்வான் என்பதாம்.

கருவிகளைக் கொண்டு செய்வோரே அக் கருவிகள் வாய்க்காத போதும், வாய்த்த இடத்தும் அக் கருவிகள் நன்கு செயற்படாத போதும், அவற்றால் பல முட்டுப்பாடுகளை எய்தி, வருத்தம், சோர்வு முதலிய மாற்றங்களுக்கு உட்படுவர். இறைவன் அவரைப்போலக் கருவியாற் செய்யாது, சங்கற்பமாகிய நினைப்பு மாத்திரத்தால் செய்வான் ஆதலின் அவன் எவ்விதமாற்றமும் எய்தான் என்பதை அறிதல் வேண்டும்.

மூன்றாம் கூறு

அந்தம் ஆதி என்ற மூன்றாம் அடியின் விளக்கமாக இம்மூன்றாம் கூறு அமைகிறது.

பொழிப்புரை:

அத் தொடரின் கருத்தை உணர்த்தும் வகையில் ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு:

இனி சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வின்றி நின்ற சங்காரத்தின் வழியில்லது சுதந்திரம் இன்றி நிற்றலான் சங்காரமே முதல்- என்றது.

இதன்கண் சங்காரமே முதல் என்பது மேற்கோளும், முன்னே உள்ளது அதனை நிறுவுவதற்குக் கூறப்படும் ஏதுவுமாக அமைதல் காணலாம்.

மேற்கோள் விளக்கம்:

முதல்வர் பலர் என்பதை மறுத்தல்:

புராணங்களின் அடிப்படையில் சிலர் பின்வருமாறு கூறுவர். : நூல்களில் மும் மூர்த்திகள் முதலிய கடவுளர் பலர் பேசப் பெறுகிறார்கள். வெவ்வேறு தேவர்களது பெயர்களும், அவர்களுக்கு ஏற்ற வழிபாட்டு முறைகளும் சொல்லப் பெறுகின்றன. ஆகவே உலகிற்கு முதல்வர் பலர் உளர் எனக் கொள்ளுதலே பொருத்தமாகும். மேலும் தேர் செய்தல் முதலிய தொழில்களை ஒருவன் மட்டுமே செய்வதில்லை. பலர் கூடியே செய்கின்றனர். அப்படியிருக்க, அத்தேரினும் மிகப் பெரிய தாய், மிகப் பலவகையாய் அமைந்த இவ்வுலகைப் படைத்தல் முதலிய தொழில்களை ஒருவனே செய்வான் எனல் பொருந்தாது. பலர் கூடியே செய்வர்.

இக் கூற்றை மறுத்து சங்கார காரணன் ஒருவனே முதல்வன்; ஏனையோர் முதல்வர் அல்லர் என்பாராய்,

சங்காரமே முதல்

என மேற்கோளை அமைக்கின்றார் ஆசிரியர்.

சங்காரம் என்பது சங்கார காரணனைக் குறித்தது. சங்காரமே என்பதில் உள்ள ஏகாரம் முதல்வனாம் தன்மையை ஏனையோரினின்றும் பிரித்தது. இதனால் அவர்கள் முதல்வர் அல்லர் என்பது பெறப்பட்டது.

ஏது - விளக்கம்

இனி, சங்கார காரணன் ஒருவனே முதல் என்பதனை நிறுவுதற்குக் கூறும் ஏதுவை நோக்குவோம்.

பிற கடவுளர் முதல்வன் வழியில் நிற்றற்கு உரியர்

ஏதுவில் சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் என்றது உயிர்த் தொகுதியைக் குறிக்கும். உயிர்கள் சுட்டுணர்வு உடையன. சுட்டுணர்வாவது, பொருள்களை அறியுங்காலத்தில் ஒரு சேர அறிய மாட்டாது, ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே அளவிட்டு அறிதல் ஆகும். இது பற்றியே உயிரறிவு சிற்றறிவு எனப்படுகிறது.

இதற்கு மாறாக, இறைவனது அறிவோ எல்லாவற்றையும் ஒரு கணத்தில் ஒருங்கே அறிந்து நிற்கும் பேரறிவாகும்; அவ்வறிவு வியாபக அறிவு என்றும், முற்றறிவு என்றும் சொல்லப்படும். அத்தகைய அறிவு அவன் ஒருவனுக்கே உண்டு.

சிற்றறிவுடைய உயிர்கள் தனித்து நிற்கும் சுதந்திரம் உடையன அல்ல; பிற கடவுளர் எல்லாம் இந்த உயிர் இனத்தவரே. ஆதலால் முற்றறிவுடைய முதல்வன் வழிப்பட்டே நிற்றற்கு உரியவர்.

தேர் முதலியவற்றைச் செய்யும்போது அவரவரும் தம்தம் போக்கில் சுதந்திரமாகச் செய்வாரல்லர்; ஒருவனைத் தலைவனாகக் கொண்டு அவன் ஏவியவாறே செய்வர். அவ்வாறே பிற கடவுளரும், சங்கார காரணன் ஒருவனே தலைவனாக, அவது ஆணை வழி நின்றே தத்தம் தொழில்களைச் செய்வர் என்பது புலனாகும்.

இவ்வேதுவினால் சங்கார காரணன் ஒருவனே முதல் என்ற கருத்து நிலைநாட்டப் பெற்றமை காணலாம்.

இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் ஆசிரியர் எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக்காட்டு வெண்பா

5. ஒன்றலா ஒன்றால் உளதாகி நின்றவாறு
ஒன்றலா ஒன்றில் அவை ஈறாதல்- ஒன்றலா
ஈறே முதல்; அதனின் ஈறலா ஒன்றுபல
வாறே தொழும்பு ஆகும் அங்கு.

இதன் பொருள்:

உயிர்த்தொகுதி யாவும் ஒப்பற்ற ஒரு முதல்வனால் உடம்போடு கூடித் தோற்றம் எய்தி, நிலைபெற்றுப் பின் அவ்வொருவனால் இறுதியை எய்தும். இறுதியைச் செய்யும் ஒருவனாகிய அந்தச் சங்கார காரணனே முதல் ஆவதன்றிப் பிறர் முதல் ஆகார் என்பது மூன்றாம் அடியில் ஈறேமுதல் என்பது வரை உள்ள பகுதிக்குப் பொருளாகும்.

இவ்விடத்தில் ஓர் ஐயப்பாடு நிகழலாம். அஃதாவது உயிர்கள் சுட்டுணர்வு உடையனவாய், சுதந்திரமின்றி நிற்றலால் அவை முதற் கடவுள் ஆகமாட்டா என்றது பொருந்தும். ஆயின் கட்டுநிலை நீங்கி முத்தி பெற்ற போது அவை சுட்டுணர்வு நீங்கி இறைவனைப் போல வியாபகவுணர்வைப் பெற்று நிற்கும். அந்நிலையில் அவை இறைவனோடு ஒப்ப முதல்வராய் நின்று, இறைவன் செய்யும் தொழிலையெல்லாம் செய்யும். ஆகவே உலகிற்குப் பல முதல்வர் உள்ளனர் எனக் கொண்டால் என்ன? என்பதே அவ் ஐயம். அதற்கான விடை பிற்பகுதியில் கூறப்படுகிறது.

அவ்வொரு தனி முதல்வனைப் போல அழிவில்லாததாகிய உயிர் முத்தி பெற்ற அவ்விடத்தும் அம்முதல்வனுக்கு அடிமையேயாய் நிற்கும் என்பதாம்.

பதவுரை:

அவை - உயிர்த் தொகுதியாவும்

ஒன்றலாஒன்றல் - அத்தொகுதியுள் ஒன்று எனப்படாத, ஒப்பற்ற தனிப்பொருளாகிய கடவுளால்

உளதாகி - உடம்போடு கூடித் தோற்றத்தை எய்தி

நின்றவாறு - நிலை பெற்றவாறே

ஒன்றலாஒன்றில் - அக்கடவுளிடத்தில்

ஈறாதல் - ஒடுக்கத்தை அடைதலால்

ஒன்றலா ஈறே - மேற்கூறியவாறு உயிர்த்தொகுதியுள் ஒன்றாகாது அவ் உயிர்களைத் தோற்றுவித்து நிறுத்திப் பின் அவற்றிற்கு இறுதியை உண்டாக்குகிற சங்கார காரணனாய் உள்ள ஒருவனே

முதல் - உலகிற்கு முதற் கடவுள். (இதுவரையில் உலகை நடத்துதற்கு முதற் கடவுளர் பலர் உள்ளனர் என்பார் கூற்றை மறுத்து, அவர்களெல்லாம் உயிர்களே என்றும், அவர்களைத் தோற்றுவித்து நிறுத்திப் பின் இறுதியை எய்துவிப்பவனாகிய சங்காரக் கடவுள் ஒருவனே முதற்கடவுள் ஆவான் என்றும் கூறப்பட்டது).

(இனி, பாசத்தின் நீங்கி முத்தி பெற்ற உயிர்கள் முதற் கடவுளோடு ஒப்ப நின்று அவன் செய்யும் தொழிலையெல்லாம் செய்யும் என்பார் கூற்று மறுக்கப்படுகிறது)

அதனின் ஈறு அலாஒன்று - அம் முதற்கடவுள் போல அழிவின்றி நிற்பதாகிய உயிர் (அழிவின்மை என்ற அளவில் முதல்வனோடு ஒப்பதாயினும்)

அங்கு - முத்தி பெற்ற அவ்விடத்தும்

பலவாறே தொழும்பு ஆகும் - பல வகையானும் அம் முதற் கடவுளுக்கு அடிமையாய் நிற்குமேயன்றிச் சுதந்திரம் உடையதாகாது.

விளக்கம்

ஒன்றலா ஒன்று என்பது உயிர் வகைகளுள் ஒன்றாகாத ஒப்பில்லா முதல்வன் எனப் பொருள்படும்.

இறைவனோடு ஒப்பார் ஒருவரும் இல்லாமை பற்றியே அவனை ஒருவன் என்று நூல்கள் குறிப்பிடும். ஒருவன் என்னும் ஒருவன் காண்க என்பது திருவாசகம்.

சங்காரமே முதல் என்று மேற்கோளில் கூறியது போலவே இங்கும் ஈறே முதல் என்றார்.

உயிர் இறைவனுக்கு அடிமையாய் நிற்றல்:

உயிர்கள் ஒரு காலத்தில் தோன்றியன அல்ல; இறைவனால் படைக்கப்பட்டனவும் அல்ல. இறைவன் என்று உண்டோ அன்றே உயிர்களும் உள்ளன; இறைவனைப் போலவே அழிவின்றி உள்ளன. உயிர் உடம்போடு கூடுதலே பிறத்தல் என்றும், உடம்பை விட்டு நீங்குதலே இறத்தல் என்றும் கூறப்படும். ஆகவே அழிவு என்பது உடம்பிற்கேயன்றி உயிருக்கு இல்லை.

அழிவு இன்மை என்ற தன்மையில் உயிர் இறைவனோடு ஒப்பதாயினும் பிற தன்மைகளில் எல்லாம் அஃது இறைவனுக்கு அடிமையேயாக நிற்கும். எவ்வாறு என்பதை நோக்குவோம்.

உயிர் இறைவனைப் போல அறிவுப் பொருளாயினும் அது தானாக அறியும் திறனுடையது அன்று; இறைவன் அறிவிக்கவே எதையும் அறியும்; அவ்வாறே இறைவன் செலுத்தவே அது செயற்படும். எனவே உயிரினது அறிவும் செயலும் இறைவனைச் சார்ந்தே விளங்குவனவாகும்.

இருளில் உள்ள கண் அவ்விருளை நீக்கிக் கொள்வதற்குச் சூரியவொளி வேண்டும்; பின் பொருளைக் காண்பதற்கும் சூரியவொளியின் உதவி வேண்டும். அதுபோல, உயிர் தன்னைப் பிணித்துள்ள அறியாமையாகிய இருளை நீக்கிக் கெள்வதற்கு மட்டுமின்றி, இறைவனைக் கண்டு அனுபவிப்பதற்கும் இறைவனது உதவி இன்றியமையாததாகும். இவ்வாறு பல வகையிலும் உயிர் இறைவனுக்கு அடிமையாயே நிற்கும் என்பதை உணர்த்துதற்கு அதனின் ஈறலா ஒன்று பலவாறே தொழும்பாகும் என்றார்.

அங்கு என்பது முத்தி நிலையைக் குறித்தது. முத்தி நிலையில் பேரின்பத்தை அனுபவித்தலாகிய அச்செயலுக்கு மட்டும் உரியதாய் நிற்குமன்றி, இறைவனைப் போலப் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்வதற்கு அதற்கு உரிமையில்லை என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

முதற் நூற்பா முடிந்தது

No comments:

Post a Comment