Saturday 23 September 2017

முதல் வணக்கம் முதல்வனுக்கே! - 3பிரணவ ஒலியின் எழுத்து வடிவம் 'ஓம்’. இதைச் சித்திரமாக வரைந்தால், யானை முகத்தைப் போன்று இருக்கும். எனவேதான், பிரணவப் பொருளான பிள்ளையாரும் யானை முகத்தோடு திகழ்கிறார்.
பிள்ளையாருக்கே சிறப்பானது துதிக்கை. மிருகங்களில் யானைக்கு மட்டுமே துதிக்கை உண்டு. மரங்களில் ஆலமரத்துக்கு மட்டுமே விழுதுகள் உண்டு. சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை உபதேசித்த ஸ்ரீதட்சிணாமூர்த்தி அமர்ந்தருள் செய்வதும் ஆலமரத்தின் அடியில்தானே! அதனால்தான் அவரை 'ஆலமர் செல்வன்’ எனப் போற்றுகிறார்கள். ஆலமர விழுதும் ஆனைமுகனின் துதிக்கையும் மட்டுமே நிலத்தைத் தொடுகின்றன.
விநாயகர் எளிமையான கடவுள். அவரை உருவாக்குவதும், வழிபடுவதும் மிக எளிது. 'பிடித்து வைத்தால் பிள்ளையார்’ எனும் பழமொழியை அனைவரும் அறிவர். மண், மஞ்சள், மாவு, சாணம், அரைத்த சந்தனம், அச்சு வெல்லம்... இப்படி எதில் வேண்டுமானா லும் பிடித்துவைத்தால் பிள்ளையார் ஆகிவிடுவார்! கல், மரம், பளிங்கு, செம்பு, வெள்ளி, தங்கம், ஐம்பொன் ஆகியவற்றைக் கொண்டும் பிள்ளையார் விக்கிரகத்தை வடிக்கலாம். வெள்ளெருக்கு வேரில் விநாயகர் திருவுருவம் செய்து வழிபடுவது விசேஷமானது. அரிசி முதலான தானியங்களிலும் கணபதியை ஆவாஹனம் செய்யலாம்.
பிள்ளையாருக்குக் கோயில் அமைப்பதும் மிக எளிது. குளக்கரை, ஆற்றங்கரை, அரச மரத்தடி, முச்சந்தி, நாற்சந்தி, சதுக்கம்... என எங்கு வேண்டுமானாலும் பிள்ளையார் கோயிலை அமைக்கலாம். வீட்டுக்கு எதிரே சாலை இருப்பின், அதனைக் 'குத்தல்’ என்பார்கள். இதைத் தவிர்க்க, சாலைக்கு எதிரே ஒரு விநாயகரை வைத்து வழிபடுவதால், குத்தல் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. விநாயகரை எந்தத் திசையில் வேண்டுமானாலும் பிரதிஷ்டை செய்யலாம். இவரை வழிபடுவதும் எளிது. அருகம்புல் சார்த்தி, தலையில் குட்டிக்கொண்டு, காதைப் பிடித்துத் தோப்புக்கரணம் போட்டால் போதும், அவர் திருப்தி அடைந்துவிடுவார். விநாயகருக்குப் பிடித்தமான நிவேதனங்களில் பழங்கள், பருப்பு வகைகள் என பற்பல பொருட்கள் உண்டு என்றாலும், அவருக்கு மிகவும் இஷ்டமானது மோதகம் (கொழுக்கட்டை).
இது, தமிழ்நாட்டினர் மட்டுமே நிவேதனம் செய்யும் தனிச் சிறப்பு உடையது. பழந்தமிழ் இலக்கியத்தில் இது 'கவவு’ என்ற பெயரால் குறிக்கப்பெறுகிறது. அரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றைக்கொண்டு கொழுக்கட்டை செய்வார்கள். பூர்ணம் இல்லாமல், வெளியே இருக்கும் மாப்பண்டம் சுவைக்காது. ஆனால், பூர்ணத்துடன் சேர்த்து உண்டால், அந்த மாப்பண்டமும் இனிக்கும். அதுபோல, பக்தியும் (மாவும்) ஞானமும் (பூர்ணமும்) இருந்தால்தான் வழிபாடு பலன் அளிக்கும். இதுவே மோதகத்தின் உள் அர்த்தம்.
மோதகத்தில் தித்திப்புப் பூரணத்தை மா(வு) மூடியிருக்கிறது. மோதகம் என்றால் ஆனந்தம். ஆனந்தம் அளிப்பவர் விநாயகர். 'மா’ என்றால் ஆண் யானை என்று பொருள் உண்டு.
மோதகத்தின் உள்ளே தித்திப்பான பொருள் பூர்ணம். ஆனந்தம் நிறைந்த பூர்ண வஸ்துவான  பிரம்மத்தின் மேல் யானை என்கிற 'மா’வின் ரூபத்தை வைத்து மூடிக்கொண்டு விக்னேச்வரர் காட்சியளிக்கிறார். அவருடைய வயிறும் உருண்ட கொழுக்கட்டை வடிவத்தில் உள்ளது. உருண்டைக்கு எங்கு ஆரம்பம்- எங்கு முடிவு என்று எதுவும் சொல்ல முடியாதல்லவா? அதைப்போல தாமே பூர்ணமான வடிவம் என்பதைக் காட்ட பானை (பேழை) வயிற்றோடு காட்சியளிக்கிறார். அண்டங்கள் அதற்குள்ளே இருப்பதால் அது உருண்டையாக உள்ளது. அதனால்தான் அவருக்கு 'லம்போதரர்’ என்று பெயர் (லம்பம்-தொங்குவது உதரம்- வயிறு).
விநாயகர் திருவுருவம் உணர்த்தும் தத்துவங்களும் அற்புதமானவை. விலங்கு, பூதம், மனிதர், தேவர் ஆகிய நான்கு கூறுகள் இணைந்த ஒப்பற்ற அமைப்பு விநாயகரின் திருவடிவம். யானை முகம், தும்பிக்கை, யானைக் காது ஆகியன விலங்கின் கூறு; பேழை வயிறும் குறுகிய கால்களும் பூதங்கள் அமைப்பு; நான்கு கரங்கள்- தேவர்கள் அமைப்பு; வலப்புறம் தந்தம் இல்லாதது- பெண் கூறு; இடப்புறம் தந்தம் உள்ளது- ஆண் கூறு. முகம் அஃறிணையாகவும், ஏனைய உறுப்புகள் உயர்திணையாகவும் திகழும் பிள்ளையார் திருவடிவம், அனைத்துமாக விளங்கும் பரம்பொருள் ஆகும்.
யானை முகம்- அறிவை யும் ஆற்றலையும் அறிவிக் கிறது. துதிக்கை- எல்லா மந்திரங்களையும் தமக்கு முதலாகக் கொண்டு உச்சரிக்கப்படும், நாதத் தத்துவத்தின் பொருளாய் விளங்கும், 'ஓம்’ எனும் பிரணவத்தின் ஒலிக்குரிய வடிவத்தை காட்டுகிறது. பேழை வயிறு- உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கருணை யுடன் காக்கும் தன்மையை உணர்த்துகிறது. நெற்றிக்கண்- பரஞானத்தையும், மற்ற இரு கண்களும் இக ஞானத்தையும் காட்டுகின்றன. 'இகம் - பரம் இரண்டையும் அறிதலே நல்லறிவு ஞானக் களஞ்சியமாகிய விநாயகரிடம் இத்தகைய நிறை ஞானம் பொலிந்துள்ளது’ என்பார் சுவாமி சித்பவானந்தர்.
விநாயகருடைய திருக்கரங்களின் எண்ணிக்கையி லும் தனிச்சிறப்பு உண்டு. ஏனைய தெய்வங்களுக்கு எல்லாம்,  2, 4, 6, 8, 10, 12, 16 என இரட்டைப் படையில் கரங்கள் உண்டு. விநாயகருக்கு  மட்டுமே ஒற்றைப்படை எண்ணிக்கையில் திருக்கரங்கள். ஆமாம், தும்பிக்கையையும் சேர்த்து அவருக்கு ஐந்து கரங்கள். அவற்றைக் கொண்டு ஐந்து தொழில்களைச் செய்கிறார் விநாயகர். பாசம் ஏந்திய திருக்கரம்- படைத்தல்; அங்குசம் ஏந்திய கரம்- அழித்தல், ஒற்றைக் கொம்பினை ஏந்திய கரம்- காத்தல்; துதிக்கை- மறைத்தல்; மோதகக் கை- அருளல்... என ஐந்து தொழில் களை (பஞ்ச கிருத்தியங்களை) உணர்த் துகின்றன; பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவம் ஆகிய ஐந்து மூர்த்தங்களையும் உள்ளடக்கியது கணபதி வடிவமே என்பதை அறிவிக்கின்றது.
மனிதன் நிறையக் கேட்க வேண்டும்; குறைவாகப் பேச வேண்டும்; அதுவே அறிவு வளர்ச்சிக்கு வழி. விநாயகரது அகன்ற காதுகள் நிறையக் கேட்கவேண்டும் என்பதைக் குறிக்கும். வாயை மறைத்திருக்கும் கை (துதிக்கை), குறைவாகப் பேச வேண்டும் என்பதையும், அருள்மொழிகளைக் கேட்கும்போது கையால் வாயைப் பொத்திப் பணிந்து கேட்கவேண்டும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றனவாம்.
இதுகுறித்து, காஞ்சி மகா பெரியவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
- பிள்ளையார் வருவார்...

திருப்பட்டூர் அற்புதங்கள்! - 3


ந்த உலகின், ஈடு இணையில்லாத உறவில், மிகவும் உன்னதமானது தோழமைதான்! நல்லதொரு நட்பு கிடைத்துவிட்டால், மனதுள் எந்தத் துக்கமும் தங்காமல் ஓடிவிடும்; எப்பேர்ப்பட்ட காயங்களுக்கும் நண்பனின் ஒற்றை வார்த்தையே மருந்தாகிவிடும்!
தாய்- தந்தை அன்பானவர்களாக இருக்கலாம். நம் மீது அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால், தலைமுறை இடைவெளியில், நம்மைப் புரிந்துகொள்ளாத நிலை ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. சகோதர கூட்டம் இருப்பினும், ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்துப் பாசம் காட்டுவதும், பரிகசிப்பதும் பல இடங்களில் அரங்கேறுவது நாம் அறிந்ததுதானே? ஆனால், உண்மையான நண்பன் என்பவன், ஒரு கண்ணாடியைப் போன்றவன். கண்ணாடிக்கு எதிரில் நின்றால், நம்முடைய முகம் தெரிவது போல், நம்மையும் நம்முடைய உணர்வுகளையும், மிகத் துல்லியமாக அறிந்து, உணரக்கூடியவன்; பாரபட்சமின்றி முகத்துக்கு நேராக எடுத்துச் சொல்லி நம்மை வழிநடத்துபவன். இதைத்தான் வள்ளுவரும் 'முகம்நக நட்பது நட்பு அன்று, நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு’ என்று சொல்கிறார்.
நண்பர்கள், நம் குற்றங் குறைகளைச் சொல்லிப் புரிய வைப்பவர்கள் மட்டுமல்ல; நல்லது கெட்டதுகளைப் பதமாக எடுத்துரைத்து நல்வழிப்படுத்துபவர்கள் மட்டுமல்ல; கிட்டத்தட்ட ஆயுள்வரைக்கும் நம் கூடவே வரக்கூடியவர்கள். எந்த எதிர்பார்ப்புமின்றிப் பழகுகிற, பழகிவிட்டால் உயிரையே கொடுப்பவர்கள்தான், தோழர்கள். அதனால்தான், உயிர் காப்பான் தோழன் எனப் போற்றுகிறது இந்த உலகம்!
கைகோத்து நடக்கிறவர்கள் நண்பர்கள். அதே நேரம், 'உன் இலக்கு வேறு; என் இலக்கு வேறு’ என வெவ்வேறு திசையில் பயணிப்பார்கள். அந்த இலக்கை அடைவதற்கான பணியில் இருக்கும்போது, நண்பர்களைச் சந்திப்பதற்கும் அளவளாவுவதற்கும் குறைவான நேரம் மட்டுமே ஒதுக்குவார்கள். எனினும், நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம்தான்! அவர்கள் இருவரும் ஒரே திசையில் பயணிப்பவர்களாக, ஒத்த கருத்துக்கள் கொண்டவர்களாக, ஒரே இலக்கை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டவர்களாக அமைந்துவிட்டால், அதைவிடப் பேரின்பம் வேறில்லை!
அப்பேர்ப்பட்ட இனிய நண்பர்கள் அவர்கள். அந்த இரண்டு பேரின் இலக்கும் ஒன்றுதான். அது, கடவுளை அடைவது; சதாசர்வகாலமும் சதாசிவத்தை நினைத்தபடியே வாழ்ந்து, முக்தி பெறுவது! அவர்கள்... வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும்!
திருப்பிடவூரில் இருந்து, நண்பர் வியாக்ரபாதர் அழைத்ததும், துள்ளிக் குதித்து எழுந்த பதஞ்சலி முனிவர், உடனே புறப்படத் தயாரானார். அவரது முகத்தில் அப்படியரு பரவசம்; அவரது மனத்தில் தாங்கொணாத எழுச்சி. ஒருபக்கம் நண்பனைப் பார்த்து நாளாகிவிட்டது... இதோ, பார்க்கப் போகிறோம் எனப் பூரிக்கிறது அவருடைய நெஞ்சம். இன்னொரு பக்கம்... தென்னாடுடைய சிவனாரின் லீலைகளை எண்ணிச் சிலிர்க்கிறது அவரின் திருவுடல்.
'சிவனாரே... நமசிவாயனே... தென்னாடுடைய என் ஈசனே! உமக்குத்தான் எங்கள் மீது என்னவொரு கருணை; எங்கள் மீது எவ்வளவு பிரியம்! உமக்குக் கோடானுகோடி நன்றிகளை, இந்த ஜென்மம் இருக்கும்வரை சொல்லிக் கொண்டே இருப்போம். நீ என்னை ஆட்கொள்ளும்வரை, சிவநாமத்தை உச்சரிப்பதே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருவேன்’ என்று சொல்லிவிட்டுக் கழுத்தில் இருந்த ருத்திராட்சத்தைத் தொட்டுக்கொண்டே, கண்களை மூடித் திளைத்தார் பதஞ்சலி முனிவர். அவருடைய கண்களில் இருந்து கரகரவென வழிந்த நீர், கன்னங்களைத் தொட்டு, அவரது நெடிய தாடிகளுக்குள் புகுந்தது.
'அடேய் நண்பா... என்னைவிட அதிர்ஷ்டக்காரனடா நீ!’ என்று உள்ளுக்குள், வியாக்ரபாதரைப் பாராட்டிக் கொண்டார் பதஞ்சலி மகரிஷி.
'தில்லை மூவாயிரம்; திருப்பிடவூர் மூவாயிரத்து ஒன்று’ என்பார்கள். அதாவது, தில்லையில் 3,000 அந்தணர்கள் உண்டு; திருப்பிடவூர் திருத்தலத்தில் அதைவிடக் கூடுதலாக, 3,001 அந்தணர்கள் வாழ்கின்றனர் என்பது பொருள். அத்தனை அந்தணர்களும், வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ய... அதில் உண்டான அதிர்வலைகள் காற்றில், மரம், செடி-கொடிகளில், விதைகளில், தண்ணீரில், பூக்களில், பூக்களின் நறுமணங்களில், பூமியில் உள்ள புற்களில், கற்களில், முட்களில், மண்ணில்... என அங்கிங் கெனாதபடி எங்குமாக, இன்றைக்கும் பரவிக் கிடப்பதாக ஐதீகம். அப்பேர்ப்பட்ட புண்ணிய பூமி, திருப்பிடவூர். திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மருவியதாகச் சொல்வர்.
இந்தப் பெருமைகளைக் கொண்ட திருத்தலத்தில் இருந்து, வியாக்ரபாதர் அழைக்கிறார் என்றால், அநேகமாக அந்த இடம், தவம் செய்வதற்கும், தவத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து போவதற்கும் ஏற்ற இடமாக இருக்கும் என்று உள்ளுக்குள் நினைத்துப் பூரித்தார் பதஞ்சலி முனிவர்.
அதிகாலையில் எழுந்து, ஆற்றில் நீராடிவிட்டு, இரண்டு கைகளாலும் தண்ணீரை அள்ளும்போது, அந்த நீரில் சூரியனின் பிம்பம் தெரிந்தது. கிட்டத்தட்ட, அந்தச் சூரியனை, பெருஞ்சுடரொளியை கைக்குள் கொண்டுவந்து விட்டது போன்ற பிரமை ஏற்பட்டது. இதுவொரு நல்ல சகுனம் என்பதாக எண்ணிப் பூரிக்கும்போதே, சூட்சும ரூபமாக அங்கே பிரத்யட்சமானார் வியாக்ர பாதர். 'காவிரிக்கரையை ஒட்டியே நடந்து வந்து, வடக்குப் பக்கமாகத் திரும்பினால், அங்கே, காவிரியைக் கடந்து, கொள்ளிடத்தையும் கடந்து இன்னும் வடக்கில் பயணித்தால், திருப்பிடவூர் திருத்தலம் வந்துவிடும். அங்கே வா; அருள் பெறுவோம்!’ என அவர் சொல்லிவிட்டு மறைய... நிமிர்ந்து, வானம் பார்த்து, சூரிய பகவானை வணங்கினார் பதஞ்சலி முனிவர். குனிந்து, காவிரி நீரை அள்ளியெடுத்து கண்களில் விட்டுக்கொண்டார். உடலும் மனமும் குளிர்ந்து போயின!
'திருப்பிடவூர், திருப்பிடவூர்...’ என்று உள்ளுக்குள் இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தது அவருடைய உள்ளம். கால்கள், வியாக்ரபாதர் சொன்ன திசையில் பயணிக்கத் துவங்கின.
'நாராயணா, இந்த மண்ணுலகுக்கு என்னை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தீர்கள். தங்களின் ஆசீர்வாதத்தால், சிவனருளைப் பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது’ என திருமாலை, ஸ்ரீநாராயணபெருமாளை கண்கள் மூடி வணங்கினார், பதஞ்சலி முனிவர். அடுத்த கணம் சட்டென்று பாம்பாக உருவெடுத்தார் அவர்!
- பரவசம் தொடரும்

முதல் வணக்கம் முதல்வனுக்கே! - 2

ஓம் கணானாம் த்வா கணபதிஹூம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமச்ர வஸ்தமம் I
ஜ் யேஷ்ட ராஜம் பிருஹ்மனாம் பிருஹ்மணஸ்பத
ஆன: ச்ருண் வன் னூதிபி: ஸீதஸாதனம் II
- ரிக்வேதம் 2-23-1                         
பொருள்: ஓம்! தேவ கணங்களுக்குத் தலைவனாகி, கணபதி எனப் பெயர் பெற்ற உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் பெரும் மதிப்புக்குரிய அறிவாற்றலில் சிறந்த கவிசிரேஷ்டர்; ஞானச்செல்வர்; ஒப்பற்ற புகழ் படைத்தவர். வேதத்துக்கு வேதநாயகராக விளங்குபவரே, எங்களது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்து, உமது இதயத்தில் எங்களுக்கு இடம் அளிப்பீராக!
விநாயகர் வழிபாடு இந்து சமயத்துக்கு தொன்மையானது. பிள்ளையார் பூஜையின்றி எந்த ஒரு வழிபாடோ,  யாகமோ, எதுவும் தொடங்குவ தில்லை. விநாயகர் எல்லா வினைகளையும் இடர்களையும் அகற்றுபவர். ஆதலால், எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும், முதல் வழிபாடு அவருக்குத்தான்.
இந்து சமயத்தின் ஆறு வகை வழிபாட்டுப் பிரிவில்- காணாபத்யம், கௌமாரம், சைவம், வைணவம், சாக்தம், சௌரம் ஆகிய அனைத்திலும் விநாயகரை வணங்கிய பின்னரே தங்கள் தெய்வ வழிபாட்டைத் தொடங்குவர். இதில், காணாபத்யர் ஸ்ரீகணபதியை மட்டுமே வணங்குவர்.
விநாயக அவதாரம் குறித்து புராணங்கள் என்ன சொல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வோமா?
ஒருமுறை, சிவபெருமானும் உமாதேவியும் கயிலை மலையிலுள்ள வசந்த மண்டபத்தில் இருக்கும் ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவற்றில் பிரணவத்தின் ஓவியமும் இருந்தது. அளவிடற்கரிய பெருமை வாய்ந்த பிரணவத்தை, உலக மக்கள் யாவரும் புறக்கண்ணாலும்  தரிசித்து வழிபடுவதற்கு ஏற்ற வகையில், ஒரு தெய்வப் பிறப்பைத் தோற்றுவிக்க வேண்டும் என இருவரும் மனதுக்குள் எண்ணினர். சிவபெருமான் களிறு (ஆண் யானை) வடிவத்தையும், உமாதேவியார் பிடி (பெண் யானை) வடிவத்தையும் அடைந்து பிரணவ விநாயகரைத் தோற்றுவித்தனர்.
உலகில் துக்கமும் நோயும் பிடியாதிருக்கும் பொருட்டு கணபதியை அருளினாராம் சிவபிரான். ஸ்ரீவிநாயகரின் அவதாரச் சிறப்பை மிக அற்புதமாகப் போற்றுகிறார் திருஞானசம்பந்தர்.
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடி கண பதிவர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே
என்றும், 'இப்பார் பெருத்து மிக்கதுக்கமும் பேரா நோய் தாம் ஏயாமைப் பிரிவு செய்தவன்’ எனவும் பாடுகிறார் அவர். 'தனது திருவடியை வழிபடும் அன்பர்களின் இடர்களைக் களைந்து இன்பம் அளிப்பதற்கு வந்தவர். உலகில் பெருகி வரும் துக்கத்தையும் நீங்காத நோயையும் அணுகாமல் இருக்கவும், அடியார் இன்பமுறவும் தோன்றினார் விநாயகர்’ என்கிறார் திருஞானசம்பந்தர். காஞ்சி புராணமோ, நல்லார்க்கும் வானோர்க்கும் நண்ணும் இடையூறு களை- தொல்லைகளைப் போக்க விநாயகரின் அவதாரம் நிகழ்ந்தது என்கிறது.
கந்த புராணம், காஞ்சி புராணம், சுப்ரபேதாகமம், சம்பந்தர் தேவாரம் ஆகியன, கணபதியின் தோற்றம் குறித்து ஒரேவிதமாகவே குறிப்பிடுகின்றன. விநாயகர் புராணத்திலோ அவரது அவதாரம் குறித்து 5 கதைகள் உண்டு.
திருக்கதைகள் மட்டுமா? விநாயகரின் திரு வடிவமும், அவரின் திருநாமங்களும்கூட மகத்துவமானவை! கணபதியையே பரம் பொருளாகக் கொண்ட காணாபத்யர், மற்ற தெய்வங்களையும் கணபதிக்குள் காண்பார்கள். கணேசரின் நாபி- பிரம்ம சொரூபம்; முகம்- விஷ்ணு அம்சம்; முக்கண்கள்- சிவாம்சம்; இடது பாகம்- சக்தி அம்சம்; வலது பாகம்- சூரிய அம்சம் என்பார்கள்.
அதேபோல், கணபதி எனும் திருப் பெயரில் க- மனம் மற்றும் வாக்கு; ண- மனம், வாக்கு ஆகியவற்றைக் கடந்த நிலை; பதி- மனம், வாக்கு இரண்டுக்கும் தலைவன் (ஈசன்) என்று பொருள்.
க- அறிவு; ண- வீடு; கணேசர் அறிவுக்கும் வீட்டுக்கும் உரிய தெய்வம் என்றும் பொருள் கூறுவர். அதேபோன்று, விநாயகர் என்றால், தனக்கு வேறு ஒரு தலைவன் இல்லாதவர் என்று பொருளாம். வினைகளுக்கும் செயல்களுக்கும் தலைவர் என்றும் கூறலாம்.
தேவர்கள் எவருக்கும் இல்லாத, அளவில்லாத ஆற்றல் வாய்ந்தவர் விநாயகர். அவர், தம்மை வழிபடும் அடியார்களின் இடையூறுகளை நீக்கி, இன்பத்தில் ஆழ்த்துகிறார். அதாவது இருள்மயமான ஆணவம், மாயை, கன்மம் ஆகியவற்றை அகற்றி, ஒளிமயமான பரமாகாச மண்டலத்தில் விடுபவர், பிள்ளையார்.
சிவபிரானின் புதல்வரான கணபதி, தந்தையைப் போன்றே செம்மை நிறம் உடையவர். பிள்ளையாரின் ஒடிந்த கொம்பு, கிரீடம், ஒடியாதிருக்கும் ஒற்றைக் கொம்பு, தும்பிக்கை, பேழை வயிறு ஆகியவற்றை முறையே இயைந்து நோக்கினால், அவரின் திருவுரு ஓங்கார வடிவமாக அமைந்திருப்பதை உணரலாம். மந்திரங்களில், பிரணவ மந்திரமாக விளங்கும் தெய்வம் அவர்!
ஆமாம்... எழுத்துகளுக்கெல்லாம் 'அகரம்’ மூலமும் முதலும் ஆவது போல், உலகுக்கெல்லாம் மூலமும் முதலும் ஆகிய இறைவன் விநாயகர்.
உலகுக்கு முதல் நாதம் ஓங்காரமே! அந்த நாதத்தின் திருவுருவே ஞானநாயகனாகிய விநாயகர். 'ஓம்’ என்ற ஒலியுலக வித்தே கணபதி.
- பிள்ளையார் வருவார்...

திருப்பட்டூர் அற்புதங்கள்! - 2

'பக்தர்களைச் சோதனைக்கு உள்ளாக்கிப் பார்ப்பதில்தான், சிவனாருக்கு எத்தனை சந்தோஷம்?!’ என்று சிவனார்மீது செல்லக் கோபம் கொண்டிருந்தார் வியாக்ரபாதர்.
'ஏழெட்டு நாட்களாகவே, இந்த வனத்தில் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது. அபிஷேகத்துக்கு என்ன செய்யப்போகிறோம் என்று கவலையாக இருந்தது. இருந்தாலும், நேற்றிரவுகூடக் கொஞ்சம் தண்ணீர் இருந்ததே! நாளைய அபிஷேகத்துக்கு இதுபோதும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு தூங்கி எழுந்தால்,  இன்று அத்தனையும் காய்ந்துவிட்டிருக்கிறதே! இதென்ன சோதனை?! சிவனாருக்கு எப்படி அபிஷேகம் செய்யப் போகிறேன்?!’ என்று வியாக்ரபாதர் தவித்து மருகிய வேளையில்தான், வானத்தில் கங்கை நீரைச் சுமந்தபடி, பறந்து சென்றுகொண்டிருந்தது ஒரு யானை.
சந்தோஷமானார் வியாக்ரபாதர். தவித்த வாய்க்குத் தண்ணீர் தருகிற உலகில், சிவலிங்க அபிஷேகத்துக்குத் தண்ணீர் கிடையாது என்று எவரேனும் சொல்வார்களா? அதிலும், பக்திக்குப் பெயர் பெற்ற மிருகங்களில் முக்கிய இடத்தில் உள்ள யானையார், தண்ணீர் தராமல் இருப்பாரா, என்ன? - யோசித்த வியாக்ரபாதர், ''யானையே!  கொஞ்சம் இறங்கி வா! உன்னால் ஒரு உதவி ஆக வேண்டியிருக்கிறது!'' என்றார்.
அதற்கு அந்த யானை, ''மன்னிக்கவேண்டும் முனிவரே! நான் அவசர ஜோலியாகச் சென்றுகொண்டு இருக்கிறேன். எனக்கு நேரமில்லை'' எனச் சொல்லியபடி பறந்தது. ''சரி... ஒரே ஒரு சின்ன உதவியை மட்டும் செய்து விட்டுப் போ! உனக்கும் புண்ணியமாக இருக்கும். அடியேன் அனுதினமும் சிவலிங்க பூஜை செய்து வருகிறேன். இந்த வனத்தில் இருந்த தண்ணீர் மொத்தமும் வறண்டுவிட்டது. உன்னிடம் உள்ள நீரில் கொஞ்சம் தந்து உதவினால், பூஜையில் இறங்கிவிடுவேன்’ என்றார் முனிவர் உருக்கமாக.
அந்த யானை சட்டென்று கோபமானது. ''நானும்தான் அன்றாடம் சிவபூஜை செய்கிறேன். நீங்களாவது அங்கே இங்கே அலையாமல், இருந்த இடத்திலேயே இந்த வனத்தின் நீரைக் கொண்டு அபிஷேகம் செய்கிறீர்கள். ஆனால், நான் தினமும் கங்கை வரை பறந்து சென்று, அந்த நீரை எடுத்து வந்து, ஜம்புகேஸ்வர மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறேன்! மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு வந்த இந்தக் கங்கை நீரில் இருந்து ஒரு துளிகூட எவருக்கும் தரமாட்டேன். இது, ஜம்புகேஸ்வரருக்கானது!'' என்று சொல்லிவிட்டு, வேகமாகப் பறந்தது. அந்த யானை, ஒரு குருவியின் அளவுக்குச் சிறுத்து, பின்பு கண்ணிலிருந்து மறைகிற வரைக்கும் ஆவேசமும் ஆத்திரமும் பொங்க, வெறித்துப் பார்த்தபடியே இருந்தார் முனிவர்.
பின்னர், இயலாமை கலந்து சோகத்துடன், கண்களை மூடி, சிவனாரை வேண்டினார். 'இவை அனைத்தும் உமது விளையாட்டு என்பதை அறிவேன். அதற்காக, ஒரு யானையிடம் தண்ணீர்ப் பிச்சை கேட்கும் அளவுக்கு என்னைக் கொண்டுவந்துவிட்டீர், அல்லவா? நான் உம்மீது வைத்திருக்கிற பக்தி உண்மையானால், இறைவன் அடியவர் மீது உண்மையான அன்பு காட்டுவான் என்பது சத்தியமானால், இதோ... இந்த இடத்தில், கட்டாந்தரையில், தண்ணீர் பெருக்கெடுக்க வேண்டும்; அதுவும், அந்தப் புனித நதியாம் கங்கையே இங்கு பொங்கிப் பிரவாகிக்கவேண்டும். அப்படி இல்லையெனில், இனி இங்கே சிவபூஜை செய்யமாட்டேன்!'' என்று ஆவேசத்துடன் அந்த வெறும் தரையைத் தன் புலிக் கால்களால் ஓங்கி மிதித்தார். தனது கைகளால், அந்தப் பூமியை அப்படியே பெயர்த்தெடுத்துத் தூக்கிப் போட்டார்.
அந்த இடத்தில், மெள்ள ஊற்றெடுத்தது; கொஞ்சம் கொஞ்சமாக, தண்ணீர் வரத் துவங்கியது; கண்கள் மூடி கடும் உக்கிரத்துடன் சிவனாரை நோக்கி தவமிருந்த வியாக்ரபாதரின் முகத்தில், பீறிட்டு வந்த ஊற்று நீரானது பட்டுத் தெறித்தது. சற்று நேரத்தில், அந்த இடம் அழகிய திருக்குளம் போன்று காட்சியளித்தது. அந்தப் பள்ளம், வியாக்ரபாதரின் புலிக்கால் வடிவிலேயே அமைந்திருந்தது. குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பியிருக்க, வியாக்ரபாதரின் மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. அது சாதாரண நீர் அல்ல; ஊற்றில் இருந்து பிரவாகித்தது கங்கா தீர்த்தமே! பசியுடன் இருப்பவனுக்குத் தலைவாழை இலையுடன் விருந்தென்றால், கசக்கவா செய்யும்?!
இரண்டு கைகளாலும் கங்கை நீரை அள்ளியெடுத்தார் முனிவர்; அப்படியே சிரசில் வைத்து, வழியவிட்டார்; இன்னொரு முறை அள்ளிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, முகத்தில் சப்சப்பென்று தண்ணீரால் அடித்துக் கொண் டார்; திரும்பவும் இரண்டு கைகளாலும் தண்ணீரை அள்ளினார்; கழுத்தில் ஊற்றிக்கொண்டார். இப்போது அவரது கோபம் காணாமல் போய்விட்டிருந்தது; சின்னக் குழந்தைபோல், துள்ளிக் குதிக்கலானார் வியாக்ரபாதர்.
அந்த சிவலிங்கத் திருமேனிக்கு, கை வலிக்க வலிக்க, அபிஷேகம் செய்தார். சட்டென்று ஓடி, வில்வ மரத்தில் ஏறி, மொத்த வில்வங்களையும் பறித்து வந்து, அர்ச்சித்தார். பூஜையின் நிறைவில், வில்வம் மொத்தமும் லிங்கத் திருமேனியை மறைத்திருந்தது. 'தென்னாடுடைய சிவனே! எனக்கு வரமே தேவையில்லை; இதைவிட பெரிதான வரமேதும் இல்லை!’ என்று நெகிழ்ந்தார்; கண்ணீர்விட்டு அழுதார்; அந்த சிவலிங்கத்தை அப்படியே எடுத்து, நெஞ்சில் வைத்துக்கொண்டு, கண்மூடிக்கிறங்கினார்; 'என் சிவனே... என் சிவனே’ என அரற்றினார்.
'இதோ... இந்த அடியவனால், கங்கை நீரே இங்கு வந்துவிட்டது. என்னே உனது கருணை?! கங்கை இங்கே வந்துவிட்டதென்றால், காசியம்பதியின் நாயகன் நீதானே?! அப்படியெனில் உன்னுடைய திருநாமம்- விஸ்வநாதன். நீதான் காசிவிஸ்வநாதன்; என் அன்புக்கு உரிய காசிவிஸ்வநாதன் நீதான்; நீயேதான்!
கங்கையும் வந்துவிட்டாள்; காசிவிஸ்வநாதனான நீயும் வந்துவிட்டாய். இனி, இந்தத் தலம் காசிக்கு நிகரான தலமாக அமையட்டும். இந்தத் தலத்துக்கு நாடி வரும் அனைவருக்கும், காசிக்குச் சென்ற புண்ணியம் கிடைக்கட்டும்; இந்தத் தீர்த்தக் குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன்கள் கிடைக்கட்டும்.
என் இனிய விஸ்வநாதரே! அனைவரையும் காத்தருள்வீர்; இந்தத் திருத்தலத்திலேயே தங்குவீராக!'' என்று மெய்யுருகி வேண்டினார் வியாக்ரபாதர்.
அங்கே... மெள்ள, மேகமூட்டம் எட்டிப் பார்த்தது. இடியும் மின்னலுமாக, மளமளவென வெளுத்து வாங்கியது, மழை! அந்த வனம், அதாவது திருப்பட்டூர் திருத்தலம்...  பெரு மழையில் நனைந்தது; அந்தத் தலத்தின் பள்ளங்களெல்லாம் நீரால் நிரம்பின. வியாக்ரபாதரால் உருவான அந்தப் பள்ளத்தில் கங்கை நீர் நிரம்பியிருக்க... தற்போது மழைநீரும் அதில் கலக்க... இரண்டறக் கலந்த நீர், திருப்பட்டூர் தலம் முழுவதும் பரவியது; காடு-கரையெல்லாம் நிரம்பிற்று.
மரங்களுக்கும் செடிகொடிகளின் வேர்களுக்கும் நீர் போய்ச் சேர்ந்தது. அத்தனை தாவரங்களும் புத்துணர்ச்சி பெற்றுச் செழித்துச் சிரித்தன. இவை அனைத்தையும் பார்த்தபடி, மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு, நெஞ்சில் சிவலிங்கத் திருமேனியை வைத்தபடி, உன்மத்த நிலையில் ஆடிக் கொண்டிருந்தார், வியாக்ரபாதர்.
தில்லையம்பதியில், தனக்காகவும் தனது தோழன் பதஞ்சலிக்காகவும் சிவனார் ஆடிய ஆட்டத்தை நினைவுபடுத்திக்கொண்டே ஆடினார்; தில்லையம்பதியின் திசையை நோக்கியபடி, 'திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்’ என்று உரக்கக் குரல் கொடுத்துக்கொண்டே ஆடினார். அங்கே, திருப்பட்டூரை நோக்கி, அந்தத் தலத்தின் பூமியை நோக்கி, மீண்டும் பிரவாகமெடுத்துப் பெய்தது பெருமழை!
- பரவசம் தொடரும்

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் ! - 62


அச்வாரூட மூர்த்தி(குதிரைச் சேவகன்)
(தொடர்ச்சி)

நீரணி கடவுள் மண்ணின்று எடுத்திடப்
பார் முழுதும் ஆண்டருள் பாண்டியன் கையால்
ஓரடி வலியவே உதவ மற்றரன்
ஈரடி வணங்கும் இறையைப் போற்றுவாம்
- திருப்பரங்கிரி புராணம்
பொருள் கங்காதேவியாகிய நீரை தலையில் அணிந்த சிவபெருமான் மண் சுமக்கும்படியாகவும், பாராளும் பாண்டியனின் கைப்பிரம்பால் ஓர் அடி அடிக்கச் செய்தும் அந்த சிவனாரது திருவடிகளை வாங்கிக் கொண்ட மாணிக்கவாசகராகிய இறைவனைப் போற்றுவோம்!
ன்னன் பரிசளித்த பட்டாடையை தன் கைகளால் வாங்காமல், கையில் இருந்த பரிக்கோலால் வாங்கினார் குதிரைச் சேவகனாக வந்த சிவனார். மன்னன் கடும்கோபம் கொண்டான். இதை கவனித்த வாதவூரர், ''அவர்களது ஊரில் இப்படிப் பெறுவதுதான் மரபு'' என்று கூறி, மன்னனை அமைதிப் படுத்தினார்.
இதன் பிறகு குதிரை வல்லுநர்கள் சிலர் அங்கு வந்தனர். இறைவன் ஓட்டி வந்த குதிரைகளின் திடம் மற்றும் சுழியை ஆராய்ந்தவர்கள், ''மன்னா! நடையழகும் மிடுக்கும் கொண்ட கம்பீரமான உயர்ஜாதி குதிரைகள் இவை. நாம் கொடுத்த விலையை விட பன்மடங்கு மதிப்பு கொண்டவை'' என்றனர். மன்னன் மகிழ்ந்தான். அவனது ஆணைப்படி குதிரைகள் லாயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.இதையடுத்து குதிரைச் சேவகன் போல் வந்த சிவனார் தனது பூதகணங்களுடன் மறைந்தார்.
அன்றிரவு! புதிதாக லாயத்துக்கு வந்த குதிரைகள், கனைப்பதற்கு பதிலாக நரிகள் போல் ஊளையிட்டன. ஏற்கெனவே அங்கு கட்டப்பட்டிருந்த பழைய குதிரைகளையும் கடித்துக் குதறின. பிறகு, காட்டுக்குள் ஓடி மறைந்தன!
மதுரையம்பதியே களேபரமானது. வாதவூரர், மாய வேலை செய்து மன்னரை ஏமாற்றி விட்டாராம்... என சேதி பரவியது. சினம் கொண்ட மன்னன், வாதவூரரை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். இறைவனை கண்ணீருடன் பிரார்த்தித்தார் வாதவூரர்!
அடியாரின் அல்லலை ஆண்டவன் பொறுப்பாரா? வைகை ஆற்றில் வெள்ளம் பெருகச் செய்தார். கரையை உடைத்து ஊருக்குள்ளும் புகுந்தது வெள்ளம். மன்னன் செய்வதறியாது திகைத்தான். வாதவூரரை சிறையில் அடைத்ததால் வந்த வினை இது என்பதை உணர்ந்தான். ஓடோடிச் சென்று வாதவூரரிடம் மன்னிப்பு வேண்டியதுடன், சிறையிலிருந்தும் அவரை விடுவித்தான். வாதவூரர், உணர்ச்சிப் பெருக்கில் மீண்டும் இறைவனைப் பிரார்த்திக்க வைகையில் வெள்ளத்தின் வேகம் தணிந்தது.
இதையடுத்து வைகைக் கரையில் ஏற்பட்ட உடைப்பை அடைக்க, வீட்டுக்கு ஒருவர் வரவேண்டும் என்று ஆணையிட்டான் மன்னன். அதன்படி வீட்டுக்கு ஒருவர் கரை அடைக்க செல்ல... தனது வீட்டு சார்பாக செல்வதற்கு எவரும் இல்லையே என வருந்தினாள் வந்தி எனும் மூதாட்டி. ஒற்றையாளாக தனித்து வசிக்கும் தனக்கு அருள்புரியுமாறு சிவபெருமானை வேண்டினாள்.
அவளது பிரார்த்தனையை ஏற்ற சிவனார், கூலியாளாக வந்து சேர்ந்தார். வந்தியின் சார்பாக தானே வைகைக் கரைக்குச் செல்வதாகவும் அதற்கு தகுந்த கூலி வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார். ஏழை மூதாட்டியான வந்தியிடம் பிட்டைத் தவிர, கூலி கொடுப்பதற்கு வேறு என்ன உண்டு?! கரை அடைக்கக் கூலியாக 'பிட்டு' தருகிறேன் என்றாள். சிவனாரும் ஏற்றுக் கொண்டார். வந்திக் கிழவியிடம் பிட்டை கூலியாக வாங்கிச் சாப்பிட்டவர், வைகைக் கரைக்குச் சென்றார்.
அங்கே, வந்த வேலையைச் செய்யாமல், குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார். அவ்வப்போது படுத்து ஓய்வெடுத்தார். இதையெல்லாம் அறிந்த மன்னன் கோபம் கொண்டான். வேலை செய்யாமல் திரியும் அந்தக் கூலியாளை- சிவபெருமானை, தன் கையில் இருந்த பிரம்பால் முதுகில் அடித்தான்.
அந்த அடி... மன்னன், மகாராணி, அமைச்சர்கள், சேவகர்கள் மற்றும் ஊர் மக்கள் என அனைவரின் முதுகிலும் விழுந்தது. அனைவரும் அலறித் துடித்தனர். வாதவூரருக்காக சொக்கனே நடத்திய திருவிளையாடல் இது என்பதை உணர்ந்த மன்னன், ஆலயத்துக்கு ஓடோடிச் சென்றான். ஸ்ரீசொக்கநாதர் சந்நிதியை அடைந்தவன், தன்னை மன்னித்து அருளும்படி பலவாறு வேண்டினான்.
அதன் பின்னர், அமைச்சுப் பணி துறந்து, பாண்டிய மன்னனிடம் விடைபெற்றுக் கொண்ட வாதவூரர் திருப்பெருந்துறையை (ஆவுடையார் கோவில்) அடைந்து, குருநாதரை வணங்கினார். தாம் வீற்றிருந்த குருந்த மரத்தின் கீழிருந்த மலர்ப்பீடத்தில் தமது திருவடியைப் பதித்தார் இறைவன். திருப்பெருந்துறையில் சிற்ப நுட்பத்துடன் கூடிய ஸ்ரீஆத்மநாதர் ஆலயத்தை அற்புதமாக அமைத்தார் வாதவூரர்.
பின்னர் மதுரை, உத்திரகோசமங்கை, திருவிடைமருதூர், சீர்காழி, திருவண்ணாமலை முதலான தலங்களுக்குச் சென்று இறைவனை உளம் பொங்கப் பாடிப் பரவினார். திருக்கழுக்குன்றத்தில், வாதவூரருக்கு தனது எழில் கோலத்தைக் காட்டியருளினார் இறைவன். இதனை, 'கணக்கிலாக்கோலம் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே'' என மெய்யுருகப் பாடினார் வாதவூரர். நிறைவாக, தில்லையம்பலக் கூத்தனின் ஆலயத்துக்கு வந்தார் வாதவூரர். இங்கே, அந்தணன் போல் வந்த இறைவன், வாதவூரராம் மாணிக்கவாசகரின் திருவாசகத்தை மீண்டும் மனம் குளிரக் கேட்டுக் களித்தான். அதுமட்டுமா? 'இவை, மாணிக்கவாசகன் சொல்லச் சொல்ல, தில்லைச் சிற்றம்பலன் எழுதியது' என்று கையெழுத்திட்டு அருளினான் இறைவன்!
மட்டுமின்றி இறைவனின் சித்தப்படி, திருக்கோவையாரும் பாடியருளினார் மணிவாசகர். பிறகு, ஸ்ரீநடராஜபெருமானின் திருவடியில் இரண்டறக் கலந்தார்.
இறைவன் குதிரைச் சேவகனாகத் தோன்றிய திருக் கோலத்தை, அச்வாரூடமூர்த்தி என்பர். சிவனாரின் 64 திருக்கோலங்களில் இதுவும் ஒன்று!
திருப்பெருந்துறை ஸ்ரீயோகாம்பிகை சமேத ஸ்ரீஆத்மநாத ஸ்வாமி ஆலயத்தின் பஞ்சாட்சர மண்டபத்தில், பெரிய தூண் ஒன்றில், குதிரைச் சேவகனாகக் காட்சி தருகிறார் சிவனார். தாவி வரும் குதிரையின் மீது சலாகை எனும் ஈட்டி ஏந்தியபடி இவர் தரும் தரிசனம் அற்புதம். கூடவே வீரர்கள் பலரும் காட்சி தருகின்றனர். எதிரே உள்ள தூண் ஒன்றில் சின்முத்திரையும் ஓலைச் சுவடியும் தாங்கியபடி காட்சி தருகிறார் மாணிக்கவாசகர். இவர்களுக்கு தினசரி பூஜையும் நடைபெறுகிறது.
இறைவன், மாணிக்கவாசகர் மட்டுமின்றி மேலும் ஆறு குதிரை வீரர்களின் சிற்பங்களும் தனியே பிரமாண்டமாக அமைந்துள்ளன. இந்த வீரர்களின் சிகை அலங்காரம், ஆபரணங்கள் ஆகியன நம் தேசத்து மரபில் இருந்து மாறுபட்டிருப்பது குறிப்பிடத் தக்கது!
தற்போது ஆவுடையார்கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. அறந்தாங்கியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த அற்புத ஆலயம்!
இந்தத் தொடரின் மூலம், உயிர்கள் மீது கொண்ட பெருங்கருணையால் சிவபெருமான் எடுத்தருளிய மகேஸ்வர வடிவங்களில் 30 கோலங்களை தரிசித்தோம். ஈசனின் எண்ணற்ற அருளாடல்களால் விளைந்த திருவடிவங்கள் இன்னும் பல உண்டு.
சிவனாரின் இந்தத் திருக்கோலங்களில் ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கொண்டு, தியானித்து வணங்கி வர... அனைத்து செல்வங்களையும் பெறலாம்! ஆலயங்களில் இந்த மூர்த்தங்கள், கல், செம்பு மற்றும் சுதை வடிவாக நமக்குக் காணக் கிடைக்கின்றன.
கலைஞர்களின் கற்பனைத் திறனில் விளைந்த வெறும் சிற்பங்களாக மட்டுமே இவை இருந்திருந்தால், கிரேக்க, ரோமானிய நாகரீகம் போல் எப்போதோ அழிந்திருக்கும். ஆனால் புராணப் பெருமையும் சாந்நித்தியமும் கொண்ட இந்த சிவவடிவச் சிற்பங்கள், அந்நியர்கள் பலரது படையெடுப்புகளுக்குப் பிறகும் அழியாமல் இருக்கின்றன என்றால்... இந்தத் திருவடிவங்களின் மகத்துவம் சொல்லாமலேயே நமக்குப் புரியும்.
'ஞானத்தால் தொழுவார் சிவஞானிகள்' என்ற அப்பர் ஸ்வாமிகளின் வாக்குப்படி, சிவஞானம் கைவரப் பெற்று இந்தத் திருவுருவங்களை அணுகும்போது, சிவவடிவங்களும் அவை குறித்த விளக்கங்களும் சொல்லொணாப் பேரின்பத்தில் நம்மைத் திளைக்கச் செய்யும்.
இந்து சமயத்தின் தூண்கள்... திருமறைகள்; அருளாளர்கள்; ஆலயங்கள்! உலகம் உய்வு பெற, இந்த மூன்றுமே காத்துக் கொண்டிருக்கின்றன.
தெய்வத் திருவுருவங்களின் தத்துவங்களை உணர்ந்து, வழிபட்டு அனைவரும் பலன் பெறுவோம்!
தென்னாடுடையே சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
- (தரிசனம் நிறைந்தது)

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 61


அச்வாரூட மூர்த்தி (குதிரைச் சேவகன்)
இந்திரனும் மால் அயனும் ஏனோரும் வானோரும்அந்தரமே நிற்கச் சிவன் அவனி வந்தருளிஎந்தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றன் ஆயச்சிந்தனையை வந்து உருக்கும் சீர்ஆர் பெருந்துறையான்பந்தம் பறிய பரிமேல் கொண்டான் தந்தஅந்தம் இலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்
- திருவாசகம் 177
பொருள் இந்திரன், திருமால், நான்முகன் மற்றும் ஏனைய தேவர்களும் விண்ணில் நின்றிட, சிவபெருமான் மண்ணுலகம் புகுந்து, எம் நிலை கொண்டாரையும் ஆட்கொண்டார். திருத்தோளில் பூசப்பெற்ற திருவெண்ணீற்றை உடையவரும், எம்மிடம் வந்து மனத்தை உருக்குகின்ற சிறப்பு கொண்டவருமான திருப்பெருந்துறை மேவும் இறைவன், எமது பற்று அற குதிரை மேல் ஏறி வந்து அருள் செய்திட்ட இன்பத்தை அம்மானைப் பாடலாகப் பாடுவாயாக!
துரைக்கு வடகிழக்கில் உள்ளது திருவாதவூர். வாயு பூசித்த இந்தத் தலத்தில், வாதபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்த ஊரில் அமாத்ய அந்தணர் குலத்தில், சம்புபாதசிருதர்- சிவஞானாவதி அம்மை தம்பதியின் மகனாக அவதரித்தவர் மாணிக்கவாசகர். இயற்பெயரை அறிய இயலாத நிலையில், இவரை வாதவூரர் என்றே அழைத்தனர்!
இளமையில் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த வாதவூரரின் அறிவாற்றலை அறிந்து வியந்த அரிமர்த்தன பாண்டியன், இவரை தனது முதலமைச்சராக நியமித்ததுடன், 'தென்னவன் பிரமராயன்' என்ற பட்டமும் தந்து மகிழ்ந்தான். இறை சிந்தனை மிகுந்த வாதவூரர், அமைச்சர் பணியையும் செவ்வனே செய்து வந்தார்.
ஒருமுறை, குதிரைப் படையை விரிவுபடுத்த எண்ணிய மன்னன், வாதவூரரை அழைத்தான். ''கருவூலத்தில் பொருள் பெற்று, நல்ல குதிரைகளாக வாங்கி வாருங்கள்'' என்று பணித்தான். அதன்படி குதிரைகளை வாங்கிவர பயணித்தார் வாதவூரர்.
வேத ஆகம சாரமான திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஆகியவற்றை திருவாதவூரர் மூலம் தோற்றுவிக்க விரும்பிய சிவனார், தமது கணங்களுடன் மானுட வடிவம் தாங்கி, திருப்பெருந்துறையை அடைந்தார். அங்கே ஒரு சோலையில், குருந்த மரத்தடியில் சீடர்களுடன் அமர்ந்தார். குதிரைகள் வாங்க சோழ தேசம் வந்த திருவாதவூரரும் திருப்பெருந்துறையை அடைந்தார். ஊரின் எல்லையைத் தொட்டதுமே மனதில் பாரம் அகன்றதாக உணர்ந்தார் வாதவூரர். 'படை பெருக, போர்களும் பெருகும். இதனால் பலரும் உயிர் துறப்பர். ஒருவரது வெற்றிக்காக எண்ணற்ற உயிர்கள் பலியாவதா? வேண்டாம்! உலகில் அறமும் அன்பும் செழிக்க வேண்டும்' என்று எண்ணினார் வாதவூரர். திருக்குளத்தில் நீராடி, திருநீறு அணிந்து, பூஞ்சோலையை அடைந்தார்.
அங்கே... குருந்த மரத்தடியில், ஞான குருநாதனாக வீற்றிருக்கும் பரம்பொருளைக் கண்டு, உள்ளம் சிலிர்க்க வணங்கி நின்றார். அவரின் செவியில், ஐந்தெழுத்து மந்திரத்தைத் தந்ததுடன், முக்திப் பேறும் அருளினார் சிவபெருமான். அக இருள் அகன்று உள்ளளி பெருகியது வாதவூரருக்கு. அமைச்சர் பணியை உதறினார்; துறவிக் கோலம் பூண்டார். இவருக்கு தீட்சா நாமமாக, 'மாணிக்க வாசகர்' எனும் திருநாமத்தைச் சூட்டினார் இறைவன். ''நான் உமது அடிமை. கையில் உள்ள செல்வத்தைக் கொண்டு, உமக்கு இங்கேயே கோயில் எழுப்புகிறேன்'' என்ற வாதவூரர், தனது உடைமைகள் மற்றும் ஆபரணங்களுடன், குதிரைகள் வாங்க வைத்திருந்த பணத்தையும் குருநாதராகத் திகழும் சிவ பரம்பொருளின் திருவடியில் சமர்ப்பித்தார்.
உடன் வந்த வீரர்கள், 'எதற்காக வந்தோம்' என்பது குறித்து பலமுறை நினைவூட்டியும், எடுத்துக் கூறியும்... அவர்களது பேச்சை மாணிக்கவாசகர் செவிமடுக்கவில்லை. சிவானுபவத்திலேயே லயித்து இன்புற்றிருந்தார்.
செய்வதறியாது திகைத்த வீரர்கள் தலைநகருக்குத் திரும்பி, நடந்ததை மன்னனிடம் விவரித்தனர். மன்னன் கடுங்கோபம் கொண்டான். 'குதிரைப் படைகளுடன் உடனே வர வேண்டும்' என்று ஓலை அனுப்பினான்.
இதுகுறித்து இறைவனிடம் முறையிட்டார் மாணிக்க வாசகர். ''பயப்படாதே! ஆவணி மூல நாளில், குதிரைகள் மதுரைக்கு வந்து சேரும்'' என்று அருளினார் ஈசன். அத்துடன், ''மன்னனுக்கு நம்பிக்கை ஏற்பட, இந்த மாணிக்கக் கல்லை அவனுக்குப் பரிசாகக் கொடு'' என்று வழங்கினார். அதன்படியே செய்தார் மாணிக்கவாசகர். அரசனும் மகிழ்ந்து போனான்.
ஆவணி- மூல நாளுக்கு இரண்டு தினங்களே இருந்தன. அமைச்சர்கள் பலரும் ஒன்று சேர்ந்து, ''வாதவூரர் பொய் சொல்லியிருக்கிறார். குதிரைகள் வராது...'' என்று மன்னனிடம் தெரிவித்தனர். இதை ஒற்றர் மூலம் உறுதிப்படுத்திய மன்னன் கோபம் கொண்டான். மாணிக்கவாசகரை தண்டிக்க ஆணையிட்டான்.
உக்கிரமான வெயிலில், வைகையாற்று மணலில் வாதவூரரை நிறுத்தி, அவர் கைகளில் சுடு செங்கல்லை கொடுத்தனர். சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தினர். அத்தனை இன்னல்களையும் தாங்கிக் கொண்ட வாதவூரர், 'ஆவணி மூல நாளில், குதிரைகள் வராதா? நீ பொய் உரைத்தாயா?' என்று சிவனாரை எண்ணி கண்ணீர் விட்டார். அப்போது, 'சொன்னபடி குதிரைகள் வரும்' என அசரீரி கேட்டது.
இதையடுத்து காட்டில் திரியும் நரிகளை, பரிகள் (குதிரைகள்) ஆகவும், தன் பரிவாரங்களை குதிரைச் சேவகர்களாகவும் ஆக்கி, தானே தலைமை சேவகன் உருவில் மதுரைக்குப் புறப்பட்டார்
சிவனார். பெரும் குதிரைப் படை ஒன்று மதுரை நோக்கி வருவதாக தகவல் வர, தவறுக்கு வருந்தி, வாதவூரரை விடுவித்தான் மன்னன்.
மதுரையை வந்தடைந்த குதிரைகளைக் கண்டு மகிழ்ந்தான் மன்னன். குதிரைகளை நடத்திக் காட்டும்படி குதிரைச் சேவகனான இறைவனிடம் கேட்டுக் கொண்டான். அதன்படி, குதிரைகளை ஐந்து நிலைகளில் (பஞ்ச கதி) நடத்திக் காட்டினார் ஈசன். இதனால் மகிழ்ந்த மன்னன், பட்டாடையை பரிசளித்தான்.
- (தரிசனம் தொடரும்)

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 60எல்லாம் வல்ல சித்தர் 
(தொடர்ச்சி)
சகம் புகழும் தென் மதுரா புரியில் தரை மதிக்க
அகம் தொறும் நீ செய்த ஆடல் கண்டே அழகார் வழுதி
இகழ்ந்து நின்நாமம் என்னென்ன, எல்லாம் வல்ல சித்தரெனப்
பகர்ந்(து) அருள்காட்டும் சொக்கே பரதேசி பயகரனே
திருவிளையாடற் பயகரமாலை 
வீரபத்திரக் கம்பர் இயற்றியது
பார் புகழும் மதுரையம்பதியில் நீர் செய்த திருவிளையாடல் கண்டு, உமது திருப்பெயர்கள் எவ்வளவோ இருப்பினும்... பாண்டிய மன்னன், 'எல்லாம் வல்ல சித்தர்' என்று உம்மைப் போற்ற... அருள் வழங்கும் சொக்கேசா! மெய்ஞான இன்பமே! அச்சம் ஒழிப்பவனே!
ல் யானை உயிர் பெற்று, கரும்பைப் பிடுங்கித் தின்றதைக் கண்டதும், அனைவரும் அதிர்ந்து போனார்கள். அந்த யானை மீது மீண்டும் தன் பார்வையைச் செலுத்தினார் சித்தர். உடனே யானை, மன்னனின் கழுத்தில் இருந்த முத்துமாலையை இழுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டது.
ஆத்திரம் அடைந்த மன்னன், தன் மெய்க்காவலரை ஏவினான். அவர்கள், சித்தரையும் யானையையும் அடிப்பதற்காக, கையில் வைத்திருந்த கோலை ஓங்கினர். அவர்களைப் பார்த்து சிரித்த சித்தர், ''அப்படியே நில்லுங்கள்'' என்றார். அவ்வளவுதான்... ஓங்கிய கை ஓங்கியபடியே இருக்க, அப்படியே நின்றனர் வீரர்கள்.
பெரும் தவறு செய்து விட்டோமே என்று கலங்கிய மன்னன், சித்தர்பெருமானின் திருவடியில் விழுந்து வணங்கி, மன்னிப்பு கேட்டான். புன்னகையுடன் அவனை ஆசீர்வதித்த சித்தர், ''என்ன வரம் வேண்டும் கேள்!'' என்றார்.
மகிழ்ந்த மன்னன், ''வெகு காலம் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கிறேன். தாங்களே அருள வேண்டும்'' என்றான்.
'அப்படியே ஆகட்டும்' என அருள் புரிந்தார் சித்தர். பிறகு, கல் யானையைத் தொட்டார்; தனது துதிக்கையை நீட்டி, மன்னனிடம் முத்துமாலையைக் கொடுத்தது யானை. அதைப் பெற்றுக்கொண்டு மன்னன் திரும்பிப் பார்க்க... சித்தரைக் காணோம்! யானையைப் பார்த்தான்; அதுவும் கல்லாகிப் போனது! சித்தராக வந்தது சிவபெருமானே என்பதை உணர்ந்து சிலிர்த்தான் மன்னன்.
சித்தர் அருளியவாறே, மன்னனுக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. விக்ரமன் என பெயரிட்டான் மன்னன். மன்னனுக்குப் பிறகு விக்கிரமன் மதுரையை ஆட்சி செய்தான்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சிவனாரின் சந்நிதிக்கு வடமேற்கு மூலையில் 'எல்லாம் வல்ல சித்தரின்' சந்நிதி அமைந்துள்ளது. வலக் கரம் சின் முத்திரையுடனும், இடக்கரம் யோக தண்டத்தில் ஊன்றியபடி இருக்க... கொண்டை போல் சுருட்டி வைக்கப்பட்ட ஜடாமுடியுடன் வீராசனத்தில் அமர்ந்து, கிழக்கு நோக்கி அருள்புரிகிறார் எல்லாம் வல்ல சித்தர். இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. மகா மண்டபத்தில் எல்லாம் வல்ல சித்தரின் பஞ்சலோக திருமேனியை தரிசிக்கலாம். இவரின் வலக் கரத்தில் மந்திரக் கோல் (கரும்புக் கழி என்றும் சொல்வர்) உள்ளது! தைப் பொங்கல் அன்று, கல் யானை கரும்பு தின்ற திருவிளையாடல், ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திருவானைக்காவல் தலத்தில் சிவமுனி சித்தராக வந்து, திருப்பணிகள் பலவற்றை செய்ததாகச் சொல்கிறது தல புராணம். திருவானைக்கா ஸ்ரீஜம்புநாதேஸ்வரர் ஆலயத்தில் மதில் கட்டும் பணி நடந்தது. அப்போது முனிவர் வேடத்தில் வந்து, தொழிலாளர்களுக்கு சம்பளமாக விபூதியையே தந்தாராம் சிவனார். இந்த விபூதி, அவரவர் செய்த வேலைக்குத் தக்கபடி, பொன்னாக மாறியதாம்.
முனிவரைப் போல் வந்த சிவனார், அதிசயங்கள் சிலவற்றையும் நிகழ்த்தினார். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே... பிரமாண்ட மான அந்த மதிலை மறையச் செய்தாராம். பிறகு, மீண்டும் மதிலை தோன்றச் செய்து அதே இடத்தில் நிறுவினாராம். திருநீறையே கூலியாகக் கொடுத்துக் கட்டப்பட்டதால் இதனை, 'திருநீறிட்டான் மதில்' என்றும், 'விபூதி பிராகாரம்' என்றும் அழைக்கின்றனர். இந்த மதிலைச் சுற்றி வருவோர் வேண்டியது கிடைக்கப் பெறுவர்; அவர்களது துன்பங்கள் நீங்கும்; மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலத்தில் (பழைய பெயர் பட்டமங்கை), கார்த்திகை பெண்கள் ஆறு பேருக்கும் சித்தராக வந்து அருளியதுடன் அஷ்டமா ஸித்திகளையும் சிவனார் உபதேசித்தார் என திருவாசகத்தில் விளக்குகிறார் மாணிக்கவாசகர்.
'பட்டமங்கையில் பாங்காய் இருந்தாங்கு அட்டமா ஸித்திகள் அருளிய அதுவும்...' (கீர்த்தித் திருவகவல் 63)
'இத்தி தன்னின் கீழ் இரு மூவர்க்கு அத்திக்கருளிய அரசே போற்றி' (போற்றித் திருவகவல்-3) - ஆகிய பாடல் வரிகளின் மூலம் இதை உணரலாம்!
'சித்' என்றால், பரந்த நுண்ணறிவு என்று பொருள். 'ஸித்தி' என்பது சிவ நிலையான முக்தியின்பம். சிவ பெருமான், தானே சித்தனாகத் தோன்றி அன்பர்களுக்கு அருள்பாலித்த பின், சிவலிங்கத்துள் கலந்த இடங்களே ஆதிநாளில் 'சித்தீச்சரங்கள்' எனப்பட்டன. சித்தர் மரபை உண்டாக்கியதாலும், சித்தர்களால் வழிபடப் பெறுவதாலும், சித்தீச்வரன் என அழைப்பர். திருநறையூர்(சித்தீச்சரம்) தல இறைவன் திருநாமம்- சித்தநாதேஸ்வரர்.
கயிலாயத்திலிருந்து வந்த சிவமுனி, மாடு மேய்க்கும் இடையனின் உடலில் புகுந்து திருமூலராக வந்த தலம் சாத்தனூர். இங்கே இறைவன் ஸ்ரீசித்தேஸ்வரர் எனப் படுகிறார். மேலும் திருவாரூர்- கமலை சித்தீச்சரம், திருப்புகலூர்- சித்தீச்சரம், திருவாவடுதுறை- நவகோடி சித்தீச்சரம், காஞ்சிபுரம்- மஞ்சள் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சித்தீச்சரம், கச்சபேச்வரர் கோயில்- இஷ்ட சித்தீச்சரம், வேதசித்தீச்சரம், ஞானசித்தீச்சரம், யோக சித்தீச்சரம் ஆகிய ஆலயங்கள்... சித்தராக வந்து அருள்பாலித்த சிவனாரின் திருத்தலங்களே!
-(தரிசனம் தொடரும்)

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 59


எல்லாம் வல்ல சித்தர்
அருவ மெய்யினன் ஆலவாய் நாயகன்கருதி முன்னம்ஓர் காலம் கருணையின்மருவி யாவரும் கண்டு மகிழ்வுறப்பொருவில் சித்தர் உருவம் புனைந்தனன்
- திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம், பெரும்பற்றப் புலியூர் நம்பி
பொருள் உருவமற்ற உடலைக் கொண்ட சிவபெருமான், முன்பொருமுறை மதுரை பாண்டிய மன்னனுக்காக, தனது பெருங்கருணையால் அனைவரும் கண்டு விரும்பி மகிழும் வகையில், எல்லாம் வல்ல சித்தராக உருவம் கொண்டார்.
ல் யானை கரும்பு தின்னுமா? தின்றது! நான்மாடக் கூடல் எனப் போற்றப்படும் மதுரையம்பதியில்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது!
சரி... இந்த அதிசயத்தை நிகழ்த்தியது யார்?
எல்லாம்வல்ல சித்தராக வந்த சிவபெருமானே இதற்குக் காரணம் என்கிறது திருவிளையாடற் புராணம். மதுரையில் ஈசன் நடத்திய 64 திருவிளையாடல்களையும் போற்றிப் பரவுகிறது இந்தப் புராணம். அந்த அருளாடல்களில், சிவனார் சித்தராக வந்த கதை சுவாரஸ்யமானது!
மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்த காலம். எல்லாம்வல்ல சித்தராக வேடம் ஏற்று இங்கு வந்து சேர்ந்தார் சோமசுந்தரக் கடவுள்!
நீண்ட சடையை அள்ளி முடித்து, நெற்றி நிறைய விபூதியும் அதன் நடுவில் திலகமும் தரித்து, காதில்- குண்டலங்கள்; கழுத்தில்- ஸ்படிக மாலை; மார்பில்- பூணூல்; வலத் தோளில்- விபூதிப் பை; இடப்புறத் தோளில்- யோகப் பட்டயம்; இடுப்பில்- புலித்தோலால் ஆன ஆடை; கால்களில்- அழகிய பாதுகை ஆகியன திகழ, கையில் பொன்னால் ஆன பிரம்பு ஏந்தி மதுரை வீதியில் கம்பீரமாக உலா வந்தார். அதுவும் எப்படி?
கடை வீதி, சித்திரச் சாலை, நாற்சந்தி, முச்சந்தி என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் தோன்றினாராம்! சும்மாவா வலம் வந்தார்?
அருகில் உள்ள பொருளை வெகு தூரம் போகச் செய்தவர், தூரத்தில் உள்ள மலை போன்றவற்றை அருகில் வரச் செய்தார். குழந்தைகளை முதியவராக்கினார்; முதியோரை குழந்தைகளாக் கினார். ஆணை பெண்ணாகவும்; பெண்ணை ஆணாகவும் மாற்றினாராம்.
அது மட்டுமா? மலடிக்கு மகப்பேறு அருளியவர், ஊனமுற்றவர்களின் குறைகளைப் போக்கினார். சாதாரண உலோகங்களைப் பொன்னாக்கினார். ஏழைகளை செல்வந்தர்களாகவும் பணக்காரர்களை ஏழைகளாகவும் ஆக்கினார். இரவில் சூரியனையும், பகலில் சந்திரனையும் காட்டி வியக்க வைத்தார்!
- இப்படியாக பல அற்புதங்களை நிகழ்த்தினார் சிவபெருமான். இல்லையில்லை... சித்தர் பெருமான்!
சித்தரின் திருவிளையாடல்கள் மன்னனின் செவிகளுக்குச் சென்றது. அவரை அழைத்து வரும்படி காவலர்களைப் பணித்தான் பாண்டியன். அதன்படி சித்தரை அழைத்துச் செல்ல வந்த காவலர்கள், அங்கு அவர் நடத்திக் கொண்டிருந்த அற்புதங்களைக் கண்டு மெய் மறந்தனர்.
வெகு நேரம் ஆகியும் காவலர்கள் திரும்பாததால், அமைச்சர்கள் சிலரை அனுப்பினான் மன்னன்.
அவர்களும் சித்தர் இருக்கும் இடத்துக்கு வந்து வணங்கி, அரண்மனைக்கு வரும்படி வேண்டினர்.
''உங்கள் மன்னனால் எமக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை. ஆகவே, அரண்மனைக்கு வர இயலாது'' என்று மறுத்தார் சித்தர்.
மன்னனிடம் சென்று இந்த விஷயத்தை தயங்கியபடி தெரிவித்தார்கள் அமைச்சர்கள். அப்போதுதான் மன்னனுக்கு தனது தவறு உரைத்தது. 'சித்தர்களும் தவசீலர்களும் சிவனாரின் திருவருளை பூரணமாகப் பெற்றவர்கள். அப்படியிருக்க, அந்த சித்தரை நானே சென்று அழைப்பதுதான் முறை' என்று கருதியவன், பரிவாரங்களுடன் சித்தரை சந்திக்க விரைந்தான்.
சிவனார் இதை அறியாமல் இருப்பாரா? மன்னன் வருமுன், ஆலயத்தை அடைந்து அங்கு ஸ்ரீசோமசுந்தரரது கருவறையின் வடமேற்கு மூலையில் அமர்ந்து கொண்டார். அன்று தை மாதப் பிறப்பு; மகர சங்கராந்தி!
சித்தரை சந்திக்கப் புறப்பட்ட மன்னன், முன்னதாக இறைவனை தரிசித்துவிட்டுச் செல்லலாம் என்ற எண்ணத்துடன் கோயிலுக்கு வந்தான். சோமசுந்தரரை வணங்கிய பின், அவன் கோயிலை வலம் வர... வழியில் அமர்ந்திருந்த சித்தரிடம் வந்த காவலர்கள், 'மன்னர் வருகிறார், வழிவிடுங்கள்' என்று அவரை நோக்கி கைப் பிரம்பை நீட்டினர். சித்தரோ அசையவே இல்லை!
அபிஷேக பாண்டியனுக்கு ஆச்சரியம்! சித்தரிடம், ''நீங்கள் யார்? எந்த தேசத்தைச் சேர்ந்தவர்? தங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டான்.
புன்னகையுடன் அவனை ஏறிட்ட சித்தர், ''எமது நகரம் காசியம்பதி. ஆனால், யாம் எல்லா ஊரிலும் இருப்போம். எந்தப் பற்றுதலும் இல்லாத அடியார்களே எமது சுற்றத்தினர். சித்துகள் புரிவதில் வல்லவன் நான். ஆகவே எம்மை, 'எல்லாம் வல்ல சித்தர்' என்பார்கள். சிவத்தலங்கள் பலவற்றுக்குச் சென்று தரிசித்து வரும் வேளையில், மதுரையம்பதிக்கும் வந்துள்ளோம். எமக்கு உம்மால் ஆக வேண்டியது எதுவுமில்லை...'' என்றார் சற்றே கர்வம் தொனிக்க!
சித்தர் பேசப் பேச... மன்னனுக்குள் அவர் மேல் அன்பு பெருகியது. அதே நேரம்... மனதில் ஒருவித அச்சமும் எழுந்தது. எனவே, அவரைச் சோதிக்க எண்ணினான்.
அருகில் நின்றிருந்த கூட்டத்தினரிடையே வேளாளன் ஒருவனும் கையில் கரும்புடன் நின்றிருந்தான். அவனிடம் இருந்து கரும்பை வாங்கிய பாண்டிய மன்னன், சித்தரை நெருங்கினான். ''சித்தர் பெருமானே! அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றதாகச் சொன்னீர்களே... இதோ, கற்சிலையாக இருக்கும் யானை, இந்தக் கரும்பை கடித்துச் சாப்பிட வேண்டும். அப்படிச் செய்தால், எல்லாம் வல்ல சித்தராக உம்மை ஏற்கிறேன். அதுமட்டுமா? மதுரையை அரசாளும் சோமசுந்தரப் பெருமானே நீர்தான் என்றும் ஒப்புக் கொள்வேன். நீங்கள் கேட்பதை தயங்காமல் தருவேன்!'' என்றான்.
இதைக் கேட்டதும் பலமாகச் சிரித்தார் சித்தர். ''உம்மிடம் இருந்து யாம் பெறுவது எதுவும் இல்லை என்றுதான் சொன்னேனே... தவிர, எதை எதிர்பார்த்தும் செய்ய வேண்டிய நிலையில் நான் இல்லை. இருப்பினும் 'உயிரற்ற கல் யானையை, கரும்பைக் கடித்துத் தின்ன வை' என்கிறாய். இப்போது பார்'' - என்றபடி கல் யானையின் மீது தன் பார்வையைச் செலுத்தினார்.
அந்த யானை உயிர் பெற்றது. வாய் திறந்து பிளிறிய யானை, துதிக்கையை நீட்டி மன்னனிடம் இருந்த கரும்பைப் பிடுங்கி, சாறு வழிய கடித்துச் சுவைத்தது!
- (தரிசனம் தொடரும்)

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 58

சரபர்
சரபர் தியானம்
நன்னா லிரண்டு திருவடியும் நனி நீள் வாலும் முகம் இரண்டும்கொன்னார் சிறகும் உருத்திரமும் கொடும்பேரார்ப்பும் எதிர் தோற்றிச்செந்நீர் பருகிச் செருக்கு நரமடங்கல்ஆவி செகுத்துரி கொண்(டு)ஒன்னார் குலங்கள் முழுதழிக்கும் உடையான சரபத் திருவுருவம்
காஞ்சி புராணம்
பொருள் எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், மற்றும் இரண்டு இறக்கைகளுடன், பெருங்கோபமும் ஆரவாரமும் கொண்டு எதிரில் தோன்றி, ரத்தத்தைக் குடித்து செருக்குடன் வரும் நரசிம்மம் ஆவி அடங்கும்படி செய்து, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி திருவடிவம்!
ன் சகோதரனான இரண்யாட்சனைக் கொன்றதால், திருமால் மற்றும் அவரின் பக்தர்கள் மீது இரண்யகசிபு வன்மம் கொண்டு இருந்ததையும், இதன் பொருட்டு தன் மகன் பிரகலாதனையே அவன் கொல்லத் துணிந்ததையும், நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்டு இந்த அசுரனைக் கொன்ற கதையையும் நாமறிவோம்.
அப்படி, இரண்யகசிபுவின் உடலைக் கிழித்து அவனை அழித்த பிறகும் நரசிம்மரின் ஆக்ரோஷம் தணியவில்லையாம். திருமகளும் தேவர்களும் வேண்டித் தொழுதும்கூட அவரது கோபம் அடங்கவில்லை. கவலை கொண்ட தேவர்கள், சிவபெருமானைச் சரண் அடைந்தனர். அவர்களது பிரார்த்தனையை ஏற்று, நரசிம்மத்தின் வேகத்தையும் கோபத்தையும் அடக்க, சிவ பெருமான் எடுத்த கோலமே சரப மூர்த்தம் (நரசிம்மத்தை அடக்கி வருமாறு சிவனாரின் கட்டளைக்கு இணங்க வீரபத்திரரே சரபராக வந்தார் என்று லிங்க புராணமும் இன்னும் சில ஞான நூல்களும் குறிப்பிடுகின்றன).
'சரபம்' என்ற சொல்லுக்கு எட்டு கால்களைக் கொண்ட பறவை, இரண்டு தலைகளைக் கொண்ட பறவையின் வடிவம் என்றெல்லாம் பொருள் கூறுகின்றன நிகண்டுகள். இரண்டு சிம்ம முகங்கள், மனித உடல், இரண்டு இறக்கைகள், எட்டு கால்கள் மற்றும் நீண்ட வாலுடன்... விலங்கு- பறவையாகக் காட்சி தரும் அதிசய வடிவமே சரபம். பட்சிகளுக்கெல்லாம் அரசனாகவும், சிங்கத்தையே வெல்லும் வல்லமை கொண்டதாகவும் திகழும் இந்தத் திருவடிவை, 'சிம்மக்ன மூர்த்தி', 'சிம்ஹாரி' 'நரசிம்ம சம்ஹாரர்' என்றும் ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.
'பறவை போன்று பொன்னிறம், மேல் நோக்கிய இரண்டு இறக்கைகள், செந்நிறக் கண்கள் இரண்டு, கூரிய நகங்களுடன் கூடிய... சிங்கத்துக்கு இருப்பது போன்ற நான்கு கால்கள்,
மனித உடல், கிரீடம் தரித்த சிங்க முகம் மற்றும் தந்தங்களுடன் பயங்கரமான தோற்றத்தில் காட்சி தருவார் சரபர்' என்று விவரிக்கிறது காமிகாகமம்.
இந்த மூர்த்தியை 'ஆகாச பைரவர்' என்று உத்தர காமிகாகமம் குறிப்பிடுகிறது. 32 திருக்கரங்களுடன் கூடியதாக இந்தத் திருவடிவை சித்திரிக்கும் 'தத்வநிதி' என்ற சிற்ப நூல், 'இவரின் கரங்களில் ஒன்று துர்கையை அணைத்தவாறு இருக்கும்' என்று குறிப்பிடுகிறது.
சரபரின் மூன்று கண்கள்- சூரியன், சந்திரன், அக்னி; நாக்கு- நிலத்திலுள்ள பாதவலையம்; இறக்கைகள்- காளி மற்றும் துர்கை; நகங்கள்- இந்திரன்; வயிறு- காலாக்னி; தொடைகள்- காலன் மற்றும் மிருத்யுவாகத் திகழ்கின்றன என்றும், இவரின் வலிமை வாயுவைப் போன்றது என்றும் உத்தர காரணாகமம் கூறுகிறது. 'சரப மூர்த்தியை வழிபடுவதால் பகை அழியும்; போர்களில் வெற்றி கிடைக்கும்; நோய் நீங்கும்' என்று சரப வழிபாட்டின் சிறப்பையும் இந்த ஆகமம் விவரிக்கிறது.
'ப்ரத்யங்கரா எனும் காளியும், சூலினி எனும் துர்கையும் சரபரின் இறக்கைகளாகவும்; இவரின் இதயத்தில் பைரவரும், வயிற்றில் வடவாக்னியும், தலையில் கங்கையும் திகழ, தொடையில் நரசிம்மரைக் கிடத்தியவாறு காட்சியளிப்பவர் சரபர்' என்கிறது பிரம்மாண்ட புராணம். இந்தத் திருவடிவம் குறித்து சரப புராணமும் விவரிக்கிறது. இந்த மூர்த்தியின் சக்தி- அரிப்ரணாசினி.
'தீ, பூகம்பம், மண் மாரி, இடி, புயல், மின்னல் ஆகிய இயற்கைச் சீற்றங்கள்- பேராபத்துகள் நீங்கவும், பரிகாரம் செய்ய முடியாத கஷ்டம், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத நோய் ஆகியன அகலவும், அகாலமிருத்யு, பைத்தியம், விஷ பயம், பூத- ப்ரேத- பைசாச உபாதைகள் ஆகியவற்றில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் சரபரை வழிபட வேண்டும்' என்கிறார் வியாசர். சாரதா திலகம், மந்த்ர மஹார்ணவம், ஆகாசபைரவ கல்பம் போன்ற நூல்கள் சரப வழிபாட்டை விவரிக்கின்றன. சரபாஷ்டகம், தாருண ஸப்தகம், சரப புஜங்க ப்ரயாதம், சரபேஸ்வர அஷ்டகம்(பிரம்மன் துதித்தது), சரபேஸ்வர சஹஸ்ரநாமம் ஆகிய தோத்திரநூல்களும் உண்டு. சரப கவசம் மிகச்சிறந்த பாராயண நூல்.
சரபர் குறித்த நூல்கள் தெலுங்கில் அதிகம். எனவே, அந்தப் பகுதியை ஆட்சி செய்த சாளுக்கியர்களின் தொடர்பால், (பிற்கால சோழர்கள் காலத்தில்) தமிழகத்தில் சரபர் வழிபாடு பிரபலம் அடைந்தது. கும்பகோணம் அருகில் உள்ள ஊர் துக்காச்சி. இங்குள்ள விக்ரம சோழீச்வரம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில்தான் முதன் முதலில் சரபரின் சிற்பம் அமைக்கப்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். முதலாம் குலோத்துங்கனின் புதல்வன் விக்ரம சோழனின் (1118-1135) காலத்தில் இந்த சிற்பம் அமைக்கப்பட்டதாம்.
2-ஆம் ராஜராஜன் கட்டிய ராஜராஜேச்வரம் (தாரா சுரம்) ஐராவதேச்வரர் கோயில்- ராஜகம்பீர மண்டபத்தில் உள்ள சரபரின் திருவடியில் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார் நரசிம்மர். 3-ஆம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட திரி புவனம் (கும்பகோணம் அருகில்) கம்பஹரேஸ்வரர் கோயிலில் தனிச் சந்நிதி கொண்டுள்ளார் சரபர். இங்குள்ள சரபரின் பஞ்சலோக வடிவம், மேற்கரங்களில் பரசு (கோடரி)- மான்; கீழ்க் கரங்களில் பாசம்- அக்னியுடன் திகழ்கிறது.
திருவண்ணாமலை, மதுரை ஆகிய தலங்கள், சிதம்பரம்- நடராஜர் கோயில், சென்னை- குரோம்பேட்டை குமரன் குன்றம் கோயில், சோழிங்கநல்லூர்- ப்ரத்யங்கரா கோயில், திருமயிலை- வெள்ளீஸ்வரர் கோயில், சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் ஆகிய தலங்களிலும் சரப மூர்த்திக்கு தனிச் சந்நிதி உண்டு.
சென்னை- கோயம்பேடு, மாடம்பாக்கம், திரிசூலம் ஆகிய தலங்களின் சிவாலயங்களில் தூண் சிற்பமாகக் காட்சி தருகிறார் சரபர். திருவாரூர் ஆலய மேலைக் கோபுரம், வைத்தீஸ்வரன் கோயில் கிழக்கு கோபுரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம் ஆகியவற்றில், சரபமூர்த்தியை சுதை சிற்பமாக தரிசிக்கலாம்.
- (தரிசனம் தொடரும்)

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 57ஸ்ரீபைரவர் 
(தொடர்ச்சி)
அரவா பரணன் நிருவாணி
ஆலுந்தலை மாலையும் அணிந்து
நிரமே குருதி நேர் நிறத்தோன்
நின்றே பைரவ ஊர்தியுடன்
கர மேல் டமருக பாசம் ஒளி
காலும் சூலம் கபாலமுமாய்
சிரமேல் ரக்த நிற வேணி
சீர்குறை மதியுள பைரவமே
சிற்ப ரகசியம்
பொருள் பாம்பை ஆபரணமாக அணிந்தவர்; நிர்வாணர், ஆலகால விஷம் உண்டவர்; தலையில் கொன்றை மாலை அணிந்தவர்; செந்நிற மேனியர்; நாய் வாகனத்தை உடையவர்; கரங்களில்- டமருகம், பாசம், சூலம் மற்றும் கபாலம் திகழ, செஞ்சடையில் சந்திரனை தரித்து, நின்ற திருக்கோலத்தில் திகழும் திருவடிவம் பைரவர்.
ரவரை துதிக்கும் 'கால பைரவாஷ்டகம்' சிறப்பானது! காசி காலபைரவர் சந்நிதியில் வழங்கப்படும் மந்திரிக்கப்பட்ட காப்புக் கயிறு (காசிக் கயிறு) மகத்துவமானது. பைரவரை தரிசித்து, இந்தக் கயிறை கையில் கட்டிக் கொண்டால் தடைகள், பயம் மற்றும் வேதனைகள் நீங்கும் என்கின்றனர்.
காசியில் அஷ்ட பைரவருக்கும் முறையே எட்டு இடங்களில் சந்நிதிகள் உள்ளன. இந்த சந்நிதிகளுக்குச் சென்று தரிசிப்பதை, 'அஷ்ட பைரவ யாத்திரை' என்பர்.
குற்றாலம்- சித்திர சபையில், அஷ்ட பைரவ ஓவியங்களை தரிசிக்கலாம். சீர்காழி தோணியப்பர் கோயில் தெற்கு வெளிப் பிராகார வலம்புரி மண்டபத்தில், அஷ்ட பைரவர்கள் தரிசனம் தருகிறார்கள். காரைக்குடி அருகிலுள்ள திருப்பத்தூர், வயிரவன்பட்டி, அழகாபுரி, பெருஞ்சிக்கோயில், திருமெய்ஞானபுரத்தை அடுத்த வைரவன்பட்டி, காரையூர், நெடுமரம் மற்றும் இலுப்பைக்குடி ஆகிய தலங்கள் அஷ்ட பைரவ தலங்களாகப் போற்றப் படுகின்றன. தென்னகத்தில் பல ஊர்களில் பைரவருக்கு தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. திருவொற்றியூர்- தியாகராஜ ஸ்வாமி ஆலயத்தில், கருவறையுடன் பைரவர் சிற்றாலயமும், அருகில் பைரவ தீர்த்தமும் உள்ளன. காஞ்சிபுரத்தின் தென்மேற்கில், 'அழிபடை தாங்கி' என்ற இடத்திலும் பைரவருக்கு தனிக்கோயில் ஒன்று உள்ளது. திருக்கழுக்குன்றத்துக்கு அருகில், செம்பாக்கம்
மலை மீது பைரவர் ஆலயம் உள்ளது.
ஆந்திர மாநிலம்- நாகலாபுரத்துக்கு அருகில் உள்ள தலம் ராமகிரி. இது, 'காரிக்கரை' என்ற பெயரில் தேவார வைப்புத் தலமாகத் திகழ்கிறது. இங்கே, வாலீஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் பைரவர் ஆலயம் ஒன்று உள்ளது. பழநி- சாது சுவாமிகள் திருமடத்தில், சுமார் 8 அடி உயரத்துடன் 10 திருக்கரங்களுடன் திகழும் விஜய பைரவரை தரிசிக்கலாம். தென்னகத்தில் இவரே மிகப் பெரிய பைரவ மூர்த்தி என்பர். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன், காசியிலிருந்து கொண்டு வந்த பைரவ சக்கரத்தை இங்குள்ள பீடத்தில் வைத்து, அதன்மீது பைரவரை பிரதிஷ்டை செய்தாராம் சாது சுவாமிகள்.
பைரவர், வடுகர், க்ஷேத்திரபாலர் ஆகிய அனைத்தும் சிவபெருமானின் பைரவ வடிவங் களாகும். முற்காலத்தில் பைரவ சமயத்தினர் என்ற பிரிவினர் தென்னிந்தியாவில் பரவியிருந்தனர். சிறுத் தொண்டர், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாரர் ஆகிய நாயன்மார்கள் பைரவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். சிவனாரும், இவர்களுக்கு பைரவர் கோலத்திலேயே அருள்புரிந்தாராம்.
சீர்காழி கோயிலில், தோணியப்பர் சந்நிதிக்கு மேலே... தெற்கு கோஷ்ட விமான தேவராக இருப்பவர், வடுகநாதர் எனும் சட்டநாதர் ஆவார் (குழந்தைப் பருவத்தைக் கடந்து, அதே நேரம் வாலிபப் பருவம் அடையாத
நிலையில் இருப்பவரை, 'வடு' என்பர்). சீர்காழி சட்டைநாதருக்கு, வெள்ளிக் கிழமைகளில்- நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வர். அத்தி மரத்தால் அமைந்த சிலை.
எனவே இந்த மூர்த்திக்கு புனுகு எண்ணெய் மட்டுமே பூசப்படுகிறது. இவருக்கு, முழுத் தேங்காயை நிவேதனம் செய்கின்றனர்; விசேஷ நாட்களில், வடை மாலை அணிவிக்கின்றனர். இங்கே சட்டநாதர் உற்ஸவ மூர்த்தியும் உண்டு. இங்குள்ள அஷ்ட பைரவ மண்டபத்தில் ஊஞ்சலும், அதில் பெரிய கண்ணாடியும் இருக்கும். விமானத்தில் உள்ள சட்டநாதரின் வடிவம்
இதில் பிரதிபலிக்கும். விமானத்தில் உள்ளவர் ஆகாச பைரவர்.
மயிலாடுதுறை- கும்பகோணம் பாதையில் உள்ளது க்ஷேத்ர பாலபுரம். இங்கே தெற்கு நோக்கிய ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார் பைரவர். அருகில் உள்ள திருக்குளம் 'வடுக தீர்த்தம்' ஆகும். இங்கு, கார்த்திகை மாதம் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
திருப்பத்தூர் தளிநாதர் ஆலய பைரவர் (வயிரவர்) பெயரில், 'வைரவன் கோயில்' என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இங்கே 2-வது பிராகாரத்தில், மேற்கு நோக்கிய தனி சிற்றாலயத்தில் யோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவத்தில்... வலக் கரத்தில்- பழம்; இடக் கரம் தொடையின் மீது பதிந்திருக்க, கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார் இவர்.
இவர் சந்நிதியில், அர்த்தசாமத் தில் விசேஷ வழிபாடு நடை பெறும். மகா பைரவர் தனிச் சிறப்புடன் அருள் பாலிக்கும் திருத்தலம் வயிரவன்பட்டி. இந்தத் தலம்- பைரவரின் இதய ஸ்தானமாகவும் இலுப்பைக்குடி- பாத ஸ்தானமாகவும் கருதப்படுகின்றன.
பிரான்மலை (கொடுங்குன்றம்), வீணாகான பைரவர் அருள் புரியும் சிதம்பரம்- தில்லையம்மன் கோயில், புதுச்சேரி- திருவாண்டார் கோயில் (வடுகூர்), நாகப்பட்டினம், அம்பர் மற்றும் அம்பர்மகாளம் கோயில் ஆகியன பைரவருக்கான விசேஷ தலங்களாகும்.
சில தலங்களில் ஆறு அல்லது எட்டு கரங்களுடன் அபூர்வ தரிசனம் தருகிறார் பைரவர்.
காஞ்சிபுரம்- வேலூர் வழியில் உள்ள காவேரிப்பாக்கம் சிவாலயத்தில் அஷ்ட புஜ பைரவரை தரிசிக்கலாம். ஐந்து முகங்களுடன் காட்சியளிக்கும் பஞ்சவக்த்ர பைரவரை திருச்சி- தாத்தையங்கார்பேட்டை காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் காணலாம். 10 திருக்கரங்களுடன் திகழும் இந்த மூர்த்தி கபால மாலை அணிந்தவராக, யாளி வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
- (தரிசனம் தொடரும்)