Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞான சித்தியார் பகுதி- 2.6

101. முன்செயல் விதியை முயற்சியோடு அனுபவித்தால்
இச்செயல் பலிக்குமாறு என்? இதம் அகிதங்கள் முன்னர்
அச்செயலானால்; இங்கும் அவைசெயின் மேலைக்கு ஆகும்;
பின்செயாது அனுபவிப்பது இன்று பின் தொடரும், செய்தி.

முந்திய பிறவிகளில் செய்த வினையின் பயனே இந்தப் பிறவியில் அனுபவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆகவே இந்தப் பிறவியின் நுகர்வுகள் யாவும் முந்திய பிறப்பின் வினையால் தோன்றியவை என்பது பெறப்படும். அவற்றை நுகரும்போது நிகழும் செயல்கள் மீண்டும் வினையாகி அடுத்த பிறவிக்குக் காரணமாகும் என்பது எவ்வாறு என்று சிலர் வினவுவர். நலமும் தீங்கும் இயற்றிய உயிர் அடுத்த பிறவியில் அவற்றின் பயனை நுகரும் என்பதை உடன் பட்டவர்கள். இப்பிறவியில் செய்யும் நலம் தீங்குகளும் அடுத்த பிறவிக்கும் தொடரும். என்பதனை உடன்பட்டே ஆகவேண்டும் . ஏனெனில் நுகர்வுகளும் செயற்பாடே ஆகும். அந்தச் செயற்பாட்டின் பயன்கள் அடுத்த பிறவியிலும் தொடரும்.

வினையின் பயன் இவ்வாறு தொடர்ந்து பிறழாது வரும் என்பதை உணர்த்துவதற்காகவே பிற்செயாது அனுபவித்தல் இன்று என்று எதிர்மறை வகையால் ஆசிரியர் கூறினார்.

102. மேலைக்கு வித்தும் ஆகி விளைந்தவை உணவும் ஆகி
ஞாலத்து வருமாபோல நாம்செயும் வினைகள் எல்லாம்

ஏலத்தான் பலமா- செய்யும் இதம் ஆகி தங்கட்கு எல்லாம்
மூலத்தது ஆகி என்றும் வந்திடும் முறைமை யோடே.

உலகத்திலே விளைந்த நெல்லும், கனியும் போன்றவை நமக்கு உணவாகப் பயன்படுகின்றன. அதனோடு அமையாமல் அவை அடுத்த பருவத்திற்கு வித்தாகவும் பயன்படுகின்றன. அதனைப் போன்றே தான் என்னும் முனைப்போடு செய்யப்படுகின்ற வினைகள் யாவும் எப்பொழுதும் முறையாக அவற்றின் நன்மை தீமைகளுக்கு ஏற்பப் பொருத்தமான நுகர்வுகளைத் தரும். பிற உயிர்களுக்கு இழைக்கப்படுகின்ற நலம் தீங்குகள் புண்ணியமும் பாவமும் என விளையும். அது மறு பிறவியில் இன்ப துன்பமாய் வந்து பொருந்தும். அவற்றை நுகரும் போதே மேலும் வினைகள் விளையும். இந்த முறைமை ஒரு போதும் பிறழாது வரும்.

103. இதம் அகிதங்கள் என்பது- இகல்மனம் வாக்குக் காயத்து
இதம் உயிர்க்கு உறுதி செய்தல்; அகிதம் மற்றது செய்யாமை;
இதம் அகிதங்கள் எல்லாம் இறைவனே ஏற்றுக் கொண்டு இங்கு
இதம் அகிதத்தால் இன்பத் துன்பங்கள் ஈவன் அன்றே.

நலம் தீங்குகள் என்பன மனம் மொழி மெய்களால் உயிர்க்கு உறுதி பயப்பவற்றைச் செய்தலும் செய்யாது விடுதலுமாகும். இறைவனே ஒரு செயலின் நன்மை தீமைகளை மதிப்பிட வல்லவன். ஆகையால் அவற்றை அவனே கைக் கொண்டு அதனைச் செய்த உயிர்களுக்கு இன்பத் தையும் துன்பத்தையும் கூட்டுவான்.

இதம் அகிதம் என்ற வட சொற்களுக்கு முறையே நலம் தீங்கு என்று பொருள். இதம் என்பது உயிர்க்கு உறுதி பயப்பவற்றைச் செய்தல். அகிதம் என்பது செய்யத் தகாதவற்றைச் செய்தல் மட்டும் இன்றி செய்யத் தக்கவற்றைச் செய்யாமையுமாகும்.

104. இறைவன் இங்கு ஏற்பது என்னை இதம் அகி தங்கள்? என்னின்
நிறைபான் உயிர்க்கு வைத்த நேசத்தின் நிலைமை யாகும்;
அறம்மலி இதம் செய்வோருக்கு அநுக்கிரகத்தைச் செய்வன்;
மறம்மலி அகிதம் செய்யின் நிக்கிர கத்தை வைப்பன்.

உயிர்கள் செய்த நலம் தீங்குகள் இரண்டினையும் இறைவனே ஏற்றுக் கொள்வான் என்பது ஏன்? எனில் எவ்விடத்தும் நீக்கம் இன்றி நிறைந்திருக்கும் இறைவன் உயிர்களிடத்து பேரருளினால் அவை வீடு பேறு அடைவதன் பொருட்டேயாகும். அறம் மிகுந்த நன்மைகளைச் செய்வோர்க்கு இறைவன் அருள்புரிவான். மறம் மிகுந்த தீங்கு புரிவோரை அதற்கு ஏற்ப ஒறுப்பான்.

அனுக்கிரகம் - அருள் செய்தல். நிக்கிரகம் - ஒறுத்தல்.

105. நிக்கிரகங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வது;
அக்கிரமத்தால் குற்றம் அடித்துத் தீர்த்து அச்சம் பண்ணி
இக்கிரமத்தினாலே ஈண்டு அறம் இயற்றிடு என்பன்;
எக்கிராமத்தினாலும் இறைசெயல் அருளே என்றும்.

இறைவன் உயிர்களை ஒறுத்தலும் கூட அவன் திருவருட் செயலேயாகும். எவ்வாறு என்னில் முறைமை தப்பிக் குற்றம் இழைத்த உயிரை ஒறுத்து இனித் தீவினை செய்யாத வண்ணம் அச்சுறுத்தி இனியேனும் அறத்தோடு பொருந்திய செயல்களைச் செய்வாயாக என்று உள் நின்று உணர்த்துவான். எம்முறையில் பார்த்தாலும் இறைவனின் செயல் என்றென்றும் அருளே ஆகும்.

106. தந்தையாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொல் ஆற்றின்
வந்திடா விடின் உறுக்கி வளாரினால் அடித்து தீய
பந்தமும் இடுவர்; எல்லாம் பார்த்திடின் பரிவே ஆகும்;
இந்த நீர் முறைமை யன்றே- ஈசனார் முனிவும் என்றும்?


தந்தையும் தாயும் தாம் பெற்றெடுத்த மக்கள் தம் சொல்படி நடக்கவில்லை எனின் அம்மக்களைச் சொல்லால் கடிந்தும், வளாரினால் அடித்தும், அதற்கும் பணியாத போது கட்டி வைத்து அவர்களைத் திருத்த முயல்வார்கள். வெளிப்பார்வைக்குச் சினத்தால் ஒறுப்பது போல் தோன்றினாலும் ஆய்ந்து பார்க்கும் போது தாய்தந்தையர்களின் இச் செயல்கள்யாவும் தம் மக்களிடத்து அவர்கள் கொண்ட அன்பினால் விளைந்தனவே ஆகும். அவ்வாறே இறைவன் உயிர்களை ஒறுப்பது என்றென்றும் அவன் அருளால் விளைந்ததே.

107. செயல்களே பலத்தைச் செய்யும்; தெய்வம் வேண்டா இங்கு என்னின்
முயலும் இச்செயல்கள் இங்கே முழுவதும் அழியும்; எங்கே
பயன் அளிப்பன்? அழிந்தே பலன்களைப் பண்ணும் கெட்டே
வயல் இடும் தழையும் தின்னும் மருந்தும்பின் பலிக்கு மாபோல்.

செய்த வினைகளே தத்தம் பயன்களைச் செய்தவர்க்குக் கூட்டுவிக்கும். இதவை ஊட்டுவிப்பதற்கு ஒரு தெய்வம் வேண்டியதில்லை என்று சிலர் மறுப்பர். செயல்கள் யாவும் செய்த அப்பொழுதே அழிந்து ஒழிகின்றன. ஆதலால் வினைகளே வந்து பயனைத் தரும் என்ற கொள்கை பொருந்தாது. அழிந்த வினைகள் எவ்வாறு பயன் அளித்தல் கூடும் என்று மறுப்பாரை வினவுதல் வேண்டும். அவர்கள் மீட்டும் உவமை கூறி ஐயம் எழுப்புவர். வயலில் இட்ட தழை உரம் முழுவதும் கெடுகிறது. ஆயினும் அழிந்த தழையே பின்னர் பயிர்கள் செழித்து வளர உரமாகிறது. ஒருவன் நோய் தீர்க்கும் மருந்தை அருந்து வானாயின் அம்மருந்து அவனால் செரிக்கப்பட்டு அழிகிறது. ஆனால் அழிந்த மருந்தே நோயை நீக்குகிறது. இந்த உவமைகள் வினைக்கும் பொருந்துவனவன்றோ. அழிந்த வினையும் பயன் தருமன்றோ என்பன அவர்கள் தொடுக்கும் வினாக்கள்.

108. செய்க்கு இடும் தழையும் தின்னும் திரவியம் அதுவும் போல
உய்த்திடும் செய்தி கெட்டே உறுவிக்கும் பலத்தை என்னின்
வைத்திடும் சோறும் பாக்கும் அருந்தினர் வயிற்றில் மாய்ந்தால்
மெய்த்திடும் பலம் உனக்கு; மலம் அலால் வேறும் உண்டோ?

வயலுக்கு இடும் உரமும் நோய் தீர உண்ட மருந்தும் தாம் அழிந்தே பயனைத் தருகின்றன என்ற உவமை எல்லா இடத்துக்கும் பொருந்தாது. உண்ணும் சோறும் தின்னும் வெற்றிலையும் அருந்தியவர்களின் வயிற்றில் மாய்ந்தது என்றால் அதனால் விளைந்த பயன் மலம் அல்லது வேறு உண்டோ? இல்லை ஆகலின் நீ கூறிய உவமை எல்லா விடத்தும் பொருந்தாது என்பதை நீ உணர்க.

109. திரவியம் உவமை அன்று செய்திக்கண்; திரவியங்கள்
விரவிய இடத்தே வீந்து பலம் தரும்; இம்மை அம்மை
பரவி நீ பார்; நீர் அங்கி பாத்திரத்து இட்ட எல்லாம்
கரவிடும் இங்கே; எங்கே பலன் கொளக் கருதினாயே?

நீ கூறிய உரமும் மருந்தும் கெட்டு அந்த இடத்திலேயே பயன் தருவன என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் வினையின் பயன்கள் செய்த அப்பிறவியிலேயே பயன் தருவன அல்ல. மறுபிறவியிலேயே பயன் தருவன என்பது உனக்கும் உடன்பாடு. ஆகவே இப்பிறவியில் நீரிலும் நெருப்பிலும் சொரிந்தனவும், ஏற்போர் கலத்தில் இட்டனவும் இங்கேயே அழிந்து போகின்றன. இவை நம் கண்ணால் காண்கிறோம். அவ்வாறு இருக்க அச்செயல்களின் பயன்கள் எங்கே வந்து உனக்குப் பொருந்தும் என்று எண்ணிப் பார்ப்பாயாக.

110. செய்தவர் மனத்தே எல்லாச் செய்தியும் கிடந்து பின்னர்
எய்தவே பலன்கள் ஈனும் என்றிடின் இருஞ்சுவர்க்கம்
பொய்யர் வாழ் நரகம் பூமி; புந்தியிற்கிடந்து போந்தது
ஐயனே ! அழகிது உன் சொல்;- இந்திர சாலம் ஆய்த்தே.

வினை தன்னைச் செய்தவர் மனத்திலே அடங்கிக் கிடக்கிறது. அதன் பின்னர் அடுத்த பிறவியில் வந்து தத்தம் பயனுக்கு ஏற்ப வந்து பொருந்தும் என்பர் சிலர். இனிய துறக்கம், பொய்யர்கள் வாழ்கின்ற நிரயம், அதன் பின்னர் இந்த நில உலகம் ஆகிய பல உலகங்களிலும் உள்ள இன்ப துன்பங்களை புத்தியில் கிடந்த வினை தானே தரும் என்று உன் சொல் அழகிது ! இது கண் கட்டு வித்தை போன்று உளது.

அழகிது என்பது இகழ்ச்சிக் குறிப்பாகக் கூறப்பட்டது. பொருந்துவது அன்று என்பது குறிப்பு. இந்திரசாலம் என்பது கண்கட்டு வித்தை செய்வோர் தொடர்பில்லாத ஒன்றிலிருந்து ஒரு பொருளைத் தோற்றுவிப்பது போல மயக்கம் தருவதாம் என்ற பொருளைத் தந்தது.

111. தானம்செய் பொருள் தரித்தோர் செய்தவர் தக்க செய்தி
ஊனம்பின் உறவே காண்டும்; பலம் உறுவிப்பான் வேண்டும்;
ஈனம் இல் செய்தி ஈசன் இடும்பணி; இவைநாம் செய்தால்
நூனங்கள் அதிகம் நோக்கி நுகர்விப்பன் வினைநோய் தீர.

ஒருவருக்குக் கொடையாக வழங்கப்பட்ட பொருள்களும், அக்கொடையை ஏற்றவரும், அக்கொடையை வழங்கியவரும், வழங்கியதாகிய செயலும் ஆகிய யாவும் நிலைபேறு இன்றி அழிவதை உலகில் காண்கிறோம். இவற்றால் நிகழும் பயன் நிலை பெற்றதாக விளங்கிச் செய்தவரைச் சென்று பொருந்துவதற்கு நிலைத்த தன்மை உடையவனாகிய ஒருவனே கூட்டுதல் வேண்டும். அத்தகைய நிலை பேறு உடையவன் இறைவனே. இறைவன் வினைகளின் பயன்களைக் கூட்டுவதற்கு இயைபு யாது என்னில் அறச் செயல்கள் யாவும் இறைவனின் கட்டளைகளே. ஆதலால் அவன் அருளிய விதிப்படி நடந்தால் அவற்றுள் குறைவு , மிகுதி நோக்கி அவற்றின் பயன்களை வினையாகிய நோய் தீருமாறு உயிர்களை நுகர்விப்பான்.

112. உலகு உடல் கரணம் காலம் உறுபலம் நியதி செய்தி
பலஇவை கொண்டு கன்மம் பண்ணுவது உண்பதனால்
நிலவிடாது இவைதாம் சென்று; நினைந்து உயிர் நிறுத்திக் கொள்ளாது
அலகு இலா அறிவின் ஆணை அணைத்திடும் அருளினாலே.

வினை செய்வதற்கு இன்றியமையாத வினைமுதற் பொருளாகிய உயிரும், உயிர் தங்கி இருப்பதற்கு உரிய உடலும், கருவிகளும், காலமும், காலத்தோடு இயைந்து நிகழ்வதாகிய செயலும், இன்னது செய்தால் இது பயன் என்னும் முறைமையும் ஆகிய இவற்றின் துணையால் உயிர்கள் வினைகள் ஈட்டலும் அவற்றின் பயனை நுகர்தலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்து ஆகும். இங்கே கூறப்பட்ட உலகு உடல் முதலியனயாவும் அறிவற்ற பொருள்கள். உயிரோ சிற்றறிவு உடையது. எனவே இவை யாவும் வினைப்பயனை அறிந்து துய்க்கின்ற ஆற்றல் அற்றவை. ஆதலால் இறைவனே தன்னுடைய ஆணையாகிய திருவருளால் வினையின் பயன்களை அந்தந்த உயிருக்கு ஊட்டுவான் என்பது பெறப்படும்.

உயிர்கள் சிற்றறிவு உடையன. மற்றையன அறிவற்ற பொருள்கள். எனவே இவை வினையின் பயன்களை உயிர்களுக்கு ஊட்டும் என்பதும் பொருந்தாது. எனவே ஒழிபு அளவையின் அடிப்படையில் இறைவன் ஒருவனே வினைப்பயன்களை உயிர்களுக்கு ஊட்டுவான் என்பது ஆசிரியரால் விளக்கப்பட்டது.

113. ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உபசாரம் உறவு சீலம்
வழுக்கு இலாத்தவம் தானங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை
அழுக்குஇலாத் துறவு அடக்கம் அறிவொடு அர்ச்சித்தல் ஆதி
இழுக்குஇலா அறங்களானால் இரங்குவான் பணி அறங்கள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகும் நல் ஒழுக்கமும், அன்புடைமையும், தொடர்பு இல்லாதாரிடத்து அருள் உடைமையும், விதித்தன செய்யும் வாழ்க்கை முறையும், தக்கோரிடத்துச் செய்யும் உபசாரமும், எல்லாரிடத்தும் கொள்ளும் நல்உறவும், பண்புடைமையும், ஒரு போதும் வழுவாத ஐம்பொறி அடக்கல் நோன்பு நோற்றல் ஆகிய தவமும், தகுதி உடையவர்க்கு மகிழ்வோடு அளிக்கும் கொடையும், தன்னிற் பெரியவரிடத்துச் செய்யும் வழிபாடும். வணக்கமும், வாய்மையும், விலக்கியன செய்யாத துறவும், அடக்கம் உடைமையும், அறிவுடைமையும், தன்னிற் பெரியாரைப் போற்றதலும் என்னும் இப்பதினாறு ஒழுகலாறும் ஒருவனுக்கு உளவாயின். இறைவன் அவற்றைத் தன் பணி என ஏற்று அவ்வாறு ஒழுகியவனுக்கு அருள் புரிவான்.

ஆசிரியர் இப்பாடலில் பதினாறு ஒழுக்கங்களை வகுத்துக் கூறினார். எனினும் அவற்றை நிகர்த்த மற்றைய நற்பண்புகளையும் சேர்த்துக் கொள்க. இங்கே துறவு எனப்பட்டது துறவறம் மேற்கொண்டவர்களுக்குச் சிறப்பாக விதிக்கப்பட்ட ஒழுக்கங்களை அன்று என்றும் இல்லறம் துறவறம், ஆகிய இரு நிலைகளையும் உளப்படுத்தியது என்றும் சிவஞான முனிவர் உரை செய்தார்.

இதனை அடுத்த பாடலில் இனமலர் கையில் கொண்டு அங்கு இச்சித்த தெய்வம் போற்றி என்று ஆசிரியரால் மீண்டும் கூறப்படுவதால் வந்தித்தல், வணங்கல், அர்ச்சித்தல் என்று இப்பாடலில் குறிப்பிடப்பட்டவை. தம்மிற் பெரியாரை நோக்கிச் செய்யப்படுவன என்றும் சிவஞான முனிவர் உரை வரைந்தார்.

114. மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
இனமலர் கையில் கொண்டு அங்கு இச்சித்த தெய்வம் போற்றி
சினமுதல் அகற்றி வாழும் செயல் அறமானால் யார்க்கும்
முனம் ஒரு தெய்வம் எங்கும் செயற்குமுன் நிலையாம் அன்றே.

மேற்கூறிய ஒழுக்கங்களை உடையவனாய் அவற்றுக்கு மறுதலையான தீமைகளை நீக்கி ஒழுகுபவன் தன் விருப்பத்துக்கு ஏற்ற ஒரு கடவுளை மனத்தால் நினைந்து, வாக்கால் வழுத்தி, மந்திரங்கள் சொல்லி, கையால் நல்ல மலர்களைத் தூவி வணங்குகின்ற இயல்பு உடையவனானால் அத்தகைய வனுக்கு எல்லாருக்கும் மேலவனாகிய சிவபெருமானே முன் நின்று அருள் பாலிப்பான்.

அறத்தின் வழி ஒழுகி, சினம் முதலிய தீமைகளை அகற்றி வாழ்கின்ற ஒருவன் எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் சிவபெருமானே அவனுக்கு அருள் பாலிப்பான் என்றார். சிவஞான முனிவர் சினமுதல் அகற்றி என்பதில் வரும் அகற்றி என்பது பெயர் என்றும், அகற்றிக்கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு தொக்கது என்றும் உரை கண்டார்.

115. யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள்
வேதனைப் படும்; இறக்கும்; பிறக்கும் மேல் வினையும் செய்யும்;
ஆதலான் இவை இலாதான் அறிந்து அருள் செய்வான் அன்றே.

எந்த தெய்வத்தை வழிபடு தெய்வமாக வணங்கினாலும் வினை வயப்படாதவனாகிய சிவபெருமானே அம்மை அப்பனாக வந்து அவ்வழி பாட்டை ஏற்று அதற்குரிய பயனை அருளுவான். மற்றைத் தெய்வங்கள் எல்லாம் உயிர் வகையுள் ஒன்றாகுமே தவிர வேறு இல்லை. அத்தகைய பல தெய்வங்களும் பிறக்கும் இன்பத் துன்பங்களுக்கு உட்படும்; இருவினைகளைச் செய்யும்; இறக்கும் என்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. இவற்றுள் எதுவும் இல்லாதவனாகிய சிவபெருமான் ஒருவனே வினைவயப்படாத முதல்வன். ஆகையால் அவனே உயிர்களுக்கு வினையின் பயனைக் கூட்ட வல்லவன்.

இறைவன் ஒருவனே என்பதும் அவன் இயல்பாகவே பாசங்களில் நீங்கியவன் என்பதும் சைவ சமயத்தின் கொள்கை. மிகப் பழமையான தமிழ் நூல்களும் கூட சிவபெருமானைப் பிறவாயாக்கைப் பெரியோன் என்றே குறிப்பிடுகின்றன. இந்த உண்மையை அறியாதவர் செத்துப் பிறக்கின்ற இயல்புடைய சிறு தெய்வங்களை வழிபடுவராயினார். சென்று நாம்சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம். சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம் என்ற அப்பரடிகள் திருவாக்கை நினைவு கூர்க.

No comments:

Post a Comment