Monday 31 October 2016

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் -9

சிவபெருமான் பார்வதிக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் காலம் கனிந்து வந்தபோதுதான் பாண்டவ சகோதரர்கள் சிவபெருமானின் தரிசனத்திற்காக கேதார்னாத்துக்கு வந்தார்கள். அங்கு வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்து வழிபட்டபடி அவரைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். பாண்டவர்கள் சிவபெருமானைத் தேடிக் கொண்டு அங்கு வந்தபோது அவர்களால் கண்டு பிடிக்க முடிகிறதா என்று அவர்களை சோதனை செய்து பார்க்க விரும்பிய சிவபெருமான் ஒரு மாடாக உருமாறி திரிந்து வந்தார். ஆனால் பாண்டவ சகோதரர்கள் சிவபெருமான் அங்கு வந்து தங்கி இருப்பது உண்டு என்றும் உண்மையான பக்தி கொண்டு அவரைத் தேடி அலைந்தால் அவரைக் கண்டு பிடிக்க முடியும் பிடிக்கலாம் என்பதையும் கிருஷ்ணர் மூலம் ஏற்கனவே அறிந்து இருந்தார்கள் என்பதினால் உண்மையான பக்தி கொண்டு சிவபெருமானை வழிபாட்டு வந்த பாண்டவ சகோதரர்களினால் சிவபெருமானே அந்த மாட்டின் உருவில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆகவே அவர்கள் அந்த மாட்டை வணங்கியபடி அதன் அருகில் சென்றார்கள்.

மாட்டு உருவத்தில் இருந்த சிவபெருமான் அவர்கள் தாம் அருகில் வருவதைக் கண்டவுடன் வேண்டும் என்றே அவர்களிடம் இருந்து தப்பிக்க எண்ணியதைப் போல ஓடத் துவங்கினார். ஆனால் பாண்டவ சகோதரர்கள் அந்த மாடே சிவபெருமான் என்பதை புரிந்து கொண்டு அதைப் பிடிக்க ஓடினார்கள். அதன் பின்னால் ஓடிச் சென்ற பீமனோ கஷ்டப்பட்டு அந்த மாட்டை பிடித்துக் கொள்ள முயல, அந்த மாடும் பீமனிடம் இருந்து விடுபட்டு திமிறிக் கொண்டு ஓடத் துவங்கியது. பீமன் மாட்டுடன் போராடி அதன் உருவில் இருந்த சிவபெருமானை அங்கேயே தடுத்து நிறுத்த முயன்றான்.


பீமன் பரம பராக்கிரமசாலி என்பதினால் அந்தப் போராட்டத்தில் மாட்டின் உடல் கிழிந்தது. பீமன் இழுத்த இழுப்பில் அதன் உடல் பிய்ந்து விழுந்தது. இப்படியாக அந்த மாட்டின் உடல் கேதார்னாத் அருகில் இருந்த ஐந்து இடங்களில் சென்று விழுந்தன. அவை விழுந்த இடங்கள் பார்வதி சிவபெருமானை லிங்க உருவில் கட்டிப் பிடித்தவை ஆகும். மாட்டின் உடல் பகுதிகள் அதே சிவலிங்கங்கள் மீது அவை விழ பார்வதி முன்னர் வேண்டிக் கொண்டபடி அங்கிருந்த சிவலிங்கங்களில் சிவபெருமான் குடி கொண்டார். இப்படியாக அந்த ஐந்து இடங்களில் இருந்த சிவலிங்கங்களே கேதார் பஞ்சலிங்க ஆலயங்களாகின. பார்வதி சிவபெருமானைக் கட்டித் தழுவியவை அந்த ஆலயங்களில் உள்ள சிவலிங்கங்கள் என்று நம்பிக்கைக் கதை உள்ளது.

மாட்டின் கழுத்துப் பகுதி விழுந்த இடமே கேதார்னாத் ஆலயம் என்பதினால் இங்குள்ள சிவபெருமானின் உடல் கழுத்துவரை மட்டுமே காணப்படுகிறது.
மாட்டின் வயிற்றுப் பகுதி விழுந்த இடமே மத்திய மகேஸ்வரர் என்பது. குப்தகாசி எனப்படும் அதுவும் ஐந்து ஆலயங்களில் ஒன்றாயிற்று.
 
மாட்டின் புஜங்கள் விழுந்த இடமான துங்கனாத்தில் இன்னொரு ஆலயம் அமைந்தது. இங்கு காணப்படும் சிவபெருமான் புஜங்களோடு அற்புத தரிசனம் தருகிறார். மேலும் இது இராமாயண காலத்துக்கு முன்னர் இருந்துள்ள ஆலயம் என்பது ஒரு கதை மூலம் தெரிகிறது. இலங்கையின் அதிபராக இருந்த ராவணன் பெரும் சிவபக்தன். அவன் இங்கு வந்து சிவபெருமானைத் துதித்து தவம் இருந்துள்ளதான கதையும் உள்ளது.
நந்தியின் உருவில் இருந்த சிவபெருமானின் ஜடை விழுந்த இடம் யுர்கம் எனும் பள்ளத்தாக்கில் உள்ள கர்பேஸ்வரர் ஆலயமாயிற்று. அங்குள்ள சிவபெருமான் ஜடாதாரியாகக் காட்சி தருகிறார் .
 
கடைசியாக மாட்டின் முகம் விழுந்த இடமான ருத்ரநாத் ஆலயத்தில் அழகிய முகத்தோடு சிவபெருமான் காட்சி தருகிறார். இப்படியாக பார்வதி விரும்பிய ஐந்து இடத்திலும் சிவபெருமானின் ஆலயம் அமைய கேதார்னாத்துக்கு செல்பவர்கள் பஞ்ச கேதார் ஆலய தரிசனம் என்ற பெயரில் அந்த ஐந்து ஆலயங்களுக்கும் செல்வார்கள். அப்போதுதான் அவர்கள் சிவபெருமானின் முழு உருவத்தையும் கண்டு வழிபட்டப் பலன் கிடைக்கும்.


பாண்டவர்களின் பக்தியைக் கண்டு மெச்சிய சிவபெருமானும் கேதார்னாத்தில் அவர்களுக்குக் காட்சி தந்து அருள் புரிந்தார். சிவபெருமானின் தரிசனத்தையும் அருளாசியையும் பெற்றுக் கொண்டு தமது அனைத்து தோஷங்களையும் அவர் அருளினால் விலக்கிக் கொண்ட பாண்டவர்கள் திரௌபதியுடன் சேர்ந்து ஆலயத்தின் பின் வழியே இருந்தப் பாதை மூலம் சொர்க்கம் சென்றதாக கதை உள்ளது. தமது கடமையை முடித்துக் கொண்ட ஸ்ரீ ஆதி சங்கரரும் இந்த வழியேதான் மலை மீது சென்று அப்படியே அங்கிருந்து மறைந்து போனார்.


கேதார்னாத்திற்கு விஜயம் செய்பவர்கள் அங்கிருந்து நேபாளத்தில் உள்ள பசுபதினாத் ஆலயத்துக்குச் சென்று அங்கும் சிவ தரிசனம் செய்வது பெரிய விஷேசம் என்பார்கள். காரணம் பசுபதினாத்தில் பரமசிவனின் தலைப் பகுதி உள்ளது என்றும். கேதார்னாத்தில் உள்ளது பரமசிவனின் பாதப் பகுதி என்ற நம்பிக்கையும் உள்ளது.

கேதார்னாத் ஆலயத்தின் அருகில் உள்ள நதிகளில் இறந்து போன முன்னோர்களுக்கு திதியும் கொடுப்பார்கள். இங்கு தரப்படும் திதியை பெற்றுக் கொண்டு பூலோகத்திலிருந்து தேவலோகத்திற்கு செல்லும் இறந்து போனவர்களுடைய ஆத்மாக்கள் இந்த ஆலயத்தின் அருகில் ஓடும் வைதாரிணி என்ற நதியில் குளித்து விட்டு கேதார்னாதரை வணங்கி விட்டு பூரண மன அமைதியுடன் மேலுலகம் செல்கின்றன என்பதினால் அவர்களுடைய சந்ததியினருக்கும் குடும்பத்தினருக்கும் மன நிறைவான வாழ்க்கை அமைகின்றன என்ற நம்பிக்கையிலான ஐதீகமும் உள்ளது.


கேதார்னாத் ஆலயம் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இன்று சிதைந்த நிலையில் உள்ள பத்ரினாத் மற்றும் கேதார்னாத் ஆலயங்கள் மீண்டும் புனரமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்து விடப்படும். இரண்டு ஆலயங்களின் இந்த தற்காலிக அழிவும் எதோ ஒரு காரணத்திற்கானது என்றே நினைக்க வேண்டி உள்ளது.
முற்றும்

நன்றி : சாந்திப்பிரியா   

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் -8

முன் ஒரு காலத்தில் கைலாய மலையில் பரமசிவன் தனது மனைவியான பார்வதியுடன் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் காட்சி தந்து கொண்டு இருந்தார். பல்வேறு இடங்களிலும் இருந்து வந்திருந்த பல ரிஷிகள் அங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டுச் சென்றார்கள். அந்த நேரத்தில் பிருங்கி எனும் மாபெரும் முனிவரும் அங்கு வந்து இருந்தார். அவர் சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார். சிவபெருமான் பார்வதிக்கு அனைவரும் பூஜை புனஸ்காரங்கள் செய்து முடித்தப் பின் அனைவரும் சிவபெருமான் மற்றும் பார்வதியை வழிபடத் துவங்க பிருகு முனிவர் மட்டும் சிவபெருமானை மட்டுமே வணங்கி விட்டு பார்வதியை வணங்காமல் சென்றார்.
அதற்கான காரணத்தை அந்த முனிவரிடம் கேட்டபோது பிருகுவும் சிவன் வேறு, பார்வதி வேறு என்று தான் கருதுவதால் சிவபெருமானைத் தவிர வேறு யாரையும் தாம் வணங்குவதில்லை என்றும் கூற அதனால் கோபமுற்ற பார்வதியும் அவருக்கு சாபம் தந்தார். அது மட்டும் அல்ல அங்கிருந்து கோபமாக எழுந்து சென்று விட்டார். அவர் மனதில் ஒரு ஏக்கம் ஏற்பட்டது. சிவனுடன் சேர்ந்து பிரபஞ்சத்தையே படைத்த பராசக்தியான தன்னை புறங்கணித்து விட்டு சிவனை தனிக் கடவுளாகப் இந்த உலகம் பார்ப்பதை மாற்ற வேண்டும். சிவன் வேறு, சக்தி வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள், இனி இரண்டும் ஒன்றே என்பதை பரிபூரணமாக உணர வேண்டும். சக்தி இல்லையெனில் சிவனும் இல்லை என்றும் சிவன் மற்றும் சக்தி என்ற இரண்டும் வெவேறு இல்லை. அவை இரண்டுமே ஒன்றிணைந்த ரூபம் ஆகும் என்ற உண்மையை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.

ஆகவே சிவபெருமானுக்கே சக்தி தரும் தனக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என எண்ணியபடி அங்கிருந்துக் கிளம்பிச் சென்றவள் நேராக கேதார்னாத்துக்கு வந்து அங்கிருந்த கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தில் சென்று அமர்ந்து கொண்டு கேதார கௌரி விரதத்தினை மேற்கொண்டு தவம் இருந்தாள். கேதாரம் என்பது இமயமலையின் ஒரு பகுதி ஆகும். இங்குதான் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் எனும் பெயரில் தோன்றினார். பார்வதி சிவனை வழிபட்டு அவர் கொடுத்த வரத்தின்படி அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தை பார்வதி பெற்றாள்.

இருபத்தி ஒரு நாட்கள் விரதம் இருந்து செய்ய வேண்டிய கௌரி விரதம் முழு பக்தியோடு செய்யப்பட்டால் கணவரிடம் இருந்து வேண்டியவைக் கிடைக்கும் அன்பது ஐதீகம். ஆகவே பார்வதி மேற்கொண்டு இருந்த விரதத்தில் மகிழ்ந்து போன சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டதும், பார்வதியும் தயங்காமல் அவருடைய உடலில் தானும் பாதி உடலாகி அவர் சக்தியிலும் பாதியாக வேண்டும். இனி உலகம் சிவசக்தி என்றே அவர்கள் இருவரையும் போற்றி வணங்க வேண்டும் என்று வரம் கேட்க சிவபெருமானும் தன்னுடன் அவளை பாதியாக இணைத்துக் கொண்டப் பின் சில காலம் பொறுத்து தக்க நேரத்தில் அந்த அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாகவும் அதுவரை பார்வதி பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் கூற அவளும் மகிழ்வுற்றாள். அர்த்தனாரீஸ்வரர் அவதாரம் முதலில் திருவண்ணாமலை உண்ணாமலையார் ஆலயம் மற்றும் திருச்சங்கோடு அம்மையப்பர் ஆலயம் இரண்டிலும் நிகழ்ந்தது என்றும் கூறுகிறார்கள். ஆனால் அர்த்தனாரீஸ்வரர் அவதாரம் தோன்றியது கேதார்னாத்தில்தான் என்றாலும் அந்த ரூபத்தில் முதன் முறையாக பக்தர்களுக்கு காட்சி தந்து வெளிப்பட்டது திருவண்ணாமலை மற்றும் அம்மையப்பர் ஆலயங்களில் என்பதே உண்மையான வரலாறு .



பார்வதியை தன்னுடன் பாதியாக இணைத்துக் கொள்வேன் என வாக்குறுதி கொடுத்தப் பின் பார்வதியும் சிவபெருமானும் அதே வனப்பகுதியில் சில நாட்கள் தங்கி இருந்தார்கள். பொழுதைப் போக்க அவர்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினார்கள். அந்தப் போட்டியில் ஒரு நிபந்தனையையும் வைத்துக் கொண்டார்கள். அதன்படி சிவபெருமான் அந்த வனப் பகுதியில் மறைந்து கொள்ள வேண்டும். மாலை சூரியன் மறைவதற்கு முன்னால் மறைந்து உள்ள அவரை பார்வதி அவரைக் கண்டு பிடிக்க வேண்டும். ஐந்து இடங்களில் மறைந்து இருக்கும் அவரை ஐந்து முறை பார்வதி கண்டு பிடித்து விட்டால் அவள் கேட்கும் வரத்தை அவர் அருள வேண்டும். ஆட்டம் துவங்கியது. சிவபெருமானும் பல இடங்களில் சென்று தனது உருவான லிங்க கற்களை வைத்து விட்டு அவற்றில் ஐந்தில் தான் ஒளிந்து கொண்டார். பல லிங்கங்கள் இருந்ததைக் கண்ட பார்வதி, அவற்றைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஏமார்ந்தாள்.



அவரைத் தேடித் தேடி அலைந்த பார்வதி ஒரு இடத்தில் இருந்த லிங்கத்தைக் கட்டிப் பிடிக்க அதில் அவர் உடலைத் தழுவியதைக் போன்ற உணர்வைப் பெற்றாள். அவள் கட்டிப் பிடித்தப் பகுதி அவருடைய உடல் பகுதியாக இருந்தது. இப்படியாக அவள் ஐந்து இடங்களில் இருந்த லிங்கங்களில் மறைந்து இருந்த சிவபெருமானைக் கட்டிப் பிடித்தபோது அவளது கைகளில் அவருடைய உடல், காது, கால், கைகள் மற்றும் வயிறு என அவருடைய உடல் அமைப்புக்கள் அகப்பட்டன. இப்படியாக அவற்றைக் கொண்டு அந்த ஐந்து இடங்களில் ஒளிந்து இருந்த சிவபெருமானை பார்வதி கண்டு பிடித்து ஆட்டத்தில் வெற்றி பெற்றாள் .

அந்த விளையாட்டு முடிந்தவுடன் பார்வதி சிவபெருமானிடம் ஒரு கோரிக்கையை வைத்தாள். எந்த ஐந்து இடங்களில் அவரை பார்வதி கண்டு பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டலோ அந்த இடங்கள் எல்லாம் பவித்ரமானதி விட்டன. ஆகவே பஞ்ச பூதங்களைப் போன்ற அவை ஐந்தும் சிவபெருமானின் புனித ஆலயங்களாக மாறி பக்தர்கள் பூஜிக்கும் இடங்களாக அமைய வேண்டும். அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் தான் தக்க நேரத்தில் அந்த ஐந்து இடங்களிலும் எழுந்தருளுவேன் என்று அவளுக்கு வாக்குறுதி தந்தார். அதுவே கேதார்நாத்தில் பஞ்ச லிங்க ஆலயங்கள் ஏற்படக் காரணமாக அமைந்தன. ஆனால் அந்த ஆலயங்கள் ஐந்து இடங்களில் அமைந்தது எப்படி ?

........தொடரும் 

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் -7

கேதார்னாத் மான்மியம்

பத்ரினாத்துக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கேதார்னாத்துக்கும் செல்லாமல் போக மாட்டார்கள். பத்ரி விஷ்ணு பகவான் அருள் புரியும் தலம் என்பதைப் போலவே கேதார்னாத் சிவபெருமான் அருள் புரியும் தலமாகும். திருமால் நரநாராயணராக கேதார்னாத்தில் சிவபெருமானை வேண்டித் தவம் இருக்க அவர் திருமாலுக்குக் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு நாராயணரும் சிவபெருமானை அந்த இடத்திலேயே ஜோதிர்லிங்கமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டு இருக்க வேண்டும் என்ற தமது ஆசையை வெளிப்படுத்த, அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் தான் அங்கயே ஜோதிர் லிங்க வடிவத்தில் இருப்பேன் என்று அவருக்கு உறுதி கூறினார். அத்தகைய புனித தலத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் சிவபெருமானின் ஆலயத்தை ஸ்தாபனம் செய்தார். அங்கு சிவபெருமானை தியானித்தபடி விஷ்ணுவும் அமர்ந்து இருக்கிறார் என்பது ஐதீகமாகும்.

இன்னொரு கதையின்படி பார்வதி சிவனுடன் ஐக்கியமாகி தானும் அவர் அவதாரத்தில் பாதியானவள் என்பதை உலகிற்கு நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக கேதார்னாத்துக்குச் சென்று தவம் இருந்து சிவபெருமானின் அருளைப் பெற்றுக் கொண்டு அர்த்தனாரீஸ்வரர் அவதாரத்தை எடுத்துக் கொண்டாள். ஆகவே பார்வதி வந்து தவம் செய்த இடம் என்பதினாலும் கேதார்னாத் முக்கியத்துவம் பெற்றது. இதன் கதை என்ன என்பதை பாண்டவர்கள் சிவபெருமானை வழிபட்டக் கதையில் கூறுகிறேன். அதற்க்கு முன்னால் இதைப் படியுங்கள்.

கேதார்னாத்துக்கு செல்பவர்கள் பஞ்ச கேதார் யாத்திரை எனப்படும் ஐந்து சிவன் ஆலயங்களையும் தரிசிக்காமல் வரமாட்டார்கள். பஞ்ச கேதார் யாத்திரை என்பது என்ன? அதன் கதை என்ன ?

குருஷேத்திரத்தில் மகாபாரதப் போர் முடிவுக்கு வந்தது. யுத்தத்தில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் ராஜ்ய பரிபாலனத்தை தமது சந்ததியினரிடம் ஒப்படைத்து விட்டு அமைதி தேடி மோட்ஷம் அடைய பத்ரினாத் மற்றும் கேதார்னாத் ஆலய விஜயத்தை மேற்கொண்டார்கள். அவர்கள் தமது சந்ததியினரை கொன்று குவித்ததினால் அவர்களுக்கு ஏற்பட்டு இருந்த தோஷத்துக்கு விமோசனம் பெறுவதற்காகவும் கேதார்னாத்துக்கு வந்தார்கள். ஆனால் அங்கு வந்ததும் சிவபெருமான் அங்கு இல்லையென்றும் அந்த நேரத்தில் அவர் இமயமலையில் உள்ள வனப் பிரதேசத்தில் வாழ்வதாகவும் கேள்விப்பட்ட பாண்டவர்கள் சிவபெருமானை தேடிக் கொண்டு இமயமலையை நோக்கிச் சென்றார்கள். வழி நெடுகிலும் வனப் பிரதேசமாக இருந்ததினால் அவரை காட்டில் தேடி அலைந்தார்கள். ஆனால் எத்தனைத் தேடியும் சிவபெருமானைக் அவர்களினால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனாலும் விடா முயற்சி கொண்டு அவரைத் தேடி அலைந்தவர்கள் ஒருநாள் மனம் வெதும்பிப் போய் என்ன செய்வது எனத் தெரியாமல் ஒரு மரத்தடியில் இளைப்பாறினார்கள். அப்போது வனத்தின் நடுவில் இருந்து ஒரு குரல் கேட்டது.

அந்தக் குரல் 'பாண்டவர்களே உங்களால் சிவபெருமானை மனித உருவிலோ அல்லது தெய்வமாகவோ இந்த இடத்தில் பார்க்க முடியாது. ஆகவே கேதானாத்திற்குச் சென்று அவரை தேடினால் அவர் கிடைப்பார். ஆனால் அதற்கு பக்தியுடன் அவரை வேண்டுவது முக்கியம்' என்று கூறியது. அதைக் கேட்டவர்கள் மன மகிழ்ச்சி அடைந்து சிவபெருமானை தரிசித்து அவர் அருளைப் பெற கேதார்னாத்துக்கு பயணித்தார்கள். அவர்கள் அப்படி யாத்திரையை மேற்கொள்ள வேண்டியதின் பின்னணிக் காரணம் ஒன்று இருந்தது என்பது அவர்களுக்கே தெரியவில்லை.
..........தொடரும் 

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் -6

இத்தனை மகிமை வாய்ந்த பத்ரினாத் ஆலயம் அமைப்பு எப்படியானது? அங்கு சென்று அவரை எப்படி வணங்குவது என்பதை எனக்கு விளக்குவீர்களா என அருந்ததி வசிஷ்டரிடம் கேட்க வசிஷ்டர் தொடர்ந்து கூறத் துவங்கினார்.

பத்ரினாத் ஆலயத்தின் எதிரே அமைந்துள்ள இரண்டு பர்வதங்களில் நர மற்றும் நாராயணன் என்ற இரண்டு முனிவர்கள் தவம் இருந்தார்கள் அவர்கள் வேறு யாரும் அல்ல கிருஷ்ணரின் இரண்டு அவதாரங்களே. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணராக அவதரித்தவரும் அந்த யுத்தத்தில் பங்கு கொண்ட அர்ஜுனனுமே அவர்கள் ஆகும். அந்த இருவரும் தவம் இருந்த அந்த இந்த இரண்டு மலைகளையும் நர நாராயண மலையென்று அழைக்கின்றனர். நரநாராயணர்கள் என்பவர்கள் ஒருவரே ஆவார். அவரே விஷ்ணு பகவான்.

அவர் பத்ரினாத்தின் மலையின் அடிவாரத்தில் வெகு காலமாக தவத்தில் இருந்தபோது அவரை வெயிலும் மழையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தலை மீது ஒரு குடையைப் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாக நின்று கொண்டு இருந்தாள். ஒவ்வொரு யுகத்திலும் நல்லவற்றைக் காக்க தாம் அவதாரம் எடுப்பேன் என பெருமாள் கிருஷ்ணாவதாரத்தில் கூறி இருந்தார். ஆகவே தானே கிருஷ்ணராகவும் அர்ஜுனனாகவும் ஒரே நேரத்தில் இரு அவதாரங்களை எடுத்த மகாவிஷ்ணு மகாபாரத யுத்தத்தின் பேரழிவுகளை கண்டப் பிறகு இந்த உலகில் உள்ள மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று எண்ணி இங்கு வந்து தவம் இருந்தார். அந்த இடத்தை சுற்றி பத்ரி மரங்கள் வனம் போல வளர்ந்து இருந்ததினால் அந்த இடத்துக்கு பத்ரினாத் எனும் பெயர் வந்தது என்றும், அங்கு வாசம் செய்யும் பெருமாளை பத்ரி எனவும் அழைப்பதாக ஐதீகம் உள்ளது. விஷ்ணு பெருமான் தவக் கோலத்தில் அமர்ந்து இருந்ததினால்தான் இந்த ஆலய பிரதான சன்னதியில் அவர் தியான நிலையில் காட்சி தருகிறார்'.

மகாவிஷ்ணு அங்கு தவத்தில் இருந்தபோது அங்கு வந்த பிரும்மா மற்றும் பிற முனிவர்கள் முன் தனது சுய உருவில் தோன்றிய மகாவிஷ்ணு 'தான் நாரத குண்டத்தில் மறைந்து இருக்க உள்ளதாகவும், மறைந்து இருக்கும் தம்மை பல காலத்துக்குப் பிறகு அனைவரும் போற்றி வணங்கும் தூய்மையான ஆன்மீக மனிதர் வந்து கண்டெடுத்து ஆலயம் அமைப்பார் என்றும், கலி யுகத்தில் பலவிதமான தீமைகளை செய்யும் மக்களின் தீய மன நிலையை அழித்து அவர்களை நல்வழிக்கு அழைத்துச் செல்வேன் என்றும், ஆனால் அதனை அடைய அவர்கள் தம்மை தரிசிக்க இந்த புண்ணியத் தலத்துக்கு மிகுந்த சிரமப்பட்டே வர வேண்டி இருக்கும்' என்றும் கூறினார். அதற்கு முன்னோடியாக பிரும்மா தன்னுடைய சிலையை வடித்து அங்கே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் கூறினார்'. இப்படியாக வசிஷ்ட முனிவர் தனது மனைவியான அருந்ததிக்குக் கூறிய பின் அவளும் அந்தக் கதையைக் கேட்டு மகிழ்வுற்று அவரை விழுந்து வணங்கினாள் .


அப்படி பிரும்மா வடிவமைத்த சிலையே பின்னர் ஆதி சங்கரரால் கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று புராணக் கதை உள்ளது. விஷ்ணுவின் அறிவுரையின்படி பிரும்மாவும் விஷ்ணுவின் சிலையை பத்ரினாத்திலேயே படைத்து பிரதிஷ்டை செய்தார். ஆனால் பின்னர் புத்தமதம் தழைத்தபோது அந்த சிலையை பௌத்தர்கள் எடுத்து நாரத குண்டத்தில் தூக்கி எரிந்து விட்டார்கள். அதையே பின்னர் ஸ்ரீ ஆதி சங்கரர் வெளியில் எடுத்து ஆலயத்தை நிறுவினார்.

பத்ரினாத் ஆலயத்தின் உள்ளே ஆதி சங்கர மடமும் உள்ளது. மடத்தின் இடப்புறத்தில் உள்ள சிறிய குகையில்தான் ஆலயத்தை ஸ்தாபித்த ஸ்ரீ ஆதி சங்கரர் தியானம் செய்ததாகப் புராணங்கள் மூலம் அறிகிறோம். அதே மடத்தில் காணப்படும் கற்பக விருட்ச மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு ஸ்ரீ ஆதி சங்கரர் ஞானம் பெற்றார் என்றும் சிலர் கூறுகிறார்கள் .

ஸ்கந்த புராணத்தின்படி இந்த உலகில் எத்தனையோ புண்ணிய பூமிகள் இருந்தாலும், பத்ரினாத் ஆலய தலத்தைப் போன்ற புண்ணிய பூமி கிடையாது. ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ ஆதிசங்கரரால் கண்டெடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட பத்ரினாத் ஆலயம் பலமுறை பல்வேறு ஆட்சியாளர்கள் காலத்தில் மாறுதலுக்கு உள்ளாகி உள்ளன. வருடத்துக்கு ஆறு மாதங்கள் அந்த பகுதி முழுவதுமே பணியால் மூடப்பட்டு இருக்கும் என்பதினால் வருடத்துக்கு ஆறு மாதம் மட்டுமே இந்த ஆலயம் திறந்து இருக்கும். அதற்கும் காரணம் உண்டு.

இமயமலையில் உள்ள இந்த ஆலயமே வைகுண்டத்தின் நுழைவாயிலாக உள்ளதினால் பூமியில் உள்ள பக்தர்கள் தொடர்ந்து இங்கு வந்து பத்ரினாதரை தரிசித்தபடியே இருப்பார்கள். அதனால் தேவலோகத்தில் உள்ளவர்களினால் அவர்களது தேவரை வணங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆகவேதான் வருடத்துக்கு ஆறு மாதங்கள் மனிதர்கள் பத்ரிக்குச் சென்று பத்ரினாதரை வணங்கும் வகையிலும், மனிதர்களே செல்ல இயலாத நிலையில் ஆறு மாதங்களில் இயற்கையாக அங்கு செல்லும் அனைத்துப் பாதையிலும் பனி மழையைப் பொழிய வைத்து மனிதர்களினால் செல்ல முடியாத அந்த ஆறு மாத காலத்தில் தேவர்கள் அங்கு வந்து பத்ரினாதரை வணங்குகிறார்கள் என்பது ஐதீகம். அது மட்டும் அல்ல இன்னொரு கதையின்படி அந்த ஆறு மாத காலத்தில் நாரதர் ஆலயத்துக்கு வந்து பகவானை வேண்டித் தவம் இருப்பதாகவும், அவரது தவத்துக்கு இடையூறு இருக்கக் கூடாது என்பதினால் அந்த ஆறு மாத காலமும் ஆலயம் மூடப்பட்டு இருக்கும் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் புராணக் கதை ஒன்று உள்ளது.


ஆலயத்தின் அருகில் உள்ள கங்கை கரையில் பிரும்ம கபாலம் என்ற பாறை உள்ளது. அங்கு இறந்து போன பித்ருக்களுக்கு இங்கு, பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் ஏழேழு தலைமுறை அவர்களது ஆத்மாவும் மோக்ஷமடைவதாகவும் நம்பிக்கை உள்ளது. அது மட்டும் அல்ல பத்ரிநாத்தில் ஒரே ஒரு முறை பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் அதன் பின்னர் அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் சிரார்த்தம் செய்யத் தேவை இல்லை என்பது இந்த தலத்தின் இன்னொரு விஷேஷம் ஆகும். ஆலயத்தின் உள்ளே இரண்டு அடி உயரத்தில் பத்ரினாராயனராக தியான நிலையில் காட்சி தர அவரது வலது பக்கத்தில் நின்றுள்ள நிலையில் நரநாராயணர்கள் இருக்க, பெருமாள் முன்னிலையில் நாரதர் அமர்ந்திருக்க, இடது புறத்தில் குபேரனும் விநாயகரும் காட்சி தர மேல்புறத்தில் சந்திரனும் சூரியனும் உள்ளார்கள். ஆலயத்தில் ஸ்ரீ மகாலஷ்மி தாயாரின் சன்னதியும் இந்த ஆலயம் ஸ்தாபிக்க காரணமான ஸ்ரீ ஆதி சங்கரருக்கும் தனி சன்னதி உள்ளன.

அலகநந்தா நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கும் பத்ரிநாத் கோவிலுக்கு சற்று தொலைவில் நாரதர் குளம் உள்ளது. அதன் அருகில் ஐந்து பாறைகளைக் கொண்ட பஞ்சசீலா என்ற இடமும் உள்ளது. அந்த ஐந்து பாறைகளையும் நாரதர், நரசிம்மர், வராஹர், கருடர், மார்கண்டேயர் என்று கூறுகிறார்கள் .

ஆறுமாத காலம் ஆலயம் மூடப்படுவதற்கு முன் பிரதான சன்னதியில் ஏற்றி வைக்கப்படும் நெய் விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருப்பது இந்தக் ஆலயத்தின் தனிச் சிறப்பாகும் .
.......அடுத்து கேதார்னாத்  ஆலயப் பெருமை தொடர்கிறது 

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் -5

'ஸ்வாமி நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு பயமாக உள்ளது. எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் வர வேண்டும். அவை வராமல் தடுக்க என்ன உபாயம் உள்ளது?' என்று ஜனமேஜயன் கேட்டதும் வியாசர் கூறினார் 'ஜனமேஜயா உன் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் நீ பெற்று உள்ள சாபங்கள்தான். உன்னால் அவற்றை தடுத்து நிறுத்திக் கொள்ள முடியாது. அதற்குக் காரணம் நீ அழித்த சர்பங்களில் மகாவிஷ்ணுவிற்கு படுக்கையாக உள்ள ஆதிசேஷனின் வம்சாவளியினரும் அடக்கம். ஆகவே மகாவிஷ்ணுவின் சாபமும் உனக்கு உள்ளது. அது போலவே உன் சந்ததியினரால் விரட்டி அடிக்கப்பட்டு காயமுற்ற நாயும் பூர்வ ஜென்மத்தில் மஹா விஷ்ணுவின் உண்மையான பக்தையாக இருந்து சில காரணங்களினால் நாயாகப் பிறந்து இருந்தது. விஷ்ணுவின் பரம பக்தையான அதன் தாய் கொடுத்த சாபமும் சேர்ந்து உள்ளதினால் உனக்கு சாப விமோசனமும் மகாவிஷ்ணுவின் அவதாரமான பத்ரினாதர் மூலமே கிடைக்கும் என்பது விதியாகும். ஆகவே நீ எச்சரிக்கையாக இருந்து பிராமணரைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷத்தை ஒரு பெண்ணால் அடையாமல் இருக்க முடியுமா என்று முயன்று பார். ஆனால் அது மிகவும் கடினம். நீ ஒரு காட்டுக்குச் சென்று அங்கு ஒரு பெண்ணின் மோகத்தில் வீழ்ந்து பதினெட்டு பிராமணர்களைக் கொன்று பிரும்மஹத்தி தோஷத்தைப் பெற உள்ளாய் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு அந்த தோஷம் வராமல் இருக்க மகாவிஷ்ணுவையே தியானம் செய்து கொண்டு இருக்க வேண்டும். அப்படி மகாவிஷ்ணுவையே தியானம் செய்து கொண்டு பெண் வயப்படாமல் இருந்தால் மட்டுமே உனக்கு வரவுள்ள தோஷம் களைய வாய்ப்பு உண்டு' என்று கூறி விட்டு தான் மட்டும் பத்ரினாத்துக்குக் கிளம்பிச் சென்று விட்டார்.

விதி யாரை விட்டது? வியாசர் கிளம்பிச் சென்றதும் பலவற்றையும் நன்கு யோசனை செய்த ஜனமேஜயன் அங்கு இருந்தால்தானே தனக்கு தோஷம் வரும். ஆகவே தானும் பத்ரினாத்துக்குச் கிளம்பிச் சென்று அந்த தோஷ காலம் முடியும் வரை மகாவிஷ்ணுவையே தியானம் செய்து கொண்டு அங்கு இருந்து விட்டால் அந்த தோஷம் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாமே என எண்ணிக் கொண்டு யாத்திரைக்கு செல்ல தயார் செய்து கொள்ளத் துவங்கினார். ஆனால் மகாவிஷ்ணுவின் உண்மையான பக்தர்களின் மனத்தைக் காயப்படுத்திய நிகழ்ச்சிகளினால் ஜனமேஜயனுக்கு கிடைத்த சாபங்கள் நிறைவேறவில்லை என்றால் விஷ்ணுவின் சக்திக்கு என்ன அர்த்தம் ?
யாத்திரைக்கு செல்லக் கிளம்பிய ஜனமேஜயன் நல்ல குதிரையை தயார் செய்து வைக்குமாறு கூறினார். அதுவே அவருக்கு தோஷம் துவங்க விதி நகர்த்திய முதல் காயாக அமைந்தது. அன்று காலையில்தான் அந்த ஊருக்கு சிந்து நாட்டில் இருந்து குதிரைகளை விற்கும் வியாபாரி ஒருவன் விற்பனை செய்வதற்காக சில குதிரைகளை கொண்டு வந்து இருந்தான். அவன் கொண்டு வந்திருந்த குதிரைகள் வெகு வேகமாய் ஓடுபவை. காண்பதற்கே கவர்ச்சியாக இருந்தன. அதனால் அந்த குதிரைகளை முதலில் அரசருக்கு விற்கலாம் என எண்ணிக் கொண்டு அரண்மனைக்கு வந்தான் அந்த வியாபாரி. அவன் கொண்டு வந்திருந்த குதிரைகளில் ஒன்று மன்னனின் மனதுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆகவே அந்த குதிரையில் ஏறிக் கொண்டு யாத்திரைக்குச் செல்ல முடிவு செய்து ஜனமேஜயனும் அதை வாங்கி விட்டார்.

இரண்டொரு நாட்கள் அதன் மீது ஏறி அதை தன் விருப்பம் போல நடக்க பழக்கி வைத்துக் கொள்ளலாம் என எண்ணிய மன்னன் அன்று மாலை அந்த குதிரை மீது ஏறிக் கொண்டு சவாரி செய்யத் துவங்க அந்த குதிரையும் அங்கும் இங்கும் சுற்றி வளைந்து ஓடிச் சென்று மன்னன் யோசனை செய்யும் முன்னரே அரண்மனையை விட்டு வெளியில் இருந்த காட்டுக்குள் புயலாக ஓடியது. அதை மன்னனும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நடுக் காட்டில் சென்று நின்ற குதிரை மீது இருந்து இறங்கிய மன்னன் சுற்றுமுற்றும் பார்த்தார். எங்கு செல்லக் கூடாது என எண்ணினோமோ அங்கேயே வந்து விட்டோமே என அஞ்சியவர் நின்றிருந்தபோதே அழகிய மங்கை ஒருவள் சற்று தொலைவில் ஒரு பெரிய மரத்தின் பின்புறத்தில் இருந்து வெளியில் வந்து ஒய்யாரமாக நிற்பதைக் கண்டார். அதே சமயம் ஜெயமேஜயனை பார்த்து விட்ட அந்த மங்கையும் இங்கு வந்துள்ளவர் யார் என்பதைப் போல அவரை வியந்து நோக்கினாள் .



ஜனமேஜயனின் மனம் சற்று தடுமாறியது. அழகான மங்கை. அற்புதமான உடல் அமைப்பு. அங்கங்கள் அனைத்தும் தெரிய நழுவிய ஆடைகளை கட்டி இருந்தவளைக் கண்டதும் அடுத்த சில நிமிடங்களிலேயே தலைக்கு மீறிய காமம் மனதில் சுழல தன்னை மறந்து ஓடிச் சென்று அவளை தழுவிக் கொண்டு நின்றார். ஆனால் அவளும் அவர் அணைப்பை விரும்பியது போலவே காட்டிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்து விட்டு தான் அந்த கானகத்தில் பதினெட்டு கணவன்களுக்கு மனைவியாக வாழ்ந்து வருபவள் என்றும், அவர்கள் அவரைப் பார்த்து விட்டால் அவளுக்கு ஆபத்தாகி விடும் எனவும் பயந்து கொண்டு கூற, ஜனமேஜயனும் அவர்களை எண்ணி அஞ்ச வேண்டாம் என்றும், மன்னனான தான் அவர்களை பார்த்துக் கொள்வதாகவும் கூறிவிட்டு அவளுடன் அந்த பதினெட்டு ஆண்களும் தங்கி இருந்த பர்ணசாலைக்குச் சென்று உறங்கிக் கொண்டு இருந்த அவர்களை வெட்டி வீழ்த்தினார். அதன் பின்னர்தான் அவருக்கு புரிந்தது தான் வெட்டிக் கொன்ற அனைவருமே அந்தணர்கள் என்று!

எது நடக்கக் கூடாதது என கவனமாக இருக்க எண்ணினோமே அதுவே நடந்து விட்டதே என மனதார வருந்திக் கொண்டு தன்னை மயக்கிய அந்தப் பெண்ணை தண்டிக்கத் திரும்பியவருக்கு முன்னாலேயே அந்தப் பெண் ஆகாய மார்கமாக பறந்துச் சென்று மறைந்து விட்டதைக் கண்டார். மாயையில் சிக்கி அநியாயமாக உறங்கிக் கொண்டு இருந்த அந்தணர்களைக் கவனிக்காமல் கொன்று விட்டோமே என பிரும்மஹத்தி தோஷத்தை பெற்று விட்ட ஜனமேஜயன் குதிரை மீது ஏறிக் கொண்டு வருத்தத்துடன் அரண்மனைக்கு திரும்பினார்.

மறுநாளே பரிவாரங்களுடன் கிளம்பி பத்ரி நாராயனை தரிசிக்க பத்ரிக்குச் சென்றவர் அங்கு வியாச முனிவரை வேண்டி தவம் இருக்க அவரும் ஜனமேஜயனுக்கு முன்னால் வந்து நின்று பலவிதமான உபதேசங்களை செய்தும், பத்ரி ஸ்தல புராணத்தையும் போதித்தார். ஜனமேஜயனும் சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்து வியாச முனிவர் கூறிய அறிவுரையின்படி பத்ரினாதரை வழிபட்டு தமக்கு ஏற்பட்டு இருந்த அனைத்து சாபங்களையும் விலக்கிக் கொண்டார். பத்ரினாதரை வணங்கி வேண்டியவருடைய வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு காட்சி தந்த விஷ்ணு பெருமாள் ஜனமேஜயரின் அனைத்து சாபங்களையும் விலக்கி அவருக்கு மீண்டும் ஆன்மீக பலத்தை கொடுத்து அருள் புரிய தனது ராஜ்யத்துக்கு திரும்பிய ஜனமேஜயன் நல்ல ஆட்சி புரிந்து வந்தார். இப்படியாக பத்ரினாதரை வணங்கி வேண்டுபவர்களுடைய அனைத்து துயரங்களும், துன்பங்களும் விலகும் என்பது ஐதீகமாயிற்று.

                                                                                                                                     ...........தொடரும் 

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் -4

இந்த பத்ரினாத் தலத்தின் மகிமையைக் கூறும் இன்னொரு கதையும் உண்டு. அது என்ன? மகாபாரத யுத்தம் முடிந்து அனைவரும் ஊருக்குத் திரும்பினார்கள். பீஷ்மர், யுதிஷ்டர், தருமர், அர்ஜுனன் என அனைவரும் மறைந்து விட்டார்கள். அவர்களின் சந்ததியினர் ஒவ்வொருவராக அரியணை ஏறிக் கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் பரீட்சித்து மன்னனின் மகனும், அர்ஜுனனின் பேரனுமான ஜனமேஜெயன் என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் அவ்வப்போது தானே தனக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டு அதனால் தவிப்பது உண்டு. தன் தந்தையைக் கொன்ற பாம்புகளின் வம்சத்தையே அழிக்க முடிவு செய்து சர்ப்ப யாகம் செய்து பாம்புகளை அழித்தார். நாக அரசன் தக்சகனையும் கொன்றபோது அவனது ராஜகுருவான அஸ்திகா என்பவரே அவனது வெறித்தனமான செயல்களை தடுத்து நிறுத்தி அவனுக்கு புத்திமதிகளைக் கூறி அதை தடுத்து நிறுத்தினார்.

ஜனமேஜெயன் அடிக்கடி யாகங்கள் மற்றும் வேள்விகளை செய்வது உண்டு. இந்தப் பழக்கம் அந்த கால ராஜாக்களுக்கு நிறையவே இருந்தது. இப்படி இருந்த நிலையில் ஒருமுறை ஜனமேஜயன் குருக்ஷேத்திரத்தில் ஒரு பெரிய யாகத்தை நடத்திக் கொண்டு இருக்கையில் அங்கு ஒரு நாய்க்குட்டி வந்து விட அதைக் கண்டு கோபமுற்ற அவரது சகோதரர்கள் அதை அடித்து காயப்படுத்தி விரட்டினார்கள். வந்திருந்ததோ ஒரு தெய்வீக பெண் நாய். ஒரு சாபத்தின் காரணமாகவே அது பூமியிலே பிறந்து இருந்தது. அந்த தெய்வீகத் தன்மையின் காரணமாகவே அதுவும் யாகத்தினால் ஈர்க்கப்பட்டு யாகம் நடந்த இடத்துக்கு வந்து நின்றிருந்தது. அது எந்த விதத்திலும் யாகத்தின் புனிதத் தன்மை குறையும் வகையில் நடந்து கொள்ளவில்லை. தூரத்தில் நின்றிருந்தே யாகத்தை நோக்கியவாறு இருந்தது.

ஆனால் அதைப் புரிந்து கொள்ள முடியாத ஜனமேஜயனின் சகோதரர்கள் யாகம் நடக்கும் இடத்தில் ஒரு நாய் நுழைவதா என சினம் கொண்டு அதை அடித்து விரட்டினார்கள். இதில் வேதனை என்ன என்றால் நடந்த நிகழ்ச்சி எதுவுமே ஜனமேஜயனுக்குத் தெரியாது என்றாலும் ஒரு யாகம் நடக்கும்போது, அந்த யாகத்தில் பங்கு பெரும் குடும்பத்தினர் அனைவருமே அதன் தீய மற்றும் நல்ல விளைவுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது நியதி. ஆகவே எக் குற்றமும் செய்யாத தெய்வீக பெண்ணான நாய் குட்டியை அடித்து விரட்டியது ஜனமேஜயனுக்குத் தெரியாமல் அவனது சகோதரர்களால் நடந்து இருந்தாலும், நடந்த நிகழ்ச்சி அவன் யாகம் செய்த பூமியில் அவன் இருந்தபோதே நடந்ததினால் அவனை அறியாமலேயே அவனுக்கு ஒரு பெண்ணாலேயே தீமை ஏற்படும், வாழ்வில் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற சாபம் ஏற்பட்டது.

ஆனால் அது குறித்து ஜனமேஜயன் அதிகம் கவலைக் கொள்ளவில்லை என்றாலும் அதற்குப் பரிகாரமாக தான தர்மங்களை செய்தும், புனித யாத்திரைகளை மேற்கொண்டும் பரிகாரங்களை செய்து கொண்டு இருக்கையிலேயே அடுத்து சர்ப்ப நாச யாகத்தை நடத்தி இன்னொரு தவறை செய்தார். ஒன்றன் பின் ஒன்றாக நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் ஜனமேஜயனின் மனதை பெரிதும் பாதித்தது. தவறான முடிவில் எடுக்கப்பட்டு செய்த சர்ப்ப நாச யாகமும் அதன் விளைவால் அவருக்கு ஏற்பட்ட சாபமும் கூட ஒரு தெய்வீக பெண் நாயை காயப்படுத்தியதினால் விளைந்த கேடோ என அஞ்சினார். ஏற்கனவே அடிபட்ட பெண் நாயின் தாய் கொடுத்த சாபத்தினால் அவனது ஆன்மீக பலமும் குறைந்திருந்தது.


ஆகவே மனம் வெதும்பி இருந்த ஜனமேஜயனும் சர்ப்ப நாச யாகம் நடந்து முடிந்ததும் புரோகிதர்களை அழைத்து தான் என்ன பரிகாரம் செய்தால் அடுத்தடுத்து செய்யும் தவறினால் ஏற்படும் துயரங்கள் விலகும் என்று கேட்டார். அவர்களும் அது குறித்து வியாச முனிவரிடம் சென்று ஆலோசனைக் கேட்குமாறு கூற வியாச முனிவரிடம் சென்றார். அவரிடம் தனது மனத் துயரத்தைக் கூறினார்.
வியாச முனிவரோ தன்னிடம் வந்த ஜனமேஜயனை பார்த்து சிரித்தபடிக் கூறினார் 'ஜனமேஜயா, நடக்க இருப்பதை அதாவது நம் விதியை சந்தித்தே ஆக வேண்டும். அதை யாராலும் தடுக்க முடியாது. அப்போதுதான் இந்த ஜென்மத்திலேயே நம் பாவங்கள் அகன்று அடுத்த ஜென்மத்தில் நம்மை அந்த சாபங்கள் நம்மைத் தொடராது இருக்கும். உன் சகோதரர்கள் செய்த பாவத்திற்கு நீ அனுபவிக்க வேண்டி உள்ளது என்பது உன் விதி. அதுவே இன்னமும் தொடர்கிறது. உனக்கு விரைவில் இன்னொரு தோஷம் ஒன்று பிடிக்க உள்ளது. எச்சரிக்கையாக இரு. அதன் பின் உன் துயரம் நீங்கத் துவங்கும்' என்று கூற 'இதென்ன கூத்து, ஒன்று மாற்றி ஒரு பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே உள்ளதே' எனக் கலங்கிய ஜனமேஜயன் அதிர்ந்து போனார். வியாசர் அப்படி என்ன கூறினார் ?
.........தொடரும் 

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் -3

வசிஷ்டர் தொடர்ந்து கூறலானார். 'விஷ்ணுரதி எனும் நாரதர் வாழ்ந்திருந்த பூமிக்கு தென் பகுதியில் இருந்த இன்னொரு நகரத்தில் சங்கரகுப்தன் எனும் வைசியன் வாழ்ந்து வந்தான். அவன் வியாபாரம் செய்து பெரும் பொருள் சம்பாதித்தான். குணத்தால் நல்லவன் யாருக்கும் தீங்கு இழைக்காதவர் என்ற நற்பெயருடன் இருந்து வந்தார். அவனுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு எதுவும் இல்லை என்பதினால் மனம் புழுகினான். அவனுடைய மனைவியும் வாழ்கையை வெறுத்து வாழ்ந்து வந்தாள். ஒருநாள் இருவரும் சேர்ந்து தமது சந்தானங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்குக் கொடுத்து விட்டு துறவறம் போய் விடலாம் என முடிவு செய்தார்கள்.

ஆகவே ஒருநாள் அவர்கள் தமது வீட்டில் பெரிய பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அதில் அந்த ஊரில் இருந்த பண்டிதர்கள் அனைவரையும் அழைத்து போஜனம் செய்விக்கச் சொன்னார்கள். அதன் பின் கணவனும் மனைவியும் சேர்ந்து அனைவரிடமும் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் பட்டியல் போட்டுக் கொடுத்து அவற்றை விற்றும், வேறு ஏற்பாடு செய்து கொண்டும் சமமாக பங்கு செய்து கொள்ளுமாறு கூறினார்கள். திடீர் என அவர்கள் செய்ய முன்வந்த காரியத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பண்டிதர்கள் அதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டபோது அவர்களும் தமக்கு சந்ததியே இல்லை எனும்போது யாருக்காக அந்த சொத்துக்களையும் பூதம் காத்தப் புதையலைப் போல வைத்துக் கொண்டு வாழ்வது என்று மனம் வேதனை அடைந்து அந்த முடிவுக்கு வந்ததாகக் கூறினார்கள்.

ஆனால் அந்தப் பண்டிதர்கள் அவர்களுடைய செல்வத்துக்கு ஆசைப்படாமல், அவர்களது நற்குணத்தைக் கண்டு மகிழ்ந்து போய் அவர்களிடம் தாம் அவர்களுக்காக புத்திரகாமேட்ஷி யாகம் செய்து தருவதாகவும், அதற்கான தானத்தை மட்டுமே பெற்றுக் கொள்வோம் என அந்த தம்பதியினருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அடுத்த சில நாட்களிலேயே அவர்களுக்கு மகத்பேறு கிடைக்க படைக்கும் கடவுளான பிரும்மாவை வேண்டிக் கொண்டு புத்திரகாமேட்ஷி யாகம் செய்து வைத்தார்கள். அந்த யாகமும் நான் தசரத மன்னனுக்கு ராமாயணக் காலத்தில் செய்த புத்திரகாமேட்ஷி யாகம் போலவே நன்கு நடந்து முடிந்தது. என் மீது வைத்திருந்த மரியாதையினால், நான் செய்த யாகம் அவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து இருந்ததினால் யாக முடிவில் அந்த பண்டிதர்கள் எனக்கும் மானசீகமாக அர்கியம் அளித்தார்கள். பிரும்மாவும் அவர்கள் முன் தோன்றி அவர்களுக்கு மகன் பிறக்க அருள் புரிந்தார். அந்த யாகம் முடிந்ததும் தமக்கு எப்படிப்பட்ட சந்தானம் கிடைக்கும் என அந்த தம்பதியினர் பண்டிதர்களிடம் கேட்டார்கள்.

அந்தப் பண்டிதர்களும் காண்டம் போட்டுப் பார்த்தப் பின் ஒரு அதிர்ச்சியான தகவலை அந்த தம்பதியினருக்கு கூறினார்கள். அந்த தம்பதியினருக்கு பிறக்க உள்ளது ஒரு ஆண் மகவே என்றும், ஆனால் அந்தப் பிள்ளை அவர்களைப் போல சாத்வீகமாக இல்லாமல் கொடும் தொழில் புரிந்து கொண்டு, குடும்ப கௌரவத்தை குலைப்பவனாகவே இருப்பான் என்று கூறியவுடன் அந்த தம்பதியினர் அதிர்ந்து போனார்கள். ஆனால் அதில் ஒரு ஆறுதலான விஷயம் என்ன என்றால் அப்படி தறுதலையாக இருக்கும் பிள்ளையை இருபது வயதில் பத்ரினாத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள பத்ரினாதரை வழிபட்டால் அவன் மீண்டும் நல்ல வழியில் செல்வான் எனக் கூறினார்கள். அவர்களுக்கு நிறைய தானம் கொடுத்து அவர்களை அனுப்பினார்கள் .

காலம் ஓடியது. அந்த தம்பதியினருக்கு அழகிய குழந்தை பிறந்து வளர்ந்தது. அந்த மகன் பிரும்மாவை வேண்டிக் கொண்டு யாகம் செய்ததினால் பிறந்தக் குழந்தை என்பதினால் அவனுக்கு பிரும்மதத்தர் என்று பெயர் சூட்டி வளர்த்தார்கள். மெல்ல மெல்ல வளரத் துவங்கிய குழந்தையும் நல்ல வழியிலேயே சென்று கொண்டு இருந்தது. வயதுக்கு வந்ததும் பிரும்மதத்தரும் தனது தந்தையைப் போலவே வியாபாரம் செய்யத் துவங்கி பெரும் பொருள் ஈட்டினார். ஆனால் திடீர் என அவருக்கு உலக இன்பங்களில் நாட்டம் அதிகரித்தது. பெண்கள் விஷயத்தில் தன்னை இழந்து, அவர்களிடம் ஏமார்ந்து போய் தான் சம்பாதித்த அத்தனை பொருளையும் இழந்தார். கையில் பணம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிப் போய் கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டார். அப்போது ஒருமுறை காட்டில் சென்று கொண்டு இருந்த யாத்ரீகர் ஒருவரை மரத்தின் மீது ஒளிந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்து பெரிய கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்று விட்டு பொருட்களை திருடியபோது அவர் ஒரு பிராமணப் பண்டிதர் எனத் தெரிய வந்தது.



அது அவர் மனதை பெரிய அளவில் பாதித்தது. குற்ற உணர்வு அவரை வாட்டியது. என்ன இருந்தாலும் அவரும் ஒரு பிராமணர் குணத்தைப் போலவே குணம் கொண்டிருந்த வைசியர் அல்லவா? ஆகவே தான் கொள்ளை அட்சித்தப் பொருட்களை அந்த இறந்து போன பிராமணர் வீட்டிலேயே கொண்டு போய் தந்து விட்டு அவர்களிடம் நடந்த அனைத்தையும் கூறி விட்டு அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பின்னர் தனது வீட்டிற்குச் சென்று தனது தந்தையின் கால்களில் விழுந்து அழுத பின் நடந்த அனைத்தையும் கூறினார். அவர் தந்தையும் அதைக் கேட்டு வருத்தம் அடைந்தாலும் ஒரு பிராமணரைக் கொன்று விட்ட பாவத்தினால் ஏற்பட்டு விட்ட பிருமஹத்தி தோஷத்தை களைந்து கொள்வது தனது மகனுக்கு அத்தியாவசமானது என்பதை உணர்ந்து கொண்டார். நடந்ததை நினைத்து கவலைப்படுவதை விட அதை விலக்கிக் கொள்ள உடனடியாக இமயமலை சாரலில் உள்ள பத்ரினாத்திற்குச் சென்று பத்ரினாதரை வணங்கி சாப விமோசனம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுரைக் கூறினார்.

பிரும்மதத்தரும் தனது தந்தையின் அறிவுரைப்படி உடனடியாக பத்ரினாத்திற்கு கிளம்பிச் சென்றார். வழி நெடுக இருந்த அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பின் பத்ரினாத்தரை வணங்கி பூஜித்து சில காலம் அந்த ஆலயத்திலேயே தங்கி இருந்து அங்கு ஆலயத்திற்கு பணிவிடைகளை செய்து வந்தார். அவர் பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்த பத்ரினாதரும் அவர் கனவில் தோன்றி, அவர் செய்த பிழையை தான் மன்னித்து விட்டதினால் ஊருக்கு கிளம்பிச் சென்று அங்கு தமது நாம பஜனையை செய்து கொண்டு இருக்குமாறும், அவருக்கு மோட்ஷம் கிடைக்கும் என்றும் கூறினார். மறுநாள் காலை பிரும்மதத்தர் ஆலயத்துக்குச் சென்று பத்ரினாதரை வணங்கி விட்டு ஊருக்குக் கிளம்பச் செல்லத் துவங்கியபோது தான் கொன்று விட்ட அதே பிராமணரை அங்கு கண்டு வியந்து அவரை நோக்கி ஓடினார். அருகில் சென்றதும்தான் அதுவும் மாயையே என்றும், பத்ரி நாராயணரே தன்னைத் திருத்த அப்படி ஒரு நாடகம் நடத்தி உள்ளார் என்பதும் புரிந்தது. அதன் பின் பல காலம் வாழ்ந்து வந்த பிரும்மத்தரும் மோட்ஷத்தை அடைந்தார்' என்று அந்தத் தலத்தின் மகிமைக் குறித்து வசிஷ்டர் அருந்ததிக்குக் கூறினார். 

                                                                                                                                    ............தொடரும் 

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் -2

வசிஷ்டர் தனது மனைவி அருந்ததிக்குக் கூறினார் '' தன் மீது உண்மையான பக்தி கொண்டவர்களுக்கு மகாவிஷ்ணு எப்படி பரிபூரணமான அருளைத் தருகிறார் என்பதை விளக்கும் விஷ்ணுரதியின் கதை பத்ரிநாத் எத்தனை புண்ணிய இடம் என்பதை தெளிவாகக் கூறும். அதைக் கேள் ''.

வசிஷ்டர் தன்  மனைவி அருந்ததிக்கு  
பத்ரிநாத்தின் மகத்துவம் பற்றிக் கூறினார் 
முன் ஒரு காலத்தில் இந்த பூமியில் விஷ்ணுமனஸ் எனும் ஒரு ஏழை பிராமணன், சாஸ்திர சம்பிரதாயங்களைக் நன்கு கற்றறிந்திருந்தவர் வசித்து வந்தார். அவர் வைஷ்ணவ பக்தர். வாழ்வதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தவரினால் பிட்சை எடுத்தே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவர் மிகப் பெரிய வைஷ்ணவ பக்தர் என்பதினால் தனக்குப் பிறந்த மகனுடைய பெயரையும் விஷ்ணுரதி என வைத்திருந்தார். பிறந்த மகன் வளரத் துவங்கியதும், விஷ்ணுமனஸ் அவனுக்கு விஷ்ணுவின் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் கற்றுக் கொடுத்து வளர்த்தார்.

தன்னைப் போலவே தன் மகனும் வறுமையில் வாடிக் கொண்டு பிட்ஷை எடுத்தே வாழ்வதை விட பிற்காலத்தில் புரோகித்தியம் செய்து பிழைக்கலாமே என விரும்பினார். ஆனால் வயதுக்கு வந்த விஷ்ணுரதியோ புரோகிதம் செய்வதில் நாட்டம் இன்றி இருந்தது மட்டும் அல்லாமல் வேறு எதிலும் மனதை செலுத்தாமல் இருந்தார். தன் தந்தையைப் போலவே பாடல்களைப் பாடிக் கொண்டே அனைவர் வீட்டிலும் சென்று பிட்ஷை எடுக்கலானார். இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்த விஷ்ணுரதி பத்ரினாத்திற்கு வந்தார். அங்கும் அதிபக்தி கொண்டு விஷ்ணு மீதான பாடல்களைப் பாடிக் கொண்டே பிட்ஷை எடுத்து வந்தார். பத்ரினாத்தும் மிகப் பெரிய புண்ணிய பூமி. விஷ்ணுவும், சிவபெருமானும் வசிக்கும் பூமி என்பதினால் தன் மீது அபார பக்தி கொண்டு பாடிக் கொண்டு இருந்த விஷ்ணுரதியை கண்டு மனம் மகிழ்ந்த மஹாவிஷ்ணுவும் சங்கு சக்கரங்களை தன் கையில் ஏந்திக் கொண்டு தன் மனைவியுடன் ஒருநாள் விஷ்ணுரதிக்கு பிரதிஷ்டமாக தரிசனம் தந்து அவருக்கு 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார்.
தன் வாழ்நாளில் அப்படி ஒரு நிலை வரும் என்பதை சற்றும் எதிர்பாராத விஷ்ணுரதியும் என்ன செய்வது எனத் தெரியாமல் தன்னை மறந்து நின்றிருந்தார். நிலை தடுமாறி விஷ்ணுவின் முகத்தையும் அவர் பாதங்களையும் பார்த்துக் கொண்டே அவர் மீதான துதிகளை இன்னும் அதிகமாக பாடத் துவங்க அதனால் அவர் மீது இன்னும் அதிக மகிழ்ச்சி கொண்ட விஷ்ணுவும், அவர் கேட்காமலேயே அவர் பெயரை நாரதர் என மாற்றி அமைத்து, அவர் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லக் கூடிய சக்தியையும், பரிபூரணமான யோக மனதையும் அளித்து அவரை ஆசிர்வதித்தார். அதைக் கேட்ட விஷ்ணுரதி ஆச்சர்யம் அடைந்தார். தனக்கு ஏன் நாரதர் என்ற பெயரை பெருமாள் சூட்ட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் அவர் கால்களில் விழுந்து வணங்கியப் பின் தனது சந்தேகத்தை அவரிடமே கேட்டார்.

அதற்கு விஷ்ணு பகவான் கூறினார் 'விஷ்ணுரதி, நீ பூர்வ ஜென்மத்தில் பத்ரினாத்தில் ஒரு பண்டிதராக இருந்தாய். அப்போது நான் இங்கு சிலை வடிவில் இருந்தபோது எனக்கு தினமும் கங்கை நீரை ஊற்றி வழிபட்டாய். பல ஆண்டுகளாக இப்படி பூஜை செய்து எனக்கு பிரியமானவனாக ஆகி இருந்த நேரத்தில் விஷ்ணு பக்தனாக நீ இருந்தாலும் சிவபெருமானின் மனைவியான பார்வதியின் தந்தை தக்ஷன் செய்த யாகத்தில் கலந்து கொண்டு அந்த யாகத்தை நடத்தித் தருவதில் முக்கிய பங்கை வகித்தாய். ஆனால் அதில் தக்ஷன் தனது மகளுடைய கணவரான சிவபெருமானை வேண்டும் என்றே அழைக்காமல் இருந்து அவரை அவமதித்தான். யாகம் நடந்து முடியும் நிலையில் அங்கு வந்த சிவபெருமானை தக்ஷன் அவமதிக்க அந்த கோபத்தினால் யாகத்தை அழித்த சிவபெருமானின் சாபத்தினால் அந்த யாகத்தில் கலந்து கொண்டவர்கள் மட்டும் அல்ல, அதை நடத்தித் தந்த அனைவருக்கும் கூட பாவம் ஏற்பட்டது. அதனால்தான் நீ மீண்டும் பூலோகத்துக்கே சென்று மனிதப் பிறவி எடுத்து வாழ்வதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டு பிட்ஷை எடுத்து உண்ணும் நிலை ஏற்பட்டது.

உனக்குக் கிடைத்த சாபம் நீ வேண்டும் என்றே நீ செய்த தவறினால் கிடைத்த சாபம் அல்ல. பொதுவாகவே கூறுவார்கள். நம்மை அறியாமலே தீயவர்களுடன் நாம் சஹவாசம் வைத்தால் அவர்கள் செய்யும் தவறுகளில் நாமும் பங்கு பெற்றவர்களாகி விடுவோம். ஏன் எனில் அவர்கள் செய்யும் தவறுகளை நாம் தட்டிக் கேட்பது இல்லை. தீமை உள்ள இடத்தில் இருந்து விலகி நிற்பதே விவேகம் ஆகும். தீமை எனத் தெரிந்தும், நம்முடைய தற்காலிக மகிழ்ச்சிக்காக, பொருள் ஈட்டுவதற்காக அந்த இடத்தில் நாம் இருப்பது அந்த தீமையில் பங்கு கொள்வதைப் போலவே அமைந்து விடும். அதனால்தான் தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் தக்ஷன் செய்த யாகத்தில் நீ கலந்து கொண்டது உன்னை அறியாமல் நீ செய்த பிழை ஆகும்.

ஆனால் பார்வதி தேவி என்னுடைய சகோதரி என்பதினால் என்னுடைய பக்தர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு இருக்கக் கூடாது என எண்ணிய சிவபெருமானும் கோபம் தணிந்ததும் உனக்கு என் மூலமே பத்ரிநாத்தில் சாப விமோசனம் கிடைக்கும் என உன்னை ஆசிர்வதித்தார். அதனால்தான் நீயும் இங்கு வந்தாய். பூர்வ ஜென்மத்தில் என்னுடைய பரம பக்தனாக நீ இருந்ததினால் இந்த ஜென்மத்திலும் அந்த பந்தம் தொடர என் மீது உனக்கு பக்தி தானாகவே ஏற்பட்டது. நீயும் உன்னை அறியாமலேயே சாப விமோசனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டுத் தலத்துக்கு வந்து என்னை துதித்து வரத் துவங்கினாய்.

சாப விமோசனமும் அடைந்து மீண்டும் வைகுண்டத்திற்கு வரும் நிலைக்கு நீ வந்து விட்டதினால்தான் இந்த புண்ணிய ஷேத்திரத்திற்கு வந்துள்ளாய். நான் உனக்கு பிரசன்னம் ஆகி உனக்கு வரம் கொடுத்தேன். எப்போதுமே தன் கையில் வீணையை ஏந்திக் கொண்டே என்னை துதித்துப் பாடும் நாரதரின் நிலையில் நீ இருந்ததினால் என் மீது துதியை பாடிக் கொண்டே அலைந்த உன் பெயரையும் நாரதர் என வைத்தேன். இந்த இடத்தில் நான் ஐம்பது ரூபங்களில் இருக்கிறேன். அவை அனைத்தையும் நீ வழிபாட்டு வந்தால் விரைவில் வைகுண்டப் பிராப்தி அடைவாய்' என அவரை ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.

விஷ்ணுவை ஆராதித்து வழிபடும் அனைத்து பக்தர்களும் பத்ரினாத்திற்குச் சென்று அங்குள்ள ஆலயத்தில் விஷ்ணுவை ஒரு முறை மட்டுமே வழிபட்டாலும் கூட வைகுண்ட பிராப்தி கிடைக்கும் என்பதை விளக்கும் இந்தக் கதை மூலம் பத்ரினாத் எனும் புண்ணிய பூமியின் மகாத்மியம் உனக்குப் புரியும் என்று வசிஷ்டர் கூறியப் பின்னர் மேலும் இன்னொரு கதையைக் கூறத் துவங்கினார்.

........தொடரும்

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் -1

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள கர்வால் எனும் மலைப் பிரதேசத்தில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ளது பத்ரினாத் ஆலயம். மேலே உள்ள மலை பிரதேசத்தில் உள்ள இரண்டு ஆலயங்களும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், பத்ரிநாத் ஆலயத்தில் உள்ள சிலையை நிறுவியவர் ஆதி சங்கரர் என்றும், கேதார்நாத்தில் உள்ள சிவன் சிலை பாண்டவர்களால் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டாலும்,திருமால் நர-நாராயணராக (அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணராக) இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர் லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச் செய்தார் என்ற புராணகள் கதையும் உள்ளது. இந்த இரண்டு ஆலயங்களில் முதலில் பத்ரிநாத் மான்மியக் கதையைப் படிக்கலாம்.
பத்ரிநாத் ஆலய மான்மியம்


பத்ரினாத் ஆலயம் குறித்த வரலாற்றுக் கதை ஒன்றின்படி ஒரு கட்டத்தில் புத்தமதம் தழைத்து இருந்தபோது, இங்கு வந்த புத்தர்கள் பத்ரிநாராயணர் சிலையை எடுத்து அருகில் இருந்த நாரதர் குளத்தில் வீசி எறிந்து விட்டார்கள் என்றும் ஆனால் அதற்கும் ஒரு காரணம் இருந்தது என வசிஷ்ட முனிவர் தனது மனைவியான அருந்ததியிடம் கூறியதாக ஒரு கதையும் உள்ளது. அந்தக் கதையின்படி விஷ்ணுவின் சிலையை புத்த மதத்தினர் நாரதர் குளத்தில் வீசி எறிந்ததும், பதைத்துப் போன நாரத முனிவர் விஷ்ணுவிடம் ஓடோடிச் சென்று நடந்ததைக் கூற, விஷ்ணுவும் சிரித்துக் கொண்டே தான் நீரில் மூழ்கி இருந்தாலும் பிரும்மாவினால் படைக்கப்பட்ட தன்னுடைய சிலையை யாராலும் அழிக்க முடியாது என்றும், சில காலம் பொறுத்து ஒரு சிவ பக்தர் அங்கு வந்து தன்னை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்வார் என்றும், அதற்குப் பிறகு அங்கு ஒரு ஆலயம் தமக்கு எழும்பும் என்றும் கூறினார்.
அதற்கு ஏற்றார் போலவே அந்த கட்டத்தில் கேரளா மானிலத்தில் ஆதி சங்கரர் பிறந்து இளமைப் பருவத்திலேயே துறவறம் ஏற்றுக் கொண்டார். அவர் தமது இறுதிக் கட்ட காலத்தில் (ஸ்ரீ சங்கரர் மிகக் குறைந்த வயதிலேயே முக்தி அடைந்தார். அவர் கேதார்நாத் ஆலயத்தை நிறுவியப் பின் மலை மீது ஏறி அப்படியே மறைந்து விட்டாராம்) தமது சீடர்கள் சிலருடன் அவர் வடநாட்டு யாத்திரையை மேற் கொண்டார். அந்த யாத்திரையின்போது பத்ரினாத்தில் நீரில் மூழ்கி இருந்த விஷ்ணுவின் சிலைக் குறித்து அவருக்கு தெரிய வந்தது. ஆகவே முதலில் நீரில் மூழ்கி அந்த சிலையை எடுக்க முயன்றவருக்கு வேறு எதோ சிலைக் கிடைத்தது. அடுத்த முறையும் நீரில் முழுகி சிலையைத் தேட வேறு எதோ சிலையே கிடைக்க இம்முறை சங்கரர் 'பத்ரினாதா, உனக்கு என் மூலமாகவே சிலை அமைக்க வேண்டும் என்ற விதி இருந்தால் நீ எனக்கு கிடைப்பாய்' என வேண்டிக் கொண்டே நீரில் மூழ்கி விஷ்ணுவின் சிலையைக் கண்டெடுத்தார். அதுவே தற்போது ஆலயத்தில் உள்ள பத்ரினாதரின் சிலை என்கிறார்கள்.


அந்த சிலை சாலிக்ராம கல்லினால் ஆன தியான நிலையில் உள்ள சிலை என்பது விஷேஷம். அந்த ஆலயத்தின் அருகில் ஓடுவதே அலக்நந்தா எனும் நதியாகும். அதற்கும் சிறு கதை உள்ளது. பகீரதனின் தவத்தினால் பூமியை நோக்கி ஓடி வந்த கங்கையின் வேகத்தை பூமி தாங்காது என்பதினால் கங்கையை தன் தலையில் முடிந்து வைத்துக் கொண்ட சிவபெருமானோ அதை பன்னிரண்டு கிளைகளாக பிரிந்து பூமியில் ஓடுமாறு செய்தார். அதில் ஒன்றுதான் அலக்நந்தா நதியும் ஆகும். கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும், பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா நதியும், ருத்ர பிரயாக் என்ற இடத்தில் வந்து கலந்து பல்வேறு நதிகளை தம்முடன் இணைத்துக் கொண்டு ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது.

முதலில் நதியில் கண்டெடுத்த விஷ்ணுவின் சாலிக்கிராமத்தினால் ஆன சிலையை ஆதி சங்கரர் தான் தவம் இருந்த இடத்தின் அருகில் இருந்த குகை ஒன்றில் பிரதிஷ்டை செய்து வைத்து இருந்தார். ஆனால் பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு அந்த பிரதேசத்தை ஆண்ட கர்வாலை சேர்ந்த மன்னர் ஒருவர் அந்த சிலையைக் கண்டு பிடித்து எடுத்து வந்து தற்போது ஆலயம் உள்ள இடத்தில் அதை வைத்து ஆலயத்தை அமைத்தார். ஆலயம் எழுந்த காலக் கட்டம் சரிவரத் தெரியவில்லை. அதைக் கட்டியவரும் யார் என்று சரிவரத் தெரியவில்லை. ஆனால் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது, அதன் மகிமையும் மிகப் பெரியது என்பது வசிஷ்ட முனிவர் தனது மனைவிக்கு கூறிய ஆலய மான்மியக் கதை மூலம் தெரிந்தது. அந்த ஆலய மான்மியம் என்ன?
.......தொடரும் 

இரட்டை பிள்ளையார்-3

III
சரி ரெட்டை பிள்ளையார் இல்லாத ஊர்களில் உள்ளவர்கள் அவரை எப்படி பூஜிக்கலாம்? வினாயகர் ஒருவருக்கு மட்டுமே குறிப்பிட்ட உருவம் இல்லாமல் பூஜை செய்ய முடியும். சந்தனம் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த கூம்பை (சிறு முக்கோண மலை வடிவம்) தட்டில் பிடித்து வைத்து அதையே பிள்ளையாராக பாவித்தே பல பூஜைகளும் செய்யப்படுகின்றன. ஆகவே ரெட்டைப் பிள்ளையாரை உடனடியாக தரிசனம் செய்ய முடியாதவர்கள் ஒரு செய்வாய் கிழமையில் ஏதாவது ஒரு இடத்தில் உள்ள (ஆலயம் சிறப்பானது) அரச மரத்தின் அடியில் கெட்டியான சந்தனத்தால் அல்லது மஞ்சளினால் பிடித்து வைத்த இரண்டு பிள்ளையார்களை வைத்து தமக்குத் தேவையான வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு ரெட்டைப் பிள்ளையாரை வேண்டிக் கொண்டு அந்த இரு கூம்புகளையும் இரண்டு பிள்ளையார்களாக பாவித்து அதற்கு பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த மரத்துடன் இரண்டு பிள்ளையாரையும் பிரதர்ஷனம் செய்து விட்டு வந்து விட வேண்டும். இப்படியாக ஐந்து செய்வாய் கிழமை பூஜை செய்ய வேண்டும். இடையில் ஏதாவது காரணத்தினால் தடைப்பட்டாலும் அதை தொடரலாம். ஆனால் மொத்தம் ஐந்து செய்வாய் கிழமைகளில் செய்ய வேண்டும் என்பது நியமம்.

அரச மரம் இல்லாத இடத்தில் எப்படி பூஜை செய்வது? அரச மரம் பிள்ளையாருக்கு பிடித்தமான மரம் என்பதால்தான் எளிதில் அங்கு தோன்றி கோரிக்கைகளை ஏற்பார் என்பது ஐதீகம். அரச மரம் இல்லாத ஊர்களில் அங்குள்ள வினாயகரின் சன்னதியில் சந்தனத்தில் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த இரண்டு பிள்ளையார்களை வைத்து பூஜை செய்தப் பின் அந்த ஆலயத்தை சுற்றி பிரதர்ஷணம் செய்யலாம். பிள்ளையாருக்கு தனி சன்னதி இருந்தால் அதை மட்டும் சுற்றி பிரதர்ஷணம் செய்யலாம்.

மஞ்சள் அல்லது சந்தனத்தில் பிடித்து வைத்து 
பூஜை செய்ய வேண்டிய பிள்ளையார்

அடுத்த கேள்வி அப்படி பிடித்து வைக்கும் பிள்ளையாருக்கு என்ன மாதிரியான பூஜையை செய்வது? இதுவும் மிக எளிதானது. பிடித்து வைக்கும் பிள்ளையாருக்கு சந்தன குங்குமம் இட்டு, மலர்கள் தூவி (அருகம் புல் விஷேசம்) உங்கள் கோரிக்கையை மனதார கூறி அவரை வேண்டிக் கொண்டு உங்களுக்கு தெரிந்த வினாயகர் தோத்திரத்தைக் கூறி பூஜிக்க வேண்டும். வினாயகர் மந்திரங்கள் தெரியாதவர்கள் வினாயகர் அகவலை படித்தால் போதும். அதுவே வினாயகரை பூஜிக்கும் சிறந்த ஸ்துதி ஆகும்.

ஐந்து வாரமும் புதியதாக சந்தானம் அல்லது மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தப் பின் அதை அப்படியே அரச மரத்தடியில் அல்லது பிள்ளையார் சன்னதியில் வைத்து விட்டு வந்து விடலாம். தோஷம் எதுவும் இல்லை. அரச மரத்தடியில் பூஜை செய்தப் பின் ஏதாவது ஒரு கோவிலில் உள்ள வினாயகரின் சன்னதிக்குச் சென்று தம்முடையக் கோரிக்கையை அவரிடம் வைத்து அங்கேயே அவரிடம் வேண்டிக் கொண்டு, அது நிறைவேறினால் ரெட்டைப் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டு வர வேண்டும். ஐந்தாவது வார பூஜை முடிந்ததும் நீங்கள் எந்த ஆலயத்தில் சென்று பிள்ளையாரை வழிபடுகிறீர்களோ அங்கு உள்ள ஏதாவது ஒரு பண்டிதருக்கு வெற்றிலைப், பாக்கு, தேங்காய், பழம் சகிதம் உங்களால் முடிந்த அளவு பணத்தைத் தந்து (இருபத்தி ஒன்று, ஐம்பத்தி ஒன்று அல்லது நூற்றி ஒன்று என்ற கணக்கில்) அவரை நமஸ்கரித்து விட்டு வர வேண்டும். ஐந்து செய்வாய் கிழமைகளிலும் அப்படி செய்யத் தேவை இல்லை. ஐந்தாவது வார இறுதிப் பூஜைக்குப் பிறகே அதை செய்ய வேண்டும். ஐந்து வார பூஜை செய்தப் பின் மீண்டும் அதை செய்ய வேண்டியது இல்லை. பிரச்சனைகள் மெல்ல மெல்ல விலகத் துவங்கும் என்பது நம்பிக்கை. ஆனால் நிச்சயமாக அதீதிப் பயன் இதில் உண்டு என்பது மட்டும் நிச்சயம்.

ஐந்து செய்வாய் கிழமைகள் பூஜை முடிந்தப் பிறகு எப்போது முடிகிறதோ இதற்குக் காலக் கெடு கிடையாது , நீங்கள் செல்லும் எந்த ஊரிலாவது உள்ள ரெட்டை பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்று உங்களுடைய அதே கோரிக்கையை அவரிடம் மானசீகமாகக் கூறி அவருக்கு அர்ச்சனை செய்து விட்டு வந்து விடலாம். கூடுமானவரை அதையும் செய்வாய்க் கிழமை அன்று செய்வதில்தான் அதிகப் பலன் உண்டு. இன்னொரு முக்கியமான விஷயம். ஐந்து வார பூஜையையும் செய்வாய் கிழமையில்தான் செய்ய வேண்டும்.


 திருவேள்விக்குடி ஆலயத்தில் உள்ள
 இரெட்டை பிள்ளையார் 

மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடி ஆலயத்தில் உள்ள இரெட்டை பிள்ளையாரின் பெயர் சங்கல்ப வினாயகர் என்பது. அவரை ஆதி வினாயகர் என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தி திதி, திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் விஷேசமான தினங்களாகக் கருதப்படுகிறது. இந்தப் பிள்ளையாருக்கு திருவோண நட்சத்திரத்தில் மாம்பழங்கள் நெய்வித்தியம்  செய்து ஏழைத் தம்பதிகளுக்கு தானம் செய்தால், கணவன்-மனைவி உறவு பலப்படுவது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொங்கும். திருவாதரை நட்ஷத்திரத்தன்று அதற்கு வில்வ மாலை போட்டு வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும், உடல் ஆரோக்கியம் சீர்படும். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வம் பெருகும். விசாக நட்சத்திரத்தன்று பலவிதமான பூக்களால் தொடுத்த மாலையைப் போட்டு துதித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும் என்பார்கள் . அது மட்டும் அல்ல பெற்றோர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் இங்கு வந்து சங்கல்பம் செய்து கொண்டு பூஜித்தால் பிரிந்தவர் ஒன்று கூடுவர் என்பதும் உண்டு.

இது போல திருவையாறு ஐயாரப்பன் ஆலயத்தில் உள்ள இரெட்டை பிள்ளையாரின் முன்னால் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் . பொதுவாகவே திருமணமாகாத பெண்கள் சந்தான அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். சங்கட ஹர சதுர்த்தியில் வழிபட கணவன் மனைவி ஒற்றுமை வலுப்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடைபெறும்.

திருவண்ணாமலையில் மிக பழமை வாய்ந்த கோயில்களில் இரட்டை பிள்ளையார் ஆலயமும் ஒன்று. கிரி வலம் செல்லும் வழியில் இந்த ஆலயத்தைக் காண முடியும். இந்த ஆலயம் உள்ள சாலையை இரட்டை பிள்ளையார் கோயில் தெரு என அழைக்கிறார்கள். இந்த ஆலயத்தில் உள்ள இரட்டை பிள்ளையாருக்கு நெய்தீபம் ஏற்றி, அருகம் புல் சாற்றி வழிபட்டால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை .

மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் உள்ள இரெட்டை வினாயரும் மிகச் சிறப்பானவர். அது போலவே திருவான்மியூரில் உள்ள இரெட்டை வினாயரும் மிகச் சிறப்பானவர் .

கடலூரில் உள்ள புதுப்பாளையம் இரட்டைப் பிள்ளையார் ஆலயமும் மகத்துவமானது . அது போலவே திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள இரெட்டை வினாயரும் சிறப்பானவர் அவர்களை வலம்புரி வினாயகர் மற்றும் பாதிரி வினாயகர் என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். இவர்களை வணங்கினால் நவக்கிரகங்களினால் ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் வெகு விரைவில் விலகும் என்பது ஐதீகம் .


தஞ்சை மாவட்டத்தில் குடந்தைக்கு அருகில் உள்ள பாபநாசத்தில் உள்ள இருநூறு ஆண்டுக்கும் மேற்பட்ட ஆலயத்தில் காணப்படும் தாமோதர வினாயகர் எனும் பெயரில் உள்ள இரட்டைபிள்ளையார் மிக சக்தி வாய்ந்தவராக காணப்படுகிறார் .

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரனாராயனர் ஆலயத்தின் பின்புறத்தில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான வேலைப்ப தேசிகர் ஆலயத்திலும் இரட்டைப் பிள்ளையார் சன்னதி உள்ளது. மேலும் சில இடங்களில் உள்ள இரட்டைப் பிள்ளையார் ஆலயங்கள் வருமாறு:

  • திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரியில் உள்ள இரட்டைப் பிள்ளையார் ஆலயம்.
  • தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிற்ரூரான திருப்பனதாளில் இருந்து சீர்காழிக்குச் செல்லும் வழியில் உள்ள மரத் துறை எனும் சிறு கிராமத்தில் உள்ளது ஒரு இரட்டைப் பிள்ளையார் ஆலயம்.
  • கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் உள்ள சிற்றூரான கொத்துக் கோவில் எனப்படும் இடத்தில் உள்ளது சுந்தர மற்றும் ராஜ விநாயகர் என அழைக்கப்படும் இரட்டைப் பிள்ளையார் ஆலயம்.
  • ஸ்ரீரங்கத்தில் உள்ள உத்தமர்கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலை வாசலை அடுத்த ஆறகலூர், ஊட்டி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள வினாயகர் கோவில் போன்ற இடங்களிலும் இரட்டைப் பிள்ளையாருடைய சன்னதிகள் உள்ளன.
  •  மதுரை தல்லாக்குளத்தில் உள்ளது  இரட்டைப் பிள்ளையாருடைய ஆலயம். 
  • சென்னையில்  பம்மலில் பசும்பொன்  ஆலயத்திலும் உள்ளது இரட்டைப் பிள்ளையாருடைய ஆலயம்.  
  • திருவொற்றியூர் வடிவுடை அம்மன் ஆலய  தனி சன்னதியிலும் இரட்டைப் பிள்ளையார் உள்ளார்.
  • திருவான்மியூரில் இரட்டைப் பிள்ளையாருடைய சன்னதி உள்ளதாகக் கூறுகிறார்கள்.
  • சென்னையில் மடிப்பாக்கத்தில் உள்ள இன்னொரு இரட்டைப் பிள்ளையார் ஆலயத்தின் கதையும் சுவையானது.  சென்னை-மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வினாயகரின்  பக்தர் ஒருவர் சுமார் நூறு வருடங்களுக்குமுன் தன் வயலில் கிணறு வெட்டுவதற்காக பூமியை தோண்டிக் கொண்டு இருந்தபோது பூமியின் கீழேயிருந்து ஒரு கல் தெறித்துச் சிதறியதாம். அதன் தோற்றம் கிட்டத்தட்ட பிள்ளையாரைப் போல இருந்ததினால் அதையே சுயம்பு வினாயகராக  கருதி, அது பள்ளத்தில் இருந்து கிடைத்ததினால்  அதற்கு பாதாள வினாயகர் எனப் பெயரிட்டு ஆலயத்தை அமர்த்தி அதை பிரதிஷ்டை செய்தாராம்.  ஆனால் முழுமையான விநாயகரின் சிலையாக அது இல்லை என்பதினால்  இன்னொரு வினாயகரின் சிலையை வைத்து பக்தர்கள் வணங்கத் துவங்கினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அனைவரும் அதிசயிக்கும் வகையில் முதலில் அமைத்த பாதாள வினாயகரின் வடிவம் மாறி வினாயகரின்  முழு உருவைப் பெற்றது என்கிறார்கள். அது முதல் கருவறையில் இரட்டை வினாயகர்கள் அமர்ந்துள்ளார்கள். 
மடிப்பாக்கம் இரட்டைப் வினாயகர் ஆலயத்தில் 
உள்ள இரண்டு வினாயகர்கள்  
  • கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை செல்லும் மார்கத்தில் வரும் கயித்தாறு (கட்டபொம்மனை தூக்கில் போட்ட இடம்) அருகில் உள்ளது ஒரு ரெட்டைப் பிள்ளையார் கோவில்.   
  • திருப்பத்தூரில் உள்ள கோட்டை ஈஸ்வரன் ஆலயத்திலும் ரெட்டை வினாயகர் சன்னதி உள்ளது. 

நன்றி : சாந்திப்பிரியா   

இரட்டை பிள்ளையார்-2

 
II

பொதுவாக பூஜிக்கப்படும் மூலக் கடவுட்கள் எனப்படுபவர்கள் நான்குபேர் மட்டுமே. மற்றவர்கள் அனைவருமே முதல் மூன்று கடவுட்களின் அவதாரங்களே. வினாயகரின்  துணை அவதாரங்கள் எதுவும் உள்ளதாக புராணக் கதைகளிலும் காணப்படவில்லை. ஆகவே வினாயகர் மட்டுமே தனிக் கடவுள் எனலாம்.  முதல் மூவரின் அவதாரங்கள்  அனைத்துமே  இரண்டாம் நிலைக் கடவுட்களே.
  • சிவபெருமான்- பார்வதி
  • பிரும்மா- சரஸ்வதி
  • விஷ்ணு- மகாலஷ்மி
  • வினாயகர்
முருகன் மூலக் கடவுட்களில் ஒருவரா என்பதும் ஒரு சர்ச்சையாகவே உள்ளது. முருகனை சிவபெருமானின் அல்லது சக்தியின் அவதாரம் என்றே கூறுகிறார்கள்.  ஆகவே முருகனைக்  மூலக் கடவுள் என்று கூறுவது இல்லை.

ஒற்றை அல்லது இரட்டை பிள்ளையார் என எப்படி இருந்தாலும் பிள்ளையார் எனும் மூலக் கடவுளின் தத்துவம் வியப்பானது !! ஒவ்வொரு கடவுளையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு இயற்கையில் அமைந்த ஒரே ஒரு உருவம் மட்டுமே  உண்டு.  மற்றவர்கள் அனைவருமே அவர்களுடைய துணை கடவுட்கள் மற்றும் அவதாரங்களே.

அனைத்து  கடவுட்களும் அவரவர்களுடைய  இயற்கை உருவத்தினால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள், வணங்கப்படுகிறார்கள். இயற்கை உருவம் என்றால் அதை இப்படியாக அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  சிவன் என்றால் ஒரு குறிப்பிட்ட உருவத்தில் மட்டுமே அவரைக் காண்பார்கள். ஆனால் அவருக்கு பல ரூபங்களும் அவதாரங்களும் உண்டு. துணை அவதாரங்களும் துணை கடவுட்களுமாக அவருடைய உடலில் இருந்து பலர் தோன்றி உள்ளனர்.   உதாரணமாக ருத்திரன், பைரவர், சிவலிங்கம், நடராஜர் போன்ற பல உருவங்கள் சிவபெருமானுக்கு உண்டு என்றாலும் சிவன் என்றால் இப்படி என்று கூறும் விதத்திலான ஒரு குறிப்பிட்ட மூலத் தோற்றம் அவருக்கு உண்டு.

அது போலவே விஷ்ணுவிற்கும் நரசிம்மர், கிருஷ்ணர், ராமர், தசாவதாரம்  எனப் பல்வேறு அவதார ரூபங்கள் மற்றும் அவதாரங்கள் உண்டு என்றாலும்  அவருக்கும் இப்படி என்று கூறும் விதத்திலான ஒரு குறிப்பிட்ட தோற்றம் உண்டு.  இப்படியாக ஒவ்வொரு கடவுளுக்கும் அது ஆண் கடவுள் என்றாலும் சரி, பெண்ணினமாக இருந்தாலும் சரி பல்வேறு ரூபங்கள் மற்றும் உருவங்கள் உண்டு என்றாலும், அந்த உருவங்களின் மூலம்  அவர்கள் பல்வேறு விதமாக  ஆராதிக்கப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில்தான் அவர்களை அடையாளம்  காண்பார்கள்.

முக்கடவுட்களின் பொதுவான உருவம் 

ஆனால் இதில் விதி விலக்காக உள்ளவர்  வினாயகர்  மட்டுமே.  மூலக் கடவுளான வினாயகரை  மட்டுமே  யானை முகத்தவனாகவே வழிபடுகிறோம். அவர் ஒரு முக வினாயகராக  இருந்தாலும் சரி, பஞ்சமுக வினாயகராக  இருந்தாலும் சரி, அவர் வேறு அவதாரத்தில்  காட்சி தரவில்லை.  யானை முகனாகவே காட்சி தருகிறார். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே மனிதத் தலையுடன் காட்சி அளித்தாலும் பிள்ளையார் என்றால் யானை முகத்தவரே. எனக்குத் தெரிந்தவரை இந்த உலகிலேயே மனித உருவுடன் வினாயகர்  உள்ளது கூத்தனூரில் உள்ள தில தரப்பான பூமி ஆலயத்தில் மட்டுமே என்பதை அதனால்தான் முதல் பகுதியில் சுட்டிக் காட்டி இருந்தேன்.

 பக்தி மற்றும் பூஜை என்பவை வேறுபட்டவை. கடவுளிடம் பக்தி செலுத்துபவன் பூஜைகளை செய்பவனாகவே இருக்க வேண்டும் என்பதல்ல தத்துவம். பக்தியை வெளிக் காட்டாமல் வேஷம் போடாமல் உள்ளுக்குள்ளே வைத்திருப்பது என்பது தன் நிலை உணர்தல் எனும் உயரிய தன்மை ஆகும். இப்படிப்பட்டவர்களே அவர்களுக்கு உள்ளேயே குடி இருக்கும் கடவுளைக் காண முடியும். நாம் அனைவருமே பூர்வ ஜென்ம வினைகளினால் மானிடப் பிறவி எடுத்து வந்துள்ளோம். அதில் பல கர்மாக்கள் அடங்கி இருக்கும். அவற்றை எல்லாம் பக்தி எனும் சக்தியைக் கொண்டு அழித்து விட்டுச் செல்ல வேண்டும்.

அதற்கு முதல்படியாகத்தான்  நாம் தினமும் மற்றக் கடவுட்களை வழிபடுவதற்கு முன்னால் ஒரு ஷணம் வினாயகரை வணங்கி விட்டே மற்ற பக்தியையும் துவக்க வேண்டும். இல்லை என்றால் காலரூபி எனப்படும் விக்னேஸ்வரன் - விக்னத்தை தருபவன் - நம்மை பின் தொடர்ந்து கொண்டே இருப்பான். வினாயகருக்கு முதல் கடவுள் என்ற நாமதேயம் சூட்டி அவருக்கு முதல் மரியாதையைத் தர வேண்டும் என்பதினால்தான் சிவபெருமானே, வினாயகரை தனது மகன் என்றும் கருதாமல் தான் எங்கு சென்றாலும் முதலில் வினாயகரை வணங்கி விட்டு செல்வார் என்பது புராணக் கதை. அப்படிப்பட்ட சிவபெருமானே வினாயகரை முதலில் வணங்கி விட்டே தனது காரியத்தை துவக்குவார் என்பதில் இருந்தே வினாயகரின் சக்தி புரியும். இந்த நிலை ஒற்றைப் பிள்ளையாருக்கே என்றால் ரெட்டைப் பிள்ளையாரைப் பற்றி எப்படிக் கூறுவது என்று எண்ணத் தோன்றும் ?

உண்மையைக் கூறினால் ஓற்றையோ, இரட்டையோ எந்தப் பிள்ளையாரை வணங்கினாலும் அவர் அருள் புரிவார் என்றாலும் ஒரு சில நேரங்களில், ஒரு சில காரியங்களுக்காக ரெட்டை பிள்ளையாரை வணங்கித் துதிப்பது மிக்க நல்ல பலனைத் தரும். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஆனால் இரட்டை வினாயகர்  எல்லா ஊர்களிலும் இருப்பதில்லை. சில ஆலயங்களில் மட்டுமே இருக்கிறார்கள். இரட்டைப் பிள்ளையாரை எப்படி வழிபடுவது ? அதற்கு என்ன முறை ??

இரெட்டை பிள்ளையாரை நெய்தீபம் ஏற்றி, அருகம் புல் சாற்றி வழிபட்டால் சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும்,  சந்தனக் காப்புப் போட்டு பூஜை செய்வதின் மூலம்  தடைப்பட்ட திருமணங்கள் தடை விலகி திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். மணப்பேறு,  மகப்பேறு கிட்ட, பித்ரு சாபங்கள் தீர, நோய்கள் அகல இரெட்டை பிள்ளையாரை பைரவருடன் சேர்த்து வணங்குவார்கள். இரெட்டை பிள்ளையார் தோஷங்களைக் களைபவர் என்பதினால் குறிப்பாக செய்வாய் தோஷம் உள்ளவர்கள் தேய்பிறை சதுர்த்தியில் அருகம் புல் மாலைப் போட்டு பூஜை செய்தும், சர்ப தோஷம் உள்ளவர்கள் செய்வாய்க் கிழமையில் நெய் விளக்கு ஏற்றியும் சந்திர தோஷம் உள்ளவர்கள் கொழுக்கட்டைப் போட்டு, வெல்ல சாதமும் நெய்வித்தியம் செய்து  பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆமாம் இரட்டைப் பிள்ளையார்  இல்லாத ஊர்களில் அவரை எப்படி வழிபடுவது? அதற்கு ஏதேனும் உபாயம் உள்ளதா? இவை அடுத்தடுத்தக்  கேள்விகள்!!  

 ............தொடரும் 


நன்றி : சாந்திப்பிரியா