Friday 18 August 2017

பேரும் புகழும் அருளும் பேரூர் நாயகன் !



துவொரு பௌர்ணமி திருநாள்! வளம் கொழிக்கும் நொய்யலாற்றங்கரைப் பகுதியில்... பால் நிலவு காய, துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தது காமதேனுவின் கன்று. திடீரென அதன் கால், புற்று ஒன்றில் மாட்டிக் கொண்டது. காலை வெளியே எடுப்பதற்காகத் தனது கொம்புகளால், புற்றில் குத்தியது கன்று. அதன் கால் குளம்பும், கொம்பும் பட்டு, புற்றில் இருந்த சிவலிங்கத் திருமேனியில் ரத்தம் கொப்பளித்தது.
இதைக் கண்ட காமதேனு பதறிப்போனது. சிவ நிந்தைக்கு ஆளானோமே என மனம் வருந்தி, சிவனாரை வழிபட்டது. அதன் துயர்துடைக்கக் கருதிய ஈசன், ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார். ''தெய்வப் பசுவே! உனது கன்றின் செயலை நான் குற்றமாகக் கருதவில்லை. எம் திருமேனியில் குளம்புச் சுவடும், கொம்புச் சுவடும் கொண்டு இங்கே அருள்புரிவேன். காமதேனுவாகிய நீ வழிபட்டதால் இந்த ஊர், காமதேனுபுரி என்றும் பட்டிபுரி என்றும் அழைக்கப்படும். நான், பட்டிநாதர் எனும் பெயர் பெறுவேன்'' என்று அருளினார். காமதேனுவுக்கு சிவனருள் கிடைத்த பட்டிபுரி எனும் அந்தத் திருவிடம், தற்போது பேரூர் - பட்டீஸ்வரமாகத் திகழ்கிறது. கோவை - காந்திபுரத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
இந்தக் கோயிலை கற்கோயிலாக்கியது சோழர்கள். இந்தத் தலத்தை மேலைச் சிதம்பரம் எனப் போற்றிக் கொண்டாடினார்களாம் கொங்கு சோழர்கள்.
நாயக்கர்கள் மற்றும் மைசூர் மன்னர்களின் பிரதிநிதிகளும் இந்தக் கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளனர். தேவார மூவரில் சுந்தரர், இந்தத் தலத்துக்கு மூன்று முறை வந்து வழிபட்டிருக்கிறார். அருணகிரியாரும் இங்கு வந்து, ஆலயத்தில் அருளும் முருகனைப் பாடிப் போற்றியுள்ளார் என்று சிலிர்ப்புடன் கூறுகிறார்கள் பக்தர்கள்.
இந்தக் கோயிலின் சிறப்பம்சம், தீவட்டி சலாம். குறிப்பிட்ட வழிபாட்டின்போது, ஆலயத்தின் வெளிப்புறம் நின்றுகொண்டு தீவட்டியால் சலாம்கூறி இறைவனை வணங்கும் முறை திப்பு சுல்தான் காலத்தில் ஏற்பட்டதாம். இந்த வழிபாடு இப்போதும் வழக்கத்தில் உள்ளது.
ஸ்ரீபட்டிப்பெருமானும், ஸ்ரீபச்சை நாயகியும் அருளும் இந்த ஆலயத்தில், பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெறுகிறது. மாசிமகமும் இங்கே விசேஷம்!
உத்தராயன காலத்தில் வரும் 6 மாதங்களிலும் பௌர்ணமியை ஒட்டி வரும் நட்சத்திரங்கள் சிறப்பானவை. தை மாதத்தில் பூசம், மாசியில் மகம், பங்குனியில் உத்திரம், சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம், வைகாசியில் விசாகம் மற்றும் ஆனியில் கேட்டையையும் விசேஷமாகக் கருதிய முன்னோர்கள், பௌர்ணமி காலத்தில் உரிய விதிப்படி சிவபெருமானை பூஜிப்பதால் இன்னின்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் விளக்கியுள்ளனர்.
அந்த வகையில் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று பால், இளநீர், சந்தன கலவை ஆகியவற்றால் அபிஷேகித்து, தயிர் அன்னம் சமர்ப்பித்து, தாமரை தண்டு திரியேற்றி நெய் விளக்கு ஏற்றுவார்கள். இந்த பூஜையில் கலந்துகொண்டால், முக்தி கிடைக்குமாம். பேரூர் ஸ்ரீபட்டீஸ்வர ஸ்வாமிக்கும், மாசிமகத்தன்று காலை 7:30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு மகாதீபாராதனையும் நடைபெறும். மேலும், ஸ்ரீபச்சைநாயகிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்வ துடன், வானில் ஒளிரும் சந்திரனையும் பூஜித்துப் பிரசாதம் வழங்குவார்களாம். இந்த நாளில் பேரூர் நாயகனை வழிபட, பேரும் புகழும் கிடைக்கும்!

No comments:

Post a Comment