Friday, 18 August 2017

சைவ சித்தாந்தம் - சங்கற்ப நிராகரணம் பகுதி- 2.2

நிமித்தகாரண பரிணாமவாதி சங்கற்பம்
புவனம் யாவையும் புனிதனது உருவாம்
சிவமும் சத்தியும் எனத்தெளி அவற்றுள்
அசேதனம் என்றுஒன்று அறைதற்கு இலது அது
சேதனன் நுகர்பொழுது இரண்டும் ஓர்திறத்தே
இதுவெனும் ஒன்றே அதுவாய்ப் படுத்துப்

பொதுமையில் நிற்கும் போதம் என்று அறிக
பொற்பணிப் பேதம் புரைவழி ஒருவழி
நற்பொனில் திகழ்வென் நயப்பதுஒன்று அன்றால்
ஆவதும் ஆகாது ஒழிவதும் எனும் இப்
பாவகம் உண்மை பாரா தோர்க்கே

பாராதோர் எனப் பல்லுயிர் பகர்தலின்
ஆராய்ந்து உரைக்கில் அவைபிற அல்ல
பலபல பேதம் இலஎன் போருள்இல்
கண்ணினது ஒளியைக் கண்ணினது எனில்அது
திண்ணிய இருளில் செறிபொருள் தெரிதலும்

இனிமை மின்மினி எனஇரு கண்மணித்
தன்மை தானும் தாவிலது அதனால்
கண்ணினது உருவும் அதில்கதிர் ஒளியும்
நண்ணரும் சத்தி சத்தர்கள் நடிப்பே
உலகுஏழ் எனத்திசை பத்துஎன ஒருவன்

பலவாய் நின்ற படிஇது என்றும்
ஊனாய் உயிராய் உணர்வாய் என்றும்
மானக் கண்ணே மணியே என்றும்
தாமே தாமாய்ச் செய்தனன் என்றும்
நாமே சிவமாய் நண்ணினம் என்றும்

காயாய்ப் பழமாய்ச் சுவையாய் நுகர்வும்
ஓயாது உண்போன் தானே என்றும்
அறிவோன் தானும் அறிவிப் போனும்
அறிவாய் அறிகின்றோனும் அறிவுறும்
மெய்ப்பொருள் தானும் வியந்துஇது எனப்படும்

அப்பொருள் யாவும் அவனே என்றும்
தாய்தலைப் பட்டுஅங்கு ஒன்றாய்த்து என்றும்
ஏதம் அறநான் கெட்டேன் என்றும்
இன்னும் இன்னும் இறையோன் அளித்தவை
பன்னில் எண்ணரும் பான்மைத்து ஆதலின்

தருபொருள் கொள்பொருள் தருவோன் கொள்வோன்
ஒருபொருள் இவ்வியல் உவப்புஎன உணர்க
நுகர்பொருள் சத்துஇது நுகர்வோன் சத்தன் என்று
இகல்அறும் உணர்வுவந்து எய்துதல் அரிதே
நான்அவன் எனும் இது நவைவழி நல்வழி

தான்அவன் ஆகை இது சாயுச்சியம்
இத்திறன் தெளிய உய்த்திடும் அளவும்
யாதொரு வகையால் நீதியது ஆகத்
தான்அறி வழியே தலைநின்று என்றும்
ஊன்உயிர் சிவத்தில் ஒடுங்கிட நடத்தி

மூடும் முழுமலம் வீடும் காலை
கருவிகள் அளவில் புரிதரும் அறிவு
சாக்கிரம் கனவு நீக்கமில் சுழுனை
துரியம் என்றுஇவை பயில் தரும் அறிவு
துரியா தீதம் திரியாத் தன்மையில்

இறையருள் உதவும் கறைஅற மாறி
அறிவே ஆகும் பிறியாக் கருவிகள்
நிறைமுதல் அவத்தையில் அறிவு இலது ஆகத்
துரியா தீதத் தோற்றம்
திரியா ததுநற் சிவகதித் திறனே

இவ்வுலகம் முழுவதும் புனிதனாகிய சிவபரம்பொருளின் திருவுருவமாகும். அப்பரம் பொருளும் தன்னிலையில் சிவம் என்றும், வெளிப்பட்டு நிற்கும் நிலையில் சத்தி என்றும் இருதிறமாகக் கூறப்படும். இவை இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று நீங்குவதில்லை. ஆதலால் உலகத்துப் பொருள் எதனையும் அறிவற்ற சடப் பொருள் என்று கூறுவதற்கு இல்லை. ஏனெனில் அறிவுடைப் பொருளே நுகர்கிறது, அது அவ்வாறு நுகரும்பொழுது அறியும் பொருளும் அறியப்படும் பொருளும் ஒரு தன்மையனவாகவே இருக்கும், எவ்வாறு எனில், அறிவு தான் சுட்டி அறிகின்ற பொருளை தன்மயம் ஆகும்படி செய்து பொதுமையில் நிற்கும் என்று அறிவாயாக.

பொன்னும், அதனால் செய்யப்பட்ட அணிகலன்களும் காட்சியில் வேறுபட்டுத் தன்மையில் ஒன்றாவதுபோல உயிரும் உயிரால் காணப்பட்ட உலகும் என்று உவமை கூறப்படுவதும் உண்டு. பொன்னின் மாற்றே அதனால் செய்யப்பட்ட அணிகலன்களிடத்தும் இருத்தலால் அவ்விரண்டும் ஓர் இயல்பினவாகவே இருப்பினும் அவற்றை உயிருக்கும் உயிரால் உணரப்படும் பொருள்களுக்கும் உவமையாகக் கொள்வது ஏன்? என்ற கேள்வி எழும். உவமை சொல்லி ஒன்றினை விளக்க வேண்டிய தேவை பொருள்களின் தன்மையை உணராதவர் பொருட்டே ஆகும். எனவே இந்த உவமை பொருந்தும் என்றலும். இது பொருந்தாது என்றலும் உண்மையைத் தெளியாதவர்களால் கூறப்படுவனவையே என்று விடை பகர்தல் வேண்டும். உண்மையைத் தெளிந்தவர்கள் அதனைத் தெளியாதவர்கள் என்று வகைப்படுத்திச் சொல்வதனாலே உயிர்கள் பல என்பதனையும், அவை தனிப் பொருள் என்பதனையும் உணர்த்தவில்லையா என்று கேட்பின் ஆராய்ந்து பார்த்தால் உயிர் இறைவனில் இருந்து வேறுபட்டது அன்று என்பதை உணரலாம். வேறுபட்டது என்று கொள்வாரும் இல்லை.

கண்ணுக்கு ஒளி உண்டு. அது கண்ணிலிருந்தே தோன்றுவது என்று கூறினால் அது பொருந்துவதில்லை. ஏனெனில் காணும் தன்மை படைத்த கண்ணும் செறிந்த இருளில், பொருள்களைக் காண்பதில்லை. மின்மினிப் பூச்சி கூட இருளில் தன் ஒளியைக் காட்டும். ஆனால் இரண்டு கண்மணிகளும் சேர்ந்து இருளைக் கடிவதில்லை. அதனால் கண்ணும் கண்ணுக்குத் துணை நிற்கும் ஒளிக்கதிரும் ஒப்பற்ற சக்தி சிவம் ஆகியோரின் நாடகமே என அறிக.

ஏழு உலகாகவும், திசைகள் பத்தாகவும் இறைவன் ஒருவனே பலவாகி நின்றான் என்றும், ஊனாயும், உயிராயும், உணர்வாயும் இறைவனே நின்றான் என்றும், கண்ணே கண்ணின் கருமணியே என்றும், உயிர்கள் தாமே தானாகுமாறு இறைவன் இயற்றினன் என்றும், காயாகியும் பழமாகியும், பழத்தின் சுவையாகியும், சுவையை நுகர்வோனாகியும் இறைவனே நின்றான் என்றும், அறிவோன் ஆகியும், அறிவிப்போன் ஆகியும், அறிகின்ற அறிவேயாகியும் வியந்து கூறுமாறு எல்லாப் பொருள்களும் இறைவனே என்றும், தாயாகித் தலைப்பட்டு அங்கு ஒன்றாகும் என்றும், குற்றம் கெடுமாறு நான் கெட்டேன் என்றும், இவ்வாறு பல இடங்களிலும் அருளாளர் வாக்குகளில் கூறப்பட்டுள்ளவற்றிலிருந்து உயிர்களும் பரம்பொருளும் வேறல்ல என்பதை உணர்க.

எனவே கொடுக்கப்படுகிற பொருள் என ஒன்றும், கொடுப்போன் என ஒருவனும், கொள்வோன் என்று மற்றொருவனும் ஆகிய இவை வேறுபாடு உடையன அல்ல. யாவுமே இறைவன். இவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவது அவனுக்கு ஒரு மகிழ்ச்சி என்று உணர்வாயாக. நுகரப் படுகிற பொருள்கள் யாவும் சத்தியின் வடிவே. அவற்றை நுகர்வோன் சத்தனாகிய இறைவன் என்னும் தெளிவான உணர்வு வந்து கைகூடுதல் அரிது. நான் வேறு இறைவன் வேறு என்று எண்ணுகிற இருமை உணர்வு குற்றமுடையது. குற்றமற்ற உணர்வு என்பது நான் என்ற உயிர் இல்லை என உணர்ந்து சிவனே ஆதல் என்கிற ஒருமை உணர்வே, பரமுத்தி எனப்படும் சாயுச்சியம் ஆகும். இத்திறன் உறுதியாகும் அளவும், அம் முத்திக்குச் சாதனமாக அமைகிற யாதானும் ஒரு மாதகத்தை மேற்கொண்டு எப்போதும் ஊனும் உயிரும் சிவபெருமானிடம் ஒடுங்கி இருக்குமாறு ஒழுகி வருதல் வேண்டும்.

மேற்கூறியவாறு ஒழுகுவதனால் உயிரை மறைத்திருக்கிற ஆணவம் உயிரைவிட்டு நீங்கும் காலம் குறுகும். அப்போது உயிருடன் கருவிகள் கூடியும் நீங்கியும் வருவதால் நிகழும் நனவு, கனவு, உறக்கம் பேருறக்கம் என்பனவற்றில் சென்று சென்று மீளும் அறிவு உயிர்ப் படங்களில் என்னும் துரியாதீத நிலையை எய்தும், அந்நிலையில் இறைவனின் திருவருள் உயிரைப் பொருந்தும். சகல நிலையில் உயிர்களைப் பொருத்தியிருந்த கறையாகிய ஆணவ மலம் மாறும். உயிரை விட்டு நீங்காத முப்பத்தாறு கருவிகளும் நனவு நிலையில் அருளோடே பொருந்தி துரியாதீதத் தோற்றத்தைக் கண்டு அதனின்றும் திரியாது நிற்கும். அந்த அருள் விளக்கமே நல்ல சிவகதி எனப்படும்.

மேற்கண்ட பகுதியில் நிமித்த காரண பரிணாமவாதியால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்ட திருமுறை அருட்பாடல்கள் கீழ் வருவன. ஒவ்வொரு பாடலிலும் உள்ள பகுதிகளை நிமித்த காரண பாணாமவாதி தன் கருத்தை வலியுறுத்துவதற்குப் பயன்படுத்துகிறான். ஆயினும் அப்பாடல்களுக்கு அவன் கொண்ட பொருள் பொருந்தாது என்பதும் சைவ சித்தாந்தத்தின் படி அத்திருப் பாடல்களுக்கு உரிய நேர்மையான பொருளும், இப்பகுதியின் நிராகரணத்துள் ஆசிரியரால் எடுத்துக் காட்டப்பெறுகிறது.

நிலம்நீர் நெருப்புஉயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோடு எண்வகையாய் புணர்ந்து நின்றான்
உலகுஏழ் எனத்திசை பத்தெனத்தான் ஒருத்தனுமே
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ (திருவாசகம்திருத்தெள்ளேணம்)

ஊனாகி உயிராகி அதனுள் நின்ற
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயே ஆனாய்
நானேதும் அறியாத என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்
தேனாரும் கொன்றையனே நின்றி யூராய்
திருவானைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாய்நின் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய்கேனே (அப்பர்திருத்தாண்டகம்)

திருவேஎன் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நிற் சோதிமிக்க
உருவே என் உறவே ஊனே ஊனின்
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணில்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவதுதண் துறையுறையும் அமரர் ஏறே அப்பர்

பத்திப்பேர் வித்திட்டுப் பரந்தஐம் புலன்கள்வாய்
பாலே போகா மேகாவாப் பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள் வாய் மூடா வூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் சேர்வார் தாமே தாமாகச் செயுமவன் உறையுமிடம்
கத்திட்டோர் சட்டத்தங் கலந்திலங்கு நற்பொருள்
காலே ஓவா தார்மேவும் கழுமல வளநகரே திருஞான சம்பந்தர்

பவமாயம் காத்தென்னை ஆண்டுகொண்ட பரஞசோதி
நவமாய செஞ்சுடர் நல்கும் பண்டை நாம் ஒழிந்து
சிவமாய வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ திருவாசகம்திருத்தெள்ளேணம்

தீயாகி நீராகித் திண்மையாகித்
திசையாகி அத்திசைக்கோர் தெய்வமாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறும் தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானும் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே (அப்பர்திருத்தாண்டகம்)

அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன் (காரைக்கால் அம்மையார்அற்புதத் திருவந்தாதி)

மோதலைப் பட்ட கடல்வயிறு உதித்த
முழுமணித் திரளமு தாங்கே
தாய்தலைப் பட்டுஅங்கு உருகி ஒன்றாய
தன்மையின் என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும்அவ் வகையே
நிசிசரர் இருவரோடு ஒருவர்
காதலிற் பட்ட கருணையாய் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே (கருவூர்த் தேவர்திருவிசைப்பா)

வான்கெட்டு மாருதம் மாய்ந்து அழல்நீர் மண் கெடினும்
தான்கெட்டால் இன்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு
ஊன்கெட்டு உயிர்கெட்டு உணர்வுகெட்டு என் உள்ளமும் போய்
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ (திருவாசகம் திருத்தெள்ளேணம்)

நவை வலி குற்றமுள்ள வலி. கழுதை உறக்கம். அசேதனம்அறிவற்றது.

நிமித்த காரண பரிணாமவாதி சங்கற்ப நிராகரணம்
திறம்பெற நீஇங்கு அறைந்தமை கருதில்
புவனம் யாவையும் புனிதனது உருஎனில்
அவன் முதற் காரணம் அன்றாம் என்னில்
நிமித்த காரணம் நிகழ்த்துக எனநீ
அவனே காரணம் அனைத்தும் என்று அறைந்தனை

மண்தனிக் குலாலன் தண்டசக்க ராதி
காரணம் மூன்றும் ஓர்பேர் அணைந்ததுஇத்
தாரணி அதனில் கண்டது சாற்றுக
அத்தன் இயற்றும் இத்தொழில் பிறர்க்கோ
தனக்கோ வீணோ எனக்கு ஈது இயம்புக

வீண்எனில் பித்தர் மாண்பு அறும் தொழில்போல்
தலைமையும் அறிவும் இலதுஎன இகழ்வர்
தனக்குஎனில் அஃதும் இசைப்பது ஒன்று அன்றே
தன்போல் அறிஞரும் தலைவரும் இலரால்
மின்போல் நிலைமையை வேண்டலும் பழுதே

பிறர்க்கு எனில் பிறரும் பிறர்க்கு ஆம் பொருளும்
பொருட்கு அமை கருவியும் அதற்குஉபா தானமும்
செய்கையும் என்று ஓர் ஐவகைத் தானொடு
மாறாச் சைவர் கூறாய் என்றால்
நின்சித் தாந்தம் அவசித் தாந்தம்

என்சித்து ஆன்ற அசித்தை மற்று ஈனாது
அசித்து இலது என்னில் வசித்தது என்உலகில்
உலகா யதனும் பூதக் கூட்டம்
சலம்மேல் கொப்புள் தகும்எனச் சாற்றினன்
தீய கருமச் சீனர் சாவகர் பிறர்

ஞேயம் இல்என நிகழ்த்தினர் இலரே
காண்டல் விரோதம் நிற்பிறர் கணித்தலர்
ஈண்டுஉனது உரைக்கும் மற்று யார்கரி உடலும்
சித்தோ சித்தின் சேர்வால் சித்து எனில்
கடபடாதியும் உடல் கண் சிதைவு என்

தாபர உயிர் போல் தனுஒழிந்து அவற்றுள்
மேவிய உணர்வு விரவிடும் என்னில்
சடத்துஉயிர் போல் எனச் சாற்றினை ஆகலின்
உடற்கு உயிர் இறையை ஒழிந்து உண்டு அன்றே
தருதிட் டார்ந்தமும் தாட்டாந் திகமும்

ஒருபொருள் ஆகில் உவமை பெறாதே
ஒன்றே ஆகில் உடற்கு இறை தாபரத்து
ஒன்றிய நிலையில் விசேடம் என் உரைக்க
பூதச் சேர்வைப் பேதம் என்று அறையில்
சேர்வைப் பேதம் என்கொடு செப்புக

கருமத்து அளவில் வரும் எளில் பித்தர்
உரையில் திகழும் உணர்வுஒழிந் தனையே
கருமம் செய்வோள் கடவுள் அன்று உடலும்
மருவி நின்று இருவினை வாளா நுகரா
கடவுளும் உடலின் கண்படல் துஞ்சல்

இடர்நலம் உறுதல் இறங்குதல் ஏறுதல்
எவ்வகை யேனும் செய்கை இன்று ஆதலும்
பலகலை உலகில் நிலவுத லானும்
எண்ணரும் பொருளும் இரவியும் ஒழியக்
கண்என ஒன்று காண்கையி னாலும்

பாசப் பகுதியும் ஈசனும் ஒழியப்
பசுவும் உண்டு என்று இசைய வேண்டின்றே
இதுஎனும் ஒன்றே அதுவாய்ப் படுத்துப்
பொதுமையில் நிற்கும் மாயையின் பொற்பு எனப்
பொற்பணி யாவும் பொன்னாம் தன்மையின்

நிட்கள் சகளத் திருவுரு நிலையும்
ஈசனே எனப் பேசுவர் அன்றி
அருவுருவாகி வரும் உலகு என்னில்
அனைத்தும் மாயை எனத்தெளி கிலையே
ஆவதும் ஆகாது ஒழிவதும் இலது எனும்

பாவகம் உலகாயதனது பான்மை
கள்கொலை வெகுளி காமம் களவுகள்
உட்படும் இவைவிட மொழியாதார் இலர்
சோம பானம் சுராபானங்கள்
ஆம்என மறைகள் ஆர்செவிப் பறைந்தன

மறையோன் புலைச்சியை மருவும் என்பது
முறையோ எனில் அது புனைமொழி என்னில்
சாதி பேத நீதிநீ தவறினும்
மேதியை ஏறு விழையா விரும்பும்
கண்ணினது உருவும் அதில் கதிர் ஒளிவும்
நண்ணரும் சத்தின் நாடகம் எனில் அதற்கு
ஏதுவும் பயனும் ஓத வேண்டும்
நின்மொழி விரோதமும் நீடு உலகு இயற்கையும்
தன்மசாத் திரமும் சகலமும் என் செயும்
உலகுஏழ் எனஇறை பலவாம் தன்மை

கடமொடு சாரவம் கலசம் ஆதிகள்
அடல்உறு குயவன் ஆயினன் என்றால்
தானே ஆகா அவைதான் ஆகான்
ஆயினன் என்பது ஆக்கினன் எனவே
ஆனாய் என்பது அனைத்தும் அவ்வகை

தான் ஆகாமையைச் சாற்றிடும் என்க
தாமே எனும்இத் தனி ஏகாரம்
அழிந்திலர் அதுவே ஆய்த்திலர் அதுவிட்டு
ஒழிந்திலர் பிரிவிலர் எனும்இவை உணர்த்தும்
காயும் பழமும் சுவையும் நுகர்வது

ஆயவன் தானும் அவன் முதற்கு என்னும்
அகிலமும் தெளிய அறிவோன் தானும்
அகிலமும் அறிஞரை அறிவிப்போனும்
அறிஞர்க்கு அறிவாய் அறிகின் றோனும்
அறிவிற்கு அறிபொருள் ஆவோன் தானும்

அகிலமும் மேனி ஆனவன் என்னும்
தருபொருள் கொள் பொருள் தருவோன் கொள்வோன்
ஒருபொருள் ஆயின் உவப்பு உண்டு என்க
நுகர்வோன் தனக்கு நுகர்பொருள் வேண்டிற்று
இகல்அறக் கிடையாது இருந்தது என் நிரயமும்

வேண்டா ராயினும் மெய்யுறு வியாதிகள்
ஈண்டாது ஒழியாது இறைக்கு இவை ஈடுஅல
சத்தியும் சிவமும் தாமே நுகரும் என்று
இத்திறன் உணர்வு வந்து எய்துவது எவர்க்கோ
தமக்கே என்னில் தாம் உணராமையும்

அமைப்பு அறுஉணர்தலும் அவர்க்கு அடைவு அன்றே
நானும் அவனும் நவையும் நலனும்
தான்அவன் ஆகையும் நின் சாதனத்தில்

சகயோ கத்தைச் சாயுச் சியம்எனப்
பகர்வது பதிபசு பாசத் தவர்க்கே

யாதுஒரு வகைஎன ஓதியது இறைநூல்
சொன்னவற்று ஒன்றுஅன்று என்னில் வீடு எளிதே
தான் அறி வழியே தலைப் பொருள் பிடிக்கில்
மேல்நிகழ் பலமும் வீடுஅளித் திடுமே
நிலையாக் கருவியை நிலையாக் கருதிப்

புலையாடுதலும் உலகா யதன்பொருள்
குட்டியம் இன்றிநற் கோலம் எழுதுதல்
இட்டம தாயில் கருவியும் இடங்களும்
கருத்துற உரைக்கத் தெரித்திடும் அதீதத்து
அறிவொன்று இல்லோர்க்கு இறைஅருள் உதவுதல்

பிறிவு அறிவு அரிய செறி இருள் இடத்து ஓர்
அந்தகர் காண வந்தோர் எம்மை
நீவிரும் காண வேண்டும் என்றுஆங்கு
எடுத்து ஓர் தீபம் கொடுத்ததை ஒக்கும்
இச்செயற்கு இறைவன் கொச்சையன் அன்றே

கருவி வசத்தில் தெரிவுறக் காண
வேண்டுநர் இலரால் ஈண்டு அறிவு யாவும்
சிவமே என்று செப்பினை அவம்உறு
பொறிபுலன் அறியா அறிவது பிரமம்
என்றோர்க்கு உன்போல் இடர்ப்படல் இலதே
ஏற்றம் கருவி இருபதோடு இரண்டும்
போற்றும்ஐந்து அவத்தையும் புகல்திரி மலமும்
ஈசனும் உயிரும் பேசினை அஃது ஒழிந்து
ஒன்றே ஆகும் என்றநின் இயல்பு
தாயர் மனைவியர் தாதியர் தவ்வையர்

ஆயவர் எவரையும் ஓர்மையில் காணும்
கோகழி தூர்த்தர் கொடுந்தொழில் தகுமே
ஆக மற்று அதன் அருள்நிலை தன்நிலை
ஏக நாயகன் ஆகிய இறைநிலை
நாசம் இல் பாசம் வீசிய வியன் நிலை

இனையவை ஒன்றும் நினைவினும் இன்றி
உண்டுஎனும் உணர்வில் கண்டது கருதில்
இழுக்கு எனும் புலன்வழி ஒழுக்கமும் அதுவாய்க்
கொண்டு பண்டையில் எண்தரு மடங்கு
வந்தவா செய்யத் தந்ததை அன்றே

புன்மைகள் நீங்க உண்மை கேண்மதி!
திறம்பட நீ கூறியவற்றை ஆராய்ந்து பார்க்கலாம். இவ்வுலகம் முழுவதும் இறைவனது திருவடிவிலிருந்து தோன்றியது என்றாய். அவ்வாறாயின் இறைவனை இவ்வுலகுக்கு முதற் காரணம் என்று கொள்ள வேண்டும். அவன் முதற் காரணம் அல்லன் ஆகின் இறைவனை நிமித்த காரணன் என்று கொள்ள வேண்டும். ஆனாய் நீயோ இறைவனே உலகுக்கு முதற் காரணம் துணைக் காரணம் நிமித்த காரணம் என்று கொள்ளுகின்றாய் ஒரு குடம் வனையப்படுவதற்கு மண் முதற் காரணமாகிறது. தண்டு சக்கரம் ஆகிய கருவிகள் துணைக் காரணங்கள் ஆகின்றன. வனைகின்ற குயவன் நிமித்த காரணன் ஆகிறான். இவ்வாறு மூன்று காரணங்களும் தனித் தனியாகக் காணப்படுவதேயன்றி மூன்றும் ஒன்றாக இருப்பது இவ்வுலகில் காணப்படவில்லை. அவ்வாறு மூன்றும் ஒன்றாக இருப்பதை நீ கண்டாய் எனின் அது எது என்று எடுத்துரைப்பாயாக.

தலைவனாகிய இறைவன் இயற்றுகின்ற ஐந்தொழிலும் பிறர்க்காகவா? தனக்காகவா? அல்லது வீணாகவா? என்பதனை எனக்குக் கூறுவாயாக. ஐந்தொழிலும் வீண் எனில் அவை பித்தர் செய்யும் பெருமையற்ற தொழிலாகும். அதுவும் தவிர வீண் தொழில் இயற்றுபவன் முதன்மையும் முற்றறிவும் இல்லாதவன் எனப்பட்டு இகழப்படுவான். இறைவன் ஐந்தொழிலும் தன் பொருட்டே இயற்றுகின்றான் என்று கொண்டால் அதுவும் முன் கூறியது போலப் பொருந்தாத கூற்று. ஏனெனில் முழு முதன்மையும் முற்றறிவும் உடைய இறைவன் தனக்கென மின்னல் போல் கணப் பொழுதில் தோன்றிக் கணப் பொழுதில் அழியும் இவ்வுலகத்தைப் படைத்துக் காத்து மறைத்து ஒடுக்கி அருளுகிறான் எனப்பட்டு இழுக்காய் முடியும்.

இறைவன் பிறர் பொருட்டே ஐந்தொழில் செய்தான் என்னில் அவன் தவிரப் பிறரும் அவர்களுக்கான பொருளும் அப்பொருளுக்கு ஆவதான கருவியும் முதற் காரணமும் செய்கையும் என்று ஐவகை நிலைகள் வேறு உள என்று கொள்ளப்பட்டு யாவும் சிவமே எனக் கூறும் உன் கொள்கைக்கு மாறுபடும். மேலும் அறிவே வடிவாகிய இறைவனில் இருந்து அறிவற்ற பொருள்கள் தோன்ற மாட்டா. உலகம் அறிவற்ற பொருளே கிடையாதா? உலகம் அறிவற்றது என்று மறைகளும் ஆகமங்களும் கூறுவது என்னாகும்? உலகாயதர் கூட நான்கு பெரும் பூதங்களின் கூட்டத்தினால் உருப்பெற்ற இந்த உலகம் நீர் மேல் குமிழி போல் நிலையற்றது என்பார்கள்.

ஏற்கத்தகாத கொள்கைகளையுடைய பவுத்தர், சமணர் போன்ற புறச் சமயத்தவர்கள் கூடக் காணப்படும் பொருளை இல்லை என்று மறுத்ததில்லை. கண்ணுக்கு நேரே தெரிவதை மறுக்கும் உன் கொள்கை காண்டல் விரோதமாகும். உன் போல் இவ்வாறு கூறியவர் வேறு யாரும் இலர். நீ கூறுகின்ற இந்தக் கருத்துக்குச் சான்றாவது எது?

உடல் அறிவுடையதா? உயிராகிய அறிவோடு சேர்ந்ததனால் அதுவும் அறிவுடையதே என்று நீ விடையிறுப்பாய். அவ்வாறு எனின் இறைவனாகிய முற்றறிவுப் பொருள் எவற்றுள்ளும் எங்கும் கலந்து நிற்கவும் குடம் துணி முதலியனவும் இவ்வுடலைப் போல் அலைந்து திரியாமல் அவை கிடந்த இடத்திலேயே கிடப்பது ஏன்? இக்குடம் துணி ஆகியவற்றில் உள்ள உயிர் மரம செடிகளில் உள்ள உயிர் போன்றது மரம் செடிகள் எவ்வாறு அசைவதில்லையோ அது போன்றே குடம் துணி முதலியவையும் அசையா என்று மறுமொழி தருகிறாய். இவ்வாறு கூறுவதன் மூலம் தாவரங்களில் உயிர் உண்டு என்று எடுத்துக் காட்டினாய். எனவே உடம்பிலும் இறைவனைத் தவிர உயிர் என்ற தனித்த பொருள் உண்டு என்பதை நீயும் உடன்படுகின்றாய்.

அவ்வாறில்லை எடுத்துக் காட்டு என்பது ஒன்றே கொண்டு வாதிடுவது சரியில்லை. முற்றிலும் பொருந்துமானால் மட்டுலுமே இத்தகைய வாதத்தை ஏற்க முடியும் என்று கூறுவாயானால் உவமை என்பதும் உவமையால் விளக்கப்பட்ட பொருளும் ஒரே பொருளாக இருக்க முடியாது. இருப்பின் பொன் போன்ற கொன்றை என்றும், திங்கள் போன்ற முகம் என்றும் உவமை கூறுவார் கூற இயலாது. இறைவனே எங்கும் நிறைந்திருக்கிறான் என்ற நீ கூறிமிடத்து உயிர் என்ற தனித்த பொருள் இல்லை என்று வாதிடுகிறார். அப்படியாயின் உடலில் பொருந்தியிருக்கும் இறைவனுக்கும் மரம் செடி கொடிகளில் பொருந்தியிருக்கும் இறைவனுக்கும் வேறுபாடு காணப்படுவானேன்? அந்த வேறுபாடு ஐம்பூதங்களின் சேர்க்கையில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளினால் விளைந்தது என்று நீ கூறுவாயானால் அந்த ஏற்றத் தாழ்வு எதனால் வந்தது என்பதற்கு நீ விடை கூற வேண்டும். அது வினையினால் வந்தது என்று நீ கூறினால் அந்த வினையை இயற்றியவர் யார்? இறைவன் வினையின் நீங்கி விளங்குபவன் ஆதலால் சடப் பொருள் ஆதலால் அதனால் வினையை இயற்றலும் வினைப்பயனை நுகர்தலும் இயலா. இவ்வாறு நீ வாதிடுவது பித்தர் கூற்றுப் போன்றது. கடவுளே உடலோடு பொருந்தி நுகர்கிறான் என்று நீ கூறினால் இறைவன் ஐந்தவத்தைப் படுவான். இன்ப துன்பம் உறுவான். கருவிகளோடு கூடியும் நீங்கியும் நிற்பான் எனப்பட்டு இறைவனுடைய முழு முதல் தன்மைக்கு இழுக்கு ஏற்படும், மேலும் இறைவனால் அருளப் பெற்ற அருள் நூல்கள் பல, உலகத்தில் நிலவுவதைக் காண்கிறோம். இறைவன் முற்றறிவினன். பாசங்கள் அறிவற்ற சடப் பொருள். ஆதலால் அருள் நூல்கள் எவர் பொருட்டு அருளிச் செய்யப்பட்டன என்பதை நீ விளக்கியாக வேண்டும், இந்த அருள் நூல்களால் பயன் கொள்வது உயிரே ஆகும். உலகத்தில் எண்ணற்ற பொருள்கள் உள்ளன. ஞாயிறும் உள்ளது. இந்த இரண்டிலும் வேறுபட்டதாகிய கண் என்ற மூன்றாவது பொருள் இல்லையென்றால் காண்டல் தொழில் இல்லையாகும். பாசத் தொகுதியும் பதிப் பொருளும் தவிரப் பசு என்ற ஒன்று உண்டு என்று அறிவாயாக. இது என்னும் சுட்டறிவைத் தன் மயமாகும்படி செய்து பிரிவின்றி நிற்கும் மாயையின் இயல்பினை உள்ளவாறு அறியாக.

பொன்னும் பொன்னால் ஆகிய அணிகலன்களும் பொருள் தன்மையால் ஒன்றேயாவது போல, இறைவனுடைய அருவம் உருவம் அருஉருவமாகிய மூன்று திருஉரு நிலையும் ஈசனே என்ற அருளாளர்கள் சொல்வார்களே யல்லாமல் உலகம் அருவ நிலையில் சிவமாகியும் உருவ நிலையில் சத்தி ஆகியும் திகழும் என்று நீ கொள்வாயானால் அவ்விரண்டு பகுதிகளும் மாயையே என நீ தெளிந்து கொள்ளவில்லை என்பதாகும்.

செய்யத் தக்கது இதுவென்றும், செய்யத் தகாதது இதுவென்றும் பாகுபடுத்தத் தேவையில்லை என்று நீ கொள்வது உலகாயதன் கருத்தோடு ஒத்ததே. கள்ளுண்ணல், கொலை செய்தல், சினம், காமம், களவு போன்றவை தீயன. ஆதலின் அவற்றை விட்டு விடுக என்று கூறாதார் யார் உளர்? சோம பானம் அருந்துதல், சுரா பானம் அருந்துதல் என்பவற்றை எந்த அற நூல் உடன்பட்டது? உயர்ந்த குலத்துப் பிறந்தவன் ஒருவன் தாழ்ந்த குலத்தைச் சார்ந்த ஒருத்தியோடு கூடுவது முறையாகுமா எனக் கேட்பின் அவை எல்லாம் தாமாகப் புனைந்து கொண்ட வரையறைகளே என நீ கூறக்கூடும். சாதிப் பிரிவுகளால் உள்ள முறைமை தவறினால் இயற்கை அரண்களாக வேறுபாடு உள்ளனவே? காளை எருமையை விரும்புவதில்லை. ஆனால் பசுவையே விரும்பும் ஞானிகளுக்கு இத்தகைய வரைமுறைகள் கிடையா என நீ வாதிடல் கூடும். அவர்கள் ஞானியர் எனவே முறை பிறழ மாட்டார் என்பதே கருத்து அல்லாமல் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது கருத்தன்று.

கண்ணின் வடிவமும் அதில் படுகின்ற கதிரவனின் ஒளியும் அணுகுதற்கு அரிய சிவசத்தியினுடைய நாடகம் என்று நீ கூறினாய். அந்த நாடகம் நடிப்பதற்கான காரணத்தையும் அதற்கான பயனையும் இன்னது என நீ கூறுதல் வேண்டும். காரணமும் பயனும் இல்லாத விடத்து நீ கூறுவது உலக இயற்கைக்கு மாறுபட்டதே. அதனால் உன் கருத்துப் பிழைபடும்.

உலகு ஏழ் என திசை பத்து எனத் தான் ஒருத்தனே பல ஆகி என்றும், ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப் பிற அனைத்தும் நீயே ஆனாய் என்றும், திருவே என் செல்வமே என்றும் வருகின்ற அருளாளர்கள் வாக்குகளுக்கு முறையான பொருளை நுணுகி உணர்ந்து கொள்ளுதல் வேண்டும் தவறாகப் பொருள் கொள்ளக் கூடாது. குடம், பானை, கலசம் முதலிய பாத்திரங்களாகக் குயவனே மாறினாள் எனில் பொருந்துமா? இறைவனே எல்லாப் பொருளும் ஆயினன் என்று கூறும் போது இறைவனே எல்லாப் பொருளையும் ஆக்கினான் என்பது தான் கருத்து. ஆனாய் என்ற சொல்லே பொருள்கள் வேறு என்பதும் இறைவன் அவற்றோடு கலந்து நின்ற தன்மையையும் குறிக்குமேயன்றிப் பொருட்களே இறைவன் என்று குறிப்பனவல்ல.

தாமே தாமாகச் செய்யுமவன் என்னும் திருஞான சம்பந்தர்திருப்பாடலைப் பிழையற உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். தாமே என்பதிலே உள்ள ஏகாரம் ஆழ்ந்த பொருளுடையது. இந்த ஓர் எழுத்து இறைவனைச் சார்ந்தும் உயிர்கள் அழிந்தில என்பதனையும், சிவபரம் பொருளே ஆகிலர் என்பதனையும், சிவனை விட்டு நீங்கிலர் என்பதனையும் அச்சிவனை விட்டுத் தமக்கெனச் செயல் இலர் என்பதனையும் உணர்த்துவதாகும். இதே கருத்து தாமே சிவமாய் நண்ணினம் என்று இந்நூலிலும் நாம் ஒழிந்து சிவமானவா பாடி என்ற திருவாசகத்துக்கும் பொருந்தும் என்பதை உணரவேண்டும்.

காயகிப் பழமாகி என்ற அப்பர் திருத் தாண்டகத்தில் வருகின்ற பகுதியில் பொருள்கொள்ளப் போதும் இவ்வாறே நுணுகிப் பொருள் கொள்ளவேண்டும் காயும் பழமும் சுவையும் நுகர்வும் நுகர்வானும் சிவபெருமானின் அருளாலேயே உள்ளன என்பது இப்பாடலின் கருத்தாகும். இவ்வாறே அறிவானும் தானே என்னும் பாடல் எல்லா உலகமும் இறைவனின் திருமேனியே என்பதை உணர்த்தும் தாய் தலைப்பட்டு என்ற பாடலுக்கும் ஏதமற நான் கெட்டேன் என்று வரும் பாடலுக்கும் இவ்வாறே அவற்றின் உள்ளுறை அறிந்து பொருள் கொள்ளவேண்டும்.

தருகின்ற பொருளும், தருவோனும், பெறுவோனும் ஆகிய மூன்றும் சிவபெருமானே என்றால் இந்தச் செயல்களினாலே என்ன மகிழ்ச்சி அல்லது பயன் உண்டாகும்? இம் மூன்றும் ஒன்றே என்று பேசுவது இனிமையாக இருக்கலாம். ஆனால் பொருந்துவதன்று. மூன்றும் ஒன்றேயாயின் நுகரும் ஆசை உள்ளவனுக்கு நுகர விரும்பும் பொருள் தடையின்றிக் கிடைத்தல் வேண்டும். அவ்வாறு கிடைப்பதை நாம் உலகத்தில் கண்டதில்லை. சொர்க்க நரகங்கள் என்று பேசப்படுவன பயனற்ற பேச்சாகும். பலரை நோய்கள் வருத்துவதும் காணுகிறோம். இறைவன் நோயால் வருந்துகிறான் என்பது பொருத்தமுடையதாகுமா? எனவே எல்லாம் ஒன்று என்பது பொருந்தாது.

சத்தியும் சிவமும் தாமே வினைகளைச் செய்து வினையின் பயன்களை நுகரும் என்று நீ கூறும் இந்த உணர்வு யாருக்கு எழுகிறது? சத்திக்கும் சிவத்துக்குமே எழுகிறது என்று கொண்டால் அவை இவற்றை அறியாமலிருந்து அதன் பின்னர் உணர்ந்தன என்ப்பட்டு வழுவாகும். சத்திக்கும் சிவத்துக்கும் இத்தன்மைகள் பொருந்தா.

நானாகிய உயிரும், அவன் எனப்படுகின்ற இறைவனும், என்னைப் பிணித்துள்ள குற்றங்களும் இக் குற்றங்களிலிருந்து நீங்கி அவனை அடைந்து பெறுகின்ற நலமும், உயிர் சிவத்தோடு இரண்டறக் கலத்தலும், நீ கூறும் கொள்கையில் இல்லை. இரண்டறக் கலத்தல் என்னும் பரமுத்தி, பதி பசு பாசம் என்ற முப்பொருள் உண்மை கொண்டவர்களுக்கே பொருந்தும்.

ஒவ்வொருவரும் தாம் விரும்பிய வழியிலே ஒழுகி வீடு பேறு அடையலாம் என்று நீ கூறுகிறாய். இக்கருத்தை எந்த அருள் நூலும் கூறவில்லை. அது மட்டிலுமன்று விதித்தன செய்தும் விலக்கியன ஒழித்தும் ஒழுகாமல் வீடு பேறு கிட்டும் என்பது வீடு பேற்றை அரியது என்று கருதாமல் எளியது என்று தாழ்த்தும். மனம் போன போக்கில் வாழ்வதனால் வீடு பேறு அடையலாம் என்பது. உலகப் பொருள்களை நிலைத்தன என்று கருதிக் கொடுஞ் செயல் புரிந்து வாழுகிற உலகாயதன் செயலும் வீடு பேற்றுக்கு வழி என்று கொள்ளப்படும்.

சுவர் இல்லாமல் சித்திரம் எழுதுதல் இயலாது என்பது யாவரும் அறிந்ததே உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகியவை உயிரின் வினை நீக்கத்துக்காக இறைவனால் அருளப்படுகின்றன என்று எல்லா நூல்களும் முழங்குகின்றன. அப்படியிருந்தும் நீயோ கருவிகள் அற்ற நிலையில் உயிர்களுக்கு இறைவன் அருளை வழங்குவான் என்று கூறுகிறாய். உன் பொருத்தமற்ற வாதம் எத்தகையது எனில், அருள் நிறைந்த அறையிலே குருடன் ஒருவன் இருந்தான். அவனைக் காணச் சென்ற பார்வையுடையவன் ஒருவன் தன் கையிலே ஒரு விளக்கையும் ஏந்திச் சென்றான். எதற்காக இந்த விளக்கு என்று கேட்கப்பட்ட பொழுது நான் உம்மைப் பார்க்கிறேன். விழியற்ற நீர் என்னைப் பார்ப்பதற்காக இவ்விளக்கை எடுத்து வந்தேன் என்று கூறியதற்கு ஒப்பாகும். இறைவன் இத்தகைய செயலைச் செய்வதற்கு அறிவற்றவன் அல்லன்.

அருளாளர்கள் நம் கருவி கரணங்களால் இவ்வுலகத்துப் பொருள்களை நுகர்ந்து கொண்டிருப்பதை விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பரமே பார்த்திருப்பர். பதார்த்தங்கள் பாரார். நீயோ கருவி கரணங்களால் வரும் அறிவெல்லாம் சிவமேயாகும் என்று கூறுகின்றாய். பொறி புலன்கள் எதனையும் அறியா என்றும் அறிவது பிரமம் ஒன்றே என்றும் கூறும் மாயாவாதிக்குக் கூட உன் போல் இடர்ப்பாடு இல்லை.

மாயாவாதிகள் தத்துவங்கள் பதினான்கே உள்ளன என்பர். நீயோ அவரினும் அதிகமான தத்துவங்களை ஏற்றுக் கொண்டு அவை இருபத்து இரண்டு என்பாய். மாயா வாதிகள் அவத்தை நிலைகள் மூன்று என்பர். நீ ஐந்தவத்தை உள என ஏற்றுக் கொள்ளுகிறாய். மும்மலங்களும் இறைவனும் உயிரும் உளவென ஒத்துக் கொள்கிறாய். அவற்றை எல்லாம் மறந்து யாவும் ஒன்றே ஆகும் என்று இப்பொழுது பேசுவது தாயும் மனைவியும் தமக்கையும் ஏவற்பெண்டிரும் மகளிரே ஆதலால் அவர் அனைவரையும் ஒரு தன்மையாகப் பார்க்கும், காமுகம் தன்மையிலும் மிகவும் கொடியது.

நிற்க, ஒப்பற்ற தலைவனாகிய இறைவனது நிலையையும், அவனது திருவருளாகிய சத்தியின் நிலையையும், உயிரின் நிலையையும் உயிரைக் கட்டி இருக்கிற விரிந்த பாசத்தின் நிலையையும் இவை ஒன்றையும் நினையாமல் நீ சொல்லுகிற துரியாதீதத்தில் அடையத் தக்க சிவகதியை ஆராய்ந்தால் புலன் வழி ஒழுகுவோரினும் எட்டு மடங்கு அதிகமாகக் கேடு தரும் வழியே உன் வழி. எனவே உன் குறைபாடுகள் நீங்க உனக்கு உண்மை நெறியைக் கூறுவேன் கேட்பாயாக.

குலாலன் குயவன். அத்தன் தலைவன். இறைவன் அவசித்தாந்தம்பிழைபட்ட கருத்து. சீனர் சாவகர்இந்த இடத்தில் பிற நாட்டினரை உணர்த்தாமல் பிற சமயத்தவரை உணர்த்திற்று. திருட்டாந்தம் எடுத்துக் காட்டு. தாட்டாந்திகம்எடுத்துக்காட்டால் பெறப்படுவது. மேதிஎருமை. சார்வம்யாவும்.குட்டியம்சுவர் கொச்சையன்அறிவற்றவன். தவ்வையர்தமக்கையர்.

No comments:

Post a Comment