Friday, 18 August 2017

செந்தில்வேலனின் தாய் வீடு!


ரு பெண்ணுக்குத் தாய் வீடு, புகுந்த வீடு என்று இரண்டு வீடுகள் உண்டு என்பதை நாமறிவோம். அதேபோல், செந்தில்பதி வாழ் அழகன் முருகப் பெருமானுக்கும் புகுந்த வீடும் தாய் வீடும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்! செந்திலாண்டவனுக்குப் புகுந்த வீடுதான் திருச்செந்தூர். அவனுடைய தாய் வீடு திருநெல்வேலி குறுக்குத்துறையில் அமைந்திருக்கும் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்தான். 
குறுக்குத்துறையைச் செந்திலாண்டவனின் தாய் வீடு என்று அழைப்பதன் பின்னணியில் அமைந்திருக்கும் வரலாற்றுச் செய்தியைப் பார்ப்போமா...

குறுக்குத்துறையில் தாமிரபரணிக் கரையை ஒட்டி ஒரு முருகன் கோயிலும், கரைக்கு மேலாக ஒரு முருகன் கோயிலும் அமைந்திருக் கின்றன. கரைக்கு மேலாக உள்ள கோயில், மேலக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. குறுக்குத்துறையில் உள்ள பாறைப்பகுதி `திருவுருவாமலை' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள கற்கள், சிலைகள் செய்வதற்கு உகந்தவை என்பதால், திருச்செந்தூரில் உள்ள செந்திலாண்டவரின் மூல விக்கிரஹம் இங்குதான் வடிக்கப்பட்டது. அப்போது ஒரே மாதிரியாக இரண்டு சிலைகளை வடித்தார் சிற்பி. அந்தச் சிலைகளுள் ஒன்று திருச்செந்தூரிலும் மற்றொன்று குறுக்குத்துறை மேலக்கோயிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. குறுக்குத்துறையில் உள்ள பாறையில் முருகன் சிலை வடிக்கப்பட்டு, திருச்செந்தூர் சென்றதால் இந்தக் கோயிலை செந்திலாண்டவரின் தாய் வீடு என்றழைக்கிறார்கள். 
இந்த இரண்டு சிலைகளைத் தவிர, வள்ளி - தெய்வானையுடன் கூடிய ஒரு சிலையையும் அந்தச் சிற்பி ஒரு பாறையில் வடித்தார். என்ன காரணத்தினாலோ அந்தச் சிலைகளை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இந்தச் சிலை வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தபடியும் இருந்தது. திருமலை நாயக்கரின் பிரதிநிதியாகத் திருநெல்வேலியில் இருந்த வடமலையப்பப் பிள்ளை என்ற செல்வந்தரின் தாய், ஒருநாள் குறுக்குத்துறைக்கு வந்து நீராடியபோது, முருகனின் சிலையைப் பார்த்தார். அந்தச் சிலை சிதிலம் அடையாமல் இருக்க, மேலே ஒரு கூரை அமைத்ததுடன், தினமும் குறுக்குத்துறைக்கு வந்து தாமிரபரணியில் நீராடி, முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். அதைக் கண்டு மற்றவர்களும் வழிபடத் தொடங்கினர். 

தன்னை வந்து வழிபட்ட பக்தர்களின் வாழ்வில் முருகப்பெருமான் பல அற்புதங்களை நிகழ்த்தத் தொடங்கினார். முருகப்பெருமானின் அருள்திறம்கண்டு, திருவாவடுதுறை ஆதீனத்தார் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன், ஆகம விதிப்படி கருவறை, முன்மண்டபம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றை நிர்மாணித்து, கோயிலில் நித்திய வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்தார்கள். பெருமழை பெய்யும் காலங்களில் தாமிரபரணியில் பெருக்கெடுக்கும் வெள்ளம் கோயிலையே மூழ்கடித்துவிடும். அப்போது கோயிலில் உள்ள உற்ஸவச் சிலைகளை மேலக்கோயிலுக்கு எடுத்துச் சென்று விடுவார்கள். 
திருச்செந்தூருக்குக்கும் குறுக்குத்துறைக்கும் நிறையவே தொடர்புள்ளன என்பதை மற்றொரு சம்பவத்தாலும் தெரிந்துகொள்ளலாம். ஒருமுறை திருச்செந்தூர் உற்ஸவ மூர்த்தியை டச்சுக்காரர்கள் திருடிக்கொண்டு சென்று விட்டார்கள். உடனே வடமலையப்ப பிள்ளை புதிதாக ஒரு உற்ஸவர் விக்கிரஹம் செய்தார். அந்தச் சிலை செய்து முடிப்பதற்குள் திருடிச்சென்ற சிலை மீட்கப்படவே, புதிதாகச் செய்த உற்ஸவ விக்கிரஹம் குறுக்குத்துறை கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சிறப்பும் சொல்லப்படுகிறது. செந்திலாண்டவரையும் பழநியாண்டவரையும் ஒரே நாளில் தரிசிப்பது கடினம். ஆனால், குறுக்குத் துறையில் உள்ள முருகப்பெருமானின் கோயிலையும் மேலக்கோயிலையும் தரிசித்தால், ஒரே நாளில் செந்திலாண்டவரையும் பழநி யாண்டவரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.   
ஆற்றுக்கு அருகிலுள்ள இந்தக் கோயில் பிராகாரத்தில் விநாயகர், தட்சிணா மூர்த்தி போன்ற பரிவார தெய்வங்களின் சந்நிதிகளும் அமைந்திருக்கின்றன. முருகப் பெருமானைத் தரிசித்துவிட்டு, குடையப்பட்ட உள்சுற்று வழியாக வந்தால், பஞ்சலிங்கங்களைத் தேவி யருடன் தரிசிக்கலாம். திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு வேண்டிக் கொண்டவர்கள், திருச்செந்தூருக்குப் போகமுடியாத நிலை ஏற்பட்டால், குறுக்குத்துறை முருகன் கோயிலில் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றலாம் என்று சொல்லப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானுக்குப் பாலாபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை அணிவித்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கி நல்ல வரன் அமைவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். அதேபோல் குழந்தைக்கு தோஷம் இருப்பதாக நினைப்பவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து குழந்தையை முருகப்பெருமானுக்குக் காணிக்கையாக்கிவிட்டு, பிறகு தவிட்டையோ அல்லது கருப்பட்டியையோ விலையாகக் கொடுத்து, குழந்தையை வாங்கிச் செல்வதும் நடைமுறையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். தைப்பூசமும் மாசி அமாவாசையும்  இங்கே  விமர் சையாகக் கொண்டாடப் பட்டுவருகின்றன.
கோயில் ராஜகோபுரத்தில் இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட காந்தி, வ.உ.சி. போன்ற தலைவர்களின் உருவங்களும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு என்றால், அந்தச் சிலைகள் சிதிலம் அடைந்திருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

சூரனை ஆட்கொண்ட செந்தில் வேலவனின் தாய் வீடு என்று சொல்லப்படும் குறுக்குத்துறை முருகனைத் தரிசித்து வழிபட்டால், அவர் நமக்கு குன்றாத செல்வமும், நிறைவான ஆரோக்கியமும் அருள்வார் என்பது உறுதி. 

No comments:

Post a Comment