முதற் நூற்பா
21. ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்று உரைத்திடும் உலகம் எல்லாம்
வருமுறை வந்து நின்று போவதும் ஆதலாலே,
தருபவன் ஒருவன் வேண்டும்; தான் முதல் ஈறும் ஆகி,
மருவிடும் - அநாதி முத்த சித்து உரு மன்னி நின்றே.
ஒருவன் என்றும் ஒருத்தி என்றும் ஒன்று என்றும் கூறப்படுகின்ற இவ்வுலகத்துப் பொருள்கள் யாவும் முறையே தோன்றி முறையே நிலைத்து முறையே அழிகின்றன. ஆதலால் இவ்வுலகம் முழுவதையும் தோற்றுவிக்கின்ற காக்கின்ற இறுதியில் ஒடுங்குகின்ற இறைவன் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படுகிறான். அவன் தோற்றமும் ஈறும் இல்லாதவன். உலகத் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் மீளத் தோற்றுவிப்பதற்கும் அவனே முதல்வன் ஆவான். அத்தகையவன் அநாதி முத்த சித்துருவாக என்றும் நிலைபெற்றவன்.
சிவஞான போதம் முதல்நூற்பாவில் அவன் அவள் அது எனும் அவை என்று ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார் குறித்தார். ஆயினும் அந்நூற்பாவின் முதல் அதிகரணத்தின் மேற்கோளாக ஈண்டு உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் என்று விரித்துரைத்தார். அதனை அடியொற்றியே இந் நூலாசிரியரும் ஒருவனோடு ஒருத்தி என்று இப்பாடலைத் தொடங்குகிறார்.
வருமுறை வந்து நின்று போவதும் என்பதனை முறைப்படி வந்து, முறைப்படி நின்று, முறைப்படி போவது என்று கூட்டிப் பொருள் காண வேண்டும். எனவே உலகம் தோன்றுதலும், நிலை பெறுதலும், ஒடுங்குதலும் முறையாக நிகழ்கின்றன என்பது பெறப்படும்.
இறைவனை அநாதி முத்த சித்து உரு என்ற சொற்களால் ஆசிரியர் குறிப்பிட்டார். அநாதி என்றதனால் கால எல்லைக்கு அப்பாற் பட்டவன் என்பது உணர்த்தப்பட்டது. அநாதி முத்தன் என்றதனால் அவன் தோற்றமில் காலந்தொட்டே மலப் பிணிப்பு இல்லாதவன் என்பதும் உணர்த்தப்பட்டது. சித்து உரு என்ற சொற்கள் அவன் அறிவே வடிவானவன் என்பதை உணர்த்தின. தருபவன் ஒருவன் வேண்டும் என்றதனால் உலகம் அனைத்திற்கும் ஒரு வினைமுதல் இன்றியமையாது வேண்டப்படும் என்பதைக் குறிப்பிட்டார். மருவிடும் என்பதனை மீளவும் மருவுவிக்கும் அதாவது தோன்றச் செய்யும் என்று பொருள் காணவேண்டும்.
இவ்வாறு முதல் நூலாகிய சிவஞான போதத்தில் முதல் நூற்பாக் கருத்தை இப்பாடலில் தொகுத்துக் கூறிய ஆசிரியர் இதனை அடுத்து வரும் பாடல்களில் அந்நூற்பாவின் மூன்று கூறுகளையும் முறையே விரித்துக் கூறுகிறார்.
22. உதிப்பதும்ஈறும் உண்டென்று உரைப்பது இங்கு என்னை ? முன்னோர்
மதித்துஉலகு அநாதி யாக மன்னியது என்பர்- என்னின்,
இதற்குயான் அனுமா னாதி எடேன்; இப்பூ தாதி எல்லாம்
விதிப்படி தோற்றி மாயக் காணலான், மேதி னிக்கே.
இந்தஉலகம் தோற்றமும் அழிவும் உடையது என்று எப்படிக் கூற முடியும்? உலகம் தோன்றியதைக் கண்டார் இல்லை. அது போலவே உலகம் முற்றிலும் அழிந்ததையும் கண்டார் இல்லை. காட்சி அளவைக்குப் புலப்படாதவை எல்லாம் ஏற்றுக் கொள்ளத் தக்கன அல்ல என்பர் முன்னோர். ஆதலால் இவ்வுலகம் என்றும் நிலைபெற்று விளங்குவது என்றும் கூறுவர் என்று உலகாயதர்கள் மறுத்தல் கூடும். இக்கொள்கையை மறுத்தற்குக் கருதல் முதலிய அளவைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. உலகத்தில் உள்ள பொருள்கள் யாவும் பூதங்களின் கூட்டால் விளைந்தன. அவற்றுள் ஒவ்வொன்றும் இறைவனின் ஆணையின்படி தோன்றியும் நின்றும் அழிந்தும் வருதலைக் காட்சி அளவையினாலேயே கண்டு உணர முடியும். எனவே இதன் தொகை யாகிய உலகமும் தோன்றி நின்று அழியும் தன்மை உடையது என்று காட்சி அளவையினாலே பெறப்படும்;
23. இயல்புகாண் தோற்றி மாய்கை என்றிடில், இயல்பி னுக்குச்
செயலது இன்று; இயல்பு செய்தி செய்தியேல், இயல்பது இன்றாம்,
இயல்பதாம், பூதம் தானே; இயற்றிடும் செய்தி என்னில்,
செயல்செய்வான் ஒருவன் வேண்டும்; செயல்படும், அசேத னத்தால்.
உலகாயதர் உலகைத் தோற்றுவிப்பதற்கு ஓர் இறைவன் வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தோன்றுவதும் அழிவதும் உலகத்தின் இயல்பு எனவே இவற்றை நடத்துவதற்கு இறைவன் ஒருவன் வேண்டுவதில்லை என்பர். இயல்பு என்பது தன்மை. தோன்றுவது ஒரு தன்மை. அழிவது என்பது மற்றொரு தன்மை. இந்த இரு வேறுபட்ட செயல்கள் ஒரு பொருளுக்கு இயல்பு என்று கூற இயலாது. அவ்வாறு அன்று இவ்வாறு வேறுபட்ட செயல்களே உலகத்துக்கு இயல்பு என்று அவர்கள் மறுத்தல் கூடும். அப்படியானால் உலகத்துக்கு இயல்பு என்பதே ஒன்று இல்லாமல் இரு வேறுபட்ட செயல்களே உள்ள என்று முடியம். அதனாலேயே அவர் கொள்கை மறுக்கப்பட்டது. இதற்கு மாறாக இவ்வுலகம் நான்கு பூதங்களின் கூட்டம். அவையே கூடியும் பிரிந்தும் இவ்வுலகத்தைத் தோற்றுவித்தும் அழிவித்தும் வருகின்றன என்று ஒரு சாரார் கூறக் கூடும். நாற்பூதங்களும் தோன்றி அழிவனவாகவும் அறிவற்றவனாகவும் உள்ளதால் அவற்றைச் செயல்படுத்துவதற்கு ஓர் இறைவன் அவற்றினும் வேறாக வேண்டும். அவனால் அறிவற்ற பொருள்கள் செயல்படுகின்றன என்பதும் உணரப்படும்.
24. நிலம், புனல், அனல், கால் காண நிறுத்திடும், அழிக்கும் ஆக்கும்,
பலம்தரும்; ஒருவன் இங்குப் பண்ணிட வேண்டா என்னின்-
இலங்கிய தோற்றம் நிற்றல் ஈறு, இவைஇசைத லாலே,
நலம் கிளர், தோற்றம் நாசம் தனக்குஇலா, நாதன் வேண்டும்.
உலகாயதர்களின் கருத்துப்படி நிலம், நீர், நெருப்பு, காற்று என்று நான்கு பூதங்களே உள்ளன. அவையே தம்முட் கூடி உலகமாகத் தோன்றி நின்று அழிகின்றன. இவற்றைக் கண் கூடாகக் காண முடிகிறது. இதற்கெனத் தனி ஒரு இறைவன் வேண்டுவதில்லை என்பர் அவர். இந்த நான்கு பூதங்களும் தனித்தனியே தோன்றி நின்று அழிவ தாகிய முத்தொழில்களுக்கும் உட்படுகின்றன. ஆதலால் இவை நான்கும் கூடிமற்றைப் பொருள்களைச் செயல்படுத்தும் என்பது பொருந்தாது. இவற்றைச் செயல்படுத்தும் தலைவன், தனக்கு ஒரு தோற்றமும் அழிவும் இல்லாத மேம்பாட்டினை உடையனவாக இருத்தல் வேண்டும் என்பது பெறப்படும்.
25. சார்பினில் தோன்றும் எல்லாம்; தருபவன் இல்லை என்னில்
தேரின்; இல் லதற்கோ தோற்றம், உள்ளதற் கோ? நீ செப்பாய்
ஓரின், இல் லதுவும் தோன்றாது; உள்ளதேல் உதிக்க வேண்டா;
சோர்விலாது இரண்டும் இன்றி நிற்பது தோன்றும் அன்றே.
எல்லாப் பொருள்களும் கணந்தோறும் தோன்றிக் கணந்தோறும் அழியும். ஆனாலும் அவை நிலைத்து இருப்பன போல நமக்குத் தோன்றுகின்றன. எனவே முந்திய கணத்தினில் தோன்றிய பொருள் அடுத்த கணத்தில் தோன்றிய பொருளுக்குச் சார்பாக விளங்குகிறது என்று சிலர் வாதிடுவர். ஆகையினால் இந்த உலகத்தைத் தோற்று வித்தவன் ஒருவன் இல்லை என்று சிலர் வாதிடுவர். அவ்வாறாயின் இல்லாத பொருள் தோன்றுகின்றதா, உள்ள பொருள் தோன்றுகின்றதா என்று கூறுக. ஆராய்ந்து பார்க்கின் இல்லாத பொருள் தோன்றாது உள்ள பொருள் எனில் அது தோன்ற வேண்டுவதில்லை. இவ்விரண்டும் அன்றி உள்ள பொருளாய் கண்ணிற்குப் புலப்படாது இருந்த ஒன்றே காரியப்பட்டுத் தோன்றுவதாகும்.
இந்தப் பாடல் உட்பட மூன்று பாடல்கள் மாத்தியமிகர் சமணர் சவுத்திராந்திகர் ஆகிய மூவரின் கொள்கையை மறுப்பதாக அமைந்தன. சவுத்திராந்திகர் பொருள்கள் கணம் தோறும் தோன்றிக் கணம் தோறும் அழியும் இயல்பினை உடையன என்ற கொள்கையை ஏற்பவர்கள். இது கணபங்க வாதம் என்று கூறப்படும். பொருள்கள் தோன்றி அழியும் போது முந்தியகணத்தில் தோன்றியது பிந்திய கணத்தில் தோன்றுவதற்குச் சார்பாக இருக்கும் என்பதும் இவர்கள் கொள்கை. இல்லாத பொருளே தோன்றும் என்பதும் இவர்கள் கருத்து, இக்கருத்தின் அடிப்படையில் உலகத்தைத் தோற்றுவிக்கும் இறைவன் ஒருவன் வேண்டா என்பது இவர்கள் வாதமாகும்.
உள்ள பொருளே தோன்றும் இல்லாத பொருள் தோன்றாது என்ற கொள்கை சற்காரிய வாதம் எனப்படும். இதன்படி காரணத்தில் நுட்பமாக இருந்த ஒன்று காரியத்தில் வெளிப்பட்டுத் தோன்றுவதே தோற்றம் ஆகும். சவுத்திராந்திகர்கள் சற்காரிய வாதத்தை ஏற்றுக் கொள்வதில்லை. சைவ சித்தாந்தம் சற்காரிய வாதத்தை ஏற்றுக் கொள்ளும்.
26. உள்ளதும் இலதும் இன்றி நின்றது ஒன்று உளதேல், உண்டாம்;
இல்லதேல் இல்லை ஆகும்; தோற்றமும் இசையாதாகும்;
உள்ளகாரணத்தில் உண்டாம் காரியம் உதிக்கும்; மண்ணில்
இல்லதாம் படம் கடாதி எழில்தரும் - இயற்றுவானால்;
உள்ளதும் இன்றி இல்லாததும் இன்றி இன்னது என்று வரையறுத்துக் கூறமுடியாத ஒரு பொருளே தோன்றும் என்று பவுத்தருள் மற்றொரு சாரார் கூறுவர். அப்படி ஒரு பொருள் உலகத்தில் உண்டோ? உண்டு எனில் அதனை உள் பொருளாகவே கொள்ளுதல் வேண்டும். இல்லை என்று விடையிறுத்தால் அது இல்லாமலே ஒழியும் என்பதன்றி அதற்குத் தோற்றம் உண்டு என்று கூறுதல் இயலாதாகும். ஒழிபு அளவையின் அடிப்படையில் இதனைக் கருதிப் பார்த்தால் உள்ளதாகிய ஒரு பொருளே காரணத்தில் இருந்து காரியப்பட்டு ஓர் இறைவனால் தோற்றுவிக்கப்படும் என்பது புலனாகும். மண்ணில் இருந்து ஆடை தோன்றுவது இல்லை. ஆனால் மண்ணில் இருந்து குடம், பானை போன்ற பொருள்கள் வினை முதல்வனாகிய குயவனால் அழகுறத் தோன்றுவனவாகும். சற்காரிய வாதத்தை வலியுறுத்தி, உள்ள பொருளில் இருந்தே உளதாகிய மற்றொரு பொருள் வினைமுதலாகிய ஒருவனால் இயற்றப்படும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டது. பட்டம்- ஆடை. மண்ணிலிருந்து ஆடை தோன்றுவதில்லை. மண்ணிலிருந்து குடம் முதலிய பொருள்கள் இயற்றுவோனால் எழில் பெறத் தோன்றும் என்று பொருள் காண்க.
27. ஒரு பொருள், ஒருவன் இன்றி உளது இலது ஆகும் ஏன்னில்,
தருபொருள் உண்டேல் இன்றாம் தன்மை இன்று; இன்றேல் உண்டாய்
வருதல் இன்று; இலது காரியம், முதல் உளதாகும், என்னில்,
கருதுகா ரியமும் உண்டாய், தோற்றமும் கருத்தா வால்ஆம்.
பொருள் என்பது அதனைத் தருபவன் ஒருவன் இல்லாமல் தானே தோன்றித் தானே அழியும் எனக் கொண்டால் என்ன என்று சமணர்கள் வினவுவர். ஏனெனில் சமணர் ஒரு பொருளைப் பற்றிக் கூறும்போது அது உள்ளதுமாம் இல்லதுமாம் என்று கூறும் கொள்கை உடையவர். இவ்வாறு இரண்டு தன்மை ஒரு பொருளுக்குக் கூற இயலாது. அது உள்பொருளாயின் அதற்கு இல்லையாம் தன்மை இல்லை. ஒரு பொருள் இல்பொருளாயின் அது உள்ளதாய் தோன்றுதல் இல்லை. அவ்வாறு அன்று ஒரு பொருள் காரணவடிவாய் உண்டு காரிய வடிவாய் இல்லை என்பதுதான் எங்கள் கருத்து என்று அவர்கள் மறுமொழி கூறக்கூடும். காரணப் பொருளிலேயே காரியமும் நுட்பமாய் அடங்கி நிற்கும். பின்னர் அதுவே வினை முதலாகிய கருத்தாவால் பருப்பொருளாய் வெளிப்பட்டுத் தோன்றும். எனவே தருபவன் ஒருவன் வேண்டும் என்பது பெறப்படும்.
28. காயத்தின் அழிவு தோற்றம் கண்டனம்; உலகில் காணாம்;
நீ இத்தை உரைத்த வாறு இங்கு என்? எனின், நிகழ்த்தும் - உண்மை
மாயத்த உலகம் பூநீர் தீவளி வானம் ஆதி
ஆய இத்தான் ஒன்றின் ஒன்று தோன்றி நின்று அழிதலாலே,
உடம்புகள் தோன்றுவதையும், அழிவதையும் நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் உலகம் முழுவதும் தோன்றுவதையும் முழுவதும் அழிவதையும் ஒருவரும் கண்டதில்லை. அப்படி இருக்க உலகம் முழுவதும் ஒருசேரத் தோன்றும் என்றும், ஒரு சேர அழியும் என்றும் எப்படிக் கூறலாகும் என்று சிலர் வினவுவர். இப்படித் தோன்றி அழிவனவாகிய பொருள்களும் உலகமும் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகிய இவை யாவும் கலந்த மயக்கத்தால் தோன்றியனவே. அவை ஒன்றில் ஒன்று தோன்றிச் சில காலம் நின்று அதன் பின்னர் அழிவது தனித்தனிப் பொருளுக்குப் பொருந்துவது போலவே இவ்வுலகம் முழுவதற்கும் பொருந்தும். உடல் முதலியனவே தோன்றி நின்று அழிவன உலகம் முற்றும் தோற்றக் கேடுகளுக்கு உட்படாது என்பது மீமாஞ்சகர்களுடைய கொள்கை. அவர்களை மறுக்கவே ஆசிரியர் இப்பாடலை அருளினார். மாயத்த உலகம் என்பதனால் தோன்றி அழியும் உலகம் என்பதை உணர்த்தினார்.
29. ஓர்இடம் அழியப் பின்னும் ஓர்இடம் நிற்கும்; ஒக்கப்
பாரிடம் அழிவது இன்றாம் என்றிடில் பயில்வித்து எல்லாம்
கார் இடம் அதனில் காட்டும் அங்குரம்; கழியும் வேனில்;
சீர் உடைத்து உலகு காலம் சேர்ந்திடப் பெயர்ந்து செல்லும்.
நிலம், மலை, கடல் என்று பலவகைப்பட்ட பகுப்புடைய இவ் உலகம் ஒரு பகுதியில் அழிவதையும் மற்றொரு பகுதியில் தோன்றுவதையும் கண்டதுண்டு. உலகம் முழுவதும் ஒரு சேர அழிவதில்லை. அப்படி அழிந்தாலும் அது மீண்டும் தோன்றும் என்று கூறுவதற்கு இடமில்லை என்று சிலர் வாதிடுவர். அவ்வாறன்று மழைக் காலத்தில் வித்துக்கள் எல்லாம் முளைவிட்டுப் பயிராக வளர்வதைக் காண்கிறோம். வேனிற்காலம் வந்தபோது அப்பயிர்கள் யாவும் ஒருங்கே வாடி அழிந்து போவதையும் காண்கிறோம். அது போலவே இவ்வுலகமும் கால எல்லைக்கு உட்பட்டு ஒரு சேரத்தோன்றி ஒருங்கே அழியும் என்பதையும் உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஐயம் எழுப்புபவர்கள் மீமாஞ்சகர்கள். அவர்களை இப்பாடலால் ஆசிரியர் மறுத்தார். பாரிடம் - உலகம். காரிடம் - கார் காலம். அங்குரம்- முளை.
30. காலமே கடவுளாகக் கண்டனம். தொழிலுக்கு என்னில்
காலமோ அறிவு இன்றாகும்; ஆயினும்; காரியங்கள்
காலமே தரவே காண்டும், காரணன் விதியினுக்குக்
காலமும் கடவுள் ஏவலால், துணைக் காரணம்காண்.
இவ்வுலகம் உரியகாலத்தில் தோன்றி உரிய காலத்தில் அழிகின்றது. ஆதலால் இவ்வுலகத்துக்குத் தோற்றத்தையும் அழிவையும் தரவல்ல கடவுள் காலமே ஆகும் என்று கொண்டால் என்ன என்று சிலர் வினா எழுப்புவர். அக்கொள்கை பொருந்தாது. ஏனெனில் காலம் என்பதும் அறிவற்ற சடப்பொருள். எனவே அது தானாகச் செயற்படும் ஆற்றல் அற்றது. ஆயினும் முற்றறிவு உடைய இறைவனது ஏவலின் வழியே எல்லாச் செயல்களையும் இயற்றுவதற்குக் காலம் துணைக்காரணமாக அமையும். அது நிமித்த காரணம் ஆகமாட்டாது.
இப்பாடலும் மீமாஞ்சகரை மறுப்பதற்கு எழுந்தது. இவ்வுலகத்தின் தோற்றத்திற்கு முற்றறிவு உடைய இறைவனே நிமித்த காரணன் ஆவான். காலம் என்ற அறிவற்ற பொருள் இறைவனுக்குத் துணைக்காரணம் ஆவதன்றி அதுவே வினைமுதல் ஆவதில்லை.
31. அழிந்தபின் அணுக்கள் தாமே, அகிலமாய் வந்து நின்று
கழிந்திடும், கன்மத்து, என்னில் கன்மமும் அணுவும் கூட
மொழிந்திடும் சடமே ஆகி முடிதலான், முடியா செய்தி;
ஒழிந்திடும், அணுரூபங்கள் உலகு எலாம் ஒடுங்கும் அன்றே.
இப்போது காணப்படுகிற இவ்வுலகம் அழியும்போது பரமாணுக்களாக ஒடுங்கும். உலகம் அழியமே தவிர பரமாணுக்கள் அழிவதில்லை. எனவே இப்பரமாணுக்கள் வினை காரணமாகத் தம்முட் கூடி மீண்டும் உலகமாகத் தோன்றும் என்று சிலர் கொள்ளுவர். இவர்கள் கொள்கையும் பொருத்த மற்றது. ஏனெனில் வினையும் அணுக்களும் அறிவற்றன. எனவே அவை தாமாகச் செயல்பட மாட்டா. மேலும் உலகம் அழியும் காலத்தில் நுண்ணியவாகிய வடிவுடைய அணுக்களும் ஒடுங்கும் என்பதே பொருந்தும். அவ்வணுக்கள் மீண்டும் கூடி உலகமாக வடிவு எடுக்கும் என்பது பொருந்தாது.
தார்க்கிகர், சவுத்திராந்திகர், வைபாடிகர், ஆசீவகர் ஆகியோர் உலகத்தின் தோற்றத்துக்குக் காரணம் பரமாணுக்களே என்ற கொள்கை உடையவர்கள். இப்பாடலில் ஆசிரியர் அவர்கள் கொள்கையை மறுத்தார்.
32. காரண அணுக்கள் கெட்டால் காரிய உலகு இன்று என்னில்,
காரணம் மாயை ஆகக் காரியம் காணலாகும்;
காரணம் மாயை என்னை? காண்பது இங்கு அணுவே? என்னில்,
காரணம் மாயை யேகாண் காரியம் அணுவில் கண்டால்,
உலகத்துக்குக் காரணம் அணுக்களே. எனவே அப்பரமாணுக்கள் அழியுமானால் காரியப் பெருளாகிய இவ்வுலகம் இல்லாமல் போகும் என்பார் சிலர். உலகிற்கு முதற்காரணமாவது பரமாணுக்கள் அல்ல மாயையே ஆகும். எனவே மாயையிலிருந்து உலகம் மீண்டும் காரியப் பட்டுத் தோன்றும் என்பதே சித்தாந்தம். இதனை மறுத்து இவ்வுலகில் பரமாணுக்களே முதற்காரணமாகக் காணப்படுவது அல்லாமல் மாயை அன்று என்று மறுப்பர். அணுக்களும் காரியப் பொருள்களே ஆதலால் அவற்றை உலகத்திற்கு முதற் காரணமாகக் கொள்ளுதல் இயலாது என்பதனை உணர்க. செய்யுளின் இறுதியில் வருகின்ற கண்டால் என்ற சொல் காண்டலால் என்ற சொல்லின் திரிபு ஆகும்.
33.காரியம் என்பது என்னை, காரண அணுவை? என்னில்,
காரியம் அவயவத்தால் கண்டனம், கடாதி போல;
காரியம் உருவம் எல்லாம் அழிதரும் காரணத்தால்;
காரிய உறுப்பு இல்மாயை தரும் எனக் கருதிடாயே.
அணுக்கள் பலசேர்ந்து ஒரு பொருளாக வடிவம் கொள்ளுகின்றன. அவ்வாறு இருக்க உலகிற்கு முதற்காரணம் ஆகிய பரமாணுக்களைக் காரியப் பொருள் என்று எவ்வாறு கூறக் கூடும் என்று சிலர் கேட்பர். பல அணுக்கள் கூடி ஒரு பொருள் ஆகிறது என்று சொல்லும் போதே அணுக்களுக்கு உருவம் உண்டு என்பது புலப்படும். உருவம் உடைய அணுக்கள் உறுப்புக்களும் உடையவனே என்பதும் விளங்கும். ஆதலால் நீங்கள் கூறும் அணுக்களும் குடம் முதலிய பொருள்கள் போல உருவமும் உறுப்புக்களும் உடையனவே. உருவமும் அவயவப் பகுப்புமுடைய எல்லாப் பொருள்களும் அழியும் என்பதே நியதி. ஆதலின் அணுக்களும் அழிவனவே. எனவே உருவம் அற்றதும் அழிவில்லாத நித்தப் பொருளும் ஆகிய மாயையே உலகத்துக்கு முதற் காரணமாகும் என்று கருதி உணர்க.
அணு காரண வாதம் பேசுவோர் பல அணுக்கள் கூடி ஒரு பொருள் தோன்றும் என்பர். இவ்வாறு அவை தம்முட் கூடுவது சையோகம் என்னும் சொல்லால் குறிக்கப்படும். சையோகம் - ஒன்றோடு ஒன்று சேர்தல். இவ்வாறு சேர்வதற்கு வடிவமும் உறுப்புக்களும் தேவை. எனவே அவை அழியும் என்று சொல்லப்பட்டது. இவை இரண்டும் அற்ற மாயை முதற் காரணம் எனப்பட்டது.
34. தோற்றமும் நிலையும் ஈறும் மாயையின் தொழிலது என்றே
சாற்றிடும், உலகம்; வித்துச் சாகாதி அணுக்களாக
ஏற்றதேல், ஈண்டு நிற்கும்; இல்லதேல், இயைவது இன்றாம்;
மாற்றம் நீ மறந்தாய்; இத்தால் மாயையை மதித்திடாயே.
தோற்றமும் இருப்பும் ஒடுக்கமும் ஆகிய முத்தொழில்களுமே மாயையின் செயல்பாடு என்று ஆன்றோர்கள் கூறுவர். மிகச் சிறிய வித்தின் உள்ளே இலை கிளை முதலிய மரத்தின் உறுப்புகள் யாவும் முன்பே நுட்பமாய் அமைந்திருந்தன. அதனால் தான் மரம் வளர்ந்து பெரிதான உடன் அவை பருமைநிலை அடைந்து கண்ணுக்குத் தோன்றுகின்றன. அவ்வாறு இல்லையேல் வித்திலிருந்து பெரியதாகிய மரம் ஒன்று தோன்றாது. இந்த உண்மையே நீ மறந்தனை. மேலோர் வழக்கும் உலக நடப்பும் ஆகிய இவற்றைக் கொண்டு மாயையே உலகத்துக்கு முதற் காரணம் என்பதனை அறிவாயாக.
சாகாதி- கிளை முதலியன.
35. மாயையின், உள்ள வஞ்சம், வருவது போவது ஆகும்;
நீ அது இங்கு இல்லை என்னில், நிகழ்ந்திடும், முயலின் கோடு
போய் உகும் இலைகள் எல்லாம் மரங்களின் புக்குப் போதின்
ஆயிடும், அதுவும்; என்னில், காரணம் கிடக்க ஆமே.
மாயையிலே நுட்பமான வடிவில் இவ்வுலகம் எல்லாம் ஒடுங்கி இருக்கிறது. அதன் பின்னர் இறைவன் திரு உள்ளக் குறிப்பினால் இவ்வுலகம் மாயையிலிருந்து பருவடிவோடு தோன்றும். இவ்வாறு தோன்றிய உலகம் மீண்டும் ஒடுங்கும். ஏனெனில் உள்ள பொருளே தோன்றும். இந்த முறைமை இல்லை எனின் முயலுக்குக் கொம்பு முளைக்கும் என்று கொள்ள நேரிடும். இதனை ஒத்துக் கொள்ளாதவர்கள் அப்படியானால் ஒரு மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள் மீண்டும் அந்த மரத்திலேயே தானாக ஒடுங்கித் தோன்றுதல் வேண்டும் அல்லவா என்று வினா எழுப்புவர். மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள் சருகுகளாகி மண்ணின் சாரமாய்க் கலந்து பின்னும் அம்மரத்தின் இலை தோன்றுவதற்குக் காரணமாகும் என்பது உண்மையே. ஆனால் அப்படித் தோன்றுவது உரிய காலம் முதலியன ஒருங்கு கூடிய போதே ஆகும்.
பாடலின் முதல் அடியில் உள்ள வஞ்சம் என்ற சொல் பிரபஞ்சம் என்பதன் திரிபு. பிரபஞ்சம் பிரபஞ்சமாகி வஞ்சம் என்று தலைக் குறைந்து நின்றது.
முயலுக்கு ஒரு போதும் கொம்பு இல்லை உலகறிந்த உண்மை. உள்ள பொருள் தோன்ற வேண்டியதில்லை. இல்லாத பொருளே தோன்றும் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டால் முயலுக்கும் ஒரு காலத்தில் கொம்பு முளைக்கும் என்று கூறுவதைப் போன்றது அது. எனவே உள்ளதே தோன்றும் இல்லாதது தோன்றாது என்ற சற்காரிய வாதமே ஏற்றுக் கொள்ளத் தக்கது என்று வலியுறுத்துகிறார்.
மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகள் ஒடுங்கித் தாமாகவே மீண்டும் அந்த மரத்தின் இலைகளாகத் தோன்றுமோ என்ற கேள்விக்கு ஆம் என்று விடையளிக்கிறார். உதிர்ந்த சருகுகள் மண்ணில் ஆற்றல் வடிவில் ஒடுங்கி உரிய காலத்தில் இலைகளாகத் தோன்றுதற்குரிய உரமாகிறது என்றார்.
36. கருதுகாரணம் உண்டாகக் காரியம் உள்ள தாகி
வருதலால், அநாதி வையம்; மற்றுஒரு கடவுள் இத்தைத்
தருதலால், ஆதியாகச் சாற்றல் ஆகும்; மாயைக்கு
ஒருவன் ஆர்என் இங்கு என்னில், உள்ளவாறு உரைப்ப, கேள் நீ,
இங்கே ஒரு ஐயம் பிறரால் எழுப்பப்படும். உள்ள பொருளே தோன்றும் என்ற சற்காரிய வாதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் உலகம் தோன்றி நின்று அழியும் என்று கூறலாமா? உலகத்தை என்றும் உள்ள பொருள் என்றல்லவா கொள்ள வேண்டும் என்பது அந்த ஐயம். அதற்கு இப்பாடலில் விடை தருகிறார்.
காரணமாகிய ஒன்று உள் பொருளாக இருக்க அதிலிருந்து தோன்றும் காரியமும் உள் பொருளாகவே இருக்கும் என்பது முன்னோர் விளக்கப் பட்டது. ஆதலால் இவ்வுலகம் உள் பொருளேயாம். எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் இவ்வுலகத்தைத் தோற்றுவித்து ஒடுக்குவதால் நிலை வேறுபாடு பற்றி இவ்வுலகத்தை அழியும் பொருள் என்றும் கூறலாம்.
அழியும் பொருள் என்றும் கூறலாம் என்பதில் உள்ள உம்மை உலகம் நித்தப் பொருள் என்றே துணியப்படும் என்பதை உணர்த்திற்று.
இந்தப் பாடலில் மாயைக்கு ஒருவன் யார் என்று தொடங்குகின்ற பகுதிக்கு உரிய பொருள் இதனை அடுத்த பாடலோடு கூட்டிப் பொருள் உரைக்கப்படும்.
37. புத்திமற் காரியத்தால் பூதாதி புருடன் தானும்,
அத்தனு கரணம் பெற்றால், அறிதலால் அவற்றை மாயை
உய்த்திடும் அதனால் மாயைக்கு உணர்வு ஒன்றும் இல்லை என்றே
வைத்திடும் அதனால்- எல்லாம் வருவிப்பான் ஒருவன் வேண்டும்.
மாயைக்கு ஒருவன் யார் என் இங்கு என்னில் உள்ளவாறு உரைப்பக் கேள் நீ என்ற முன் பாடலின் இறுதிப் பகுதியை இங்கே சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும். மாயையையும் செயல்படுத்துபவனாகிய ஓர் இறைவன் ஏன் என்று கேட்பின் அதற்கு உரிய விடையை உள்ளபடி கூறுவேன் கேட்பாயக. பூதம் முதலிய இவ்வுலகம் அனைத்தும் அறிவுடைய ஒரு பொருளால் இயற்றப்படுவனவே ஆகும். உயிராகிய புருடனும் அறிவுடைப் பொருளே ஆயினும் முதலில் எதனையும் அறியாது இருந்து அதன் பின்னர் உடல் கருவி ஆகியவற்றைப் பெற்ற பிறகே அறிகின்ற தன்மை உடையவனாகிறான். உடல், கருவி முதலியனவும் மாயையை முதற்காரணமாகக் கொண்டே தோன்றுகின்றன. மாயையோ அறிவற்ற பொருள் என்றே கொள்ளப்படும் இவற்றின் அடிப்படையில் பார்த்தால் ஒழிபு அளவையினால் இவ்வனைத்திற்கும் வேறாய் மாயையிலிருந்து பூதம் முதலிய உலகப் பொருள் யாவற்றையும் தோற்றுவிக்கிற கடவுள் ஒருவர் வேண்டும் என்று அறியலாம். புத்திமற்காரியம்- அறிவோடு பொருந்திய செயல். இது வடசொல் முடிபு. மண்ணிலிருந்து குடத்தினைத் தோற்றுவிக்கிற அறிவினை உடைய வினைமுதல் ஒருவன் வேண்டும் என்பதை இப்பாடல் உணர்த்திற்று. பூதாதி அறிவற்றது. புருடன் என்னும் ஆன்மா உடல் கருவி இவற்றைப் பெற்ற பிறகே அறிகிறான். மாயையும் அறிவற்றது. இவை மூன்றுக்கும் வேறாக உலகத்தைத் தோற்றுவிக்கிற ஒரு கடவுள் உளன் என்று ஆசிரியர் நிறுவினார்.
38. காரியகாரணங்கள் முதல் துணை நிமித்தம். கண்டாம்-
பாரின்மண் திரிகை பண்ணு மவன் முதல் துணை நிமித்தம்;
தேரின் மண் மாயை ஆக திரிகைதன் சத்தி ஆக
ஆரியன் குலால னாய் நின்று ஆக்குவன்- அகிலம் எல்லாம்.
ஒரு பொருள் தோன்றுவதற்கு மூன்று காரணங்கள் வேண்டும். அவற்றை முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்பர். சான்றாக ஒருகுடம் வனையப்படுவதற்கு முதற்காரணம் மண். அதனை வனைவதற்கு உதவியாக இருக்கிற சக்கரம் போன்றன துணைக்காரணம். குடத்தை வனைபவனாகிய குயவன் நிமித்த காரணன். தேர்ந்து பார்த்தால் இவ்வுலகம் முதலிய எல்லாப் பொருள்களையும் தோற்றுவிப்பதற்கு உரிய முதற்காரணம் மாயை ஆகும். எனவே அது மண் போன்றது. இறைவனுடைய சத்தி, சக்கரத்தைப் போன்று துணைக் காரணம் ஆகும். சிவபெருமான் குயவனைப் போன்று நிமித்த காரணன் ஆவான்.
திரிகை- சக்கரம். ஆரியன்- இங்குச் சிவபெருமான். குலாலன்- குயவன்.
39. விந்துவின் மாயை ஆகி, மாயையின் அவ்வியத்தம்
வந்திடும்; விந்துத் தன்பால் வைகரி ஆதி மாயை,
முந்திடும் அராகம் ஆதி; முக்குணம் ஆதி மூலம்;
தந்திடும், சிவன வன்தன் சந்நிதி தன்னில் நின்றே.
முதற்காரணம் என்று கூறப்பட்ட மாயை தூய மாயை என்றும் தூவாமாயை என்றும் இரண்டு வகைப்படும். தூய மாயையிலிருந்து தூவா மாயை தோன்றும். அதிலிருந்து பிரகிருதி மாயை தோன்றும். தூயமாயையிலிருந்து வைகரி முதலிய நான்கு வகைப்பட்டவாக்குகளும் தோன்றும். தூவாமாயையிலிருந்து அராகம் முதலிய தத்துவங்கள் ஐந்தும் தோன்றும். அதன்பின் தோன்றும் பிரகிருதி மாயையிலிருந்து குணதத்துவம் முதலாகக் கூறப்பட்ட இருபத்து நான்கு தத்துவங்களும் தோன்றும். இவை இறைவனுடைய திரு உள்ளக் குறிப்பின் படியே அவனுடைய அருட் சத்தியின் முன்னிலையில் தோன்றுவனவாகும்.
மாயை ஒன்றே தூய மாயை, தூவா மாயை என்று இரண்டு வேறு பெயர்களைப் பெறும். குன்றிமணியின் ஒரு பகுதி சிவப்பு நிறம் உடையதாகவும் மற்றொரு பகுதி கருமை நிறம் உடையதாகவும் இருப்பதைப் போல இவ்வேறுபாடு என்பர். இருவகை மாயையும் வேறுவேறு. தூய மாயையிலிருந்து தோன்றியதே தூவா மாயை என்று கொள்வாரும் உளர்.
விந்து என்பது தூயமாயை ஆகிய சுத்த மாயையைக் குறிக்கும். ஆணவ மலத்தோடும் கன்மங்களோடும் விரவாமல் நிற்பதால் இது சுத்த மாயை எனப்படும்.
அசுத்தமாயை என்பது மல கன்மங்களோடு விரவி இருப்பது ஆகும். இதுவே தூவாமாயை எனப்பட்டது. இதனை அதோமாயை என்றும் கூறுவர். இதிலிருந்து பருப்பொருளாய்த் தோன்றுவது பிருகிருதி மாயை என்பர். மான் என்றும் இது வழங்கப்படும்.
இவ்வாறு முதற்காரணமாகிய மாயை மூன்று வகைப்பட்டது. இவ்வாறு தோன்றும் முறைமை பின்னர் விரித்துக் கூறப்படும்.

No comments:
Post a Comment