Wednesday, 23 August 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 5


ஆலமரம்

நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் உள்ளது திருவெண்காடு. வடமொழியில் 'ஸ்வேதாரண்யம்' என்று பெயர் (ஸ்வேதம் என்றால், வெண்மை; ஆரண்யம் என்றால் காடு). ஸ்ரீநடராஜருக்கு, இங்கும் சபை உண்டு. தில்லைச் சிதம்பரத்துக்கு முன்னதாக இங்கே திருநடனம் புரிந்ததால், இதனை ஆதிசிதம்பரம் என்பர்.
திருவெண்காட்டில், எழுந்தருளும் ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர். ஈசனின் சக்தியாக, பிரம்ம வித்யாம் பாள் எனும் ஸ்ரீபெரியநாயகி காட்சி தருகிறாள். பிரம்மாவுக்கு வித்தையைக் கற்பித்ததால், ஸ்ரீபிரம்மவித்யாம்பிகை என்று திருநாமம் கொண்டாள், அம்பிகை!
வேதராசி எனும் அந்தணன், வெளியூர் செல்லும்போது, தான் எடுத்துச்சென்ற கட்டுச்சாதத்தை இங்கேயுள்ள ஆலமரப் பொந்தில் வைத்தான். அந்தச் சோற்றில் நாகம் ஒன்று, நஞ்சினை உமிழ்ந்தது. அது தெரியாமல் அந்தச் சாதத்தை ஏழை அந்தணனுக்கு வேதராசி வழங்க, அந்த உணவைச் சாப்பிட்ட ஏழை இறந்து போனான். வேதராசி, பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானான். பிறகு திருவெண்காட்டு இறைவனை வழிபட, தோஷத்தில் இருந்து மீண்டான் என்கிறது ஸ்தல வரலாறு.
உத்தால முனிவரின் மகன் ஸ்வேதகேது, எட்டு வயதுடன் தனது ஆயுள் முடியும் என்பதை அறிந்தான்; திருவெண்காட்டுத் தலத்துக்கு வந்து, சிவபூஜையில் ஈடுபட்டான். எட்டு வயது முடியும் வேளையில், எமதர்மன் வந்து அவன்மீது பாசக்கயிற்றை வீச, 'சிவபூஜை தடைப்படுகிறதே' என வருந்தி அழுதான் ஸ்வேதகேது. அப்போது, திருக்காட்சி தந்த சிவனார், எமனது வலிமையை
அழித்து, ஸ்வேதகேதுவைக் காத்தருளினார். 'ஸ்வேதாரண்ய க்ஷேத்திரத்தில் எமனை ஈசன் எப்படி சம்ஹாரம் செய்தாரோ, அதேபோல் கரதூஷணர் களை ஸ்ரீராமன் சம்ஹாரம் செய்தார்' என ராமாயணத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார் வால்மீகி.
காசிக்கு நிகரான ஆறு திருத்தலங்களுள் திருவெண்காடு தலமும் ஒன்று (திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு (பூம்புகார் அருகில் உள்ள சாயாவனம்), திருவாஞ்சியம் ஆகியன பிற தலங்கள்). ஈசன் இங்கே ஆனந்தத் தாண்டவம், காளி நிருத்தம், கௌரி தாண்டவம், முனி நிருத்தம், ஸந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதம், சம்ஹாரத் தாண்டவம், பைஷாடனம் என ஒன்பது தாண்டவங்களை ஆடினாராம். எல்லாவற்றுக்கும் மேலாக... நவக்கிரகங்களுள் ஒருவரான புதனுக்கு உரிய ஸ்தலம் இது! சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்த புதன், சகலகலா வல்லவர். கல்வி, அறிவு, பேச்சு, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம் மற்றும் பன்மொழிப்புலமையை அருள்பவர். வித்யாகாரகனான இவரது சந்நிதி, ஸ்ரீபிரம்மவித்யாம்பிகைக்கு இடது பக்கத்தில் அமைந்துள்ளது.
இந்தத் தலத்துக்கு ஆல், கொன்றை, வில்வம் என மூன்று ஸ்தல விருட்சங்கள்!
பிரம்மாண்டமானது மட்டுமின்றி மிகப் பழைமை வாய்ந்தது ஆலமரம். இந்து, சமணம் மற்றும் பௌத்த சாமியார்களும் மடாதிபதிகள் பலரும் வைத்திருக்கும் புனித தண்டம், ஆல மரத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது என்பதே இதன் மகத்துவத்தை எளிதாக விளக்கிவிடும்! இதன் குச்சி, பல்லுக்கு உறுதியைத் தரும்; வேர்ப் பட்டை, சர்க்கரை நோயை குணமாக்கும். உடலில் உள்ள புண்ணுக்கு ஆலமரப் பட்டை சிறந்த மருந்து;
பட்டையைச் சாறாக்கிக் குடித்தால், வாந்தி-பேதி உடனே நிற்கும்! விரதம் இருந்து, ஆலமரப் பூக்களைச் சாப்பிட்டால், குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம் (ஆல இலையைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால், ரத்தத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; குழந்தைப் பேறு உண்டாகும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்). 'அன்று ஆலின்கீழ் இருந்து அறமுரைத்தான்' எனப் போற்றுகிறார் மணிவாசகர். 'ஆல்கெழு கடவுள்' என திருமுரு காற்றுப் படையும் 'ஆல் அமர் செல்வன் அணிசால் பெருவிறல்' என கலித் தொகையும் குறிப்பிடு கின்றன. திருஅன்பிலாந்துறை, திருப்பழவூர், திருவாலம்பொழில் ஆகிய சைவத் தலங்களிலும் திருமெய்யம், திருவில்லிபுத்தூர் ஆகிய வைணவ தலங்களிலும் ஆலமரமே ஸ்தல விருட்சம்.
ஆலயத்தின் இன்னொரு ஸ்தல விருட்சம்... கொன்றை. குல்கந்து தயாரிக்க கொன்றைப் பூக்கள் பயன்படும். கொன்றையின் மருத்துவ மகத்துவம் குறித்து சங்க இலக்கியங்கள் விவரிக்கின்றன. இதன் மலர்கள், சிவனாருக்கு உரியவை; ஆகவே அவருக்கு 'கொன்றை வேய்ந்தான்' எனும் திருநாமமும் உண்டு. 'கொன்றை வேய்ந்த இணையடி' என்று தொல்காப்பியமும் போற்றுகிறது. சுசீந்திரம் ஸ்ரீதாணுமாலய ஸ்வாமி கோயில், பண்ருட்டி- திருத்துறையூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயில், காரைக்குடியில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள திருப்பத்தூர் ஸ்ரீதிருத்தளிநாதர் கோயில் போன்று இன்னும் பல கோயில்களிலும் கொன்றை, ஸ்தல விருட்சமாக திகழ்கிறது.
அடுத்து... வில்வம். ஆயுர்வேதத்தில் வில்வ வேர் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வில்வத்தின் வேர், காய், கனி, இலை என எல்லாமே தேக ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருகின்றன. பேரளம் அருகில்... திருமீயச்சூரில் அமைந்துள்ள ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமேகநாதர் ஆலயம், திருவாரூர்- நன்னிலம் ஸ்ரீமதுவனேஸ்வரர் கோயில், திருத்துறைப்பூண்டி ஸ்ரீஒளஷதீஸ்வரர் கோயில், தஞ்சை பெரிய கோயில் போன்ற எண்ணற்ற சிவாலயங்களில் ஸ்தல விருட்சமாக வில்வம் அமைந்துள்ளது!
'பகைவரது தலைகளாகிய அடுப்பில் கூவிள மரத்தின் (வில்வத்தின்) விறகைக் கொண்டு எரிப்பர்' என்கிறது புறநானூறு. சுந்தரரும், வில்வ மலரைச் சிவபெருமான் சூடும் மலர் எனப் பாடிப் பரவியுள்ளார்.
மூணு பெருமைகள்...
 ''ஸ்வேதாரண்யர் கோயில்ல ஸ்தல விருட்சம் மட்டுமா மூணு?! இன்னும் மூணு மூணா பல விஷயங்கள் உண்டு'' 
''இந்தக் கோயில்ல ஸ்ரீஸ்வேதா ரண்யேஸ்வரர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீஅகோர மூர்த்தின்னு மூணு சிவ மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். ஸ்ரீபிரம்மவித்யாம்பிகை, ஸ்வேத மகாகாளி, சௌபாக்கிய துர்கைன்னு மூணு சக்திகளா அம்பாள் இருக்கா. அக்கினி, சூரியன், சந்திரன்னு மூணு தீர்த்தங்களும், ஆல், கொன்றை, வில்வம்னு மூணு விருட்சங்களும் இங்கே இருக்கு. காசியிலும் கயாவிலும் இருப்பது போல, அக்ஷய வடம் எனும் அழியாத ஆலமரம் இருக்கு. கயையில விஷ்ணுபாதம் இருக்கு; இங்கே, ஆலமரத்தடியில ருத்ரபாதம் இருக்கு.
பித்ரு கடன் தீர்க்கும் உத்தமமான தலம் இது. இங்கே திதி கொடுத்தா, 21 தலைமுறைகள் கடந்தும் பலன் கிடைக்கும்கிறது ஐதீகம். இந்த அருமையான ஸ்தலத்துலதான், புதன் பகவான் கோயில்கொண்டிருக்கார். அறிவைக் கொடுப்பவர்; ஞானகாரகன்; தீய கிரகங்களால் விளையும் தீமைகளை நீக்குபவர்; கல்விக்கு, குறிப்பாக மருத்துவப் படிப்புக்கு அருள்பவர் புதன் பகவான்.
புதன் பகவானுக்கு உகந்த வெளிர் பச்சை நிறத்தில் வஸ்திரம் மற்றும் மலர்களைச் சார்த்தி, அவரை வணங்குங்கள். பிள்ளை பாக்கியம் உள்பட கல்வி, செல்வம் என எல்லா நலனும் கிடைக்கும்'' .
- விருட்சம் வளரும்

No comments:

Post a Comment