Wednesday 30 November 2016

திருவிளையாடல் - 10.உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் !உக்ரவர்மனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற செய்தி, பல தேசங்களுக்கும் பரவவே, ராஜாக்கள் தங்கள் பெண்களை அவனுக்கு மணம் முடித்து வைக்கக் கருதி, தங்கள் பெண்களின் ஓவியங்களையும், ஜாதகத்தையும் அனுப்பி வைத்தனர். மலைபோல் குவிந்து கிடந்த ஓவியங் களை அமைச்சர்கள் பரிசீலித்துக் கொண்டிருக்க, சுந்தரேஸ்வரப் பெருமான், மணவூர் என்னும் பகுதியை ஆண்ட சோமசேகரனின் கனவில், பார்வதிதேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். சோமசேகரா! உன் மகள் காந்திமதியை மதுரை அரசாளும் சுந்தர பாண்டியனின் மகன் உக்ரவர்மனுக்கு மணம் முடித்துக் கொடு. அவள் நல்வாழ்வு வாழ்வாள், என அருளினார். ஏற்கனவே, தன் மகளின் மணவாழ்வு பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்த மன்னனுக்கு, கனவில் இறைவனே கொடுத்த இந்தச் செய்தி பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவன் இந்தத் தகவலை மதுரையின் அமைச்சர் சுமதிக்கு தெரிவித்தார். சுமதியும் அவளது ஜாதகத்தை பரிசீலிக்க அத்தனை பொருத்தமும் பொருந்தியிருந்தது. அவளது ஓவியமே, அவள் பேரழகு பெட்டகம் என்பதை அறிவித்து விட்டது. இந்தப் பெண் உக்ரவர்மனுக்கு மனைவியாகத் தகுதியானவள் என்ற தகவலை சுந்தரபாண்டியனுக்கு அறிவித்தார் சுமதி. பெண் பார்க்க புறப்படுங்கள். சகல பணிகளும் வேகமாக நடக்கட்டும், என சுந்தரபாண்டியன் உத்தரவிட்டார். மதுரை மன்னரின் அமைச்சரும் உறவினர்களும் பெண் பார்க்க வந்து கொண்டிருக்கும் தகவலை காந்திமதியிடம் தெரிவித்தான் சோமசேகரன்.

அவளது குழி விழுந்த கன்னங்கள் சிவந்தன. ஈசனின் அவதாரமான சுந்தரபாண்டியனின் மகன் தன் மணாளனாக அமைந்தார் என்றால், அதை விட வேறென்ன பாக்கியம் வேண்டுமென ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். இதனிடையே சோமசேகரனின் அமைச்சர்கள் சிலர் அரசரிடம், அரசே! பெண் பார்க்கும் படலத்தை பெண் வீட்டில் வைத்துக் கொள்வது தான் மரபு. இருப்பினும், தங்கள் கனவில் பெருமானே ரிஷபாரூடராக வந்து, இந்த திருமணத்தை நடத்தி வைக்கும்படி சொல்லியுள்ளதால், நாமே பெண்ணுடன் மதுரை செல்வோம். அமைச்சர் சுமதி எதிரில் வருவார். அவரையும் அழைத்துக் கொண்டு மதுரை சென்று, உலகாளும் சோமசுந்தரரையும், தடாதகை பிராட்டியாரையும் சந்தித்து பேசி முடிப்போம். அதுதான் மரியாதையாக இருக்கும்,என்றனர். அரசனுக்கும் இந்த யோசனை நல்லதெனப்பட்டது. உடனடியாக பயண ஏற்பாடுகள் துவங்கின. காந்திமதியையும் அழைத்துக் கொண்டு சோமசேகரன் பரிவாரங்களுடன் மதுரை கிளம்பினான். தேர்கள் வேகமாகச் சென்றன. அவர்கள் மணவூர் எல்லையைத் தாண்டி மதுரை எல்லைக்குள் நுழையவும் சுமதியும் அங்கு வந்து சேர்ந்தார். நம் வேலையைக் குறைத்தது மட்டுமின்றி, மணமகளே நேரில் மதுரைக்கு வந்தால் சோமசுந்தரரும், தடாதகை பிராட்டியும் மகிழ்ச்சியடைவது மட்டுமின்றி, உக்கிரபாண்டியனும் பெண்ணை நேரில் பார்த்துவிடுவான். மாப்பிள்ளையும், பெண்ணும் நேரில் பார்த்துக் கொண்டால் நாளைக்கு நம்மைக் குறை சொல்ல முடியாது, என நினைத்து சிரித்தபடியே சோம சேகரனை அடையாளம் தெரிந்து கொண்டு எதிர்கொண்டழைத்து வரவேற்றார்.


எதிரே நிற்பவர் அமைச்சராயினும், அவர் மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்பதால் மன்னன் சோமசேகரன் தேரில் இருந்து இறங்கி பணிவுடன் வணக்கம் தெரிவித்தான். அமைச்சர் சுமதி மன்னன் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்தார். அவர் மட்டுமென்ன! வந்தவர்கள் எல்லாருமே ராஜகுமாரியாயினும் அடக்கத்தின் வடிவாய் நின்ற காந்திமதியைப் பார்த்து மகிழ்ந்தார்கள். உலகத்துக்கே ராஜாவான சோமசுந்தர பாண்டியனின் வீட்டுக்கு மருமகளாக இருந்தாலும், அவள் அமைச்சர் சுமதியை வணங்கினாள். பின்னர் அனைவருமாக மதுரை புறப்பட்டனர். இந்தத் தகவலை அமைச்சர் சுமதி முன்கூட்டியே மன்னருக்கு அறிவிக்க ஆட்களை அனுப்பி விட்டார். அவர்கள் அங்கு சென்று தகவல் சொல்லவே, தங்கள் வீட்டுக்கு குத்து விளக்கேற்ற வரும் குலக்கொடியை வரவேற்க சோமசுந்தரரும், தடாதகை பிராட்டியாரும் தயாரானார்கள். மாளிகையில் பாவை விளக்குகள் ஏற்றப்பட்டன. ஒளி வெள்ளத்தில் மிதந்தது அரண்மனை. மதுரை மக்களுக்கு தகவல் தெரிவிக்க முரசறையப்பட்டதால், அவர்கள் உடனடியாக நகரெங்கும் வரவேற்பு வளைவுகளை வைக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பிட்ட நேரத்துக்குள் எல்லாம் தயாராகி விட்டது. மணவூர் அரசன் தன் மகளுடன் மதுரை வந்து அரண்மனைக்குச் சென்றான். அவர்களை சோமசுந்தர பாண்டியன் அன்புடன் வரவேற்றார். தடாதகை பிராட்டியார் தன் மகளின் அழகு தன்னழைகையும் விஞ்சியது என்பதைப் புரிந்துகொண்டு பெருமைப்பட்டாள். உக்கிரபாண்டியன் தன் வருங்கால மனைவியைப் பார்க்கும் சையை அடக்கிக் கொண்டு தன் அறையில் இருந்தான். மாப்பிள்ளையின் அவசரத்தை அவனைச் சுற்றியிருப்பவர்கள் புரிந்து கொண்டு வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தனர். காந்திமதியின் நிலையும் இதுதான்.


மாமா, அத்தையைப் பார்த்தாயிற்று....அவர் எங்கிருக்கிறாரோ? அந்தக் கட்டழகன் எப்போது வருவார்? என்று ஆவலுடன் யாருமறியாமல் கண்களைச் சுழல விட்டுக்கொண்டிருந்தாள். தடாதகைபிராட்டியாரும், சோமசுந்தரப்பாண்டியனும் இதை கவனிக்காமல் இல்லை. நிச்சயதார்த்தத்தை உடனடியாக முடித்துக் கொள்ள முடிவாயிற்று. காந்திமதியின் அவசரத்தைப் புரிந்து கொண்ட தடாதகை, உக்கிரவர்மனை வரச்சொல்லுங்கள், என்றாள். காந்திமதி நாணித் தலை குனிவது போல் பாசாங்கு காட்டினாலும், கண்கள் மட்டும் உயர்ந்து அவன் வரும் வழியைப் பார்த்தவண்ணம் இருந்தன. ஆஜானுபாகுவான தோற்றத்துடன் உக்கிரவர்மன் புன்னகை ததும்ப, கைகள் கூப்பி வந்து கொண்டிருந்தான். பெற்றோரைப் பணிந்த பின், மாமனாருக்கும் அவருடன் வந்திருந்த முக்கியஸ்தர்களுக்கும் நமஸ்காரம் தெரிவித்தான். மதுரை மன்னரும், மணவூர் மன்னரும், உக்கிரவர்மனும் சிம்மாசனங்களில் அமர்ந்திருக்க, தடாதகைபிராட்டியார், காந்திமதி ஆகியோர் தரையில் விரித்திருந்த ரத்தின கம்பளங்களில் அமர்ந்தனர். ஆண்களுக்கு அக்காலப் பெண்கள் தக்க மரியாதை அளித்ததை இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது. நிச்சயதார்த்தம் முடிந்து மணநாள் குறித்த பிறகு, பெண் வீட்டார் விடை பெற்றனர். உக்கிரவர்மனின் கண்களும், காந்திமதியின் கண்களும், ராமனும், சீதையும் திருமணத்துக்கு முன்னதாக நோக்கிக் கொண்டது போல நோக்கிக் கொண்டன. இந்த நிகழ்ச்சியின் போது மதுரை வந்திருந்த தேவகுருவாகிய பிரகஸ்பதி காந்திமதியை மிகவும் புகழ்ந்தார். அவள் சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவள் என்றும், அவளுக்கு வாய்க்கும் கணவன் நீண்டகாலம் புகழுடன் வாழ்வான் என்றும் சொன்னார்.


இதனால் அனைவரது மகிழ்ச்சியும் இரட்டிப்பாயிற்று. நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு, திருமணநாள் வரையுள்ள நாட்கள் இருக்கிறதே... அது கழிவதற்கு மிகுந்த சிரமமாயிருப்பது போன்ற தோற்றம் எல்லா மணமக்களுக்குமே இருக்கும். உக்கிரவர்மன், காந்திமதியும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல் கழிய, மணநாளுக்காக அவர்கள் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த அந்தத் திருநாளும் வந்தது. பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் திருமணத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்து மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர். மணமக்கள் சர்வ அலங்காரத்துடனும் மணப்பந்தலுக்கு வந்தனர். உக்கிரவர்மன் தன் மனையாட்டிக்கு மங்கலநாண் பூட்ட, தடாதகை பிராட்டிக்கு கண்கள் பனித்தது. பெண்ணைப் பெற்ற சோமசேகரனுக்கும் இதே நிலை. தாலிகட்டும் வேளையில் பெற்றவர்களின் உணர்ச்சிவெள்ளம் அவர்களைப் பெற்ற நாளை விட பெருக்கெடுக்கும் என்பதில் சந்தேகமென்ன! உக்கிரவர்மன்- காந்திமதி திருமணம் இனிதாக நிறைவேறி, வந்தவர்கள் அவரவர் இருப்பிடம் திரும்பினர். சிவபெருமானாகிய சோமசுந்தர பாண்டியனும், பராசக்தியாகிய தடாதகை பிராட்டியும் தாங்கள் பூமிக்கு வந்த பணி முடிந்ததால் தங்கள் உலகம் திரும்ப முடிவெடுத்தனர். இதை தங்கள் புத்திரனிடம் தெரிவித்து, உக்கிரவர்மா! இனி நீயே மதுரையின் அரசன். உனக்கு பட்டம் சூட்டிவிட்டு நாங்கள் சிவலோகம் திரும்பப் போகிறோம், என்றனர். பெற்றவர்களைப் பிரிவது எவ்வளவு கடினமான விஷயம்! காந்திமதியும் வுருத்தப்பட்டாள். அமைச்சர் சுமதி உள்ளிட்டவர்களும், மதுரை மக்களும் இந்த செய்தியறிந்து வேதனைப்பட்டனர். அவர்களைத் தேற்றிய தடாதகைபிராட்டியார், என் அன்பு மக்களே! மீன்கள் தங்கள் கண்களை இமைக்காமல் தங்கள் குஞ்சுகளை எப்படி பாதுகாக்கின்றதோ, அதுபோல் நான் என்றும் உங்களைக் காப்பேன்.


சோமசுந்தரரும் சொக்கநாதராக இங்கே எழுந்தருளி உங்களுக்குத் தெரியாமலே ஆட்சி நடத்துவார். நாங்கள் இங்குள்ள கோயிலிலேயே ஐக்கியமாவோம், என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னாள். மக்களும் மற்றவர்களும்ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டனர். ஒரு இனியநாளில், உக்கிரவர்மனுக்கு பட்டாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தது. அப்போது, சோமசுந்தரர், தன் மகனிடம், உக்கிரவர்மா! இதோ நான் தரும் வேல், வளை, செண்டு ஆகியவற்றைப் பெற்றுக் கொள். மதுரை நகரை கடல் ஆட்கொள்ளும் சமயம் வரும். அப்போது, மக்களைக் காப்பாற்ற இந்த வேலை கடல் மீது எறிந்தால் அது உள்வாங்கி விடும். இந்திரன் உன் மீது கொண்ட பொறாமையால் உனக்கு இடைஞ்சல் செய்வான். அப்போது, இந்த வளையை அவனது மகுடத்தின் மீது வீசி அவனை அடக்கு. இதோ! இந்த செண்டால் (மலர்க்கொத்து) மேருமலையை அடித்து நொறுக்கு. ஒரு சமயத்தில் அது அகங்காரம் கொண்டு மக்களுக்கு இடைஞ்சல் செய்யும். அப்போது, இது பயன்படும், என்று சொன்னார். அவற்றை பயபக்தியுடன் உக்கிரவர்மன் பெற்றுக் கொண்டான். பட்டாபிஷேகம் முடிந்ததும் உக்கிரவர்மனை உக்கிரபாண்டியன் என்று மக்கள் அழைக்கலாயினர். பின்னர், சோமசுந்தரபாண்டியனும், தடாதகை பிராட்டியாரும் கோயிலுக்குள் சென்று மறைந்தனர். அவர்கள் சொக்கநாதர் என்றும், மீனாட்சியம்மன் என்றும் போற்றப்பட்டனர். சொக்கநாதர் லிங்கவடிவில் எழுந்தருளினார்.

திருவிளையாடல் - 9.உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம் !ஈசன் அதற்கு ஏதும் பதில் சொல்லாவிட்டாலும், தடாதகை பிராட்டியாருக்கு அருள் செய்ய மனதில் எண்ணிவிட்டார். தன் மகன் முருகப்பெருமானை அழைத்தார். ஏறுமயிலேறி விளையாடியபடியே ஆறுமுகன் அவர் முன் வந்துநின்றான். தந்தையே! என்னைத் தாங்கள் அழைத்த காரணம் என்ன? என்றான். முருகனைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டார் ஈசன். சரவணா! அன்றொரு நாள் எனது நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த சுடரில் பிறந்த நீ, மக்கள் நலனுக்காக இந்த மதுரையில் பிறக்க வேண்டும். தடாதகைபிராட்டியாரின் வயிற்றில் நீ கருவாவாய், என்றார். முருகப்பெருமானும் தந்தையின் கட்டளைக்கு பணிந்து, தடாதகைபிராட்டியாரின் மணிவயிற்றில் குழந்தையாகத் தங்கினார். தான், கர்ப்பமுற்றதை அறிந்த தடாதகை மிகுந்த மகிழ்ச்சியுடன் கணவரின் மார்பில் சாய்ந்து, இந்த விஷயத்தை தெரிவித்தாள். அரசி தடாதகை கர்ப்பமுற்றதை அறிந்த அமைச்சர் சுமதி அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. அவர் இந்த விஷயத்தை மக்களுக்கு தெரிவிக்க உத்தரவிட்டார். மக்கள் தங்கள் எதிர்கால மன்னர் மதுரையில் பிறக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர். மீனாட்சி கல்யாண உற்சவம் போல, ஊரெங்கும் மாவிலை தோரணம் கட்டி, இனிப்புகள் சமைத்து, தானம் செய்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். கர்ப்பஸ்திரீக்கு என்னென்ன தேவையோ அவையெல்லாம் செய்து கொடுக்கப்பட்டன. கர்ப்பவதிக்கு புளிப்பு வகை மிகவும் பிடிக்குமே! இதனால் ருசியான புளியோதரையை சமைத்துக் கொடுத்தனர். குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டுமே என்பதற்காக குங்குமப்பூ கலந்த பால், விதவிதமான பழரசங்கள் கொடுக்கப்பட்டன.

மிக முக்கியமாக வேத விற்பன்னர்கள் காலையும் மாலையும் வரவழைக்கப் பட்டு அரிய ஆன்மிகத் தத்துவங்கள், போதனைகள், கதைகள், இறைவனின் திருநாமங்களின் மகிமை ஆகியவை சொல்லப்பட்டன. இது மிகவும் முக்கியமான விஷயம். இந்தக் காலத்தில் கர்ப்பவதிகள் டிவியின் முன்னால் அமர்ந்து, கண்ட கண்ட நாடகங்களைப் பார்த்து கண்ணீர் வடிப்பதும், உணர்ச்சிவசப் படுபவதும், ஆபாசமும், வன்முறையும் கலந்த பாடல்கள், திரைப்படங் களைப் பார்த்து அவற்றையே விரும்பும் குழந்தைகளைப் பெறுகிறார்கள். தாங்கள் தவறு செய்துவிட்டு, பிள்ளைகள் கெட்டலையும் போதும், ஒழுங்காகப் படிக்காமல் இருக்கும்போதும் அவர்கள் மீது தங்கள் கடமையைச் சரிவர செய்யவில்லை என பழி போடுகிறார்கள். கர்ப்பவதிகள் தயவுசெய்து டிவி பார்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். சிறந்த ஆன்மிக நூல்களைப் படிக்க வேண்டும். யாருடைய துணையுடனாவது கோயில்களுக்குச் சென்று ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டும். இப்படி செய்தால் மிகச்சிறந்த குழந்தைகள் பிறக்கும். இப்படியாக, தடாதகை பிராட்டியாரின் கர்ப்ப கால முடிவில், அவளுக்கு வளைகாப்பு, பூச்சூடல் ஆகிய மங்கள நிகழ்ச்சிகள் மிகுந்த ஆடம்பரத்துடன் நடத்தப் பட்டன. மதுரை வாழ் மக்கள் தங்கள் அரசியாருக்கு விதவிதமான கொழுக்கட்டைகள், வடை வகைகளை கொண்டு வந்து கொடுத்தனர். ஒரு திங்கள்கிழமை, நிறைந்த திருவாதிரை நட்சத்திரம், சகல கிரகங்களும் சுபவீட்டில் இருந்த சுபயோக சுபவேளையில் தடாதகை பிராட்டியார் தன் செல்வமகனைப் பெற்றெடுத்தாள். அவள் மட்டுமா! ஊரும் உலகமும் மகிழ்ச்சியடைந்தது. சுந்தரேச பாண்டியன் தன் மகனை பார்க்க வந்த போது, மரகதவல்லியான தடாதகை பிராட்டியாரின் பச்சைக் கன்னங்களில் சிவப்பு இழையோடியது. வெட்கமும், மகிழ்ச்சியும் ஒன்றுசேரும் நேரத்தில் தான் பெண்களுக்கு அழகே கூடும் போலும்!
சுந்தரேச பாண்டியன் தன் மனைவியின் பேரழகையும், செக்கச் சிவக்க பிறந்த மகனின் பேரழகையும் ஒருசேர ரசித்தார். குறிப்பிட்ட நாட்கள் கடந்த பிறகு குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. உக்ரவர்மன் என்று பெயர் சூட்டினர். பெயர் சூட்டு விழாவுக்கு தாய்மாமன் வந்தாக வேண்டுமே! திருமால் தன் கருட வாகனத்திலும், பிரம்மா அன்னவாகனத்திலும் அவரவர் தேவியரான ஸ்ரீதேவி, பூதேவி, சரஸ்வதியுடன் வந்து சேர்ந்தனர். தேவ குரு பிரகஸ்பதி குழந்தையை ஆசிர்வதித்து, உரிய வயது வந்ததும் தானே நேரில் வந்து குழந்தைக்கு பாடங்களைக் கற்றுக்கொடுப்பதாகவும் சுந்தரேச பாண்டியனிடம் தெரிவித்தார். ஐந்து வயதில் உக்ரவர்மனுக்கு பூணூல் அணியும் வைபவம் நடந்தது. தேவகுரு பிரகஸ்பதி பாடங்களை ஆரம்பித்தார். எட்டுவயதிலேயே சகல கலைகளையும் கற்றான் உக்ரவர்மன். தந்தை சுந்தரேசபாண்டியன், அவனுக்கு பாசுபதாஸ்திரம் எய்யும் முறையை கற்றுக் கொடுத்தார். உக்ரவர்மனுக்கு 16 வயதானது. அவனுக்கு திருமணம் செய்து வைப்பதா அல்லது பட்டம் சூட்டுவதா என்று சுந்தரேசபாண்டியனும், தடாதகை பிராட்டியாரும் யோசிக்க ஆரம்பித்தனர். அமைச்சர் சுமதியுடனும், வேத பண்டிதர்களுடனும் இதுபற்றி கலந்தோலசித்தனர். திருமணமே சிறந்த வழி என அவர்கள் ஒருமித்த முடிவெடுத்துக் கூறவே பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானது.

Tuesday 29 November 2016

கங்கை கரையில் - 11

சார்தாம் யாத்திரை - கேதார்நாத்


திருவிளையாடல் தொடர்ச்சி...

அதற்கு அந்த கபடவேடதாரி எதற்காக இந்த கடுமையான தவத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறாய் என்று வினவ, அம்மையும்  பிநாகம் ஏந்திய சிவபெருமானை கணவனாக அடைய இந்த தவம் செய்வதாக கூறினாள். அதற்கு விருத்தராக வந்த சிவபெருமான் கூறுகின்றார். ஏ தேவி! நீ சந்தனத்தை விட்டு சேற்றைப் பூசிக்கொள்ளவும், யானை வாகனத்தை விட்டு எருதின் மேல் ஏறி சவாரி செய்யவும், கங்கை நீரை விட்டு, கிணற்று நீரை அள்ளிக்குடிக்கவும், சூரிய ஒளியை விட்டுவிட்டு மின்மினியின் மினுக்கு ஒளியை கண்டு ரசிக்கவும், வீட்டு வாசத்தை விட்டுவிட்டு காட்டுவாசஞ் செய்யவும் விரும்பியவளாய் தவம் செய்கின்றாய். இன்னும் சொல்கிறேன் கேள்.

Image result for shiva parvati images

 பார்வதி ! கமலப்பூக்களைக்ப் போன்ற கருவிழிகள் கொண்ட கட்டழகியான நீ எங்கே ? முக்கண்ணனான அந்தச் சுடலையாடிச் சிவன் எங்கே ? வெண்ணிலா முகம்படைத்த நீ எங்கே ? ஐந்தலையனான அந்த ஆண்டிப்பித்தன் எங்கே ? வருணிக்க முடியாத கூந்தல் அலங்காரியான நீ எங்கே ?  விரிசடையனான அந்த ஜடாதரன் எங்கே ? சந்தனம் முதலான வாசனைகள் பூசி பரிமளிக்கும்  உடல் வளம் வாய்ந்த நீ எங்கே ?  சுடுகாட்டுச் சாம்பலை பூசித்திரியும் உடலுள்ள அந்த சிவன் எங்கே ? சுகமான வெண்பட்டாடை எங்கே ? சுகமற்ற அவன் யானைத்தோல் போர்வை எங்கே ? உனது திவ்யமான தோள் வளைகள் எங்கே ? அவனது பாம்பு ஆபரணங்கள் எங்கே ? உனக்கும் சிவனுக்கும் பொருத்தமோ ? உருவ ஒற்றுமையோ சிறிதும் கிடையாது. அவனோ விரூபாக்ஷி (கோணல் கண்ணன்) அவனது குலங்குடி முதலியனவும் நன்றாக அறியப்படவில்லை. அவன் என்ன செல்வந்தனா? அப்படியிருந்தால் அவன் ஏன் திகம்பரனாய் திரிய வேண்டும்.                      
அவன் எறித்திரிவது மாடு, உடுத்தும் ஆடை யனைத்தோல், பதை வரிசைகள் பூத பைசாசங்கள், அவனது நீல கண்டத்தில் கடுவிஷம், காடு மேடுகளில் சுற்றுபவன், ஏகாங்கி, பற்றற்ற விரக்தன்!. ஆகையால் அவனிடன் உன் மனத்தை செலுத்துவது உசிதமல்ல! அவன் வசிப்பது ருத்ரபூமி! எனவே உன் மனத்தை அப்படிப்பட்டவனிடமிருந்து திருப்புவது தான் நல்லது என்று கூறினார்.
   
இவற்றையெல்லாம் பொறுமையின்றி கேட்டா பார்வதிதேவி மிகவும் கோபம் கொண்டாள். அவள் அந்த முதுபெரும் கிழவரை நோக்கிக் குமுறி குமுறி கூறலானாள்.

 “சிவதூஷணை செய்வதில் வாய்த்தேர்ச்சி பெற்ற கிழவரே! இவ்வளவு நேரம் உம்மை தன்யர் என்று எண்ணியிருந்தேன். இப்போதுதான் தாங்கள் அபத்தமானவர் என்று புரிந்தது. தேவாதி தேவனை சிவபெருமானை நான் அறிவேன் என்று நீர் கூறியது பொய். உலகை காக்கும் அந்த்த சிவபெருமானின் வாசாமகோசரமான ஸ்வரூபத்தை நான் சொல்லுகிறேன், கேட்டுத் தெரிந்து கொள்ளும்....!

Image result for shiva parvati images
 
அந்த பரமசிவனார், யோசித்துப் பார்த்தால் நிர்க்குணர் காரணத்தால் ஸகுணராகவும் நிர்க்குணராகவும் விளங்குகின்றாரே அவருக்கு பிறவி ஏது?  ஜாதி ஏது? சகலவித்தைகளுக்கும் அவர் பிறப்பிடமானவர். அவரே முன்பு ஒரு காலத்தில்  வேதங்களை சுவாச மார்க்கமாக விஷ்ணுவுக்கு வழங்கியவர்.பரமாத்மாவும் பரிபூரணருமான அந்த சிவனாருக்கு வித்தைகளால் ஆகவேண்டியது என்ன? ஆதிபூதரான அந்த ஆனந்த கூத்தருக்கு  வயது ஏது. பிரகிருதியே அந்த பெருமானிடத்திலிருந்தல்லவோ தோன்றியது. எவன் அந்த பெருமானை நித்தியமாக அடைகின்றானோ? அவனுக்குப் ப்ரஹால, உத்ஸாஹ, மந்திரஜ சக்திகள் கைகூடும். சுடலையாண்டி என்று நீங்கள் குறிப்பிட்ட  அவரே மரணத்தை வென்ற மிருத்யுஞ்ஜயர். அவரது பூஜையால் எல்லோருக்கும் சுகம் பொங்கி வருமே தவிர அவருக்கென்று ஏது சுகம்? துன்மதியாளரே!

 எந்த சிவபெருமானின் கருணைக் கண் ணோக்கினால் தேவர்கள் ஜீவந்தர்களாக இருக்கின்றார்களோ,எந்த சிவபெருமானின் திருத்தொண்டிற்காகக் தேவர்களும் காத்திருக்கின்றார்களோ அந்த பரம்பொருள் ஸ்வயம்பு. நீர் ஆண்டியென இகழ்ந்த அந்த ஆனந்த மூர்த்தியை சேவித்தால்  அஷ்டலக்ஷ்மிகளையும் அடைவான். எந்த சிவபெருமானிடம் அஷ்டமாசித்திகளும் நர்த்தனஞ் செய்கின்றனவோ, அந்த பரமேஸ்வரனுக்கு ஐசுவரியம் எப்படி எட்டாததாகும். அவ்ரே மங்கள மூர்த்தி, சிவம் என்ற மங்களமான பெயர் எவன் முகத்தில் நிலைத்திருக்கிறதோ அவனைக் கண்ணால் காண்பதாலேயே அன்னியர்களும் பரிசுத்தராகி விடுவார்கள்.
நீர் சொல்வது போல பஸ்பமானது பரிசுத்தம் இல்லாத வெறும் சாம்பல் என்றால் அம்பலவாணரான அந்த அண்ணல் மாபெரும் நடனமாடிய பிறகு தேவர்கள் அந்த சாம்பலை ஏன் தாம் மீது சிரசின் மீது பூசிக்கொள்கின்றனர். பொன்னார் மேனியில் தூய பால் வெண்ணீறு அணியும் அந்த சிவபெருமான் அகில உலகங்களுக்கும் ஆதி. அவரே  சர்வேஸ்வரராக இருந்து . அனைத்தையும் ஆக்கலும், காத்தலும், அழித்தலும். மறைத்தலும், அருளலுமான ஐந்தொழில் புரிந்து அலகிலா விளையாட்டுடைய தலைவராக விளங்குகிறாரோ அந்த ஆதிநாயகரை உம்மைப் போன்ற குறைமதியாளர்களால் எப்படி அறிய முடியும்.

துஷ்ட வேதியரே! உம் ஊனக்கண்களுக்கு  சிவபெருமான் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரே என் மனக்கண்ணிற்க்கு பிரியரும் என் விருப்பத்திற்கு உரியவராவார் என்று வெகுண்டுரைத்து விட்டு, சிவநிந்தணை செய்யும் இவர் இருக்கும் இடம் விட்டு செல்லலாம் என்று  சொல்லி விட்டு தன் தோழியரிடம் வேறிடம் செல்ல காலெடுத்து வைபப்தற்கு முன் , விருத்த வேதியர் வடிவில் இருந்த சிவபெருமான் தனது சுயரூபத்தை காட்டினார். அவ்வாறு இவரைக்கண்டதும் பார்வதி தேவி நாணத்தோடு தலை குனிந்து நின்றாள். அவளை சிவபெருமான் உற்று  நோக்கி புன்னகை பூத்து, “பார்வதி நீ என்னை விட்டு எங்கு போக முடியும்? நீ என்னால் விட்டுவிடத்தக்கவள் அல்லவே! உன் தவத்துக்கு மகிழ்ந்த நான்  உன் முன் பிரசன்னமானேன். உன் மனதை சோதிப்பதற்காகவே  விளையாட்டாக  இப்படியெல்லாம் வாய் கொடுத்து வார்த்தையாடினேன். உன் திடபக்தியை கண்டு உவந்தேன் என்றார். பின்னர் முறைப்படி பர்வதராஜனிடம் சப்தரிஷிகள் பெண் கேட்க, சிவசக்தி திருமணம் சோன் பிரயாகை அருகில் உள்ள த்ரியுக் நாராயணில் நடைபெற்றது.

இவ்வாறு சிவசக்தி திருவிளையாடல் புரிந்த கௌரி குண்டத்தில் கௌரிக்கு ஒரு தனிக்கோவில் உள்ளது. இமயமலையின்  கட்டிட அமைப்பில்  ஒரு கூம்பு வடிவ  கோபுரத்துடன் ஒரு பிரகாரத்துடன் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் திருவாயிலின் அருகில் அம்மை பார்வதி தவம் செய்யும் கோல அற்புத  சிற்பம் ஒன்று உள்ளது. அம்மையின் அருகில் கணபதியும் அருள்கின்றார். அன்னையை தரிசனம் செய்வதற்கு முன்னர் அன்பர்கள் முதலில் சுடு நீர் குளத்தில் நீராடுகின்றனர். இங்கு இரு  சுடு நீர்க்குளங்கள் உள்ளன. (கேதார்நாத் மலையேறி சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு கீழிறங்கி வரும் போது எவ்வளவு களைப்பாக இருந்தாலும் இக்குளத்தில் நீராட எல்லா களைப்பும் நீங்கிவிடும்) இக்குளத்தில் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை நீராடலாம்.

Image result for gaurikund

நீராடும் போது பக்தர்கள்
ஸர்வ மங்கள் மாங்கல்யே  சிவே ஸ்ர்வார்த்த சாதிகே |
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே ||

என்று கௌரியன்னையை நினைத்து  மனது உடலும் தூய்மையடைய நீராட வேண்டும். பின்னர் அன்னை மலைமகள் தவம் செய்த கௌரி குளத்தில் சென்று அன்னையை வழிபடுகின்றர்.  நான்கு சுவர்களிலும் அன்னையின் சரித்திரத்தை சிற்பங்களாக அமைத்துள்ளனர்.
     
த்ரியுக் நாராயண் என்னுமிடத்தில் மூன்று யுகங்களாக எரிந்து கொண்டிருக்கும் குண்டத்தின் விபூதி எடுத்து வரலாம். அந்த விபூதி பிரசாதம் தீராத விணை தீர்க்கும் சக்தி கொண்டது. சோன் பிரயாகையில் இருந்து 14 கி.மீ தூரத்தில் த்ரியுக் நாராயண் அமைந்துள்ளது.

Image result for thriuk narayan near kedarnath
த்ரியுக் நாராயண்
 திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற  கௌரி ஆலயத்திற்கு சென்று அன்னையை, வரையோன் பெற்ற வார் சடையாளை, மலைச்செல்வியை, அமரர் கயிலைப் பார்வதியை வழிபட்டு விட்டு ஜோதிர்லிங்க ஸ்தலமான  கேதார்நாத்திற்கான நடைப் பயணத்தை  தொடங்க வேண்டும்..

 கேதாரீஸ்வரரை தரிசனம் செய்வதற்க்கு முன்னர் கேதார்நாத்தின் பெருமைகளை  அடுத்த பதிவில் காணலாம்...

திருச்சிற்றம்பலம்

கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்..

திருவிளையாடல் - 8. இரசவாதம் செய்த படலம் !மதுரை அருகில் திருப்பூவனம் என்ற ஊர் இருந்தது. (இப்போதைய பெயர் திருப்புவனம்) இங்குள்ள பூவனநாதர் கோயிலில் கணிகையர் எனப்படும் ஆடல்குலப் பெண்கள் சிவபெருமானை மகிழ்விக்கும் வகையில் நாட்டியாஞ்சலி நடத்தி வந்தனர். இவர்களில் ஒருத்தி பொன்னனையாள். கற்புக்கரசியான இந்தப் பெண்மணி தினமும் காலையில் தன் தோழிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களை எழுப்பிக்கொண்டு, வைகையில் சென்று நீராடுவாள். பூவனநாதரை வணங்கி, நாட்டியமாடுவாள். பின்னர், தன் இல்லத்திற்குச் சென்று, அங்குள்ள சிவனடியார்களுக்கு உணவு பரிமாறுவாள். அதன் பிறகே சாப்பிடுவாள். இப்படி தினமும் விரதம் அனுஷ்டித்த பெண் அவள். இந்தப் பெண்ணின் புகழை பாரோர் அறிய திருவுளம் கொண்டார் பரம்பொருளான பூவனநாதர். அவள் நடராஜர் சன்னதி முன்பே நாட்டியமாடுவாள். அப்போது அந்தச் சிலையை உற்றுப்பார்ப்பாள். என் இறைவா! பக்தர்கள் உன்னைப் பொன்னே, பொருளே என போற்றி மகிழ்கிறார்கள். அந்தப் பொன்னாலேயே உனக்கு சிலை செய்தால் என்ன? என்று வேண்டினாள். தங்கத்தில் சிலை செய்ய வேண்டுமானால், பெரும் பொருள் வேண்டுமே! இதைத் திரட்டும் சக்தியைத் தனக்கு தர வேண்டுமென அவள் பிரார்த்தித்தாள். பலநாளாக உருகி உருகி வைத்த இந்தக் கோரிக்கையை ஏற்க இறைவனும் முடிவு செய்துவிட்டார். ஜடாமுடி தரித்து, கமண்டலம், ஜபமாலையுடன் பொன்னனையாளின் வீட்டுக்கு ஒரு துறவி போல் எழுந்தருளினார்.

அங்கே சில அடியவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர் அவளது வீட்டுத்திண்ணையில் அமர்ந்திருந்தார். பொன்னனையாள் இல்ல சேவகியர், துறவியை இல்லத்துக்குள் வந்து உணவருந்துமாறு வேண்டினர். அவரோ, உங்கள் எஜமானியை வரச்சொல்லுங்கள், என்றார். ஆகட்டும், என்ற அவர்கள் பொன்னனையாளை அழைக்க உள்ளே சென்றனர். தோழிகள் உள்ளே சென்று பொன்னனையாளை அழைத்து வந்தனர். துறவியை வணங்கி எழுந்த அவளிடம், பெண்ணே! உன் மனதில் ஏதோ குறை ஒன்றுள்ளதை இங்கு நுழைந்தவுடனேயே தெரிந்து கொண்டேன். உன் குறையை தீர்த்தபின் நீ சிவனடியார்களுக்கு வழங்கும் அன்னத்தை ஏற்பதே முறையானது. குறையைச் சொல், என்றார். சுவாமி! நடராஜப்பெருமானுக்கு தங்கத்தில் சிலை வடிக்க வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் இருக்கிறது. ஆனால், அதற்கு எவ்வளவோ செல்வம் வேண்டுமே! அதனால் அந்த ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ என அஞ்சுகிறேன். இதைத்தவிர வேறு எந்த குறையுமில்லை, என்றாள் பொன்னனையாள். மகளே! இதற்கா கவலைப்படுகிறாய். உன் வீட்டிலுள்ள செம்பு, வெள்ளி, பித்தளை, இரும்பு, ஈயப் பாத்திரங்களையெல்லாம் எடுத்து வா. அவற்றை பொன்னாக மாற்றித்தருகிறேன். அவற்றை உருக்கி நீ சிலை செய்யலாம், என்றார். பொன்னனையாள் இதை நம்புவதா, இல்லையா என்ற குழப்பத்திற்கு ஆளானாள். இருப்பினும் அவர் சொன்னதைச் செய்தாள்.

அவர் அவற்றில் திருநீறு பூசி, இவற்றை இன்று இரவு முழுவதும் நெருப்பில் வைத்துவிடு, என்றார். உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டார். சுவாமி! தங்கத்தில் சிலை வடித்ததும் தாங்களும் அதனைக் காண வேண்டாமா? இங்கே சில நாட்கள் தங்குங்களேன், என்றாள். பெண்ணே! நான் மதுரையில் தான் வசிக்கிறேன். என்னை சித்தன் என்பார்கள். நீ பணிகளை முடி. பிறகு, எப்போது நினைக்கிறாயோ அப்போது வருவேன்,என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். பொன்னனையாள் அவர் சொன்னது போலவே பாத்திரங்களை தீயில் இட்டாள். மறுநாள் அவை பொன்னாக மாறியிருந்தது கண்டு அதிசயப்பட்டாள். வந்தது சாதாரண துறவியல்ல, அந்த ஈசனால் தான் இது முடியும் என பரவசப்பட்டாள். பூவனநாதர் கோயிலில் இருந்த நடராஜரைப் போலவே பொன்னில் சிலை வடித்தாள். துறவியை மனதால் நினைத்தாள். அவரும் அங்கு வந்து சேர்ந்தார். பொற்சிலையை தேரில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு வந்து பூவனநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்தாள். துறவியை சிவனாகவே போற்றி வணங்கினாள். பலகாலம் பொற்சிலையை வணங்கி இறைவனின் திருவடியை அடைந்தாள்.

திருவிளையாடல் - 7. இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலம் !பாண்டியநாட்டிலும், சேர, சோழ நாடுகளிலும் திடீரென மழை பொய்த்தது. தமிழக நாடுகள் அனைத்திலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்ட துன்பத்திற்கு அளவில்லை. அரண்மனை களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களும் மக்களுக்கு வாரி வழங்கப்பட்டு காலியாகிக் கொண்டிருந்தது. சண்டையும், சச்சரவும் செல்வம் இருக்கும் போது மட்டும் தான்! பசி வந்துவிட்டால் ஒற்றுமை வந்துவிடும் போலும்! தங்களுக்குள் யார் பெரியவர் என அடிக்கடி போரிட்டுக் கொள்ளும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மதுரையில் ஒன்று கூடி பஞ்சம் போக்கும் முறை பற்றி ஆய்வு செய்தனர். இதற்குரிய தீர்வை பொதிகைமலையில் தங்கியிருக்கும் அகத்தியரைச் சந்தித்து கேட்பதென முடிவு செய்தனர். அனைவரும் சோமசுந்தரப் பெருமானையும், மீனாட்சியையும் வணங்கி, அகத்தியரைத் தரிசித்த பிறகாவது மழை பெய்து, தமிழகம் செழிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர். பின்னர் முப்பெரும் மன்னர்களும் பொதிகை மலைக்குச் சென்றனர். அகத்தியர் தனது மனைவி லோபமுத்திரையுடன் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். அந்த தம்பதியினரை அவர்கள் வணங்கினர். மூவரையும் வரவேற்று ஆசியளித்த அகத்தியர், அவர்கள் வந்த விபரத்தைக் கேட்டு மனவருத்தம் கொண்டார்.

மாமன்னர்களே! உங்களுடைய கிரக சஞ்சாரப்படி இன்னும் 12 ஆண்டுகளுக்கு நாட்டில் மழை பெய்ய வழியில்லை. இதற்கு ஒரே பரிகாரம் தேவலோகத் தலைவன் இந்திரனை நீங்கள் பிரார்த்திப்பது தான். அவனைப் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளை நீங்கள் செய்து கொள்ளுங்கள். அவனது அருள் கிடைத்தால் வருணனை அனுப்பி மழை பொழிய வைப்பான், என்றார். சேர, சோழருக்கு இந்த யோசனையில் உடன்பாடு இருந்தாலும், இந்திரனுக்கும், தனக்கும் ஏற்கனவே பகைமை இருந்ததால், உக்கிரபாண்டியனுக்கு இதில் உடன்பாடில்லை. மாமுனிவரே! இந்திரன் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பவன். நான் என் நாட்டு மக்களின் நலன் கருதி யாகங்கள் பல செய்தேன். ஆனால், இந்திரலோகப் பதவியைப் பிடிப்பதற்காக நான் அவ்வாறு செய்வதாக எண்ணிய இந்திரன், வருணன் மூலமாக ஏழுகடல்களையும் மதுரை மீது ஏவிவிட்டான். நான் அவற்றை என் தந்தை சோமசுந்தரர் கொடுத்த வேல் வீசி தடுத்து நிறுத்தினேன். இதனால், அவன் என் மீது ஆத்திரமாக உள்ளான். என்னைப் பகையாளியாகக் கருதும் அவன், சேர, சோழருக்கு வேண்டுமானால் உதவுவான். எனக்கு உதவி மறுப்பானே! எனவே, நான் அவனைப் பார்க்க விரும்பவில்லை. வேறு உபாயம் இருந்தால் சொல்லுங்கள், என பணிவுடன் விண்ணப்பித்தான். அகத்தியர் சிரித்தார்.

உக்கிரபாண்டியா! பகைவர்களையும் நண்பர்களாக மாற்றிக்கொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும். அதற்கு விரதங்களும் உதவும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுமை வேண்டும். அவர்கள் மக்கள் நலன் கருதி, அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். நீ இந்திரனிடம் நட்பு கொள்ள வேண்டுமானால், சோமவார விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அந்த விரதம் பற்றி சொல்கிறேன், கேள்! என்று அறிவுரை கூறினார். மன்னர்களே! சோமவார விரதத்தை கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில் துவங்க வேண்டும். மற்ற மாதங்களாக இருந்தால், வளர்பிறை திங்கள்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அமாவாசையும், திங்கள் கிழமையும் இணைந்து வரும் நாளாக இருக்குமானால் சிறப்பானது. முதல் நாள் சூரியவாரத்தன்று (ஞாயிறு) இரவு முதல் திங்கள்கிழமை இரவு வரை உபவாசம் (பட்டினி) இருப்பது நல்லது. அன்று சிவத்தலங்களுக்குச் சென்று வரவேண்டும். குறிப்பாக, மதுரை மாநகரில் இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கோடிமடங்கு அதிக பலன் பெறுவர். இந்த விரதத்தால் பகைமை நீங்கும். இறைவனிடம் வைத்த வேண்டுகோள் நிறைவேறும், என்று அருளினார். அவர்கள் அந்த விரதத்தை அனுஷ்டிப்பதாக அகத்தியரிடம் உறுதியளித்து விட்டு நாடு திரும்பினர். சோமவார விரதத்தையும் அனுஷ்டித்தனர். சோமவார விரதத்தின் பலனாக இந்திரன் மூவேந்தர்களையும் தேவலோகத்துக்கு வர அழைப்பு விடுத்து புஷ்பக விமானத்தை அனுப்பினான். அவர்கள் தேவலோகம் சென்றனர்.


இந்திரன் அவர்களை வரவேற்று ஆசனம் அளித்தான். சேர, சோழ மன்னர்கள் அந்த ஆசனங்களில் அமர்ந்தனர். உக்கிரபாண்டியன் அதில் அமர மறுத்துவிட்டான். இந்திரன் உயர்ந்த பீடத்தில் இருந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, அவனுக்கு கீழே இருக்கும் வகையில் ஆசனம் அமைத்திருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் வேகமாக பீடத்தில் ஏறினான். இந்திரனுக்கு சமமாக அருகில் இருந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டான். இந்திரனுக்கு தர்மசங்கடமாக இருந்தது. இருக்கையில் இருப்பவனை எழச்சொன்னால், சிறிய விஷயத்தை பெரிதுபடுத்தியது போலவும், தன்னை அற்பனாக பிறர் கருதி விடக்கூடும் என்பதாலும், பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, அதைக் கண்டு கொள்ளாதது போல் நடித்து, அவர்கள் வந்த விஷயத்தைச் சொல்லும்படி கேட்டான். சேர, சோழர்கள் தாங்கள் வந்த விபரத்தைக் கூறினர். இந்திரன் அவர்களிடம், என்னை நம்பி வந்த உங்களுக்கு, நீங்கள் கேட்டது போல மழை பெய்ய ஏற்பாடு செய்கிறேன். ஆனால், இங்கே உக்கிரமாக வந்திருக்கும் உக்கிரபாண்டியருக்கு அதையும் விட சிறந்த பரிசளிக்க எண்ணுகிறேன், என்று சொல்லி, யாரங்கே! அந்த முத்துமாலையை எடுத்து வாருங்கள், என்றான். காவலர்கள் பத்து பேர் சேர்ந்து ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்த முத்து மாலையை மிகவும் சிரமப்பட்டு தூக்கி வந்தனர். அந்த மாலையை அணிந்து கொண்டால், தலையே தொங்கிவிடும். அவ்வளவு கனம். அதை உக்கிரபாண்டியன் முன்னால் வைத்தார்கள். பாண்டியா! அதை எடுத்து அணிந்துகொள், என்றான் இந்திரன்.


இந்திரன் இந்த பரீட்சையை உக்கிரபாண்டியனுக்கு வைப்பதன் மூலம், அவனை அவமானப்படுத்த எண்ணினான். ஏனெனில், அந்த முத்துமாலையை தனிநபரால் தூக்கவே முடியாது. அவ்வாறு தூக்க முடியாமல் உக்கிரபாண்டியன் அவமானப்பட்டு நிற்கும்போது, கைகொட்டி சிரிக்கலாம் என்பது அவனது நினைப்பு! ஆனால், நடந்ததோ வேறு. அந்த மாலையை ஏவலர்கள் இறக்கி வைத்ததும், தன் இடது கையால் லாவகமாக எடுத்த உக்கிரபாண்டியன் கழுத்தில் அணிந்து கொண்டு அட்டகாசமாக நின்றான். இந்திரனும், தேவர்களும் அவனது பலம் கண்டு நடுங்கிவிட்டனர். உக்கிரபாண்டியா! உன் பலம் பாராட்டத் தக்கது. யாராலும் தூக்க இயலாத இந்த மாலையை ஒற்றைக்கையால் எடுத்து அணிந்து கொண்டாய். இனி உன்னை இந்த உலகம் ஆரம் சூழ்ந்த பாண்டியன் என சிறப்பித்து அழைக்கும், என்றான். இந்திரனின் இந்த பாராட்டை உக்கிரபாண்டியன் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. முப்பெரும் மன்னர்களும் இந்திரலோகத்தில் இருந்து புறப்பட்டு நாடு போய் சேர்ந்தனர். சேர, சோழ நாடுகளில் மழை கொட்டியது. பாண்டிய நாட்டில் மட்டும் இந்திரனின் ஆணவத்தாலும், சதியாலும் மழை பெய்யவில்லை. இந்திரனை அடக்கி மழையைக் கொண்டு வருவதற்கான கடும் ஆலோசனையில் உக்கிரபாண்டியன் இருந்தான். அவனும், காந்திமதியும் சோமவார விரதத்தை தொடர்ந்து அனுஷ்டித்தனர். சோமசுந்தரப் பெருமானை மட்டுமே அவர்கள் நம்பினர். அந்த வழிபாட்டுக்கு ஒருநாள் பலன் கிடைத்தது. உக்கிரபாண்டியன் பொதிகைமலை சாரலில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, காளமுகி, துரோணம், புஷ்கலாவருத்தம், சங்காரித்தம் எனப்படும் நான்கு வகை மேகங்களின் அதிபதிகள் அந்த வனத்தில் உலவுவதைக் கண்டான். அவர்கள் இந்திரனின் கட்டளைக் கேற்ப பல திசைகளுக்கும் சென்று மழை பெய்விப்பவர்கள். அவர்களை உக்கிரபாண்டியன் விரட்டிப்பிடித்து கைது செய்தான். அந்த தேவதைகள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகண்டு தேவேந்திரன் கடும் ஆத்திரமடைந்தான். உலகில் எங்குமே மழை இல்லாமல் போய்விடும் இக்கட்டான நிலை ஏற்பட்டது. எனவே, தேவர் படை மதுரையை முற்றுகையிட்டது. அமைச்சர் சுமதி தலைமையிலான படை, தேவர் படைகளை எதிர்த்து கடுமையாகப் போரிட்டது.


தேவர் படைக்கு கடும் சேதம். இந்திரன் என்ன செய்வதென தெரியாமல் தவித்தான். வேறு வழியின்றி யாரையும் அழித்துக் கொன்று விடும் தனது வஜ்ராயுதத்தை உக்கிரபாண்டியன் மீது வீசினான். உக்கிரபாண்டியன் கலங்கவில்லை. தன் தந்தை தெய்வமாவதற்கு முன், தனக்கு அளித்த வளையைக் கழற்றி வஜ்ராயுதத்தை நோக்கி வீசினான். அந்த வளை, வஜ்ராயுதத்தை தூள் தூளாக்கி விட்டு, இந்திரனின் கிரீடத்தைத் தட்டிப் பறித்தது. சற்று தவறியிருந்தாலும், இந்திரனின் தலையே போயிருக்கும். இந்திரன் தலைகுனிந்து நின்றான். தலைவனின் நிலைகண்டு, தேவர் படை அடங்கி ஒடுங்கி உக்கிரபாண்டியனிடம் சரணடைந்தது. உக்கிரபாண்டியன் இந்திரனிடம், இந்திரனே! உன்னை இப்போது என்னால் ஒரு நொடியில் கொல்ல முடியும். ஆனால், எதிரிகளிடமும் பரிவுகாட்டும் இனம் மதுரை மண்ணை ஆளும் பாண்டிய இனம் என்பதைப் புரிந்து கொள். இங்கிருந்து சென்றுவிடு, என்று உயிர்ப்பிச்சை கொடுத்தான். தேவேந்திரன் அவமானத்துடன் தன்னுலகம் சென்றான். மழை பெய்யாததால் உலகமக்கள் கஷ்டப்படுவார்களே என்பதற்காக, மேக தேவதைகளை விடுவிக்கும்படி உக்கிரபாண்டியனுக்கு ஒரு தூதன் மூலமாக ஓலை அனுப்பினான். உக்கிரபாண்டியன் அந்த ஓலையைப் படித்து விட்டு, அவ்வாறு செய்ய இயலாது என்றும், இனி அந்த தேவதைகள் தனக்கு கட்டுப்பட்டு தங்கள் தேசத்தில் மட்டுமே மாதம் மும்மாரி மழை பொழியச் செய்வார்கள், என்றும் பதில் சொன்னான். அப்போது, அவையில் இருந்த ஏகவீரன் என்பவன் எழுந்தான். அரசே! பிடிவாதம் வேண்டாம். இந்த பிடிவாதத்தால் நமக்கு தண்ணீர் கிடைக்கலாம். ஆனால், தண்ணீர் என்பது பொதுவான விஷயம். அது உலகம் முழுமைக்கும் வேண்டும். தயவுசெய்து நீங்கள் மேகாதிபதிகளை விடுதலை செய்யுங்கள். நான் இந்திரனின் நண்பன். அவனோடு பேசி, பாண்டியநாட்டில் தவறாமல் மழை பெய்ய ஏற்பாடு செய்து தருகிறேன். இது உறுதி. என்னை நம்பி இதைச் செய்யலாம், என்றான். முருகனின் அம்சமான உக்கிரபாண்டியனும் சம்மதம் தெரிவித்தான். மேகாதிபதிகள் இந்திரனைப் போய்ச் சேர்ந்தனர். ஏகவீரன் இந்திரனைச் சந்தித்துப் பேசி பாண்டியநாட்டில் மாதம் மும்மாரி பொழிய ஏற்பாடு செய்தான். நாடு மீண்டும் செழித்தது.

கங்கை கரையில் - 10

சார்தாம் யாத்திரை - கேதார்நாத் 

இமயமலையில் உத்தரகாண்ட பகுதியில் அமைந்துள்ள நான்கு முக்கிய தலங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, பத்ரிநாத்  மற்றும் கேதார்நாத் ஆகிய நான்கு தலங்களுக்கும், ஒரே சமயம் தலயாத்திரை செல்வது,  ''சார்தாம் யாத்திரை !'' என்றழைக்கப்படுகின்றது.

Image result for kedarnath god shiva

அந்த வரிசையில் மூன்றாவதாக நம் பார்க்க போகும் தலம் கேதார்நாத் ஆலயம்..

Image result for kedarnath

அம்பலத்தாடும் ஐயனை, மிக்கார் அமுதுண்ண தான் நஞ்சுண்ட நீலகண்டனை, ஜோதிர்லிங்கமாக இமயமலையில் இருந்து கொண்டு அருள்பாலிக்கும் சிவ பரம்பொருளை தரிசிக்க செல்லலாம்..


Image result for gauri kund near kedarnath
கௌரி குண்டம்

 முதலில் கௌரி குளத்தில் குளித்து விட்டு பர்வதராஜன் பொற்பாவையாக பிறந்து சிவபெருமானையே மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தவம் செய்த கௌரி அன்னையை தரிசனம் செய்து , பின்னர்  14  கி.மீ தூரம் நடைப் பயணமாக  மேலே மலை ஏறிச்  சென்று கேதாரீஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும்..

Related image

சீதாப்பூருக்கு அடுத்த ஊர் ராம்பூர், அதற்கு அடுத்து கங்கை நதியும் மந்தாங்கனியும்  சங்கமமாகும் சோன் பிரயாகை. இங்கிருந்து கௌரிகுண்டம் 5 கி.மீ தூரத்தில்  சுமார் 1982 மீ உயரத்தில் அமைந்துள்ளது.  இங்கு தான் மலையன்னை, மலைமகள், வரைமகள், மலையரசன் பொற்பாவை, வரைமகள், பர்வதவர்த்தினி,   உமையம்மை, வரையரசன் பொன் மணி, சைலபுத்ரி, சைலசுதே என்றெல்லாம் அழைக்கப்படும்   அன்னை பார்வதி இமவான் புத்ரியாக பிறந்து , இந்த இமயமலையில் இளமென்பிடியாக வளர்ந்து, சிவபெருமானையே மணாளனாக அடைய வேண்டும் என்று தவம் புரிந்த இடம் ஆகும். அதற்கு பிரமாணம் தருவது போல் அருகில் தலை வெட்டப்பட்ட கணபதி கோவில் உள்ளது.   (அம்மை பார்வதி தான் நீராடும் போது யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரை கேட்டுக் கொண்டதால் சிவ பெருமான் வந்த போதும் அவர் தடுக்க அவர் திரிசூலத்தில் தலையை கொய்த கதை நமக்கு ஞாபகம் வரும்..)

Image result for kedarnath
 
ஆணவம், கன்மம் , மாயை என்னும் மும்மலமாம், தாராகாசுரன், சிங்கமுகன், சூரபத்மன் என்னும் சூரர்களை சம்ஹாரம் செய்ய குமரன் தோன்ற காரணமாக அமைந்த இடமும் இதுதான்.

கௌரி குண்டம் சுக்ல பக்ஷத்தில் (வளர் பிறையில்) மஞ்சள் நிறமாகவும், கிருஷ்ண பக்ஷத்தில் ( தேய் பிறையில்) பச்சை நிறமாகவும் காட்சி தருகின்றது. அருகிலேயே சுடு நீர்  ஊற்றுகள் உள்ளன.

Image result for kedarnath god

(முதல் அவதாரத்தில் ஜகத்ஜனனி, ஜகன்மாதா தக்ஷப்பிரஜாபதியின் மகளாக, சதிதேவியாக பிறந்து வளர்ந்து தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவபெருமானை கரம் பிடித்து, அதற்காக, தக்ஷன் சிவபெருமானை அவமதிக்க ஒரு யாகம் நடத்தி, அதில் சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் தராமல் நடத்த, அந்த முறையற்ற யாகத்தில் தேவர்கள் அனைவரும் கலந்து கொள்ள, அங்கு சென்ற சதிதேவி தனது தந்தையால் அவமானப் படுத்தப்பட்டு அவன் யாகத்தை அழித்து அவம் கொடுத்த உடலையும் அழித்துக்கொண்டு பின் இமவான் மேனை  திருக்குமாரத்தியாக மீண்டும் பிறப்பெடுத்த  கதையை அனைவரும் அறிவோம்...)

  இந்த முறையற்ற யாகத்தில் கலந்து கொண்டதனால் தான் தேவர்கள் அனைவரும் சூரபதமனிடம் சிறைபட்டு துன்பம் அடைந்தனர், அவர்களுக்கு  தனது அம்சமான சிவகுமாரனின் மூலம் விமோசனம் அளித்தவரும் அதே பரம கருணாமூர்த்தி சிவபெருமான் தான்.

கௌரி குண்டம்  வடநாட்டுத் தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று. இங்குள்ள ஆலயமே அநேகதங்காவதமாகும்.
இதில் சந்திர சூரியர் வழிபட்டுப் பேறு பெற்றனர். இதற்குத் திருஞானசம்பந்தரது பதிகம் ஒன்று உள்ளது.

Image result for kedarnath god

 இறைவன் : மனோன்மனி உடனுறை அநேகதங்காவதநாதர்

இறைவி : கௌரி

தேவாரப்பாடல் : திருஞான சம்பந்தர்

தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல வனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே.

 பொருள்:  தந்தத் திந்தத் தடம் என்ற ஒலிக் குறிப்போடு அருவிகள் பாய்ந்து சென்று ஒழுக, வெம்மையான கதிர்களை உடைய கதிரவன் ஒளியும், குற்றமற்ற திங்களின் ஒளியும் பரவ, முடிவு அற்ற அளவுபடுத்த முடியாத அனேகதங்காவதம், எந்தையாகிய, திருநீற்றைப் பூசி மகிழும் சிவபெருமானுக்கு இடமாக உள்ளது என்று அன்னையின் ஞானப்பாலுண்ட ஆளுடையபிள்ளை இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.

கௌரிகுண்டத்தில் குளித்து விட்டு அன்னை கௌரியை தரிசனம் செய்து விட்டு தான் கேதார மலையேற வேண்டும்..
       


அன்னையும் ஐயனும் திடமான பக்தியை நமக்கு தெரியப்படுத்தும் பொருட்டு இந்த கௌரி குண்டத்தில் நடத்திய சிறு திருவிளையாடல் பார்ப்போம்....

 சூரர் கிளை மாய சிவகுமரன் தோன்ற வேண்டும். சிவபெருமானோ யோக தக்ஷிணாமூர்த்தியாக யோகத்தில் ஆழ்ந்திருந்தார், சிவசக்தியோ  இமவான் மகளாக அவதரித்து இமயமலையில் வளர்ந்து வந்தாள். இருவரது  திருமணம் நடைபெற வேண்டி தேவர்கள் மன்மதனை வேண்ட  அவனும் சிவபெருமான் மலர்க்கணை தொடுத்து நெற்றிக்கண்ணால் சாம்பல் ஆனான். ஆயினும் ஐயனின் யோகநிஷ்டை கலைந்தது.நாரதர் பார்வதியிடம் சிவபெருமானை மணாளனாக அடைய தவம் செய்யுமாறு அறிவுறை கூறினார். பெற்றோர்களிடம் அனுமதி பெற்று கௌரி மரவுரி தரித்து  இமயமலையில் கடும் தவம் செய்து வரலானாள். அம்மைக்கு அருள ஐயன் ஜடாமுடி தரித்த ஒரு  கிழ வேதியர் வடிவம் கொண்டு வந்து சேர்ந்தார். அவ்வாறு வந்த வேதியரைக்கண்டு பார்வதி தேவி பெருமகிழ்ச்சியோடு அவரை வரவேற்று உபசரித்து வழிபட்டாள். பின்னர் உணவளித்தாள். பின்னர் உறங்கி எழுந்த அந்த  விருத்தரிடம் அன்னை மலைமகள் “ நீங்கள் எங்கு வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

திருவிளையாடல் தொடரும்...

திருச்சிற்றம்பலம்

கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...

கங்கை கரையில் - 9

சார்தாம் யாத்திரை - பத்ரிநாத் 

ப்ரயாகை என்றால் சங்கமம் அதாவது கூடுதுறை என்று பொருள். இரண்டு நதிகள் கூடும் இடமே ப்ரயாகை.

 இமயமலையெங்கும் எண்ணற்ற சங்கமங்கள் உள்ளன அவற்றுள்  பரம பவித்ரமான அலக்ந்ந்தாவின் ஐந்து சங்கமங்களே இந்த   பஞ்ச ப்ரயாகைகள்.

 இவையனைத்தும் பத்ரிநாத் செல்லும் பாதையில் அமைந்துள்ளன எனவே சார்தாம் யாத்திரை செல்லும் அன்பர்கள் இந்த பஞ்ச ப்ரயாகைகளில் புனித நீராடலாம்..

Image result for panch prayag

1.விஷ்ணு ப்ரயாகை
2.நந்த ப்ரயாகை
3.கர்ண ப்ரயாகை
4.ருத்ர ப்ரயாகை
5.தேவ ப்ரயாகை

Image result for விஷ்ணு ப்ரயாகை

விஷ்ணு ப்ரயாகை:

 சதோபந்த ஏரியிலிருந்து  உற்பத்தியாகி வஸுதரா நீர் வீழ்ச்சியாகியாக விழுந்து ஒடி வரும்   அலக்நந்தா மானா கிராமத்தில் சரஸ்வதி நதியுடன்   கேசவ ப்ரயாகையில் கூடி பத்ரிநாதரின் பாதங்களை கழுவிக்கொண்டு ஓடி வருவதால் விஷ்ணு கங்கை என்னும் நாமத்துடன், தவுலிகிரியிலிருந்து  பாய்ந்து வரும் தவுலி கங்காவுடன் சங்கமம் ஆகின்றாள். இந்த சங்கமம் எனவே  விஷ்ணு ப்ரயாகை என்னும் பெயர் பெற்றது. நாரத முனிவர் இக்கூடுதுறையில்  தவம் செய்து மஹாவிஷ்ணுவின் தரிசனம் பெற்றார்.  இக்குடுதுறையில் எண்கோண விஷ்ணு ஆலயம் உள்ளது.  இதை கட்டியவர் இந்தோர் மஹாராணி அகல்யாபாய் ஆவார். விஷ்ணு குண்டம் மற்றும் காகபுஜண்டர் ஏரி அருகில் உள்ளன். ஜோஷிர்மட்டிலிருந்து 10 கி.மீ தூரத்தில் 1372 மீ உயரத்தில் விஷ்ணு ப்ரயாகை அமைந்துள்ளது..

Related image

நந்த ப்ரயாகை :

அடுத்த கூடுதுறை உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான நந்தாதேவியிலிருந்து ஓடி வரும் நந்தாகினியும், அலக்நந்தாவும் கூடும் சங்கமம் ஆகும். நந்தன் என்னும் மன்னன் யாகம் செய்ததால் இவ்விடம் இப்பெயர் பெற்றது என்பர். மற்றொரு ஐதீகம் யாதவ ரத்தினம் நந்தகோபனும், யசோதையும். வசுதேவரும் தேவகியும் மஹா விஷ்ணு தங்கள் புத்திரனாக வர வேண்டும் என்று வேண்ட கிருஷ்ணாவதாரத்தில் இருவருக்கும் அருள ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தார். கர்ணபிரயாகையில் இருந்து 22 கி.மீ தூரத்தில் 914 அடி உயரத்தில் அமைந்துள்ளது நந்த ப்ரயாகை. கோபாலருக்கு ஒரு ஆலயம் இவ்விடத்தில் உள்ளது. ரூப் குண்ட் நடைப்பயணம் செல்பவர்களை இங்கு அதிகம் காணலாம்.

Related image


கர்ண ப்ரயாகை:

பிண்டாரி பனியாற்றிலிருந்து ஓடி வரும் பிண்டாரி நதியும் அலக்நந்தாவும் சங்கமம் ஆகும் இடம் கர்ண ப்ரயாகை. மஹாபாரதத்து கர்ணனின் பெயரால் இந்த் கூடுதுறை இப்பெயர் பெற்றது. தங்களது மூத்த சகோதரன் கொடை வள்ளல்  கர்ணனுக்கு பாண்டவர்கள் பிண்டதானம் செய்த தலம். தானத்தினால் பெயர் பெற்ற கர்ணனிடம் பாண்டவர்கள் கடைசி ஆசை என்னவென்று கேட்க , எங்கு இறுதி கர்மம் நடைபெறவில்லையோ அங்கு தனக்கு இறுதி காரியம் நடைபெற வேண்டும் என்று கூற, இங்கு ஒரு இடத்தில் அர்ச்சுனன் பாணம் விட பிண்டாரி உற்பத்தியாகி வந்தாள்.  இதன் கரையில் கர்ணனுக்கு ஒரு சிறு கோயில் உள்ளது. மறு கரையில் கிருஷ்ணருக்கும், சிவபெருமானுக்கும், துர்கா தேவிக்கும்  கோயில்கள் உள்ளன. கன்வ முனிவரின் ஆசிரமம் இங்குதான்  இருந்திருக்கின்றது. துஷ்யந்தன் சகுந்தலை காதல் நாடகம் அரங்கேறியதும் இங்குதான். அதைத்தான் காளிதாசன் இயற்றிய அற்புத இலக்கியமாக இயற்றினார். விவேகானந்தர் இங்கு சில நாட்கள் தங்கியுள்ளார்.

Related image

ருத்ர ப்ரயாகை:

கேதார் சிகரங்களிலிருந்து பாய்ந்து வரும் மந்தாங்கினியும், அலக்நந்தாவும் கூடும் கூடுதுறை ருத்ர ப்ரயாகையாகும். இசையில் தன்னை வெல்ல வந்த  நாரத முனிவருக்கு சிவபெருமான் ருத்ரராக காட்சி கொடுத்த தலம். ராகங்களையும் ராகினிகளையும் சிவபெருமான் யாத்த தலம். சதி தேவி யாக குண்டத்தில் தக்ஷன் கொடுத்த உடலை தியாகம் செய்தபின் மலையரசன் பொற்பாவையாக, மலைமகளாக, கௌரியாக மீண்டும் பிறப்பெடுத்த தலம். அன்னை பர்வதவர்த்தினி தவமிருந்து சிவபெருமானை தனது கணவனாக அடைந்த தலம். ருத்ரநாத்ஜீக்கு இங்கு ஒரு ஆலயம் உள்ளது.

Image result for panch prayag

தேவப்ரயாகை:

 கோமுக்கிலிருந்து ஓடிவரும் பாகீரதியும்,  வசுதாராவில் துவங்கி நரநாராயணர் சிகரம் தாண்டி பத்ரிநாதரின் பாதம்  கழுவ ஓடிவரும் அலக்நந்தாவும் சங்கமமாகி கங்கையாக ஓடும் புண்ணிய தலம் இந்த தேவப்ரயாகை. இதன் கரையில் அமைந்துள்ள இரகுநாத்ஜீ ஆலயம்தான்   பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற கண்டம் என்னும் கடிநகர் என்னும் திவ்யதேசம் ஆகும். இராமபிரான் இந்த கூடுதுறையில் தவம் செய்துள்ளார்.

     Related image   

இந்த பிரயாகைகளில் இப்பிரதேச மக்கள்  உத்தராயண புண்ணியகாலமான  மகர சங்கராந்தி, வசந்த பஞ்சமி, மஹா சிவராத்திரி, இராமநவமி ஆகிய புண்ணிய நாட்களில் புனித நீராடி தங்கள் பாவம் போக்குகின்றனர்.

இந்த பிரயாகைகள் நமக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன.

 முதல் பிரயாகையில் தவுலியும் அலக்நந்தாவும் சங்கமம் ஆனால் அதற்குப்பின் தவுலி இல்லை அலக்நந்தாதான், அது போலவே இரண்டாவது சங்கமத்தில் நந்தாங்கினியும் அலக்நந்தாவும் இணைகின்றனர் அதற்குப்பின் நந்தாங்கினி இல்லை, மூன்றாவது பிரயாகைக்குப்பின் பிண்டாரி இல்லை, நான்காவது பிரயாகைக்குப்பின் மந்தாங்கினி இல்லை, ஐந்தாவது சங்கமத்திற்க்குப் பிறகு பாகீரதியும் இல்லை, அலக்நந்தாவும் இல்லை, கங்கையாக மாறுகின்றனர், இறுதியாக கடலில் கலந்தபின் கங்கையே இல்லை. அது போல ஜீவாத்மாக்களாகிய நாம் எண்ணற்ற நாமம் கொண்டாலும் அவையெல்லாம் இறுதியி பரமாத்மாவுடன் இணையும் போது மறைந்து போகும், ஆகவே நான் என்னும் ஆங்காரமும் எனது என்னும் மமகாரமும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதை இந்த ப்ரயாகைகள் நமக்கு உணர்த்துகின்றன.

சார்தாம் யாத்திரையின் நான்காவது தலமான கேதார்நாத் கேதாரீஸ்வரின் பெருமைகளும் , தரிசனமும்.......

திருச்சிற்றம்பலம்

கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...

51 சக்தி பீடங்கள் - 6


தன்னிகரற்ற தரணி பீடம்

தமிழகத்தில் அமைந்துள்ள குற்றாலம் பராசக்தி பீடம், அகத்தியரால் வழிபடப்பெற்ற சிறப்புடையது. தேவியின் சக்தி பீடங்களில் இது, பராசக்தி பீடம் என்று வணங்கப்படுகிறது. திருக்குற்றாலத்தில் அருளும் அம்பிகை, குழல்வாய்மொழி அம்மை என்ற அழகுப் பெயர் கொண்டுள்ளாள். மூலவரான குற்றாலநாதரின் சந்நதிக்கு வடதிசையில் 51 சக்தி பீடங்களில் ஒன்றான தரணிபீடம், யோகபீடம் மற்றும் பராசக்தி பீடம் என்றெல்லாம் அழைக்கப்படும் சந்நதி சிறுகோயிலாக அமைந்துள்ளது. இது சிவன் சிற்பரையின் மந்திர சக்திகள் அடங்கிய ஆலயம். இங்கு பராசக்தியானவள் அரி, அயன், அரன் மூவரையும் படைத்து அருளினாள். இவளின் சந்நிதானத்தில் தாணுமாலயப் பூந்தொட்டில் ஆடிக்கொண்டே இருக்கிறது. மலையுருவாய் மிளிர்கின்ற அம்பிகை, ஆலயத்தினுள்ளே மேரு உருவாகவும் திகழும் சிறப்பைக் கொண்டவள். திரிகூடமலை என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. இங்கு நான்கு வேதங்களும் நான்கு வாயில்களாக விளங்குகின்றன.

திருக்குற்றாலம் முதலில் விஷ்ணுத் தலமாக இருந்து, அகத்தியரால் பின்னர் சிவத்தலமாக மாற்றப்பட்டது.
சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை குழல்வாய்மொழி அம்மையாகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றினார் என்பார்கள். இங்கு பராசக்தி, ஸ்ரீசக்ரமேரு அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவிலேயே அருட்சுடரை பரப்புகிறாள். பூமாதேவியாக இருந்தவளே இந்த அம்பிகை என்பதால் பூமி எனும் பொருளிலேயே தரணி பீடம் எனும் பெயர் பெற்று விளங்குகின்றது. ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இப்பீடம் இருப்பதாக நம்பிக்கை. எனவே, பெளர்ணமி இரவில் நவசக்தி பூஜை நடத்தப்படுகிறது. அப்போது, பாலும் வடையும் நிவேதனமாக படைக்கப்படுகின்றன. பராசக்தி உக்கிர ரூபியாக இருப்பதாலேயே இவளுக்கு எதிரேயே காமகோடீஸ்வரர் எனும் திருப்பெயரில் ஈசன் லிங்கமாக பிரதிஷ்டை ஆகியுள்ளார். பெளர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனையோடு விசேஷ பூஜைகள் நிகழ்த்தி வழிபட்டால் எண்ணியது ஈடேறும். இங்கு நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.

ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தின்போது குற்றாலநாதர், குழல்வாய்மொழி இருவரும் அகத்தியர் சந்நதிக்கு அருகே எழுந்தருளி, அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தருள்கின்றனர். குற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூடநாதர், திரிகூடாசலேஸ்வரர் என்றெல்லாம் பல்வேறு திருப்பெயர்களின் அழைக்கப்படுகின்றார் இத்தல ஈசன். சுயம்பு லிங்கமாக கிழக்கு திக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அதுபோல குழல்வாய் மொழியம்மை சந்நதி, ஈசனின் சந்நதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை அழகும் அருளுமாக கோலோச்சுகின்றாள். பிராகார வலம் வரும்போது அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படும் பராசக்தி பீடத்தை தரிசிக்கலாம். அதிகாரநந்தி, சூரியன், கும்பமுனி, எதிரில் கோஷ்ட மூர்த்தமாகவுள்ள தட்சிணாமூர்த்தி, விநாயகர், சப்தகன்னியர் முதலிய சந்நதிகளையும் தரிசிக்கலாம். பஞ்சபூத லிங்கங்கள், நன்னகரப் பெருமாள், சுப்பிரமணியர், சனிபகவான் சந்நதிகளும் உள்ளன.

தலதீர்த்தங்களாக சிவகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆகியவை விளங்குகின்றன.

தலவிருட்சம், குறும்பலா. இந்தப் பலா மரத்தில் வருடம் முழுவதும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்தப் பலாவிலுள்ள சுளைகள், லிங்க வடிவிலிருப்பதைப் பார்க்க பரவசமாகிறது. இக்கோயில் சங்கு வடிவில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பிலிருந்து இதைக் காணலாம். நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபை இங்கே அமைந்திருக்கிறது. குற்றாலநாதர் கோயிலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் தனிக்கோயிலாக உள்ளது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. சுற்றிலும் மதில் சூழ்ந்திருக்கிறது. மரத்தாலான, அற்புதமான வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது இந்த சித்திர சபை. மரக்கோயிலின் கூரை சிதம்பரத்தை நினைவூட்டுகிறது. இந்த சபையில் இரண்டு மண்டபங்கள். ஒன்றில் நிறைய சாளரங்கள். இதன் நடுவே ஒரு சிறு மேடையைக் காணலாம்.

திருவாதிரை நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து காட்சி அருள்கிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புதமான, அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களையும் அந்தச் சித்திரங்களில் கண்டு மகிழலாம். கிழக்கு நோக்கியுள்ள சித்திர சபையின் உள்ளேயிருக்கும் நடராஜர் தெற்கு நோக்கியுள்ளார். கயிலையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தின்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இறைவன் அகத்தியரிடம் தென்திசைக்குச் சென்று இரண்டு திசையையும் சமமாக வைக்குமாறு ஆணையிட்டார். ஆனால், இறைவனின் திருக்கல்யாணத்தையும், திருநடனத்தையும் காண இயலாதே என வருந்தினார் அகத்தியர். இறைவன் திரிகூடமலையின் மகிமையைக் கூறி அங்கு விஷ்ணுவாக இருந்த தம்மை சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜித்து வழிபட தம் கல்யாண வைபவத்தையும் நடனத்தையும் காணலாம் என்று கூறி அனுப்பி வைத்தார்.

அகத்தியரும் அவ்வாறே சென்று வைணவர் வேடம் பூண்டு கோயிலுக்குள் சென்று திருமாலைக் குறுக்கி வேதமந்திரத்தால் சிவலிங்கமாக்கி வழிபட்டார், அன்று முதல் இக்கோயில் சிவத்தலமாகியது. வைணவர்கள் விஷ்ணு மூர்த்தியை காணாது திகைத்து அகத்தியரை நிந்தித்தனர். அவர் அவர்களிடம் கோயிலின் தென்மேற்கு மூலையில் விஷ்ணு மூர்த்தத்தை வைத்து பூஜை செய்யுமாறு அறிவுறுத்தினார். அதன்படி அவர்கள் சிவனுக்கும் திருமாலுக்கும் பொதுப் பெயர்களைச் சொல்லி பாடி ஆலயத்திற்குள் சென்றனர். அகத்தியர் திருமாலை சிவனாக்க தன் கைகளால் தொட்டதால் சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் ஐந்து விரல்களும் பதிந்த வடு உள்ளது. முனிவர் தொட்டு அமுக்கியதால் உண்டான தலைவலி நீங்கவே இன்றும் சிவலிங்கத்திற்கு தைலாபிஷேகம் நடைபெறுகிறது என்கிறார்கள்.

அபிஷேகிக்கப்பட்ட மகா சந்தனாதித் தைலம் கோயில் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. இது பல மூலிகைகள், வேர்கள் மற்றும் மருந்துகள் சேர்த்து மருத்துவ முறைப்படி பக்குவமாக காய்ச்சப்படுவது. தலைவலி, வயிற்று வலி க்ஷயரோகம் (எலும்புருக்கி) முதலான கொடிய நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன் படுகின்றது. ‘குற்றாலநாதருக்கு வற்றாக் குடி நீரும் மாறாத் தலையிடியும்’ எனும் சொலவடை வழக்கில் உள்ளது திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் பதிகம் பாடிய தலம். தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் 13வதாகத் திகழ்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென் காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது.

வட இந்திய அட்சர சக்தி பீடங்கள் (ஈம்)

பீடத்தின் பெயர் கரவீரம் எனும் சர்க்காராம். தேவியின் முக்கண்கள் விழுந்த இடம். பீட சக்தியின் நாமம் மஹிஷமர்த்தனி. அக்ஷர சக்தியின் நாமம் ஈஷித்ரி. இப்பீடத்தை க்ரோதீசர் எனும் பைரவர் காவல் காக்கிறார். சர்க்காராம் என்றும், கரவீர பீடம் என்றும் வழங்கப்படும் கொல்ஹாபூர் மகாலட்சுமி ஆலயம் மும்பையிலிருந்து 395 கி.மீ. தொலைவில் உள்ளது.

51 சக்தி பீடம் - 5


திருவருள் பெருக்கும் திருவானைக்கா தேவி


திருவானைக்காவல், எனப்படும் திருவானைக்கோயில், திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெயிலிலும், மழையிலுமாகக் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாதபடி காத்தது. யானை காவிரி ஆற்றிலிருந்து துதிக்கையால் நீர் கொண்டுவந்து அபிஷேகித்து வழிபட்டது.

யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலை பின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி, அதன் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவற்றின் பக்தியை மெச்சிய சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறுபிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோயில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோயில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோயில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து, பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாம். இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்கிறார்கள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உட் பிராகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக (அப்பு என்றால் நீர்) எழுந்தருளியுள்ளார். நாகப்பழ மரத்திற்கு கீழே இறைவன் தோன்றியதால் அவருக்கு ஜம்புகேஸ்வரர் என்றுபெயர். இந்த லிங்கம், தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருந்தாலும் கருவறையில் இந்நீர்க் கசிவு வற்றுவதில்லை!

எனவே ஐப்பசி பெளர்ணமி தினத்தன்று செய்ய வேண்டிய அன்னாபிஷேகத்தை இத்திருத்தலத்தில் வைகாசி பெளர்ணமியன்று செய்கின்றனர். ஜம்புலிங்கேஸ்வரரை, கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாகத்தான் தரிசிக்க முடியும். வீணையில்லா சரஸ்வதி, தேவியருடன் சந்திரன், பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டா தேவியுடன் சனிபகவான், அருணகிரியின் விருப்பத்திற்கிணங்க காமத்தை அசுரனாக்கி அவனை அடக்கிய முருகப்பெருமான் என பல அரிய சந்நதிகளை இத்தலத்தில் தரிசிக்கலாம். நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிராகாரங்களும் கொண்ட கோயில் இது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நதி நான்காம் பிராகாரத்தில் உள்ளது.

தனி சந்நதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலத்துக்கெல்லாம் ஈஸ்வரியான இந்த நாயகி காட்சி தருகிறாள். இவளுடைய ஆட்சித்தலம், திருவானைக்கா. அகிலாண்டேஸ்வரி அணிந்திருக்கும் காதணிகள் (தாடகங்கள்) பெரிதானவை, பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். அம்பாள் முன்னொரு காலத்தில் மிகஉக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபட மிகவும் அச்சமுற்றதாகவும், அச்சமயம் இங்கு வந்த ஸ்ரீஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் எனும் இந்த இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்றும் தலவரலாறு கூறுகிறது. பின்னாளில் முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்து அன்னையின் உக்கிரத்தை மேலும் தணித்தார்கள். 51 சக்தி பீடங்களில் இத்தலம் ஞானபீடமாகத் திகழ்கிறது.

அகிலாண்டேஸ்வரி, வாராஹி தேவியின் அம்சமாக வணங்கப்படுகிறாள். உயரமான குத்துவிளக்கு தீபம் அசைய அந்த அசைவின் ஒளியில் புன்னகையோடு வீற்றிருக்கும் அகிலாண்டேஸ்வரியின் தரிசனத்தால் இருளில் தவிக்கும் பல குடும்பங்கள் ஒளி பெற்று விளங்குகின்றன. இந்த அம்மனுக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீவித்யா பூஜை வைதீக முறைப்படி செய்யப் படுகிறது. ஆடி வெள்ளியில் அகிலாண்டேஸ்வரியை மாணவியாக பாவித்து, இத்தல ஈசனான ஜம்புகேஸ்வரர் குருவாக இருந்து உபதேசம் செய்வதாக ஐதீகம். எனவே, அன்று மாணவ, மாணவியர் அதிகம் பேர் வந்து, தம் கல்வி மேம்பட வேண்டி செல்வர். அதனால் இத்தலத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருமண வைபவம் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று இத்தல பள்ளியறைக்கு மீனாட்சி-சுந்தரேஸ்வரரே எழுந்தருள்கின்றனர்.

அந்தணர் ஒருவர் வாக்சித்தி பெற அகிலாண்டேஸ்வரியை உபாசித்து வந்தார். ஒருநாள் அவருக்கு திருவருள் புரிய தாம்பூலம் தரித்த நிலையில் ஒரு சாதாரண மானிடப் பெண்ணாக அந்த அந்தணரை அணுகிய அகிலாண்டேஸ்வரி ‘நான் இந்த தாம்பூல ரசத்தை தங்கள் வாயில் உமிழவா?’ எனக் கேட்டாள். அதனால் கோபமுற்ற அந்த அந்தணர் அவளை கடிந்து கொள்ள, அப்போது ஆலயத்தை கூட்டி பெருக்கும் வரதர் எனும் அடியவர், ‘ஆலயம் தூய்மையாய் இருக்க வேண்டும். அதனால் என் வாயில் அந்த தாம்பூல ரசத்தை துப்புங்கள்,’ எனக்கூற தேவி அவன் வாயில் அந்த தாம்பூல ரசத்தை சேர்த்தாள். அந்த வரதரே பின்நாளில் கவி காளமேகமாய் புலமை பெற்றார்! அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகின்றன.

உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இங்கு இருக்கும் ஜம்புலிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒருமுறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட காவேரியிலிருந்து சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்து அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தாள். மற்றொரு சந்நதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது. இந்த லிங்கத்தை வழிப்பட்டு, சிவனருளால் அழகாபுரிக்கு அதிபதியானான் குபேரன். பல அரிய சிற்பங்களை இத்தலத்தில் கண்டு மகிழலாம்.

அவற்றில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சந்நதிக்கு இடதுபுறம் அமைந்துள்ள வெளிப்பிராகாரத் தூணில் இந்த சிற்பம் காணப்படுகின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவை அன்னை சந்நதிக்கு வெளியே உள்ள ஒரு தூணில் காணலாம். ஏகநாதர், மும்மூர்த்திகளும் சமமானவர்; மூவரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்குகிறார். நான்கு கால் தூணில் உள்ள ஆரணங்குகள் எல்லோர் மனதையும் கவருகின்றனர். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரமிக்க வைக்கிறது. சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமன்றி, விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் ஆற்றிய திருப்பணிகளை 154 கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. இவ்வாலயம் காலை 7 முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். திருவருள் பெருக்கும் திருவானைக்கா தேவியின் தாள்கள் பணிவோம்.

51 சக்தி பீடங்கள் - 4


மங்கலங்கள் அருள்வாள் மதுரை மீனாட்சி

சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியதாகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை தூக்கி ஆடிய கோலத்தில்தான் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேஷம். ஆலவாய், சிவராசதானி, பூலோக கயிலாயம், கடம்பவனம், கூடல், நான்மாடக் கூடல், மதுரை ஆகியவை இத்தலத்திற்குரிய பல்வேறு பெயர்கள். திருபாற்கடலை கடைந்தபோது நாகம் உமிழ்ந்த விஷத்தை இறைவன் அமுதாக மாற்றி மதுரமாக்கினமையால் இத்தலம் மதுரை என்று பெயர் பெற்றதென்பர்.

கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றி கூறியதால், அவன் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்றும் இத்தலம் அழைக்கப்பட்டது.

விருத்திராசூரனை கொன்ற இந்திரன், கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டான். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானம், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்தக் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. தெற்குக் கோபுரம் மிக உயரமானது - 160 அடி. இக்கோயிலினுள் உள்ள பொற்றாமரைக் குளம் ஓர் ஏக்கர் பரப்பு கொண்டது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபட்டு அழகிய நுணுக்கங்களைக் கொண்டு, தனித்தனிச் சிறப்புகளையும் உள்ளடக்கியுள்ளன. மீனாட்சி அம்மன் சந்நதியின் முன்னே எட்டு சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் அமைந்துள்ளது.

வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாட்சி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள எட்டு தூண்களில் கவுமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, யக்ஞரூபிணி, ஷியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி ஆகிய எட்டு சக்திகள் அழகுற காட்சியளிக்கின்றனர். இவர்களை வணங்குவோர் மனோ தைரியம் கொண்டவர்களாக விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. ஒருகாலத்தில் இது அன்னதான மண்டபமாக இருந்தது. பின்னாளில் ஆவணி மூல வீதி ஏற்பட்ட பிறகு தெற்கு ஆவணி மூலவீதியில் அமைக்கப்பட்ட சோற்றுக்கடைகளில் அன்னதானம் செய்யப்பட்டது. எனவே இங்குள்ள ஒரு தெருவுக்கு சோற்றுக்கடைத்தெரு என்றே இன்றும் பெயர்! மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம் ஆகியவற்றையும் காணலாம்.

மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் இறைவி மீனாட்சி அன்னையின் சந்நதியை தரிசிக்கலாம். கருவறையில் அன்னை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் ஆயகலைகளின் முழு வடிவாகிய கிளியை ஏந்தி, நின்றபடி அருளாட்சி புரிகின்றாள். அவளிடம் கிளி இருக்க காரணம் என்ன? பக்தன் தன் கோரிக்கையை அன்னையிடம் சொல்ல, அதை கவனமாகக் கேட்கும் கிளி, அவளிடம் அதை திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டுகிறதாம்; இதனால், நமது கோரிக்கை விரைவில் நிறைவேறுகிறதாம்! சுவாமி, கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர், சிவலிங்கத் திருமேனியராகத் திகழ்கிறார். அம்மன் சந்நதி நுழைவாயிலில் சங்கிலி மண்டபம் உள்ளது. மேலும், நூற்றுக்கால் மண்டபம், புது மண்டபம் எனும் வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் போன்றவையும் எழிலுற அமைந்துள்ளன.

மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதியில் ஐந்து இசைத் தூண்கள், ஆயிரங்கால் மண்டபத்தில் இரு இசைத் தூண்கள் உள்ளன. இங்கே சித்திரைத் திருவிழா, முடிசூட்டு விழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி விழா, வைகாசி கோடை வசந்த விழா, ஆனி ஊஞ்சல் உற்சவம், ஆடி முளை கொட்டுத் திருவிழா, ஆவணி மூலம், புரட்டாசி நவராத்திரி கொலு, ஐப்பசி கோலாட்ட உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி எண்ணெய் காப்பு விழா, தை மாத தெப்பம், மாசி மாத மண்டல உற்சவம், பங்குனி மாத உத்திரம், சாரதா நவராத்திரி போன்ற விழாக்கள் விமரிசையானவை.

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில் (சென்னை)


மூலவர் : மாசிலாமணீஸ்வரர் 

உற்சவர் : - 

அம்மன்/தாயார் : கொடியிடை நாயகி 

தல விருட்சம் : முல்லை 

தீர்த்தம் : அக்னி தீர்த்தம் 

ஆகமம்/பூஜை : சிவாகமம் 

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் 

புராண பெயர் : திருவடமுல்லைவாயல் 

ஊர் : வடதிருமுல்லைவாயில் 

பாடியவர்கள்: சுந்தரர் 

தேவாரப்பதிகம் 

திருவும் மெய்ப் பொருளும் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள் என்று எண்ணி ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன் முருகமர் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. -சுந்தரர் 

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 22வது தலம். 

திருவிழா: 

வைகாசி பிரம்மோற்ஸவம், மாசித்தெப்ப விழா, ஆனியில் வசந்த உற்சவம். 

தல சிறப்பு:

 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், 

இத்தலத்தில் உள்ள சுயம்புலிங்கம், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். வெட்டுப்பட்ட காயத்தை குளிர்விக்கும் வகையில், ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அருளும் இவர், சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தனக்காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் காட்சி தருகிறார். அந்நேரத்தில் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கப்பெற்று, முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. இவருக்கு அபிஷேகம் இல்லாததால், ஒரு பாதரசலிங்கத்தை தனிச்சன்னதியில் வைத்து பூஜிக்கிறார்கள்.மூலவரின் விமானம் கஜப்பிருஷ்ட (யானையின் பின்பகுதி) அமைப்புடையது. 

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 255 வது தேவாரத்தலம் ஆகும். 

பொது தகவல்: 

இத்தலத்து விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருளுகிறார். 

பிரார்த்தனை:

 பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நேரங்கள் தவிர்த்த பிற நேரங்களில் இங்குள்ள நந்திக்கு பூஜை செய்து சாத்திய மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கும் என்பது ஐதீகம் 

நேர்த்திக்கடன்: 

பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறியவுடன் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்கிறார்கள். தலபெருமை: இங்குள்ள நந்தி அசுரர்களை அழிப்பதற்காக மன்னருக்கு துணையாகச் சென்றதால், சுவாமியை பார்த்தபடி இல்லாமல், எதிர்த்திசையை நோக்கி திரும்பியபடி உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. சூரியனுக்கு மட்டும் தனி சன்னதி உண்டு. அம்பாள் கொடி போன்ற அழகிய இடையுடன் இருப்பதால், கொடியிடைநாயகி எனப்படுகிறாள். வெள்ளிக்கிழமை பவுர்ணமி தினத்தில் இவளை வணங்கினால் பாவவிமோசனம் கிடைக்கும் என்பதும், இத்தலத்து வரலாற்றை கேட்டாலே முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பிரகாரத்தில் சோழபுரீஸ்வரர், லவ குசர்கள் வணங்கிய குசலபுரேஸ்வரர், வள்ளி, தெய்வானையுடனான சுப்பிரமணியர் உள்ளனர்.

 தல வரலாறு: 

பல்லாண்டுகளுக்கு முன்பு, வனமாக இருந்த இப்பகுதியில் தங்கியிருந்த வாணன், ஓணன் எனும் இரண்டு அசுரர்கள் முனிவர்களை துன்புறுத்தினர். அவர்களை விரட்ட வந்த தொண்டைமான் மன்னன் போரிட்டும் வெல்ல முடியாமல் திரும்பினான். அப்போது, பட்டத்து யானையின் கால் ஒரு முல்லைக்கொடியில் சிக்கிக் கொண்டது. மன்னன், யானையின் மீது இருந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டினான். வெட்டப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. அவன் பயந்து போய், கீழே இறங்கி பார்த்தபோது, மண்ணிற்கு அடியில் இருந்த லிங்கத்தை பார்த்தான். லிங்கத்தின் மீதிருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டான். சிவபெருமானின் வடிவமான லிங்கத்தை வெட்டிய வருத்தத்தில், உயிரையே மாய்க்கச் சென்றான். அப்போது சிவன் அவனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், அம்பாளைக் கூட அழைக்காமல் தனியாக மன்னனுக்கு காட்சி தந்தார், " வெட்டுப்பட்டதற்காக வருந்த வேண்டாம் என்றும், வெட்டுப்பட்டாலும் மாசு இல்லாத தூய மணியாகவே விளங்குவோம்' என்றும் கூறி அருள் செய்தார். அதன்பிறகு இங்கு வந்த அம்பாள் சுவாமிக்கு வலதுபுறத்தில் எழுந்தருளினாள். பின் சிவன், நந்தியை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லும்படி செய்தார். மன்னன், அசுரர்கள் வைத்திருந்த இரண்டு வெள்ளெருக்கம் தூண்களை எடுத்து வந்து இவ்விடத்தில் வைத்து, மாசிலாமணீஸ் வரருக்கு கோயில் கட்டினான். இவ்விரு தூண்களும் சிவன் கருவறைக்கு முன்பு தற்போதும் உள்ளதைக் காணலாம். 

சிறப்பம்சம்: 

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் (சென்னை )


மூலவர் : மருந்தீஸ்வரர் 

உற்சவர் : தியாகராஜர் 

அம்மன்/தாயார் : திரிபுரசுந்தரி 

தல விருட்சம் : வன்னி 

தீர்த்தம் : பஞ்ச தீர்த்தம் 

ஆகமம்/பூஜை : காமீகம் 

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் 

புராண பெயர் : திருவான்மீகியூர், திருவான்மியூர் 

ஊர் : திருவான்மியூர் 

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார் 

தேவாரபதிகம் 

மந்த மாகிய சிந்தை மயக்கறுத்து அந்த மில்குணத்து ஆனை யடைந்துநின்று எந்தை ஈசனென் ஏத்திட வல்லீரேல் வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே. -திருநாவுக்கரசர் 

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம். 

திருவிழா: 

பங்குனி பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, பவுர்ணமி, கிருத்திகை. 

தல சிறப்பு: 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 258 வது தேவாரத்தலம் ஆகும். 

பொது தகவல்: 

இத்தல விநாயகரின் திருநாமம் விக்னேஸ்வரர். ராஜகோபுரம் 5 நிலை உடையது. நைவேத்தியம் பொங்கல் படைக்கப்படுகிறது. 

பிரார்த்தனை:

 சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும், சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

நேர்த்திக்கடன்: 

சிவனுக்கும் அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வணங்குதல். 

தலபெருமை: 

தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். அப்போது, வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே இத்தலம் விளங்குகிறது. பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இவ்விடத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜர், அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளன. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. சுவாமிக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உள்ளது. 

அகத்தியருக்கு உபதேசம்: 

அகத்திய முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகளைக்குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் "மருந்தீஸ்வரர்' எனப்படுகிறார். 

மேற்கு திரும்பிய சிவன்: 

அபயதீட்சிதர் எனும் பக்தர் ஒருவர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண வரமுடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை மட்டும்தான் தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட அவர், "சிவனே! உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ?' என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். 

தல வரலாறு: 

வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை கருடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர், அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார். கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் கேட்க, இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி, இங்கு வந்த காமதேனு சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால், இங்குள்ள இறைவன் "பால்வண்ணநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார். கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, திருந்திட எண்ணம் கொண்டு இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை, அவர் சிவனை தரிசிக்க வந்தபோது, அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த லிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட, சுவாமியின் தலையிலும், மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.

சிறப்பம்சம்: 

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி (சென்னை)


மூலவர் : திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் 

உற்சவர் : -

 அம்மன்/தாயார் : ஜெகதாம்பிகை 

தல விருட்சம் : பாதிரி, கொன்றை 

தீர்த்தம் : பரத்வாஜ் தீர்த்தம் 

ஆகமம்/பூஜை : காமீகம் 

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் 

புராண பெயர் : திருவலிதாயம் 

ஊர் : பாடி, திருவலிதாயம் 

 பாடியவர்கள்:  திருஞான சம்பந்தர், அருணகிரி 

தேவாரப்பதிகம்

பத்தரோடு பலரும் பொலியம்மலர் அங்கைப் புனல்தூவி ஒத்தசொல்லி உகத்தவர்தாம் தொழுது ஏத்த உயர் சென்னி மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம் சித்தம் வைத்த அடியாரவர் மேலடை யாமற்றிடர் நோயே. - திருஞானசம்பந்தர் 

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 21வது தலம். 

திருவிழா: 

சித்திரையில் பிரம்மோற்ஸவம், தை கிருத்திகை, குரு பெயர்ச்சி.

 தல சிறப்பு: 

மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது.

 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 254 வது தேவாரத்தலம் ஆகும். 

பொது தகவல்: 

விநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர். ராஜகோபுரம் மூன்று நிலை உடையது.

 பிரார்த்தனை:

 சுவாமியை வணங்கிட திருமணத்தடை, நோய்கள் நீங்கும், தெட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பவுர்ணமியில் சுவாமியை வழிபட்டால் நற்பேறு கிடைக்கும். 

நேர்த்திக்கடன்: 

வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் குரு சம்பந்தப்பட்ட தோஷம் விலகும். 

தலபெருமை: 

குருதலம்:

வியாழன், தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும், குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.) 

பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும் விநாயகர் இத்தலத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. 

இத்தலம், நடுநாயகமாக இருக்க சுற்றிலும் மாலையிட்டது போல 11 திருத்தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு. 

இத்தலத்திற்கு வந்தாலே முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். 

பிரகாரத்தில் சுவாமியை நோக்கியபடி தனி சன்னதியில் குருபகவான், சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. சிவன், தனக்கு பூஜை பெறுவதை உரிமையாக உடையவர் என்பதால் இவர், "பலிதாயர்' என்றும் அழைக்கப்படுகிறார். பலி என்றால் பூஜை, தாயம் என்றால் உரிமை என்று பொருள். 

தல வரலாறு: 

வியாழபகவானின் மகனான பரத்வாஜர், கரிக்குருவியின் (வலியன்) பிள்ளையாக பிறந்தார். தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர், பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவேதான், இத்தலம் "திருவலிதாயம்' என்றும், சிவன் "வலியநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

சிறப்பம்சம்: 

அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது.

அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர் (சென்னை)


மூலவர் : கபாலீசுவரர் 

உற்சவர் : -

அம்மன்/தாயார் : கற்பகாம்பாள் 

தல விருட்சம் : புன்னை மரம் 

தீர்த்தம் : கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், இராம தீர்த்தம் 

ஆகமம்/பூஜை : காமீகம் 

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் 

புராண பெயர் : கபாலீச்சரம், திருமயிலாப்பூர் 

ஊர் : மயிலாப்பூர்

பாடியவர்கள்: திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் 

தேவாரப்பதிகம் 

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் -திருஞானசம்பந்தர் 

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 24வது தலம்.

 திருவிழா:

 பங்குனிப் பெருவிழா - பங்குனி -10 நாட்கள் அறுபத்துமூவர் திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின் போது கோயிலில் கூடுவர் பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோச நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர் தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் மற்றும் பிற விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். தவிர மாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது. 

தல சிறப்பு:

 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257 வது தேவாரத்தலம் ஆகும். 


பொது தகவல்: 

இத்தல விநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 

இத்தலத்து முருகப்பெருமான் (சிங்கார வேலர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். 

சிவபெருமான், உமையவளோடு சேர்ந்து திருமால், பிரம்மா, வியாக்ரபாதர், பதஞ்சலி மற்றும் தில்லைவாழ் அந்தணர்களுக்கு நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச திருநாளாகும்.

 இந்நாளில் சிவபெருமானை தரிசித்தால், பரமானந்த நிலை என்னும் பிறப்பற்ற நிலை பெறலாம் என்பது ஐதீகம். 

இவ்விழா இக்கோயிலில் ஒருகாலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தரும் இவ்விழாவை குறிப்பிட்டு பதிகம் பாடியிருக்கிறார். 

இங்கு தைப்பூசத்தை ஒட்டிய பவுர்ணமியன்று நடக்கும் தெப்பத்திருவிழாவில் சிவபார்வதியுடன், சிங்காரவேலரும் எழுந்தருளுகின்றார். அன்று கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சன்னதி இருக்கிறது. அருகில் சம்பந்தரும் இருக்கிறார். 

வாயிலார் நாயனார் அவதரித்த தலம். இவருக்கும் தனிசன்னதி இருக்கிறது. 

பிரார்த்தனை:

 இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு. உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் குணமடைகிறது. கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும். 

நேர்த்திக்கடன்: 

நோயால் பாதக்கப்பட்டவர்கள் இத்தலத்தின் முக்கிய திருவிழாவான அறுபத்து மூவர் திருவிழாவின் 8 ம் நாளில் மண்பானையில் சர்க்கரை வைத்து விநியோகம் செய்கிறார்கள். தவிர அம்பாளுக்கு புடவை சாத்துதல், சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் அபிசேகம் ஆகியவை செய்யலாம். 

தலபெருமை: 

உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். 

முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். 

பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். 

நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். 

சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். 

இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். 

திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம்.

 பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். 

ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம். 

சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். 

வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம் 

ஹை லைட்ஸ் மயிலாப்பூர் :

 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி என்பவர் இவ்வூரை மல்லியார்பா என குறிப்பிடுகிறார்.மயில்கள் மிகுதியாக இருந்து ஆர்த்தெழுந்திருந்த காரணத்தால் இத்தலம் மயில் ஆர்ப்பு எனப் பெயர் பெற்றது. பின்னர் வழக்கில் மயிலாப்பு என்றாகி பின்பு மயிலாப்பூர் ஆகிவிட்டது. 

கபாலீசுவரம் : 

பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று செருக்கடைய, அவன் நடுச்சிரத்தைக் கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் கபாலம் ஏந்திய ஈசுவரன் கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது கபாலீசுவரம் எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. 

இலக்கிய சிறப்பு : 

திருமயிலையைப் பற்றியும் கபாலீசுவரரை பற்றியும் எழுந்த முதல் இலக்கியம் திருஞானசம்பந்தர் பாடிய "மட்டிட்ட புன்னையங் கானல்...' எனத் தொடங்கும் பதிகமேயாகும். இப்பாடல்கள் மூலம் திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிகர் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். இவரது மகள் பூம்பாவையை, ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க முடிவு செய்தார். இந்நேரத்தில் மலர் பறிக்கச்சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிர் இழந்தாள். அவளை தகனம் செய்த சிவநேசர், அஸ்தியையும், எலும்பையும் ஒரு குடத்தில் போட்டு வைத்துவிட்டார். சம்பந்தர் இங்கு வந்ததும் நடந்ததை அறிந்து, சாம்பல் வைத்திருக்கும் குடத்தை கொண்டு வரக் கூறினார். 

அப்போது சம்பந்தர் சிவனை வேண்டி, ""மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான் நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்'' என்று பதிகம் பாடினார். ""மண்ணில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நடத்தப்படும் தைப்பூசம் என்னும் நல்விழாவை காண்பதே பிறவிப்பயனாகும். அவ்விழாவைக் காணாமல் நீ சென்றுவிட்டது உனக்குத்தானே நஷ்டம்,'' என்ற ரீதியில் இந்தப்பாடல் அமைந்தது. 

அவர் பாடியதும், பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். அவளை திருமணம் செய்து கொள்ளும்படி சிவநேசர் சம்பந்தரிடம் வேண்டினார். உயிர் இழந்தவளுக்கு மீண்டும் உயிர் அளித்ததால், அவள் எனக்கு மகளாகிறாள் எனச்சொல்லி சம்பந்தர் மறுத்து விட்டார். பூம்பாவையும் இறுதிவரை சிவப்பணியே செய்து சிவனடி சேர்ந்தாள். இவர் பாடிய 11 பாடல்களில் முதல் 10 பாடல்கள் பூம்பாவையை அழைக்கும் முறையில் உள்ளன. இப்பதிகத்தில் இத்தலத்து ஈசனையும் கோயில் பற்றியும் மயிலாப்பூர் பற்றியும் அழகுறக் கூறுகிறார். 

யானையில் தேவியர்: 

சூரனை வதம் செய்யும் முன்பு, முருகப்பெருமான் இக்கோயிலில் சிவனை வேண்டி தவமிருந்தார். சிவனும், அம்பிகையும் அவருக்கு காட்சி தந்து வேலாயுதம் கொடுத்தனுப்பினர். அதன்பின் முருகன், சூரனை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டார். இவர் சிங்காரவேலராக அசுர மயிலுடன், ஒரு சன்னதியில் இருக்கிறார். அசுரனை வென்றதால் இந்திரன் தன் மகள் தெய்வானையை, முருகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அப்போது அவரது வாகனமான ஐராவதம், தெய்வானையைப் பிரிய முடியாமல் அவளுடனேயே தங்கிவிட்டது. வள்ளியும், தெய்வானையும் யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். இத்தகைய கோலத்தை காண்பது அபூர்வம். 

சிறப்பம்சம்: 

கபாலீஸ்வரருக்கு ஒவ்வொரு பவுர்ணமியிலும் விசேஷ பூஜை நடக்கிறது. அம்பிகை மயில் வடிவில் பூஜித்த தலமென்பதால், "மயிலாப்பூர்' என்ற பெயர் ஏற்பட்டது. தேவலோகத்து கற்பக மரம், கேட்டதை கொடுப்பதைப்போல, இத்தலத்து அம்பிகையும் கேட்கும் வரங்களை தருவதால் "கற்பகாம்பிகை' எனப்பட்டாள். பங்குனியில் அறுபத்துமூவர் விழா நடக்கும்போது நாயன்மார்கள் வீதியுலா செல்வது சிறப்பு. 

இக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தில், ஏழு நிலைகள்,ஒன்பது கலசங்கள் அமைந்துள்ளது. கோபுரத்தின் வடக்கில் பிரம்மனும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கோபுரத்தை சுற்றி புராணகால சிற்பங்களும் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் நர்த்தன விநாயகரும், அவருக்கு இடது பக்க சன்னதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையாளும் உள்ளனர். 

வலது பக்கம் ஜகதீஸ்வரர், நவக்கிரகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. கோயிலின் தெற்கு பிரகாரத்திலிருந்து பார்த்தால் ராஜகோபுரத்தின் முழுமையான தரிசனம் கிடைக்கும். ராஜகோபுரத்தை அடுத்து தேர் மண்டபமும், பிரகாரத்தின் தென்பகுதியில் மடப்பள்ளி, அன்னதான மண்டபம், பூங்காவனம், பழநி ஆண்டவர் சன்னதி, இத்தலத்தில் அவதரித்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயன்மாரின் சன்னதி , நூல்நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. 

பிரகாரத்தின் நடுவில் 16 கால் நவராத்திரி மண்டபமும், நால்வர் மண்டபமும் உள்ளது. இங்குள்ள சிங்கார வேலர் மயில் வாகனத்துடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த சன்னதியில் 16 கால் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், துவாரபாலகர்கள், பிரமாண்டமான விமானத்துடன் கூடிய இந்த சன்னதியில் இவருக்கென தனி கொடி மரம் உள்ளது. இந்த முருகனைப்புகழ்ந்து அருணகிரி நாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவருக்கான தனி சன்னதி முருகனுக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த பிரகாரத்தில் ஊஞ்சல் உற்சவத்திற்காக, நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது. 

கோயிலின் மேற்கு பிரகாரத்தில் தான் கபாலீஸ்வரரின் மேற்கு நோக்கிய சன்னதியும், கற்பகாம்பாளின் தெற்கு நோக்கிய சன்னதியும் அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய இந்த சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்குமாம். சிவனுக்கு எதிரில் நந்தி மண்டபம், பலி பீடம், கொடிமரம் அமைந்துள்ளது. மேற்கு வாசலின் அருகே சிவனைபார்த்தபடி திருஞானசம்பந்தரும், அங்கம்பூம்பாவையும் தனி சன்னதியில் உள்ளனர். 

இந்த வாசலுக்கு எதிரில் தான் கபாலீஸ்வரர் தெப்பக்குளம் அமைந்துள்ளது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கேற்ப, இங்குள்ள வடக்கு பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் நின்றுபார்த்தால் கிழக்கு ராஜகோபுரம், அம்மன் கோபுரம், சிவன் கோபுரம், முருகன் கோபுரம், மேற்கு கோபுரம் என அனைத்து கோபுரங்களும் தெரியும். இந்த இடத்தில் தான் கோயிலுக்கான மிகப்பெரிய மணி அமைக்கப்பட்டுள்ளது.

 பிரகாரத்தின் மேல்புறமும், வடபுறமும் யானை, யாழி, மயில், நாகர்,ஆட்டுக்கிடா, நந்தி, காமதேனு, குதிரை போன்ற வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள மண்டபம் அமைந்துள்ளது. கோயிலின் வட கிழக்கு பிரகாரத்தின் தெற்கு பக்கம் தல விருட்சம் புன்னை மரமும், கோசாலையும் அமைந்துள்ளது. 

பெண்கள் தல விருட்சத்தில் குழந்தைபாக்கியம், தாலிபாக்கியம் வேண்டி வழிபாடு செய்கின்றனர். கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பஞ்சாட்சர மந்திரம் கூறும் போது, கவனிக்காமல் அருகிலிருந்த மயிலை கவனித்ததால், மயில் உருவம் பெற்றாள். அவள் மீண்டும் சிவனை அடைய இங்கு வழிபாடு செய்த காட்சி இங்கு புன்னைவன நாதர் சன்னதியில் உள்ளது. இதன் அடிப்படையில் தான் இத்தலத்திற்கு மயிலாப்பூர் என்று பெயர் வந்தது. 

பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பு. 

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் அறுபத்துமூவர் விழா, தனித்துவம் வாய்ந்தது. பங்குனித் திருவிழாவின் 8-ம் நாளில், வெள்ளி வாகனத்தில் சிவனார் திருவீதியுலா வர... அவருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களும் வாகனத்தில் பவனி வரும் அழகைக் காண சிலிர்த்துப் போவோம். சிவ - பார்வதி தரிசனம் ஒருபக்கம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவீதியுலா இன்னொரு பக்கம் என விழாக்கோலம் பூண்டிருக்கும் வேளையில்... அடியவர்களும் ஆண்டவனும் ஒன்றே என்பதைப் பறைசாற்றுகிற இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவார்கள். 

மனிதனாகப் பிறந்தவர் மகா கும்பமேளா, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை தீபம் முதலான பத்து விழாக்களைத் தரிசித்தால் மறுபிறவி இல்லை என்பது ஐதீகம்! அதில் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் ஒன்று. இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, எட்டாம் நூற்றாண்டில் இருந்தே கொண்டாடப்படுகிற விழா எனப் பெருமையுடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள். 

தல வரலாறு: 

உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் , "நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்' என சாபமிட்டார். "சாபம் நீங்க தொண்டை நாட்டிற்கு சென்று தவம் செய்' எனக் கூறினார். அவ்வாறே இத்தலத்தில் அமைந்துள்ள புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பூஜித்து தேவியார் வழிபட்டார். அவர்தம் அரும் தவத்தின் மகிமையால் சிவபெருமான் தேவியின் முன் தோன்றி, "மயிலாய் இருந்த பழி உன்னை விட்டகன்றது. கற்பகவல்லி என்பதான பெயர் உனக்காகுக' என வரம் அருளினார். அச்சமயம் தேவியார் பரமனை நோக்கி அடியேன் இங்கு தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதி "மயிலை' என பெயர் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பரமனும் அவ்வாறே அருளியதாக வரலாறு கூறுகிறது. 

சிறப்பம்சம்: 

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்புவனம் (சிவகங்கை)


மூலவர் : புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : சௌந்தரநாயகி, மின்னனையாள்

தல விருட்சம் : பலா

தீர்த்தம் : வைகை, மணிறகர்ணிகை

ஆகமம்/பூஜை : இங்கு தினமும் 6 கால பூஜை நடக்கிறது

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பூவணம்

ஊர் : திருப்புவனம்

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்

தன்னடியார்க்கு அருள்புரிந்த தகவுதோன்றும் சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும் மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும் துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்பும் தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும் பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. - திருநாவுக்கரசர்


 தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 11வது தலம்.

திருவிழா:

வைகாசியில் விசாக விழா, ஆடி முளைக்கொட்டு உற்சவம், புரட்டாசியில் நவ ராத்திரி கொலு உற்சவம், ஐப்பசியில் கோலாட்ட உற்சவம், கார்த்திகையில் பெரிய தீபம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், மாசியில் சிவராத்திரி, பங்குனியில் 10 நாள் உற்சவம் ஆகியவை சிறப்பானவைகளாகும்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருவிளையாடல் புராணத்தில் 36 வது திருவிளையாடல் ரசவாதம் செய்த படலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 201 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:

தலத்தின் வேறு பெயர்கள்: புஷ்பவனகாசி, பிதுர்மோக்ஷபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் இங்கு எழுந்தருளியுள்ள சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். பூவனம் என்பதால் இவ்வூர் திருப்புவனம் ஆயிற்று. வழிபடுவோர் வினைகளை தீர்ப்பவராக புஷ்பவனேஸ்வரர் விளங்குகிறார். மூர்த்தி, தலம் தீர்த்தம் மூன்றிலும் பெருமையுடையதாக இத்திருத்தலம் விளங்குகிறது.

பாண்டி தேசத்தின் 13-வது கோயில் இது. பாண்டிய மன்னன் கட்டிய இந்தக் கோயிலுக்கு திருமலை நாயக்க மன்னரும் பல திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்துள்ளார். 4 யுகங்களைக் கடந்த கோயில், ரசவாதம் செய்த படலம் எனும் 36-வது திருவிளையாடல் நிகழ்ந்த தலம் ஆகிய பெருமையும் உண்டு. புஷ்பவனக் காசி என்று போற்றப்படும் இந்தத் தலத்தில் பித்ருக்களுக்கான கடமையைச் செய்வது கூடுதல் பலனைத் தரும். இந்தத் தலத்தில் கோபுர விநாயகர், குடைவரை விநாயகர், அனுமதி பெற்றுக் காரியத்தில் இறங்க அனுக்ஞை விநாயகர், மகா கணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி பெறவும், யாகம் சிறப்புறவும் அருளும் விநாயகர்கள், சூரியனார் வழிபட்ட பாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

சூரியனின் சாபம் நீங்கப் பெற்ற தலம் என்கிற பெருமையும் திருப்புவனம் தலத்துக்கு உண்டு. அதை அறிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இங்கு வந்து வழிபட்டு, பித்ருக்களை ஆராதித்து, சூரிய நமஸ்காரம் செய்து, விநாயகரை வழிபட்டுள்ளனர் என்கிறது ஸ்தல வரலாறு. பாஸ்கர விநாயகருக்கு அருகில் சூரிய தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டு, பாஸ்கர விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி, சவுபாக்கியத்துடன் வாழலாம்.

பிரார்த்தனை:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் இங்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளைத் தரிசித்து வணங்கிட, நம் வாழ்வு வளமாகும்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

புஷ்பமாக மாறிய அஸ்தி : புராண காலத்தில் தர்மயக்ஞன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று ஓய்வு எடுக்கும் போது அவனுடன் வந்தவர் கலசத்தை திறந்து பார்க்க புஷ்பமாக இருந்ததாம். தான் பார்த்த இந்த காட்சியை தர்மயக்ஞனிடம் அப்போது அவன் கூறவில்லை. ஓய்வு முடிந்து ராமேஸ்வரம் சென்று கடலில் அஸ்தியை கரைக்க கலசத்தை திறந்த போது அஸ்தியாகவே இருந்தது. இதனால் அதிர்ச்சியுற்ற உடன் வந்தவன், திருப்பூவனத்தில் தான் பார்த்த காட்சியை தர்மயக்ஞனிடம் சொல்ல, மறுபடியும் அஸ்தி கலசத்துடன் அங்கிருந்து திருப்பூவனத்திற்கு வந்தனர். அங்கு வந்து பார்த்த போது கலசத்தில் அஸ்தி புஷ்பமாக மாறி இருந்ததாம்.

காசியிலும், ராமேஸ்வரத்திலும் அஸ்தியாக இருந்தது இங்கு புஷ்பமாக இருந்ததால் காசி நகரத்தை விட 16 மடங்கு புண்ணியம் தரும் இடமாக இத்தலம் போற்றப்படுகிறது. இதை "காசிக்கும் வீசம் அதிகம்' எனும் சமயபெரியோர்கள் கூற்றிலிருந்து அறியலாம். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள வைகையில் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போடும் வழக்கம் இன்றளவும் நடந்து வருகிறது.

வழி விட்ட நந்தி: திருஞான சம்பந்தர் திருப்புவனத்திற்கு வந்த போது ஆற்றுமணல் எல்லாம் சிவலிங்கங்களாக காட்சியளித்தனவாம். அதன் மீது கால் வைக்க அஞ்சிய சம்பந்தர் வைகையாற்றின் மறுகரை மீதிருந்தபடியே சிவனை பாடினார். அப்போது நந்தி லிங்கத்தை மறைத்திருந்தது. உடனே சம்பந்தர் சிவனை வேண்ட, சம்பந்தருக்காக நந்தியை சற்று விலகி தன்னை மறைக்காமல் இருக்கும்படி சிவன் கேட்டு கொண்டாராம். அதன்படி நந்தி சற்று விலகி இருப்பது தனிச்சிறப்பாகும்.

ஐந்து நிலை கோபுரத்துடன் சுவாமி சன்னதி நுழைவு வாயில் அமைந்துள்ளது. சுவாமி சன்னதியில் சுயம்புலிங்கமாய் ருத்ராட்ச மேனியாய் சிவபெருமான் காட்சியளிக்கிறார். இங்குள்ள சுயம்புலிங்கத்தில் திரிசூல முத்திரையும் உள்ளது. சுவாமிக்கு வலப்பக்கத்தில் அம்மன் காட்சியளிக்கிறார்.

இந்த கோயிலில் 5 வகையான தீர்த்தங்கள் உள்ளன. இதில் மணி கர்ணிகை தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தீர்த்தத்திலே ஸ்நானம் செய்தபடியால் அகஸ்திய முனிவர் கடல் நீரை பருகும் சக்தி பெற்றதாகவும், நளன், பிரம்மா, விஷ்ணு, கவுதம் மகமுனி, சூரியன், மகாலட்சுமி, அகத்தியர், கோரக்கசித்தர் வந்து இறைவனை பூஜித்து நற்பலன் பெற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

தல வரலாறு:

சித்தராக வந்த சிவன் : திருப்புவனத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்து வந்தார். தனது கலை ஞானத்தால் ஈட்டிய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கு அமுது படைத்தே காலம் கழித்தாள். சிவ பக்தையான அவளுக்கு அவ்வூரில் உள்ள பூவணநாதரை சொக்க தங்கத்தில் வடிக்க ஆசை இருந்தது. இவளது ஆசையை நிறைவேற்ற சிவனே சித்தராக மாறி இவள் வீட்டிற்கு சென்று வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை இரவில் நெருப்பிலிட்டால் பொன்னாக மாறும் என கூறினார். பொன்னனையளும் அன்று இரவு செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை நெருப்பிலிட அவை பொன்னாக மாறின. அந்த பொன்னை கொண்டு பூவனநாதரை உருவாக்கினாள். அப்போது பூவணநாதர் திருமேனி அழகில் சொக்கி, அவர் கன்னத்தை கிள்ளி பொன்னனையாள் முத்தமிட்டாள். அவள் பதித்த நகக்குறி இன்றும் இங்குள்ள உற்சவரிடம் காணப்படுகிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.