Monday 30 January 2017

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம்


மூலவர் : காயாரோகணேஸ்வரர்

உற்சவர் : சந்திரசேகரர்

அம்மன்/தாயார் : நீலாயதாட்சி

தல விருட்சம் : மாமரம்

தீர்த்தம் : புண்டரீக தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : நாகை காரோணம்

ஊர் : நாகப்பட்டினம்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்


நல்லார் அறம்சொல்ல பொல்லார் புறம்கூற அல்லார் அலர்தூற்ற அடியார்க்கு அருள்செய்வான் பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக் கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.
- திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 82வது தலம்.

திருவிழா:

வைகாசியில் திருக்கல்யாண விழா, ஆடிப்பூரம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.

தல சிறப்பு:

இங்குள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தியாக மிகுந்த அழகுடன் காட்சியளிக்கிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 145 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இத்தலத்து விருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோயிலின் தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும் போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது.


பிரார்த்தனை

செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தியும் கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தலாம்.


தலபெருமை:

சுந்தர விடங்கர்: இந்திரனுக்கு உதவி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி, அவர் பூஜித்த ஏழு லிங்கங்களைப் பெற்று ஏழு தலங்களில் வைத்து பூஜித்தார். மிகச்சிறிய லிங்கமாக இருந்ததால், "விடங்கலிங்கம்' என்று பெயர் பெற்றது. இத்தலங்கள் "சப்தவிடங்க தலம்' எனப்படுகிறது. இதில் இத்தலமும் ஒன்று. இங்குள்ள லிங்கம் மிகுந்த அழகுடன், கோமேதகத்தால் செய்யப்பட்டதாக காட்சியளிக்கிறது. எனவே இவரை, "சுந்தர விடங்கர்' என்று அழைக்கிறார்கள். சிவன் சன்னதிக்கு வலப்புறம், தியாகராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். பெரும்பாலான கோயில்களில், தியாகராஜரின் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.

இத்தலத்தில் வைகாசி விசாக விழாவின்போதும், மார்கழி திருவாதிரையன்றும் சுவாமியின் வலது கை மற்றும் பாதத்தை தரிசிக்கும்படியாக அலங்காரம் செய்கிறார்கள். இந்த இரண்டு நாட்கள் மட்டுமே தியாகராஜரின் இந்த கோலத்தை தரிசிக்க முடியும். விழாவின்போது இவர் அலைபோல முன்னும், பின்னுமாக வீசியவாறு நடனமாடி வருவார். இந்த நடனத்திற்கு, "பாராவாரா நடனம்' என்று பெயர்.


நீலாயதாட்சி: இத்தலத்தில் அருளும் அம்பிகை, கடல் போல அருளுபவளாக இருக்கிறாள். இதை உணர்த்தும்விதமாக இவளது கண்கள் கடல் நிறத்தில், நீல நிறமாக இருக்கிறது. எனவே இவள், "நீலாயதாட்சி' என்று அழைக்கப்படுகிறாள். கருந்தடங்கண்ணி என்றும் இவளுக்குப் பெயருண்டு. இவளுக்கு தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதி இருக்கிறது. அம்பிகை, இத்தலத்தில் திருமணப்பருவத்திற்கு முந்தைய கன்னியாக, "யவ்வன பருவ' கோலத்தில் காட்சி தருகிறாள். எனவே ஆடிப்பூர விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கிறது.


இவ்விழாவின்போது, முழுதும் பீங்கானில் செய்யப்பட்ட ரதத்தில் அம்பாள், வீதியுலா செல்வது சிறப்பு. இவளது சன்னதி, தேர் போல அமைக்கப்பட்டிருக்கிறது. இவள் கன்னியாக இருப்பதால் சிவன், அவளுக்கு பாதுகாப்பாக நந்தி தேவரை அனுப்பினார். அவரோ, தான் எப்போதும் சிவனை தரிசிக்க விரும்புவதாக கூறினார். எனவே, சிவன் அவரிடம் அம்பாளிடம் இருந்து கொண்டு, தன்னையும் தரிசிக்கும்படி கூறினார். இதன் அடிப்படையில், அம்பாள் எதிரிலுள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னதியை பார்த்தபடி இருக்கிறது. நந்தியின் இடது கண் சிவனையும், வலக்கண் அம்பிகையையும் பார்த்தபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. எனவே, இந்த நந்தியை "இரட்டைப் பார்வை நந்தி' என்று அழைக்கிறார்கள். கண் தொடர்பான நோய்கள் நீங்க, இந்த நந்தியிடம் வேண்டிக்கொள்ளலாம்.


பிணத்திற்கு சிவன் மாலை!: கோயிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால், நடையை சாத்திவிடுவது வழக்கம். ஆனால், இறந்த பிணத்திற்கு சிவன் அணிந்த மாலை, வஸ்திரத்தை அணிவிக்கும் வழக்கம் இத்தலத்தில் உள்ளது. சிவனருளால் முக்தி பெற்ற மீனவ குலத்தைச் சேர்ந்த அதிபத்தருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் மீனவர்கள் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு சிவன் சார்பில் மரியாதை செய்யும் வைபவம் நடக்கிறது. இறந்தவரின் உடலை, இங்கு கோயிலுக்கு முன்பாக வைத்துவிடுகின்றனர். அப்போது சிவன் சன்னதியை அடைக்காமல், அவருக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை பிணத்திற்கு அணிவித்து, தீர்த்தம் கொடுக்கின்றனர். கோயில்களில் திருவிழாவின் போது, சுவாமி மாடவீதிகளைச் சுற்றிவிட்டு கோயிலுக்குத் திரும்பிவிடுவார். ஆனால், இக்கோயிலில் இங்கிருந்து கிளம்பும் சுவாமி, நாகையைச் சுற்றியுள்ள பொய்கைநல்லூர், பொறவாச்சேரி, சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் என ஏழு ஊர்களுக்குச் சென்றுவிட்டு கோயிலுக்குத் திரும்புகிறார். சாலிச மகாராஜா இந்த ஏழு தலங்களில் சிவபூஜை செய்தபின்பு, சிவன் இங்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். இதன் அடிப்படையில், சுவாமி 7 ஊர்களைச் சுற்றி வருகிறார்.


மோகினி புறப்பாடு: சிவன் கோயில்களில் பிரதோஷத்தின்போது, சிவன் ரிஷப வாகனத்தில் செல்வது வழக்கம். ஆனால் இக்கோயிலில் மோகினி வடிவில் பெருமாளும் புறப்பாடாகிறார். தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது, மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து அமுதம் பரிமாறினார். அப்போது, தேவர்கள் பாற்கடல் விஷத்தை அருந்திய சிவனை வணங்காமல் அமுதத்தை அருந்திவிட்டனர். இதற்காக தங்களை மன்னிக்கும்படி, சிவனிடம் வேண்டினர். அவர் தேவர்களை மன்னிக்கும்விதமாக, நந்தியின் மீது நடனமாடினார். இந்த நடனம் பிரதோஷ வேளையில் நிகழ்ந்தது. பிரதோஷ வேளைக்கு முன்பாக, பெருமாளின் மோகினி அவதாரம் நிகழ்ந்ததால், பிரதோஷத்தன்று மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகிறார். இவர் பிரதோஷத்தின்போது மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் மூலஸ்தானத்திற்குள் வைத்துவிடுகின்றனர்.

தசரதர் வழிபட்ட சனீஸ்வரர்: சனீஸ்வரர், ரோகிணி நட்சத்திற்குள் பிரவேசிக்கும் காலத்தில், "ரோகிணி சகடபேதம்' என்னும் பஞ்சம் உண்டாகும். அயோத்தியை ஆட்சி செய்த தசரதர், தனது நாட்டில் இந்த பஞ்சம் உண்டாகப்போவதை அறிந்தார். எனவே, நாட்டு மக்களின் நலன் கருதி அவர், சனீஸ்வரனை எதிர்த்து போரிடச் சென்றார். அப்போது சூரியபகவான் அவரிடம், சனியை வெல்வது எளிதல்ல என்றும், அவரை எதிர்ப்பதை விட, பணிந்து வணங்குவது நல்லது என்றும் அறிவுரை கூறினார். அதன்படி தசரதர், இங்கு சிவனை வழிபட்டு, சனீஸ்வரரின் பார்வையிலிருந்து தப்ப அருளும்படி வேண்டினார். சிவனின் ஆணையால், சனீஸ்வரர் தசரதருக்கு காட்சி தந்தார். அவரிடம் தன் நாட்டில் பஞ்சம் ஏற்படாதிருக்க அருளும்படி வேண்டினார். சுயநலமின்றி நாட்டு நலனுக்காக தன்னையே எதிர்க்கத் துணிந்த தசரதனைக் கண்டு மகிழ்ந்த சனீஸ்வரர், அவரை பாராட்டியதோடு, பஞ்சம் ஏற்படாமல் அருளினார். இவர், தசரதரின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். இவருக்கு அருகில், நவக்கிரக மண்டபத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும், சிவனை பார்க்கும் விதமாக மேற்கு நோக்கியிருக்கின்றன.

தங்க மீன்: அதிபத்தர், என்னும் சிவபக்தர் இவ்வூரில் வசித்து வந்தார். மீனவரான அவர், இத்தல சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் மீன் பிடிக்கச் செல்லும் அவர், முதலில் கிடைக்கும் மீனை, கடலில் வீசி சிவனுக்கே அர்ப்பணம் செய்துவிடுவார். ஒருகட்டத்தில் இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், கடலில் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும்படி செய்தார். ஆனாலும், அதிபத்தர் அந்த மீனை, சிவனுக்கே படைத்தார். வறுமையில் வாடினாலும், அதிபத்தர் தனது பக்தியை சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை. ஒருசமயம் மீன் பிடிக்கச் சென்ற அதிபத்தருக்கு, கடலில் ஒரு தங்க மீன் கிடைக்கச் செய்தார் சிவன். உடனிருந்த மீனவர்கள் அதனை கடலில் போட வேண்டாமென தடுத்தனர். ஆனால், அதிபத்தர் அதை கடலில் வீசி விட்டார். அவரது பக்தியை மெச்சிய சிவன், அம்பிகையுடன் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். இவர் நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தை பெற்றார்.

அதிபத்தருக்கு இக்கோயிலில் சன்னதி இருக்கிறது. ஆவணி மாத, ஆயில்யம் நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை விழா நடக்கிறது. அன்று அதிபத்தர் உற்சவர் ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளி, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வார். அப்போது மீனவர்கள், இரண்டு தங்க மீன்களை வலையில் வைத்து, கடலில் பிடித்ததைப் போல பாவனை செய்வர். அவ்வேளையில் இத்தலத்து சிவன், கடற்கரையில் எழுந்தருளுவார். அவருக்கு அதிபத்தர், தங்க மீன் படைத்து பூஜை செய்வார். அதன்பின் சிவன் அவருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும். இந்த விழாவின்போது மட்டுமே தங்க மீனை பார்க்க முடியும்.

அழுகுணி சித்தர் பீடம்: ஏதாவது ஒன்று கிடைக்கவேண்டுமென்றால் குழந்தைகள், அழுது அடம்பிடித்து பெற்றோரிடம் எளிதாகப் பெற்றுவிடுவர். இதைப்போலவே தனக்கு முக்தி கிடைக்க எண்ணிய சித்தர் ஒருவர், உலகத்தின் அன்னையான அம்பிகை நீலாயதாட்சியிடம் அழுது பெற்றுள்ளார். இதனால் இவர், "அழுகுணி சித்தர்' என்றே பெயர் பெற்றார். கோரக்கரின் சீடரான அழுகுணி சித்தர், இத்தல அம்பிகை மீது அதீத பக்தி கொண்டு, இங்கேயே தங்கி தினமும் அம்பிகையை வழிபட்டார். அம்பிகையிடம் முக்தி வேண்டி, சிறுவன் போல கண்ணீர் விட்டு அழுது, அடம்பிடித்து பிரார்த்தனை செய்தார். அம்பிகையும் அவருக்கு அருள்புரிய சிவனிடம் வேண்டவே, அவர் சித்தருக்கு முக்தி கொடுத்தருளினார். இவரது ஜீவசமாதி இக்கோயிலில் உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. பவுர்ணமிதோறும் பாயச நைவேத்யம் படைத்து, விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.

நாகாபரண விநாயகர்: பெருமாள் கோயில்களில் ஆதிசேஷன் என்னும் நாகம் சுவாமியின் தலைக்கு மேலே, குடை பிடித்தபடி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், விநாயகர் தன் தலைக்கு மேலே நாகத்துடன் இருப்பதை தரிசித்திருக்கிறீர்களா? இக்கோயில் முகப்பிலுள்ள விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே, மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். எனவே இவர், "நாகாபரண விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.

கோயில்களில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர், இங்கு சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். புண்டரீக தீர்த்தக்கரையில் இவரது சன்னதி இருக்கிறது. புண்டரீகர், சிவனை வழிபட்டபோது, காசியின் கங்கை தீர்த்தம் இங்கு பாதாளத்திலிருந்து பொங்கியது. அப்போது, கங்கைக்கரையில் உள்ள பைரவரும், இங்கு எழுந்தருளினார். இவரே இங்கு, "காலசம்ஹார பைரவராக' அருளுகிறார். இவருக்கு பின்புறம் சிம்ம வாகனம் இருக்கிறது. காலனை (எமன்) சம்ஹாரம் செய்த சிவனே, இங்கு பைரவர் வடிவில் அருளுவதாக ஐதீகம். இவர் எமனுக்குரிய தென்திசையை நோக்கியிருப்பதால், ஆயுள் பலம் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். இவர் உக்கிரமானவராக காட்சி தருவதால், சாந்தமாக்க எதிரில் இரண்டு விநாயகர்களை ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரகாரத்தில் எட்டு கரங்களில் ஆயுதங்களுடன், "அஷ்டபுஜ பைரவர்', அஷ்டபுஜ காளிக்கும் சன்னதி இருக்கிறது.


சிறப்புகள் சில வரிகளில்...


எண்திசைகளுக்கு அதிபதிகளான அஷ்டதிக் பாலகர்கள், இங்கு சிலை வடிவில் காட்சி தருகின்றனர். நான்கு தந்தங்கள் கொண்ட, இரண்டு யானைகள் அபிஷேகம் செய்தபடி இருக்க, இரு கால்களையும் தொங்கவிட்டபடி உள்ள கஜலட்சுமியையும் இங்கு தரிசிக்கலாம். வாமி கோஷ்டத்தில் 8 சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். கடலுக்கு மேற்கு கரையில் அமைந்த இத்தலத்தில், சிவன் அரசராக இருந்து ஆட்சி செய்வதாக ஐதீகம். எனவே இவ்வூருக்கு, "சிவராஜதானி' என்ற பெயரும் உண்டு.


சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம் இது. சுந்தரர் பதிகம் பாடி, சிவனிடம் முத்தாரம், வைரமாலை, கத்தூரி, கமழ்சாந்து மற்றும் குதிரை ஆகியவற்றை இத்தலத்தில் பெற்றார். சப்தரிஷிகளான மார்க்கண்டேயர், கவுதமர், வசிஷ்டர், காஷ்யபர், புலஸ்தியர், அகத்தியர், ஆங்கிரசர் ஆகியோர் இங்கு சிவனை வழிபட்டுள்ளனர். மூலஸ்தான லிங்கத்திற்கு பின்புள்ள சுவரில் சிவனின் "சோமாஸ்கந்த' வடிவம் இருக்கிறது. மாசி மகத்தன்று, சிவன் கடலுக்குச் சென்று, தீர்த்தமாடும் வைபவம் நடக்கும். இங்குள்ள ஆறுமுகர் சிலை, திருவாசியுடன் சேர்த்து 12 கரங்களில், ஆயுதங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரியார் இவரை திருப்புகழில் பாடியிருக்கிறார். சுவாமி சன்னதி முன்மண்டபத்தின் மேல் பகுதியில் 12 ராசி சக்கரம் உள்ளது. இங்கிருந்து சிவனை வழிபட, கிரக தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. ஆனி மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று, இரவில் அர்த்தஜாம பூஜையின்போது புண்டரீகர், சிவன் சன்னதிக்குள் சென்று சிவனுடன் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடக்கிறது. சண்டிகேஸ்வரர் சன்னதி, கோஷ்டத்தை ஒட்டி இல்லாமல் பிரகாரத்திலிருந்து விலகியுள்ளது.


தல வரலாறு:

புண்டரீகர் என்னும் முனிவர், கண்ணுவரின் ஆலோசனைப்படி முக்தி வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், முனிவரை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு, முக்தி கொடுத்தார். முக்தியடைபவர்களின் ஆன்மாதான், இறைவனிடம் சென்று சேரும். ஆனால், சிவன் புண்டரீகரின் உடலுடன் (காயம்) தன்னுடன் ஆரோகணித்து (சேர்த்துக்கொண்டு ) முக்தி கொடுத்தார். இதனால் சிவன், "காயாரோகணேஸ்வரர்' என்று அழைக்கப்பட்டார். நாக அரசன், இங்கு சிவனை வேண்டி ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை, பிறப்பிலேயே மூன்று தனங்களுடன் இருந்தது. வருந்திய மன்னன், சிவனிடம் முறையிட்டான்.


சிவன் மன்னனிடம், சூரிய வம்சத்து மன்னன் ஒருவனால் அவளது தனம் மறையும் என்று அருளினார். சிலகாலம் கழித்து, சாலிசுகன் என்னும் மன்னன், இத்தலத்திற்கு வந்தான். அவனைக் கண்ட நாக அரசன் மகளின் மூன்றாவது தனம் மறைந்தது. மகிழ்ந்த நாக அரசன், அவனுக்கே தன் மகளை திருமணம் செய்து வைத்தான். அதன்பின்பு, சாலிசுகன் இங்கு சிவனுக்கு பல திருப்பணிகள் செய்தான். நாக அரசன் பூஜித்ததால் இத்தலம், "நாகை காரோணம்' என்று பெயர் ஏற்பட்டது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தியாக மிகுந்த அழகுடன் காட்சியளிக்கிறது.

அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேள்விக்குடி - நாகப்பட்டினம்


மூலவர் : கல்யாண சுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பரிமள சுகந்த நாயகி

தல விருட்சம் : -

தீர்த்தம் : மங்கள தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருவேள்விக்குடி

ஊர் : திருவேள்விக்குடி

பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை சேர்ப்பது காட்டாகக் தூரினும் ஆகச்சிந் திக்கி னல்லால் காப்பது வேள்விக் குடிதண் துருத்திஎங் கோன்அரைமேல் ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே.
- சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 23வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்

தல சிறப்பு:

இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 23 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.


பிரார்த்தனை

நவக்கிரகதோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இவருக்கு 48 அகல் விளக்கு ஏற்றி வழிபட்டால் தோஷம் நீங்கும்.

நேர்த்திக்கடன்:

பவுர்ணமி தினத்தில் காலை 10 முதல் மாலை 4 மணிவரை திருமண தடை நீங்க யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் திருமணத் தடை உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபடலாம். திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நன்றி சொல்லிவிட்டால் போதும்.

தலபெருமை:

திருத்துருத்தியாகிய குத்தாலத்தோடு சேர்த்து பாடப்பட்ட திருத்தலம் இது.

அரச குமாரன் ஒருவனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் தந்தையர் திருமணத்திற்கு முன் இறந்து விட்டனர். பின் பெண் வீட்டார் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.


அரசகுமாரன் இத்தலம் வந்து இறைவனை வணங்கி, நின்ற திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டான். சிவன் ஒரு பூதத்தை அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து, திருமணம் செய்து வைத்தார்.


சிவனின் தோழரான சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு, தனது குஷ்டத்தை போக்கிகொண்டார். சிவன் தன்னில் ஒரு பகுதி பாகத்தை சக்திக்கு அளித்த தலம் இதுதான்.

தல வரலாறு:

திருவேள்விக்குடியின் அருகிலுள்ள குத்தாலத்தில் பரத மகரிஷியின் மகளாக பார்வதி அவதாரம் செய்தாள். அவள் தன்னை திருமணம் செய்ய வேண்டி பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மண்ணில் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள். 17வது திங்களில் ஈசன் "மணவாளேஸ்வரர்' ஆக தோன்றி, அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார்.


அதன்படி அம்மனுக்கு கங்கணம் கட்டி, வேள்விகள் செய்து, பிரம்மா நடத்தி வைக்க மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் "திருவேள்விக்குடி' என அழைக்கப்பட்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. அவ்வளவு அழகு. தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை, சிவன் தன்னை மணந்து கொள்கிறார் என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள்பாலிக்கிறாள். பார்வதியின் துயரத்தை போக்கிட்ட சிவன், இங்கு வந்து வழிபடும் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்களின் துயரத்தை போக்கி திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்கிறார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்

அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி (திருக்கண்ணார் கோவில்), கொண்டத்தூர் - நாகப்பட்டினம்


மூலவர் : கண்ணாயிரமுடையார்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : முருகுவளர்க்கோதை நாயகி

தல விருட்சம் : கொன்றை மரம்

தீர்த்தம் : இந்திர தீர்த்தம்

ஆகமம்/பூஜை : சிவாகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கண்ணார்கோவில், குறுமாணக்குடி

ஊர் : குறுமாணக்குடி

பாடியவர்கள்:சம்பந்தர்

தேவாரப்பதிகம்

தண்ணார் திங்கள் பொங்கு அரவம் தாழ் புனல்சூடிப் பெண்ஆண் ஆயபேர் அருளாளன் பிரியாத கண்ணார்கோயில் கைதொழு வோர்கட்கு இடர்பாவம் நண்ணா ஆகும் நல்லினை யாய நல்குமே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 17வது தலம்.


திருவிழா:

கார்த்திகை சோமவாரத்தில் பிரம்மோற்சவ திருவிழா. சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


தல சிறப்பு:

இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 17 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

மாணிக்கவாசகர், சேக்கிழார், ராமலிங்க அடிகளார் தரிசனம் செய்துள்ளனர்.


பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அர்த்த ஜாம பூஜையில் பால், பழம் நைவேத்யம் செய்து, அன்னதானம் போட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறந்த பலன் உண்டு என்பதும் நம்பிக்கை.


நேர்த்திக்கடன்:

இங்குள்ள அம்மன் சன்னதிக்கு மேல், 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 12 ராசிக்காரர்களும் தங்கள் ஜாதகத்தில் தோஷம் ஏற்பட்டிருந்தால், அம்மன் முருகுவளர்க்கோதை நாயகிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம். திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபடவேண்டிய சிறந்த தலம்.


தலபெருமை:

மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட வாமனமூர்த்தியாகிய குறுமாணி வழிபட்டதால் இத்தலம் "குறுமாணக்குடி' எனப்படுகிறது.


தல வரலாறு:

தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே அனுப்பிவிட்டு, அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான். எனவே இந்திரன், முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை பார்க்க சென்றான். வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்தும், இந்திரன் மீது கொண்ட ஆசையினால் தவறு செய்ய தானும் சம்மதித்தாள். இதற்குள் முனிவர் திரும்பி வர, இந்திரன் பூனை வடிவமெடுத்தான். அகலிகை பயந்து நின்றாள். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரன் உடல் முழுவதும், ஆயிரம் பெண்களுக்கான பெண் உறுப்பு உண்டாகும் படி சபித்தார். அதன் பின் அகலிகையை கல்லாகும் படி சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்க,""ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்,''என்றார் முனிவர்.

இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மனிடம் சென்றான். அதற்கு பிரம்மன் குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் குறிகளும் ஆயிரம் கண்களாக மாறி, இறைவன் ஏற்றுக்கொண்டார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் "கண்ணாயிரமுடையார்' ஆனார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில், சிவன் கோயில் வீதி, கீழையூர் - நாகப்பட்டினம்


மூலவர் : கடைமுடிநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : அபிராமி

தல விருட்சம் : கிளுவை

தீர்த்தம் : கருணாதீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கடைமுடி, கீழூர், கிளுவையூர்

ஊர் : கீழையூர்

பாடியவர்கள்: திருஞானம்பந்தர்

தேவாரப்பதிகம்

கொய்யணி நறுமலர்க் கொன்றை யந்தார் மையணி மிடறுடை மறையவனூர் பையணி அரவொடு மான்மழுவாள் கையணி பவனிடங் கடை முடியே.

- திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 18வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 18 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். இவருக்கு எதிரே நந்தியும் இருக்கிறது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இத்தலவிநாயகர் கடைமுடிவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு சிவனை வழிபட்டு மன அமைதி பெறலாம்.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

வளையம் அணிந்த தெட்சிணாமூர்த்தி : மேற்கு பார்த்து அமைந்த சிவதலம் இது. இத்தலத்தில் காவிரி நதி இத்தலத்தில் மேற்கு நோக்கி ஓடுவது விசேஷம். உலகம் அழியும் இறுதிக்காலத்திலும் காப்பாற்றுபவராக இங்கு சிவபெருமான் அருளுகிறாராம். எனவே இவருக்கு "கடைமுடிநாதர்' என்று பெயர் வந்ததாக சொல்கின்றனர். இவர் பதினாறு பட்டைகளுடன் அமைந்து "சோடஷ லிங்க' அமைப்பில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் பதினாறு பேறுகளையும் பெறலாம் என்பர். பிரகாரத்தில் உள்ள நவக்கிரகம் வலது புறம் திரும்பிய ஆவுடையார் மீது அமைந்திருக்கின்றன. எண்கோண வடிவில் உள்ள ஆவுடையாரில் கிரகங்கள் ஒவ்வொன்றும் நேர்வரிசையில் இல்லாமல், முன்னும் பின்னுமாகவும் அமைந்திருப்பது சிறப்பான அமைப்பு.


இங்கு கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி இடது காதில் வளையம் அணிந்தும், வலது காதில் வளையம் இல்லாமலும் காட்சி தருகிறார். இவரைப்போலவே பைரவரும் வலது காதில் வளையம் இல்லாமல் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இங்கு அம்பாள் வரப்பிரசாதியாக இருக்கிறாள். தெற்கு நோக்கியிருக்கும் இவளது சன்னதி எதிரேயும் ஒரு வாசல் இருக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இவளுக்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கின்றனர். வரன் அமைந்த பிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியை தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு, மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பெண்கள் சுமங்கலிகளாக இருப்பர் என்பது நம்பிக்கை.


தல வரலாறு:

ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா, பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத்தலத்திலும் சிவனை மனதில் நினைத்து வழிபட்டார். சிவன், அவருக்கு ஒரு கிளுவை மரத்தின் அடியில் காட்சி தந்தார். பிரம்மா தனக்கு மன்னிப்பு கேட்டபோது, தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கப்பெறும் என்று ஆறுதல் கூறினார். பின் பிரம்மாவின் வேண்டுதல்படியே அவர் இத்தலத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.


பிற்காலத்தில் கண்ணுவ மகரிஷியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு முக்தி பெற்றார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், மேலைத்திருமணஞ்சேரி - எதிர்கொள்பாடி, நாகப்பட்டினம்


மூலவர் : ஐராவதேஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : சுகந்த குந்தளாம்பிகை

தல விருட்சம் : -

தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : எதிர்கொள்பாடி, மேலைத்திருமணஞ்சேரி

ஊர் : மேலத்திருமணஞ்சேரி

பாடியவர்கள்: சுந்தரர்

தேவாரப்பதிகம்

இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழைமனை வாழ்க்கை முன்பு சொன்ன மோழைமையான் முட்டை மனத்தீரே அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள்அடி சேரார் என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே. - சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 24வது தலம்.

திருவிழா:

சித்திரையில் இந்திர விழா, கார்த்திகை சோமவாரம், மார்கழியில் திருவாதிரை

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 24 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

ராஜகோபுரம் பண்டைக் காலத்தில் மல்லப்ப நாயக்கரால் கட்டப்பட்டதென்பர். இன்று ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்புகுந்தால் கொடிமரம் நந்தி பலிபீடங்கள், அடுத்துள்ள முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சன்னதி உள்ளது. மிகச்சிறிய திருமேனி - சுகாசனத்தில் அமர்ந்த திருக்கோலம். நேரே மூலவர் தரிசனம். உள்பிராகாரத்தில் நால்வர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, காலபைரவர், சனீஸ்வரன் சன்னதிகள். கோஷ்டத்தில் பிட்சாடனர், பாலகணபதி, நடராசர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, ராகு, துர்க்கை, கங்காவிசர்ஜனர் மூர்த்தங்கள் உள்ளன.


பிரார்த்தனை

பொருளை பறி கொடுத்தவர்கள், பதவி பறி போனவர்கள் இங்கு வழிபட்டால் மிகவும் சிறப்பு. திருமணம் நடைபெறாமல் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால், இந்திரன், ஐராவதத்தின் சாபம் நீக்கியது போல் இவர்களையும் காத்து அருள்புரிவான். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வது மிகவும் சிறப்பு.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்தும் வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

சிவனுக்கு அணிவிக்கப்பட்ட தாமரை மலரை கைகளில் ஏந்தியபடி தேவலோகத்தில் துர்வாச முனிவர் வந்தார். அசுரர்களை வென்ற இந்திரனுக்கு பரிசாக அளித்தார். இந்திரன் அதை அலட்சியப்படுத்தினான். இதனால் கோபம் கொண்ட முனிவர் பாண்டிய மன்னன் எறியும் கைவளையால் இந்திரனின் முடி சிதறுமாறு சாபமிட்டார். பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க, இந்திரனின் தலைக்கு வருவது முடியோடு கழியும் என்று சாபவிமோசனம் தந்தார்.

தாமரை மலரை புறக்கணித்ததில் இந்திரனின் ஐராவத யானைக்கும் பங்குண்டு. துர்வாசரால் சபிக்கப்பட்ட யானை பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தது. பல தலங்களில் பூஜையும் செய்தது. கடைசியாக இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து துயரம் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் "ஐராவதேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். அம்மனின் திருநாமம் "சுகந்த குந்தளாம்பிகை' என்ற "மலர் குழல் நாயகி'. இந்திரனும் இழந்த பொன், பொருள், பதவியை பெற்றான்.

வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே' என்று பாடி அனைவரையும் சுந்தரர் இந்த கோயிலுக்கு அழைக்கிறார். அந்த அழைப்பை நாம் ஏற்றால் தோழனின் மகிழ்ச்சியை காணும் சிவன் நமது குறைகளை போக்கி அருள்புரிவார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், ஐராவதம் யானை வழிபட்டதால் இங்குள்ள கர்ப்பக்கிரகம் யானை சுற்றும் அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது.

திருமண வரவேற்பை இத்தலத்தில் நடத்தினால், தம்பதியர் நலம் பலபெற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

திருவேள்விக்குடியில் பரத முனிவர் சிவபார்வதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணம் முடிந்ததும் தான் குடியிருக்கும் மேல திருமணஞ்சேரிக்கு வர இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இறைவனும் ஒப்புக் கொண்டார். இறைவனும், அம்மையும் வருகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும். பிரமாதமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார். மணக்கோலத்தில் வந்த தெய்வத்தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் "எதிர்கொள்பாடி' என அழைக்கப்பட்டது. தற்போது "மேலக்கோயில்' என்று அழைக்கிறார்கள்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில், கோனேரிராஜபுரம் , மயிலாடுதுறை - நாகப்பட்டினம்


மூலவர் : உமாமகேஸ்வரர் (பூமிநாதர்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : அங்கவள நாயகி (தேக சுந்தரி)

தல விருட்சம் : அரசமரம், வில்வம்

தீர்த்தம் : பூமி தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமிய ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருநல்லம், திருவல்லம்

ஊர் : கோனேரிராஜபுரம்

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

அந்த மதியோடு மரவச் சடைதாழ முந்தி யனலேந்தி முதுகாட்டு எரியாடி சிந்தித்து எழவல்லார் தீராவினை தீர்க்கும் நந்தி நமையாள் வான்நல்ல நகரானே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 34வது தலம்.

திருவிழா:

வைகாசி விசாகத்திலும், மார்கழி திருவாதிரையிலும் பிரமோற்சவ திருவிழா இரண்டு முறை நடக்கிறது.

தல சிறப்பு:

இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை கோயில் தல விருட்சமாக உள்ளது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 97 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

சிவன் சன்னதி கோஷ்டத்தின் பின்புறம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே அருள்பாலிக்கிறார்கள். இக்கோயில் ராஜராஜ சோழனின் பாட்டி கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவியால் கட்டப்பட்டது. வைத்தியநாதருக்கு தனி கோயில் உள்ளது. இத்தல விநாயகர் அரசமர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டதுவாரபால விமானம் எனப்படும்.

பிரார்த்தனை

சகல விதமான நோய்களும் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதரை வழிபட்டால் குணமாகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமண தடை உள்ளவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், வியாபாரத்தில் பிரச்னை உள்ளவர்கள் திங்கள் கிழமையில் இங்குள்ள சிவனுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் செய்து "வசுதரா' என்ற யாகம் செய்தால் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. திரிபுரத்தை எரித்த திரிபுரசம்ஹாரமூர்த்தி இத்தலத்தில் தனியாக அருள்பாலிக்கிறார். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் எமபயம், எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது ஐதீகம்.


படிப்பில் மந்தம் உள்ளவர்கள், ஞாபக சக்தி வேண்டுபவர்கள் இங்குள் ஞானகுழம்பு தீர்த்தம் சாப்பிட்டால் சிறந்த பலன் உண்டு.


நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


தலபெருமை:

துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள். நந்தி பகவான் இங்கு வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. எனவே பிரதோஷ காலத்தில் இங்கு வழிபாடு செய்தால் ஒன்றுக்கு பல மடங்கு பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது.


அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோயில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.

16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர். பெருமாள் தாரை வார்த்து கொடுக்க சிவபார்வதி திருமணக்காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார். பூமாதேவி இங்கு வழிபாடு செய்திருக்கிறாள். எனவே இத்தல இறைவனுக்கு பூமிநாதர் என்ற பெயரும் உண்டு.

பிரமாண்டமான நடராஜர்: வரகுணபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவனும் பார்வதியும் பஞ்சலோகத்தால் ஆன குழம்பை குடித்து, சுயம்பு மூர்த்தியாக நடராஜர் சிவகாமி அம்மனாக காட்சி கொடுத்துள்ளனர். மதுரை, உத்திரகோசமங்கை, கோனேரிராஜபுரம் ஆகிய இம்மூன்று தலங்களிலும் நடராஜருக்கு திருவீதிவுலா கிடையாது. பிரமாண்டமாக நடமாடும் இத்தல நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம், மச்சம், ரேகை, நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் இருப்பது சிறப்பம்சமாகும். இப்பகுதி மக்களுக்கு நடராஜர் ஆலயம் என்றால் தான் தெரிகிறது.

நலம் தரும் சனிபகவான்: இங்குள்ள சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும்.


சனி தோஷத்தில் பாதிக்கபட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. அகத்தியர் வழிபட்ட தலம்.


தல வரலாறு:

ஒரு முறை புரூரவஸ் என்ற மன்னனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. இந்த நோயால் மிகவும் வருந்திய மன்னன், நோய் தீருவதற்காக பல திருத்தலங்கள் சென்று வழிபட்டான். கடைசியில் காவிரித்தென்கரையில் உள்ள இத்தலம் வந்து வழிபாடு செய்ததும் அவனுக்கு நோய் தீர்ந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த மன்னன் கோயிலுக்கு காணிக்கையாக, சிவசன்னதி விமானத்தை பொன் தகட்டால் வேய்ந்தான். அத்துடன் வைகாசி விசாக தினத்தில் திருவிழா நடக்கவும் ஏற்பாடு செய்தான் என்பது வரலாறு.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை கோயில் தல விருட்சமாக உள்ளது.

அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி - நாகப்பட்டினம்


மூலவர் : உத்வாகநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : கோகிலா

தல விருட்சம் : கருஊமத்தை

தீர்த்தம் : சப்தசாகரம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : மணஞ்சேரி, கீழைத்திருமணஞ்சேரி

ஊர் : திருமணஞ்சேரி

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

விடையானை மேலுலகும் ஏழுமிப் பாரெல்லாம் உடையானை ஊழிதோ றூழி உளதாய படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி அடைவானை அடையவல்லார்க்கு இல்லை அல்லலே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 25வது தலம்.

திருவிழா:

சித்திரை மாதம்- திருக்கல்யாண உற்சவம் -வருடந்தோறும் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசன் திருக்கல்யாண மகோற்சவம் மூன்று தினங்கள் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாட்களில் ஊரே மணக்கோலத்துடன் காட்சி தரும். ஆடிப்பூரம், திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகியன இத்தலத்தில் விசேசமாக நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

தல சிறப்பு:

சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 25 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இங்கு நவகிரகங்கள் கிடையாது. மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார். இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன. கோயிலுக்கு திருமண வரம் வேண்டி, குழந்தைப் பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் கோயில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு.

பிரார்த்தனை

திருமணம் கை கூடாது தடைபட்டு நிற்பவர்கள்இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் மகிமைகளுள் மிகப் பிரசித்தமானது.

ராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள்.


பிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம்.


இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.


நேர்த்திக்கடன்:

திருமண வரம் வேண்டுவோர் இத்தலத்தில் வந்து கல்யாணசுந்தரருக்கு கல்யாணஅர்ச்சனை செய்து மாலை சாத்தி வழிபடுகிறார்கள். இத்தலத்தில் வழிபட்டு திருமண வரம் கைகூடப்பெற்றவர்கள் மீண்டும் வந்து கல்யாண சுந்தரருக்கு கல்யாண அர்ச்சனை செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோயில் கொண்டருளியுள்ள ராகு பகவானுக்குப் பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டால் ராகு தோசம் நீங்கப்பெற்று புத்திரபாக்கியம் கிடைக்கப்பெறுகிறார்கள்.சனீசுவரனுக்கு எள் தீபம் அல்லது நெய்தீபம் ஏற்றுகிறார்கள். உத்வாகநாத சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

தலபெருமை:

திருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோயில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது. திருமண பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை என்பது மிகவும் பிரசித்தமானது.இந்த கல்யாண அர்ச்சனைக்கு (திருமணத்திற்கு முன்பாகவும் திருமணம் முடிந்த பிறகும்) இரண்டு மாலை, இரண்டு தேங்காய், மற்றும் மஞ்சள், குங்குமம், சூடம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், சர்க்கரை வாங்கி வரவேண்டும்.கல்யாண அர்ச்சனை என்பதால் இதில் குறிப்பாக கற்கண்டு இருந்தாக வேண்டும்.

கோயிலுக்குள் இருக்கும் மற்ற மூர்த்திகளையெல்லாம் வணங்கி விட்டு கல்யாணசுந்தரர் சன்னதி முன்பாக இருக்கும் பெரிய ஹாலில் நீண்ட வரிசையாக அமர்கிறார்கள். இதில் கல்யாண வரம் வேண்டுவோர் ஒருவரிசையாகவும், இத்தலத்தில் வேண்டிக் கொண்டு கல்யாணம் ஆகப்பெற்ற புதுமணத்தம்பதிகள் ஒருவரிசையாகவும் அமர்கிறார்கள். பின்பு பூஜைக்குரிய சாமான்களை அர்ச்சகர் வாங்கிக் கொண்டு கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்கிறார்.சுவாமி மீத சாத்திய மாலையில் ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறார். தம்பதிகள் தங்களுக்குள் அந்த மாலையை மாற்றிக் கொள்கின்றனர். திருமண வரம் வேண்டி அமர்ந்திருப்போருக்கு அவர்களது கழுத்தில் மாலை அர்ச்சகரால் அணிவிக்கப்படுகிறது. பின்பு என்னென்ன செய்ய வேண்டும் என்று அர்ச்சகர் மைக் பிடித்து அறிவிக்கிறார்.

இங்கு அர்ச்சித்து தரப்படும் எலுமிச்சை ஆரோக்கியத்தையும், மாலை சந்தோசத்தையும்,விபூதி இஷ்டபூர்த்தியையும், குங்குமம் லட்சுமி கடாச்சத்தையும், மஞ்சள் சுபகாரிய அனுகிரகத்தையும் அளிக்கிறது என்று பொருள்.அர்ச்சனை செய்த பின் தரப்படும் மாலையை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இங்கு தரப்படும் எலுமிச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாறு பிழிந்து ஆகாரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும்.பின் விரைவில் கல்யாணம் நடக்கும்.கல்யாணம் நடந்தபின் அந்த பழைய மாலையை திரும்பவும் எடுத்து வந்து தம்பதிகள் சமேதமாக இத்தலத்தில் கல்யாணசுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு பிரார்த்தனையை பூர்த்தி செய்தல் வேண்டும்.


குழந்தை வரம் : அம்மாவாசை அன்று இத்தலத்துக்கு வர வேண்டும்.இத்தலத்தில் ராகுபகவான் முழு உருவத்தோடு இருக்கிறார்.மனித உருவில் கவச குண்டலத்தோடு இருக்கிறார் என்பது விசேசம்.இவருக்கு அம்மாவாசை அன்று பால் அபிசேகம் செய்து பால் பாயாசம் நைவேத்தியம் செய்த பூஜை செய்து சாப்பிட்டால் குழந்தை வரம் கண்டிப்பாக கூடிய விரைவில் கிடைக்கப்பெறுவர்.


குழந்தை பிறந்தவுடன் இத்தலத்திற்கு மீண்டும் வருகிறார்கள். ஆண்குழந்தைவரம் வேண்டி அதுபடி கிடைக்கப்பெற்றவர்கள் சுவாமிக்கு தண்டக் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.பெண் குழந்தைவரம் வேண்டிக் கொண்டவர்கள் கொலுசு வளரி போடுகிறார்கள்.ஆசைக்கு குழந்தைவரம் வேண்டியவர்கள் ஓசைக்கு மணிவாங்கிக் கட்டுகிறார்கள்.விளக்கு போல் பிரகாசிக்க குழந்தைவரம் வேண்டியவர்கள் விளக்குகள் வாங்கி வைத்து வழிபடுகிறார்கள்.தவிர உண்டியல் காணிக்கையும் போடுகிறார்கள்.


காமன் சாபம் நீங்கப் பெற்ற தலம் : சிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறு பெற வரமருளியதும் இத்தலத்தில்தான்.


இத்தலவரலாற்றோடு தொடர்புடைய ஊர்கள்: தேரழந்தூரில் அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது. அக்காட்டில் அம்பிகை பசு உரு ஏற்றும், கோமலில் திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து பசுக்களை பராமரித்து வந்ததாகவும் திருக்குளம்பத்தில் ஈசன் பசுவின் குளம்புத்தழும்பை ஏற்றதாகவும், திருவாடுதுறையில் பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்டதாகவும், திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி நடத்திய யாக வேள்வியில் உமை மங்கை தோன்றினார் எனவும் அறிய கிடக்கின்றன. திருவேள்விக் குடியில் திருமணத்திற்காக கங்கணதாரணமும் மங்கள நாமமும் செய்து குறுமுலைப்பாளையில் பாலிகை ஸ்தாபனமும் செய்தும், எதிர்கொள்பாடியில் இறைவனை எதிர் கொண்டழைத்தும், திருமணஞ்சேரியில் எம்பெருமான் உமையாளை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர்.இது நித்திய கல்யாண ஷேத்திரம். ராகு தோச நிவர்த்தி தலம் இது.ராகு பகவான் இங்கு முழு உருவில் உள்ளார். மனித உருவத்தில் கவச குண்டலத்தோடு காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சப்த சாகரம் என்பது ஏழு கடலும் மாலையாக இறைவன் திருமணத்திற்கு வந்ததாக ஐதீகம்.


தல வரலாறு:

சிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும்போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார்.இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்க செய்து விட்டார்.பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார்.

ஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய யாக வேள்வி குண்டத்தில் தோன்றி உமையாளை திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார் என்பது தல வரலாறு.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம் (திருத்துருத்தி) - நாகப்பட்டினம்


மூலவர் : உத்தவேதீஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : அரும்பன்ன வனமுலைநாயகி

தல விருட்சம் : உத்தாலமரம்

தீர்த்தம் : பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள்

ஆகமம்/பூஜை : காரண, காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருத்துருத்தி, குற்றாலம்

ஊர் : குத்தாலம்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

கங்குல் கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச் சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய் பொங்கிலங்கு பூணநூ லுருத்திரா துருத்திபுக் கெங்குநின் னிடங்களா வடங்கி வாழ்வ தென்கொலோ. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 37வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை ஞாயிறு.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 100 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12: 30 மணி வரை. மாலை 5 மணி முதல் 9 மணி வரை.


பொது தகவல்:

இங்கு பார்வதி, காளி ஆகியோரும், காசிபன் , ஆங்கீரசன், கவுதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகளும் இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.


உமையமையம்மை, அக்னி, வருணன், காளி, காமன், காசிபன், ஆங்கீரசன், கவுதமன், வசிட்டன், மார்கண்டன், புலத்தியன், அகத்தியன், சிவபக்தன், வித்துவன்மாலி, கதிரவன், உருத்திரசன்மன், பரதன், புண்டரீசன், ககோள முனிவர், புலகன், குச்சன், விக்ரமன், சுந்தரர், சதானந்தர், வச்சன், சோமசேகரன், தருமசன்மர், சுமதி, சௌதரிசன முனிவர் ஆகியோர் இறைவனை தரிசித்துள்ளனர்.


உமையமையம்மை, அக்னி, வருணன், காளி, காமன், காசிபன், ஆங்கீரசன், கவுதமன், வசிட்டன், மார்கண்டன், புலத்தியன், அகத்தியன், சிவபக்தன், வித்துவன்மாலி, கதிரவன், உருத்திரசன்மன், பரதன், புண்டரீசன், ககோள முனிவர், புலகன், குச்சன், விக்ரமன், சுந்தரர், சதானந்தர், வச்சன், சோமசேகரன், தருமசன்மர், சுமதி, சௌதரிசன முனிவர் ஆகியோர் இறைவனை தரிசித்துள்ளனர்.


பிரார்த்தனை

திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். சரும நோய் தீர சுந்தர தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கிறார்கள். அர்ச்சனை செய்து வழிபட்டு சுவாமி, அம்பாளுக்கு சூட்டிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும்.

தலபெருமை:

பாம்பாட்டியாக வந்த சிவன்: உருத்திரசன்மன் என்பவன் முக்தி பெற காசிக்கு சென்றான். இத்தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவன், குண்டோதரனை அழைத்து ""நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன்மன் காசிக்கு செல்ல விடாமல் தடுத்து விடு'' என்று கூறினார். அதன்படி பாம்பு இவனை தடுக்க, உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கிகீழே விழுந்தது. பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார். பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவன் வணங்க, ""இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்,'' என்று கூறினார்.

மூலவர்- உக்தவேதீஸ்வரர் என்ற சொன்னவர் அறிவார். அம்மன்- அரும்பன்ன வனமுலையம்மன். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்துதான் தன் குறையை போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான்.


அக்கினி தன் பழி தீர சுவாமியை வழிபட்டது. விக்கிரம சோழன் மனைவி கோமளையின் குட்ட நோய் தீர்த்தது. வருணனின் சலோதரம் நீக்கியது. காளி, சூரியன், காமன் மற்றம் காசிபர் முதலிய ஏழு முனிவர்கள் வழிபட்டது. சுந்தரருக்கு சரும நோய் தீர்த்தது. சிவபக்தனின் காச நோயை போக்கியது போன்ய பல பெருமைகளை உடையது. தல விருட்சத்தின் அடியில் இறைவன் இத்தலத்திற்கு எழுந்தருளிய பாதுகை உள்ளது என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.

தல வரலாறு:

காதல் புரிந்தோம் என்பதற்காக பெற்றவர்களைப் பகைத்துக் கொண்டு காவல்நிலையம் பக்கம் செல்லும் இளசுகள் அதிகரித்து வருகிறார்கள். அன்னை பார்வதி இப்பூமியில் மானிட ஜென்மமாய் அவதரித்து, சிவன் மீது காதல் கொண்டாலும் கூட, பெற்றவரிடம் முறைப்படி பெண் கேட்டு அழைத்துச் செல்லும் படி இறைவனிடம் கேட்டாள். நற்குணமுடைய இறைவன் அழைத்தே பெற்றவர்களுக்கு மரியாதை கொடுத்த பார்வதி போல, காதலிகள் தங்கள் காதலர் கரம்பிடிக்கும் முன் போராடியேனும் பெற்றோர் சம்மதம் பெற முயற்சிக்க வேண்டும். பரதமாமுனிவர் பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என கடும் தவம் இருக்கிறார்.


இவரது வேண்டுகோளை ஏற்ற இறைவன் வேள்விக் குண்டத்தில் பார்வதியைப் பிறக்கச் செய்தார். பார்வதியும் பெரியவளாகிறாள். இவளது ஒரே விருப்பம் சிவனைத் தன் கணவனாக அடைவது என்பது தான். காவிரிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள். எட்டாவது நாள் வழிபாடு செய்ய வந்த போது அவ்விடத்தில் ஒரு லிங்கம் இருக்கக்கண்டு, சிவனே அவ்வாறு எழுந்தருளியதாகக் கருதி மகிழ்ந்தாள். சிவனும் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதியின் கையை பற்றி அழைத்தார். ஆனாலும், பார்வதி சிவனுடன் செல்லாமல் இறைவனே! என்னை வளர்த்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும் படி அவர்கள் சம்மதத்துடன் என்னைத் திருமணம் செய்யுங்கள்'' என்று கூற ஈசனும் சென்று விட்டார்.

சில காலம் கழித்து நந்தியை, பரதமாமுனிவரிடம் மணம் பேசி வர தூது அனுப்பி வைக்கிறார் சிவன். முனிவரும் சம்மதிக்க மண நாள் குறிக்கப்பட்டது. கைலாயத்திலிருந்து மணமகனாக ரிஷப வாகனத்தில் சிவன் வர, விநாயகர் முன்னே செல்ல, "உத்தாலம்' என்னும் மரமும் சிவனுக்கு நிழல் தந்து கொண்டே வந்தது. மணமகள் இருப்பிடமான குத்தாலம் வந்து பெற்றோர் சம்மதத்துடன் பார்வதியை பரமேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார். சிவன் தான் இங்கு வந்து திருமணம் செய்ததற்கு அடையாளமாக தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் விட்டு சென்றார். இதனால் தான் இத்தலம் "குத்தாலம்' எனப்பட்டது.


சோழர் மற்றும் விஜயநகரத்தார் கல்வெட்டுகளில் இந்த கல்யாண ஆலயத்திற்கு நிலம் வழங்கப்பட்டது. ராஜேந்திரசோழன் 5ம் நூற்றாண்டில் தனது படைகளுக்கு வெற்றி தருவதற்காக சைவ அன்பர்களுக்கு உணவளிக்க பணம் தரப்பட்டது. விக்ரமதேவன் 1123ம் ஆண்டு ஆகஸ்ட் 19 தேதி 90 பொன் வரக்கூடிய வரிகளை தந்தார். ராஜேந்திரசோழன் ஒரு மடம் கட்ட நிலம் வழங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் (துறைகாட்டும் வள்ளலார்)திருக்கோயில், திருவிளநகர் - நாகப்பட்டினம்


மூலவர் : உச்சிரவனேஸ்வரர் (துறைகாட்டும் வள்ளலார், வஜ்ரவனேஸ்வரர்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : வேயுறுதோளியம்மை

தல விருட்சம் : விழல் என்ற புல்செடி

தீர்த்தம் : காவிரி, மெய்ஞான, பொய்கை தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமிய ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : விழர்நகர், திருவிளநகர்

ஊர் : திருவிளநகர்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ்சடை முடியினார் கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார் மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே.
- திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 40வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் வேயுறுதோளியம்மை சங்கு, சக்கரத்துடன் பக்தர்களை காப்பாற்றுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 103 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் உள்ளன. ராஜகோபுரத்தை அடுத்து பலிபீடம், நந்தி, ஆஸ்தான மண்டபம் அமைந்துள்ளது.


மகாமண்டபத்தின் வடபுறத்தில் அம்மன் தென்புறம் நோக்கி அருள்பாலிக்கிறார். சிவன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.


சுற்றுப்பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை, விநாயகர், சோமாஸ்கந்தர், நால்வர், கஜலட்சுமி, நடராஜர், நவகிரகங்கள், சனிபகவான், பைரவர், சூரியன் ஆகியோர் அருளுகின்றனர்.

பிரார்த்தனை

எந்தவித பிரச்னையாக இருந்தாலும் இங்கு வந்து தரிசனம் செய்தால் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தலவிருட்சமான விழல் செடியில் முடிச்சு போட்டு வேண்டிக்கொண்டால் விரைவில் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பண உதவி, நிரந்தரமாக தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கிக் கொடுத்தல் போன்ற வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

முன் காலத்தில் இப்பகுதி முழுவதும் விழர் செடிகள் அடர்ந்து இருந்ததால் "விழர் நகர்' எனப்பட்டது.


இது காலப்போக்கில் "திருவிளநகர்' ஆனது. திருஞான சம்பந்தர் கடைமுடி முதலிய தலங்களுக்கு சென்று மயிலாடுதுறை வரும் வழியில் காவிரியாறு கரைபுரண்டு ஓடியது. அப்போது வழிதெரியாமல் திண்டாடிய சம்பந்தர்,""இங்கு துறைகாட்டுவோர் யாரேனும் உளரோ'' என்று கேட்க இறைவன் வேடனாக தோன்றி துறைகாட்டி அக்கரை சேர உதவி செய்தார்.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்பவன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான்.


இவன் தினமும் திருப்பள்ளிஎழுச்சி பூஜைக்காக கூடை நிறைய பூ எடுத்துக்கொண்டு ஆற்றைக்கடந்து வருவான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன்.


ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடச்செய்தார். இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையை காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். ஆற்றின் கரையை நோக்கி செல்ல போராடினான். இதனால் இறைவனது திருப்பள்ளி எழுச்சிக்கு பூவை கொண்டு செல்ல காலதாமதம் ஏற்பட்டுவிடுமோ என பயந்தான். இறைவனை பிரார்த்தித்தான்.


இவனது பக்திக்கு மகிழ்ந்த இறைவன் ஆற்றின் துறையை காட்டி உதவினார். அருள்வித்தனின் பெருமை உலகிற்கு தெரிந்தது. இதனால் இறைவன் "துறை காட்டும் வள்ளல்' ஆனார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் வேயுறுதோளியம்மை சங்கு, சக்கரத்துடன் பக்தர்களை காப்பாற்றுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், கீழைத்திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடு - நாகப்பட்டினம்


மூலவர் : ஆரண்யேஸ்வரர் (ஆரண்யசுந்தரர்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : அகிலாண்டேஸ்வரி

தல விருட்சம் : பன்னீர் மரம்

தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமிகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கீழைத்திருக்காட்டுப்பள்ளி

ஊர் : திருக்காட்டுப்பள்ளி

பாடியவர்கள்: சம்பந்தர், நாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

தோலுடையான் வண்ணப் போர்வையினான் கண்ணவெண்ணீறு துதைத்திலங்கு நூலுடை யானிமை யோர் பெருமான் நுண் அறிவால் வழிபாடு செய்யும் காலுடை யான்கரி தாயகண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி மேலுடையான் இமையாத முக்கண்மின் இடையாளொடும் வேண்டினானே. -திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 12வது தலம்.

திருவிழா:

சிவராத்திரி, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி.

தல சிறப்பு:

இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் "தசலிங்கம்' சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

மூலவரின் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படும். பிரகாரத்தில் "தசலிங்கம்' சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைபு. இந்த அமைப்பை குறிப்பிட்டு சம்பந்தர், ""தன்னருகே தசலிங்கம் கொண்ட உடையர்'' என்று பாடியிருக்கிறார். இத்தலத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் நவக்கிரக தலங்களில் புதன் தலமான திருவெண்காடு இருக்கிறது.


பிரார்த்தனை

தெரியாமல் செய்த பாவம் நீங்க, இழந்த பதவி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

6 சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி: மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். வனத்தின் மத்தியில் இருந்தவர் என்பதால் இவர் ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். "காட்டழகர்' என்றும் இவருக்கு பெயருண்டு. அம்பாள் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி கிடையாது. சுவாமி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். இவர் "ராஜயோக தெட்சிணாமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார்.

உயர்ந்த பொறுப்பில் இருந்து பதவி இழந்தவர்கள், நியாயமாக செயல்பட்டும் பதவி உயர்வு கிடைக்காதவர்கள் ஆரண்யேஸ்வரருக்கும், தெட்சிணாமூர்த்திக்கும் வஸ்திரம் அணிவித்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் இழந்த பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.


நண்டு விநாயகர்: இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வனால் வழிபடப்பட்டவர் இவர். எனவே இவர் "நண்டு விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. பொதுவாக விநாயகருக்கு இருக்க வேண்டிய மூசிக வாகனமும் இங்கு கிடையாது. நண்டு, இவருக்கு வாகனமாக இருப்பதால் மூசிக வாகனம் இல்லை என்கிறார்கள்.


சிறப்பம்சம்: ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. அவரது பெயரால் சுவாமி ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாவும் சொல்கிறார்கள். கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.


தல வரலாறு:

பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். எனவே, விருத்தாசுரனுடன் போரிட்ட இந்திரன், அவனை சம்ஹாரம் செய்தான். இதனால் அவனுக்கு தோஷம் உண்டானது. தேவலோக தலைவன் பதவியும் பறிபோனது. தனக்கு மீண்டும் தேவதலைவன் பதவி கிடைக்க குருவிடம் ஆலோசனை செய்தான். அவர், பூலோகத்தில் சிவனை வணங்கிட விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்ற இந்திரன், இத்தலம் வந்தான்.

அடர்ந்த வனத்தின் மத்தியில் சிவன், சுயம்பு மூர்த்தியாக இருப்பதைக்கண்ட அவன், சிவபூஜை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், ""நியாயத்திற்காக செய்யும் செயல் எத்தகையதாக இருப்பினும் அதற்கு பாவபலன் கிடையாது,'' என்று சொல்லி அருள் செய்தார். இவரே இங்கு ஆரண்யேஸ்வரராக காட்சி தருகிறார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் "தசலிங்கம்' சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் - நாகப்பட்டினம்


மூலவர் : ஆபத்சகாயேஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பெரியநாயகி

தல விருட்சம் : எலுமிச்சை

தீர்த்தம் : அக்னி, வருண தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருஅன்னியூர்

ஊர் : பொன்னூர்

பாடியவர்கள்: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர் கந்த மாமலர் சூடுங் கருத்தினர் சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர் அந்த ணாளர்கள் கண்டீர் அன்னியூரரே. -திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 22வது தலம்.

திருவிழா:

மகாசிவராத்திரி, வைகாசிவிசாகம், திருக்கார்த்திகை.

தல சிறப்பு:

இங்கு சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மற்றொரு பெயர் அக்னிபுரீஸ்வரர். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 22 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இத்தலத்தில் சுவாமியை வருணன், அரிச்சந்திரனும் வழிபட்டுள்ளனர். பிரகாரத்தில் சனீஸ்வரர், சூரியன், பைரவர் மூவரும் அருகருகில் இருக்கின்றனர். தந்தையான சூரியனுக்கு அருகில் இருந்தாலும், இங்கு சனி, சுபசனீஸ்வரராகவே இருக்கிறார். எனவே, சனி தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் சுப்பிரமணியர், காதுகளில் வட்ட வடிவமான காதணி அணிந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பம்சம். ஆதிசங்கரருக்கும் சன்னதி உள்ளது.


பிரார்த்தனை

பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க, மனக்குறைகள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, தயிர்சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.

தலபெருமை:

இரட்டை தெட்சிணாமூர்த்தி: இத்தலத்தில் சுவாமி அக்னியின் வடிவில் இருப்பதாக ஐதீகம். எனவே, இவருக்கு அக்னிபுரீஸ்வரர் என்றும் பெயர் உண்டு. முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பூஜை செய்பவர்கள் இங்கு சுவாமியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. கார்த்திகை மாதத்தில் சுவாமியை, ரதி வழிபட்ட வைபவமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. அம்பாள் பெரியநாயகிக்கு தனி சன்னதி இருக்கிறது.

ஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அருகருகே இரண்டு தெட்சிணாமூர்த்தி சன்னதி இருக்கிறது. இதில் மேதா தெட்சிணாமூர்த்திக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவரது காலுக்கு கீழே நந்தியும் இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை. புதிதாக பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பவர்கள், இவ்விரு தெட்சிணாமூர்த்திக்கு விசேஷ பூஜைகள் செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்கிறார்கள்.

தல வரலாறு:

பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன், தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள், அசுரனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவனை வேண்டச் சென்றனர். அவர் யோகத்தில் இருந்ததால் மன்மதனின் உதவியால் அவரது யோகத்தை களைத்தனர். கோபம் கொண்ட சிவன், மன்மதனை எரித்து விட்டார். மனம் கலங்கிய ரதிதேவி, சிவனிடம் தன் கணவனை மீட்டுத் தரும்படி வேண்டினாள். அவர் தகுந்த காலத்தில் மன்மதன் உயிர்பெற்று அவளுடன் சேர்வான் என்றார். கணவன் விரைவில் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவனை எண்ணி தவமிருந்து வழிபட்டாள். மன்மதன் மீண்டும் உயிர்பெற்ற பிறகு, இங்கு ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். இருவருக்கும் காட்சி தந்த சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக காட்சி தருகிறார். பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.

அரும்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை - நாகப்பட்டினம்


மூலவர் : அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : உபய புஷ்ப விலோசனி, இருமலர்க்கண்ணம்மை

தல விருட்சம் : கொன்றை

தீர்த்தம் : கோயிலின் முன் உள்ள தீர்த்தக்குளம். இக்குளத்தில் மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும் கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகமம்/பூஜை : ருத்ர வியாமளா தந்திர ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருச்சாத்தமங்கை, கோயிற்றிருச்சாத்தமங்கை

ஊர் : சீயாத்தமங்கை

பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

தேவாரபதிகம்

வெந்த வெண்ணீறு பூசி விடையேறிய வேதகீதன் பந்தணவும் விரலாள் உடனாவதும் பாங்கதுவே சந்தமா றங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை அந்தமாய் ஆதியாகி அயவந்தி அமர்ந்தவனே. - திருஞானசம்பந்தர்

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 81வது தலம்.

திருவிழா:

ஆவணி மூல விழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

தல சிறப்பு:

மூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல அம்மன் இருமலர்க்கண்ணம்மையின் நெற்றியில், சிவனைப்போல நெற்றிக்கண் இருப்பது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது சிறப்பம்சமாகும்.திருநீலநக்க நாயனார் அவதார தலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 144 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்:

மேற்கு நோக்கிய திருக்கோயில். சுவாமி, அம்பாள் சன்னதிகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் மேற்கு நோக்கியே உள்ளன. உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய கோயில். ஆலயத்தின் பக்கத்தில் நகரத்தார் சத்திரம் உள்ளது. சுவாமி ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது,


விசாலமான உள் இடம், வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன், சனிபகவான் (காகத்தின் மீது ஒரு காலூன்றிய அமைப்பில்) சப்தமாதர்கள், பைரவர், நவகிரகங்கள், மாலிங்கம், விசுவநாதர் விசாலாட்சி, விநாயகர் முதலிய சன்னதிகள் உள்ளன. உள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து, வலம் வரும் போது, வள்ளிதெய்வயானை சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சன்னதிகள் உள்ளன.

அடுத்து திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் மங்கையர்க்கரசி என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது. சோமஸ்கந்தர், மகாகணபதி சன்னதிகளைத் தரிசித்துப் படிகளேறி உட் சென்றால் வலதுபுரம் உள்ள நீலநக்கர், அவருடைய மனைவி, நடனசுந்தரர் முதலிய உற்சவத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். நடராசசபை உள்ளது. அம்பலக்கூத்தர், அம்மை சிவகாமி மணிவாசகருடன் காட்சி தருகின்றார்.

(சோழர் காலக்) கல்வெட்டில் இத்தலத்து இறைவன் ' அயவந்தி உடையார் என்று குறிக்கப்பட்டுள்ளார். திரிபுவனச்சக்கரத்தில், குலோத்துங்க சோழர், இராசராசதேவர் காலத்தியவை.

பிரார்த்தனை

திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

திருநீலநக்க நாயானரின் அவதாரத் தலம். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி, லிங்கோற்பவர், பிரம்ம, பிட்சாடனர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது தரிசிக்கத்தக்கது. இம்மூர்த்தங்களுடன் அகத்தியரும் உள்ளார்.

ருத்ர வியாமளா தந்திர' ஆகம முறைப்படி நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆவணி மூலவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 1945ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள இக்கோயிலுக்குப் பக்கத்தில் திருமருகல், திருநள்ளாறு முதலிய திருமுறைத் தலங்கள் உள்ளன. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது திருநீலநக்கர் வரவேற்று அவருடைய நட்பைப் பெற்றதும் இத்தலமேயாகும்.

தல வரலாறு:

திருநீலநக்க நாயனார் அவதரித்ததும், திருத்தொண்டு புரிந்ததும் இத்தலமேயாகும். ஒரு சமயம் நாயனார் தன் மனைவியாருடன் இத்தல இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் சென்றார். அப்போது ஒரு சிலந்திப் பூச்சி இலிங்கத்தின் மீது விழுந்தது. மனைவியார் அன்பு மேலீட்டினால் அப்பூச்சியை வாயால் ஊதி அகற்றினார். இதைப் பார்த்த நாயனார் தமது மனைவியாரின் இச்செயல் தகாதது என்று எண்ணி அவரைத் துறந்தனர். மனைவியாரும் வீடு செல்லாது கோவிலில் கவலையுடன் இருந்தார்.

அன்று இரவு வீட்டில் நாயனார் தூங்குகையில் சிவபெருமான் அவருடைய கனவில் தோன்றி அவர் மனைவியர் ஊதின இடத்தை தவிர ஏனைய இடமெல்லாம் சிலந்தியின் கொப்புளம் இருப்பதைக் காட்டி அவ்வம்மையாருடைய அன்பின் பெருக்கை வெளிப்படுத்தி அவரை நாயனாரோடு கூட்டுவித்த பெருமை வாய்ந்த தலமாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர் - நாகப்பட்டினம்


மூலவர் : அமிர்தகடேஸ்வரர்

உற்சவர் : காலசம்ஹாரமூர்த்தி

அம்மன்/தாயார் : அபிராமியம்மன்

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருக்கடவூர்

ஊர் : திருக்கடையூர்

பாடியவர்கள்: அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்


சடையுடை யானும்நெய் யாடலானும் சரிகோவண உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனும் கடையுடை நன்னெடு மாடமோங்கும் கடவூர் தனுள் விடையுடை யண்ணலும் வீரட்டானத் தரனல்லனே.  - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 47வது தலம்.

திருவிழா:

எம சம்ஹாரம் - சித்திரை மாதம் - 18 நாட்கள் - மகம் நட்சத்திரத்தன்று இத்திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும். தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும் - 6 ம் நாள் அன்று கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வெளியே வரும். கார்த்திகை - சோம வாரம் 1008 சங்காபிசேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது. புரட்டாசி நவராத்திரி, மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும். ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும்,கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.


தல சிறப்பு:


இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 110 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடம் ஆகும்


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் "குகாம்பிகை'யாக இருக்கிறாள். இங்குள்ள "கள்ளவாரண பிள்ளையார்' துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார். பிரம்மன், அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்க்கை முதலியோர் வழிபட்ட தலம் இது. விநாயகரின் அறுபடைவீடுகளில் இத்தலமும் ஒன்று. இத்தலத்து உற்சவரின் திருநாமம் காலசம்ஹாரமூர்த்தி. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும்.

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும். இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றதாகும்.

பிரார்த்தனை

சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது. 59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள். 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள். அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள்.

50 ஆம் கல்யாண ஆண்டு விழா, ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர். இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம் , கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள். இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். எமபயம் அண்டாது. மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் அமிர்தகடேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்திக்கடன்:

அங்க பிரதட்சணம் , கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் குழந்தை தத்துக் கொடுத்தல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாதிகள் குணமாக சங்காபிசேகமும்,புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிசேகமும் சுவாமிக்கு செய்கின்றனர். இருதய சம்பந்தமான நோய்கள் குறிப்பாக ஹார்ட் அட்டாக் உள்ளவர்கள் இத்தலத்தில் சப்த திரவிய மிருத்யுஞ்சய ஹோமம் செய்தால் கண்டிப்பாக உயிர் பிழைக்கிறார்கள்.இது போல பலபேர் செய்து உயிர் பிழைத்திருக்கிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, கட்டிக்கொண்டு, ஏற்கனவே கட்டியிருந்த தாலியை காணிக்கையாக செலுத்துகின்றனர். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.


தலபெருமை:

அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.


மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள். அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார்.

பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.

அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.

காலசம்ஹார மூர்த்தி: மிருகண்டு முனிவர் - மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளை வரம் இல்லை. மிருகண்டு முனிவர் கடுந்தவம் இருந்ததன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார். குறைந்த ஆயுளுடனும், நிறைந்த அறிவும் உடைய குழந்தை பிறக்கும் என்று ஈசன் கூறினார். இதனையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார்.16 வயது ஆனவுடன் ஆயுள் பற்றிய கவலை குடும்பத்தாருக்கு பிறந்தது.


தன் பிறப்பில் உள்ள பிரச்சினையைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன் சிவதலங்களாகச் சென்று வழிபட்டான். 107 சிவதலங்களை வழிபட்ட பின் 108 வது சிவதலமாக திருக்கடையூர் வந்தான். அப்போது அவனது இறுதிநாளும் வந்துவிட்டது. இங்கு சிவனை வேண்டினார்.


எமன் அவரது உயிரைப்பறிக்க வந்தபோது, எமன் அவனது உயிரைப்பறிக்க நேராக அவரே வந்து விட்டார். எமனைக் கண்ட மார்க்கண்டேயர் நேரே ஓடிப்போய் அமிர்தகடேசுவரரை இறுகக் கட்டிக் கொண்டான். எமன் பாசக்கயிறை வீசினார். அவன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டுமே விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேசுவரரையும் சேர்த்து சுருக்குப்போட்டு இழுத்தது. சிவபெருமான் கோபம் கொண்டு என்னையுமா இழுக்கிறாய் என்று கூறி காலனை எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்காரம் செய்துவிட்டார்.அத்தோடு, ""மார்க்கண்டா! நீ என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாய் இரு,'' என்று அருளினார்.பின் காலன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை.


தேவி ஈசனிடம் முறையிட, கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும், திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி, இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன், ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர். சாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும்போது, எமனை பார்க்கமுடியாது. பூஜை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை "சம்ஹார கோலம்' என்றும், எமனுடன் இருப்பதை "உயிர்ப்பித்த கோலம்' என்றும் சொல்கிறார்கள். ஆக, ஒரே சமயத்தில் "சம்ஹார' மற்றும் "அனுக்கிர மூர்த்தியை' தரிசிக்கலாம். இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில், இரு கரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.


சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல, இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதனை, "திருக்கடையூர் ரகசியம்' என்கிறார்கள். முதலில் பாபகரேஸ்வரரையும், பின் சுவாமியையும், அடுத்து யந்திர தகட்டையும் வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது.


தீர்த்த சிறப்பு: மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன், திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூஜை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.


மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்தபோது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்ததாக ஐதீகம். பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக்கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றவர்கள் இதை பயன்படுத்தக்கூடாது.இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.


சதாபிஷேகம்: திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90 வயது), சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. இந்த பூஜை செய்பவர்கள், அருகிலிருக்கும் கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டால், இந்த வேண்டுதல் பூர்த்தியாவதாக ஐதீகம்.


திருக்கடையூரில் 60, 80ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத்தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின்போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச்சென்ற பாதாள குகை இருக்கிறது.


திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும். இத்தலத்து முருகனைக் குறித்து, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார்.


எமன் லிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது. கால சம்கார மூர்த்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம், கம்பீரம் எல்லாம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி, வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார். பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.


நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரகங்களுக்கு இங்கு பவர் இல்லை.கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள். ராகு தோசங்கள் இங்கு கிடையாது. அம்பாள் மகா விஷ்ணு ஆபரணத்திலிருந்து உண்டானவள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும், குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான்.


தல வரலாறு:

பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பி கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, இத்தலம் வந்து சிவனை வணங்கினார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆதி வில்வவனநாதராக தனிசன்னதியில் அருளுகிறார். பின், பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதை உண்ணச்சென்றனர். எனவே, விநாயகர் அதனை மறைத்து வைத்துவிட்டார்.

பின் விநாயகரை வணங்கிய தேவர்கள், அமிர்த கலசத்தை வாங்கி சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்த குடம் இருந்த இடத்தில் சுயம்புலிங்கம் உண்டானது. அமுதத்தில் இருந்து தோன்றியதால், "அமிர்தகடேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.

அருள்மிகு கருந்தார்குழலி சமேத சரண்யபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர் - திருக்கண்ணபுரம் - நாகப்பட்டினம்


மூலவர் : சரண்யபுரீஸ்வரர், அக்னிபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : கருந்தார் குழலி, சூளிகாம்பாள்

தல விருட்சம் : புன்னை மரம்

தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்புகலூர்

ஊர் : திருப்புகலூர்

பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

பூவுந்நீரும் பலியும் சுமந்து புகலூரையே நாவினாலே நவின்றேத்த லோவார் செவித் துளைகலால் யாவும் கேளார் அவன்பெருமை அல்லால் அடியார்கள்தாம் ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்று உள்ளம் கொள்ளவே. - திருஞானசம்பந்தர்


தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 75வது தலம்.


திருவிழா:

வைகாசி மாதம் - வைகாசி பூர்ணிமா - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் திருவிழா - அன்றைய தினம் தல புராணப்படி அருள்மிகு சந்திரசேகரர் அக்னிபகவானுக்கு காட்சி அளித்தல் நிகழும். மாதங்கள் தோறும் முக்கிய திருவிழாக்கள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் - சதய நட்சத்திரத்தன்று - 10 நாட்கள் - அப்பர் பக்தோற்சவம் - இதுவும் இத்தலத்தில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா ஆகும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், திருநாவுக்கரசர் முக்தி அடைந்த தலம் அருள்மிகு முருக நாயனார் அவதரித்த தலம். அக்னி பகவானுக்கு இத்தலத்தில் உருவம் உண்டு. ஏழு சுடர்கள் 5 கரங்கள் 3 கால்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 138 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.பொது தகவல்:

பாணாசுரன் வெட்டிய அகழி இப்போதும் கூட காணப்படுகிறது. இத்தல விநாயகர் ஞான விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


பிரார்த்தனை

வாஸ்து தோஷம் நீங்க: இங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வீடு, சிறந்த வாழ்க்கைத்துணை, நல்ல குழந்தைகள் எனஅனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும். புதிய வீடு கட்டுபவர்கள், மூன்று செங்கல்களை பூஜித்து எடுத்து சென்று ஈசான மூலை, அக்னி மூலை, பூஜை அறையில் தலா ஒரு செங்கல் வீதம் வைத்து வீடு கட்டுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. எனவே இத்தல இறைவனை "வாஸ்துநாதர்' என்றும் அழைக்கின்றனர்.


சுகப்பிரசவம் ஆக: இங்குள்ள அம்பாளுக்கு கருந்தார்குழலி என்றும், சூலிகாம்பாள் என்றும் பெயர். இவள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்ததாக வரலாறு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடை ஏற்படும் பெண்கள் இங்குள்ள அம்பாளை வழிப்பட்டால் அருள்பார்வை கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட, அம்பாளை வழிபட்டு பலனடையலாம். சாயரட்சை காலத்தில் ராஜராஜேஸ்வரி கோலத்தில் அம்பாள் வெள்ளைப்புடவை அணிவிப்பது வழக்கம். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வெள்ளைப்புடவை சாத்தினால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கையுள்ளது. காலசம்ஹார மூர்த்தி இங்கு தனியாக மூலஸ்தானம் கொண்டு எழுந்தருளியுள்ளார்.


நேர்த்திக்கடன்:

திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள். வெள்ளைப்புடவை வழிபாடு திருமணத்தடை நீங்க அம்மனுக்கு வெள்ளை புடவை சாத்துதலும், அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.


தலபெருமை:

அப்பர் சுவாமிகள் முக்தி அடைந்த தலம் : அப்பர் சுவாமிகள் தனது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்து பெண், பொன், மண்ணாசைகளுக்கு அப்பால் நின்று முக்தி அடைந்த தலம் ஆகும். முக்தி ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.அப்பர் சுவாமிகளுக்கு தனி சன்னதி. சித்திரை சதயத்திற்கு 10 தினங்களுக்கு முன்பிருந்தே திருநாவுக்கரசர் திருவிழா ஆரம்பமாகி சமண மதத்திலிருந்து சைவ மதமாற்ற, முதல் அரசால் ஆணையிடப்பட்ட ஆக்ஞைகள், உழவாரப் படையின் உயர்வு, அரம்பையர் நடனம், அப்பர் ஐக்கிய காட்சி வரை இன்னும் அப்படியே நடைபெற்று வருகிறது. அருள்மிகு அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக ஆகும்போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும். ஒரே கோயிலுக்குள் திருநாவுக்கரசரும், சுந்தரரும் பாடிய இரு சன்னதிகள் உள்ளது. ஒரு சன்னதியிள் இறைவன் அக்னீஸ்வரர். சுயம்புமூர்த்தி. இவருக்கு சரண்யபுரீஸ்வரர், பிரத்தியக்ஷ வரதர், கோணபிரான் என்ற பெயர்களும் உண்டு. இறைவிகருந்தார் குழலி. இவள் சூளிகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். மற்றொரு சன்னதியின் இறைவன் வர்த்மானேஸ்வரர். இறைவி மனோன்மணி அம்மை. 63 நாயன்மார்களில் முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்து வர்த்தமானேஸ்வரருக்கு பூத்தொடுத்து சேவை புரிந்துள்ளார்.


அக்னி பகவானுக்கு சிலை: அக்னி பகவான் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாகும். இங்கு இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் எழுந்தருளி அக்னி பகவானுக்கு காட்சி கொடுத்துள்ளார்.அக்னி பகவானுக்கு உருவம் இத்தலத்தில் உண்டு. 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் உடையவராக உள்ள இந்த அக்னி பகவான் விக்கிரகம் மிகவும் அபூர்வமானது மட்டுமல்ல அரியதும் கூட. இறைவன் சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த அற்புதம் நிகழ்ந்த தலம். இந்த காரணத்தால் புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து மனை முகூர்த்தம் செய்து வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இத்தலம் மிகவும் விசேஷமானது. அம்மன் கருந்தார் குழலி பெண் ஒருத்திக்கு தானே பிரசவம் பார்த்து, கூலியாக நிலத்தை பெற்றிருக்கி றாள். எனவே சூலிகாம்பாள் என்ற பெயர் வந்து பின்னர் சூளிகாம்பாள் ஆனாள். இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பே ஏற்படாது என்ற ஐதீகம் உள்ளது.


சனீசுவர பகவான் : நளச் சக்கரவர்த்திக்கும் சனீஸ்சுவர பகவானுக்கும் ஒரே சந்நிதி. நள சக்கரவர்த்தி பாணாசுரன் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் இதிலிருந்து 7 கல் தொலைவில் உள்ள திருநள்ளாறில் நான் விலகிக் கொள்கிறேன் என்று அசரீரி ஏற்பட்டதாகும். இத்தலத்தில் சனீசுவர பகவானுக்கு அனுகிரக சனீசுவர பகவான் என்ற பெயர் உண்டு.


கருந்தார்குழலி : இத்தலத்து அம்பாள் மிகவும் விசேசமானவள். சூளிகாம்பாள் என்னும் பெயருடைய இந்த பெருந்தகையாள் தெற்குப் பார்த்த முகமுடையாள். கருந்தாள் என்று எல்லோராலும் கருதப்படுவாள். பிரசவம் பார்த்த காரணத்தால் சூளிகாம்பாள் என்ற பெயருடையாள். சூல் பார்த்து மருத்துவ காணியும் பெறப்பட்டுள்ளது. இப்பகுதியில் பிரசவத்தால் இறப்பில்லை என்று அனுபவ முறையில் அறுதியிட்டு கூறலாம். சாயரட்சை காலத்தில் ராஜ ராஜேசுவரி கோலத்தில் வெள்ளை அணிவிப்பது பழக்கமாகும் அம்பாளின் அனுக்கிரகங்களை அவ்வப்போது கண்கூடாக பார்க்கலாம். திருமணம் ஆகாத பெண்கள் வேண்டுதல் செய்து வெள்ளை வஸ்திரம் சாற்றினால் திருமணம் கைகூடுவது நிச்சயம். பூதேசுவரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேசுவரர் மும்மூர்த்திகளும் முறையே கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் முதலியவைகளை குறிப்பதாகும். இத்தலத்தில் முக்காலங்களும் அடங்கியுள்ளது. அருள்மிகு முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு புஷ்பத் தொண்டு புரிந்த இடம். திரிமுகாசூரஜ் மூன்று முகங்களை உடையவர்.அதாவது மனித முகம், பட்சி முகம், பன்றி முகம். அசுரர்களுக்கு பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த தலம் ஆதலால் புகழூர் என்று பெயர்.


தல வரலாறு:

ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு "அக்னீஸ்வர சுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப்பட்டதால் சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. அக்னீஸ்வரர் கோயிலின் நான்கு புறமும் அகழி சூழ்ந்திருந்தது. கோயிலுக்குள் செல்ல வழியில்லாததால், முன்பகுதி அகழியை தூர்த்து வழி ஏற்படுத்தினர். ராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம் தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரால் பாடல் பெற்றது. 6 அல்லது 7ம் நூற்றாண்டு கோயிலாக இது இருக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


வடபாகமாக சாய்ந்த மூலவர்: பாணாசூரனின் தாயார், ஒரு வேண்டுதலுக்காக தினமும் ஒரு சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்தாள். 108வது லிங்கத்திற்கு பூஜை செய்தபோது, தன்னைப் போல் இவ்வாறு லிங்க பூஜை செய்தவர் யாருமில்லை என்ற ஆணவம் பிறந்தது. இதனால் இறைவன் அவளது வேண்டுதலை நிறைவேற்ற வில்லை. இதை உணர்ந்த அந்தப் பெண்மணி, தன் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்க, காசி சென்று மண்ணால் லிங்கம் அமைத்து, பாவநிவர்த்தி செய்து கொள்ளும்படி கூறினார். பாணாசுரன் சிவபெருமானிடம், ""ஐயனே! என் தாய் வயதானவள். காசியில் செய்ய வேண்டியதை இங்கேயே செய்ய அருள வேண்டும்,'' என்றான். இறைவனும் அவ்வாறே அருளினார். அப்போது அவர்கள் அமைத்த மணல் லிங்கம் ஒரு பக்கம் சாய்ந்தது. அந்த நிலையிலேயே அவர்கள் சிவனை வணங்கினர். வடபக்கமாக கோணலாக காட்சியளித்ததால், சிவனுக்கு "கோணபிரான்' என்ற பெயர் ஏற்பட்டது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு அக்னிபகவானுக்கு 2 முகம், 7 கைகள், 7 ஜுவாலை, 4 கொம்புகள், 3 பாதங்கள் கொண்ட உருவம் உண்டு.

அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோயில், ஓகைப்பேரையூர் (திருப்பேரையூர்) - திருவாரூர்


மூலவர் : ஜகதீஸ்வரர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : ஜகன் நாயகி (பெண்ணமிர்த நாயகி)

தல விருட்சம் : நாரத்தை மரம்

தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருப்பேரெயில், ஓகைப்பேரெயில்

ஊர் : ஓகைப்பேரையூர்

பாடியவர்கள்: அப்பர்

தேவாரப்பதிகம்

மறையும் ஓதுவார் மான்மறிக் கையினர் கறைகொள் கண்ட முடைய கபாலியார் துறையும் போகுவர் தூயவெண் நீற்றினர் பறையும் சூடுவர் பேரெயி லாளரே. - திருநாவுக்கரசர் 


தேவாரப்பாடல் பெற்ற காவிரித்தென்கரை திருத்தலத்தில் இது 114வது தலம்.


திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 178 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

3 நிலை ராஜ கோபுரம், ஒரு பிரகாரத்துடன் கிழக்கு நோக்கிய கோயில். உள்பிரகாரத்தில் கற்பக விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், அய்யனார், சூரியன், சந்திரன், துர்க்கை, லிங்கோத்பவர் ஆகிய சன்னதிகள் உள்ளன.


இத்தலத்தினை சுற்றிலும் தென்கிழக்கே தலையாலங்காடு, வடமேற்கே திருநாட்டியத்தான்குடி, தென்மேற்கே திருவாரூர், வடகிழக்கே திருவெண்டுதுறை ஆகிய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன.


பிரார்த்தனை

வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

தேவாரப்பாடல் பெற்ற காவிரித்தென்கரை திருத்தலத்தில் இது 114வது தலம்.இத்தலத்தில் உள்ள சபாபதி (நடராஜர்) பிற தலங்களை விட மிக அழகாக விளங்குவதாக தல வரலாறு கூறுகிறது.


இவ்வூரில் தோன்றிய முறுவலார் என்னும் பெண்மணி பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநானுற்றிலும் இடம் பெற்றுள்ளன. இத்தல முருகப்பெருமானுக்கு சித்திரை சஷ்டியில் திருவிழா நடக்கிறது.திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகை திருப்பதிகம் ஒன்றைப்பெற்ற தலம்.


தல வரலாறு:

சோழ நாட்டின் தலைநகராகத் திருவாரூர் விளங்கியபோது அதைச்சார்ந்த கோட்டை இருந்தது என்றும், அக்கோட்டையின் அருகே எழுந்த ஊர் பேரெயிலூர், என்று பெயர் பெற்றதென்றும் அப்பெயரே மருவி பேரையூர் என்றாயிற்று என்பது ஆய்வாளர் கருத்து.


இவ்வூரில் தோன்றிய பெண் புலவர் ஒருவர். பேரெயில் முறுவலார். பாடிய பாடல்கள் குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் உள்ளன.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருத்தேங்கூர் - திருவாரூர்


மூலவர் : வெள்ளிமலைநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பெரியநாயகி

தல விருட்சம் : தென்னை

தீர்த்தம் : சிவகங்கை

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருத்தேங்கூர், திருத்தெங்கூர்

ஊர் : திருத்தங்கூர்

பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடியணி சுவண்டர் எல்லி சூடிநின்றாடும் இறையவன் இமையவர் ஏத்தச் சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற வில்லினார் திருத்தெங்கூர் வெள்ளியங் குன்றுஅமர்ந் தாரே. - திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 116வது தலம்.


திருவிழா:

வைகாசி விசாகத்தன்று மட்டும் சிறப்பு பூஜை நடத்தப்படும்.

தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நவக்கிரக லிங்கம் இருப்பது சிறப்பு.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 180 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

இது ஒரு சிறிய கோயில். பழமையான கோயில் என்பதால் களை இல்லை. இக்கோயிலில் நவக்கிரக லிங்கங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருவது விசேஷம். அனைத்தும் கல்லால் ஆனவை. பெரிதும் சிறிதுமாக உள்ள இந்த லிங்கங்கள் சூரியலிங்கம், சந்திரலிங்கம், அங்காரக லிங்கம், புத லிங்கம், குரு லிங்கம், சுக்ரலிங்கம், சனீஸ்வர லிங்கம், ராகு லிங்கம், கேது லிங்கம் எனப்படுகின்றன. கோயில் பிரகாரத்தில், இந்த லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இது ஓர் அபூர்வக்காட்சியாகும்.

ராகு கேது பெயர்ச்சிகாலத்தில் சிவனோடு ஐக்கியமாகி விட்ட இந்த லிங்கங்களைத் தரிசிப்பதன் மூலம், கிரக தோஷங்கள் நீங்கப் பெறலாம் என்பது நம்பிக்கை. லிங்க வடிவில் நவக்கிரகங்கள் இருந்தாலும், சாதாரணமாக அமைக்கப்படும் நவக்கிரக மண்டபமும் இங்கு உள்ளது. அம்பாள் சன்னதி கோயிலின் நுழைவு வாயிலில் வலது கைபக்கம் உள்ளது.


பிரார்த்தனை

இங்கு வேண்டிக்கொள்ள லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:

இக்கோயிலில் மகாலட்சுமி தங்கி சிவபூஜை செய்திருக்கிறாள். வெண்தாமரையும், செந்தாமரையும் கலந்து வளர்ந்த குளம் ஒன்று ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்தது. தற்போது, அக்குளம் தூர்ந்து விட்டது. இருப்பினும், இத்தலத்து சிவன் செல்வத்தை வாரி வழங்குபவராக உள்ளார். மகாலட்சுமியே பூஜை செய்த இடம் என்றால் கேட்கவா வேண்டும்.

சுவாமியை ரஜதகிரீஸ்வரர் என்றும் சொல்வார்கள். "ரஜதகிரி' என்றால் "வெள்ளிமலை' என பொருள். இது மேற்கு பார்த்த கோயிலாகும். மேற்கு பார்த்த கோயிலுக்கு கிழக்கு பார்த்த கோயிலை விட அதிக சக்தியுண்டு. மேற்கு சிவ தரிசனம் ஆயிரம் மடங்கு பலனைத்தரும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி. ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.விழாக்கள் ஏதும் இத்தலத்தில் இல்லை. வழக்கமான பூஜைகளே நடக்கின்றன.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிந்தது. இதை மறுபடியும் உண்டாக்கும்படி விஷ்ணுவிடம் சிவன் கூறினார். விஷ்ணு தன் நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மனை உருவாக்கி, உலகைப்படைக்கும்படி ஆணையிட்டார். உலகமும் உருவானது.


ஓரிடத்தில் ஜலப்பிரளய காலத்திலும் அழியாத வில்வவனம் இருந்தது. அவ்விடம் மகிமையானதாக இருக்க வேண்டும் எனக்கருதிய ராகு, கேது உள்ளிட்ட நவக்கிரக தேவர்கள், அவ்வனத்தில் இருந்த அகஸ்திய நதியின் கரையில் ஆளுக்கு ஒரு லிங்கத்தை உருவாக்கி, ஆயிரம் ஆண்டுகள் பரமசிவனைக் குறித்து தவமிருந்தனர். பரமசிவன் அங்கு தோன்றி, புதிய உலகத்தை மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நவக்கிரகத்தை தலைவராக நியமித்தார். உலகில் மக்கள் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பலன்களை அளிக்கும் அதிகாரத்தையும் வழங்கினார்.


பிரம்மன் இத்தலத்துக்கு வந்து, நவக்கிரகங்கள் அமைத்த லிங்கங்கள் கண்டு மகிழ்ந்து அவ்விடத்திற்கு நவக்கிரகபுரம் என பெயரிட்டார். இதன்பின் தேவேந்திரன் இங்கு வந்து வெள்ளிமலை மன்னவனுக்கு லிங்கம் அமைத்தான். இறைவன் வெள்ளிமலை நாதர் என்றும், அம்பிகை பிரகன்நாயகி என்றும் அழைக்கப்பட்டனர்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நவக்கிரக லிங்கம் இருப்பது சிறப்பு.

அருள்மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில் வெண்ணி , நீடாமங்கலம் - திருவாரூர்


மூலவர் : வெண்ணிகரும்பேஸ்வரர், (திரயம்பகேஸ்வரர், இரசபுரீஸ்வரர், வெண்ணிநாதர்)

உற்சவர் : -

அம்மன்/தாயார் : அழகிய நாயகி (சவுந்தர நாயகி)

தல விருட்சம் : நந்தியாவர்த்தம்

தீர்த்தம் : சூரிய, சந்திர தீர்த்தங்கள்

ஆகமம்/பூஜை : காமிய ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருவெண்ணியூர், கோயில்வெண்ணி

ஊர் : கோயில்வெண்ணி

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

காற்றினைக் கனலைக் கதிர்மாமணி நீற்றினை நினைப்பார் வினைநீக்கிடும் கூற்றினை யுதைத்திட்ட குணமுடை வீற்றினைநெரு நற்கண்ட வெண்ணியே. - திருநாவுக்கரசர் 

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 102வது தலம்.

திருவிழா:

நவராத்திரி 9 நாட்களும் திருவிழா கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம், சித்திரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, திருவாதிரை, தைப்பூசம், மாசிமகம் ஆகிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:

பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 165 வது தேவாரத்தலம் ஆகும்.


திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


பொது தகவல்:

கிழக்கு நோக்கிய கோயில். எதிர்புறம் சூரியதீர்த்தம் . மூன்று நிலைராஜககோயிலின் உள்ளே நந்தி, பலிபீடம் உள்ளன.


பிரகாரத்தில் விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன.


கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை. ஆகியோர் உள்ளனர். கருவறை அகழி அமைப்புடையது.


பிரார்த்தனை

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரையையும், ரவையையும் சம அளவில் கலந்து பிரகாரத்தை வலம் வந்து எறும்புக்கு உணவாக இடுகிறார்கள். இதனால் சர்க்கரை நோய் குணமாகிறது என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து விநியோகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:

மிகவும் பழமையான இத்தலத்து இறைவனை 4 யுகங்களிலும் வழிபாடு செய்யப்பட்டுள்ளதாக தலவரலாறு கூறுகிறது.


இறைவனின் திருமேனி அதாவது பாணத்தில் கரும்புக்கட்டுகளாக கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சியுடன் அருள்பாலிக்கிறார்.


சங்க காலத்தில் இவ்வூரில் வெண்ணிக்குயத்தியார் என்ற பெரும்புலவர் அவதரித்தார். இவர் பாடிய புறநானுற்றுப்பாடல் கரிகாற் சோழனின் வெண்ணிப்போரைக்கூறுகிறது.


கரிகாற்சோழன் தன் 18வது வயதில் இங்குள்ள பிடாரி அம்மனை வழிபட்டு சேர, பாண்டிய மற்றும் குறுநில மன்னர்களை எதிர்த்து போர் செய்து வெற்றி பெற்றுள்ளான். கரிகாற்சோழன் பெற்ற இந்த வெற்றியே மாபெரும் வெற்றியாக கல்வெட்டு கூறுகிறது.


இந்த பிடாரி அம்மனை வழிபடுபவர்களுக்கு எதிரி பயம் இருக்காது என்பது ஐதீகம்.


தான் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதத்தில் கரிகாற்சோழனும், முசுகுந்த சக்கரவர்த்தியும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளதாக தெரிகிறது.


தல வரலாறு:

முற்காலத்தில் இத்தலம் முழுவதும் கரும்புக்காடுகளால் சூழப்பட்டிருந்தது. ஒரு முறை இரு முனிவர்கள் தல யாத்திரை மேற்கொண்டபோது இத்தலம் வந்தனர். அப்போது இந்த கரும்பு காட்டிற்குள் இறைவனின் திருமேனியை கண்டு தொழுதார்கள். அவர்களில் ஒருவர் இத்தலத்தின் தலவிருட்சம் கரும்பு என்றும், மற்றொருவர் வெண்ணி என்றழைக்கப்படும் நந்தியாவர்த்தம் என்றும் வாதிட்டனர்.


இறைவன் அசரீரியாக தோன்றி,""எனது பெயரில் கரும்பும், தலவிருட்சமாக வெண்ணியும் இருக்கட்டும்,'என்றருளினார். அன்று முதல் இறைவன் கரும்பேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.


இதுவே வடமொழியில் ரசபுரீஸ்வரர் ஆனது. தல விருட்சத்தின் பெயரால் இத்தலம் வெண்ணியூர் என்றழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி கோயில் வெண்ணி ஆனது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி 2,3,4 ஆகிய தேதிகளில் சிவனின் திருமேனி மீது சூரிய ஒளி படர்ந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.