Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞான சித்தியார் பகுதி- 2.3

54. உரைத்தஇத் தொழில்கள் மூன்றும் மூவருக்கு உலகம் ஓத
வரைத்து ஒரு வனுக்கே ஆக்கி வைத்தது இங்கு என்னை? என்னின்
விரைக்கம லத்தோன் மாலும் ஏவலான் மேவி னோர்கள்-
புரைத்த அதிகார சத்தி புண்ணியம் நண்ண லாலே.

படைத்தல், காத்தல், ஒடுக்குதல் என்ற மூன்று தொழில்களும் நான் முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூன்று கடவுளர்களுக்கு உரியன என்று உலகத்தில் பெரு வழக்கமாக இருக்க இம்மூன்று தொழில்களையும் சிவபெருமான் ஒருவனே செய்வான் என்று கூறினீர்கள் அது எவ்வாறு பொருந்தும்? என்று சிலர் கேட்பர். மணம் மிக்க தாமரை மலரில் வாழ்கின்ற அயனும் திருமாலும் தங்கள் புண்ணியச் சிறப்பால் படைத்தலும், காத்தலும் ஆகிய உயர்ந்த அதிகார ஆற்றலைச் சிவபிரானது ஏவலால் பெற்றனர். முத்தொழிலும் இயற்றும் வல்லமை சிவபெருமான் ஒருவனுக்கே உண்டு என அறிக. விரை- மணம், புரை- உயர்வு அதிகாரசக்தி- இயற்றும் ஆற்றல்.

55. இறுதியாம் காலம் தன்னில் ஒருவனே இருவரும் தம்
உறுதியில் நின்றார் என்னில் இறுதிதான் உண்டாகாதாம்;
அறுதியில் அரனே எல்லாம் அழித்தலால் அவனால் இன்னும்
பெறுதும் நாம் ஆக்கம் நோக்கம் பேர் அதி கரணத்தாலே.

உலகத்திற்கு இறுதி வருகின்ற ஒடுக்க காலத்தில் சிவபெருமான் ஒருவனே நிலைபெற்று இருப்பான். அவனைத்தவிர மற்றை இருவராகிய அயனும் திருமாலும் நிலைபெற்றிராமல் ஒடுக்கமுறுவர். ஏனெனில் அவ்விருவரும் ஒடுக்கப்படாமல் எஞ்சி இருந்தால் அக்காலத்தைச் சங்காரக் காலம் என்று கூறுவது பொருந்தாது. ஒடுக்கத்தைச் செய்யும் சங்காரக் கடவுள் தவிர மற்ற யாவையும் எல்லோரும் ஒடுக்கத்திற்கு உட்படுவர். சங்காரக் கடவுளாகிய சிவபெருமான் யாவற்றுக்கும் ஒடுக்கத்தைச் செய்து தான் ஒருவனே எஞ்சி நிற்பான். சிவபெருமானே ஒடுங்கிய உலகங்களுக்குப் பெரியதோர் ஆதாரம் ஆதலால் அவனே உலகத்தை மீண்டும் தோற்றுவிப்பதற்கும் நிலை நிறுத்துவதற்கும் உரியவன் ஆவான்.

அறுதிஇல் அரன்- ஈறு இல்லாத சிவபெருமான். ஆக்கம்- தோற்று வித்தல்; நோக்கம்- காத்தல். அதிகரணம்- ஆதாரம்.

56. சொன்னஇத் தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னில்,
முன்னவன், விளையாட்டு என்று மொழிதலும் ஆம்; உயிர்க்கு
மன்னிய புத்தி முத்தி வழங்கவும், அருளான் முன்னே
துன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதும், சொல்ல லாமே.

மேலே கூறப்பட்ட படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் சிவபெருமான் செய்தற்குரிய காரணம் யாது எனச் சிலர் கேட்பர். அவை அவனுடைய திருவிளையாடல் என்று கூறுதலும் உண்டு. அது மட்டும் அல்லாமல் உயிர்களுக்கு இம்மை, மறுமை, விடு என்னும் இவற்றை வழங்கவும் இறைவன் முத்தொழில் செய்கிறான் என்றும் கூறுவர். மேலும் உயிர்களைப் பற்றியுள்ள மும்மலங்களையும் தன் அருளால் நீக்குவதற்கு எனவும் கூறுவர் பெரியோர்.

முன்னவன் விளையாட்டு என்ற சொற்களால் ஆசிரியர் குறித்ததற்கு காரணம் இறைவன் முத்தொழில்களையும் மிக எளிதில் செய்கிறான் என்பதேயாகும். காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி (திருவாசகம்- திருவெம்பாவை 12). ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம் (திருவாசம்- திருவெம்பாவை 11) என்ற திருவாக்குகள் இங்கு நினையத்தக்கன. மொழிதலும் என்ற உம்மை எதிரது தழுவிய எச்ச உம்மை. ஏனெனில் அதனைத் தொடர்ந்து வருகின்ற கருத்துக்களையும் அந்த உம்மை சுட்டிற்று. இதனை அடுத்த பாடலில் இறைவனின் செயல்கள் யாவும் அவனது பேரருளே என்பது விளக்கப்படுகிறது.

57. அழிப்புஇளைப்பு ஆற்றல்; ஆக்கம் அவ்வவர் கன்மம் எல்லாம்
கழித்திடல்; நுகரச் செய்தல், காப்பது; கன்ம ஒப்பில்
தெழித்திடல் மலங்கள் எல்லாம் மறைப்பு; அருள் செய்தி தானும்
பழிப்புஒழி; பந்தம்வீடு பார்த்திடில் அருளே, எல்லாம்.

இறைவன் உலகத்தை ஒடுக்குவது உயிர்கள் இளைப்பாறுவதன் பொருட்டே ஆகும். உலகத்தை மீண்டும் தோற்றுவிப்பது உயிர்களின் வினை முழுவதையும் கழித்து அவற்றுக்கு மலக் கட்டினை நீக்குவதற்கு ஆகும். உலகத்தைக் காப்பது உயிர்களின் வினைப்பயனை அவை நுகரச் செய்வதற்கு ஆகும். மறைப்பு எனப்படுவது உயிர்களுக்கு இருவினை ஒப்பு நிகழுமாறு செய்து அவற்றின் மலங்களை நீக்குவதற்கு ஆகும். அருளல் என்பது பாசத்தை நீக்கி சிவப்பேற்றை வழங்குவதற்கு ஆகும். எனவே இறைவனின் ஐந்தொழில்களும் ஆராய்ந்து பார்க்கும்வழி அவனுடைய அருட் செயல்களே ஆகும். இவற்றுள் சில மறத்தொழில் போலும் என்று பழித்தலை ஒழிக.

முந்தியப் பாடலில் இறைவனின் தொழில்கள் மூன்று என்றார் ஆசிரியர். இப்பாடலில் அவற்றை ஐந்து என விரித்துக் கூறினார். மறைத்தல் என்னும். தொழில் காத்தலில் அடங்கும். அருளல் என்னும் தொழில் ஒடுக்குதலில் அடங்கும். இறைவனின் ஐந்தொழில்களுமே அவனுடைய மாறாத பேரருளால் நிகழ்வன என்பதனை இப்பாடலில் கூறினார். தெழித்திடல்- நீக்குதல். பாடலின் இறுதி அடியில் வருகின்ற பழிப்பு ஒழி என்ற சொற்கள் பழித்தலை ஒழிவாயாக என்று முன்னிலை வியங்கோள் ஆயிற்று.

58. அருவமோ, உருவா ரூபம் ஆனதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவு? எனக்கு உணர்த்துஇங்கு ! என்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனதும் அன்றி நின்ற
உருவமும் மூன்றும், சொன்ன ஒருவனுக்கு, உள்ள வாமே.

இறைவனின் வடிவம் அருவமா, அருஉருவமா, அல்லது அவை இரண்டும் அன்றி நிலைபெற்ற உருவமா என்று எனக்கு உணர்த்துக எனின், அருவமும், அருஉருவமும், உருவமும் ஆகிய மூன்றுமே முன்னே கூறப்பட்ட இறைவனின் இயல்புகளாம் என்று அறிக.

கருத்தா- வினை முதல் சொன்ன ஒருவனுக்கு என்று இப்பாடலின் இறுதி அடியில் கூறப்பட்ட இறைவன் இந்நூலின் இருபத்து ஒன்றாம் பாடலில் அநாதி முத்தசித்து உரு என்று விதந்து கூறப்பட்டவன். எனவே அவன் காலங்கடந்தவன் கட்டுக்களிலிருந்து நீங்கியவன் அறிவே வடிவானவன் என்ற கருத்துக்கள் பெறப்படும்.

59. நண்ணிடும் உருவம் என்னின், நமக்குஉள உருவம் போலப்
பண்ணிட ஒருவன் வேண்டும்? இச்சையேல், பலரும் இச்சை
கண்ணிய உருவம் கொள்வோம், யாம், பெரும் கடவுள் தானும்
எண்ணிய, யோக சித்தர் போல், உரு இசைப்பன் காணே

இறைவனுக்கு உருவம் உண்டு என்று கொண்டால் நமக்கு உள்ள உருவத்தை ஆக்குதற்கு ஒரு தலைவன் வேண்டும் என்று கொண்டது போல அவனது உருவத்தையும் தோற்றுவித்தற்கு ஒரு தலைவன் வேண்டும் என்றாகும். அவ்வாறு அன்று இறைவன் தான் நினைத்த வடிவத்தைத் தானே மேற் கொள்ளுவான் என்றால் அத்தகைய ஆற்றல் தம் போல்வார் பலருக்கும் இருத்தல் வேண்டும். ஆனால் நாம் கருதிய உருவத்தை மேற்கொள்ள இயலாது என்பது எல்லாரும் அறிந்தது. தலைவனாகிய கடவுள் யோக சித்தர்களைப் போலத் தான் விரும்பிய உருவத்தை மேற்கொள்ளுவான்.

60. வித்தக யோக சித்தர் வேண்டுருக் கொள்ள மாபோல்,
உத்தமன் கொள்வன் என்னின், அவர்களில் ஒருவன் ஆவன்;
அத்தகை யவர்கள் எல்லாம் ஆக்குவது அருளால்; ஆங்கு
வைத்தது மாயை என்னின், வடிவெலாம் மாயை ஆமே?

வித்தகமுடைய யோக சித்தர்கள் தாம் விரும்பிய வடிவத்தை எடுத்துக் கொள்ளுவதைப் போலவே இறைவனும் தான் விரும்பிய வடிவத்தை எடுத்துக் கொள்ளுவான் என்று கூறினால் இறைவனும் அவர்களுள் ஒருவன் என ஆவான் அல்லனோ. அவ்வாறு அன்று. அத்தகைய சித்தர்கள் எல்லாம் தாம் விரும்பிய வடிவத்தை எடுத்துக் கொள்வது இறைவன் அருளாலே ஆகும். இவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைவன் ஆதலால் இவனுக்கு அருள் பாலிப்பர் ஒருவரும் இலர். யோக சித்தர்கள் கொள்ளுவது மாயையில் இருந்து தோன்றிய வடிவமாகும். எனவே வடிவங்கள் எல்லாம் மாயையின் காரியங்கள் அல்லவோ என்ற வினா எழும்.

இதற்கு முந்திய பாடலிலும் இந்தப் பாடலிலும் ஒரே கருத்து தொடர்ச்சியாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இரண்டும் தொடர்ந்து ஒரு முடிவு கொண்டன. இரு பாடல்களும் வினாவாகவும் இனி வருவது விடையாகவும் அமையும்.

61. மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவம் ஆகும்;
ஆயஆ ணவம் அகன்ற அறிவொடு தொழிலை ஆர்க்கும்
நாயகன் எல்லா ஞானத் தொழில்முதல் நண்ண லாலே,
காயமோ மாயை அன்று; காண்பது சத்தி தன்னால்.

மாயையால் வருகின்ற உருவங்கள் யாவும் ஆணவ மலத்தின் தொடர்பினால் உயிர்களுக்கு இறைவனால் வழங்கப்படுகின்றன. உயிர்கள் ஆணவ மலத்தினால் பற்றப் பட்டிருப்பதால் அவற்றின் அறிவும் தொழிலும் சிற்றறிவும் சிறு தொழிலும் ஆகும். தலைவனாகிய இறைவனோ எல்லா ஞானத்துக்கும் எல்லாத் தொழில்களுக்கும் உரிய தன்மை உடையவன். ஆதலால் அவனுடைய வடிவம் மாயையால் ஆகியது அன்று, அவனது சத்தியே அவனுக்கு வடிவமாகும்.

அகறல்- நீங்குதல், ஆர்த்தல்- பொருந்துதல். சத்தி என்று இங்கே கூறியது இறைவனது திருவருள் ஆகும்.

62. சத்தியே வடிவுஎன் றாலும், தான்பரி ணாமம் ஆகும்
நித்தமோ அழியும் அத்தால் நின்மலன் அருவே என்னில்
அத்துவா மார்க்கத்து உள்ளான்- அலன்; இவன் அருமை தன்னை;
புத்திதான் உடையை போல இருந்தனை; புகலக்கேள்நீ;

சிலர் இங்கு ஒருதடையை எழுப்புவர். இறைவனது வடிவம் மாயையின் காரியம் அன்று என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம். அவனது வடிவம் என்பது அவனது சத்தியே என்பதையும் ஏற்றுக் கொள்ளலாம். ஆயினும் அவன் ஓர் உருவத்தைக் கொண்டவன் என்னும் போது அவனது சத்தி அவனது வடிவமாகப் பரிணமித்தது என்று கொள்ள நேரிடும். அவ்வாறு கொண்டால் அத்தகைய வடிவமும் அழிவுறும் ஆதலால் இறைவன் அருவமானவன் என்று கொண்டால் என்ன? அவ்வாறு அன்று. இறைவன் அத்துவாக்கள் ஆறனையும் கடந்து நிற்பவன். அவற்றுக்கு உட்பட்டவன் அல்லன். அத்தகைய பெருமை உடைய இறைவனின் அருமையை அறிவுடையவன் போலத் தோன்றும் உனக்குச் சொல்லுவேன் கேட்பாயாக. அத்துவாக்கள் என்பன ஆறு ஆகக் கொள்ளப்படும். அவை மந்திரம், பதம், வன்னம், புவனம், கலை தத்துவம் என்பன. அத்துவா என்ற சொல் வழி என்ற பொருளைத் தரும். சொல் உலகும், பொருள் உலகும், ஆகிய அனைத்தும் அத்துவாக்களுக்கு உட்பட்டவை. இறைவன் அத்துவாக்களைக் கடந்தவன்.

63. உலகினில் பதார்த்தம் எல்லாம் உருவமோடு அருவம் ஆகி
நிலவிடும்; ஒன்று ஒன்று ஆகா; நின்ற அந்நிலையே போல
அலகுஇலா அறிவன்தானும் அருவமே என்னில் ஆய்ந்து
குலவிய பதார்த்தத்து ஒன்றாய்க் கூடுவன்; குறித்திடாயே.

உலகத்தில் உள்ள பொருள்கள் யாவும் அருவமாக அல்லது உருவமாக அல்லது அருஉருவமாக விளங்குவன அவற்றில் ஒன்று மற்றொன்று ஆக முடியாது. அவை நின்ற நிலையிலேயே நிற்கும். முற்றறிவுடைய இறைவனையும் அருவம் என்று கொண்டால் அவனும் உலகப் பொருள்களுள் ஒன்றாக ஆவான். இதனை ஆராய்ந்து தெளிவாயாக.

உலகத்துப் பொருள்கள் யாவும் மூன்று வகைகளிலே அடங்கும். இவற்றுள் உருவம் என்பது எல்லாரும் அறிந்தது. எனவே எடுத்துக் காட்டுத் தேவை இல்லை. அருவப் பொருள் என்பது விண் போன்றது. அருஉருவம் என்பது நிலவின் கதிர் போன்றது. ஏனெனில் நிலவின் கதிர் ஒன்றின் மீது படியும் போது உருவம் உடையதாகவும் படியாத போது அருவமாகவும் தோன்றுகிறது. இவற்றில் ஒரு தன்மை உடைய பொருள் மற்ற இரு தன்மைகளையும் அடைய இயலாது. எனவே இறைவனை அருவம் என்று கொண்டால் அவன் மற்ற இரு தன்மைகளையும் எய்தமாட்டான் என்று ஆகும். எனவே அவனும் உலகியல் பொருளில் ஒன்றாகவே கருதப்படுவான்.

64. பந்தமும் வீடும் ஆய பதபதார்த்தங்கள் அல்லான்;
அந்தமும் ஆதி இல்லான்; அளப்பிலன் ஆதலாலே
எந்தை தான் இன்னன் என்றும் இன்னது ஆம் இன்னது ஆகி
வந்திடான் என்றும் சொல்ல வழிக்கொடு மாற்றம் இன்றே.

எந்தையாகிய இறைவன் சொல் உலகம் பொருள் உலகம் ஆகிய இரண்டையும் போலக் கட்டுக்கு உட்படுபவனும் அல்லன். கட்டுக்களில் இருந்து விடுபடுபவனும் அல்லன். அவனுக்குத் தோற்றமும் இல்லை. இறுதியும் இல்லை. அவனுடைய இயல்பை அளவைகளின் துணை கொண்டு அறிய இயலாது. ஆதலால் அவனுடைய வடிவு இத்தகையது என்றும், உயிர்களுக்கு அருள்பாலிப்பதற்காக இன்ன வடிவை ஏற்பான் என்றும். இன்ன வடிவை மேற்கொள்ள மாட்டான் என்றும் சொல்லுவதற்கு இயலாது.

பதம்- சொல். பதார்த்தம்- சொல்லால் குறிக்கப்படும் பொருள். திருஞான சம்பந்தர் திருப்பாசுரத்தில் எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ என்று அருளியதை இங்கே நினைவு கூர்க. அளப்பிலன் என்ற சொல்லால் இறைவன் அளவைகளுக்கு அப்பாற்பட்டவன் என்பது விளக்கப்பட்டது. இந்நூலின் ஐந்தாவது பாடலில் குறைவிலா அளவினாலும் கூறொணாது ஆகி நின்ற இறைவனார் கமலபாதம் என்றதும் நினையத்தக்கது.

65. குறித்தது ஒன்று ஆக மாட்டாக் குறைவு இலன் ஆதலானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பு ஒடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமையானும்
நிறுத்திடும் நினைந்த மேனி- நின்மலன் அருளினாலே.

இறைவன் தான் விரும்பிய வடிவத்தை மேற்கொள்ள இயலாத குறைபாடு இல்லாதவன். அவன் முற்றறிவும், பேராற்றலும் உடையவன். வேண்டுதல் வேண்டாமை இலாதவன். எனவே உயிர்கள் மீது கொண்டே பேரருளினால் தான் நினைத்த வடிவை நினைத்த போதே கொள்ளும் ஆற்றல் உடையவன்.

உயிர்களின் உடல்கள் அவற்றின் வினைப் பயனுக்கு ஏற்ப இறைவனால் அவற்றுக்குத் தரப்பட்டவை. எனவே உயிர்கள் தாம் விரும்பிய வடிவை அடைய இயலாத குறைபாடு உடையவை. இறைவன் வினையின் நீங்கியவன் ஆகையினாலே அத்தகைய குறைபாடு இவனுக்கு இல்லை. உயிர்கள் சிற்றறிவும் சிறு தொழிலும் உடையன. இறைவனே பேரறிவும் எல்லாம் வல்ல பேராற்றலும் உடையவன். உயிர்கள் வெறுப்பும் விருப்பும் உடையன. இறைவனோ வேண்டுதல் வேண்டாமை இலான். அதனால் அவன் நினைத்த போது நினைத்த வடிவத்தைத் தன் அருளினால் கொள்ள வல்லவன். ஆர் ஒருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் (அப்பர் தேவாரம்- திருப்பூவணம் 11) என்பதும் காண்க.

No comments:

Post a Comment