மாரியம்மன் கோவில்களில் தலைமைப் பீடம் ; சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் அரூபமாக அருள்பாலிக்கும் பதி ; சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாபதி என்ற பட்டம் கொடுத்த படைவீடு..
சோமநாத ஈஸ்வரர் மற்றும் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் யோக ராமர் அருளும் ஒளியும் தந்து வாழ்வை சிறக்கச் செய்யும் ஸ்தலம்...
ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் அமைத்துள்ள மிக அற்புதம் வாய்ந்த கிராம தேவதைகளின் தலைமை பீடம்..
🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵
தொலைபேசி எண் : 04181 – 248224, 243224, 9486248103
🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋
இறைவன் : சோமநாத ஈஸ்வரர்
மூலவர் : ரேணுகாம்பாள்
உற்சவர் : ரேணுகாம்பாள்
தல விருட்சம் : மாமரம் , வில்வம்
தீர்த்தம் : கமண்டல நதி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ரேணுகா புரி , படைவீடு , பாலகிரி , கௌண்டலிபுரம் , குண்டலீபுரம்
ஊர் : அம்மன் கோவில் படவேடு (A.K.படவேடு)
🅱 திருவிழா:🅱
🌻 ஆடி மாதம் – ஏழு வெள்ளிக் கிழமைகளும் இத்தலத்தில் மிகவும் விசேசமாக இருக்கும். இந்த விசேச நாட்களின் போது மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுகிறார்கள்.
🎠 ஆடி மாதம் 7 வாரமும் அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரம் ஓர் பார்வை :🎠
🌱 ஆடி முதல் வெள்ளி ரேணுகாம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்திலும்,
🌱 2வது வெள்ளி துர்கை அலங்காரத்தில் சிம்ம வாகனத்திலும்,
🌱 3வது வெள்ளி சிவலிங்க ஆலிங்கன் அலங்காரத்தில் காமதேனு வாகனத்திலும்,
🌱 4வது வெள்ளி மகாலட்சுமி அலங்காரத்தில் நாக வாகனத்திலும்,
🌱 5வது வெள்ளி (இன்று 18-08-17) மகிஷாசூர மர்த்தினி அலங்காரத்தில் குதிரை வாகனத்திலும்,
🌱 6வது வெள்ளி ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் முத்துரதத்திலும்,
🌱 7வது வெள்ளி ராமன், சீதை அலங்காரத்தில் கருட வாகனத்திலும் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.
🌻 புரட்டாசி மாதம் – நவராத்திரி கொலு.
🔥 நவராத்திரி நாட்களில், ஒன்பது நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் ஸ்ரீரேணுகாதேவி காட்சி தருவாள். 🔥
🎸 முதல் நாள் பார்வதி அலங்காரம்.
🎸 இரண்டாம் நாள் காமாட்சி அலங்காரம்.
🎸 மூன்றாம் நாள் மாவடி சேவை அலங்காரம்
🎸 நான்காம் நாள் மீனாட்சி அலங்காரம்
🎸 ஐந்தாம் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம்
🎸 ஆறாம் நாள் துர்காதேவி அலங்காரம்
🎸 ஏழாம் நாள் அன்னபூரணி அலங்காரம்
🎸 எட்டாம் நாள் தனலட்சுமி அலங்காரம்
🎸 ஒன்பதாம் நாள் சரஸ்வதி அலங்காரம்
🔥 காலையும் மாலையும் அம்பிகைக்கு, சிறப்புபூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். 🔥
🌻 ஆனித்திருமஞ்சனம்
🌻 ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும்.
🌻 மார்கழி பூஜை, தைமாதம் வெள்ளிக்கிழமைகள் ஆகியவை இத்தலத்தில் சிறப்பான விழா நாட்கள் ஆகும்.
🌻 வருடத்தின் மிக முக்கிய விசேச நாட்களான தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களிலும் கோயிலில் சுவாமிக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அப்போது கோயிலில் பெருமளவில் பக்தர்கள் கூடுவார்கள்.
🅱 தல சிறப்பு:🅱
🎭 அம்மன் ஆலயமாக இருந்தாலும், இங்குள்ள கோவிலை சோமநாதலிங்கம் என்னும் லிங்கம் (சோமநாத ஈஸ்வரர்) அலங்கரிக்கின்றது.
🎭 இங்கு அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
🎭 பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் உடன் கொண்டு பேருருவாக காட்சியளிக்கிறார். எனவே அம்பிகையை வழிபட்டால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
🎭 ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், சுதையினாலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமைந்துள்ளது.
🎭 சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது.
🎭 அம்மன் சன்னதிகளில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு குங்குமத்திற்கு பதில் வெட்டி எடுக்கப்பட்ட மண் பிரசாதமாக தரப்படுகிறது.
🎭 இக்கோயில் அம்மன் கோயில் என்றாலும் சுற்றுச் சுவர்களில் சிங்க வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதில் இங்கு பசுவே உள்ளது.
🎭 பொதுவாக அம்மன் சன்னதிகளில் பலிபீடம் முன்பு யாழி அல்லது சிங்கம் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் எருது உள்ளது.
🎭 தாரகாசுர வதத்தால் ஏற்பட்ட சாபம் தீர, இங்கு உள்ள மலையில் முருகப்பெருமான் தவம் புரிந்ததால் பாலகிரி என்றும்
🎭 கௌண்டின்ய முனிவர் தவம் புரிந்ததால் கௌண்டலிபுரம் என்றும் அழைக்கப்பட்டதாம்.
🎭 புண்டரீக முனிவர் மானஸ பூஜை செய்து முக்தி பெற்ற தலம்.
🎭 குசஹஸ்த மகரிஷி ஸ்ரீராமரை ஆராதித்து அவரின் அருள் பெற்ற இடம் என சிறப்புகள் பலவற்றைக் கொண்டது படவேடு.
🅱 நடை திறப்பு:🅱
🔑 காலை 6.40 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.🔑
(ஞாயிறு மற்றும் வெள்ளி கிழமைகளில் இடைப்பட்ட நேரங்களில் நடை அடைக்கப்படாது. இந்நேரம் திருவிழா காலங்களில் மாறுதலுக்கு உட்பட்டது)
🅱 பொது தகவல்:🅱
🦋 ஒரு காலத்தில் 1008 சிவாலயங்களும், 108 விஷ்ணு ஆலயங்களும் இவ்வூரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுள் ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் , அம்மையப்பன் திருக்கோயில் , மற்றும் இராமச்சந்திர சுவாமி திருக்கோயில் தவிர இதர திருக்கோயில்கள் அனைத்தும் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இவ்வூர் அரசர்கள் காலத்தில் பட்டிணமாக இருந்ததாகவும், காலப்போக்கில் இயற்கை சீற்றங்களினால் அழிந்ததாகவும் கூறப்படுகிறது.
🦋 ஞானியர் பலர் தவமிருந்து சித்திகள் பல பெற்றதும் இத்திருத்தலதில் தான்.
🅱 பிரார்த்தனை:🅱
🌿 அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொள்கின்றனர். விரதமிருந்து இத்தலத்துக்கு வந்து தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்து அதிக பட்சம் 3 அல்லது 5 நாட்களுக்குள் அம்மை இறங்கி விடுகிறது.
🌿 தலத்தில் தரும் தீர்த்தத்தை உடல் மேல் தெளித்துக் கொள்கின்றனர். வேப்பிலை தண்ணீரை தீர்த்தமாக வாங்கிக் குடித்துவிட்டு அம்மனை வணங்கிச் செல்கிறார்கள். மேலும் திருமண வரம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர்.
🌿 எந்த வகை நோயானாலும் இங்கு வந்து வழிபட்டால் அம்மனின் அருளால் உடனே குணமடைவதாக இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். குறிப்பாக கண் நோய், கண்பார்வை இல்லாதவர்கள் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.
🅱 நேர்த்திக்கடன்:🅱
💥 பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் நேர்த்திகடன்களாக எடைக்கு எடை நாணயம் செலுத்துகிறார்கள் (துலாபாரம்) , நெய்தீபம் ஏற்றுகின்றனர்.
💥 சிலை கண்ணடக்கம், உருவ வகையறா, மற்றும் புடவை ஆகியவற்றையும் செலுத்துகிறார்கள்.
💥 வேப்பிலையை மட்டும் உடையாக உடுத்திக் கொண்டு கோயிலை வலம் வருதல், அங்கபிரதட்சணம் செய்தல், மொட்டை அடித்தல், காதுகுத்தல், தொட்டில் கட்டுதல், ஆடு மாடு கோழி காணிக்கை செலுத்தல் ஆகியவை இத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் முக்கியமான நேர்த்திகடன்களாகும்.
💥 முகத்தில் உள்ள மருக்கள், பருக்கள் ஆகியன நீங்குவதற்காக வெல்லம் மிளகு ஆகியவற்றை செலுத்துகிறார்கள்.
💥 குழந்தை வரம் வேண்டுவோர் பரசுராமருக்கு தொட்டில் கட்டுகின்றனர்.
💥 கோடிதீபம் ஏற்றுதல் இத்தலத்தில் மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
💥 கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.
🅱 தலபெருமை:🅱
🌺 திருநீற்றின் சிறப்பு: 🌺
🔥 பொதுவாக அம்மன் தலங்களில் குங்குமம் தான் பிரசாதமாக தரப்படும். ஆனால் இங்கு மட்டும் வித்தியாசமாக மண்ணே திருநீராக தரப்படுகிறது. இத்தலத்தில் தரப்படும் மண் விசேசமானது. தானாக தோன்றியாதாகும். பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும்.
🔥 இந்த மண் இத்தலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் (அதாவது ரேணுகா தேவியின் கணவர்) வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில் அவர் யாகம் செய்த இடத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. வருடாவருடம் ஆனித்திருமஞ்சனம் அன்று அந்த இடத்தில் பூமியில் பூத்திருக்கும் மண்ணை வெட்டி எடுத்து வந்து பக்தர்களுக்கு தரப்படுகிறது.
🔥 பிணி, வயிற்றுவலி ஆகியவை குணமடையவும் குழந்தைவரம் கிடைக்கவும் இந்த மண்ணை தண்ணீரில் கலந்து பக்தர்கள் அருந்துகிறார்கள். இவ்வாறு அருந்திய சிலதினங்களில் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
🅱 கருவறைச் சிறப்பு : 🅱
🔥 அத்திமரத்தால் ஆன அம்மனின் முழு உருவமும், அதன் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மனும், அம்மனின் இடப்பக்கம் ரேணுகாதேவியின் சிரசும் உள்ளது. இத்திருக்கோயிலின் கருவறையில் அன்னை ரேணுகாதேவி (சிரசு மட்டும்) சுயம்பு உருவமாகவும், பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபங்களாகவும் உள்ளனர்.
🔥 ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், சுதையிலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமையப் பெற்றுள்ளது.
🔥 மும்மூர்த்திகளுடன் எழுந்தருளியுள்ள அன்னை ரேணுகா தேவியை வழிபட மும்மூர்த்திகளையும் வழிபட்ட பலன் உண்டு.
🔥 பரசுராமரின் சிலையும் கருவறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாம்பாளுக்கும் பிறந்த பரசுராமர் அவதரித்த தலம் இது.
🔥 இது பரசுராமர் பிறந்த ஷேத்திரம் என்பதால் பரசுராம ஷேத்திரம் என்று இத்தலத்துக்கு பெயர்.
🔥 ஸ்தானத்தில் பரசுராமரின் சிலை தனியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 கணபதி முனிவர் இங்கு யாகம் செய்துள்ளார். அவர் தான் அம்பாளின் சிறப்பை வெளிக் கொணர்ந்தவர்.
🔥 அழகிய சிற்பங்கள் உள்ள அற்புதமான கோயில் இது.
🅱 கோயில் அமைப்பு: 🅱
🌺 இத்திருக்கோயில் உட்பகுதியில் ஒரு திருச்சுற்றும், வெளிப்புறம் ஒரு திருச்சுற்றும், நான்கு மாடவீதியுடன் அமைத்துள்ளது.
🌺 அருள்மிகு விநாயகர், அருள்மிகு ஆறுமுகர் தனித்தனி சன்னதிகளில் காட்சி அளிக்கின்றனர்.
🌺 திருச்சுற்றில் அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் சன்னதிக்கு அருகில் உட்பிரகாரத்தில் அருள்மிகு சோமநாத ஈஸ்வரர், உமாமகேஸ்வரி அம்மன் தனித்தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர்.
🌺 திருக்குளம் உட்பிரகாரத்தில் வடக்கிழக்கில் அமையப்பெற்றுள்ளது.
🌺 பிராகாரம் வலம் வந்த பின்பே, கருவறை மண்டபத்துக்குள் செல்ல வேண்டும். வசந்த மண்டபத்தின் வடக்கே உற்சவ அம்பாள் அருள்புரிகின்றாள்.
🌺 கருவறை நோக்கி பரசுராமரும், நந்தி தேவரும் காட்சி தருகின்றார்கள். அகில உலகையும் காத்தருளும் அன்னை ஸ்ரீரேணுகாம்பாள் இங்கே காருண்யம் மிக்கவளாய், தீர்க்கமான கண்களுடன், புன்னகை தவழும் அதரங்களுடன் அமர்ந்த கோலத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள்.
🅱 படைவீடு பெயர் காரணம்: 🅱
🎸 படை + வீடு = படைவீடு. படைகள் தங்கு இருந்த இடம். அன்னை ரேணுகாதேவி இத்தலத்தில் படையுடன் வந்து அருள் பாலித்ததால் படைவீடு எனவும், இராச கம்பீர சம்புவராயர் எனும் அரசன் தனது படைகளுடன் இத்தலத்தில் தங்கி போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று நாளடைவில் படவேடு என் பெயர் மருவி வந்துள்ளது.
🎸 அம்மன் கோயில் அமைத்துள்ள இடம் அம்மன் கோயில் படைவீடு (அ.கோ.படைவீடு) என தற்போது பெயர் பெற்றுள்ளது. படைவீடு எனும் ஊர் அ.கோ.படைவீட்டிலிருந்து மேற்கில் 2கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
🅱 சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாபதி என்ற பட்டம் கொடுத்த படைவீடு: 🅱
🌺 படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அருகே உள்ள குன்றின் மீது ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி மயில் மேல் நின்ற கோலத்தில் காட்சித்தருவதோடு, இத்தலத்தில் சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாபதி என்ற மணிமகுடம் சூட்டிய தலம்.
🌺 சிவபெருமானிடம் அளவற்ற வரங்களைப் பெற்று தன்னை வெல்ல யாரும் இல்லை என்ற அகங்காரத்தோடு அனைத்து தேவர்களையும் அடக்கியாண்டு கொடுமைப்படுத்தினான் சூரபத்மன். தேவதச்சனை அழைத்து தென்கடலின் நடுவில் மிக பிரமாண்டமான பாதுகாப்பான மாட மாளிகைகள் நிறைந்த வீர மகேந்திரபுரி என்ற நகரை உருவாக்கச் செய்தான். நகரின் பிரதான சபையில் சிங்காதனத்தின் மேல் அமர்ந்த சூரபத்மன், பிரம்மாவை விட்டுத் தனக்கு மணிமகுடம் சூட்டச்செய்தான்.
🌺 தலைகுனிந்து வணங்கிய தேவர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு பணி செய்ய ஆணையிட்டான். பிரம்மா தன் புத்திரர்களோடு சபைக்கு வந்து தினமும் பஞ்சாங்கம் படிக்கவேண்டும், வீதிகளில் உள்ள குப்பைகளையெல்லாம் வாயுதேவன் அகற்ற வேண்டும். வீதிகளில் சந்தனம், பன்னீர் ஆகியவற்றை வருணன் தெளிக்க வேண்டும். அசுரர்களையும் அசுர சேனைகளையும் யமன் கொல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் சூரன் இட்ட வேலைகளைத் தேவர்கள் மனம் நொந்தபடி செய்தனர்.
🌺 சூரபத்மனின் கொடுமையால் வருந்திய தேவர்கள், சிவபெருமானை அணுகி அருள்புரிய வேண்ட அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்கென்றே எமது நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவசுப்பிரமணியன் விரைவில் அவர்களைக் கொல்வான் என்று கூறிய பெருமான், கந்தனை நோக்கிக் கடைக்கண்ணால் அருளாணை பிறப்பித்தார்.
🌺 இந்திரனை மயில்வாகனமாகக் கொண்டு அக்னியை சேவற்கொடியாக்கி வீரபாகு தேவருடன் களமிறங்கிய முருகபெருமான், சூரபத்மனை இரண்டு கூறாகப் பிளந்து மயில்வா கனமாக, சேவற்கொடியாக ஏற்றுக்கொண்டார். சிவபாலா நானும் பிரம்மாவும் மற்றவர்களும் சூரபத்மனுக்கு வரம் கொடுத்து அவனைப் பலசாலியாக்கினோம்.
🌺 தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அவன் எங்களையே எதிர்த்தான். இந்திரன் நடுநடுங்கிப் போனான். நீ உன்னுடைய பெருவீரத்தினால் சூரபத்மனை சம்ஹாரம் செய்து இந்திரலோகத்தை மீட்டாய். உன்னைப் பற்றிய அருமை தெரியமாமல் உலகத்தோர், நான் காக்கும் கடவுள் என்று என்னை புகழ்கிறார்கள். தேவர் உலகத்தை நிம்மதியாக வாழவைத்த நீயல்லவா மாபெரும் கடவுள் என திருமால் தன் மருமகனான மயில்வாகனனைப் புகழ்ந்து தள்ளினார்.
🌺 இந்திரசேனா ஓரு படி மேலே சென்று, உமாபத்திரா, எங்களை அசுரரிடமிருந்து மீட்டு வாழவைத்த நீதான் இந்த இந்திரலோகத்துக்கு அதிபதியாக வேண்டும். எனது நன்றிக்கடனாக என் மகள் தெய்வானையை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என முறையிட்டான்.புன்னகை புரிந்த முருகப்பெருமானோ நீயே இந்திராபதியாக இரு. நாம் தேவர் படைக்குத் தளபதியாக தேவசேனாதிபதியாக இருந்து அசுரர் கூட்டத்தை அழித்து, எப்போதும் அமைதி நிலவச் செய்வோமா என அருள்புரிய, பிரம்மா, விஷ்ணு தேவர்களும் சிவசுப்பிரமணியனே தேவசேனாதிபதியாக இருக்க வேண்டும் என்று ஆமோதித்து வணங்கினர்.
🌺 இந்த சமயத்தில் தமிழகத்தில் தொண்டை நாட்டில் கமண்டல நதிக்கரையில் மிகவும் புகழ்பெற்று, புராதனமாக விளங்கிய குண்டலீபுரத்தில் அன்னை ரேணுகாம்பாள் அருளாட்சி புரிந்து கொண்டிருந்தாள். மாதேஜோமயமாயும் குழந்தையாகவும் இருக்கிற சிவசுப்பிரமணியக் கடவுளைத் தேவசேனாதிபதியாக இருக்கிற சிவசுப்பிரமணியக் கடவுளைத் தேவசேனாதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்ய குண்டலீபுரத்துக்கு அனைவரும் வந்து நடத்தி வாழ்த்த வேண்டும் எனப் பதிவிரதையான ரேணுகாதேவி வேண்டினாள்.
🌺 அன்னை வேண்டியபடி, கணக்கற்ற புண்ணிய தீர்த்தங்களையும், நூற்றுக்கணக்கான திருக்கோயில்களையும் கொண்ட புனித பூமியான குண்டலீபுரமான படவேட்டுக்கு பார்வதி பரமேசுவரர், சீதா ராமர், லட்சுமி நாராயண நரசிம்மர், பாமா- ருக்குமணியுடன் வேணுகோபாலன் ஆகிய அனைத்து கடவுள்களும் குண்டலீபுரத்துக்கு ரேணுகாதேவியின் ஆலயத்துக்கு எதிரேயுள்ள ஓரு சிறிய குன்றில் வந்து குவிந்தனர்.
🌺 குன்றில் வந்தமர்ந்த குமரக் கடவுளுக்கு அந்தணர்கள் வேத முழக்கம் செய்ய தேவேந்திரன் அபிஷேக ஆராதனை செய்து சர்வ உபச்சாரங்களையெல்லாம் நிகழ்த்தி, சிவசுப்பிரமணியனுக்கு தேவசேனாதிபதி என்றபடி மணிமகுடம் சூட்டி பட்டாபிஷேகம் மங்களகரமாக நடத்தி முடித்தாள்.
🌺 அதே சமயம் அதிசயமானதொரு காட்சியைக் காண நேர்ந்தது. கிழக்கே பார்த் திருமுகம். மயில் மீது அமர்ந்த முருகனைத்தான் நாம் குன்று தோறாடும் குமரக் கடவுளைத் தரிசிப்பது வழக்கம். ஆனால் இங்கோ வடக்குப்புறம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயிலின் மீது வள்ளிநாயகன் நின்றபடி காட்சியளிப்பது வியப்பானது. அதுமட்டுமல்ல மயில் பாம்பைக் கவ்வியிருக்க, பாம்பு படம் விரித்து ஆடாமல் தலை சாய்ந்து தொங்கியபடி இருப்பதும், எங்கும் காணமுடியாத காட்சியாகத்தான் தென்படுகிறது. மயில்மேல் அமர்ந்த முருகன் ஓரு சிலைதானா அல்லது அப்படியே நேரில் வந்து அமர்ந்து அருள்புரிகிறானா என்று ஆச்சியப்படுமளவுக்கு அற்புதமானதொரு சிற்பக்கலை வேலைப்பாடு, என்ன வேண்டும்? என்று கேட்பதுபோல நம்மை நோக்கி நிற்கும் வேலவனிடம் என்ன கேட்டாலும் தருவான்.
🅱 யோக ராமச்சந்திரர்: 🅱
🔥 ராவண சம்ஹாரத்துக்குப் பிறகு, தசகண்ட ராவணன் ராம லக்ஷ்மணர்களை அழிக்க வர, படவேட்டில், செங்கமலத் தடாகத்தில் இருக்கும் தாமரை மலரில் உள்ள வண்டு ஒன்றில், அரக்கனின் உயிர் இருப்பதை அறிந்து அதனை எடுப்பதற்காக அனுமன் இங்கே வந்தார். அனுமன் தனது எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்ததால் ரேணுகாம்பாள் கோபம் கொண்டாள். இதையறிந்த ராம-லட்சுமணர்கள், இங்கு வந்து, இருவரையும் சமாதானம் செய்தனராம்! பிறகு இங்கேயே கோயில் கொள்ளும்படி ரேணுகாம்பாள் வலியுறுத்த... ஸ்ரீராமர் இங்கே கோயில் கொண்டாராம்! அருமையான இந்த ஆலயத்தில், அற்புதக் கோலத்தில் காட்சி தருகிறார் அனுமன்!
🔥 புஷ்பக விமானத்தின் கீழ், ராமபிரான் வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்திருக்கிறார். அருகில் சீதாப்பிராட்டி அமர்ந்திருக்கிறாள். ராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி வடிக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு அருகில், ஆஞ்சநேயர் அமர்ந்து கையில் ஓலைச்சுவடி வைத்திருக்கிறார். ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்தவர் என்பதால், இவர் இங்கு குரு அம்சமாக போற்றப்படுகிறார். எனவே, சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் எதுவும் இல்லை. அருகிலுள்ள லட்சுமணர் மட்டும் கையில் வில், அம்பு வைத்திருக்கிறார்.
🔥 வால்மீகி இயற்றிய ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில், ராமபிரான் யோக ராமச்சந்திரனாக இருக்கும் அமைப்பைப் பற்றி பாடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தும்விதமாக அமைந்த கோயில் இது. இவர் உலகின் நிரந்தரமான மெய்ஞான நிலையை உணர்த்தும் கோலத்தில் இருப்பவர் என்பதால், நிலையான இன்பமான மோட்சம் கிடைக்க மட்டுமே இவரை வழிபடுகிறார்கள். இதனால், இங்கு சொர்க்கவாசல் கிடையாது. ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத்தலமாக இக்கோயில் உள்ளது.
🅱 தல வரலாறு:🅱
🌷 முப்பத்தெட்டு தேசங்களை ஆண்ட விதர்ப்ப தேசத்து மன்னன் இரைவத மகாராஜனுக்கு குழந்தைப் பேறில்லை. மனவேதனையில் இருந்த மன்னன் சக்தியை நோக்கிப் பல ஆண்டுகள் தவம் செய்தான். அவன் பக்தியை மெச்சிய சக்தி பிரம்மன் ஆசியோடு மன்னனுக்கு மகளாகப் பிறந்தாள். இதேவேளையில் அமைச்சர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அரசனின் மகளுக்கு ரேணுகை என்றும் அமைச்சரின் மகளுக்கு சாமுண்டி என்றும் பெயரிட்டு சிறப்புற வளர்த்தனர்.
🌷 19-ஆவது வயதில் தனக்குக் கணவனாக வரப்போகிறவரைப் பற்றி கனவில் அறிந்து கொண்டாள். உடனே ரேணுகை, ‘’தேசம் முழுவதும் திக்விஜயம் செய்யப் போகிறேன். என்னை போரில் வெல்பவரையே மணம் புரிவேன்’ என்றாள். மன்னனும் சம்மதித்தான். சாமுண்டி மற்றும் சேனைகளுடன் புறப்பட்டாள் ரேணுகை.
🌷 வழியில்... காசி தேசத்து இளவரசி என மன்னர்கள் வரவேற்று உபசரித்தனர். ஆனால், எவரும் எதிர்க்கவில்லை. அப்படியே தொண்டை மண்டலத்தில்... பாலாறு பாயும் பெரிய காடுகளைக் கொண்ட பகுதிக்கு வந்தாள் ரேணுகை (ஆரண்யம் என்றால் காடு. இதுவே ஆரணி என்றானது). ஊரையும் ஆற்றையும் பார்த்தவள் மனதை பறிகொடுத்தாள்.
🌷 கனவில் தோன்றிய இடத்தைத் தேடியலைந்த ரேணுகா குண்டலிபுரத்திற்கு (படவேடு) வந்தாள். கானகமாயிருந்த இந்தப் பகுதியில் ஜமதக்கினி முனிவர் தனது சீடர்களுடன் ஆசிரமம் அமைத்து தவத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டாள். அந்த முனிவரே தன் கணவர் என்பதை உணர்ந்துகொண்ட ரேணுகா முனிவரைச் சந்தித்து, "எனது கனவில் வந்தவர் நீங்கள்தான். நீங்களே என்னை மணக்க வேண்டும்' என வேண்டினாள். முனிவர் மறுத்தார். அவர் மனதை மாற்ற படை மற்றும் பணிப் பெண்களோடு அங்கேயே தங்கினாள் ரேணுகா.
🌷 முனிவருக்கு வேண்டிய பணிவிடைகளை அவர் கேளாமலேயே செய்தாள். அவளது பக்தியைக் கண்டு மெச்சிய முனிவர், "உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என்னோடு நீ முனிவரின் மனைவியாக மட்டுமே வாழ வேண்டும். மன்னன் மகள் என்ற ஆடம்பரத்தோடு வாழக் கூடாது' என்றார். தன்னுடன் வந்த படை மற்றும் பணிப் பெண் களைத் திருப்பி அனுப்பிவிட்டு, ஜமதக்கினி முனிவரைத் திருமணம் செய்துகொண்டாள் ரேணுகா. இவர்களுக்கு ஹரிதத்தன், உச்சாங்கன், விஸ்வாவஸூ, மற்றும் திருமாலின் அவதாரமான பரசுராமன் என நான்கு மகன்கள் பிறந்தனர்.. பரசுராமருக்கு அனைத்து வித்தைகளையும் ஜமதக்கினி முனிவர் கற்றுத் தந்து வீரனாக வளர்த்தார்.
🌷 ரேணுகாதேவி தன் கணவருக்கு பணிவிடை செய்து வரும் நாளில், கணவர் பூஜைக்கு நீர் முகந்திட கமண்டல நதிக்கு சென்றாள். ரேணுகாதேவி தினமும் நதியில் நீராடி தனது கற்புத்திறத்தால் ஆற்று மணலில் குடம் செய்து கணவனின் பூஜைக்கு தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். அன்றும் வழக்கம்போல் குடத்தை செய்து தண்ணீர் நிரப்பும் போது, வான்வழியே சென்ற கந்தர்வனின் அழகை பார்த்து வியக்கிறாள். இதனால் குடம் சிதறுகிறது. கணவனிடம், காட்டுவிலங்கு துரத்தியதால் குடம் சிதறியதாக பொய் கூறுகிறாள் ரேணுகாதேவி. முற்றும் உணர்ந்தவரான ஜமதக்னி உண்மை அறிந்து ஆவேசமடைகிறார். தனது மகன்களிடம் தாயின் சிரத்தை கொய்து வர ஆணையிடுகிறார்.
🌷 அவர்களில் பரசுராமன் மட்டுமே, இரண்டு வரங்கள் கேட்டுப்பெற்று தந்தையின் ஆணையை சிரமேற்கொண்டு புறப்படுகிறார். மற்றவர்கள் மறுத்து தந்தையின் சாபத்துக்கு ஆளாகின்றனர்.கையில் கோடாரியுடன் அன்னை ரேணுகாதேவிளைய துரத்தி செல்கிறார் பரசுராமன். மகனிடம் இருந்து தப்பிக்க காடு, கழனிகளை தாண்டி செல்லும் ரேணுகாதேவி ஓரிடத்தில் ஆவாரம் செடி மட்டைகளை உரித்துக் கொண்டிருந்த அருந்ததி பெண்ணை கட்டியணைத்து தன்னை காக்குமாறு வேண்டுகிறாள். அப்பெண்ணும் பரசுராமனை தடுக்கிறாள். ஆவேசமடைந்த பரசுராமன் கோடாரியை வீச, ரேணுகாதேவி, அருந்ததி பெண் இருவரது சிரங்களும் தரையில் விழுகின்றன.
🌷 தாயின் சிரத்தை எடுத்துச் சென்று தந்தையின் காலடியில் சமர்ப்பித்து தந்தையின் ஆணையை நிறைவேற்றி விட்டதாக கூறி கதறி அழுகிறார் பரசுராமன். தந்தை ஜமதக்னி, மகனை ஆசீர்வதித்து என்ன வரங்கள் வேண்டும் என கேட்க, உடன்பிறந்தோர், தாய் ஆகியோர் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். தாய்க்காக சிரம் தந்த அருந்ததி பெண்ணும் உயிர்பெற வேண்டும் என்று கேட்கிறார். அவரும் வரம் அருள, உடன்பிறந்தவர்கள் உயிர் பெறுகின்றனர். பின்னர் தந்தை தந்த கமண்டல நீருடன் சிரங்களை வேகமாக எடுத்துச் சென்று உடல்களில் பொருத்தி புனிதநீரை தெளிக்க ரேணுகாவும், அருந்ததி பெண்ணும் உயிர்பெறுகின்றனர்.
🌷 ஆனால், தாயை உயிர்ப்பிக்கும் அவசரத்தில் தலைகளை உடல் மாற்றி பொருத்தி விடுகிறார் பரசுராமன். அப்பெண்ணின் உடம்போடு பிழைத்த நின்று தன் புதல்வனை பார்த்து தனக்கு நேர்ந்த வேறுபாட்டை சொன்னார்.
🌷 பின் தன் தந்தையின் முன்சென்று நடந்தவற்றை விவரிக்கிறார். இது தெய்வச் செயலால் வந்தது. இனி இதை மாற்ற முடியாது எனக் கூறியதனால், அதுமுதல் அவ்வேருபட்டவுடலுடன் ஜமதகினி முனிவருக்கு அன்னை பணிவிடை செய்து வந்தார். இந்நிலையில் அப்பகுதிக்கு கார்த்தவீர் யார்ஜுனன் என்ற மன்னன் வேட்டையாட வந்தான். பசி, தாகத்தால் அவனும் அவனது படை வீரர்களும் வருந்தினர். அப்போது ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்தைக் கண்ட மன்னன் அவரிடம் சென்று உதவி கேட்டான். கேட்டதை வழங்கும் காமதேனுவை வைத்திருந்த முனிவர், அதன் உதவியால் அனைவருக்கும் அறுசுவை விருந்து படைத்தார். காமதேனுவின் மகத்துவத்தை அறிந்த மன்னன் அதைத் தனக்குத் தருமாறு கேட்க, முனிவர் மறுத்தார். அதனால் கோபம் கொண்ட மன்னன் முனிவரைக் கொன்றுவிட்டு காமதேனுவை இழுத்துச் சென்று விட்டான்.
🌷 அதன் பின்னரே அங்கு வந்த பரசுராமர் நடந்ததை அறிந்து கடுங்கோபமுற்றார். உடனே சென்று கார்த்தவீரியனைப் போரிட்டுக் கொன்று காமதேனுவையும் மீட்டு வந்தார்.
🌷 ஜமதக்கினி முனிவரின் உடல் எரியூட்டப்பட, ரேணுகாதேவியும் தீயில் புகுந்தாள் (உடன்கட்டை). அவளது பதிபக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் மழை பெய்யச் செய்தார். தீ அணைந்தது, தீக்காயங்கள் பட்ட உடலுடன் வேப்பிலை ஆடையுடன் வெளிப்பட்டாள் ரேணுகாதேவி.
🌷 சிவபெருமான், பிரம்மா, விஷ்ணுவுடன் தேவர்களோடு அவ்விடம் தோன்றி, கோபத்தை விட்டுவிடும் படியும், இக்காரியம் விதிப் பயனாலானது என்றும் யாராலும் தடுக்க முடியாது எனக்கூறி சாந்தப் படுத்துகிறார்.
🌷 ஜமதக்கினி முனிவரையும் உயிர்ப்பித்தார் சிவபெருமான். மேலும், "பூவுலகில் தலை மட்டும் கொண்ட தெய்வமாக விளங்கி பக்தர்களுக்கு அருள் செய்வாய்' என்று ரேணுகாதேவிக்கு வரமும் தந்தார்.
🌷 அன்னை ரேணுகாதேவி சிவபெருமானிடம் வேண்டியபடி சிரசு மட்டும் பிரதானமாகக் கொண்டு இப்பூவுலகில் பூஜைக் கருவுருவாய் விளங்கவும், உடலின் மற்ற பிரிவு முனிவருடன் சுவர்க்கத்துக்கு செல்லவும் சிவபெருமான் அருள் வழங்கினார்.
🌷 அவ்வாறே அன்னை ரேணுகாதேவி பூவுலகில் சிரசை பிரதானமாகக் கொண்டு படைவீட்டில் அமர்ந்து அருள் பாளித்து வருகிறாள். அதனால் தான் இக்கோவிலின் தேவி தலை மட்டும் கொண்டு அருள்புரிகிறாள். உடல் மாறியதால் மாரியம்மன் என்று அழைக்கப்படு கிறாள். மாரியம்மன் கோவில்களில் தலைமைப் பீடம் இதுதான் என்கிறார்கள்.
🅱 சிறப்பம்சம்:🅱
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:
♻ இங்கு அம்மன்(சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
♻ கடும் உக்கிரத்துடன் ஸ்ரீரேணுகாம்பாள் காட்சி தந்ததால், அருகில் லிங்க வடிவ சிவனார், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரது விக்கிரகங்களை கருவறையில் ரேணுகாம்பாளுக்கு அருகில் பிரதிஷ்டை செய்தனராம் ! எனவே சுக்கிர பலம் நிரம்பிய கருவறையில் குடிகொண்டிருக்கும் ரேணுகாம்பாள், பக்தர்களது திருமணத் தடையை தகர்த்து அருளுகிறாள் என்பது ஐதீகம் !
♻ தென்னையும் வாழையும் தோப்பாக இருந்து குளிர்விக்க... ஊரின் கடைக்கோடியில், மலையடிவாரத்தில் இருந்தபடி தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவரையும் குளிர்வித்து அருள்பாலிக்கிறாள் ஸ்ரீரேணுகாம்பாள் !
🅱 இருப்பிடம்:🅱
✈ திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சந்தவாசல் என்ற ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் படவேடு உள்ளது.
✈ காஞ்சிபுரம், வேலூர், போளூர், ஆற்காடு, ஆரணி முதலிய இடங்களிலிருந்து படவேட்டிற்கு பேருந்து வசதி உள்ளது.
🍄 முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :🍄
✈ வேலூர் – 42 கி.மீ.
✈ திருவண்ணாமலை – 52 கி.மீ
✈ ஆரணி – 22 கி.மீ.
✈ போளூர் – 23 கி.மீ.
❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
No comments:
Post a Comment