Wednesday, 23 August 2017

ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் திருத்தலம் !



ந்தப் பசு, கங்கை நதியில் மெள்ள இறங்கியது. தனது தலையை ஒருபக்கமாக சாய்த்துக்கொண்டது. அப்படியே தலையை நீருக்குள் இறக்கிவிட்டு, மேலே வந்தது. இப்போது காதில் தண்ணீரைச் சேமித்துக்கொண்டு, விறுவிறுவென மகிழ வனம் நோக்கிப் பறந்தது.
அந்த வனத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனிக்கு அருகில் வந்து இறங்கியது. மெள்ள வந்த பசு, கால்களை மடக்கிக் கொண்டு, காதை அப்படியே சிவலிங்கத்தை நோக்கிச் சாய்த்தது. பசுவின் காதில் இருந்த கங்கைநீர், இப்போது சிவலிங்கத் திருமேனியில்!
'இறைவா, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வெறும் காட்டுமாடாகத் திரியப்போகிறேன்?! என் சாபத்தை நீக்கமாட்டாயா?’ எனக் கண்ணீர் விட்டுப் பிரார்த்தித்தது. பிறகு அடுத்த நாள், அடுத்த நாள் என்று தினமும் கங்கை நீரால் சிவலிங்கத்தை அபிஷேகித்து ஆராதித்து வந்தது. கபில முனிவரின் அறிவுரைப்படி, சிவனாரைத் தொழுது வரும் அந்தப் பசு, கற்பக விருட்சமாம் காமதேனு!
ஒருநாள், காமதேனுவின் பக்தியை சோதித்து, சாபவிமோசனம் தர எண்ணினார் சிவபெருமான். வழக்கம்போல், கங்கை நீரை தன் காதில் நிரப்பியபடி வந்துகொண்டிருந்த பசுவை, மகிழ வனத்துக்கு முன்னதாகவே வழிமறித்தது புலி ஒன்று! 'எனக்கு நீ இரையாகப் போகிறாய்’ என்று புலி சொல்ல... அந்தப் பசு, 'இதோ... இன்றைய என் கடமையை நிறைவேற்றத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். சிவபூஜைக்கு அபிஷேகம் செய்துவிட்டு, திரும்பவும் உன்னிடம் வருகிறேன்; உனக்கு இரையாகிறேன். இப்போது என்னை எதுவும் செய்துவிடாதே'' என்று கண்ணீருடன் கதறியது காமதேனு.
அந்தப் புலியும், ''சரி... சிவபூஜையை செய்துவிட்டு, என்னிடம் உடனடியாக வந்துவிடவேண்டும். நான் இந்த இடத்திலேயே காத்துக்கொண்டிருப்பேன்'' என்று சொல்லி அனுப்பி வைத்தது.
மகிழ வனத்துக்கு வந்த காமதேனு, சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகத்தைச் செய்தது. தன் நாவால் சிவலிங்கத்தை அப்படியே வருடியது. 'என் சிவனே, என்னை ஆள்பவனே, இன்றுடன் என் உயிர் முடியப்போகிறது’ என்று சிவலிங்கத் திருமேனியைச் சுற்றிவந்து வணங்கியது. பிறகு புலியிடம் சென்றது.
'சொன்னது போலவே வந்துவிட்டேன். பாவம்... பசியுடன் வெகுநேரமாகக் காத்திருக்கிறாய். என்னைச் சாப்பிட்டுக் கொள்’ என்று சொல்லி புலிக்கு முன்னே மண்டியிட்டு அமர்ந்தது; கண்கள் மூடியது. மனதுள் சிவனாரைத் தொழுதது. திரும்பவும் கண்களைத் திறக்க... விக்கித்து நின்றது காமதேனு. எதிரில் புலி நின்றிருந்த இடத்தில், சாட்சாத் சிவபெருமானே காட்சி தந்தார். காமதேனுவின் சாபம் நீங்கியது; இந்திரலோகத்தை அடைந்தது.
காமதேனுவின் கோரிக்கைப்படி, அன்று முதல் அங்கேயே இருந்து அனைவருக்கும் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் சிவனார்!
சிவனாரை கங்கா தீர்த்தம் கொண்டு காமதேனு வணங்கிய தலம் திருக்கோகர்ணம் என அழைக்கப் படுகிறது (கோ என்றால் பசு; கர்ணம் என்றால் காது). புதுக்கோட்டையில் உள்ளது இந்தத் தலம். சிவனார் புலியாக வந்து காட்சி தந்த திருத்தலம், திருவேங்கைவாசல் எனப்படுகிறது. புதுக்கோட்டை - கீரனூர் சாலையில், புதுக்கோட்டையில் இருந்து சுமார்4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம்!
திருவேங்கைவாசலில் உள்ள இறைவனின் திருநாமம் - ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபிரகதாம்பாள். பல்லவர்கள், சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட கலைநயம் கொண்ட அற்புதமான கோயில் இது! அதுமட்டுமா? இங்கே அழகு கொஞ்சும் கந்தக் கடவுள், ஞானமுருகனாகக் காட்சி தந்தருள்கிறார்!
இங்கு வந்து பிரார்த்தித்தால், சாபங்கள் யாவும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம். அப்பேர்ப்பட்ட அருமையான ஆலயத்தில், முக்கியமான நாயகனாகத் திகழ்பவர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இங்கே... அபய-ஹஸ்தம் தாங்கி, ஒரு கையில் ருத்திராட்சமும் இன்னொரு கையில் சர்ப்பமும் கொண்டு, காட்சி தருகிறார். யோக நிலையில் இருந்து கண்விழித்து, பக்தர்களுக்கு அருள்வதற்காக எழுந்து வருவது போலான தோற்றத்தில் அருள்வது காண்பதற்கு அரிதானது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்! வியாழக்கிழமைகளில், இவரைத் தரிசிப்பதற்காக எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் திரண்டு வருகின்றனர். மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, மனதாரப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
இங்கே, குருப்பெயர்ச்சியின்போது சிறப்பு ஹோமங்கள் மற்றும் பரிகாரங்கள் சிறப்புற நடைபெறுகின்றன. அந்த நாளில் இங்கு வந்து ஹோமத்தில் பங்கேற்று, ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசித்தால் குரு பலம் கூடும்; ராஜ யோகம் பெறலாம்; நஷ்டத்தில் உள்ள தொழில் மளமளவென ஏற்றம் பெறும். குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்; கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
பசுவின் சாபம் போக்கிய சிவனார், நம்முடைய பாபங்களையும் சாபங்களையும் போக்கமாட்டாரா, என்ன? குருவருளும் திருவருளும் சேர்ந்து கிடைக்கிற திருவேங்கைவாசலுக்கு வாருங்கள்; வாழ்வில் நல்லதொரு திருப்பம் நிகழ்வதை உணர்வீர்கள்!

No comments:

Post a Comment