Showing posts with label குரு. Show all posts
Showing posts with label குரு. Show all posts

Monday, 18 September 2017

திருவேங்கைவாசல்

ந்தப் பசு, கங்கை நதியில் மெள்ள இறங்கியது. தனது தலையை ஒருபக்கமாக சாய்த்துக்கொண்டது. அப்படியே தலையை நீருக்குள் இறக்கிவிட்டு, மேலே வந்தது. இப்போது காதில் தண்ணீரைச் சேமித்துக்கொண்டு, விறுவிறுவென மகிழ வனம் நோக்கிப் பறந்தது.
அந்த வனத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனிக்கு அருகில் வந்து இறங்கியது. மெள்ள வந்த பசு, கால்களை மடக்கிக் கொண்டு, காதை அப்படியே சிவலிங்கத்தை நோக்கிச் சாய்த்தது. பசுவின் காதில் இருந்த கங்கைநீர், இப்போது சிவலிங்கத் திருமேனியில்!
'இறைவா, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வெறும் காட்டுமாடாகத் திரியப்போகிறேன்?! என் சாபத்தை நீக்கமாட்டாயா?’ எனக் கண்ணீர் விட்டுப் பிரார்த்தித்தது. பிறகு அடுத்த நாள், அடுத்த நாள் என்று தினமும் கங்கை நீரால் சிவலிங்கத்தை அபிஷேகித்து ஆராதித்து வந்தது. கபில முனிவரின் அறிவுரைப்படி, சிவனாரைத் தொழுது வரும் அந்தப் பசு, கற்பக விருட்சமாம் காமதேனு!
ஒருநாள், காமதேனுவின் பக்தியை சோதித்து, சாபவிமோசனம் தர எண்ணினார் சிவபெருமான். வழக்கம்போல், கங்கை நீரை தன் காதில் நிரப்பியபடி வந்துகொண்டிருந்த பசுவை, மகிழ வனத்துக்கு முன்னதாகவே வழிமறித்தது புலி ஒன்று! 'எனக்கு நீ இரையாகப் போகிறாய்’ என்று புலி சொல்ல... அந்தப் பசு, 'இதோ... இன்றைய என் கடமையை நிறைவேற்றத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். சிவபூஜைக்கு அபிஷேகம் செய்துவிட்டு, திரும்பவும் உன்னிடம் வருகிறேன்; உனக்கு இரையாகிறேன். இப்போது என்னை எதுவும் செய்துவிடாதே'' என்று கண்ணீருடன் கதறியது காமதேனு.
அந்தப் புலியும், ''சரி... சிவபூஜையை செய்துவிட்டு, என்னிடம் உடனடியாக வந்துவிடவேண்டும். நான் இந்த இடத்திலேயே காத்துக்கொண்டிருப்பேன்'' என்று சொல்லி அனுப்பி வைத்தது.
மகிழ வனத்துக்கு வந்த காமதேனு, சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகத்தைச் செய்தது. தன் நாவால் சிவலிங்கத்தை அப்படியே வருடியது. 'என் சிவனே, என்னை ஆள்பவனே, இன்றுடன் என் உயிர் முடியப்போகிறது’ என்று சிவலிங்கத் திருமேனியைச் சுற்றிவந்து வணங்கியது. பிறகு புலியிடம் சென்றது.
'சொன்னது போலவே வந்துவிட்டேன். பாவம்... பசியுடன் வெகுநேரமாகக் காத்திருக்கிறாய். என்னைச் சாப்பிட்டுக் கொள்’ என்று சொல்லி புலிக்கு முன்னே மண்டியிட்டு அமர்ந்தது; கண்கள் மூடியது. மனதுள் சிவனாரைத் தொழுதது. திரும்பவும் கண்களைத் திறக்க... விக்கித்து நின்றது காமதேனு. எதிரில் புலி நின்றிருந்த இடத்தில், சாட்சாத் சிவபெருமானே காட்சி தந்தார். காமதேனுவின் சாபம் நீங்கியது; இந்திரலோகத்தை அடைந்தது.
காமதேனுவின் கோரிக்கைப்படி, அன்று முதல் அங்கேயே இருந்து அனைவருக்கும் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் சிவனார்!
சிவனாரை கங்கா தீர்த்தம் கொண்டு காமதேனு வணங்கிய தலம் திருக்கோகர்ணம் என அழைக்கப் படுகிறது (கோ என்றால் பசு; கர்ணம் என்றால் காது). புதுக்கோட்டையில் உள்ளது இந்தத் தலம். சிவனார் புலியாக வந்து காட்சி தந்த திருத்தலம், திருவேங்கைவாசல் எனப்படுகிறது. புதுக்கோட்டை - கீரனூர் சாலையில், புதுக்கோட்டையில் இருந்து சுமார்4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம்!
திருவேங்கைவாசலில் உள்ள இறைவனின் திருநாமம் - ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீபிரகதாம்பாள். பல்லவர்கள், சோழர்கள் மற்றும் பாண்டிய மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட கலைநயம் கொண்ட அற்புதமான கோயில் இது! அதுமட்டுமா? இங்கே அழகு கொஞ்சும் கந்தக் கடவுள், ஞானமுருகனாகக் காட்சி தந்தருள்கிறார்!
இங்கு வந்து பிரார்த்தித்தால், சாபங்கள் யாவும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம். அப்பேர்ப்பட்ட அருமையான ஆலயத்தில், முக்கியமான நாயகனாகத் திகழ்பவர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. இங்கே... அபய-ஹஸ்தம் தாங்கி, ஒரு கையில் ருத்திராட்சமும் இன்னொரு கையில் சர்ப்பமும் கொண்டு, காட்சி தருகிறார். யோக நிலையில் இருந்து கண்விழித்து, பக்தர்களுக்கு அருள்வதற்காக எழுந்து வருவது போலான தோற்றத்தில் அருள்வது காண்பதற்கு அரிதானது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்! வியாழக்கிழமைகளில், இவரைத் தரிசிப்பதற்காக எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் திரண்டு வருகின்றனர். மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, மனதாரப் பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
இங்கே, குருப்பெயர்ச்சியின்போது சிறப்பு ஹோமங்கள் மற்றும் பரிகாரங்கள் சிறப்புற நடைபெறுகின்றன. அந்த நாளில் இங்கு வந்து ஹோமத்தில் பங்கேற்று, ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசித்தால் குரு பலம் கூடும்; ராஜ யோகம் பெறலாம்; நஷ்டத்தில் உள்ள தொழில் மளமளவென ஏற்றம் பெறும். குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்; கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
பசுவின் சாபம் போக்கிய சிவனார், நம்முடைய பாபங்களையும் சாபங்களையும் போக்கமாட்டாரா, என்ன? குருவருளும் திருவருளும் சேர்ந்து கிடைக்கிற திருவேங்கைவாசலுக்கு வாருங்கள்; வாழ்வில் நல்லதொரு திருப்பம் நிகழ்வதை உணர்வீர்கள்!

Wednesday, 6 September 2017

கல்விக் கோயில்! - நாகநாதபுரம்

 

திருப்புல்லாணி கிராமத்துக்கு அருகில், சேதுக் கடலோரத்தில், சுமார் 450 வருடங்களுக்கு முன்பு, பித்ருக்களுக்கு ஏராளமானோர் திதி கொடுத்துக்கொண்டிருந்த வேளையில்... அங்கே கரை ஒதுங்கியிருந்த பெருமாளின் விக்கிரகத்தைக் கண்டு வியந்து மகிழ்ந்தனர். அந்த விக்கிரகத்தை மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு, காரைக்குடிக்குச் சென்றனர். வழியில், ஸ்ரீநாகநாத ஸ்வாமி கோயில் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனவே, பெருமாள் விக்கிரகத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்வது என எல்லோரும் ஏகமனதாக முடிவு செய்தனர்.
 காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் வழியில், நடராஜா தியேட்டருக்கு அருகில் உள்ளது நாகநாதபுரம். இங்கே ஸ்ரீநாகநாத ஸ்வாமி மற்றும் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. மிகுந்த வரப்பிரசாதியானவர் இந்தப் பெருமாள் எனப் போற்றுகின்றனர் மக்கள். தாயாரின் திருநாமம்- ஸ்ரீசெண்பகவல்லித் தாயார்.
பங்குனி மாதம் வந்துவிட்டால், இந்தப் பகுதியே களைகட்டிவிடும். 13 நாள் திருவிழா ஏக அமர்க்களமாக நடைபெறும். 6-வது நாளில், தாயாரும் பெருமாளும் திருமணக் கோலத்தில் காட்சி தருவதைக் காணக் கண்கோடி வேண்டும். அந்த நாளில் தரிசித்து, பள்ளியறை பூஜை முடிந்ததும், பெருமாளுக்குச் சார்த்திய மாலையை வீட்டுப் பூஜையறையில் வைத்து வணங்கினால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்!
இங்கு, தனிச்சந்நிதியில் காட்சி தரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் விசேஷமானவர்! வியாழக்கிழமைகளில் இவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வணங்கினால், படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகள்கூட ஞாபகசக்தி அதிகரித்து கெட்டிக்காரர்களாக மாறுவார்கள்; தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்பார்கள் என்கின்றனர் பக்தர்கள். மாதந்தோறும் பௌர்ணமியில் சிறப்பு ஹோமமும் அபிஷேகமும் நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரைத் தரிசித்துப் பிரார்த்தித்தால், சத்ரு பயம் நீங்கும்; அறிவாற்றல் பெருகும்; தொழில் விருத்தியாகும்; பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தேர்வுக்கு முன்னதாக இங்கு மாணவர்களுக்காகச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அப்போது காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல், குழந்தைகளை முதன்முதலாகப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு, இங்கு அட்சராப்பியாசம் எனப்படும் நெல்லில் குழந்தைகளை எழுதச் செய்யும் வைபவம் சிறப்புற நடைபெறும்.
புதன்கிழமைகளில் பெருமாளுக்கு அவல் படைத்து வழிபட்டால், பிள்ளை வரம் பெறலாம். மாசி மக கருடசேவையைத் தரிசித்தால், 12 வருடங்கள் பெருமாளை வழிபட்ட பலன் கிடைக்கும்.ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீதன்வந்திரி பகவான் ஆகியோரும் இங்கே தரிசனம் தருகின்றனர். ஸ்ரீசெண்பகவல்லித் தாயாருக்கு வில்வ மாலை மற்றும் எலுமிச்சை மாலை அணிவித்து நெய்தீபமேற்றி வழிபட்டால், கடன் தொல்லை ஒழியும் என்பது ஐதீகம்.
ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீநாகநாத ஸ்வாமியும் விசேஷமானவர்தான். தவிர, அஷ்டமா ஸித்தியையும் அருளும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி பிரமாண்ட திருமேனியராகக் காட்சி தருகிறார். வியாழக்கிழமைகளில் இவரைத் தரிசித்தால், கல்வியில் ஞானமும் மேன்மையும் கிட்டும் என்கின்றனர் பக்தர்கள்.
ஞான யோகம் தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரும் ஒருசேர தரிசனம் தரும் இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபடுங்கள்; வளம் பெறுவீர்கள்!

Monday, 4 September 2017

குரு தரிசனம் கோடி புண்ணியம் !


அட்டமா ஸித்தி அருளிய பட்டமங்கலம் 


அம்பா, துலா, நிதர்த்தளி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்த்யேந்தி ஆகிய ஆறு பெண்களுக்கும் சிவனாரிடம் அட்டமா ஸித்திகளை உபதேசம் பெறவேண்டும் என்று விருப்பம். இவர்கள் வேறு யாருமில்லை; சரவணப் பொய்கையில், முருகப் பெருமானுக்குப் பாலூட்டி, சீராட்டி வளர்த்த அதே கார்த்திகைப் பெண்கள்தான்!
அறுவரும் சிவனாரை வணங்கி, தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். சிவனார், ''உமாதேவியிடம் பிரார்த்தியுங்கள்; அருள்புரிவாள்'' என்றார். ஆனால், இதற்கு அவர்களின் கர்வம் இடம் கொடுக்கவில்லை. சிவனாரே தங்களுக்கு நேரடி உபதேசம் நல்க வேண்டும் என்று, உமையவளைத் தவிர்த்தனர்; இதனால் சாபத்துக்கு ஆளாகி, கதம்ப வனம் ஒன்றில் ஆலமரத்தடியில் கல்லாகிப் போனார்கள்.
காலங்கள் கழிந்தன. குரு வடிவாக அந்த மரத்தடிக்கு வந்த சிவனார், ஆலம் பழங்களால் மூடப்பட்டுக் கிடந்த கற்களின் அருகில் அமர்ந்தார். கற்கள் உயிர் பெற்றன. சுய உரு பெற்ற கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமா ஸித்திகளையும் உபதேசித்தார் சிவனார். அத்துடன், அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க, அங்கேயே குடிகொண்டார்.
கதம்பவன புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்கள் விவரிக்கும் இந்தத் தலத்தின் பெயர் பட்டமங்கலம். இது சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரராக கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில், ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தியாகவும் அருள்கிறார் ஆதிசிவன். கிழக்குப் பார்த்த ஆலயம்; குரு தட்சிணாமூர்த்தியும் கிழக்கு நோக்கி இருப்பது, இந்த ஆலயத்தின் விசேஷம் என்கின்றனர் பக்தர்கள். இங்கு வந்து, சிவனாரையும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வழிபட, சகல தோஷங்களும் நீங்கும்; சந்தோஷம் நிலைக்கும்.
பதவி உயர்வு தரும் திட்டை குரு பகவான்!
தேவர்களுக்கெல்லாம் குரு எனும் உயர்ந்த பீடத்தில் இருந்த குரு பகவானுக்கு இன்னும் உயர்வு பெற வேண்டும் என்று  ஆவல் எழுந்தது. தனது விருப்பத்துக்கு இறையருளே கைகொடுக்கும் என்று முடிவு செய்தவர், அடர்ந்த வனப்பகுதியை அடைந்தார். அங்கு கோயில் கொண்டிருந்த இறைவனை மனத்தில் இருத்தி கடும் தவத்தில் மூழ்கிப் போனார். அவரது தவத்துக்கு அருள் வழங்கத் திருவுளம் கொண்ட சிவப்பரம்பொருள், குருபகவானுக்கு திருக்காட்சி வழங்கினார். அதுமட்டுமா? நவகிரக பதவியையும் வழங்கி, பிரகஸ்பதியை ஆசீர்வதித்தார்.
இங்ஙனம், தேவகுருவான பிரகஸ்பதி, கிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு பெற்ற தலம் திட்டை. தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இது. அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் குடியிருக்கும் திட்டை திருக்கோயிலில், ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவே தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார் குரு பகவான். சிறந்த வரப்பிரசாதி!
திருமணம் கைகூட, குருபலம் கூடிவர வேண்டும் என்பது சிவ வாக்கு. அப்படியான ஒரு வரத்தை அருளக்கூடியவர் இவர். அதுமட்டுமின்றி, இங்கு இவருக்குப் பதவி உயர்வு கிடைத்ததால், இங்கு வந்து இவருக்கு அர்ச்சனை செய்து வழிபடும் அன்பர்களுக்கு உயர்பதவி யோகமும் கிடைக்கும்.
அமிர்த வாழ்வு தரும் ஆலங்குடி!
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்திருக்கும் தலம் ஆலங்குடி. கும்பகோணத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவு. சிவபெருமான், ஆலகால விஷத்தை அருந்தி தேவர்களைக் காப்பாற்றியதால், இத்தலத்து இறைவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் என்று திருநாமம். அம்பாளின் திருநாமம் ஸ்ரீ ஏலவார் குழலியம்மை.
கலங்காமற்காத்த விநாயகர் அருளும் தலம்; திருமால், பிரம்மா, லட்சுமி, கருடாழ்வார், ஐயனார், வீரபத்திரர் ஆகியோர் தனித் தனியே லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட க்ஷேத்திரம்; விஸ்வாமித்திரர், அகத்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகபிரம்மம் ஆகிய முனிவர்களும், அஷ்டதிக் பாலகர்கள், முசுகுந்த சக்கரவர்த்தி, சுந்தரர் ஆகியோரும் வணங்கி அருள் பெற்ற திருக் கோயில்; ஞானசம்பந்தர் பாடிப் பரவிய புண்ணிய பூமி எனச் சிறப்புகள் பல கொண்ட இந்தத் திருத்தலத்தின் நாயகன் குரு தட்சிணாமூர்த்திதான்.
தன் அன்னை விநதையை அடிமைத்தளை யில் இருந்து மீட்பதற்காக, தேவலோகத்தில் இருந்து அமிர்தக் கலசத்தை வென்று வந்த கருட பகவான், அந்த அமிர்தத்தால் அபிஷேகித்து வழிபட்ட ஸ்வாமி இவர். வியாழக்கிழமைகளில் இத்தலத்துக்கு வந்து, இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், அமிர்தமயமான வாழ்க்கை அமையும்.
குரு வழிபட்ட திருவலிதாயம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குரு திருத்தலம் திருவலிதாயம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து (சுமார் 6 கி.மீ. தொலைவு) ஆவடி, அம்பத்தூர் (ஓ.டி.) செல்லும் பேருந்தில் ஏறி, பாடி லூகாஸ் டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஐந்து நிமிட நடைதூரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஜகதாம்பிகை சமேத திருவலிதாய ஸ்வாமி திருக்கோயில்.
மேனகையின் சாபத்தால் குருவியாக மாறிய பரத்வாஜ முனிவர் இந்தத் தலத்துக்கு வந்து, பல்லாண்டு காலம் சிவ வழிபாடு செய்து விமோசனம் பெற்றார் என்கிறது தலபுராணம். அவர் மட்டுமின்றி, இந்திரன், பிரம்மன், விஷ்ணு, சூரிய சந்திரர், அக்னி, அனுமன் மற்றும் நட்சத்திர தேவதையரும் இங்கு வந்து வழிபட்டு, அருள் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, குருபகவானும் சிவபூஜை செய்து வழிபட்ட தலம் இது என்பதால், திட்டை, ஆலங்குடி, திருச்செந்தூர் போன்று இதுவும் குரு பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
இங்கே அருள்பாலிக்கும் குரு பகவான் கொள்ளை அழகு! இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, முல்லைப் பூவால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வணங்குங்கள்; அத்தனை தோஷங்களும் விலகும் என்கின்றனர்.
ராஜ யோக அருளும் திருவேங்கைவாசல்!
ஈஸ்வரன் புலியாக வந்து, காமதேனுவின் சாபம் நீக்கியருளிய திருத்தலம் திருவேங்கைவாசல். புதுக்கோட்டைகீரனூர் சாலையில், புதுக்கோட்டையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். திருவேங்கைவாசலில் உள்ள இறைவனின் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். அம்பாளின் திருநாமம்  ஸ்ரீ பிரகதாம்பாள்.
இத்தலத்தின் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, விசேஷ கோலத்தில் அருள்பாலிக்கிறார். அபய ஹஸ்தம் தாங்கி, ஒரு கையில் ருத்திராட்சமும் இன்னொரு கையில் சர்ப்பமும் கொண்டு காட்சி தருகிறார். யோக நிலையில் இருந்து கண்விழித்து, பக்தர்களுக்கு அருள்வதற்காக எழுந்து வருவது போலான இவரது திருக்கோலம், வேறெங்கும் காண்பதற்கு அரிது!  குருப்பெயர்ச்சியின்போது இங்கே சிறப்பு ஹோமங்கள் மற்றும் பரிகாரங்கள் விமரிசை யாக நடைபெறுகின்றன. அந்த நாளில் இங்கு வந்து ஹோமத்தில் பங்கேற்று, ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசித்தால் குரு பலம் கூடும்; ராஜ யோகம் பெறலாம்; நஷ்டத்தில் உள்ள தொழில் மளமளவென ஏற்றம் பெறும். குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்; கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
குரு வீற்றிருந்த குருவித்துறை!
மதுரையில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான். இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருவித்துறை. குருவின் பெயராலேயே அமைந்த தலம்; குரு பகவான் திருமாலின் அருள்பெற்ற தலம் இது.
பெண்ணொருத்தி தந்த சாபத்தால், சப்த மலை களாலும் சூழப்பட்டு, இந்திரலோகம் செல்ல முடியாமல் சிறையுண்டு கிடந்தான் கச்சன்.அவனை மீட்க வழி தெரியாமல் கலங்கிய
அவனுடைய தந்தை, நாரதரிடம் ஓடினார். நாரதரின் வழிகாட்டலின்படி வேகவதி நதிக் கரையில் தனக்கெனப் படித்துறை அமைத்து, அந்த நதியில் நீராடி, ஆற்றங்கரையில் கடும் தவம் மேற்கொண்டார். இதில் மனம் பூரித்த திருமால், அவருக்குத் திருக்காட்சி தந்தார். அதுவும் எப்படி?! சித்திரை மாதத்தில், ஆயிரம் சித்திரங்கள் கொண்ட ரதத்தில் வந்து திருக்காட்சி தந்தார். அத்துடன், அவரின் கோரிக்கையை ஏற்று, அவருடைய மகன் கச்சனையும் மீட்டுத் தந்தருளினார்.
அன்று முதல், அந்தத் தலத்தில் இருந்தபடி அனைவருக்கும் அருள்பாலிக்கலானார் திருமால். அவருக்குச் சித்திர ரத வல்லப பெருமாள் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல், கச்சனின் தந்தையும் அங்கே தனிச்சந்நிதியில், தனிக்கோயிலாகவே அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார். அந்தத் தந்தை, குரு பகவான்! மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகில் உள்ள அந்தப் பகுதி, குருவித்துறை என்றே அழைக்கப்படுகிறது. குரு வீற்றிருந்த துறை என்பதால் இந்தப் பெயரே ஊர்ப் பெயராகவும் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம்.
குரு பகவான் குடிகொண்டிருக்கும் தலத்தில், குருப்பெயர்ச்சியின் போது சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடை பெறுகின்றன. இந்த யாகத்தில் கலந்து கொண்டு குரு பகவானை வணங்கினால், தொழில் சிறக்கும், கல்விகேள்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்!
குருவருள் சுரக்கும் புதுக்கோட்டை!
புதுக்கோட்டை என்றதும் நினைவுக்கு வருவது ஸ்ரீ பிரகதாம்பாள் திருக்கோயில்தான். சிற்ப அற்புதங்கள் நிறைந்த இந்த ஆலயத்தின் சிவனார் திருநாமம் ஸ்ரீ கோகர்ணேஸ்வரர்.  
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயத்தின் இன்னொரு அற்புதம்... ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி. சிவனாரது சந்நிதியின் கோஷ்டத்தில் இருந்தபடி அருள்வதுதானே, ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் வழக்கம்? ஆனால் இங்கே, விநாயகருக்கு அருகில் இருந்தபடி அருள்கிறார் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி.
குருப்பெயர்ச்சி நாளில், ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, முல்லைப் பூ மாலை அணிவித்து வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும்; எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியைத் தேடித் தரும்; குருவின் பேரருள் கிடைக்கப் பெற்று, கல்வி கேள்விகளிலும், தொழில் மற்றும் வேலையிலும் முன்னுக்கு வரலாம் என்கின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீ சிவயோக ஹரி குரு அருளும் திருவையாறு!
மகாவிஷ்ணுவுக்குக் குருவாக இருந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம், திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில். இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி.  
திருவீழிமிழலையில் கண்மலரிட்டு வழிபட்டு சக்கராயுதம் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றாராம். எனவே, இந்தத் தலத்தின் தட்சிணாமூர்த்திக்கு, ஸ்ரீ சிவயோக ஹரி குரு தட்சிணாமூர்த்தி என்று திருநாமம். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரை; இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கி, அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி. இங்கேயுள்ள தியான மண்டபத்தில், வடக்கு நோக்கி அருளும் ஸ்ரீ ஆதிவிநாயகரைத் தரிசித்துவிட்டுத்தான் தட்சிணாமூர்த்தியை வழிபடவேண்டும் என்பது ஐதீகம்!
குரு ஸ்தலம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், மாதந் தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில், குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் கலந்துகொண்டு, அபிஷேகம் செய்து, ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் நிலைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

தென்முக தெய்வமும் தேவகுருவும் !

'குருப்பெயர்ச்சியில் வழிபட வேண்டியது யாரை? தென்முகக் கடவுள் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையா, நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருளும் ஸ்ரீ பிரகஸ்பதியையா?’
இரண்டு தெய்வங்களையும் வழிபடவேண்டும் என்பதே முறை.
'மெய்ப்பொருள் ஒன்றுதான்; அதைப் பல பெயர்களில் அழைக்கின்றனர் சான்றோர்’ என்கிறது வேதம். ஆக, இறைவன் என்பவன் ஏகன்; ஒருவனே! ஆன்றோர் பெருமக்களின் வழிகாட்டு தலால், இறைவனை பலவிதத் தோற்றங்களில் வழிபடுகிறோம்.
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தென்திசை பார்த்தபடி அருள்பவர்; குருவுக்கும் குருவானவர். தேவர்களின் குரு பிரகஸ்பதி, வடக்குத் திசை பார்த்தபடி காட்சி தருபவர்.
குரு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, பேசாமல் மௌனமாக இருந்தே சனகாதி முனிவர்களுக்குப் பேருண்மையை உபதேசித்து அருளினார் (மௌனம் வ்யாக்யானேன) என்று தெரிவிக்கின்றன புராணங்கள்.
குரு பகவான் பிரகஸ்பதி, மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான வாமனருக்கு ஆசிரியராகத் திகழ்ந்தவர் என்கின்றன புராணங்கள். பிரகஸ்பதியை பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் எனப் போற்றி வணங்குகிறோம். ஆனால், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை, சிவாம்சமாகவே வழிபடுகிறோம் (காலாய நம:).
'மனிதனுக்கு யோகம் ஸித்திக்க வேண்டும் எனில், அதன் முதல் பயிற்சியான மௌனத்தைப் பழக வேண்டும்’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் இந்த உலகில், சாதாரணர்களாகிய நாம், எதையுமே பேசித்தான் செயல்படவேண்டியிருக்கிறது. ஆகவே, உலகாயத வாழ்வில், முதலில் பேசும் குருவை வணங்கிப் பிரார்த்தித்துவிட்டு, அடுத்து மௌன குருவை, தட்சிணா மூர்த்தியை வணங்கிப் பேரருளைப் பெறுவோம்.
'தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே’
எனத் தெளிவுற விளக்குகிறார் திருமூலர்.
அறியாமை இருட்டுக்கு அப்பால் எந்தவொரு பொய்த் தோற்றமும் இன்றி, குறையே இல்லாத பரிசுத்தமான, மனதுக்கும் சொல்லுக்கும் எட்டாத அறிவும் ஆனந்த உருவும் கொண்டவர் ஞானம் அளிக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி. இதைத்தான், 'பேசா அநுபூதி பிறந்ததுவே’ என்று போற்றுகிறார் அருணகிரிநாதர். அதாவது, சொல்லாமல் சொல்லி, பேரானந்தத்தை அளிப்பவர் தட்சிணாமூர்த்தி.
அதேபோல், தேவகுரு பிரகஸ்பதியும் வணங்குதலுக்கும் போற்று தலுக்கும் உரியவர். ஆங்கீரஸரின் மைந்தன்; அற்புத வல்லமை கொண்டவர்; ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில், ஸப்த ரிஷிகளில் முக்கியமானவர்; பேரறிஞராகத் திகழ்ந்தவர் எனப் புராணங்கள் பிரகஸ்பதியை விவரிக்கின்றன.
பகவான், வாமன அவதாரத்தின்போது, பிரகஸ்பதியிடம் இருந்து வேதங்கள், அதன் அங்கங்கள், உப அங்கங்கள், ஆறு சாஸ்திரங்கள், ஸ்மிருதி மற்றும் ஆகமம் ஆகிய அனைத்தையும் கற்றறிந்தார் எனத் தெரிவிக்கிறது ப்ருஹத் தர்ம புராணம்.
ஆக, உலக வாழ்வில், அனைத்திலும் வெற்றி பெற, அருள் நிதியும் அறிவுநிதியும் அள்ளித் தரும் பிரகஸ்பதியை, அனுதினமும் வழிபட்டுப் பேரானந்தம் அடையலாம்.
ஒருவரது ஜாதகத்தில் குருபகவான் எங்கிருந்தாலும், அதற்காகக் கவலைப்படாமல், கலங்கித் தவிக்காமல், மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் வழிபட்டால், குருவின் பேரருளைப் பெறலாம். அதேபோல், வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் ஒருசேர வருகிற நாளில் குருபகவானை வழிபட்டால், இழந்த பதவி மற்றும் செல்வங்களைப் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி திருவடிவங்கள்!
தென்முகக் கடவுள் தர்மத்தின் வடிவம். இவரை 'அறம் பயந்த செல்வர்’ என்றும் சொல்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு 24 வடிவங்கள் முக்கியமானவை. அவை பின்வருமாறு:
1. திருவெண்காடு வீராசனர்
2. திருமாந்துறை யோக வீராசனர்
3. கும்பகோணம் கங்கா கிருபாகரன்
4. திருவையாறு குருபரர்
5. திருவீழிமிழலை பத்மபாதர்
6. திருவாரூர் ஜகத் வீராசனர்
7. மாங்குடி குரு உபதேசர்
8. கஞ்சனூர் அக்னி தட்சிணாமூர்த்தி
9. கருவிலி பவ அவுஷதர்
10. ஆலங்குடி மகா தட்சிணாமூர்த்தி
11. திருவிடைமருதூர் சாம்பவி தட்சிணாமூர்த்தி
12. மயிலாடுதுறை மேதா தட்சிணாமூர்த்தி
13. மதுரை சித்த பரமேஸ்வரர்
14. காசி, திருநெல்வேலி தாரகேஸ்வரர்
15. பெருவேளூர், திருவிடைக்கழி  ஸந்த உபதேசிகள்
16. கொல்லம்புதூர் அந்தண உபதேசிகர்
17. திருநாவலூர் ஊழி முதல்வர்
18. திருப்புறம்பயம் அறம் பயந்த பெருமாள்
19. திருநாவலூர் ஊழி முதல்வர்
20. திருப்பெருந்துறை அருவ தட்சிணாமூர்த்தி
21. தென் திருவாலங்காடு வம்ச விருத்தீஸ்வரர்
22. தக்கோலம் உத்குடி தாசனார்
23. ஓமாம்புலியூர் ஓங்கார ரூபர்
24. கேதார்நாத் கவுரி அனுகிரகர்
ஆகமம் போற்றும் எண்வகை வடிவங்கள்!
சிந்தை மகிழ்விக்கும் சிவவடிவங்களில் தலைசிறந்ததாக தட்சிணாமூர்த்தி வடிவம் விளங்குகிறது. இந்த வடிவத்திலும் பலவகையான உருவ வேறுபாடுகள் உள்ளன. இவை அறுபத்து நான்கு என்றும், முப்பத்து இரண்டு என்றும், இருபத்து நான்கு என்றும், எட்டு என்றும் சிற்பநூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.இங்கு, காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள எட்டு வகையான தட்சிணாமூர்த்தி வடிவங்களைக் காணலாம்.
யோக தட்சிணாமூர்த்தி:  சந்திரனைப் போல் வெண்மையாகப் பிரகாசிக்கும் இவர், வீராசனத்தில் அமர்ந்துள்ளார். இடையில் பாம்பு தவழ்கிறது. முழங்காலின்மீது கையை நீட்டியுள்ளார்.முனிவர்களால் சூழப்பட்டுள்ளார். மூன்று கண்களைக் கொண்டவர்.
வீணாதர தட்சிணாமூர்த்தி: முத்துப்போல் வெண்மையான நிறம் கொண்டவர். பாம்பைப் பூணூலாக அணிந்தவர். அக்னி, அட்ச மாலை ஏந்தியவர். பொன்னாலான வீணையை ஏந்தி மீட்டுபவர். கயிலை மலை மீது விளங்குபவர்.
மேதா தட்சிணாமூர்த்தி: ஸ்படிகம் போல் தூய வெண்ணிறம் கொண்டவர். ஞானமுத்திரை, புத்தகம், அக்னி, நாகம் ஆகியவற்றைத் தாங்கியவர். அழகிய முகத்துடன் விளங்குபவர். முத்து மாலை அணிந்து கிரீடம் தரித்தவர். ஆல மரத்தடியில் அமர்ந்து சிவாகமப் பொருளை விளக்குபவர்.
ஆசீன தட்சிணாமூர்த்தி: வெண்மை நிறம் கொண்டவர். மூன்று கண்களுடன் திகழ்பவர். வலது கரங்களில் மழுவும் அம்பும், இடது கரத்தில் மானும் வில்லும் ஏந்தியவர். வியாக்யான பீடத்தில் அமர்ந்துள்ளவர். புலித்தோலை ஆடையாக அணிந்தவர். பாம்பைப் பூணூலாகத் தரித்தவர் (இத்தகைய தட்சிணாமூர்த்தி வடிவம் ஆலங்களில் இல்லை).
வர தட்சிணாமூர்த்தி : முழங்கால் மீது கால்போட்டு அமர்ந்திருப் பவர். முயலகனை மிதித்துக் கொண்டிருப்பவர். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சனகாதியருக்கு சின்முத்திரை மூலம் வேதாந்தங்களை போதிப்பவர். ஞான முத்திரை, அட்ச மாலை, அக்னி, வேதச் சுவடிகளைத் தாங்கியவர்.
யோக பட்ட அபிராம தட்சிணாமூர்த்தி: ஒரு முகமும் மூன்று கண்களும், விரிந்த சடையும் கொண்டவர். வீணை வாசித்துக்கொண்டு வியாக்யான பீடத்தில் அமர்ந்திருப்பவர். பாம்பைப் பூணூலாக அணிந்தவர்.
ஞான தட்சிணாமூர்த்தி: ஒரு முகம், மூன்று கண்கள் கொண்டவர். ஸ்படிகம் போன்று ஒளிர்பவர். நான்கு கைகளில் சூலம், கபாலம், வீணை மற்றும் சின் முத்திரை கொண்டவர். சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை உபதேசிப்பவர்.
சக்தி தட்சிணாமூர்த்தி: ஸ்படிகம் போன்ற தூய நிறம் கொண்டவர். முத்துக்களால் ஆன அட்ச மாலை, பூரணமான அமுதக்கலசம் கொண்டவர். சின்முத்திரையுடன் பாம்பைக் கைகளில் தரித்தவர். சந்திரனைச் சூடியவர்.
சாக்த தந்திர நூல்களிலும் எட்டு வகையான தட்சிணாமூர்த்தி வடிவங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை: மேதா தட்சிணாமூர்த்தி, கீர்த்தி தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி, சாம்ப தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, சம்ஹார தட்சிணாமூர்த்தி, குரு தட்சிணாமூர்த்தி.
திருவிடைமருதூர் தட்சிணாமூர்த்தித் தலமாகும். இங்கு, பெருமான் சாம்பவி தட்சிணாமூர்த்தி வடிவில் எழுந்தருளியுள்ளார் என்கிறது புராணம். இங்கு விமானம், கோபுரம், சித்திரப்பிராகாரம் மற்றும் அலங்கார மண்டபத்தின் தூண்கள் ஆகிய இடங்கில் அநேக தட்சிணாமூர்த்தி வடிவங்கள் இடம்பெற்றுள்ளளன.

குருவாக பிறந்த அக்னி !


டைக்கும் கடவுள் பிரம்மதேவனின் மானஸ புத்திரர்கள் சப்த ரிஷிகள். அவர்களில் ஒருவர் ஆங்கீரஸர். இவருடைய மனைவி வஸிதா; ஸ்ரத்தாதேவி என்றும் மற்றொரு பெயர் உண்டு. 
அக்னி பகவானின் பிரதான பணி, ஆஹுதி என்பார்களே...   அப்படி அக்னி குண்டத்தில் நாம் சமர்ப்பிக்கும் தானியங்களையும், பிரசாதங்களையும் உரிய தெய்வங்களிடம் சேர்க்கும் பணியாகும்.  ஒருமுறை, இந்தப் பணியில் சலிப்பு ஏற்பட்டு, அதைக் கைவிட்டுவிட்டார் அக்னி பகவான். அதனால் யாகம், ஹோமம் எதுவுமே உலகில் நடைபெறவில்லை. தெய்வங்களை வணங்க முடியவில்லை. அதன் விளைவாக, மழை பொய்த்தது; உலகில் பஞ்சம் தலைவிரித்தாடியது; மக்கள் மிகவும் துன்பம் அடைந்தனர்.
இதைக் கண்ட ஆங்கீரஸ முனிவர், உலக நன்மைக்காக அக்னி தேவன் விட்டுச் சென்ற பணியைத் தானே செய்யத் தொடங்கினார். உலகம் மீண்டும் செழித்தது.
அக்னி தேவனுக்கு மனசாட்சி உறுத்தியது. தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டோமே என்பதை உணர்ந்து, வருந்தினார். தனது பணியை சிரமேற்கொண்டு செய்த ஆங்கீரஸ முனிவரிடம் வந்து, அவரை வணங்கி, தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.
அதைக் கண்ட ஆங்கீரஸர் மிகவும் கருணையுடன் ''வருந்தாதே! செய்த தவற்றை உணர்ந்துவிட்டால் மன்னிப்பு உண்டு. உனக்கு என்ன வேண்டும், கேள்!'' என வினவினார். அவரிடம், ''கருணையும் பெருந்தன்மையும் கொண்ட தங்களின் மகனாகப் பிறக்கவேண்டும்'' என்று வேண்டினார் அக்னி. முனிவரும் ''அப்படியே ஆகுக'' என்று வரம் தந்தார்.
ஏற்கெனவே, ஆங்கீரஸ முனிவருக்கு ஆறு மகன்கள் உண்டு. இவர்களுக்குப் பின், அக்னிதேவன் ஆங்கீரஸ முனிவரின் ஏழாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு பிரகஸ்பதி என்று பெயர். இவருக்குப் பின், பானுமதி என்ற பெண்ணும் பிறந்தாள்.
கிரக பதவி கிடைத்தது எப்படி?
பிரஹஸ்பதி ஓர் உயர்ந்த இடத்தை எட்ட வேண்டும் என விரும்பினார் அவருடைய தந்தை. அவரிடம் இருந்தே  கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த பிரஹஸ்பதி, காசிக்குச் சென்று சிவலிங்கம் ஸ்தாபித்து, கடுமையான தவத்தை மேற்கொண்டார்.
பதினாயிரம் தேவ ஆண்டுகள், பிரஹஸ்பதியின் தவம் தொடர்ந்தது. அதன் பலனாக, சிவனாரின் தரிசனமும் கிடைத்தது. ஆடல்வல்லானைத் தரிசித்து ஆனந்தக்கூத்தாடினார் பிரஹஸ்பதி. ''இறைவா, கருணைக்கடலே... பெரும்பேறு பெற்றேன்'' என்று பலவாறு வணங்கித் தொழுதார்.
சிவபெருமானோ, ''பிரஹஸ்பதி! உன்னுடைய தவ வலிமையைக் கண்டு நான் மகிழ்ந்தேன். அதற்குப் பரிசாக, இன்று முதல் நீ தேவர்களுக்கு எல்லாம் ஆசானாக விளங்குவாய். குரு பகவான் என்றே அழைக்கப்படுவாய். கிரக அதிபதிகளில் ஒருவனாய் கிரகப் பதவியையும் உனக்கு யாம் அளித்தோம்' என்று வரம் அளித்தார். அன்று முதல் பிரஹஸ்பதி, குருபகவான் என்று அழைக்கப்பட்டு, நவகோள்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.
குருவுக்குக் கிடைத்த சாபம்!
ஒருமுறை, அசுரர்களின் குருவான சுக்ராச்சார்யர் இல்லற வாழ்வை முன்னிட்டு, பத்தாண்டு காலம் கண்காணாமல் சென்று விட்டார். 'அசுரர்கள் மிக வலிமையோடு இருக்கிறார்கள். இனி, அவர்களுக்குத் தீமை எதுவும் நேரிடாது’ என்ற அதீத நம்பிக்கையில், அவர் அவ்வாறு சென்றுவிட்டார்.
இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட குரு பகவான், சுக்கிரனைப் போன்று உருவம் ஏற்று, அசுரர்களிடம் சென்று, அவர்களுக்கு தவறான போதனை களை வழங்கி, இறையருள் கிட்டாமல் போகும்படி செய்தார். அதன் விளைவாக, அசுரர்கள் வலிமை இழக்க, தேவர்களின் கை ஓங்கியது!
திரும்பி வந்த சுக்கிரன், குருபகவானின் சூழ்ச்சியை அறிந்து கோபம் கொண்டார். ''நான் அசுரர்களைப் பிரிந்து, அதனால் அவர்கள் அல்லல்படக் காரணமானது போன்று, நீரும் தேவர்களைப் பிரிந்து அவர்களது துன்பத்துக்குக் காரணமாவீர்!'' என்று சபித்தார்.
சாபம் பலிக்கும் காலம் நெருங்கியது. இந்திரனைக் காண தேவலோகம் சென்றார் குரு. அங்கே தேவகன்னியருடன் பொழுது கழித்துக்கொண்டிருந்த இந்திரன், குருபகவான் வந்ததையே கவனிக்கவே இல்லை. இதனால் கோபம் கொண்ட குரு பகவான், 'இனி, தேவர்களுக்கு உதவி ஏதும் செய்வதற்கில்லை’ என்று கூறி, கண்காணாமல் சென்றுவிட்டார்.
தேவர்களுக்கு ஆச்சார்யர் இல்லாததால், வருந்தினான் இந்திரன். பிரம்மாவிடம் சென்று முறையிட்டான். ''வருந்தாதே இந்திரா! மரீசி முனிவரின் வழிவந்த காஸ்யபரின் பேரனும் துவஷ்டாவின் மகனுமான விப்ரசித்து, கல்விஞானத்தில் தலைசிறந்தவர். குருவுக்கு நிகரானவர். அவரை குருவாக ஏற்றுக்கொள்'' என்றார் பிரம்மா.
அப்படியே இந்திரனும், விப்ரசித்துவை தேவர்களின் குருவாக ஏற்றுக்கொண்டான். நாளடைவில் விப்ரசித்து, தேவர்களிடமே சதி வேலைகள் செய்து, அசுரர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கினார். இதனால் அவரை இந்திரன் கொன்று விட்டான்.
இதையறிந்த விப்ரசித்துவின் தந்தை துவஷ்டா, பெரும் வேள்வி செய்து, அதிலிருந்து விருத்திராசுரன் என்பவனை உருவாக்கி, இந்திரனை அழிக்க ஏவினார்.
அவனைக் கொல்ல முடியாமல் கஷ்டப்பட்ட இந்திரன், பின்பு இறையருளால் ததீசி முனிவரின் முதுகுத்தண்டால் செய்யப் பட்ட வஜ்ராயுதத்தால் அந்த அசுரனை அழித்தான். அதன்பின்னர், தேவர்கள் அனைவரின் வேண்டு கோளுக்கு இணங்க, குருபகவான் மீண்டும் தோன்றி அவர்களுக்குக் குருவாகி, அருள்புரிந்தார்.
கசனின் கதை!
இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவினி மந்திரத்தை அறிந்திருந்தார் சுக்கிர பகவான். அதன் பலனாக, அழியா வரம் பெற்றுத் திகழ்ந்தார்கள் அசுரர்கள்.
இந்த மந்திரத்தை அறிந்து வந்தால் தேவர்களுக்குப் பலமாக இருக்குமே என்று கருதிய குருபகவான், தனக்கும் தாராவுக்கும் பிறந்த மகனான கசனை அழைத்து, எப்படியாவது சஞ்ஜீவினி மந்திரத்தைச் சுக்கிரனிடம் இருந்து அறிந்து வரும்படி அனுப்பிவைத்தார்.
அதன்படியே கசன், சுக்கிரனிடம் சென்று அவருடைய நல் அபிமானத்தைப் பெற்றான். இதையறிந்த அசுரர்கள் கோபம் கொண்டனர். பல வழிகளில் கசனை அழிக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.ஆனால், தன் மகள் தேவயானி கசன் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக, ஒவ்வொரு முறையும் கசனைக் காப்பாற்றி வந்தார் சுக்கிரன். எனவே, சுக்கிரனாலும் கசனைக் காப்பாற்ற முடியாதபடி, அவனை அழிக்கத் திட்டமிட்டனர் அசுரர்கள்.
கசனைக் கொன்று, அவனது சாம்பலை பானகத்தில் கலந்து சுக்கிரனுக்கே பருகக் கொடுத்தனர். இப்போது, தனது வயிற்றில் இருக்கும் கசனை உயிர்ப்பித்து, அவன் வெளியே வந்தால், சுக்கிரன் இறந்துவிடுவார் என்பது அவர்கள் திட்டம். இந்த நிலையில், சுக்கிரன் ஓர் உபாயம் செய்தார்.
வயிற்றுக்குள் இருக்கும் கசனுக்கு சஞ்ஜீவினி மந்திரத்தை உபதேசித்தார். அவன் உயிர் பெற்றுத் தன் வயிற்றில் இருந்து வெளிவந்ததும், அதே சஞ்ஜீவினி மந்திரத்தின் உதவியால் தன்னை உயிர்ப்பிக்கும்படி பணித்தார். அதன்படியே, முதலில் சுக்கிரர் கசனை உயிர்ப்பித்தார். அவருடைய வயிற்றுக்குள் இருந்து வெளியேறிய கசன், சஞ்ஜீவினி மந்திரத்தின் மூலம் சுக்ராச்சார்யரை உயிர்ப்பித்தான்.
ஆக, கசனுக்கு சஞ்ஜீவினி மந்திரம் உபதேசம் கிடைத்தது. இந்தச் சம்பவத்தின் மூலம் குருபகவானின் ஸித்தம் நிறைவேறியது.