Saturday, 5 August 2017

திருக்குற்றாலம்


ந்தக் காட்டுப்பகுதிக்கு வந்தார் மாணிக்கவாசகர். பச்சைப் பசுமையான காட்டையும், பல்கி வளம் பெருக்கும் அருவியையும், அனைத்துக்கும் மேலாக ஆனந்தமாக கொலுவிருக்கும் ஆடல்வல்லானையும் கண்டார்; வணங்கினார்; தொழுதார்; பாடினார்; பரவினார்; பரமானந்த சுகத்தில் மெய்யுருகி நெக்குருகி உள்ளுருகி உணர்வுருகி நின்றார்.
'இந்த சுகத்தின் முன்னே, ஊரும் பேரும் உற்றாரும் உறவினரும் எதற்குப் பயன்?' எனும் வினா அகத்தில் அரும்ப, தனது ஐயத்தையே பாடலாக்கினார்.
உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்கற்றாரையும் வேண்டேன் கற்பன இனி அமையும்குற்றாலநாதன் குரை கழற்கே ஆளானேன்கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வல்லானே
பாட்டு முடியும்போது ஐயம் போயே போய்விட்டது. 'எதுவும் வேண்டாம்; எப்போதும் எக்காலத்தும் குற்றாலநாதனின் திருவடிகளே போதும்' எனும் எண்ணம் நிறைந்து விட்டது.
தேவார- திருவாசகத் திருத்தலம் குற்றாலம் அழைக்கிறது, வாருங்கள் போகலாம்!
குற்றாலம் என்பது ஒருவகை ஆலமரம்; குறு ஆல் என்பார்கள். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது. பலாமரத்தில் ஒருவகையான குறும்பலா மரமும் இங்கு உண்டு; குற்றாலத்தின் நிழலிலும் குறும்பலாவின் அடியிலும் கோயில் கொண்டருளிய குற்றாலநாதரையும் குறும்பலா ஈசனையும் திருஞானசம்பந்த பெருமான் பாடிப் போற்றினார்.
குற்றாலம் இருக்கும் மலைப்பகுதிக்குப் பொதிகை என்று பெயர். 'பொதியில்' என்று இலக்கியங்கள் போற்றுகின்றன. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மனிதர்களுக்கும் பொதுவான உறையுள் என்பதால், 'பொதியில்' எனும் பெயர் கொண்டதாம்! பொதிகை மலையில் பாயும் சிற்றாற்றில் உருவாவதுதான் குற்றால அருவி!
பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலம். பொதிய மலைச் சாரலில் இருக்கும் காட்டுப்பகுதியின் வளம், மன்னன் மனத்தைக் கவர்ந்தது.
சிற்றாற்றங்கரை; புலிகள் அதிகமாக நடமாடிய பகுதி. இருப்பினும், வளஞ்சார்ந்த அந்த விரிநிலத்தை மேடு திருத்தி, காடு திருத்தி, அரண்மனை அமைத்துக் குடியேற்றமும் செய்தான். புலிகள் இருந்த பகுதி என்பதால் 'புலியூர்' என்றே பெயர் சூட்டினான். புலியூருக்குக் கிழக்கேயும் புலிகள் பாய்ந்தோடிய காடு. கடுவாய்கள் (புலிகளுக்கு இன்னொரு பெயர்) ஓடிய இடம் ஆதலால், கடுவாய்க்காடு என்று மக்கள் அழைத்தனர். புலியூருக்கு மேற்கே, சிறிதாக ஓர் அருவி; புலிகளுடன் கலந்துவிட்ட இயற்கை வாழ்வு; புலி அருவி என்ற பெயர் பொருத்தமாக அமைந்தது.
புலியூரில் தங்கிய பாண்டிய மன்னன், பரம்பொருளுக்குக் கோயில் அமைக்க ஆசைப்பட்டான். தனது இருப்பிடத்துக்கு மேற்கே, சிற்றாற்றங்கரையின் பகுதியைச் செப்பனிட்டான். செஞ்சடைக் கடவுளாம் விஸ்வநாத பெருமானுக்கு கோயில் எடுப்பித்தான். காசி விஸ்வநாதரையே அங்கு கொலு எழுப்பி னான். கங்கையாற்றங்கரை காசியை, சிற்றாற்றங்கரைக்குக் கொண்டுவந்துவிட்ட
மகிழ்ச்சியில், அந்த இடத்துக்குத் தென்காசி என்று நாமகரணம் செய்தான். கோயில் எடுத்த பிறகு, அந்தக் கோயில் செலவுகளுக்கு வருமானம் வேண்டுமே! சிற்றாற்றின் வளமை இருக்கவே இருக்கிறது... மேலும் காடு திருத்தி, வளம் கண்டு, வயல்களும் கண்டான். முப்போகம் விளையக்கூடிய இந்தப் பகுதியை கோயிலுக்கான நிலமாக மானியம் தந்தான். இறைவனுக்கான இடம் என்பதால் 'வாழ்விலான் குடி' எனும் பெயர் ஏற்பட்டது (வாழ்விலான் - பிழைப்புக்காக வாழாதவன்; பிறப்பும் இறப்பும் இலான் - இறைவன்). வயல்களை ஒட்டிய மேட்டுப் பகுதியில், மக்கள் குடியேற்றம் விரைவாக நடைபெற்று, 'மேலகரம்' தோன்றியது.
கோயிலைச் சுற்றிய இடம் விரிவாக்கம் பெற்றது; தென்காசி பெரிய ஊரானது. கோயிலுக்கு ஆபரணங்கள் செய்வதற்காகப் பொற்கொல்லர்கள் வந்து தங்கிய இடம் தட்டான்குளமாகவும், ஓதுவார்கள் வாழ்ந்த இடம் பாட்டா(ர்)குறிச்சியாகவும் நிலைபெற்றன. புலிகள் நடமாடிய பகுதியிலும் காடுகள் அகற்றப்பட்டு ஊர் உருவானது; கடுவாய்அகற்றி எனும் பெயர் கண்டு, அதுவே காலப்போக்கில் கடுவாய்க்கத்தி என்று திரிந்தது. பாண்டிய மன்னனும் அவனுடைய வம்சாவளியும் தங்கிய பகுதி சுந்தரபாண்டியபுரம் ஆனது.
நூற்றாண்டுகள் சில கழிந்து, நாங்குநேரியில் இருந்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர், மேலகரத்தில் தங்கினார். குற்றாலம், சிற்றாறு, இரைச்சலிட்டு ஓங்கும் பொங்குமாங்கடல் என்று இயற்கையின் எழில் வனப்புகள் யாவும் அவருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அவருடைய உள்ளம் வசப்பட்ட இடத்துக்கு பிறரையும் அழைத்துச் செல்ல முடிவு செய்தார். 'குற்றாலக் குறவஞ்சி' நூல் உருவானது.
பேரருவி, ஐந்தருவி, தேனருவி, செண்பகா அருவி, பழைய அருவி, புலி அருவி, பழத்தோட்ட அருவி என்று அருவிகளின் அமுதசுரபியாகத் திகழும் திருக்குற்றாலத்தில் நிற்கிறோம்.
தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே, தென்காசியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலும் செங்கோட்டையிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவிலும் குற்றாலம் உள்ளது. திருநெல்வேலி, தென்காசி, செங்கோட்டை, கொல்லம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் அல்லது வாகனங்கள் மூலமாகக் குற்றாலத்தை அடையலாம். பேரருவியின் அருகில் திருக்குற்றாலநாதரின் திருக்கோயில். இந்த மலையின் அழகை திரிகூடராசப்பக் கவிராயரின் வார்த்தைகள் அழகாகக் காட்டுகின்றன.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியடு கொஞ்சும்மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பார்கவனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்கூனலிளம்பிறை முடித்த வேணி அலங்காரர்குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே
கோயிலையும் பேரருவியையும் சுற்றியே ஊர் வளர்ந்துள்ளது. அருவியில் நீர்பொழியும் காலங்களில், இரவு பகல் எந்நேரமும் பரபரப்புடன் காணப்படுகிறது கோயில் வாசல்.
7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தர், இந்தத் திருக்கோயிலுக்கு வந்தார், பதிகம் பாடினார் என்பதால் தேவாரத் தலமாகக் கணக்கிடப்படுகிற இந்த ஆலயம், இன்னும் பழைமையானது. குற்றாலநாதருக்கு இங்கு ஆலயம் எழுப்பப்பட்டது, ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே இருக்க வேண்டும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் தகவல்.
முன்னைப் பழைமைக்கும் முன்னைப் பழைமையாக, பாங்குடன் திகழ்கிற திருக்கோயில் முன்னே நிற்கிறோம். வானிலிருந்து பார்த்தால், கோயில் சங்கு வடிவில் காட்சி அளிக்கும். சங்கு கோயில் என்றே பெயருண்டு. சிறிய ராஜகோபுரம்; மூன்று நிலைகள் கொண்டது.
நுழை வாயிலில், இரண்டு பக்கமும் யானைச் சிற்பங்கள் அமைந்த படிகள். களிற்றுப் படிகள் எனப்படும் இவற்றில் ஏறி உள்ளே நுழைந்தால், விசாலமான, அழகான மண்டபம். கல் மண்டபமான இதனை வசந்த மண்டபம் என்கின்றனர்; திரிகூட மண்டபம் என்பது பழைய பெயர். யாகசாலை மண்டபமும் தீர்த்தவாரி மண்டபமும் இந்த மண்டபத்தின் பகுதிகளாக உள்ளன. வரிசையாகத் தூண்கள் அமைந்த அழகிய மண்டபத்தில் இப்போது நிறைய கடைகள்.
வசந்த மண்டபம் கடந்ததும் கோயிலின் பிரதான முகப்பு. வசந்த மண்டபத்தின் பக்கவாட்டிலும் வழி ஒன்று இங்கே வந்து சேர்கிறது. முகப்பில் அம்பல விநாயகர் ஒருபுறம்; பன்னிரு கரங்களுடன் கூடிய மயில்வாகனனாக ஆறுமுகப் பெருமான் மறுபுறம். வணங்கிக் கடந்து உள்ளே நுழைந்தால், நேரே மூலவர் சந்நிதி. சுவாமி சந்நிதிக்குச் செல்லும் முன், பிராகாரத்தை வலம் வந்து விடலாமா?
வெளிப் பிராகாரம்... அம்மன் சந்நிதியையும் சேர்த்து வலம் வரும் வகையில் இது அமைந்துள்ளது. நாம் முதலில் நுழைந்த கிழக்குத் திருச்சுற்றிலேயே நடந்து, அம்பாள் சந்நிதி முகப்பையும் கடந்து செல்ல... பிராகாரமே சற்று குறுகி வளைகிறது. சங்கு வடிவத்துக்கான வளைசல் என்பது புரிகிறது. தெற்குச் சுற்றுக்குள் திரும்பும் இடத்தில், 'ச்சோ...' எனும் ஒலி!
நிமிர்ந்து பார்த்தால்... கோயில் மதில் தாண்டி, தென்மேற்குப் பகுதியில்... அடடா! என்ன அழகு, என்ன சுகம்... பொங்குமாங்கடலாகப் பாயும் பேரருவி! பேரருவியின் ஒலியும் வாசமும் அகமும் புறமும் நிறைய... அம்மன் சந்நிதி உள்மதில் பக்கமாகப் பார்வையைத் திருப்பினால், அருள்மிகு குறும்பலாநாதர்! சிறிதான கட்டுமான அமைப்பில், குறும்பலா மரமும், அதனடியில் சிவலிங்கமும்!
திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம்பொருந்திப் பொருந்தாத வேடத்தால்காடுறைதல் புரிந்தசெல்வர்இருந்த இடம் வினவி ஏலம் கமழ்சோலையின் வண்டியாழ்செய்குருந்த மணம் நாறும் குன்றிடஞ்சூழ்தண்சாரல் குறும்பலாவே
- என்று காந்தாரப் பண்ணில் ஞானசம்பந்தர் பாடியது நினைவில் துள்ள, குறும்பலாநாதரை வணங்கி, வலம் தொடர்கிறோம். சற்றுத் தள்ளி, எதிர்ப் பக்கத்தில் ஆதிக் குறும்பலா மரத்தின் கட்டைகள். முன்னர் இருந்த குறும்பலா மரம் காலப்போக்கில் சிதைந்துவிட, அதன் கட்டைகளை எடுத்துப் பாதுகாத்து வைத்துள்ளனர்.
அம்மன் சந்நிதியை ஒட்டி இருப்பது புதிய குறும்பலா. தெற்குச் சுற்றில் அறுபத்துமூவர் மூலவர் திருமேனிகள். இந்தச் சுற்றின் மேற்குப் பகுதியில் தல விநாயகர். அருகில் ஒரு நுழைவாயில். அருவியில்
லிருந்து நேரடியாக வந்தால் இந்த வாயிலை அடைய
லாம். இப்போதெல்லாம் அதனைப் பூட்டியே வைத்திருக்கிறார்கள். சிறிய, ஆனால் அழகாகக் கட்டப்பட்டுள்ள வல்லப விநாயகர் சந்நிதி.
மெள்ள மேற்குச் சுற்றுக்குள் திரும்புகிறோம். முதலில் நன்னகரப் பெருமாள் சந்நிதி; அடுத்து பாபவிநாசரும் உலகம்மையும்; அதற்கும் அடுத்து நெல்லையப்பரும் காந்திமதியும்.
தொடர்ந்து வரிசையாக நிறைய சந்நிதிகள்... மணக்கோலநாதர்; நாறும்பூநாதர்; சங்கரலிங்கநாதர்; பால்வண்ணநாதர்- ஒப்பனை அம்மாள்; சொக்கலிங்கர்- மீனாட்சி அம்மன்; மேலவாசப்பன் தர்மசாஸ்தா மதுநாதேஸ்வரர்- அறம் வளர்த்த நாயகி சந்நிதி.
வடக்குச் சுற்றுக்குள் திரும்புகிற இந்த இடத்தில் நின்று பார்த்தால், பேரருவி வெகு விமரிசையாகத் தெரிகிறது. எதிரும் புதிருமாக இங்கு நிறைய சந்நிதிகள்... அகத்தியர், நாகர்(வாசுகி), சஹஸ்ர
லிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் சந்நிதிகள். இந்தச் சந்நிதிகளுக்கு இடையில், ஓரிடத்தில் 'ஐந்து தரிசனம்' என்று குறித்திருக்கிறார்கள்.

திருக்குற்றாலநாதர் திருக்கோயிலில், வடக்குச் சுற்றுக்குள் திரும்பும் இடத்தில்... 'ஐந்து தரிசனம்'! குற்றால மலை, சிற்றாறு, பொங்குமாங்கடல், அருவி, கோயிலின் மேற்கு விமானம், சோழலிங்கம் ஆகிய ஐந்து பரிமாணங்களில் பரம்பொருள் வெளிப்படுவதைக் காட்டும் இடம் (பிள்ளையார், லிங்கம், விமானம், மலை, மலைவீழ் அருவி என்றும் வகைப்படுத்தலாம்). மலையாக, நீராக, நதியாக, இயற்கையாக, செயற்கையாக எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்த இறைவனின் இனிய தாண்டவத்தை உணரச் செய்யும் இடம். பார்க்கப் பார்க்கப் பரவசம்!
வலத்தைத் தொடர்கிறோம். காசி விஸ்வநாதர்- விசாலாட்சி சந்நிதி. வடக்கு வாசல் கடந்து சென்றால், பதினெட்டுப் படி; கருப்பசாமி; இவர் குற்றாலக் கருப்பர். சிறிய நந்தவனம். மீண்டும் உள்ளே வந்து, வடக்குச் சுற்றில் தொடர்ந்தால், சிவாலய முனிவர் சந்நிதி; அடுத்து பாலதண்டாயுதபாணி.
கிழக்குச் சுற்றில், அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தரணிபீட பராசக்தி. சந்நிதி முகப்பு மண்டபத்தில் அமர்ந்து அம்பாளை தியானித்தால், சர்வ வல்லமையும் தருவாள்.
சக்தி பீடத்தின் மேவும் தாரகப் பிரம்மம் போற்றிமுத்தி தந்தருளவேண்டி முளைத்தருள் முதலே போற்றியத்திர விழி பண்பாட வந்தரப் பேரியார்ப்பச்சித்திர சபையில் ஆடுந் தெய்வநாயகனே போற்றி
- என்று திருக்குற்றால தலபுராணம் பேசுகிறது. சக்தி பீடத்துக் காரியைப் போற்றியபடியே, மூலவர் சந்நிதி நுழைவாயிலை அடைகிறோம். அதற்கு முன்னதாக நவக்கிரக சந்நிதி.
சிறிய (அலங்கார) மண்டபத்தைத் தாண்டி பலிபீடம், கொடிமரம், நந்தி. உள்ளே, குறுகலான உள் பிராகாரம். அதிகார நந்தி. அடுத்து கிழக்குச் சுற்றில் சூரியன். தெற்குச் சுற்றில் வரிசையாக கும்பமுனி, பிரம்மா, பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி (சப்த மாதர்களான அருள் சக்திகள்), ஜ்வரதேவர், மகாலட்சுமி, ஐயனார், துறையனார், மகாவிஷ்ணு, நரசிம்மர். தென்மேற்கு மூலையில் கிழக்குப் பார்த்த விநாயகர். அடுத்து சோமாஸ்கந்தர்; சிறிதாக சந்திரன் சந்நிதி; பஞ்சபூத லிங்கங்கள்; ராமலிங்கம்; வடமேற்கு மூலையில் வள்ளி- தெய்வானை உடனாய நான்கு திருக்கரம் கொண்டு நின்ற கோல சுப்ரமணியர். வடக்குச் சுற்றில் தனியாக சனீஸ்வரர்.
உள் பிராகார வலம் நிறைவு செய்து, மூலவர் சந்நிதிக்குள் நுழைகிறோம். முதலில் மகா மண்டபம். தெற்கு உள்சுற்றிலிருந்து பக்கவாட்டு வழியும் உண்டு. மகா மண்டபத்தில் வலப் பக்கம் நடராஜ சபை; இடப் பக்கத்தில்- கருவறைக்குச் செல்லும் வாசலுக்கு அருகில், உற்ஸவர் மூர்த்தங்கள். அர்த்த மண்டபம் அடைந்து கருவறையை நோக்க... ஸ்ரீகுற்றாலநாதர். கூடாசலநாதர், கூடாசலபதி, திரிகூடாசலேஸ்வரர், திரிகூடநாதர் எனும் திருநாமங்களும் கொண்டவர். சிறிய லிங்கத் திருமேனி. சிவலிங்கத்தின் மீது, ஐந்து விரல்கள் படிந்த பதிவுகள்.
சிவனாருக்கும் பார்வதிக்கும் கயிலையில் திருமணம். அனைவரும் கூடியதால், வடக்கு தாழ்ந்தது; தெற்கு உயர்ந்தது. பூமியைச் சமன்படுத்த அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார் இறைவன். அகத்தியர் பொதியமலைச் சாரலை அடைந்ததும், பூமி சமன்பட்டது.
அகத்தியர் தென்பொதிய மலைக்கு வந்தபோது இங்கே திருமால் திருமேனியாகத்தான் பரம்பொருள் காட்சி அளித்தாராம். சிவனும் திருமாலும் ஒரே பரம்பொருள் என்று காட்ட விரும்பிய அகத்தியர், திருமால் திருமேனியைச் சிவன் திருமேனியாக மாற்றியதாக ஐதீகம். அகத்தியர், இறைவனின் திருமேனி மீது கைவைத்து, 'குறு குறு குற்றால லிங்கம்' என்றதும், குட்டையான சிவலிங்கத் திருமேனி தோன்றியதாம். அகத்தியரின் கைவிரல் தடங்களே, சிவலிங்கத்தின்மீது காணப்படும் பதிவுகள். ஸ்ரீதேவியை குழல்வாய்மொழி அம்மையாகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றினார் அகத்தியர் என்றும் சொல்லப் படுகிறது.
'இப்படி நடந்ததா?' என்று கேட்பதைவிட, இந்தச் சம்பவத்தை சற்றே நுட்பமான கோணத்தில் அணுகுவது சிறப்பு. இறைவனுக்குத் திருமேனியும் வடிவமும் சாற்றுவது நாம்தானே! அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை, நமக்குப் புரியும்படிக்காக வடிவம் தந்து வண்ண வண்ண அலங்காரம் செய்து பெயரிட்டுப் பார்ப்பது மனிதர்கள்தாமே! யார் யார் என்ன பெயர் சொல்லி அழைத்தாலும், எப்படி வடிவம் தந்தாலும், அன்போடும் அகத்தில் தூய்மையோடும் அவற்றைச் செய்தால் ஆண்டவன் ஏற்றுக் கொள்வார் என்று காட்டவே அகத்தியர் இவ்வாறு செய்தார்.
வம்பார் குன்றம் நீடுயர்சாரல் வளர் வேங்கைக்கொம்பார் சோலைக் கோல வண்டியாழ் செய்குற்றாலம்அம்பால் நெய்யோடு ஆட ஆலமர்ந்தான் அலர் கொன்றைநம்பான் மேய நன்னகர் போலும் நமரர்காள்
- என்று குற்றாலின் கீழ் அமர்ந்தானைப் பணியும்படி அழைப்பு விடுத்தார் ஞானசம்பந்த பெருமான்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்கள் பாடியுள்ளார். முதலாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள குறிஞ்சிப் பண் 'வம்பார் குன்ற' எனும் பதிகம், ஆலமர்ந்தான் என்று இறைவனை அழைக்கிறது. 2-ஆம் திருமுறையில் காணப்படும் காந்தாரப் பண்ணில் அமைந்த 'நாள்பலவும் சேர்மதியம்' பதிகம், குறும்பலா நாதரைப் போற்றுகிறது. இருவரும் ஒருவரா? என்ன வினா? இறைவனார் ஒருவரே என்று தெரியாதா என்கிறீர்களா? தெரியும். இருந்தாலும் ஒன்று... பரம்பொருளை ஒவ்வொரு விதமாகப் பார்த்துப் பரவசப்படுவதும் ஒருவகை சுகந்தானே! குற்றாலநாதரும் குறும்பலாநாதரும் ஒருவரே என்பது பலரின் துணிபு. ஆலின் கீழ் அமர்ந்த கோலமும் பலாவின் கீழ் அமர்ந்த கோலமும் வேறு வேறாக இருக்க வேண்டும் என்பது பிறரின் வாதம். ஞானசம்பந்தர் இங்கே வந்தபோது, அருவிக் கரையிலுள்ள கோயிலில் உள்ள குறும்பலாநாதரைக் கண்டார்; குறும்பலா பதிகம் பாடினார் என்றும், இதே தலத்தில் பிறிதோர் இடத்தில் உள்ள கூத்தர் கோயில் இறைவனை குற்றாலப் பதிகத்தில் பாடினார் என்றும் சொல்கிறார்கள். சித்திர சபைக்கு அருகே கூத்தர் கோயிலும் உள்ளது; சித்திர சபையே சொல்லப்போனால் நடராஜப் பெருமானுடைய கூத்தாடும் கோயில்தான்.
குற்றாலத்தில் கூத்தர் பெருமான் (நடராஜர் கோல நாயகர்) வெகு விசேஷமானவர் என்பது, இந்தத் தலத்துக்கு பிறர் பாடியிருக்கும் பாடல்களால் விளங்கும்.
உற்றார் ஆருளரோ - உயிர் கொண்டுபோம் பொழுதுகுற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ?
- என்கிறார் அப்பர் (திரு அங்கமாலையில் காணப்படும் குறிப்பு. இது பதிகமாகக் கணக்கில் வராது; எனவே இந்தத் தலத்துக்கு பதிகம் பாடியவர் ஞானசம்பந்தர் மட்டுமே!).
காலன் வருமுன்னே கண்பஞ்சடைமுன்னேபாலுன் கடைவாய் படுமுன்னே - மேல்விழுந்தேஉற்றார் அழுமுன்னே ஊரார் சுடு முன்னேகுற்றாலத் தானையே கூறு - என்றார் பட்டினத்தார்.
சுவாமியை வணங்கி வழிபட்டு, மீண்டும் திருச்சுற்று வருகிறோம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி; அமர்ந்த கோல விஷ்ணு; பிரம்மா. தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரர். உள் பிராகாரத்தைச் சுற்றிவரும்போது, கருவறையின் பழைமை புரிபடுகிறது. கருவறைச் சுவரில் நிறைய கல்வெட்டுகள். கருவறை காலத்தால் மிகப் பழைமையானது. பிராகாரங்களும் மற்ற பகுதிகளும் பின்னர் வந்த அரசர்கள் பலரால் திருப்பணி கண்டுள்ளன. வெளியில் வந்து பக்கத்தில் இருக்கும் அம்பாள் சந்நிதிக்குச் செல்கிறோம். சுவாமிக்கு வலப் பக்கம், சுவாமி சந்நிதிக்கு இணையாகக் கிழக்கு நோக்கி இருக்கிறது அருள்மிகு குழல்வாய் மொழியம்மை சந்நிதி. இவ்வாறு இணையாகவும், சுவாமிக்கு வலப்புறமாகவும் அம்மை சந்நிதி அமைந்தால், அதற்குத் திருமணக்கோல சந்நிதி என்று பெயர். படிக்கட்டுகள் ஏறி அம்பாள் சந்நிதிக்குள் நுழைகிறோம் (இந்தச் சந்நிதியின் தெற்குக் கரையில்தான், அதாவது அருவிக்கு வடக்காக, குறும்பலா ஈசரை தரிசித்தோம்). அம்பாள் கருவறையை வலம் வரலாம். தென்மேற்கு மூலையில் கயிலாசநாதர் சந்நிதி; வடமேற்கு மூலையில் துர்கையம்மன் சந்நிதி. வடக்குச் சுற்றில் பள்ளியறை. குழல்வாய் மொழி அம்மை. என்ன அழகான திருநாமம். வேணுவாக் வாஹினி என்பது சம்ஸ்கிருதப் பெயர். ஒரு கரத்தில் தாமரை தாங்கி, மற்றொரு கரத்தை வீசுகரமாக ஒயிலாக வளைத்து நிற்கும் நின்றகோல நாச்சியார்.
குற்றாலம் என்று தலத்தின் பெயர் வழங்கப் பட்டாலும், குறும்பலாவே தலமரம். குறும்பலா கனியை யாரும் உண்பதில்லை; குற்றாலத்து குரங்குகளே இந்தக் கனிகளை உண்டு கும்மாளம் போடுகின்றன. தீர்த்தம்- கோயிலின் அருகில் கொட்டுகிற அருவி.
கோயிலிலுள்ள சிற்பங்கள் சில குறிப்பிடப்பட வேண்டியவை. வடக்கு வாசலில் சிவ-விஷ்ணு திருவிளையாடல்களின் பல்வேறு காட்சிகள். தலை முதல் கால் வரை வெவ்வேறு வகையான அற்புத ஆபரணங்களை அணிந்து, கைகளில் விளக்கு தாங்கி நிற்கும் பாவையர் சிற்பங்கள் பிரமாதம். 'சுந்தரரின் திருவாட்டிகளான சங்கிலியும் பரவையும்தாம் இவர்கள்' என்கிறார்கள் சிலர்!
குழல்வாய்மொழியாளையும் குற்றாலநாதரையும் கும்பிட்டபடி கோயிலுக்கு புறத்தே வருகிறோம். உலகத்து எழில் யாவும் சேர்ந்து, குற்றாலத்துக்குள் புகுந்து விட்டனவோ என்று தோன்றுகிறது.
குற்றாலநாதர் கோயில் அருகிலுள்ளது, 'சித்திர சபை'. எதிரே தெப்பக்குளம். சபைக்குள் அழகழகான சிற்பங்கள். இவற்றைக் காணும்போது, ஒரு பக்கம் மகிழ்ச்சியில் துள்ளினாலும், இன்னொரு பக்கம் ஆதங்கம். ஓவியங்கள் மங்கலாகி, ஒளி குன்றி, காலத்தால் சிதைந்ததுபோல் தோன்றுவதைக் காணும் போது, உள்ளம் கலங்குகிறது.
நடராஜரின் ஐந்து ஆனந்த தாண்டவ சபைகளில் இதுவும் ஒன்று. சிதம்பரம் கனக சபை, மதுரை ரஜதசபை, திருநெல்வேலி தாமிர சபை, திருவாலங்காடு ரத்தினசபை, இங்கு திருக்குற்றாலம் சித்திர சபை. சிவகாமி தாளம் கொட்ட, கால் தூக்கி ஆடுகிறார் ஓவிய வடிவான அம்பலவாணர். சித்திர சபை கிழக்கு நோக்கியது; ஓவிய நடராஜர் தெற்குப் பார்த்தவர்.
கோயில் பெருவிழாவின் 8-வது நாளில், கோயிலிலிருந்து நடராஜர் இந்த சபைக்கு எழுந்தருளி, பச்சை சார்த்தித் திரும்புவார். கோயில் மிகப் பழைமையானது; பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே சித்திர சபை அமைக்கப் பட்டுள்ளது.
முதலாம் பராந்தக சோழர், முதலாம் ராஜராஜன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் விக்கிரமன், பராக்கிரம பாண்டியன் ஆகியோர் பற்பல திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
- ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு விதமாக முக்தி தரும். நினைத்தால் அண்ணாமலை (அருணகிரி); தரிசித்தால் சிதம்பரம் (புலியூர்); பிறந்தால் திருவாரூர்; இறந்தால் காசி. ஆனால், குற்றாலம்... பிறந்தால், இறந்தால், தரிசித்தால், நினைந்தால்... ஆமாம், எல்லா வகையாலும் நற்கதி நல்குகிறது. 'குறு குறு குற்றாலநாதா' என்று கூறிக்கொண்டே வெளிப் போகிறோம்; அகத்துக்குள் கிடுகிடுவென்று குற்றாலநாதர் புகுந்துகொள்கிறார்.

No comments:

Post a Comment