Saturday, 5 August 2017

திருநாவலூர்


ரசிங்க முனையரையருக்குக் கண்களைத் திறக்க வேணும் என்கிற குறுகுறுப்பு. 'கூடாது' என்று உள் மனது தாளிட, அதையும் தாண்டி அகம் கட்டளையிட்டது... 'கண்களைத் திறந்து அந்த தெய்விக வடிவைக் காண்பதே ஆனந்தம்...' அகத்துக்கே அடிபணிந்தார் அரசர்.
வேறொன்றுமில்லை. திருக்கோவலூர் திருமுனைப்பாடி நாட்டு அரசரான நரசிங்க முனையரையர், திருநாவலூர் திருக்கோயிலுக்கு வந்திருந்தார். அவ்வப்போது அவர் வருவதும், சிவாச்சார்யர்கள் அவருடைய வருகையை நன்னிமித்தமாகக் காண்பதும், ஆச்சார்யர்களை ஆண்டவனுக்கு நிகராக அவர் பேணுவதும் வழக்கம் தான் என்றாலும், அன்றைக்கு வேறொன்றும் நடந்தது.
அரசர் ஆலயத்துக்கு அன்று வந்தபோது, சடையனார் என்று ஊர் மக்களால் அழைக்கப்பட்ட ஜடாதர சிவாச்சார்யர், சந்நிதியில் பூஜைகள் செய்தார். சடையனாருக்கு ஒரு மகன் உண்டென அரசருக்குத் தெரியும்; கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால், இன்று அந்தப் பிள்ளை, அப்பாவுடன் கோயிலுக்கு வந்திருந்தான். அவன் முகப் பொலிவும் கண்களின் எழிலும்... அதைவிட, ஞானசம்பந்தப் பெருமானுடைய பாசுரங்களை அவன் பாடிய அழகும்... சந்நிதியில் கண்களை மூடி நின்று, இறைவனுடன் ஒன்றிவிடும் அரசருக்கு, இன்று கண்களைத் திறந்து அந்தப் பிள்ளையைப் பார்த்தால் போதும், தெய்வம்கூட பின்னர்தான் என்று தோன்றியது! தீபத் தட்டை அரசர்முன் நீட்டினார் சடையனார். கைகளை நீட்டியபடியே அரசர் கேட்டார் ''ஆச்சார்யரே, இவன்...''
''என் மகன் ஆரூரன்''
''கொள்ளை புத்திசாலியாக இருப்பான் போல் தோன்றுகிறதே! அர்ச்சனை செய்கிறான்; அழகாகப் பாடுகிறான்...''
''ஆமாம், கொஞ்சம் அலங்காரப் பிரியனும்கூட! அவனுடைய தாய்க்கு இசைஞானம் நிரம்பவே உண்டு. ஞானசம்பந்தரின் பாசுரங்களையும் அப்பர் பெருமானின் பாடல்களையும் அவளே இவனுக்குப் புகட்டியிருக்கிறாள்!''
பணிவும் சிறிது பெருமிதமும் கலந்து சடையனார் சொல்ல... ஆரூரனின் அழகு முகத்தையே கண்கொட்டாது பார்த்தார் நரசிங்க முனையரையர்.
அதன் பின், அரசர் திருநாவலூருக்கு அடிக்கடி வந்தார். குதிரைமீது வந்தால், ஆரூரனுக்கும் குதிரை சவாரி உண்டு. ஆண்டவன் வழிபாட்டுக்கான திரவியங் களைக் கொண்டு வருகிறாரோ இல்லையோ, ஆரூரனுக்கானவற்றைக் கொண்டுவர அரசர் மறக்கவே மாட்டார். ஆடைகள், அணிமணிகள், உணவு வகைகள், அவனுக்குப் பிடித்தவை என்று மழை போல் அவன் முன் பொழியும்.
நாட்கள் சென்றது. அரசரின் ஆதங்கமும் அதிகமானது. சொந்தப் பிள்ளையைவிட இந்தப் பிள்ளையிடம் அரசர் உருகுகிறார் என்பது அரசிக்கும் புரிந்தது. தயங்கித் தயங்கி கடைசியில் அரசர் கேட்டேவிட்டார் ''ஆசார்யரே! ஆரூரனை நான் வளர்க்கிறேனே.''
அரசருடைய நிலைமையை நன்கு உணர்ந்திருந்த சடையனாரால் மறுக்கவும் முடியவில்லை; ஆனால், ஆரூரனுக்கு உபநயனம் செய்யவில்லை; அவன் வேதமும் ஆகமமும் பயிலவேண்டும்! ஒன்றும் புரியாமல் நின்ற சடையனாருக்கு, அரசருடைய வாக்கும் போக்கும் புதிய உலகைக் காட்டின. பின்னர் ஆரூரன், ஒரே நேரத்தில் அந்தணர் வீட்டுப் பிள்ளையாகவும் அரசர் வீட்டுப் பிள்ளையாகவும் வளர்ந்தான்; அறிவும் செல்வமும் ஒருங்கிணைந்த ஞானப் பெட்டகமானான். அரசரே அவனுடைய உபநயன விதி நிறைவு செய்தார்; கல்வி- கேள்விகளில் உதவினார்.
என்ன... ஆரூரனைக் காண வேண்டும்போல் தோன்றுகிறதா?
ஆரூரனான அவர்தாம் பின்னாளில், சிவனடியார்களின் பெருமைகளைப் பாடிக்கொடுத்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆனார். புராணங்கள் போற்றும் ஆலால சுந்தரரும் இவரே!
தேவாரப் பாடல்களைப் பாடிய சுந்தரர், அடியார்களின் பெருமையைக் கூறும் 'திருத்தொண்டத் தொகை' பாடினார். அதனை ஆதாரமாகக் கொண்டு, நம்பியாண்டார் நம்பி, 'திருத்தொண்டர் திருவந்தாதி' பாடினார். இதனை அடிப்படையாகக் கொண்டு 'திருத்தொண்டர் புராணம்' பாடினார் சேக்கிழார். இந்த வகையில், திருத்தொண்டர்களின் வரலாறு கிடைப்பதற்கும் அவர்களைப் போற்றுதற்கும் சுந்தரர் வழிகோலினார் என்பது மாத்திரமல்ல, அவருடைய தந்தை- தாயான சடையனார்- இசை ஞானியார் ஆகியோரும், அவரை வளர்த்த நரசிங்க முனையரையரும் அறுபத்து மூவர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.
இவ்வாறு, அடியார்களின் பெருமையை அகிலம் அறியக் காரணம் காட்டிய சிவபெருமானை தரிசிக்க வேண்டாமா? வாருங்கள், திருநாவலூர் போகலாம்.
திருநாவலூர்... கடலூர்- உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் உள்ள இந்தத் தலத்தை, பண்ருட்டி யில் இருந்தும் (சுமார் 25 கி.மீ), விழுப்புரத்தில் இருந்தும் (சுமார் 20 கி.மீ) அடையலாம். விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் அரசூர், மடப்பட்டு தாண்டி, கெடிலம் என்ற இடத்தை அடைந்தால், அங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் இந்த ஊர் உள்ளது.
திருநாமநல்லூர் என்றே அறியப் பட்ட ஊர்ப் பெயரை திரு.வி. கல்யாண சுந்தரனாரே பெருமுயற்சி செய்து, அஞ்சல் துறையிலும் அலுவல்பூர்வ அமைப்புகளிலும் 'திருநாவலூர்' என்னும் பெயரை நிலைபெறச் செய்தார். இப்போது இந்தப் பெயரே புழக்கத்தில் இருக்கிறது.
பழங்காலத்தில் 'நடுநாடு' என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டது. தெற்கில் சோழ நாட்டுக்கும் வடக்கில் தொண்டை மண்டலத்துக்கும் இடையில் இருப்பதால் இந்தப் பெயர். நடுநாட்டின் தேவாரத் தலங்களில் (மொத்தம் 22) 8-வது தலமான இது, கெடில நதியின் வட கரையில் அமைந்துள்ளது.
நடுவில் மண்டலம், திருமுனைப் பாடி நாடு, சேதி நாடு, மகத நாடு, சனநாத நாடு என்றெல்லாம் பெயர் கொண்ட நடுநாட்டின் பல பகுதிகள், கெடில நதியால் வளம் பெற்றன. பழைய கால நடுநாட்டின் தலைநகரமாகத் திருக்கோவலூர் திகழ்ந்தது. அங்கிருந்துதான் நரசிங்க முனையரையர் ஆட்சி நடத்தினார். திருநாவலூர் திருக்கோயிலுக்கும் வருவார்.
ஊரின் தொடக்கத்திலேயே கோயில் இருக்கிறது. ஓங்கி உயர்ந்த கிழக்கு ராஜ கோபுரம்; ஐந்து நிலைகளுடன், அழகும் பொலிவும் தோன்ற நிற்கிறது. கோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால், விசாலமான வெளிப் பிராகாரம். கோபுரத்துக்கு எதிரில் பலிபீடம், கவசமிட்ட கொடி மரம் மற்றும் நந்தி. பிராகார வலத்தைத் தொடங்குகிறோம்.
கிழக்கில் இருந்து தெற்கு சுற்றுக்கு திரும்புமுன், மேற்கு நோக்கிய சந்நிதி; சுந்தரர், தமது தேவியரான பரவை மற்றும் சங்கிலி நாச்சியார்களுடன், நின்ற கோலத்தில், கைகளில் தாளம் ஏந்தியபடி காட்சி தருகிறார். என்ன இருந்தாலும், இறைவனாரை இசையாக, இசைப் பயனாகக் கண்டவராயிற்றே! எதிரில் யானை வாகனம்; பூலோக வாழ்க்கையை நீத்து, சுந்தரர் கயிலாயம் சென்றபோது, யானை மீது சென்றதாக வரலாறு; எனவே, சுந்தரருக்கு எங்கே சந்நிதி அமைத்தாலும், யானை வாகனமே அமைப்பது வழக்கம். இங்கும் அப்படியே!
வெளிப் பிராகாரத்தின் வடக்குத் திருச்சுற்றில், அம்பாள் சந்நிதி. தனிக்கோயில் என்று சொல்லும் அளவில், கிழக்குப் பார்த்து உள்ளது. வடக்குச் சுற்றிலேயே, தல மரங்களான நாவல் மரங்கள். இந்த ஊருக்கு நாவலூர் எனும் பெயர் ஏற்பட காரணம் இதுவே. நாவல் மரம் நிறைந்த இடம். சுந்தரரும் தன்னை 'நாவல் ஆரூரன்' என்றும் 'நாவலர் கோன்' என்றும் அழைத்துக் கொள்கிறார்.
வடக்குச் சுற்றில் இன்னும் சற்றே வந்தால், அடடா! ஸ்ரீதேவி- பூதேவி உடனாய ஸ்ரீவரதராஜப் பெருமாள் சந்நிதி. உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகளேறிப் போக வேண்டும். முகப்பு மண்டபமும் மகா மண்டபமும் உள்ளன. முகப்பு மண்டபத்தின் தெற்கு வாயிலில் நுழைகிறோம். எதிரில் தெற்குப் பார்த்த ஆஞ்சநேயர். மகா மண்டபத்தில் ஸ்ரீநிவாசர். மூலவரான வரதராஜர், சங்கு- சக்கரங்கள்; அபய- வர ஹஸ்தம் தாங்கியவராக கிழக்கு நோக்கி, ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக நிற்கிறார். பெருமாள், தாயார், ராம-சீதா- லட்சுமண உற்சவ மூர்த்தங்களும் உள்ளன. சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம்.
கருடனுக்கும் கெடில நதிக்கும் நிறைய தொடர்பு உண்டு. சிவபெருமானின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளே, கெடில நதியாக உருவானது என்கிறது பாதிரிப்புலியூர் புராணம். ஆனால், கருடன் உருவாக்கிய நதி- கருட நதியாகி, கெடில நதியாகப் பெயர் மாற்றம் பெற்று விட்டதாக திருநாவலூர் புராணம் கூறும்.
வைகுண்டத்தில் அன்றொரு ஏகாந்த வேளை. சிவனை நெஞ்சில் நினைத்து தியானத்தில் ஆழ்ந்தி ருந்தார் திருமால். யோகாக்னியின் வெப்பம் ஏற ஏற, அதைத் தாங்கமுடியாத ஆதிசேஷன், விஷத்தைக் கக்கினான். காற்றெங்கும் நஞ்சு பரவ, அங்கு வந்த கருடன் மீதும் நச்சுக் காற்று படர... பொன்னொளி கருடன், கன்னங்கரேலென்று ஆனான். தன் கருமையைப் போக்க வழி தேடிய கருடனுக்கு சிவனாரே வழி சொன்னார்.
முன்னொரு காலை, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, ஆலகால நஞ்சு எழுந்ததல்லவா! பரமனாருக்குப் பணிவிடை செய்த ஆலால சுந்தரர் (இவர்தாம், நம் சுந்தரமூர்த்தியாக பூலோகம் வரப் போகிறார்), ஆலகாலத்தை உருண்டையாக உருட்டினார்; அதையே பரமனார் விழுங்கினார். சிவபெருமானுடைய தொண்டை யில் அந்த விஷத்தை நிறுத்தியபோது, அதன் ஒருதுளி, நாவலங்காட்டின் மரத்தில் நாவல் பழமாகக் கனிந்துவிட்டது. 'அந்தப் பழம் எப்போது மிகக் கனிந்து, சாம்பூநத வாவியில் விழுகிறதோ, அப்போது, அதன் நச்சுத்தன்மை நீங்கும். அது மட்டுமா? அந்த தீர்த்தத்தில் நீராடினால், கருடனுடைய உடல் மீண்டும் பொன்னென ஒளிரும்' என்று மொழிந்தார் ஈசனார்.
அதன்படி, சாம்பூநத தீர்த்தத்தில் கருடன் நீராட, அவனுடைய மேனி வெண்ணிறம் பெற்றது. கருமை போனதால் காலாந்தகன் எனப்பட்டான். பிறகு கோயிலைப் புதுப்பித்தான்; விழா எடுத்தான்; ரதோற்ஸவம் கண்டான்; பூமியில் அம்பு செலுத்தி தீர்த்தம் உண்டாக்கினான்; அவ்வாறு உருவான கருட தீர்த்தமே, கருட நதியாகப் பாய்ந்து, பின்னர் பேச்சுவழக்கில் கெடிலமாகிவிட்டதாகச் சொல்லப் படுகிறது. பெருமாள் சந்நிதிக்கு முன்னே உள்ள சிற்பத்தில், இந்தக் கதையின் வடிவங்களைக் காணலாம். வெளிப் பிராகார வலத்தை நிறைவு செய்து, கொடி மரத்தடியில் வந்து பணிகிறோம். உள்ளே செல்வோமா?

லால சுந்தரர் அவதரித்த திருநாவலூர் தல ஆலயத்தின் வெளிப்பிராகார வலத்தை நிறைவுசெய்து, கொடிமரத்து அடியில் வந்து பணிந்து வணங்கி உள்ளே செல்கிறோம்.
உள்வாயிற் பகுதியில், ஒரு பக்கம் விநாயகர்; மறு பக்கம் சிம்மத் தூண்களுடன் கூடிய மண்டபம். பின்புறம், அம்பாள் சந்நிதிக்குச் செல்வதற்கான சிறிய பாதை. இதைக் கடந்ததும் உள் பிராகாரம்.
கிழக்குச் சுற்றில்- நரசிங்க லிங்கம்; நரசிங்க முனையரையர் ஸ்தாபித்து வழிபட்டது. தெற்குச் சுற்றில்- பொள்ளாப் பிள்ளையார், சேக்கிழார், சைவ நால்வர்,
அறுபத்து மூவரும், தொகையடியார்களும். தொடர்ந்து சப்தமாதர்கள். தென்மேற்கு மூலையில்- வலம்புரி விநாயகர். அடுத்து சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர், பன்னிரு கரங்களுடன் மயிலேறுநாதராக அருள்கிறார். தொடர்ந்து நகர... இங்கொரு சிறப்பு. பிற கோயில்களில், கருவறை வெளிச் சுவரின் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரையும், வடக்குச் சுற்றின் தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரரையும் தரிசிப்போம். இங்கே மேற்குச் சுற்றுத் திருமாளிகையில் முருகனுக்கு அருகில், விஷ்ணு சேவை சாதிக்கிறார். அடுத்து, கிருத யுக லிங்கம்; அதற்கும் அடுத்து, சண்டிகேஸ்வரர். தொடர்ந்து திரேதா யுக லிங்கம்; பிரம்மா; துவாபர யுக லிங்கம்; கலியுக லிங்கம்.
இந்தத் தலம் ஒவ்வொரு யுகத்தில் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பது, இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. கலி யுகத்தில் நாவல் வனமான இந்தப் பகுதி, திரேதா யுகத்தில் வன்னி வனமாக இருந்ததாகத் தலபுராணம் சொல்கிறது. வன்னி மரத்தடியில் ஒரு சிவலிங்கம். அதற்கு தினந்தோறும் பாலைப் பொழிந்து பாலபிஷேகம் செய்தது ஒரு பசு. ஒருநாள், காட்டுப் புலியிடம் பசு சிக்கிக் கொள்ள, அதன் அபயக் குரலுக்கு ஓடோடி வந்து, வேடனாகிப் புலியைக் கொன்றார் பரமனார். பசுவுக்கு பதியானதால், பசுபதியும் ஆனார். கலி யுகத்தில், கயிலைநாதரிடம் சாபம் பெற்ற ஆலாலசுந்தரர் இங்கே அவதரித்தார்!
வடமேற்கு மூலையில் தனிச் சந்நிதி யில் கஜலட்சுமி. வடக்குச் சுற்றில் சப்தரிஷிகள் பிரதிஷ்டை செய்த சப்த லிங்கங்கள்; வெவ்வேறு அளவுகளில் பாணங்கள் மட்டும் உள்ளன. தொடர்ந்து வந்தால், நடராஜர் சந்நிதி. கிழக்குச் சுற்றில் திரும்பினால், நவக்கிரகங்கள்; சாதாரணமாக, கிழக்கு நோக்கியவரான சூரியன், இங்கே உள்ளிருக்கும் ஸ்வாமியைப் பார்த்து, அதாவது மேற்கு முகமாகத் திரும்பியுள்ளார். அடுத்ததாக, அழகான ருத்திராட்ச விதானத்தின் கீழ் ஸ்ரீபார்கவலிங்கம்; சுக்கிரன் வழிபட்ட சிவலிங்கம் (பிருகு முனிவரின் மகன் என்பதால் பார்கவன் என்ற பெயரும் சுக்கிரனுக்கு உண்டு).அடுத்து, இரண்டு சந்நிதிகளில் பைரவர் திருவுருவங்கள். அதனையும் அடுத்து, சூரியன். சுக்கிரனும் சூரியனும் இந்தத் தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி உய்வு பெற்றனர். இப்போதும்... பங்குனி 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, சூரியக் கதிர்கள் கருவறைக்குள் ஸ்வாமி மீது விழுந்து வழிபடு கின்றன. சுக்கிர வக்ரதோஷ நிவர்த்திக்கான பிரார்த்தனை தலம் இது.
உள் பிராகார வலத்தை நிறைவு செய்து ஸ்வாமி சந்நிதிக்குள் செல்கிறோம்.
முகப்பில், பக்கவாட்டு வழிகளுடன் கூடிய திறந்த மண்டபம்; அழகிய சிம்மத் தூண்கள். சிறிய நந்தியும் பலிபீடமும் உள்ளன. அடுத்து மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய ஸ்வாமி சந்நிதி. அர்த்த மண்டபத்தில், உற்ஸவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேவியருடன் சுந்தரர், நரசிங்க முனையரையர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், உமையம்மை... அனைத்துமே அழகான திருவடிவங்கள்.
கருவறையில், ஸ்ரீபக்தஜனேஸ்வரர்; வட்ட வடிவ ஆவுடையார். கிழக்கு நோக்கிய லிங்கத்தின் பாணம் சற்றே உயரமானது. நாவலேசர், தொண்டர் நாயகர், மனோன்மணி நாயகர், விஷ்ணுபூஜிதர், சாம்புபுரேசர், சண்டேச அனுக்கிரஹர், கருடானுகிரஹர், விஷபாத விமோசனர், கபர்தீசர், ஞானாச்சார்யர் முதலான திருநாமங்கள் கல்வெட்டுகளிலும் வழக்கிலும் காணப்படுகின்றன.
தென்னிந்தியப் பகுதிகள், நாவலங்காடுகளாக இருந்தன என்பது வரலாற்றுத் தகவல். சொல்லப்போனால், இந்தியாவுக்கே நாவலந்தீவு எனும் பெயர் உண்டு. திருநாவலூர் பகுதிகளும் நாவலங்காடுகளாக இருந்திருக்க வேண்டும். நாவல் பழம்- வடமொழியில் ஜம்பூ பலம் எனப்படும். நாவலங்காட்டுப் பகுதியில் எழுந்தருளியதால் நாவலேசர், ஜம்பூ புரேசர் போன்ற திருநாமங்களைக் கொண்டிருந்தாலும், இந்த
ஸ்வாமி 'பக்த ஜனேஸ்வரர்' ஆவார். இவர், இங்கே எழுந்தருளியது எவ்வாறு?
கயிலாயத்தில் பரமேஸ்வரனுடன் அளவளாவிக் கொண்டிருந்த உமையம்மைக்கு விநோதமான ஆசை எழுந்தது. பூவுலகில் வந்து தியானம் செய்து பரமனை அடைய வேண்டும். அதற்கான தக்க இடத்தைக் காட்டுமாறு பரமனையே வேண்டினார்.
ஜோதிப் பிழம்பாக பரமனார் நின்ற திருவண்ணாமலைக்கும், ஆனந்தத் தாண்டவம் ஆடியருளும் சிதம்பரத்துக்கும் இடைப்பட்டதாக திருநா வலூரைக் காட்டினார் ஐயன். விநாயகரையும் முருகனையும் அழைத்துக் கொண்டு, சேடிப் பெண்கள் புடைசூழ நாவலூர் அடைந்த பெருமாட்டி, தீர்த்தம் ஒன்றை உருவாக்கும்படி சூலினி சக்தியை பணித்தார். சூலினிதேவி, சூலத்தை நிலத்தில் அமிழ்த்த, பாதாள கங்கை பீறிட்டு வெளிக் கிளம்பியது. அதுவே ஜம்பூநத தீர்த்தமானது. தீர்த்த நீரையும் விநாயகர் கொணர்ந்த மலர்களையும் கொண்டு, சிவராத்திரி இரவின் முதலிரண்டு ஜாமங்களில் பூஜை நடத்தினார்.
பின்னர், வேலாயுதத்தால் முருகன் உருவாக்கிய சக்தி தீர்த்தத்தின் நீர்கொண்டு அடுத்த இரண்டு ஜாமங்களின் பூஜையை நடத்தினார். நிறைவில் பரமனார், தமது அருள் நடனக் காட்சியையும் நல்கினார். தியான மார்க்கத்தைக் கைக்கொண்டு, மனத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி, இறைவனை அடைவதற்கான முறையை அம்பிகை இங்கே கைக்கொண்டதால், அம்பிகைக்கே 'மனோன்மணி' என்பது திருநாமம். மனத்தின் சக்தியைத் தட்டியெழுப்பி, இறைவனை அடைகிற வழியை, ஆன்மாக்களும் தேடவேண்டும் என்று பிரார்த்தித்த பிராட்டியார், 'பக்தர்களுக்கு அருள் வழங்கும் 'பக்த ஜனேஸ்வரர்' எனும் திருநாமத்துடன் பரமனார் இங்கே காட்சி தர வேண்டும்' என்றும் கோரிக்கை வைக்க, அதன்படியே ஐயனும் இங்கே நிலைபெற்றார். அம்பிகையே சிவராத்திரி நாளில் இங்கு வழிபாடு நடத்தியதால், அதே நாளில் நாமும் வழிபாடு நடத்துவது, எல்லையில்லாத பலன்களைத் தரும்.
கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்யமேவலர் முப்புரம் தீயெழுவித்தவன் ஓர் அம்பினால்ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து அனை ஆளுங்கொண்டநாவலனார்க்கு இடமாவது நம் திருநாவலூரே
என்று சுந்தரர் போற்றிய பக்தஜனேஸ்வரரை வணங்கி, மீண்டும் உள் பிராகார வலம் வருகிறோம். சோழர் கட்டுமானத்தின் சிறப்பு, தூக்கலாகவே தெரிகிற கருவறை. கருவறையின் பிற்பகுதியில் அகழி அமைப்பு. தட்சிணாமூர்த்தியும் துர்கையும் மட்டுமே கோஷ்ட மூர்த்தங்கள். தெற்குக் கோஷ்டத்தில்- ரிஷபத்தின் மீது சாய்ந்து, ஒரு கையை அதன்மீது ஊன்றிக் கொண்டு, ஜடாமுடிதாரியாக தரிசனம் தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. இவரின் மற்றொரு கையில் சுவடியும் உண்டு. வழக்கமாக... கல்லால மரத்தடியில் சனகாதியருக்கு உபதேசித்து அருள்புரியும் தட்சிணாமூர்த்தியையும் இதே சந்நிதியின் மேல் விமானத்தில் தரிசிக்கலாம். வடக்கு கோஷ்டத்தில் விஷ்ணு துர்கை. வடக்குச் சுற்றில், தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். இந்தத் தலத்தில் சண்டேஸ்வரருக்கு கூடுதல் சிறப்பு!
திருவெண்ணெய்நல்லூரில் வாழ்ந்த அரசர்குலப் பெருமகன்- பசுபதி குணபாணி. தன்னிடமிருந்த பசுக்களை பராமரிக்கும் பொறுப்பை, அவர் பலரிடம் கொடுத்திருந்தார். அவ்வாறு பேணும் போது கிடைக்கும் 'மொத்த பாலின் கால் பகுதி அரசர்க்கு, கால் பகுதி ஆலயத்துக்கு, கால் பகுதி ஊர் மக்களுக்கு, கால் பகுதி பராமரிப்பவர்களின் சொந்த உபயோகத்துக்கு' என்றும் வரைமுறை வைத்திருந்தார்.
திருநாவலூர் பகுதியின் மாடுகளைப் பேணும் பொறுப்பு, கல்யாண சிவாச்சார்யருக்கும் அவருடைய மகன் சிவப்பிரியனுக்கும் இருந்தது. ஆலயத்தின் பங்கான பாலைக் கொண்டு போய் பக்தஜனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் பொறுப்பு, சிவப்பிரியனுக்கு உரியது.
கால் பகுதி பாலில் அபிஷேகம் செய்வது, சிவப்பிரியனுக்கு திருப்தி தரவில்லை. யாருக்கும் தெரியாமல் மற்ற பகுதிகளிலிருந்தும் பால் எடுத்துக் கொண்டு ஆலயத்துக்குச் சென்று விடுவான். இதை கண்டுபிடித்து விட்ட கல்யாண சிவாச்சார்யர், ஒருநாள்... அவனறியாமல் ஆலயம் வந்தார்; அவனைத் தடுத்தார். சிவப்பிரியனுக்கு தந்தையார் கண்ணுக்குப் புலப்படவில்லை; சிவபூஜையைக் கெடுக்க வந்த துரோகியாகவே அவர் தெரிய, வாளெடுத்து அவரை வெட்ட முற்பட்டான். அப்போது சிவனார் தோன்றி சிவப்பிரியனைத் தடுத்தார்; சிவபூஜைகளைப் பாதுகாக்கும் உரிமையையும் சிவபூஜையைத் தடுப்பவர்களை தண்டிக்கும் உரிமையையும் அவனுக்கு வழங்கினார்; சண்டேச பதமும் தந்தார்; கல்யாண சிவாச்சார்யருக்கு நற்பேறு அளித்தார்.
சண்டிகேஸ்வரருக்கு அந்தப் பதவியை அளித்த இந்தத் தலம், சண்டேசபுரி என்றும், பசுக்களுக்கு நீர் தருவதற்காக சிவப்பிரியனால் உருவாக்கப்பட்ட ஓடை, கோமுக தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன. மூலவர் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் இந்த வரலாறு, சிற்பங்க ளாக வடிக்கப்பட்டுள்ளன.
திருநாவலூர் தலபுராணம் தரும் இந்த சண்டேச வரலாறு வேறுபட்டது. சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்திலும், பிற நூல்களிலும் காணப்படும் சண்டேஸ்வரர் கதை வேறு.
சேய்ஞலூரில் வாழ்ந்த சிறுவன் விசாரசர்மன். பசுக்களைப் பராமரிப்பதில் அக்கறை கொண்ட இவன், மிகுந்த பாலெடுத்து மேய்ச்சல் காட்டிலேயே மண் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வந்தான். அதை அவனுடைய தந்தை தடுக்க, அவருடைய கால்களை வெட்டினான் விசாரசர்மன். அவர் இறந்துபோக, விசாரசர்மனைத் தம் மகன் போன்று ஏற்றுக் கொண்ட பரமனார், சண்டேச பதமும் கொடுத்தார் என்பது பரவலாகத் தெரிந்த வரலாறு. இருந்தாலும், இந்தப் பகுதி மக்கள், சண்டேச பதம் பெற்ற சிவப்பிரியன் மீது நிறைந்த பிரியம் வைத்திருக்கிறார்கள்!
சரி... இனி, அம்பாளை தரிசிக்கச் செல்வோம்!
வடக்கு வெளிச்சுற்றில் இருக்கிற அம்பாள் சந்நிதி, கிழக்கு நோக்கியது; தனிக் கோயில். எதிரில் நந்தி. மகாமண்டபத்தில், ஒருபுறம் விநாயகர்; மறுபுறம் துர்கை. கருவறையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள் மனோன்மணி அம்பிகை. இரண்டு கரங்களில் பாசம் மற்றும் அங்குசம்; மீதமிரு கரங்களில் அபயம் மற்றும் வரம் முத்திரைகள். நாவலாம்பிகை, சுந்தராம்பிகை ஆகிய திருநாமங்களும் இவளுக்கு உண்டு. ஒவ்வொரு ஆன்மாவின் உள்மனதிலும் உறைகிற சக்தியே மனோன்மணி என்று பெயர் பெறும். வெளியில் தெரிகிற ஆற்றல்கள் யாவும் மனோன்மணியைத் தட்டி எழுப்பி, அவள் மூலமாக உள்ளத்தில் வசிக்கும் பரம்பொருளை அடைய வேண்டும்.
7-ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் இந்தத் தலத்தைப் பாடியுள்ளார் (தனிப்பதிகமாக இல்லாமல், குறுந்தொகையில் குறிப்பு வருகிறது). சுந்தரர் காலத்தில் (7-ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியும் 8-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியும்), இது சிறப்பான தலம். இவ்வாறு பல்லவர் காலத்தில் சிறந்தோங்கிய இந்தத் தலம், சோழர்களின் அன்புக்கும் பாத்திரமானது. முதலாம் பராந்தக மன்னனின் மகனான இளவரசன் ராஜாதித்தன், திருக்கோவலூர் பகுதிகளில் பாசறை அமைத்துத் தங்கியிருந்த காலத்தில், இந்தக் கோயிலைப் புதுப்பித்து, திருப்பணி செய்ததாகத் தெரிகிறது.
சோழர்களின் ஆட்சியில், நடு நாட்டுப் பகுதிகள், தொண்டை மண்டலத்தின் பகுதிகளாகவே பார்க்கப்பட்டன. எனவே, அதுவரைக்கும், இந்தக் கோயில் 'தொண்டீஸ்வரம்' என்றே வழங்கப்பட்டது. ராஜாதித்தன், இந்தக் கோயிலை முழுமையான கற்கோயிலாகக் கட்டுவித்த பின்னர், பழைய பெயரும் புதுப் பெயருமாக, 'தொண்டீஸ்வரமான ராஜாதித்த ஈஸ்வரம்' எனும் பெயர் ஏற்பட்டது.
ராஜாதித்தனை தக்கோலப் போரில் வெற்றிகொண்ட கன்னரதேவன் கிருஷ்ணனும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளான். தொடர்ந்து சோழ அரசிமார்களும், சோழ - ராஷ்டிரகூட பரிவாரங்களைச் சேர்ந்தவர்களும் போற்றிப் பராமரித்த இந்தத் தலத்துக்கு, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்கன் என்று பின்னர் வந்த சக்கரவர்த்திகளும் பற்பல தொண்டுகளைப் புரிந்துள்ளனர். விஜயநகர காலத்திலும் இந்தத் தலம் புகழுடன் விளங்கியது. 15-ஆம் நூற்றாண்டில், அருணகிரிநாதர் இங்கே வந்து தங்கியதாகத் தெரிகிறது.
கோயிலுக்குத் தெற்கேயுள்ள கெடில நதி, மேற்கேயுள்ள கோமுக தீர்த்தம் மற்றும் சண்டேச தீர்த்தம், வடக்கேயுள்ள நாவல் புத்தேரி ஆகியவை ஆலயத்தின் புனிதத்தை மேலும் வளப்படுத்துகின்றன. கோயிலுக்கு அருகில், சுந்தரர் மடாலயம் உள்ளது. கைகளில் செண்டு ஏந்தியவராக, நின்றகோல சுந்தரர் காட்சி தருகிறார். சுந்தரர் அவதரித்த இடம் இது என்பது அனைவரின் நம்பிக்கை.
சுக்கிர தோஷ நிவர்த்திக்காக வெள்ளிக் கிழமை வழிபாடுகள், விசேஷமான தட்சிணாமூர்த்திக்கு வியாழக் கிழமை சிறப்புகள், மனத்தைத் தட்டியெழுப்பும் மனோன்மணித் தாய்க்கு செவ்வாய் வழிபாடு, பாற்கடல் ஆலகாலத்தையே குளிரச் செய்த ஆலாலசுந்தரரின் அவதாரத் தலம் என்பதால் விஷ நிவர்த்தி மற்றும் பிரதோஷ பூஜைகள், விஷ்ணுநாதேஸ்வரரான சிவன் என்பதால் புதன்கிழமைகளில் புனித வணக்கம் என்று ஏறத்தாழ எல்லா நாட்களுமே நாவலூராருக்கு நல்ல நாட்களாகும். ஆவணி உத்திரத்தன்று சுந்தரர் அவதாரத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் பெறுகிறது!
சுந்தரரும், அவர்தம் தேவிமாரும் நம்முடைய நெஞ்சகத்தில் நின்று சிரிக்க, நரசிங்க முனையரையர் கண்மூடி தியானித்திருக்க, ராஜாதித்தனும் அவருடைய திருத்தாயார் கோக்கிழானடிகளும் பிராகாரப் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்க, சுந்தரரின் தாயார் இசைஞானியார் இன்னிசை கூட்டி தேவாரம் பாட, மனோன்மணி அம்மை சிவனிடம் ஏதோ சொல்கிறார். மெள்ள எழுந்த சிவனார், திருமாலைச் சந்திக்க சக்கர தீர்த்தக் கரைக்குச் செல்கிறார்.
அதோ! வேக வேகமாக அருணகிரியார் வந்து கொண்டிருக்கிறார். விநாயகரின் தும்பிக்கை நம்மை வருடிக் கொடுக்கிறது.. வாருங்கள், நாவலூர் புனிதத்தில் திளைத்தபடியே விடைபெறுவோம்.

No comments:

Post a Comment