ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால், உடல் நோய் நீங்கி, இறைவனது திருவடி கிட்டும்; திங்கள் வலம் வந்தால், எல்லையற்ற ஆற்றலும் சக்தியும் கிடைக்கும்; செவ்வாய் எனில் வறுமை அகலும்; புதனன்று வலம் வந்தால் கல்வியில் பெரியர் ஆகலாம்; வியாழன் வலம், ஞானம் தரும்; வெள்ளி வலமோ, விஷ்ணு பதம் கொடுக்கும்; சனிக்கிழமை சுற்றி வந்தால், நவக்கிரகக் கேடுகள் நீங்கும். இவையெல்லாம் என்ன?
மலைக்கு மலையாய், மலையே சிவனாய், சிவனே மலையாய், மண்ணும் விண்ணும் தொட்ட மலையே அக்னியின் ஆனந்த வடிவாய் நிற்கும் திருவண்ணாமலை கிரிவலத்தின் பலன்கள் இவை!
திருவண்ணாமலை...
தேவாரம் போற்றும் திருவண்ணாமலையை அடைகிறோம். ஊரை நெருங்கும்போதே, விண் தொட்டுத் தெரிகிறது அண்ணாமலையாம் அருணா சலம்! அருணகிரி, அருணாசலம், சோணாசலம், சோணகிரி, முக்திகிரி, தென்சிவகிரி, சிவலோககிரி, சோணாத்ரி, அருணாத்ரி என்றெல்லாம் அழைக்கப்படுகிற அழகான மலை. ஆமைப் பாறை, மயிலாடும் பாறை, வழுக்குப் பாறை முதலான பாறைகளோடும், அல்லிச் சுனை, அரளிச் சுனை, ஆலமரத்துச் சுனை, அத்திமரச் சுனை, முதலான நீர்ச்சுனைகளோடும், பற்பல கோயில்களோடும் இயற்கை எழில் விளையாட, ஓங்கி நிற்கும் அண்ணாமலை.
புவியியல் கணக்குப்படி சுமார் 800 மீட்டர் (2668 அடி) உயரமுள்ள அண்ணாமலை, தனியானதொரு தோற்றத்துக்குள் அடங்குவது இல்லை.
மலையின்மீது ஆங்காங்கே மடிப்புகள்; ஒரே மலையில் நிறைய சிகரங்கள். எனவே, ஒவ்வொரு திசையிலிருந்தும் இடத்திலிருந்தும் பார்த்தால், ஒவ்வொருவிதமாகத் தோற்றம் தரும் இந்த மலை, இறைவனும் ஒவ்வொருவர் பார்வைக்கு ஒவ்வொரு விதமாகவும், ஏகன் அநேகனாகவும் தோற்றம் தருபவர்தாம் எனும் தத்துவத்தை விளங்க வைக்கிறது.
அண்ணாமலை உருவான வரலாறு நமக்கெல்லாம் தெரிந்ததுதான்! பிரம்மாவும் திருமாலும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நின்றனர்; போட்டியின் காரணம்... 'நீ பெரியவனா? நான் பெரியவனா?' போட்டி தொடர்ந்து கொண்டே போக, இருவருக்கும் இடையில், திடீரென்று பெரிய நெருப்புப் பிழம்பு. இப்போது போட்டி திசை மாறியது. இது, எங்கே தொடங்குகிறது... எங்கே முடிகிறது என்று யார் கண்டுபிடிக்கிறாரோ அவரே பெரியவர். இருவரும் தேடத் தொடங்கினர்; ஒருவர் அன்னம் வடிவெடுத்தார் (பிரம்மா); ஜோதி வடிவின் தலை எங்கே என்று தேடிப் போனார்; மற்றவர் வராகமாக வடிவெடுத்து, நெருப்பின் அடி தேடிச் சென்றார். காலங்கள் ஓடின; யுகங்கள் நீண்டன; தேடினர் தேடினர் தேடிக் கொண்டே இருந்தனர்... கண்டுபிடிக்கவே முடியவில்லை. திருவடியைத் தேடியவர் திரும்பி னார்; முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார்; திருமுடி தேடியவர் வெறுமே திரும்பவில்லை; வழியில் ஒரு சபலம்; வகையாகச் சிக்கியது வந்து கொண்டிருந்த தாழம்பூ ஒன்று; அதனுடன் ஒப்பந்தம் போட்டார்; தான் வந்து திருமுடியைப் பார்த்ததாகவும், அங்கிருந்து இருவரும் ஒன்றாகத்தான் புறப்பட்டதாகவும், எனவே தானே பெரியவன் என்பதற்கு சாட்சி கிடைத்ததாகவும் ஒப்பந்தம் கிளை பரந்தது.
சிவபூஜைக்கு ஆகாதது என்று ஒதுக்கப்பட்டு விட்டது;
அண்ணுதல் என்றால் அணுகுதல் என்று பொருள்; தேடியவர் அணுக முடியாத மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர். ஆனாலும் வேடிக்கை! ஆணவத்தால் தேடியபோது அடியோ முடியோ கிட்டவில்லை; ஆயின், அன்புடன் பக்தர்கள் தேடினால், அடியையும் முடியையும் காணலாம் என்று அத்தாட்சியாக நிற்கிறது மலை.
அருணம், சோணம் என்ற சொற்கள் செம்மை நிறத்தைக் குறிப்பவை; சிவந்த மலை என்பதால் சோணாசலம், அருணாசலம்!
அது சரி... மலையை வழிபடலாம்; ஆனால் அபிஷேகம் ஆராதனை செய்வதென்றால்... மலைக்கு எப்படிச் செய்வது? பார்த்தார் பரமனார்! பக்தர்களுக்காகத்தானே அவர் வடிவம் எடுக்கிறார்! சிறிய மனங்களுக்குப் புரிவதற்காக சிறிய வடிவில் மலையடிவாரத்தில் கோயில் கொண்டுவிட்டார்.
உலக வாழ்க்கை முறையில், திருவண்ணாமலைக்கு முக்கியமான இடம் உண்டு. காரணம்?
பஞ்ச பூதங்களில், ஆகாயமும் காற்றும் சாதாரண மனிதக் கண்களுக்குப் புலப்படாதவை. அந்த வகையில் கண்களுக்குப் புலனாகும் முதல் நிலை, அக்னியான நெருப்புக்கு மட்டுமே உண்டு. அருவமாக, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த ஆண்டவன், சராசரி மனிதக் கண்களுக்குப் புலனாவதற்காக எடுத்த முதல் நிலை, அக்னி நிலை. அதுவே திருவண்ணாமலை என்பதால் இந்த முக்கியத்துவம்!
அக்னியாக இருந்தால் கண்ணுக்குப் புலப்படும்; ஆனாலும், அருகில் நெருங்க முடியுமா? தகித்துப் போய்விட மாட்டோமா? ஆதலால், ஆண்டவன் குளிர்ந்தார்; குவலயம் காக்கத் தாமே கல்லாகிப் போனார்.
திருவண்ணாமலை உருவான கதைக்குப் பின்னால், பற்பல தாத்பரியங்கள் உண்டு. வாருங்களேன், மலை வலம் வந்துகொண்டே அவற்றையும்தாம் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண் டாட்டம்' என்பார்கள் இல்லையா? அது வேறெதை யும் எண்ணி வந்த பழமொழியன்று. மேற்கூறிய சம்பவத்தின் எதிரொலி. எப்படி என்கிறீர்களா?
ஓர் ஊர் என்றால், பொத்தாம் பொதுவாக, இரண்டு சாராரைச் சொல்லலாம். பணத்தால், செல்வத்தால் உயர்ந்தவர்கள்; கல்வியால், படிப்பால் உயர்ந்தவர்கள். தொழில்நுட்பக் காலமான இன்றும் இது உண்மை. அதைவிட உண்மை, வழக்கமாகப் போட்டி வருவது இந்த இரண்டுக்கும் இடையில்தான். தான் பெற்ற இரண்டில் ஒன்றை வைத்துச் சாதிக்கலாம் என்ற எண்ணம் மனித உள்ளத்துக்கு உண்டு. அது எது என்பதில்தான் போட்டி. செல்வமான திருமாலும் அறிவான பிரம்மாவும் போட்டி போட்டார்கள். இடையில், எப்போதும் ஆடுகிற ஆட்டக்காரரான கூத்தாடி (அம்பலவாணர்) கொண்டாட்டமாக எழுந்தார்.
செல்வம் தன்னால் முடியவில்லையென்றால், ஒரு நிலையில் அடங்கி அமர்ந்துவிடும். திருமால், முடியவில்லை என்று ஒப்புக் கொண்டு பேசாமல் விட்டார். அறிவு, ஒப்புக்கொள்ளாது; எப்படியாவது தான்தான் என்று நிரூபிக்க முயலும்; சாட்சியாவது தேடும்; தான் மெய்யாகவே சரி என்பதைவிட, மற்றவர் பார்வையில் சரி என்பதுதான் அறிவின் நிரூபணம்; பிரம்மா அதையேதானே செய்தார்!
ஆணவத்தால் தேடினால் கிடைக்காத ஆண்டவன், அன்பால் தேடினால் கிடைப்பார் என்பதால்தான், அடிமுடி கதை நடந்த அதே இடத்தில், பிற்காலத்தில் பற்பல ஞானியர் வந்து ஆண்டவனின் அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.
மலையைச் சுற்றி வருகிறோம். கிழக்குப் பகுதியி லிருந்து பார்த்தால், மலை ஒற்றையாகத் தெரியும். ஏக லிங்கமாக, ஒன்றே கடவுள் என்பதை உணர்த்தும். சற்று தூரம் சென்ற பின்பு பார்த்தால், இரண்டாகத் தெரியும். ஆணாகவும் பெண்ணாகவும் உலகை இயங்க வைக்கும் அர்த்தநாரீஸ்வரர். மேற்கு திசையிலிருந்து நோக்கினால், மூன்று சிகரங்களைக் காணலாம். மும்மூர்த்திகளின் திருவிளையாட்டுதானே திருவண்ணாமலை! மூன்றாகப் பிரிந்து உலகை நடத்தும் மும்மூர்த்திகளுக்கிடையே போட்டியாவது பொறாமையாவது?! நமக்குப் புரியவைக்க அவர்கள் அப்படியரு ஆட்டம் ஆடினால்தானே உண்டு. இன்னும் இன்னும் நடந்து மலையைத் திரும்பிப் பார்த்தால், இப்போது ஐந்து கூம்புகள்... ஆமாம், இறைவனாரின் பஞ்சமுக தத்துவம்... பஞ்ச பூதப் பெருமை.
ஒன்றா இரண்டா? திருவண்ணாமலையின் பெருமைகள் ஏராளம்; ஏராளம்!
காட்சிக்கு இனிய மலை, கண்டார் துயர் தீர்க்கு மலை, முந்தைப் பழவினைகள் முடிவுறச் செய்யும் மலை, எத்திசையும் தோற்று மலை, முக்திக்கு ஒரு மலை, நெஞ்சை இளக்கும் மலை, நெஞ்சத்துள் பேரின்பம் வளர்க்கும் மலை, தாயாய் சற்குருவாய் நின்ற மலை என்றெல்லாம் குரு நமசிவாயர் இந்த மலையைப் போற்றுகிறார்.
இந்தத் தலமே இறைமையின் முழுமையான வெளிப்பாடு என்பதால், இங்கிருக்கும் ஒவ்வொரு கல்லும் புனிதமானது; மண் துகளும் மகிமை மிக்கது. புவியியல் முறையிலான பாறை வகைகளில், திருவண்ணாமலையில் கிடைக்கும் பாறைகள், நெருப்புப் பாறைகள் என்பதும், வயது கணிப்பின் படி மிக மிகப் பழைமையானவை என்பதும் கூர்ந்து நோக்கத்தக்கத் தகவல்களாகும். அண்ணாமலை மலையும் சரி, லிங்கமும் சரி, 250 கோடி ஆண்டுகள் பழைமையானவை என்று கணிக்கப்பட்டுள்ளன (அடேயப்பா! இமயத்தின் தொன்மை எவ்வளவு தெரியுமா? 5 கோடி ஆண்டுகள். அப்படியானால், திருவண்ணாமலை, முன்னைப் பழைமைக்கும் பழைமையானது!).
மலையை வலம் வந்த பின்னர், அண்ணாமலையான் அடிக்கமலம் பணிய, திருக்கோயில் தலைவாயிலை அடைகிறோம். பெரிய கோயில்; ஒன்பது கோபுரங்கள்; ஏழு பிராகாரங்கள்.
கிழக்கு ராஜகோபுர வாயிலை அடைகிறோம். கோயிலுக்கு முன்பாக நீண்ட மண்டபம். கடைகள், ஆங்காங்கே அமர்ந்தவர்கள் என்று பழைய களையோடு இருக்கிறது. இந்த மண்டபம் பற்றிய தகவல் சுவாரஸ்யமானது. கிழக்கு கோபுரத்துக்கு நேர் கிழக்கில், சுமார் 200 அடிதொலைவில் இருக்கும் இந்தப் பதினாறு கால் மண்டபம், விஜயநகரப்பேரரசால் நிறுவப்பட்டது. இந்த மண்டபத்தில் தான், கார்த்திகை தீபத் திருவிழா காலத்தில், அருள்மிகு உண்ணாமுலை அம்மையுடன் அருள்மிகு அண்ணாமலையார் வீதியுலா புறப்படுவார்.
திருவண்ணாமலை என்பது அழல் காட்சி தந்த தலமில்லையா? அதற்காக ஒரு நிகழ்வும் சமீப காலங்களில் நடந்தது. 1996ஆம் ஆண்டு, ஜூலை 11ஆம் நாள், இந்த மண்டபம் தீக்கிரையானது. தீக்கிரையானது என்பதைவிட... அன்றொரு காலம், அடி முடி காணமுடியாத அருட்பெரும் ஜோதியாக நின்ற ஆண்டவன், பின்னும் ஒருமுறை அந்த அழல்தாண்டவத்தை, சிறிய அளவில் நடத்தினார் போலும்! பின்னர், இந்த மண்டபம் சீரமைக்கப்பட்டுவிட்டது.
ராஜகோபுரம் பதினோரு நிலைகளைக் கொண்டது. அண்ணாந்து பார்த்துப் பணியும் போது, அடிமுடி தேடிய கதை, நம்மையறியாமல் நெஞ்சில் நிழலாடுகிறது. உயரமாக இருந்தாலும் (217 அடி), தாயின் வாத்சல்யத்துடன் வாவென்று அணைத்துக் கொள்கிறது. அடிமேல் அடிவைத்து, கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், எதிரில், சற்றே தெற்காக (அதாவது நமக்கு இடது பக்கமாக) கம்பத்து இளையனார் சந்நிதி. அதென்ன கம்பத்து இளையனார்?
அண்ணாமலையார் அக்கினிப் பிழம்பு; அதே போன்று மகனான முருகனும் அக்கினிப் பிழம்பு. அவர் தந்தையார்... ஆகவே மூத்தவர்; இவர் மகனார்... ஆதலால், இளையனார். முருகப் பெருமான் சந்நிதிதான் கம்பத்து இளையனார் சந்நிதி என்பது!
அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் அருள் வழங்கிய திருத்தலம் திருவண்ணாமலை. அருணகிரியார் வாழ்க்கையின் சம்பவங்கள் பல, இங்கே நடைபெற்றுள்ளன. அப்படியன்றுதான், கம்பத்து இளையனார் சந்நிதி தோன்றுவதற்கான காரணம்.
சம்பந்தாண்டான் எனும் பெயர் கொண்ட ஒருவர், அப்போது திருவண்ணாமலையில் வாழ்ந்தார். அரசவையின் ஆஸ்தான புலவராகவும் விளங்கிய இவர், பொறாமை கொண்டவர்; அருணகிரியாரை எப்படியேனும் மட்டம் தட்டவேண்டும் என்று திட்டம் போட்டார். அரசராக இருந்த பிரபுட தேவ மகாராஜாவிடம் இல்லாததும் பொல்லாததும் சொன்னார்; அருணகிரியாரை முடியுமானால் முருகனை வரவழைக்கச் சொல்லுங்கள் என்று தூண்டி விட்டார்.
அருணகிரிநாதர் மயிலை வேண்டிப் பாடி னார்; மயில் முருகனை வேண்ட, ஆடும் மயில் மீது ஆடிக்கொண்டே ஆறுமுகனும் காட்சி கொடுத்தார். அதுவும் கம்பத்தில் வந்து காட்சி கொடுத்தார். அந்தக் கம்பமே கருவறையாக அமைந்த சந்நிதியே, கம்பத்தில் இளையனார் தோன்றிய கம்பத்து இளையனார் சந்நிதி.
அதல சேடனார் ஆட அகில மேரு மீதாட அபினகாளி தானாட அவளோடு அன்(று) அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட அருகு பூத வேதாளம் அவையாட மதுர வாணி தானாட மலரில் வேதனார் ஆட மருவு வானுளோர் ஆட மதியாட வனச மாமியாராட நெடிய மாமனார் ஆட மயிலுமாடி நீயாடி வரவேணும் |
இதுதான் அருணகிரியார் மயிலை வேண்டிப் பாடிய திருப்புகழ்.
அதலத்தில் (அதல பாதாளமான கீழ்லோகம்) உள்ள ஆதிசேடன் ஆட, அவனால் தாங்கப்பட்ட உலகம் ஆட, காளிதேவி ஆட, அவளுடன் வாதாடி ஆடிய விடையேறியான சிவனார் ஆட, அவருடைய பூத வேதாளப் படைகள் ஆட, வாணியான சரஸ்வதியாட, அவளுடை நாதனான பிரம்மா ஆட, வானவர்கள் ஆட, தாமரைமலராளான மஹாலட்சுமி (வனஜா) ஆட, நெடியோனான திருமால் ஆட, மயிலும் ஆட... முருகனும் ஆட... இப்படிப் பாடினால் ஆடாமல் என்ன செய்வது! அதுவும் மாமியாரும் மாமனாருமே ஆடும்போது மாப்பிள்ளை என்ன செய்வார்? முருகனுக்குத் திருமால் மாமனார் (வள்ளியும் தெய்வானையும் திருமாலின் குமாரத்திகள்; வெவ்வேறு இடங்களில் வளர்ந்தார்கள்), லட்சுமி மாமியார்.
உதய தாம மார்பான பிரபுட தேவ மாராஜன்
உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே
என்று பாடியவுடன், ஆடிக்கொண்டே கம்பத்தில் தோன்றிவிட்டார் கந்தக் கடவுள்! மாமனான மாயோன், நரசிங்க அவதாரம் எடுத்தபோது கம்பத்தில் தோன்றியதை நினைத்திருந்திருப்பாரோ என்னவோ, தாமும் கம்பத்தில் காட்சி கொடுத்துவிட்டார்.
கம்பத்து இளையனார் சந்நிதியின் முன்மண்டபப் பகுதியில் அழகான சிற்பங்கள்; அடுத்துள்ள மண்டபத்தின் சுவர்களில் அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள். முன்மண்டப இடதுபுறத்தில் அற்புதமான முருகன் திருவடிவம் ஒன்றுள்ளது. நின்ற கோலம், ஒரு முகம், புன்சிரிப்பு கொஞ்சும் வதனம், பின்புறம் நிற்கும் மயிலின் மீது சாய்த்துவைக்கப்பட்ட வலதுகால், ஆறு திருக்கரங்கள், வலது கரங்களில் சக்தியாயுதம், அம்பு, கத்தி, இடது கரங்களில் வஜ்ரம், வில், கேடயம் ஆகியவற்றுடன் அருள்காட்சி தரும் முருகன். வில் தாங்கிய இந்த வினோத வேலவர், அழகெல்லாம் திரண்ட ஆனந்த நாயகராக நிற்கிறார். இந்தச் சந்நிதியின் அருகில் ஞானப்பால் மண்டபம்.
கம்பத்து இளையனார் சந்நிதிக்கு இடதுபுறத்தில் சிவகங்கைத் தீர்த்தம். அழகோ அழகு. சுற்று மண்டபங்களுடன் கூடிய எழிலார்ந்த தீர்த்தம். பெரியதான அளவும் அமரிக்கையான அழகும் இதற்கு மிகுந்த பெருமிதம் சேர்க்கின்றன. இதன் வடமேற்குக் கரையில், சர்வசித்தி விநாயகர் சந்நிதி. சிவகங்கை விநாயகர் என்றும் செல்லமாக அழைக்கப்படுகிற இந்த விநாயகரை வழிபட்டு வந்தால், பெரிதாகக் காட்சி தரும் நந்திதேவர். இவரை வணங்கி, அப்படியே அடுத்து தெரியும் கோபுரத்தை நோக்கிச் செல்லலாமா என்று எண்ணும்போது, வலது புறத்தில் ஆயிரங்கால் மண்டபம் கண்ணில் படுகிறது.
ஆஹா, அற்புதமான இடமாயிற்றே! வாருங்கள் உள்ளே போகலாம். போவதற்கு முன்னால்... மானசிகமாகக் காலத்தின் பின்னோக்கிப் பயணிக்கலாமே!
அது 1896ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம் முதல் தேதி. அதிகாலை வேளையில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இறங்கிய இளைஞன் ஒருவன், ஆலயம் நோக்கி நடந்தான்; உள் புகுந்தான்; ஆலயத்தில் அப்போது திருப்பணிகள் நடந்துவந்தன; ராஜகோபுரம் கடந்து, தென்புறம் உள்ள கம்பத்து இளையனார் சந்நிதி, சிவகங்கைத் தீர்த்தம், விநாயகர் சந்நிதி ஆகியவற்றையும் வடபுறம் உள்ள மூல மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வாகன அறை ஆகியவற்றையும் பார்த்துக்கொண்டே படிகளில் ஏறி, வல்லாள மகராஜன் கோபுரம் கடந்து, கிளி கோபுரம் தாண்டி, தீப தரிசன மண்டபம் அடைந்து நின்றான். எவருமே இல்லாத நிலையில் கருவறை அர்த்த மண்டபம் அடைந்தான்; உள்ளே கருவறையில் அர்ச்சகர் தீபம் ஏற்ற, அண்ணாமலையை ஆனந்தமாய்க் கண்டான்.
பின்னர் ஆலயம் விட்டு வெளிவந்து, கால் போனபடி சித்தம் போக்கு சிவன் போக்காகி, ஐயங்குளத்தில் கையிலிருந்த பணத்தையும் உணவையும் வீசியெறிந்து, திரும்பும் வழியில் சிகை நீக்கி, கோவணாண்டி வடிவம் தாங்கி, கிழக்குக் கோபுர வாயில் மண்டபம் அடைந்தான்; மழை பொழியத் தொடங்க, மண்டபத்துள் அமர்ந்தான். மறுநாள் காலை, ஆலயத்துள் சென்றவனை, ஆயிரங்கால் மண்டபம் அழைத்தது. அப்போது அது குண்டும் குழியுமாகக் கிடந்தது. கோயில் யானையும் அங்கு கட்டப்பட்டிருக்க, மண்டபத்துள் தஞ்சம் புகுந்த இளைஞன், அங்கேயே மௌனத்தில் அமர்ந்தான்; அப்படியே சமாதி நிலையில் அமர்ந்தான். எப்போதாவது கண்விழித்துப் பார்த்தபோது, ஊர்ச்சிறுவர்கள் தம்மீது கல்லடிப்பதைக் கண்டான்; அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக, மண்டபத்திலேயே, பாதாள லிங்கம் உள்ள பகுதிக்கு இடம்பெயர்ந்தான்.
விளக்கில்லாமல், லிங்கத்துடனும் நந்தியுடனும் குளவிகளும் தேனீக்களும் குடியிருக்க, புதர் மண்டிக் கிடந்த பாதாளலிங்கக் குகையில் பல நாட்கள் சமாதியில் ஆழ்ந்தான். குளவிகள் கொட்டின; தேனீக்கள் சுட்டன; சிறுவர்கள் இப்போதும் கல்லடித்தனர். சில வேளைகளில், சேஷாத்ரி சுவாமிகள் (ஆமாம், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள்தாம்) வாயிற் பகுதியில் காவலிருந்தபடி சிறுவர்களைத் தடுப்பார்.
'உள்ளே சின்ன சுவாமி உட்கார்ந்திருக்கிறது' என்று சேஷாத்ரி சுவாமிகளாலும், 'பிராம்மண சுவாமி', 'சின்ன சேஷாத்ரி' என ஊர்க்காரர்களாலும் இந்தக் காலகட்டத்தில் வர்ணிக்கப்பட்ட அந்த இளைஞன்... வேறு யார்? ரமண மகரிஷிதாம்!
சேஷாத்ரி சுவாமிகளையும் ரமண மகரிஷியையும் வசப்படுத்திய பாதாளலிங்கத்திலிருந்து கண்களை அகற்ற இயலாமல் நிற்கிறோம்; அங்கிருந்து நகரவும் கால் வரவில்லை. அண்ணாமலையாரையே வேண்டி அகல முற்படுகிறோம். ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்களும் சிற்பங்களும், விஜயநகரக் கலையின் அற்புத எடுத்துக்காட்டுகள். நடன மங்கையர், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விநாயக வடிவங்கள், சண்டையிடும் போர் வீரர்கள், குதிரைகள், சிங்கங்கள், சிவபெருமான் இருக்குமிடத்திற்கு ஊர்வலம் செல்லும் பார்வதி... ஆகிய சிற்பங்களைக் காணும்போது, ரமணரும் சேஷாத்ரி சுவாமிகளும் இடையிடையே புன்னகைக்கிறார்கள்.
நந்தியைத் தாண்டிச் சென்றால், அடுத்த கோபுரத்துக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள். படிக்கட்டுகளை ஒட்டினாற்போல், பக்கத்துக்கு ஒன்றாக உள்ள இரண்டு சந்நிதிகள். இந்த கோபுரம்தான் வல்லாள மகராஜன் கோபுரம். கோபுரத்தின் வடக்குப் பகுதியில், அதாவது நமக்கு வலதுபக்கமாக, கோபுரத்து இளையனார் சந்நிதி. கோபுரத்தின் தெற்குப் பகுதியில், அதாவது நமக்கு இடது பக்கமாகக் கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நிதி.
கோபுரத்து இளையனார் சந்நிதிக்கு அருணகிரிநாதர் மண்டபம் என்றும் பெயர். முன்புறத்தில் மண்டபம்; உள்ளே சந்நிதி என்பதாக உள்ள இதுவும் அருணகிரிநாதர் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டது.
வள்ளி தெய்வானை உடனாய முருகர் எழுந்தருளியிருக்கும் சந்நிதி இது. பாம்பன் சுவாமிகள் குமாரஸ்தவம், அருணகிரியாரின் திருவெழுகூற்றிருக்கை ஆகியவை இங்குள்ள சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
அருணகிரிநாதரது இளமைக் கால வாழ்க்கையைப் பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால், வல்லாள மகராஜன் கோபுரத்தின் மீது ஏறி அவர் தனது உடலை மாய்த்துக் கொள்ளப் போனதாகத் தெரிகிறது. இளமையில் தவறான வாழ்க்கை வாழ்ந்தார் என்றும் அதனால் இப்படியான முடிவுக்கு வந்தார் எனவும் சொல்கிறார்கள்.
இன்னொரு செய்தியும் சொல்லப்படுகிறது. யாரோ ஒரு ஞானி, அருணகிரியாரின் கனவில் வந்து, ஆறுமுகக் கடவுளை வழிபடும்படி கூறினாராம்; எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று எண்ணிய அருணகிரியார், கோபுரத்தின் மீதேறி தியானம் செய்தாராம்; ஆயினும், முழுமையான தியானத்தில் ஈடுபடாமல் மனம் சண்டிசெய்ய, உயிரை விடும் எண்ணத்துடன் குதிக்க முயன்றார். அப்போது மயில்வாகனனாகக் காட்சி கொடுத்து, முருகப்பெருமான் அவரைத் தடுத்தாட்கொண்டார். கோபுரத்தில் இளையனார் காட்சி கொடுத்த இடத்தில் அமைந்ததுதான் கோபுரத்து இளையனார் சந்நிதி. இதற்குப் பின்னரே, திருப்புகழ் பாடினார் அருணகிரியார். வல்லாள மகராஜன் கோபுரப் படிக்கட்டுகளின் தெற்குப் பகுதியில் உள்ள கல்யாண
வல்லாள மகராஜன் கோபுரத்தை அடைவதற்காகப் படிக்கட்டுகளில் ஏறுகிறோம் படிக்கட்டுகள்தாம் என்றாலும் அவற்றின் கம்பீரமே அயரவைக்கிறது. அதென்ன வல்லாள மகராஜன் கோபுரம்? யார் இவர்?
திருவண்ணாமலைப் பகுதியை ஆண்ட மன்னர்களில், ஹொய்சாள வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாம் வல்லாள மகராஜன் (கன்னடத்தில்... பல்லால) முக்கியமானவர். 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்த வல்லாள மகராஜா, அண்ணாமலையாரின் ஆழ்ந்த பக்தர். ராஜ்ஜியப் பணியைவிடவும் இறைப்பணியை உவந்து செய்தவர். ஹொய்சாள பரம்பரையின் கடைசிப் பேரரசர் என்று வர்ணிக்கப்படும் இவர், தில்லி சுல்தானின் படையெடுப்புகளையும் ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடினார். ஹலேபீடு நகரமும் சுல்தானிடத்தில் வீழ்ந்தபின்னர், 1336 வாக்கில் தனது அபிமான திருவண்ணாமலையைத் தனது தலைநகரமாகவும் ஆக்கிக்கொண்டார்.
இவரைச் சோதிக்கவும் இறைவனார் ஒருமுறை திருவுளம் கொண்டார். அடியாராக இறங்கி வந்தார்; அடியாருக்கு, அரசர் ஏவல்கூவல் பணிசெய்து வேண்டியன தந்தார். இருந்தாலும், அடியார் ஏதோ வருத்தத்துடன் காணப்பட, காரணம் கேட்ட அரசருக்கு அதிர்ச்சி. அடியாருக்கு ஒரு தேவை இருந்தது. என்ன? அன்றிரவு தன்னுடன் இருப்பதற்குப் பெண்ணொருத்தி தேவை. அரசர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஓரிரவுக்காக பெண்ணா? 'வேண்டுமானால் நல்ல பெண்ணாகப் பார்த்து மணம் செய்து தருகிறேனே' என்றார் அரசர்; நிரந்தரத் தளையான திருமணம் வேண்டாம் என்று ஆண்டி மறுக்க, எப்படியும் அவரது விருப்பத்தை நிறைவேற்ற உள்ளம்பூண்ட அரசர், விலைமகளிர் எவரையேனும் அழைத்துவரச் சொன்னார்.
என்ன பரிதாபம்! அரண்மனைப் பணியாளர்கள் சென்று எவ்வளவு பொருள் தருகிறோம் என்றாலும், அந்தப் பெண்கள் வரவில்லை. காரணம்? அன்றைக்கென்று பார்த்து, எங்கிருந்தோ வந்த யோகியர் கூட்டமொன்று, நிறைய பணம் கொடுத்து, அவர்கள் அனைவரையும் அன்றொரு நாளுக்குப் பணித்திருந்தது. யாரும் பணியில்லாமல் இல்லை. அரசரே விஷயம் கேள்விப்பட்டு நேரில் வந்து யாசித்தபோதும், கொடுத்த வாக்கை மீறுவதற்கு அந்தப்பெண்கள் மறுத்துவிட்டனர். தனது அரசில் பாதியைத் தருவதாகக்கூட அரசர் அறிக்கை கொடுத்தார். எதுவும் கைவரப் பெறாத நிலையில், என்ன செய்வது என்றறியாமல் அரசர் தவிக்க, அவருடைய இளைய மனைவியாரான சல்ல மாதேவிக்கு வினோதமான தீர்வு கிட்டியது.
எப்பாடுபட்டாலும் அடியார் பணியை நிறைவேற்ற வேண்டும். என்ன செய்யலாம்? மூத்த ராணி மல்லமா தேவியாரையும் அழைத்துக் கொண்டு, கணவரிடம் வந்த சல்லமாதேவி, தன்னையே அடியாருக்கு அர்ப்பணிக்கச் சித்தமானாள்.
அரசருக்கும் அது மன நிறைவைத் தர, அப்படியே சென்று அடியாரிடம் கூறினார்.
தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு அடியார் இருக்குமிடம் அடைந்தாள் சல்லமாதேவி; வீணை மீட்டி இசை கூட்டினாள்; நறுமணப் புகையூட்டினாள்! அடியவரோ இவள் பக்கம் திரும்பவேயில்லை. இரவு இப்படியே கழிய, கால தாமதம் ஆனதால் அடியாருக்குக் கோபம் என்று நினைத்த சல்லமா தேவி, மெள்ள அவர் அருகே சென்று அடிபணிந்தாள். என்ன வியப்பு... அவள் தலை நிமிர்ந்தபோது, அடியாரைக் காணோம்! பதிலாக, பிஞ்சுக் குழந்தையன்று பூவாய்ச் சிரித்தது.
குழந்தையைக் கையிலேந்தி சல்லமாதேவி ஓடி வர, பிள்ளைச் செல்வம் இல்லாத வல்லாள மகாராஜா பிள்ளைக் கலி தீர்ந்தது என்று மகிழ... திடீரென்று குழந்தை மறைந்தது!
அரசரும் அரசிகளும் கலங்கியபோது, வானத்தில் அசரீரி ஒலித்தது... 'அரசே, உமக்கெதற்குப் பிள்ளை? ஆளுங் காலம் ஆண்டு முடித்து, உலக வாழ்வை நீக்கும் வேளையில் எம்மை அடைவாய்!'
என்ன இருந்தாலும் ஈமக் கடன் செய்வதற்கும் பிள்ளை இல்லையே!
அசரீரியாக ஆண்டவனின் வாக்குமூலம் வந்தது. 'கடன் செய்யப் பிள்ளையா? அவ்வளவுதானே! உனக்குப் பிள்ளையாக யாமே இருப்போம். எப்போது செய்ய வேண்டுமோ அப்போது கடன் செய்வோம்!'
நடக்குமா? வேடிக்கையா? இறைவனாவது ஈமக்கடன் செய்வதாவது? மகாராஜா என்ன ஜடாயுவா?
வேடிக்கையில்லை! இப்போதும் மாசி மகத்தன்று, தந்தை ஸ்தானத்தில் வைத்த வல்லாளருக்கு இறுதிக்கடன் செய்து சிராத்தம் கொடுக்க, பள்ளிகொண்டான்பட்டு என்ற ஊருக்குச் செல்கிறார் அண்ணாமலையார். சுல்தான்களின் படையெடுப்புகளின்போது, பற்பல போர்களில் ஈடுபட்ட வல்லாளர், உயிர் நீத்து பள்ளிகொண்ட இடமே பள்ளி கொண்டான்பட்டு.
வல்லாள மகாராஜன் கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறோம். 5-வது பிராகாரத்தில் இருந்து 4-வது பிராகாரத்துக்குள் செல்லும் நுழைவாயிலாக நிற்கிறது இந்த கோபுரம். அண்ணாமலையார் கோயிலில் மொத்தம் ஒன்பது கோபுரங்கள். வெளிச்சுற்று மதிலில், திசைக்கு ஒன்றாக அமைந்துள்ள வெளி கோபுரங்கள், பிரதான கோபுரங்களாகும். கிழக்கில்- ராஜகோபுரம்; தெற்கில்- திருமஞ்சன கோபுரம்; மேற்கில்- பேய்க் கோபுரம்; வடக்கில்- அம்மணி அம்மாள் கோபுரம்.
இவை தவிர, உள் சுற்று வாயில்களில் உள்ள கோபுரங்களுக்குக் 'கிட்டி (சிறிய) கோபுரங்கள்' என்று பெயர். கிழக்கில் இரண்டும், பிற திசைகளில்... திசைக்கு ஒன்றுமாக கிட்டி கோபுரங்கள் உள்ளன.
5-ஆம் பிராகாரத்தில் இருந்து 4-ஆம் பிராகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள்; இந்தப் பிராகாரத்திலிருந்து 3-ஆம் பிராகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் ஒன்று (இதுவே கிளி கோபுரம்)... ஆக மொத்தம் ஐந்து!
கட்டப்பட்டதாகத் தெரிகிறது; கிட்டி கோபுரங்களிலேயே பெரியது வல்லாளரின் பெயர் கொண்டு அழைக்கப் படுகிறது. பேய்க் கோபுரம் கூட வல்லாளரால் தொடங்கப் பட்டதுதானாம். வெளி கோபுரங்களில் இதுவே பழைமையானது; இதன் மேல்பகுதியின் கட்டுமானம் மட்டும் காலத்தால் பிற்பட்டது.
வல்லாளர் செய்துமுடித்த இந்தத் திருப்பணிகளுக்குப் பின்னர், பல ஆண்டுகள் கழித்து, கிருஷ்ணதேவ ராயர் பெரும் திருப்பணிகளை மேற்கொண்டார். வல்லாளருக்கும் கிருஷ்ணதேவ ராயருக்கும் வியப்பான தொடர்பு உண்டு. ராயர், விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தவர் என்று நமக்குத் தெரியும். 3-ஆம் வல்லாளரிடத்தில் படைத்தலைவர்களாக இருந்த ஹரிஹரரும் புக்க ராயருமே விஜயநகரப் பேரரசை நிறுவியவர்கள்!
வடநாட்டுப் படையெடுப்பை எதிர் கொள்வதற்காக, வல்லாளர் ஏற்படுத்திக் கொண்ட ஹோசப்பட்டணம் என்னும் புதிய நகரமே, பிற்காலத்தில் ஹரிஹர- புக்கரின் விஜயநகரம் ஆனது.
வல்லாள மகாராஜ கோபுரத்தின் படிக்கட்டுகளில் நிற்கும்போது, அந்த மகாராஜாவே நமது சிந்தனைகளைத் தடுத்து ஆட்கொள்கிறார். பெரிய நந்திகூட அவர் அமைத்ததுதான். இந்த கோபுரத்தினுள் புகுந்து 4-ஆம் பிராகாரத்துக்குள் நுழைகிறோம். நமக்கு இடப் பக்கத்தில் பிரம்ம தீர்த்தம்;
அதன் வடக்குக் கரையில் ஸ்ரீகால பைரவர் சந்நிதி. நின்ற நிலையில் இருக்கும் இந்த பைரவருக்கு எட்டுக் கரங்கள்; கரங்களில் உடுக்கை, கத்தி, கபாலம், கேடயம், சூலம் போன்ற ஆயுதங்கள்.
தண்டிக்கும். அத்தகைய சிவ அம்ச வெளிப்பாடே பைரவர் எனும் தோற்றம். தட்சன், திருமால், பிரம்மா போன்றவர்களுக்கு ஆணவம் அதிகப்பட்ட காலங்களில் தோன்றியவர்தான் பைரவர். இவரது சந்நிதியின் மேல் விதானத்தில் தொடர் ஓவியங்கள். இந்த பைரவர் தோன்றியதற்கான காரணத்தைக் கூறும் வரலாற்று ஓவியங்கள்.
ஆரம்பத்தில் பிரம்மாவுக்கும், சிவனாரைப் போன்றே ஐந்து தலைகள். இதனால் ஏற்பட்ட பெருமை மட்டுமல்ல, சிவனாரைவிட தான் உயர்த்தி என்ற அகங்காரமும் சேர்ந்துகொண்டது பிரம்மனுக்கு. விளைவு? திருமாலிடம் சென்று தன் உயர்த்தியை விரிவாக வாதிட்டார். இரண்டு பேரும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், ஈஸ்வரனும் ஈஸ்வரியும் அங்கே தோன்றினர்.
திருமால் வணங்கினார்; ஓரமாக நின்றார். வணங்காதது மட்டுமல்லாமல், சிவனாரை இகழ்ந்து பேசவும் தொடங்கினார் பிரம்மன். இகழ்ச்சி தொடரத் தொடர...சிவனாரின் சினம் உக்ரம் அடைந்தது; அதன் அம்சமாக பைரவர் வெளிப்பட்டார். பிரம்மனின் உச்சந் தலையைக் கிள்ளும்படி பைரவருக்கு ஆணை வந்தது. அதன்படி பைரவர் செய்ய... நான்முகன் ஆனார் பிரம்மன்.
சந்நிதி விதானத்தில் உள்ள ஓவியங்களில், இந்தக் கதை இவ்வாறு தீட்டப்பட்டிருந்தாலும், இதையே இன்னொரு வகையாகவும் சொல்வதுண்டு. திருமுடியைப் பார்த்ததாக பிரம்மா பொய் சொன்னாரில்லையா? அந்தக் குற்றத்துக்காக, அவரின் ஐந்து தலைகளில் ஒன்று கொய்யப்பட்டது.அவ்வாறு கொய்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்டவரே கால பைரவர். எது எப்படியானாலும் ஒன்று புரிகிறது. ஆணவம் தலைக்கேறினால் என்ன ஆகும்? தலையே போகும்!
பிரம்ம தீர்த்தமும் பெரியதாக, அமைதியாக இருக்கிறது. கி.பி 1230வாக்கில், பல்லவ மன்னரான கோப்பெருஞ்சிங்கனின் மகன் வேணாவுடையான் என்பவர் இதை எடுப்பித்தாராம். இவரே இன்னும் பல திருப்பணிகளையும் செய்துள்ளார். கோயிலின் தல தீர்த்தம் என்பது பிரம்ம தீர்த்தமேயாகும். இதில் நீராடுவதும் வழிபடுவதும் சர்வ பாவங்களையும் போக்கும்.
13- ஆம் நூற்றாண்டில், அண்ணாமலை கோயில் இவ்வளவு பெரியதாக இல்லை. ஆலயத்தின் அருகில் வாழ்ந்து வந்தார், கிரிதேவர் என்னும் பெரியவர். பிரம்ம தீர்த்தத்திலிருந்து நீரெடுத்து அண்ணாமலையானுக்குத் திருமஞ்சனம் செய்வார். எப்படித் தெரியுமா? பாத்திரத்தில் அல்ல; அவர் கையே பாத்திரமாகும்; நீரே பாத்திர வடிவில் நிற்கும்.
இதனால், பாணிபாத்திர சுவாமிகள் (பாணி - கரம்) என்றே வழங்கப்படலானார். அடியார்களுக்கு உணவளிப்பதற்காக, இவருக்கு தினந்தோறும் ஒரு பொற்காசு இறைவனால் அளிக்கப்பட்டது. பிரம்மதீர்த்தக் கரையில்தான், விழா நாட்களில், அண்ணாமலையார் தீர்த்தவாரி கொடுப்பார்.
திருவண்ணாமலை தலத்தால் ஈர்க்கப்பட்டு, இங்கேயே தங்கி யோகத்திலும் தியானத்திலும் ஈடுபட்ட மகான்கள் ஏராளமானோர். திருநெல்வேலியிலிருந்து இங்கே வந்து, மலைக்குகையில் தங்கியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்; கோபுரத்து இளையனார் சந்நிதி திருப்பணிகளை ஆற்றியவர். ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர். கோபுரத்திளையனாருக்கு வேல் சார்த்தியவர்.
அண்ணாமலையில் மாபெரும் யோகியாக வாழ்ந்தவர் தெய்வசிகாமணி தேசிகர். இவருடைய சீட பரம்பரையில் வந்தவரான நாகலிங்கதேசிகர், ராமேஸ்வர யாத்திரை சென்றார். அப்போது, ராமநாதபுர சேதுபதி ராஜாவின் வேண்டுகோளின்படி, ராமநாதபுர சமஸ்தானக் கட்டளையின் கீழ் வந்த ஐந்து கோயில்களின்
நிர்வாகத்தை ஏற்று, குன்றக்குடியில் ஆதீனம் ஒன்றையும் நிறுவினார். இதுவே, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஆனது. இந்த ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாக எழுந்தருளுபவரே, 'தவத்திரு குன்றக்குடி அடிகளார்'. குன்றக்குடி ஆதீனத்தின் குருமூர்த்தமாக, திருவண்ணாமலையில் உள்ள தெய்வசிகாமணி தேசிகரின் சமாதி வழிபடப் பெறுகிறது.
அண்ணாமலையில் வாழ்ந்த மகான்களில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள், குகை நமசிவாயரும் குரு நமசிவாயரும். கர்நாடகப் பகுதியைச் சேர்ந்த குகை நமசிவாயர், அண்ணாமலையானையே தன் குருவாகக் கொண்டு, மலைக் குகையில் வாழ்ந்தார்; அற்புதங்கள் பல இவரால் நிகழ்த்தப்பட்டன. எனவே, குகை நமசிவாயர் ஆனார். இவரின் சீடரோ, இவருக்குப் பணிவிடைகள் செய்வதையே பேறாகக் கருதியவர்; ஆகவே, குரு நமசிவாயர் ஆனார். அண்ணாமலை வெண்பா பாடினார்.
கால பைரவரை வழிபட்டுவிட்டு, பிரம்மதீர்த்தக் கரையில் நிற்கிறோம் இல்லையா? இது நான்காவது பிராகாரம். சற்றே நினைவு படுத்திக்கொள்ளலாம்.
திருவண்ணாமலைத் திருக்கோயிலுக்கு ஏழு பிராகாரங்கள் என்று கணக்கு. கோயிலைச் சுற்றி அணுக்கமாக உள்ள வீதிகள் (மாட வீதிகள்) ஆறாவது பிராகாரம். மலை சுற்றுப் பாதைதான் ஏழாவது பிராகாரம்; 'திருவிக்கிரம பாண்டியன் ஏழாம் திருவீதி' என்றே அதற்குப் பெயர். கிழக்கு ராஜகோபுரம் வழியாகக் கோயிலுக்குள் நுழைந்தபோது, 6-வது பிராகாரத்திலிருந்து 5-வது பிராகாரத்துக்குள் நுழைந்தோம். பின்னர் வல்லாள மகாராஜன் கோபுரம் தாண்டி, 4-வது பிராகாரத்துக்குள் வந்து விட்டோம்.
பற்பல சந்நிதிகளை நாம் தரிசித்துக் கொண்டே வருவது, ஐந்தாவது மற்றும் நான்காவது பிராகாரங்களின் கிழக்குப் பகுதிகள். இந்தத் திருச்சுற்றுகளின் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு பாகங்கள், அகலம் குறைந்தவை; பெரும்பாலும் நந்தவனங்கள் கொண்டவை. 6-வது பிராகாரத்தில் இருந்து... அதாவது, சாலையிலிருந்து கோயிலுக்குள் (5-ஆம் பிராகாரத்துக்குள்) வருவதற்கு, நான்கு திசைகளுக்கும் நான்கு பிரதான கோபுரங்கள். அங்கிருந்து 4-ஆம் பிராகாரத்துக்குள் வரவும் திசைக்கு ஒன்றாக 4 கிட்டி கோபுரங்கள் உண்டு (இவற்றில் ஒன்றுதான் வல்லாள மகாராஜன் கோபுரம்). இதன் பின்னர், மூன்றாவது பிராகாரம் முதல் கருவறை வரை செல்வதற்குக் கிழக்கில் மட்டும்தான் வாயில்கள்.
4-வது பிராகாரத்தில் இருந்து 3-வது பிராகாரத் துக்கு அழைத்துச் செல்லும் கிழக்கு வாயிலில், கிளி கோபுரம். இதுவும் அருணகிரிநாதரின் வாழ்க்கை யுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், 4-ஆம் பிராகாரத்தில் உள்ள மண்டபங்களையும் சந்நிதி களையும் பார்ப்போம்.
வல்லாள மகாராஜன் கோபுரத்துக்கு தென்மேற்கில் பிரம்ம தீர்த்தமும் கால பைரவர் சந்நிதியும். வடமேற்கில் புரவி மண்டபம். நூற்றுக்கால் மண்டபம், யானை மண்டபம் என்றெல்லாம் அழைக்கப்படும் இதில், அழகழகான நாயக்கர் கால
ஓவியங்களைக் காணலாம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் காட்சி, அற்புதமாகவும் பகுதி பகுதியாகவும் தீட்டப்பட்டுள்ளது. இதைப் பார்த்தாலே போதும், பாற்கடல் அமுதமெல்லாம் வேண்டவே வேண்டாம்!
இன்னும் வடக்காக, 'சக்தி விலாசம்' என்ற கல்யாண மண்டபம். அடுத்து கருணை இல்லம்; கோயில் நிர்வாகத் தால் நடத்தப்படும் ஆதரவற்றோர் இல்லம். வடக்குக் கிட்டி கோபுரத்தின் வழியாக வந்தால், முதலில் கருணை இல்லம் வந்து விடும்.
5-ஆம் பிராகாரத்தில் பெரிய நந்தியை தரிசித்துவிட்டு வந்தோம். இப்போது, 4-ஆம் பிராகாரத்தில் சின்ன நந்தி. வல்லாள மகாராஜன் கோபுரத்துக்கும் கிளி கோபுரத்துக்கும் இடையில், அதே நேர்க்கோட்டில் சின்ன நந்தி; சிறிய மண்டபத்துக்குள் அமர்ந்திருக்கிறார். தூண்கள் ஒன்றில் ஹொய்சாள முத்திரை. ஹொய்சாள மன்னரான வல்லாளர் திருப்பணி செய்ததன் அடையாளம்.
பிரம்ம தீர்த்தக் கரையிலிருந்துதானே வடக்கு முகமாகச் சென்றோம். வாருங்கள், மீண்டும் அந்தப் பகுதிக்கே திரும்புவோம். பிரம்ம தீர்த்தத்துக்கு மேற்கில் பிரம்ம லிங்கம், முக லிங்கம், வித்யாதரேஸ்வரர், விநாயகர், நளேஸ்வரர் ஆகியோரின் சந்நிதிகள். மெள்ள கிளிக் கோபுரத்தை நெருங்கிவிட்டோம். இதன் இருபாலும் (அதாவது தெற்கு மற்றும் வடக்குப் பக்கங்கள்), இரண்டு சந்நிதிகள். தெற்கில்- யானை திறை கொண்ட விநாயகர். இவர் வெகு பொல்லாதவர். ஏன், என்ன செய்வார்? கனவில் வந்து மிரட்டுவார்!
அறிந்தும் அறியாதும் நாம் செய்திருக்கும் பிழைகளுக்காக மானசீகமாக மன்னிப்புக் கேட்கிறோம்; காணிக்கையாகக் கட்டுவதற்கு யானைக்கு எங்கே போவது? அகங்காரத்தை, மமகாரத்தை, அநாவசிய ஆசைகளை, பொறாமையை, மனதைப் பிடித்து வாட்டும் மலின எண்ணங்களை யானைகளாக எண்ணி, அங்கேயே திறையாகக் கட்டிப் போடுகிறோம்; தும்பிக்கையான் தாள் பணிகிறோம். ஏற்றுக்கொண்டு புன்னகைக்கும் பிரணவ மூர்த்தியை வழிபட்டு, கிளி கோபுரத்தின் வடபுறத்தில் உள்ள சந்நிதியை அடை கிறோம்.
தெற்கில் விநாயகர் இருந்தால், வடக்கில் வேறு யார்? முருகர்தானே. ஆமாம், இவர் பிச்சை இளையனார். சிவனார் அக்னி ஸ்வரூபம்; அக்னியிலிருந்து அக்னியாக, பெரிய நெருப்பிலிருந்து சின்ன நெருப்பாகத்
தோன்றியவர் முருகர். ஆகவே, அவரும் அக்னி ஸ்வரூபம். அக்னித் தலமான அண்ணா மலையில், அப்பா பெரியவர்; அதனால், மகனுக்கு இளையனார் என்பதே எங்கும் திருநாமம். வள்ளி- தெய்வானை சமேத பிச்சை இளையனாரை வழிபட்டு கிளிக் கோபுரத்தை அடைகிறோம்.
அது சரி. அருணகிரியாருக்கும் இந்தக் கோபுரத்துக்கும் என்ன சம்பந்தம்? நிறைய உண்டே! சம்பந்தாண்டானால் வந்த சம்பந்தம். அரசவை ஆஸ்தானப் புலவனாக இருந்த சம்பந்தாண்டானுக்கு, அருணகிரியார் மீது பொறாமை என்பதை ஏற்கெனவே பார்த்தோம்; அதனால், பிரபுடதேவ ராஜாவிடத்தில் இல்லாததும் பொல்லாததும் சொன்னதும் நமக்குத் தெரியும். முருகனை வரவழைக்க முடியுமா என்ற சவாலில் அருணகிரியார் வெற்றி பெற்றதும் தெரியும். மயில்மீது ஆடிக்கொண்டே ஆறுமுகப் பெருமான் வர, அந்தப் பேரொளிப் பிரகாசத்தைக் காண முடியாமல், பிரபுடதேவரின் கண்கள் பார்வை இழந்தன. வராது என்று தான் நினைத்த மயிலும், வரவிடாமல் தடுத்து விடலாம் என்று நினைத்த முருகரும் வந்துவிட்டதைக் கண்டு மனம் துவண்டிருந்த சம்பந்தாண்டானுக்கு, இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தது. ''அரசே, அருணகிரியார் ஆற்றல் மிக்கவர். அவருக்காக முருகப் பெருமானே ஆடி ஆடி வந்துவிட்டார். தங்களுடைய திருப்பார்வை மீள்வதற்கும் அருணகிரியாரே அருள் வைக்க வேண்டும். ஒன்றுமில்லை. இந்திரனுடைய தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரைக் கொண்டு வந்து, அதன் சாறைத் தங்களது திருக்கண்களில் இட்டால் பார்வை மீளும்.. வேறு யாரும் தேவலோகம் செல்ல இயலாது. அருணகிரியாரே அதற்கு ஏற்றவர்'' என்றார்.அருணகிரியார் பாடியதையும் முருகர் ஆடியதையும் கண்டு பிரமித்துப் போயிருந்த பிரபுட தேவருக்கு இதற்குமேல் ஒன்றும் தோன்றவில்லை. தேவலோகம் சென்று பாரிஜாத மலர் கொண்டு வரும்படியாக அருணகிரியாரை வேண்டினார். அவரும் ஒப்புக் கொண்டார். பூத உடலுடன் (இந்த உலகின் உடலோடு) எவ்வாறு இந்திரலோகம் செல்வது? பஞ்சபூத சேர்க்கையான இந்த உலகின் உடலை, கோபுரத்தின் அருகில் ஓரிடத்தில் நீத்து விட்டு, சூட்சும உடலான கிளி வடிவம் கொண்டு தேவலோகம் சென்றார். இந்திரன் அவரை வரவேற்றான்; தனது சபையில் அமர்த்தி அழகு பார்த்து கௌரவமும் செய்தான்.
இதற்கிடையில் சம்பந்தாண்டான் சும்மா இருப்பாரா? அருணகிரியார் வருவதற்கு காலதாமதம் ஆவதையே காரணமாக்கினார். ''அவர் பொய் சொல்லிவிட்டு எங்கேயோ போய்விட்டார் என்று பிரபுடதேவரை நம்ப வைத்தார். இந்திர லோகமாவது, மனிதனாவது, போவதாவது! கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கிளி வடிவமெடுத்துப் பறந்துவிட்டார்; அவரால் இந்திரலோகம் போகவும் முடியாது; பலத்த காவலோடு உள்ள இந்திரன் தோட்டத்தில் மலர் கொய்யவும் முடியாது'' என்று பலவாறு சொல்லி, அவருக்குச் சரியான தண்டனை அவரது உடலை எரியூட்டுவதுதான் என்றும் சொல்லிவிட்டார். தீய விதியின்பாற்பட்ட பிரபுட தேவர், அதற்குச் சம்மதித்தார். அருணகிரியாரின் உடல் தீக்கிரையாக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் பறந்து வந்தார் கிளியார்... இல்லை இல்லை, கிளி வடிவான அருணகிரியார். பாரிஜாத மலர் கொணர்ந்த அந்தப் பச்சைக் கிளியால் பார்வை வரப்பெற்ற மன்னர், செய்வதறியாது திகைத்தார்.
பூத உடலைக் காணாத கிளி, அந்த வடிவிலேயே, கோபுரத்தின் மீது தங்கிவிட்டது; கோபுரமும் கிளிக் கோபுரம் ஆனது. இன்றும் அருணகிரியார், அங்கே கிளியாக வீற்றிருந்து அருள்புரிகிறார் என்பது நம்பிக்கை.
கிளி வடிவில் கோபுரத்தின் மீது தங்கிய அருண கிரியார், அந்த வடிவிலேயேதான் கந்தர் அனுபூதி பாடியதாக ஐதிகம்.
- என்று பாடியதும்;
- என்று பாடியதும் கிளி உருவில்தான். கிளி என்பது ஞானத்தின் வடிவம் (ஞானவான்களை கிளி வடிவத்தில் உருவகிப்பது வழக்கம்! சுக மாமுனி கிளி வடிவில் காணப்படுவார்); ஸ்தூல ஸ்வரூபம் அன்றியும் ஞான ஸ்வரூபத்தில் அருணகிரியார் திகழவேண்டும் என்பதற்காகவே, இத்தகைய திரு விளையாடல் நடைபெற்றதோ என்னவோ?
அருணகிரியாரே கிளி வடிவில் முருகப் பெருமான் திருக்கரங்களில் தங்கியிருப்பதாக ஐதீகம். தம்முடைய ஞானக் கிளியை அன்னைக்குக் கொடுத்தார் ஆறுமுகர். எனவே, அம்பிகையின் திருத்தோள்களில் அருணகிரியார் தங்கியிருப்பதாகவும் இதன் தொடர்ச்சிக் கதைகள் உண்டு.
இறைவன் திருவருளால் கிளியானால் என்ன, குயிலானால் என்ன, புழு புல் பூண்டானால்... ஏன், கல்லானாலும் மண்ணானாலும்தான் என்ன? திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் மண்ணாய்க் கிடந்தாலோ புழுதியாய்ப் பறந்தாலோ போதுமே என்ற எண்ணம் மேலோங்க, கிளிக் கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறோம்.
கிளிக் கோபுரத்தைத் தாண்டி, 3-ஆம் பிராகாரத் துள் நுழைந்து விட்டோம். இந்தப் பிராகாரத்தில்தான் அம்மன் சந்நிதி இருக்கிறது. வாருங்கள், இந்தப் பிராகாரத்தை வலம் வருவோம்.
கிளிக் கோபுரத்திலிருந்து நேராக இருப்பது, தீப தரிசன மண்டபம். 16 தூண்களைக் கொண்ட இதனை, பாண்டிமாதேவியும், அறுபத்துமூவருள் ஒருவருமான மங்கையர்க்கரசியார் கட்டினார். எனவே மங்கையர்க்கரசியார் மண்டபம் என்றும் வழங்கப்படும் இங்குதான், திருக்கார்த்திகை அன்று, பஞ்சமூர்த்திகளும் அர்த்தநாரீஸ்வரரும் எழுந்தருளிக் காட்சி கொடுப்பார்கள். அதனால், காட்சி மண்டபம் என்றும் பெயர்.
இந்த மண்டபத்துள் புகுந்து நேரே சென்றால், அருள்மிகு அண்ணாமலையார் சந்நிதிக்குச் செல்லலாம். நாம் சற்றே திரும்பி, பிரதட்சிணத்தைத் தொடர்கிறோம்.
தென்கிழக்கில், பன்னீர் மண்டபம். நான்கு கால் மண்டபமான இங்கு, வசந்த உற்ஸவத்தின்போது, அண்ணாமலையார் கண்ணாடி பார்ப்பதும் பூக்கொட்டும் நிகழும். அடுத்து, கோயில் மடப்பள்ளி. மடப்பள்ளி வாசலில் விநாயகர் சந்நிதி சிறிதாக! இவர் பொட்டுக் கட்டும் விநாயகர். தேவதாசி
வழக்கம் நடைமுறையில் இருந்த காலத்தில், அந்தப் பெண்மணிகள் இங்கு வந்து, இவர் முன்பாகத் தங்களுக்குத் தாங்களே பொட்டுக் கட்டிக்கொண்டு தங்களைக் கோயிலுக்கு அர்ப்பணிப்பர். இப்போது இந்த முறை கிடையாது என்றாலும், அப்போதைய பெயர் விநாயகருக்கு அப்படியே தங்கிவிட்டது. மடப்பள்ளியிலிருந்து திரும்பி, 3-ஆம் பிராகாரத் தெற்குச் சுற்றுக்குள் நுழைகிறோம். நடுவில், தல மரமான மகிழ மரம்; சுற்றிலும் சிறிய சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, பூங்கா போன்று காட்சி தருகிறது. பிள்ளை வரம் கேட்பவர்கள், மகிழ மரத்தில் தொட்டில் கட்டி நேர்ந்து கொண்டால், அடுத்த ஆண்டே, கையில் பிள்ளையுடன் வரலாம். பன்னீர் மண்டபத்துக்கும் மகிழ மரத்துக்கும் இடையில் ஓரிடத்தில் நின்று நோக்கினால், கோயிலின் ஒன்பது கோபுரங்களும் தெரியும். இந்த இடத்துக்கு கோபுரக் காட்சி என்று பெயர்.
இந்தச் சுற்றிலேயே தொடர்ந்தால், கல்யாண மண்டபம். பங்குனி உத்திரத் திருநாளில், பார்வதி- பரமேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம். கார்த்திகை முதலான பிற விசேஷ நாட் களிலும் இந்த மண்டபத்தைத் திறப்பார்கள்.
இந்தப் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையாரையும் வழிபட்டு விட்டு, மேற்குத் திருச்சுற்றில் தொடர்ந்து, அங்குள்ள யோகேஸ்வரரையும் வணங்குகிறோம். உண்மையில், யோகேஸ்வரர் மண்டபம் என்பது மிகச் சிறியதொரு மண்டபம். யோகேஸ்வரர்? அண்ணாமலையார் இந்த இடத்தில் யோகியாக, சூட்சுமமாக இருப்பதாக ஐதிகம். இந்த மண்டபத்தடியில் அமர்ந்தால், அருணாசல மலையின் உச்சியை தரிசிக்கலாம். யோக அமைதி வேண்டுவோர், இங்கு அமர்ந்து அருணாசலத்தின் மீது சிந்தையை ஒருமுகப் படுத்தினால், பரமனுடன் ஒன்றலாம். தொடர்ந்து நடந்து வடமேற்குப் பகுதியை அடைந்தால், அம்மன் சந்நிதி. முதலில் வலத்தை முடித்து விடுவோம்; அப்புறமாக அம்மனை தரிசிக்கலாம்.
அம்மன் சந்நிதிக்கு முன்பாக, அதாவது வடக்குச் சுற்றில், நிறைய சந்நிதிகள். சந்நிதிகளுக்கு இடையே அழகு நிறைந்ததாக, கொஞ்சம் ஒதுங்கி நிற்பது போன்ற தோற்றத்துடன் ஒரு மண்டபம்!
அம்மன் சந்நிதிக்கு முன்பாக, அதாவது வடக்கு சுற்றில்
அமைந்திருக்கிறது வசந்த மண்டபம். வசந்தோற்ஸவத் துக்கான மண்டபம் என்றாலும் இங்குதான் கோயில் அலுவலகம் செயல்படுகிறது.
இந்த மண்டபத்துக்கு மேற்கில் (அம்மன் சந்நிதிக்கும் இடையில்) ஸ்ரீகாளத்தீஸ்வரர் சந்நிதி; அருகில் யாக சாலை. வசந்த மண்டபத்துக்கு கிழக்கில் திருவண்ணாமலையின் மிகப் பிரபலமான பிடாரியம்மன் சந்நிதி. வடக்குப் பார்த்த சந்நிதி; எதிரில் கல்லாலான திரிசூலம். எல்லைப் பிடாரி என்றும் வழங்கப்படும் இந்த அம்மனுக்கு, கார்த்திகைப் பெரு விழாவின் 2-ஆம் நாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுமாம். இதே சந்நிதியில் பிராமி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்தமாதர்களின் திருவுருவங்களும் நிசும்ப சூதனி, ரேணுகாம்பாள் ஆகியோரின் திருவடிவங் களும் காணப்படுகின்றன. கரண்ட மகுடம், கோரைப்பல், பத்திர குண்டலம், தலைச் சக்கரங்கள் ஆகியவற்றுடன் கூடிய ரேணுகாம்பாள் திருவடிவம் அச்சப்படுத்தினாலும், பணிவையும் பரவசத்தையும் ஒருசேர உண்டாக்குகிறது.
பிடாரியம்மன் சந்நிதிக்கு கிழக்காக, சிதம்ப ரேஸ்வரர் (ஆகாயம்), ஜம்புகேஸ்வரர் (தண்ணீர்) மற்றும் ஏகாம்பரேஸ்வரர் (நிலம்) ஆகிய சிவலிங்கச் சந்நிதிகள். வசந்த மண்டபத்துக்கு அப்பால், ஏற்கெனவே காளத்தீஸ்வரரை (காற்று) தரிசித்தோம். திருவண்ணாமலையோ, அக்னித் தலம். ஐம்பூதங்களில், கருவறைக்குள் அக்னி எழுந்தருள, பிற பூதங்களையும் வழிபடும் விதத்தில் இங்கே பிற லிங்கங்கள்.
- என்பார் திருமூலர். நிலம் (பார்) தொடங்கி ஆகாயம் வரையான பஞ்சபூதங்களாகத் திகழ்வது பரம்பொருளே. அவற்றைப் பரம்பொருள் என்று பார்க்கப் பழகினால், அவை வெறும் மண்ணாகவும் நீராகவும் காற்றாகவும் தெரியாது. நிலமாகவும் நீராகவும் மட்டுமே கண்டால், பரம்பொருள் புரியாது. பஞ்ச பூதங்களே பரம்பொருள் என்று புரிய வைக்கும் புனிதத்தை எண்ணிக்கொண்டே சிவலிங்கங்களை வழிபடுகிறோம்.
3-ஆம் பிராகார வலத்தை நிறைவு செய்து, உள் வாயிலுக்கு அருகில் வந்துவிட்டோம். தீப தரிசன மண்டபத்தில் இருந்து, உள்ளே 2-ஆம் பிராகாரத்துக்கும் ஸ்வாமி சந்நிதிக்கும் போகலாம் என்று பார்த்தோமே... அந்த உள்வாயில் அருகில்தான் இப்போது நிற்கிறோம். தங்கக் கொடிமரம், பலிபீடம், அகண்ட தீபம். திருக்கார்த்திகைத் திருவிழாவில் அகண்ட தீபம் கோலாகலமாக ஏற்றப்படும்.
கொடி மரத்தடியில் நிற்கும்போது, முகப்புக்கு இருபுறமும் இருக்கும் இரண்டு சந்நிதிகள் நம்மை ஈர்க்கின்றன. ஸ்வாமி சந்நிதியைப் பார்த்து நின்றால், நமக்கு இடப்புறத்தில் சம்பந்த விநாயகர்; அமர்ந்த திருக்கோல நாதரான இவரின் திருமேனி சிவப்பாக இருக்கிறது. கஜமுகாசுரனை வதம் செய்தபோது, அவன் ரத்தம் தெறித்து, இவரின் மேனி சிவப்பானதாம்! அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மைக்கும் பூஜைகள் தொடங்கும் முன்னர், இவருக்கு பூஜைகள் செய்யப் பெறும். சாயரட்சை பூஜையில் அதிர்வேட்டும் உண்டு. அதெல்லாம் சரி, சம்பந்த விநாயகர் என்ற திருநாமம் ஏன்? 'சம்பந்தாண்டார் இந்தச் சந்நிதியை அமைத்திருக்கக்கூடும்; எனவே, அவரது பெயரும் சேர்ந்து
இவர் சம்பந்த விநாயகர் ஆகிவிட்டார் போலும்!' என்கிறது வல்லாள மகாராஜா காலத்து கல்வெட்டு!
ஐந்து கரத்தானை வழிபட்டு, அப்படியே பார்வையைத் திருப்பினால், முகப்புக்கு வலப் புறத்தில் அருள்மிகு பழநியாண்டார் சந்நிதி. முருகப் பெருமானை வணங்கி, துவாரபாலகர்களைப் பணிந்து உள்ளே சென்றால், ஸ்வாமி சந்நிதியின் 2-ஆம் பிராகாரம். ஏராளமான லிங்கங்கள். சைவ நால்வர், சனகாதியர்கள் வழிபட்ட சனகேஸ்வரர், சனந்தேஸ்வரர், சனாதனேஸ்வரர், சனத்குமாரேஸ்வரர், தொடர்ந்து பல்வேறு மகான்கள் வழிபட்ட கௌசிகேஸ்வரர், குஞ்சரீஸ்வரர், வனீகேஸ்வரர், வாமேஸ்வரர், விக்னேஸ்வரர், நாரதேஸ்வரர், வைசம்பாயனேஸ்வரர், அஷ்டதிக்கு லிங்கங்கள், அறுபத்து மூவர், சப்த மாதர்கள், சோமாஸ்கந்தர், சந்திர சேகரர், வேணுகோபால சுவாமி, கஜலட்சுமி, ஆறுமுகர், பிட்சாடனர் என்று பல சந்நிதிகள்.
விஸ்வாமித்திரர், அகத்தியர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் ஆகியோர் வழிபட்ட லிங்க மூர்த்தங்களும் ஸ்ரீஜ்வரஹரேஸ்வரர் மூர்த்தமும் நடராஜ சபையும்கூட இந்தப் பிராகாரத்தில் உண்டு. மழு, சூலம், கபாலம், பாசம் ஏந்திய காலசம்ஹாரரின் திருமேனியும், நாய் வாகனத்துடன் காட்சி தரும் கால பைரவரின் திருமேனியும் கம்பீரமாக இருக்கின்றன. 2-ஆம் பிராகாரத்தின் மேற்குப் பகுதி விநாயகர் திருமேனி, சோழப் பேரரசியாம் செம்பியன் மாதேவியாரால் அமைக்கப்பட்டது. வேணுகோபால ஸ்வாமி சந்நிதி, அண்ணாமலையார் மூலவர் சந்நிதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ளது.
2-ஆம் பிராகார வலத்தை நிறைவு செய்து, ஸ்வாமி கருவறையின் பக்கம் பார்வையைச் செலுத்தும்போதே, சொல்லொணா பரவசம் சூழ்கிறது. 'அண்ணாமலைக்கு ஹரோஹர' எனும் கோஷம் நாபியிலிருந்து புறப்பட்டு, வெளிப்பட்டுச் சூழ்கிறது. கருவறையின் இருபுறமும் விளக்கு வரிசைகள் ஒளி சேர்க்க, ஜகஜ்ஜோதியாய் அருள்மிகு அண்ணாமலையார்! கருவறையை ஒட்டி, முதல் சுற்றுப் பிராகாரம். மகா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் பிரதோஷ நந்தியைத் தொழுது, அர்த்த மண்டபம் புகுந்து சுயம்புநாதராம் ஸ்ரீஅருணாசலேஸ்வரரைக் காண்கிறோம். அருணாசலேஸ்வரர், அருணகிரியார், சோணாசலேஸ்வரர், அண்ணாநாட்டுப் பெருவுடையார், அண்ணாமலை மாதேவர், அண்ணாமலையான், அருணை மாமணி என்றெல்லாம் போற்றப்படும் அண்ணாமலையார், கனஜோராக தரிசனம் தருகிறார். என்ன அழகு? என்ன மேன்மை? என்ன சுகம்?
- என்று அப்பர் பெருமானும்,
- என்று சம்பந்தப் பெருமானும் சொல்மாலை அணிவித்த அண்ணாமலையார்- ஆஹா! அடி- முடி தேடியவர்களுக்கே கிட்டாதவர், இதோ இவ்வளவு அருகில் அற்புதமாக அருள்பாலிக்கிறார்!
அண்ணாமலையார் என்றால், எளிதில் அணுக முடியாதவர் என்று ஒரு பொருள்; ஆனால், மிக மிக எளிதில் அணுகக்கூடியவராக அருளும் அண்ணாமலையார் அதிசயத்துள்ளும் அதிசயம். தங்கக் கவசமும் நாகாபரணமும் வைர விபூதி நெற்றிப் பட்டமுமாக ஜொலிக்கிறார்!
அண்ணாமலையாரை வணங்கியபடியே உள்சுற்றுப் பிராகாரமான முதலாம் பிராகாரத்தை வலம் வருகிறோம். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா மற்றும் துர்கை. கருவறையின் பின்புற கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் கவனத்தை ஈர்க்கிறார்.
திருமாலும் பிரம்மனும் ஜோதிப் பிழம்பின் அடி- முடியைத் தேடிய நிலையில்தானே லிங்கோத்பவர் தோன்றினார். இந்தச் சம்பவம் நடந்ததே திருவண்ணாமலை தலத்தில்தானே! எனவே, இங்கு லிங்கோத்பவர் வெகு சிறப்பானவர். இவரின் தலைப்பகுதியில் துழாவிக் கொண்டிருக்கும் அன்னத்தைப் பார்க்கிறோம். அன்னம் பறக்கவில்லை; அமர்ந்துகொண்டாற்போல் உள்ளது. சற்றே வியப்பான தோற்றம்; சிற்பியின் தவறு என்கிறார்கள். ஆனால், ஒன்று தோன்றுகிறது... என்னதான் உயர உயரப் பறந்தாலும் திருமுடியைக் காண முடியாது என்பதைப் புரிந்துகொண்ட அன்னம் உட்கார்ந்துவிட்டதோ என்னவோ!
எத்தனை முறை வலம் வந்தாலும், தரிசித்தாலும் 'இன்னும் இன்னும்' என்ற ஆசையைத் தூண்டும் அண்ணாமலையாரைப் பார்த்துக் கொண்டே 2-ஆம் சுற்றுக்குள் வருகிறோம். இதன் வடக்குப் பகுதியிலிருந்து அம்மன் சந்நிதிக்குச் செல்வதற்கு வழியுண்டு.
அருள்மிகு உண்ணாமுலையம்மன் சந்நிதி. பெரிய முன் மண்டபம்; சித்ரகுப்தர் சிலாரூபம். கொடிமரமும் நந்தியும் நவக்கிரகச் சந்நிதியும் இந்த மண்டபத்தில் உள்ளன. அம்மன் சந்நிதியை வலம் வரலாம். பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் உற்ஸவ மூர்த்தங்கள் வைக்கப் பட்டுள்ளன. வலம் வந்து அம்மன் திருமுன்பாக நிற்கிறோம். உண்ணாமுலை அம்மன், அபீதகுசாம்பாள், திருக்காமகோட்டமுடைய தம்பிராட்டி, உலகுடைப் பெருமான் நம்பிராட்டி, காமகோட்டமுடைய உண்ணாமுலையாள் என திருநாமங்கள் கொண்டவள்.
நின்றகோல நாயகியாக, கரங்களில் தாமரை மலர் தாங்கி நிற்கிறாள். சின்னஞ்சிறு பெண் போன்று திருப்பாதங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு நிற்கிறாள்; சாந்தம் தவழும் திருமுகம்; எல்லையற்ற கருணையைக் கொட்டும் விழிகள்... அருள்மிகு உண்ணாமுலையம்மையைப் பார்த்துக்கொண்டே நிற்கிறோம்.
- என்று அம்மையைப் பாடுகிறது உண்ணாமுலையம்மன் பிள்ளைத்தமிழ். 'அம்மா எங்கள் அகமகிழ வருகவே' என்று அழைத்தபடியே அம்மன் திருக்கோயிலைச் சுற்றி வருகிறோம். முன் மண்டபத் தூண்களில் அழகான அஷ்ட லட்சுமிகள்; அதனாலேயே இந்த மண்டபம், அஷ்டலட்சுமி மண்டபம் எனப்படுகிறது.
அம்மன் சந்நிதி மட்டுமல்ல, அம்மனே இங்கு மிகச் சிறப்பானவள். இதுதான், சிவனாரின் வாம பாகத்தாளாக அம்பாள் வடிவம் கொண்ட திருத்தலம். அது எப்போது நிகழ்ந்தது?
அருணாசல மாகாத்மியமும், அருணாசல புராணமும் இந்தக் கதையைப் பெருமிதமாகச் செப்புகின்றன. ஸ்காந்தம் எனப்படும் வடமொழி ஸ்காந்த புராணத்தின் மாஹேஸ்வர காண்டத்தில் சுமார் 37 அத்தியாயங்களில் அமைகிறது அருணாசல மாகாத்மியம்.
பார்வதியும் பரமேஸ்வரரும், திருக்கயிலையில் விளையாட்டாக உரையாடிக் கொண்டிருந்தனர். இறைவனாரின் திருக்கண்களைப் பற்றி அம்பாள் வினவ, அவையே சூரியனும் சந்திரனும் என்று விடையளித்தார் பரமன். அதே விளையாட்டில் ஐயனுடைய கண்களைப் பொத்தி அம்பாள் சிரிக்க, ஐயனும் சிலிர்த்துப் போனார். இருப்பினும் அந்தச் சில கணங்கள் உலகம் இருளுக்குள் மூழ்கியதைக் கண்ட கருணை நாயகி, உயிர்களுக்கு அதனால் ஏற்பட்ட தவிப்புக்கு பிராயச்சித்தம் தேட விழைந்தாள். 'தவம் செய்யவேண்டும்; தக்க இடம் எது?' - அம்மை கேட்க, 'காஞ்சிபுரம்' என்றார் சிவனார்.
அங்கே வந்து மணலால் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள் அம்மை. அம்பாளின் அன்பை உலகுக்குக் காட்டும் விதத்தில் சிவனார் திருவிளையாடல் நிகழ்த்த, கம்பா நதி வெள்ளமெனப் பாய்ந்தது. ஆற்றுவெள்ளத்தில் தாம் அருமைபெருமையாக அமைத்த மணல் லிங்கம் கரைந்துவிடுமோ என்று நடுநடுங்கிய அம்பாள், அப்படியே அதனை ஆலிங்கனம் செய்து 'விடமாட்டேன்' என்று பற்றிக்கொண்டாள். அம்பாளின் பிடியில் ஐயனும் இறுகிக் கொள்ள, ஐயனுக்கு 'தழுவக் குழைந்தநாதர்' எனும் சிறப்புத் திருநாமமே ஏற்பட்டது.
அம்பாளுக்கு நெருடல் ஓயவில்லை. ஐயனிடமிருந்து பிரிந்து தனியாக இருப்பதால்தானே இந்த நிலைமை! அவருடைய திருமேனியுடன் ஒன்றிவிட்டால்...? எண்ணம் உருவான வுடன் அம்மை, ஐயனை வேண்டினாள். கயிலையை விடவும் உயர்ந்த காஞ்சி; அதைவிடவும் உயர்ந்த தலத்தில் தவம் செய்யும்படி ஐயன் ஆணையிட்டார். அப்படியரு தலம் எங்கே?
அத்தகைய தலம்தான் திருவண்ணா மலை. புனிதமான ஒரு தலத்தைப் பற்றி கூறும்படி, நந்திகேஸ்வரரிடம் மார்க்கண்டேயர் கேட்டார். அந்தத் தலத்தைப் பற்றி எண்ணியவுடனேயே சமாதி நிலைக்குச் சென்றுவிட்ட நந்தி, நெடுநேரம் கழித்து எழுந்து சொன்னார்- திருவண்ணாமலை திருத்தலத்தின் பெருமைகளை!
திருவண்ணாமலையின் பெருமைகளைச் சொல்லுமாறு மார்க்கண்டேயர் கேட்க... அந்தத் தலத்தைப் பற்றி எண்ணியதுமே சமாதி நிலைக்குச் சென்றுவிட்ட நந்திதேவர், நெடுநேரம் கழித்து எழுந்து சொன்னார்
''கயிலையும் மேருவும் எம்பெருமான் வாசம் செய்யும் இடங்கள்; ஆயின், அண்ணாமலையே எம்பெருமான் தாமேயாக நிற்கும் தலம்!''
பரமேஸ்வரரும் பரமேஸ்வரிக்கு இந்தத் தலத்தைக் காட்ட, அண்ணாமலையில் தவம் செய்யத் தலைப்பட்டாள் அம்பிகை. அம்பாளின் தவச்சாலை வாசல் திமிலோகப்பட்டது. ஒரே கூட்டம்! பிரம்மாவும் திருமாலும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்தனர். மகிஷாசுரனால் தாங்கள் படும்பாட்டை முறையிட்டனர். அம்பிகை மனம் வைத்தால் மட்டுமே மகிஷன் மடிவான் என்பதை எடுத்துச் சொன்னார்கள். மனம் இரங்கிய அம்பாள், தமது வடிவமாக துர்கையை தோற்றுவித்தாள். மகிஷனை அழித்துவரச் சொன்னாள்.
நீலகிரி மலையில் வாசம் செய்த மகிஷனை அழிப்பதற்காக, நீண்ட வாள் பிடித்து துர்கையும் புறப்பட, மகிஷனுடைய அசுர வீரர்கள், அம்பிகை தவமிருந்த வகுளாரண்யத்தைச் சிதைக்க ஆரம்பித்தனர். இவர்களை, காட்டில் காவலிருந்த அஷ்ட பைரவர்கள் வதம் செய்தனர்.
சினம் எல்லை மீறிய மகிஷன், தனது படைத் தலைவனான நிகும்பாசுரனை அனுப்பினான். நிகும்பனின் கொட்டத்தை, அஷ்ட பைரவர்களும் அம்பாளின் சேடிகளான மந்திரிணியும் வாராஹியும் அடக்கினர். பதினாறு கோடி யானை பலம் கொண்ட சேனையுடன் மகிஷனே போருக்குப் புறப்பட, அவனுடன் கந்தன், நீலன், முகவரன், குருதி, அண்டன், சண்டன், முண்டன், நீசன், மது, தீக்கண்ணன், புகைக்கண்ணன், மாளி ஆகியோரும் புறப்பட்டனர். சிங்க வாகனத்தில் காளி செல்ல, அருணை நாயகி அவளுக்கு முன்பாகக் கட்டியம் கூறிச் செல்ல, காளிதுந்துமி பின்னால் போக, சப்த மாதர்களும் தத்தமது வாகனங்களில் போனார்கள்.
என்னதான் உக்கிரமாகப் போரிட்டாலும் மகிஷனை எதிர்க்க யாராலும் முடியவில்லை. காளிதேவி, அம்பாளை தியானிக்க, மோகினிகள் தோன்றினர். சண்டையின் உச்சத்தில் அசுரனின் சேனை அழிந்தது; துணைவர்கள் அழிந்தனர்; ஆனாலும் அவன் அழியவில்லை!
பற்பல படைக்கலங்களை எடுத்து துர்கை போர் செய்ய, எதற்கும் அஞ்சாத மகிஷன், தானும் பற்பல வடிவங்கள் எடுத்து எதிர்த்தான். 'அசுரன் தனது இயற்கையான எருமைத் தலையுடன் எதிர்ப்படும்போது அவனை மிதித்தால் அழிவான்' என்று அம்பிகை அறிவுறுத்த, அவ்வாறே செய்தாள் துர்கை.
பின்னர், தமது பரிவாரங்கள் புடைசூழ... இத்தனை பெருமையும் இறைவனார் தந்தது என்று அண்ணாமலையை கிரிவலம் செய்தாள் அம்பிகை. அக்னி மலையின் முன் வணங்கினாள்; தெற்கு முனையும் நிருதி முனையும் தாண்டினாள்; மேற்கு முனையை அடைந்தபோது, ஐயன் ரிஷப வாகனராகக் காட்சி தந்தார். வழிபட்டு, அம்மை தொடர்ந்தாள்; ஈசானம் சுற்றி, கிழக்குத் திசையைத் தொட்டவுடன், மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயன் எதிர் நின்றார். 'அப்பனும் அம்மையும் வேறு வேறில்லை; இதனை உலகம் உணரட்டும்' என்றுரைத்த சிவனார், அம்மையைத் தமது இடது பாகத்தில் ஏற்றார். ஆணும் பெண்ணுமாக, அர்த்தநாரியாக, உலகம் உய்ய மாதொருபாகனாகக் காட்சி கொடுத்தார்.
சிவனாரின் வாம பாகத்தை அம்மை பெற்ற அருள் நாளே, கார்த்திகை மாதத்துப் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருநாள். அந்த நாளில் மட்டுமே, உள்ளிருக்கும் அர்த்த நாரீஸ்வரர் திருவீதியுலா வருவார்.
முக்திபுரி, தலேஸ்வரம், சிவலோகம், ஞான நகரம், கௌரி நகரம், தென் கயிலாயம், சோணாசலம், சோணகிரி, அண்ணாத்தூர், அண்ணபுரி, அருணாத்ரி, அனல்கிரி, அருணகிரி, அருணேசம் என்றெல்லாம் பெயர்கள் கொண்ட திருவண்ணாமலையைப் பற்றி, அருணாசல புராணத்தில் மார்க்கண்டேய மகரிஷி மிகப் பெருமையாகக் கூறுகிறார்.
- பிற இடங்களில் மலை மீது பரமன் வீற்றிருப்பார். இங்கோ, மலையாகவே இருக்கிறார். மலையாகவே நின்று விட்டால், சாதாரண பக்தர்களால் உணர இயலாது, பூஜைகளும் அபிஷேகமும் கொள்ள முடியாது என்பதால், சின்னஞ்சிறு லிங்க வடிவில் சுயம்புவாகத் தோன்றி நின்ற இடமே அண்ணாமலையார் திருக்கோயில்.
ஆலயத்தின் வாயிலில் தொடங்கி, மலையாக விளங்கும் சிவனாரைச் சுற்றி, மலை வலம் வருவது இந்தத் தலத்தின் வழக்கம். கிழக்கு வாயிலில் தொடங்கி, மீண்டும் கிழக்கு வாயிலை அடைந்து வலத்தை நிறைவு செய்வது சிறப்பு. ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் மலை சுற்றுவதற்கு மிகவும் சிறப்பானவை என்று முற்காலத்தில் வழக்கிருந்தாலும், ஆண்டின் அனைத்து மாதங்களும், மாதத்தின் அனைத்து நாட்களும் பொருத்தமானவையே.
மலை சுற்றும் முறை என்ன?
கிழக்கு வாயிலில் தொடக்கம். சுற்றி வருகையில், செங்கம் சாலை பிரிகிற இடத்தில் நந்திகேஸ்வரர் சந்நிதி உண்டு. இவரை வணங்குதல் முறை. காரணம், இவர்தாம் மலை வலத்தின்போது நம்மை வழிநடத்தி அதற்கான சக்தியைத் தருபவர். சுற்றுப் பாதையில், அஷ்ட திக் பாலர்களான இந்திரன் (கிழக்கு), அக்னி (தென்கிழக்கு), எமன் (தெற்கு), நிருதி (தென்மேற்கு), வருணன் (மேற்கு), வாயு (வடமேற்கு), குபேரன் (வடக்கு), ஈசானன் (வடகிழக்கு) ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. அவரவர் பெயர்களாலேயே இவை அறியப்படுகின்றன.
துர்வாச மாமுனி, இந்த மலையடிவாரத்தில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்தார். ஒருமுறை, அவரது ஆசிரமப் பகுதிகளில் உலாவிய காந்திசாலி, கலாதரன் எனும் இரண்டு வித்தியாதரர்கள், நந்தவன மலர்களைப் பறித்து அட்டகாசம் செய்தனர். சினம் கொண்ட முனிவர், அவர்களை பூனையும் குதிரையும் ஆகும்படி சபித்தார். சாப விமோசனம் கேட்டபோது, 'அண்ணாமலையை கிரிவலம் வருவதுதான் விமோசனம்' என்றார். அரசன் வஜ்ராங்கதனுடைய குதிரையாகவும், காட்டுப் பகுதிகளில் திரியும் புனுகுப் பூனையாகவும் இருவரும் ஆயினர்.
அரசன் ஒருநாள் வேட்டைக்குப் புறப்பட்டான். அந்தக் காட்டில், புனுகுப் பூனை கண்ணில் பட, அதனை விரட்டினான். தப்பிக்க நினைத்த பூனை மலை வழியில் ஓடியது. அதனை விரட்டிக்கொண்டே குதிரையும் ஓட, அரசன் கீழே விழுந்துவிட, மலையைச் சுற்றி வந்த பூனையும் குதிரையும் மீண்டும் வித்தியாதரர்கள் ஆனார்கள். வாகன உதவியில்லாமல் அரசனும் அவ்வாறே மலை சுற்றினால், இழந்த அழகும் செல்வமும் பெற்று வளமாக வாழலாம் என்பதையும் அவனுக்குக் கூறினார்கள். அதன்படியே செய்த வஜ்ராங்கதன் நற்கதி பெற்ற வரலாற்றை அருணாசல புராணம் கூறும். சூரியனும் பிரம்மாவும் கூட மலை வலம் செய்து தத்தமது பாவங்களைப் போக்கிக் கொண்டனர்.
துர்வாசருக்கும் இங்கே கோயில் உண்டு. இங்கே ஒரு வினோத வழக்கம்... கற்களைக் கொண்டு வீடுபோல் அமைப்பைச் செய்கின்றனர். அதன் மீதோ, உள்ளோ விளக்கேற்றுகின்றனர். துர்வாசரிடத்தில் குந்திதேவி வந்தாளாம். அப்போது, உபதேசத்துக்குப் பின்னர், அவளிடம் ஐந்து கற்களைக் கொடுத்தாராம் முனிவர். அவற்றைக் கொண்டு வீடுகள் கட்டி அவளும் அவளின் பிள்ளைகளும் நன்கு வாழ்ந்தனராம். இந்த ஐதீகத்தின்படியே, கல்மாடங்கள் அமைத்து மக்களும் விளக்கேற்றுகின்றனர். இதனால், வீடு கட்டும் யோகமும் திருமண யோகமும் பிள்ளைச் செல்வமும் கைகூடும் என்பது நம்பிக்கை.
கிரிவலப் பாதை நெடுகிலும் ஆலயங்கள், ஆலயங்கள், ஆலயங்கள்! விநாயகர் தனி ஆலயங்கள், முருகப் பெருமான் கோயில்கள், அஷ்ட லிங்கக் கோயில்கள், காளியம்மன்- மாரியம்மன் ஆலயங்கள், நந்திதேவர் மண்டபக் கோயில்கள், ஆசிரமக் கோயில்கள், திருப்பாத மண்டபங்கள், பண்டைய முனிவர் சந்நிதிகள், நாயன்மார் கோயில்கள், கண்ணப்பர் கோயில், மாணிக்கவாசகர் ஆலயம், வீரபத்திரர், முனீஸ்வரர், நவக்கிரகக் கோயில்கள், மலைக் காட்சி, பஞ்ச முக தரிசனம்... என இன்னும் உண்டு!
அண்ணாமலையில் அடிக்கொரு சிவலிங்கம் என்பார்கள்; மலை வலப் பாதையில் அடிக்கொரு ஆலயம் என்றும் சொல்லலாம். குபேர லிங்கத்துக்கு அருகிலுள்ள இடுக்குப் பிள்ளையார் ஆலயம் வெகு பிரசித்தம். பிள்ளைப்பேறு வேண்டி இங்கு வருபவர்கள் ஏராளம்.
போகர், புலிப்பாணி, குதம்பை ஆகிய சித்தர்கள் இங்கே மலை வலம் செய்துள்ளனர் என்றாலும், இடைக்காடர் இந்த ஊரைச் சேர்ந்தவர்.
பௌர்ணமி நாளில் கிரிவலம் செய்தல், பிறவித் துயரைத் தீர்க்கும். கார்த்திகை தீபத் திருநாளில் ஐந்து முறை மலை வலம் வந்தால், எத்தனை பாவமாயினும் விமோசனம் கிட்டும். பரணி தீபம் ஏற்றப்படும் அதிகாலை மூன்று மணி, காலை ஏழு மணி, மதியம் பன்னிரண்டு மணி, மாலை ஆறு மணி, இரவு பதினோரு மணி... என்று ஐந்து முறை கிரிவலம் செய்வார்கள். கிரிவலத்தின் இடை இடையே அருணாசல மலையைக் கண்ணார தரிசிக்க வேண்டும்.
திருவண்ணாமலை என்றவுடன் பலருக்கும் நினைவு வருவது கார்த்திகை தீபப் பெருவிழாவும் ஏனைய பல திருவிழாக்களும்தாம்! சித்திரை வசந்த விழா, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆனி மாதத்திலேயே பத்து நாட்கள் கொண்டாடப் பெறும் தட்சிணாயனப் பெருவிழா, தீர்த்தவாரி, வளைகாப்பு ஆகியவற்றுடன் கூடிய ஆடிப் பூர பத்துநாள் விழா, ஆவணி மூல பிட்டுத் திருவிழா, புரட்டாசி சதுர்த்தி, ஐப்பசி அசுவினித் திருவிழா, கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா, தை திருவூடல், மாசி மகம், சிவராத்திரி, பங்குனி உத்திரப் பெருவிழா என்று எண்ணற்ற விழாக்கள்.
நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கு என்று பண்டைய இலக்கியங்களால் போற்றப்படும் கார்த்திகை தீபத் திருவிழா, இந்தத் தலத்தின் சிறப்பு மிக்கப் பெருவிழா. சிவபிரான் முப்புரம் எரித்த திருநாள், திருமால் வாமனராகத் தோன்றி மகாபலியை அமிழ்த்திய நாள், அம்பிகை வாமபாகம் பெற்ற நாள், யார் பெரியவர் என்று போட்டி போட்டவர்க்கு இடையே ஜோதி சொரூபம் தோன்றிய நாள்... என்று கார்த்திகைத் திருநாளின் மகத்துவங்கள் ஏராளம்.
கொடியேற்றத்தின்போது பஞ்சமூர்த்திகளான ஸ்ரீஅண்ணாமலையார், ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர், ஸ்ரீசண்டேசர் ஆகியோர் கொடி மரத்தின் அருகில் எழுந்தருளுவர். ரிஷபக் கொடி ஏற்றப்படும். இரண்டாம் நாள் திருவீதியுலா மற்றும் வெள்ளி இந்திர விமானக் காட்சி, மூன்றாம் நாள் பூத வாகனத்துடன் சிம்ம, வெள்ளி, அன்ன வாகனக் காட்சிகள், 4-ஆம் நாள் நாக, கற்பக விருட்ச, காமதேனு வாகன உலாக்கள், 5-ஆம் நாள் மூஷிக, மயில் மற்றும் வெள்ளி ரிஷப வாகன உலா, 6-ஆம் நாள் அறுபத்து மூவர் உலா மற்றும் வெள்ளி ரதம், 7-ஆம் நாள் மகாரதம், 8-ஆம் நாள் குதிரை வாகனம், 9-ஆம் நாள் கயிலாய வாகனம் ஆகியவை நடைபெறும். 10-ஆம் நாள் அதிகாலையில் சந்திரனும் பரணி நட்சத்திரமும் இணைந்திருக்கும் வேளையில் பரணி தீபம் ஏற்றப் பெறும். அண்ணாமலையார் சந்நிதியில் கற்பூர தீபம் முதலில் ஏற்றப்படும். பின்னர், அதிலிருந்து ஐந்தைந்தாக நெய் தீபம் ஏற்றப்படும். பின்னர் அவற்றிலிருந்து பல்வேறு சந்நிதிகளின் தீபங்களும் ஏற்றப்படும். இறைவன் ஒன்றாக- ஒருவனாக இருந்து, பின்னர் பஞ்சபூதங்களாகி பலவாறாகக் காட்சி கொடுப்பதை உணர்த்துவதற்காக இந்த ஏற்பாடு!
கார்த்திகை விளக்கீடான கார்த்திகைத் திருவிழா வெகு கோலாகலம். முதலில் பஞ்ச மூர்த்திகள் அலங்கார ரூபர்களாக காட்சி மண்டபத்தின் அருகில் கொடி மரத்தடியில் எழுந்தருள்வர். தீபம் ஏற்றப்படுவதற்கு ஏறத்தாழ இரண்டு மூன்று நிமிடங்களுக்கு முன்னர் (மாலை 558 - 559 வேளையில்) வேணுகோபாலன் சந்நிதிக்கு அருகில் இருந்து புறப்பட்டு ஆடிக்கொண்டே அர்த்தநாரீஸ்வரர் வருவார்.
ஆட்டமாக ஆடிக்கொண்டே வரும் அர்த்த நாரீஸ்வரர், பஞ்சமூர்த்திகளை நெருங்கியதும், வந்த வேகத்திலேயே உள்ளே செல்ல... அவரது தரிசனம் கிட்டிய தருணம், மலை மீதிருக்கும் பர்வத ராஜகுலப் பெருமக்கள், கார்த்திகை பெருந் தீபத்தை ஏற்றுகின்றனர். ஆறடி உயரமான கொப்பரையில், மலைமீது ஏற்றப்படும் தீபம், மகாதீபமாகத் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்!
அண்ணாமலையார் மகாதீபம் ஏற்றப்படுவதைத் தொடர்ந்து பிற ஆலயங்களிலும் ஊர்களிலும் தீபம் ஏற்றப்படும். உயரமான பனையை நட்டு அதன்மீது கொப்பரை வைத்து சொக்கப் பனை (சொக்கநாதருக்கான பனை அல்லது மொத்தமாகச் சொன்னால், சொக்கப்பனான இறைவனை ஏற்றுதல்) ஏற்றுவார்கள்.
கார்த்திகை அன்று ஜோதியாகத் தோன்றி சிவராத்திரி அன்று லிங்கோத்பவர் ஆனார் என்றும், சிவராத்திரி அன்று ஜோதியாகி கார்த்திகை அன்று லிங்கோத்பவர் ஆனார் என்றும் இருவிதமாகக் கூறப்பட்டாலும்... இந்த இரண்டு நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களுமே அண்ணாமலையாருக்கு உகப்பான நாட்கள்தான்! மகிஷனை வதம் செய்த பாவம் தொலைய, காளிதேவியும் கட்க தீர்த்தத்தை ஏற்படுத்தி, அதில் மூழ்கி வழிபட்டு, கார்த்திகை தீபமேற்றினாளாம்.
திருவண்ணாமலை திருக்கோயிலைச் சுற்றிச் சுற்றி வருகிறோம். எத்தனை முறை சுற்றினாலும் இன்னும் சுற்ற வேண்டும் என்கிற பேரவா. மலையைச் சுற்றி வரும் போதும், அதே அவா நெஞ்சில் மண்டுகிறது. மலை வலத்தில், அடி அண்ணாமலையாரையும் தரிசிக்கிறோம். இடைக்காடரும் குரு நமசிவாயரும் குகை நமசிவாயரும் சேஷாத்ரி சுவாமிகளும் ரமண மகானும் யோகி ராம்சுரத்குமாரும் அம்மணி அம்மாளும் வல்லாள மகாராஜாவும் அருணகிரியாரும் உள்ளத்தில் வந்து வந்து எட்டிப் பார்க்கின்றனர். பிரகாசமாய் அன்றெழுந்த
பரஞ்ஜோதிக்கு மட்டுமா எல்லையில்லை? உள்ளும் புறமும் பரவும் பரவசத்துக்கும் கூடத்தான் எல்லையே இல்லை!
|
No comments:
Post a Comment