Friday, 11 August 2017

திருநெடுங்களம்



வீராதி வீர, சோழ குல திலக, செம்பியன் மாதேவ வங்கியராய மன்னர், சற்றே கவலை பூத்த வதனத்துடன் நின்றிருந்தார். மனம் கனத்தது. என்னதான் அறிவு சமாதானம் சொன்னாலும், மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. 'இப்படிச் சொல்லி விட்டார்களே!'
வேறொன்றுமில்லை. நேற்று வங்கியராய மன்னர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றபோது, ஊர்மக்கள் சிலர் பேசிக் கொள்வதைக் கேட்க நேர்ந்தது. அது ஒரு கல்யாணக் கூட்டம். ஆண்களும் பெண்களுமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மன்னர் போன நேரம், பேச்சு சிவப் பரம்பொருளைப் பற்றியதாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் யாரோ ஒருவர், லேசான மதர்ப்பில் இருந்தாரோ என்னவோ, கடுமையான சொற்களைக் கொட்டி விட்டார்.
'சிவபெருமான் வேடதாரியாம்; சுடுகாட்டுக் கோவணாண்டியாம்; பரதேசியாம்; கபால மாலை யும் சுடுகாட்டுச் சாம்பலும் தரித்து ஆட்டம் போடும் அன்னக் காவடியாம்.'
அவர் ஏன் இப்படிச் சொன்னார், எதற்காக அவ்வளவு ஆவேசப்பட்டார் என்றெல்லாம் விசாரிக்கும் பொறுமை வங்கியசோழருக்கு இல்லை. இந்தச் சொற்கள் காதில் விழுந்த மாத்திரத்திலேயே, அந்த இடத்தில் இருந்து ஓடோடி நகர்ந்து விட்ட மன்னருக்கு, அதற்குப் பின்னர் நிம்மதியே இல்லை. 'இப்படிச் சொல்லி விட்டாரே!' மனமும் அறிவும் மாறி மாறி ஓலமிட்டன. 'சிவ பெருமானா அன்னக்காவடி?' மனம் இவ்வாறு துடித்த போதெல்லாம், அறிவு சமாதானப்படுத்தியது. 'பரம்பொருளை யாரும் அன்னக்காவடி ஆக்க முடி யுமா? அவர் பிட்சாடனர் வேடம் போட்டதே நமக்காகத்தானே! புரியாமல் பேசுபவர்கள் பேசிவிட்டுப் போகட்டும்; ஒரு நாள் உணர்வார்கள்.'
ம்... ஹும்! என்னதான் சமாதானம் சொன்னாலும், மனம் மட்டும் அடங்க மறுத்தது. 'முக்கண்ணப்பா, நீ எதற்கு இப்படி ஊர் வாயில் விழுந்து எழுகிறாய்? மனித குலம் எதை அழகு என்று எடை போடுகிறது என்பது உனக்குத் தெரியாதா? பின்னர் ஏன், புலித் தோலை அணிந்து, சாம்பல் பூசி, சுடுகாட்டில் ஆடி... அழகனாகக் காட்சி தந்துவிட்டால், இந்தப் பேச்செல்லாம் வராதுதானே!' - பரிதவித்துப் பரிதவித்து வங்கியசோழன் வைத்த வேண்டுகோள், பரமனார் காதிலும் விழுந்தது.
பாம்புகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பரமனார், வங்கிய சோழனின் வருத்தம் கண்டு திகைத்தார். 'இத்தனை அன்பா? யாரோ, ஏதோ பேசினார்கள் என்று விடாமல், அதற்காக இவ்வளவு வருந்தி... வங்கிய சோழனைப் பற்றி ஊர் உலகத்துக்கே நன்கு தெரியும். தாயாதி சண்டையில் சேதி நாட்டுப் பகுதியையே விட்டுக் கொடுத்தவன்; அதன் விளைவாகக் கோயில் மரியாதைகளையும் விட்டுக் கொடுத்தவன். அவனுடைய மனம், பதவிக்காகவோ அதிகாரத்துக்காகவோ மாலை- மரியாதைக்காகவோ அல்லாட வில்லை. ஐயன் பரமனாரைப் பற்றிப் பேசிவிட்ட அவதூற்றுச் சொல்லை, அவனால் தாங்க முடியவில்லை.'
வங்கியசோழரின் மனதை மகிழச் செய்ய என்ன செய்யலாம் என்று திட்டமிடத் தொடங்கினார் திருவாளர் சிவனார். ஆனால், அவரது திட்டத்துக்கு இடம் கொடாமல், வங்கியசோழரே விண்ணப்பம் வைத்தார்.
'உன்னைக் கோவணாண்டி என்று இவர்கள் பேசியதை, இல்லை என்றாகும்படி அழகனாக, ஆலால சுந்தரனாக நீ காட்சி தரவேண்டும். கண் குளிர அதை இங்கு எல்லோரும் காண வேண்டும்!'
பிட்சாடனராக, கபால மூர்த்தியாக, புலித்தோல் பிரானாக, சபாநாதராக... பக்தர்கள் கேட்டவிதமெல்லாம் கோலம் புனையும் பரமனுக்கு, இந்த ஒரு வேண்டுகோள் போதாதா? அவ்வளவுதான். அழகு சுந்தரனாகப் புறப்பட்டு விட்டார். அண்ட- பகிரண்டத்து அழகெல்லாம் ஒன்று திரண்டு, ஓர் உருக் கொண்டு, தண்டையும் சலங்கையும் 'கிண் கிணி' கொட்ட, இடையில் வெண்பட்டுத் துகில் விரிந்து பளபளக்க, பொன்னார் மேனியில் பொன் ஆபரணங்கள் மிளிர்ந்து துலங்க, அழகு மகனாக, ஆனந்த மூர்த்தியாகக் காட்சி தந்தார்.
வங்கியசோழன் வேண்டுகோளுக்கு இணங்கி அழகு மூர்த்தி அருள்காட்சி தந்த இடம் எது?
அந்த இடமே, அன்னை பார்வதி தவம் செய்து ஐயனின் கைத்தலம் பற்றிய இடமும் ஆகும்.
இதுவே, அகத்தியர் வழிபட்ட தலமும்கூட!
திருஞானசம்பந்த பெருமான் 'இடர் களையும் பதிகம்' பாடிய பெருமைமிகு பதியும் இதுவே.
எங்கே என்கிறீர்களா? வாருங்கள், திருநெடுங்களம் போவோம். திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ளது திருநெடுங்களம். திருச்சி- தஞ்சாவூர் சாலையில், துவாக்குடியை அடைந்து, அங்கிருந்து வடக்காகத் திரும்பி, சுமார் 3 கி.மீ. சென்றால், திருநெடுங்களத்தைச் சேரலாம். திருவெறும்பூர் என்ற திருத்தலத்துக்கு அருகில் உள்ள இந்தக் கோயில், நிர்வாக ரீதியாக, திருவெறும்பூருடன் சேர்த்து வைக்கப்படுகிறது.
திருச்சி- சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உண்டு (மேலமாங்கா வனம், கீழ மாங்காவனம் செல்லும் பஸ்கள் திருநெடுங்களம் வழியாகச் செல்கின்றன). சில தருணங்களில் மக்கள், புழக்கத்தில் நெட்டாங் குளம் என்று அழைத்தாலும் பெயர்ப் பலகைகள் 'திருநெடுங்களம்' எனும் பழைய பெயரைத் தாங்கியே உள்ளன. சிறிய ஊர். திருக்கோயிலை அடைகிறோம்.
'தொட்டுத் தடவித் துடிப்பொன்றும் காணாது
பெட்டப் பிண மென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழை மடநெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை' என்று ஐயடிகள் காடவர்கோன் இந்தத் தலத்து இறைவனைப் பாடுகிறார். மூர்த்தி- தலம்- தீர்த்தச் சிறப்புகள் கொண்ட நெடுங்களத்தின் ராஜ கோபுரம் முன்னே பணிகிறோம். ஐந்து நிலை கொண்ட கிழக்கு ராஜ கோபுரமே பிரதான வாயில். கோபுரத்துக்கு வெளியிலேயே, ஒரு பக்கம் விநாயகர் சந்நிதி; மற்றொரு பக்கம் சுப்ரமணியர் சந்நிதியும், கருப்பண்ண சுவாமி சந்நிதியும். கருப்பண்ண சுவாமி சந்நிதிக்கு எதிரில், கோயில் தீர்த்தங்களுள் ஒன்றான சுந்தர தீர்த்தம். கருப்பண்ண சுவாமிக்கு பானகம் நைவேத்தியம் செய்து, பலருக்கும் வழங்கி வழிபட்டால், நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. பலரும் இதை செய்வதைக் காணலாம்.
ராஜ கோபுரத்தின் வழி உள்ளே நுழைந்தால், எதிரில் கொடிமரம்- பலி பீடம்- நந்தி. வலப் பக்கத்தில் தெற்கு நோக்கியதாக அம்பாள் சந்நிதி. இடப் பக்கத்தில் நந்தவனம். நாம் இப்போது நிற்பதே வெளிப் பிராகாரம். இந்தப் பிராகாரத்தில் இருந்து உள் பிராகாரம் செல்வதற்கு, மூன்று நிலைகளுடன் கூடிய உள் கோபுரத்தைத் தாண்ட வேண்டும். உள்ளே சென்றால், உள் பிராகாரம்.
வலம் வரத் தொடங்குவோமா?
கிழக்குச் சுற்றுக்குள்தானே நுழைந்தோம்... அங்கேயே தொடங்குவோம். முதலில் சூரியன்; அடுத்து, மெய்க் காவல் அறை. தென்கிழக்கு மூலையில் கோயில் மடைப்பள்ளி. கிழக்குச் சுற்றில் அடுத்ததாக, சைவ நால்வர் பெருமக்கள். பக்கத்திலேயே சேக்கிழார். சமீப காலத் திருப்பணி களின்போதுதான் சேக்கிழாரைச் சேர்த்தார்களாம். நல்ல சங்கதிதான்.
கிழக்குச் சுற்றுக்குள் திரும்பும்போது, நமக்கு இடப் பக்கத்தில் திருக்கோயில் அலுவலகம்; வலப் பக்கத்தில், கிழக்குப் பார்த்த சோமாஸ்கந்தர் சந்நிதி. சோழர் காலக் கட்டுமானத்தின் சிறப்பை, இந்தக் கோயிலின் உள் பிராகாரத்திலும் காண முடிகிறது. திருச்சுற்று மாளிகை மிக அழகாக அமைந்துள்ளது.
கிழக்குச் சுற்றில் வரிசையாக அப்புலிங்கம், வாயு லிங்கம், கோப்புலிங்கம். தொடர்ந்து ஐயனார் மற்றும் சப்தமாதர்கள். அடுத்து ஒரு விநாயகர்; மீண்டும் சிறிய அளவுகளில், சப்த மாதர்கள். சப்த மாதர்களில் ஒருவரான வாராஹிக்கு இங்கே சிறப்பு வழிபாடு நடக்கிறது. அம்பிகை பராசக்தியின் பணிப்பெண்களில் ஒருவரான வாராஹி, தண்டநாதா என்றும் அழைக்கப்படுகிறார். தவறு செய்தால் தண்டிக்கக் கூடிய அதிகாரத்தை, அம்பிகை வாராஹிக்கே தந்துள்ளார்.
இதனால், அம்பிகையின் நிர்வாகத் தொண்டர்களில் ஒருவராக விளங்கும் வாராஹி, திருமணத் தடைகளை நீக்குவ தாக ஐதீகம். திருநெடுங்களத்தில் இதைக் கண்கூடாகக் காண முடிகிறது. வாராஹி திருமேனி முழுவதும் மஞ்சளாகத் தோற்றம்
தருகிறது. மஞ்சள் நீரால் வாராஹிக்கு அபிஷேகித்து, அந்த நீரைக் கன்னிப் பெண்களின் தலையில் தெளித்தால், விரைவில் திருமணம் கைகூடும்.
தென்மேற்குப் பகுதியில், தெற்குச் சுற்றில் இருந்து மேற்குச் சுற்றுக்குள் திரும்பும் இடத்தில், கிழக்குப் பார்த்த (திருமாளிகை அமைப்புக்குள் இல்லாமல் பிராகார தளத்தில்) விநாயகர் சந்நிதி. இவர் வலம்புரி விநாயகர். மேற்குப் பிராகாரத்திலேயே, திருமாளிகைக்குள், வள்ளி- தெய்வானையுடன் கூடிய அருள்மிகு சுப்ரமணியர். நான்கு திருக்கரங்களுடன் எழில்
கொஞ்சுகிற சுப்ரமணியர். இவரைத்தான் அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடிப் பரவுகிறார்.
'இந்து நுதலும் புரள கங்குல் மேகம்
அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள
அம்பொன் உரு மங்கை மணம் உண்ட பாலா -
அன்பர் குலவும் திருநெடுங்கள வளம் பதியில்
அண்டர் அயனும் பரவு தம்பிரானே' என்று திருப்புகழ் போற்றும் சுப்ரமணியரை வணங்கி நகர்கிறோம். மேற்குச் சுற்றின் வடபகுதியில், தேவி- பூதேவி சமேத வரதராஜப் பெருமாள். அமர்ந்த கோலநாதர். மருகனான முருகன் அழகென்றால், மாமனான அழகரும் அழகுதானே! இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அழகை நிறைக்கிறார்கள். வட மேற்கு மூலையில் ஜ்யேஷ்டாதேவி சந்நிதி.
திருமகளுக்கு மூத்த சகோதரிக்குத்தான் ஜ்யேஷ்டா என்று பெயர் (ஜ்யேஷ்டம் - மூத்த). கையில் துடைப்பமும் முறமும் தாங்கியவளான ஜ்யேஷ்டா, நமது தீமைகளைக் கூட்டி, அள்ளி, வாரிப் போட்டு விடுகிறாள்.
அழகு என்று நாம் சாதாரணமாகச் சொல்லும் தன்மையை ஜ்யேஷ்டா விடம் காண முடியாதுதான்... ஆனால் ஏதோ ஒரு கரிசனம் அவளிடத்தில் புலப்படுகிறது.
வடக்குப் பிராகாரத்தில் திரும்பி நடக்க, இந்தச் சுற்றின் நடுநாயகமாக அகத்தீஸ்வரர் சந்நிதி. அகத்தியர் வழிபட்ட லிங்கம். கிழக்குப் பார்த்த அகத்தீஸ்வரருக்கு முன்னால் நந்தியும் உண்டு.
அகத்தீஸ்வரர் சந்நிதிக்குச் சற்றே கிழக்கில், சிறிய கிணறு. இதுதான் அகத்திய தீர்த்தம். அகத்தியர், இந்தத் தலத்தில் தவம் செய்தார். தமது நகத்தால் கீறி இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கினார். அருகில், தல மரமான வில்வம்.
வடக்குச் சுற்றிலேயே தொடர்ந்து நடக்கிறோம். தெற்கு நோக்கிய நடராஜ சபை. எதிரில், நவக்கிரகச் சந்நிதி. சற்றே வித்தியாசமான நவக்கிரகங்கள். தன் இரு தேவியர்கள் உடனாய சூரியன் மேற்கு நோக்கி உள்ளார். மற்ற கிரகங்கள் சூரியனைப் பார்த்தபடி உள்ளனர். வட கிழக்கு மூலையில் கால பைரவர். அடுத்து மற்றொரு பைரவர் சந்நிதி.
வலத்தை நிறைவு செய்து உள் வாயிலை அடைகிறோம். மூலவர் சந்நிதிக்குச் செல்லும் வழி. வாயிலின் இரு பக்கங்களிலும் விநாயகரும் சுப்ரமணியரும். வணங்கி உள்ளே நுழைந்தால், மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய கருவறை. மகா மண்டபத்தில், ஒருபுறத்தில் சந்திரசேகரர்; மற்றொரு புறத்தில் உற்சவ மூர்த்தங்கள்.
மகா மண்டபத்தில் கருவறைக்கு முன்னால் உள்ள சிறிய நந்தியிடம் வழி பட்டு, அனுமதி வாங்கிக் கொண்டு, அர்த்த மண்டபத்துள் புகுகிறோம். உள்ளே கருவறையில்... அடடா, என்ன அழகு என்ன அழகு! அருள்மிகு நெடுங்களநாதர். சுயம்பு லிங்கம். சதுர பீட ஆவுடையார்; சிறிதே பள்ளத்தில் இருக்கும் குட்டையான லிங்கம்.
'நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று உடல் 
கூற்றுதைத்த
பொன்னடியான் பரவி நாளும் பூவொடு நீர் 
சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் 
நெடுங்களமேயவனே 

_ என்று ஞானசம்பந்தர் போற்றுகிற சிவலிங்கம்.
திருநெடுங்களத்துக்கு திருஞானசம்பந்தர் பதினோரு பாடல்கள் கொண்ட ஒரு பதிகம் பாடியுள்ளார். ஒவ்வொரு பாடலின் கடைசி வரியிலும், 'இடர் களையாய்' என்று குறிப்பிடுகிறார். அதனாலேயே, இது 'இடர் களையும் பதிகம்' எனப்படுகிறது. சுவாமிக்கும் 'இடர் களை நாதர்' எனும் திருநாமம் ஏற்பட்டு விட்டது.
சுவாமியின் மற்றொரு திருநாமம்- நித்திய சுந்தரேஸ்வரர். வங்கிய சோழனுக் காக அழகு சுந்தரராகக் காட்சி கொடுத்தார் இல்லையா? அப்போது, 'என்றும் எப் போதும் இப்படி அழகனாகவே இங்கு அருள் வழங்க வேண்டும்!' என்ற கோரிக் கையை சோழ மன்னர் வைக்க, அதற்கு இறைவனும் ஒப்புக் கொண்டார். அதனால், தன் பக்தர்களுக்காக சிவ பெருமான் பல வித வேடங்களைத் தாங்குகிறார் என்பதை தமது பதிகத்தில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்.
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்
நான்கு உணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ் சடைமேல்
கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதா இடர் களையாய் 
நெடுங்களமேயவனே!'
ராவணன் கதை, மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்தது, முப்புரம் எரித்த வரலாறு, அடி- முடி தேடிய நிகழ்வு, ஆலகாலம் அருந்தியது என்று சம்பவங்கள் பலவற்றையும், இந்தப் பதிகத் தில் அவர் போற்றியுள்ளார்.
வனப்பானவராக அருள் வழங்கும் நெடுங்களத்து அப்பனை வணங்குகிறோம். கருவறை உட்புறம், அறுகோணமாக அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் உள் பிராகாரத்தை வலம் வருகிறோம். இந்தக் கோயில், பல்லவர் காலத்திலேயே பெரிதாக விளங்கியுள்ளது. பின்னர் ஆதித்த சோழன் தொடங்கி, ராஜராஜன் தொடர்ந்து, மூன்றாம் ராஜ ராஜன் வரையான சோழர்களும், சுந்தர பாண்டிய னும், போசள மன்னன் வீரநாதனும், விஜயநகர மன்னர்களும் திருப்பணிகள் செய்துள்ளனர்.
தெற்கு கோஷ்டத்தில் எழுந்தருளி உள்ள யோக தட்சிணாமூர்த்தியைக் கண்டிப்பாக தரிசிக்க வேண் டும். நான்கு திருக்கரங்கள். மேல் கரங்களில், மானும் மழுவும்; வலது கீழ்க் கரத்தில் சின்முத்திரை; இடது கீழ்க் கரத்தில் தீச்சுடர். இடது காலை முழுவதுமாக மடக்கி, அதன் மீது வலது காலை வைத்திருக்கிறார். இடது காலைச் சுற்றி யோகப் பட்டம். இதற்கு சித்தாசனம் என்று பெயராம். ஞானம் போதிக்கிற தட்சிணாமூர்த்திக்கு முன்னே, இரண்டு முனிவர்கள் அமர்ந்து உபதேசம் பெறுகின்றனர்.
மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரரான அம்மையப்பர். இது பிற்காலத்தில், தனியாக வைக்கப் பட்ட மூர்த்தம். வேறு கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. சுற்றி வந்து மூலவர் கருவறை முன்பாக நிற்கிறோம். மகா மண்டபத்தில் கல் உரல் ஒன்று காணப்படு கிறது; சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், ராகு காலத்தில் இந்த உரலில், விரலி மஞ்சள் அரைத்து வாராஹி அம்மைக்கு அபிஷேகம் செய்தால், திருமணம் கை கூடும்.
திரும்பி, மூலவரை காணக் காண பேரின்பம். நெடுங்களத்து மகாதேவர், நெடுங்களத்து ஆழ்வார், நெடுங்களம் உடையார், நெடுங்களம் உடைய தம்பிரான் என்றெல்லாம் கல்வெட்டுத் திருநாமங்கள் கொண்ட இவருக்கு நிழலார்சோலை வனம் உடை யார் என்றும் ஒரு திருநாமம் உண்டு. இதென்ன திருநாமம்?
வாருங்கள். இந்தக் கதையைத் தெரிந்து கொள்ள, அம்பாள் சந்நிதிக்குச் செல்வோம்.
வெளிப் பிராகாரத்தில் இருக்கிறது அம்பாள் திருச் சந்நிதி. முன் மண்டபத்துடன் கூடிய தெற்கு நோக்கிய சந்நிதி. நின்ற கோல நாயகியான அம்பாளுக்கு நான்கு திருக்கரங்கள். அபயமும் வரமும் தாங்கிய அம்மை மங்களநாயகி, தமது மேலிரு கரங்களில் தாமரை மலர் தாங்கியவள்.
இந்தத் தலத்தில், சிவப் பரம்பொருளை நோக்கி அம்மை தவம் செய்தாள். அம்மையுடன் விளையாடுவதற்காக, வேறொரு வேடம் தாங்கி வந்த சிவபெருமான், திடீரென்று வந்து அம்மையின் கையைப் பிடித்து விட்டார். பயந்து போன அம்மை, ஓடிப்போய் தாழை மடல்கள் நிறைந்த, அருகில் இருந்த சோலைக்குள் புகுந்துகொண்டார். பின்னாலேயே தொடர்ந்த பிரான், தம்மை வெளிக்காட்டி, அம்மையின் கைத்தலம் பற்றி திருக்கயிலாயம் சென்றார்.
அம்பிகை ஓடிப் புகுந்த இடம் ஒளிமதிச் சோலை என்ற பெயரோடு இன்னமும் காணப் படுகிறது. அங்கே ஒரு சிவலிங்கமும் உள்ளது. ஒப்பற்றவளாகத் தவம் செய்ததால், அம்மைக்கு ஒப்பிலா நாயகி என்று திருநாமம். சோலைக்குள் புகுந்து சக்தியைப் பெற்றதால், அப்பனுக்குப் பெயர்- நிழலார் சோலைவனம் உடையார்!
வெளிப் பிராகாரத்தில் நின்று பார்க்கிறோம். சுவாமி சந்நிதி விமானங்கள் கண்ணில் தெரிகின்றன. அழகான விமானங்கள். அதெப்படி இரண்டு விமானங்கள்? இதுவும் இந்தக் கோயிலின் சிறப்புகளில் ஒன்று. சுவாமி கருவறைக்கு ஒரு விமானம்; அர்த்த மண்டபத்துக்கு ஒரு விமானம். காசியில் இருப்பது போல இரண்டு விமானங்கள் இருப்பதால், திருநெடுங்களத்துக்கு 'தட்சிண கயிலாசம்' என்றும் பெயர் வழங்கப்படுகிறது.
கோயிலில் நிறைய கல்வெட்டுகள் உள்ளன. பல்வேறு நிவந்தங்கள், திருப்பணிக் கொடைகள், மானியங்கள் ஆகியவை குறித்து இந்தக் கல்வெட்டுகள் தெரிவிக் கின்றன. உற்சவ மூர்த்தங்களில், சோமாஸ்கந்தரின் வலக் கை கட்டைவிரலைக் காணோம். ஏனென்று கேட்டால், சுவாரஸ்யமான கதை ஒன்றின் பகுதியை மட்டும் சொல்கிறார்கள்.
அடியவர் ஒருவருக்காக, வேடமிட்டுக் கொண்டு, சாட்சி சொல்லிக் காப்பாற்றினாராம். அதற்காக, மன்னர் அவருடைய விரலை வாங்கி விட்டாராம். எந்த அடியவர், என்ன சாட்சி என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஒன்று தெரிகிறது. சுவா மிக்கும் மனிதனுக்கும் ஆழமான உறவைக் கற்பித்து, மனித உணர்வுகளை இறைவன்பாலும் ஏற்றி, இன்பமோ துன்பமோ... அது இறைவன் செயல் என்று உரிமையோடு வாங்கிக் கொள்ளும் பாங்கு, இந்து மதத்தின் இணையற்ற சிறப்பு என்பது நன்றாகப் புரிகிறது. பிள்ளையும் தாயும், அக்காளும் தம்பியும், தாத்தாவும் பேத்தியும் விளையாடுவதுபோல இறைவனோடும் விளையாட முடியும் என்பதே மகிழ்ச்சியின் மங்கல நிலைதானே!
இதுவொரு அற்புத பிரார்த்தனைத் தலம். நோய் தீர கருப்பண்ணசுவாமி பானக அபிஷேகம், திருமணத் தடைகள் தீர வாராஹி மஞ்சள் அபிஷேகம் என்பதுடன் பிற பிரார்த்தனைகளையும் இந்தத் தலம் நிறைவேற்றும். அம்பிகை தவம் செய்து, இறைவன் ஓடோடி வந்து அம்பிகை கைத்தலம் பற்றினார். எனவே, இது திருமண பந்தத்தை உறுதிப் படுத்தி, தாம்பத்திய ஒற்றுமையை ஓங்குவிக்கும் தலம். ஒப்பிலாநாயகியை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டால், குடும்பச் சண்டைகளின் குழப்பத்தைத் தீர்த்து வைப்பாள்.
நெடுங்கள நாதருக்கு, உச்சி காலத்தில் மாதுளம்பழ முத்துகளால் அபிஷேகம் செய்தால், நினைத்த காரியம் கைகூடும். அதிகார பலமும் பதவி உயர்வு களும் தருவார்.
ஆடி மாதத்தில், உதய காலத்தில், சூரியக் கதிர்கள், சுவாமி மீது விழுகின்றன. ஆண்டுதோறும் சூரியன் இவ்வாறு வழிபாடு செய்வதால், இது கிரக தோஷ நிவாரணத் தலமும் கூட! எல்லாவற்றையும்விட, ஞானசம்பந்த பெருமான் இந்த சுவாமி மீது பாடிய இடர் களையும் பதிகத்தை, நாள்தோறும் பாராயணம் செய்தாலே துன்பங்கள் விலகி மங்கலம் பெருகும்.
கோயிலை விட்டு வெளியே வந்து நிற் கிறோம். அழகான ராஜ கோபுரம் நெஞ்சை அள்ளுகிறது. இடர் களையும் பதிகத்தில் கூறப்படும் காட்சிகள் எல்லாம் கோபுர பொம்மைகளாக இடம் பெற்றுள்ளன. பல ஆண்டுகளுக்கு கோபுரத்தின் அடிப் பகுதி மட்டுமே இருந்துள்ளது. சமீப காலங் களில்தான், கோயில் உழவாரப் பணிக் குழுவினர், பெருமுயற்சி எடுத்து ஐந்து நிலை கோபுரமாகக் கட்டுவித்துள்ளனர். அப்போதுதான் இந்த பொம்மைகளும் அமைக்கப்பட்டன.
உழவாரப் பணியினருக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொண்டே, 'தன்னார் நெடுங்கள மெய்த் தாரகமே' என்று வள்ளல் பெருமான் போற்றியபடியே போற்றி, வெளி வருகிறோம்.

No comments:

Post a Comment