இன்று ஸ்ரீபெரும்புதூர் சென்றால் பார்க்கும் திசையெங்கும் அடிக்கடி 'ராமானுஜம்’ பெயர்கள் பளிச்சிடுகின்றன. அன்று மட்டுமல்ல; இன்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 'தான் உகந்த திருமேனி’யாய் அவர் தனது பேரருள் கடாட்சத்தை அள்ளி வழங்குவதுதான் அதற்குக் காரணம்.
எப்படி உருவானது இந்த 'தான் உகந்த திருமேனி’?
கி.பி.1136 -ஆம் ஆண்டு ஸ்ரீராமானுஜருக்கு 119-வது வயது நிறைவடைய இருந்த நேரம். கந்தாடை ஆண்டான் என்ற தனது சீடரின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஸ்ரீராமானுஜர் தன்னைப் போன்ற விக்கிரகம் ஒன்றைச் செய்யச் சொன்னார். சுமார் 2 அடி உயரத்தில் தயாரான அந்த பஞ்சலோக விக்கிரகத்தை ஆரத்தழுவி தனது சக்தி முழுவதையும் அதனுள் செலுத்தினார்.
அதன்பிறகு தமது உருவம் கொண்ட அந்த விக்கிரகத்தை கந்தாடை ஆண்டானிடம் கொடுத்தவர், அதை ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். அதன்படி, அந்த விக்கிரகம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு, தை மாதம் பூசம் நட்சத்திரத்தன்று, கண் திறந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விக்கிரகம்தான் 'தான் உகந்த திருமேனி’. ஸ்ரீராமானுஜர், தானே உகந்து (விரும்பி) விக்கிரகத்தை அணைத்ததால் இது, 'தான் உகந்த திருமேனி’ என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஸ்தலம், ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு எதிரிலேயே அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது அவதார தினத்தன்று, தான் உகந்த திருமேனி இந்த ஸ்தலத்துக்கு புறப்பாடாகக் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீராமானுஜரை தரிசனம் செய்தால் நினைத்த வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என்கிறார், இந்தக் கோயில் மணியக்காரர் ஸ்ரீதரன். 'திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீமந் நாராயணனை குடையாகவும், சிங்காசனமாகவும் படுக்கையாகவும் அலங்கரிக்கும் ஆதிசேஷன், ஸ்ரீராம அவதாரத்தில் லட்சுமணராகவும், ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் பலராமனாகவும் அவதரித்தார். அந்த ஆதிசேஷனே இந்த கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக அவதாரம் செய்தார். அதனால், ராகு, கேது தோஷம், சர்ப்பதோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் கைமேல் பலன் கிட்டும். அந்தப் பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்கள், திருவாதிரை நட்சத்திரத்தன்று இக்கோயிலுக்கு வந்து பால் அபிஷேகம் செய்வதோடு, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
திருமணம் தடைப்படுவோரும் இங்கு வந்து வழிபடலாம். அவ்வாறு இங்கு வேண்டி திருமண வரம் பெற்றவர்கள், தங்களது திருமண அழைப்பிதழை இக்கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார்கள். திருமணத்தடை நீக்கும் தலமும் இது என்பதற்கு இதுவே சாட்சி.
சமீபத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். சமீப காலமாக ஒரு டாக்டர் தம்பதி இங்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்களுடன், அவர்களது வீட்டில் வேலை செய்த 23 வயது இளம்பெண் ஒருத்தியும் வருவது வழக்கம்.
அன்று அவள் கோயிலுக்கு வந்தபோது அப்படியரு சந்தோஷம் அவள் முகத்தில். ஸ்வாமி தரிசனம் முடித்து பிரசாதம் வாங்கிக் கொண்டவள், 'ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி. நல்ல வரன் அமையணும்னு ஸ்ரீராமானுஜர்கிட்ட வேண்டிக்கிட்டிருந்தேன். வேண்டுதல் பலிச்சிடிச்சு. நல்ல இடத்தில் திருமணம் முடிவாகிவிட்டது’ என்றாள். அந்தக் குழந்தை நல்லாருக்கணும்னு நானும் வேண்டிக்கிட்டேன். ஸ்ரீராமானுஜரோட அருளே அருள்!'' என்கிறார் சிலிர்ப்புடன்.
உங்களுக்கும் ஸ்ரீராமானுஜரின் அருள் வேண்டுமா? உடனே, ஸ்ரீபெரும்புதூருக்கு புறப்பட்டு வாருங்கள்..!
மறு அவதாரம்...
பொதுமக்கள் உய்ய வேண்டி 'ஓம் நமோ நாராயணாய...' என்று துவங்கும் திருமந்திரத்தை அறிய, ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு 18 முறை சென்று திருக்கோஷ்டியூர் நம்பியை சந்தித்தார் ஸ்ரீராமானுஜர். அதன்பிறகே, அவருக்கு குருவின் மூலம் திருமந்திர உபதேசம் கிடைத்தது. குருவால் தனக்காக உபதேசிக்கப்பட்ட அந்த மந்திரத்தை பொதுமக்கள் எல்லோருக்கும் உபதேசித்ததன் மூலம், குருவின் வாயாலேயே 'எம்பெருமான்’ என்று அழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர் ஸ்ரீராமானுஜர்.
இளைய ஆழ்வார், எதிராஜா, எம்பெருமானார், பாஷ்யகாரர், லட்சுமணமுனி, கோயில் அண்ணன், உடையவர்... என பல பெயர்கள் ஸ்ரீராமானுஜருக்கு உண்டு.
ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதாந்த சங்கிரகம், கத்யத்ரயம்... போன்ற அரிய நூல்களையும் ஸ்ரீராமானுஜர் நமக்காக படைத்துத் தந்துள்ளார்.
120 ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்த ஸ்ரீராமானுஜர், மறுபடியும் மணவாள மாமுனிகளாக இந்த பூமியில் அவதரித்து பல தொண்டுகள் செய்தார்.
|
No comments:
Post a Comment