Saturday 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 47

                                                                                                                                   உமாசகிதர்



பிரம்மனது தம்பியான மன்மதனை அழைத்து, "சிவனாரின் மீது ஐந்து மலர் பாணங்களை செலுத்தி, அவர் மனதில் பார்வதியை மணக்கும் ஆசையை உண்டாக்க வேண்டும்!" என்றனர்.
தான் அவ்வாறு செய்தால் சிவனார் தன்னை அழித்து விடுவார் என்று மறுத்தான் மன்மதன். மீண்டும் மீண்டும் அனைவரும் அவனிடம் வற்புறுத்தவே, வேறு வழியில்லாமல் சிவனாரின் தவத்தைக் கலைக்க உடன்பட்டான்!
தென்றல் எனும் தேரில் ஏறி கரும்பு வில், தாழை மடல்வாள், ஐந்து மலர்ப் பாணங்கள் ஆகியவற்றை ஏந்தி புறப்படத் தயாரானபோது, அவன் மனைவி ரதி அவனைத் தடுத்தாள். தானும் உடன் வருவேன் என்று மன்மதனுடன் புறப்பட்டாள்.
கயிலை மலைச் சாரலில் நந்திதேவரைக் கண்டு வணங்கி, அவரிடம் விவரத்தைச் சொல்ல, அவர் அறிவுறுத்தியபடி மேலை வாயிலின் வழியாகச் சென்றான் மன்மதன். தமது வில்லை வளைத்து மலர்கணையை சிவபெருமானை நோக்கிப் பொழிந்தான்.
தவம் கலைந்த பெருமான் தனது நெற்றிக் கண்ணை விழித்து அவனை நோக்க, மன்மதன் எரிந்து சாம்பலானான். இதைக் கண்ட ரதிதேவி கதறி அழுதாள். சிவபெருமானிடம் மன்றாடி வேண்டினாள். அவள் மேல் இரக்கம் கொண்ட பரமன், ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனை உயிர்ப்பித்தார்.
பின்னர் சிவபெருமான், வயோதிக வடிவம் தாங்கி பார்வதிதேவி தவம் இருக்கும் இடத் துக்குச் சென்றார். அவரைக் கண்டு பார்வதி வணங்கினாள். "பெண்ணே! நீ ஏன் தவம் புரிகின்றாய்?" என்று கேட்டார்.
பரமசிவனை மணக்க வேண்டி தவம் புரிவதாக அவளின் தோழிகள் கூறினர். உடனே சிவபெருமான் இடப வாகனத்தில் பார்வதி முன் காட்சியளித்தார்.
'போதும் தவத்தை நிறுத்து' எனும் பொருள் பட "உமா!" என்று அழைத்தார். பின்னர் அதுவே அவளது பெயராகி விட்டது. "தேவி! உனது தவம் கண்டு மகிழ்ந்தேன். நாளையே மணம் பேச வருவேன்; நீ உனது அரண்மனைக்குச் செல்வாயாக!" என்று கூறி மறைந்தார்.
இதையறிந்து இமவானும் அவன் மனைவி மேனையும் மகிழ்ந்தனர். திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். தேவ தச்சனை அழைத்து, தமது தலைநகரான ஒளஷதீப் பிரஸ்தத்தை இந்திரலோகம் போல அமைக்கச் சொன்னார்கள்.
திருக்கல்யாண விழாவைக் காண முனிவர்கள், கின்னரர், கிம்புருஷர், வித்யாதரர் முதலான பதினெண் கணங்களும் விழா மண்டபத்தில் கூடினர். மகாலட்சுமி, சரஸ்வதி, சப்தமாதர் முதலானோர் மணப்பெண்ணை அலங்கரித்தனர்.
சிவபெருமானிடம் வந்த பிரம்மதேவன், "தாங்கள் மகுடம் புனைந்து, ரத்ன ஆபரணங்களை அணிந்து திருமணத்தில் அனைவரையும் மகிழ்விக்க வேண்டும்" என்று வேண்டினார். அதன்படியே மகுடமும் ஆபரணங்களும் தரித்துக் கொண்ட இறைவனார் தமது கணங்களுடன் கயிலையைவிட்டு புறப்பட்டு, திருமணத்துக்குஎழுந்தருளினார்.
அப்போது, உலகில் உள்ள அனைவரும் பர்வதராஜனின் தலை நகரில் ஒன்று கூடியதால் பூமியின் சமநிலை பாதிக்கப்பட்டது; வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது.
உடனே அகத்தியரை அழைத்த சிவனார், "நீர் தென்னாடு சென்று பூமியைச் சமன் செய்வீராக!" என்றார். இதைக் கேட்ட அகத்தியர் மனம் வருந்தினார். "ஐயனே! அடியேன் செய்த குற்றம் என்ன? தங்களது திருமணக் காட்சியை அடியேன் காண வேண்டாமா?" என்று பணிவாக வேண்டினார்.
அதற்கு இறைவன், "அகத்தியரே! தயங்காமல் பொதிகை மலைக்குச் செல்க! நீர் விரும்பிய இடங்களில் எல்லாம் இந்தத் திருமணக் காட்சியை உமக்கு யாம் காட்டுவோம்!" என்று விடை கொடுத்தார்.
அவ்வாறே அகத்தியர் தெற்கு நோக்கிச் செல்ல பூமி சமநிலை அடைந்தது.
சிவபெருமான் மணமேடை வந்தடைந்தார். உமாதேவியார் சிவபெருமானை வணங்கினார். உமாதேவியின் கரத்தை பெருமானின் கரத்தின் மீது வைத்து, தம் புதல்வியை அவருக்குத் தந்ததாகக் கூறி தாரை வார்த்தார் பர்வதராஜன். உமாதேவிக்கு சிவபெருமான் திருமங்கல நாண் பூட்டி மகிழ்வித்தார். தேவர்களும் அனைவரும் மலர்மாரி பொழிந்தனர். இவ்வாறு உமாதேவி பரமேச்வரர் திருமணம் நடைபெற்ற நன்னாள் பங்குனி உத்திரமாகும். பின்னர் பெருமான் உமாதேவியுடன் ரிஷப வாகனத்தில் ஏறி காட்சியளித்து திருக்கயிலையை அடைந்தார். அன்று முதல் உமா மகேச்வரராக அன்பர்களுக்குக் காட்சியளித்து அருள்பாலிக்கிறார் என்று சிவ மகாபுராணம் விவரிக்கிறது. இவ்வாறு உமையோடு கூடி மகிழும் சிவபெருமான் வடிவமே உமாசகிதர் என்றும், உமா மகேச்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வடிவில் அம்பிகை 'பார்யா சௌக்ய பிரதாயினி' என்று அழைக்கப்படுகிறாள். சிவபெருமானது அருட்சக்தியே உமை என்றழைக்கப்படுகிறது. சிவம் வேறு சக்தி வேறு என்பதில்லை. சிவம், அமைதி நிலை (Static) உடையது; சக்தி, ஆற்றல் நிலை (Dynamic) வாய்ந்தது. இறைவனின் அருட்பண்பே சக்தி எனக் குறிப்பிடப் பெறுகிறது. சக்தியும் சிவமும் உலகப் பொருள்கள் அனைத்திலும் யாண்டும் நீக்கமற நிறைந்துள்ளன.
சிவபெருமான் உமையோடு கூடி அமர்ந்து அருட் காட்சியளிக்கும் உமாமகேச வடிவங் கள் இந்தியாவின் பல இடங்களிலும், நேபாளம், திபெத் மற்றும் இந்தோ னேஷியா ஆகிய நாடுகளிலும் சிறப்பாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் பல கோயில்களில் உமாதேவியும், சிவபெருமானும் ஒரே பீடத்தில் அமர்ந்திருக்கும் கோலமாக அருட்காட்சி வழங்குகின்றனர்.
வேதாரண்யம் என்னும் திருமறைக் காடு வேதாரண்யேச்வரர் கோயில், திருவேற்காடு வேற்காட்டீச்வரர் கோயில், (வேதாரண்யம் அருகிலுள்ள) இடும்பாவனம் சற்குணநாதர் கோயில், (சென்னையை அடுத்துள்ள) திருமழிசை ஒத்தண்டேச்வரர் கோயில், கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருநல்லூர் பஞ்சவர்ணேச்வரர் கோயில் முதலான தலங்களில் கருவறையில் சிவலிங்கத்துக்கு மேற்புறம் மேடை மீது உமா மகேச்வரர் அருட்காட்சியளிக்கின்றார். இத்தலங் களில் அகத்தியர் வேண்டியபடி அவருக்குத் திருமணக் கோலம் காட்டியதாகவும், அதன் பிறகு அதே கோலத்துடன் அங்கே எழுந்தருளியுள்ளதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
(தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment