Wednesday, 20 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 34

தொடர்ச்சி...
பெண் ஆசையால் பித்தம் தலைக்கேறிய அந்தகாசுரன், மீண்டும் பெரும் படையுடன் பார்வதிதேவி தங்கியிருந்த குகைக்கு வந்தான்.
பார்வதிதேவிக்குத் துணையாக... பிரம்மன், விஷ்ணு, இந்திரன், மகேசன் முதலானவர்களின் சக்தி அம்சமாக தோன்றிய பிராம்மி, வைஷ்ணவி, இந்திராணி, மாகேச்வரி, கௌமாரி, சாமுண்டி, வாராஹி ஆகிய 'சப்தமாதர்கள்' உடனிருந்தனர்.
அங்கு நடந்த பெரும் போரில் அசுரர்கள் துவம்சம் ஆயினர். அப்போது, அசுரனின் சேனாதிபதியான 'விகஸன்' என்பவன், பெரிய பாம்பாக உருவெடுத்து வந்தான். தேவிக்குத் துணையாகப் போரிட்டுக் கொண்டிருந்த அனைவரையும் ஒரு நொடியில் விழுங்கினான். இதை யோக சக்தியால் அறிந்த சிவபிரான், அங்கு வந்து தனது அம்பினால் விகஸனை அழித்தார்.
தொடர்ந்து அசுரர்கள் பலரை அழித்தும் அவர்கள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை; பெருகிக் கொண்டே இருந்தனர். இதற்கான காரணத்தைத் தேடியபோது, அசுர குருவான சுக்ராச்சார்யர், 'மிருத்யுஞ்சய மந்திர'த்தால் இறந்த அசுரர்களைப் பிழைக்க வைப்பதை அறிந்தனர். அவரைப் பிடித்து வந்து, ஒரு பழமாக மாற்றி ருத்ரனிடம் கொடுத்து விழுங்க வேண்டினர். பெருமானும் பழமாக இருந்த சுக்ராச்சார்யரை விழுங்கினார். இதனால், அசுர சேனை பாதிப்புக்குள்ளானது.
அப்போது அந்தகன் தனது மாயா சக்தியை உபயோகித்து பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திரன் ஆகியோரைப் போன்று பல வடிவங்களை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தினான். தவிர, தாக்கப்பட்ட அசுரர்களது உடம்பில் வழிந்த ரத்தத் துளிகளில் இருந்தும் அசுரர்கள் தோன்றினர்!
இதைக் கண்ட சிவபெருமான் தமது வலது தோளிலிருந்து ஒரு சக்தியைத் தோற்றுவித்தார். எண்ணற்ற முகங்களும், தொங்கும் நாக்குகளுடனும் திகழ்ந்த அந்த சக்தி, இன்னும் பல சக்தியரைத் தோற்றுவித்தாள். இவர்கள், அசுரர்களது ரத்தம் தரையில் விழுமுன், அதை உறிஞ்சிக் குடித்தனர். விரைவில் அசுர சேனை அழிந்தது. சிவனாருடன் தனித்துப் போரிட்டான் அந்தகன்.
இறுதியில், அந்தகனை தனது சூலத்தால் குத்தித் தூக்கினார் சிவபெருமான். பிறகு, சூலத்தை ருத்ரனிடம் அளித்தார். அதை ஏந்திய ருத்ரருக்கு, 'கங்காளர்' என்று பெயர். இவர், சூலத்தைத் தோளில் தாங்கியவாறு, 'கொடுகொட்டி' எனும் வாத்தியத்தை இசைத்தபடி, உலகை வலம் வந்தார். சூலத்தில் சிக்கித் தொங்கும் அந்தகனின் ரத்தம், கீழே விழாதவாறு ஒரு பூதம் குடித்துக் கொண்டு வந்தது. இந்த பூதமே பிற்காலத்தில் அங்காரகன் (செவ்வாய்) என்ற கிரகமாயிற்று.
சூலத்தில் தொங்கிய அந்தகன் மிருத்யுஞ்சய மந்தி ரத்தை உச்சரித்தும், சிவ நாமத்தை சிந்தித்தும் முக்தி பெற்றான். அவனை, 'ப்ரிங்கிரீடன்' என்ற பெயரில், தன் கணங்களில் ஒருவனாக திருக்கயிலாயத்தில் இருக்கு மாறு அருள் புரிந்தார் சிவபெருமான். இந்த வரலாறு, சிவமகாபுராணம் மற்றும் சிவபராக்ரமம் ஆகிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
'அந்தகன்' என்பதற்கு, பார்வை அற்றவன், எமன் என்று பொருள் வழங்குவர். நியாயம் வழங்குவதில் பாரபட்சம் பார்க்காதவன் எமன். 'இந்த எமனுக்கு கண் இல்லை!' என்று கோபத்தில் சிலர் கூறுவதைக் கேட்டிருப் போம். பார்வையற்றவன் போல் நடந்து கொள்கிறான் என்பதைக் குறிக்கும் வகை யில் எமதர்மனை, 'அந்தகன்' என்று அழைப்பர்.
ஆனால் அந்தகாசுரன், பார்வை, அழகு, மிகுந்த பலம் ஆகியவற்றை பிரம்மனிடம் வரமாகப் பெற்றவன். அகங்காரம் தலைதூக்க தான் பெற்ற வரத்தின் பொருளை உணராமல் மதியிழந்து இருந்தான்.
உலகில், மனிதனாகப் பிறந்த எவரும் தன் தாயிடம் அன்பும் பாசமும் கொண்டு இருப்பர். தாயிடம் (பெண் ஆசையால்) மோகம் கொள்பவர் எவரும் இல்லை. ஆனால் அந்தகன் அப்படியில்லை! உலகில் எவரும் விரும்பாத- நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு வரத்தைக் கேட்டுப் பெற்றான். தனது தாய் பார்வதிதேவி என்று உணராமல் காமத்தால் அழிந்தான். இந்தத் தத்துவத்தை உணர்த்துவதே அந்தகாசுர வதம்.
எல்லோரா குடைவரைக் கோயிலில் அந்தகாசுர மூர்த்தியின் அருமையான சிற்பம் காணப்படுகிறது.
அஷ்ட வீரட்ட தலங்களில், அந்தகாசுர சம்ஹார மூர்த்தி அமைந்துள்ள தலம் திருக்கோவிலூர். இது, திரு வண்ணாமலை- கள்ளக்குறிச்சி வழியில் உள்ளது. விழுப் புரத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவு.
திருக்கோவிலூரின் கிழக்குப் பகுதியான கீழையூரில் வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது (மேற்குப் பகுதியில், திருவிக்கிரமப் பெருமாள் கோயில் உள்ளது). இங்குள்ள அம்பிகையின் பெயர் பெரியநாயகி. இங்கு நடராஜர் சந்நிதிக்கு இடப் பக்கத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி. இந்த வடிவில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார் சிவபெருமான். பின் இரு கரங்களில் மான்- மழு. முன் இரு கரங்களில் ஏந்தியிருக்கும் சூலத் தால் அந்தகாசுரனைக் குத்தும் அமைப்பில் உள்ளார். இவரின் திருவடியில் வீழ்ந்து கிடக்கிறான் அந்தகன். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இந்தத் தலத்தைப் போற்றிப் பாடியுள்ளனர்.
சுந்தரர், திருவிடைமருதூர் க்ஷேத்திரக் கோவை பதிகத்தில் குறிப்பிடுகிறார். பெண்ணையாற்றின் தென் கரையில் திருக்கோவிலூரும், வடகரையில் அரையணி நல்லூரும் (அரகண்டநல்லூர்) அமைந்துள்ளது.
திருக்கோவிலூரில் மாசி மாதம் நடைபெறும் உற்சவத்தில் 6-ஆம் நாள் மாலை வேளையில், அந்தகாசுர வதமும் திருவீதி உலாவும் நடைபெறுகின்றன.
வீரட்டேஸ்வரப் பெருமானை அந்தகாந்தகன், இருள் கூடறுத்தான், கோவலத்தான், பெண்ணை வலத்தான், வீரட்டகாசர், வினை வென்றான், திரிசூலன், பச்சமாலி முகத்தான் ஆகிய பெயர்களில் தல புராணங்கள் குறிப்பிடுகின்றன.
- (தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment