கந்தன் அருள் கைகூடும்!
சோழ தேசத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெறும் முக்கியமான- முதன்மையான தலம், சுவாமிமலை எனப் போற்றுகின்றன ஞானநூல்கள்.
தந்தையார் ஸ்ரீஅருணாசலேஸ்வரராகக் குடிகொண்டிருக் கும் திருவண்ணாமலைக்கு நிகராக, இங்கே மைந்தனின் ஆலயத்தில் விமரிசையாக நடந்தேறும் திருவிழா, எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
கோயில் நகரமாம் கும்பகோணத்தின் மிக அற்புதமான இந்தத் தலத்தை, திருமுருகாற்றுப்படையில் 'திருவேரகம்’ எனப் போற்றிப் பாடுகிறார் நக்கீரர். ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை வணங்கினால், புத்தியில் தெளிவும் ஞானமும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!
அதுமட்டுமா? வஜ்ர தீர்த்தம், குமாரதாரை தீர்த்தம், சரவண தீர்த்தம், நேத்திர புஷ்கரணி, பிரம்ம தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் கொண்ட அற்புதமான திருத்தலம் சுவாமிமலை எனப் போற்றுகின்றனர் ஞானகுருமார்கள்.
இத்தனை பெருமைகள் கொண்ட சோழ தேச கோயிலில், வருடத்துக்கு மூன்று முறை பிரம்மோத்ஸவ விழாக்கள் நடைபெறுகின்றன. இங்கே, திருக்கார்த்திகைத் தீபத் திருவிழாவின்போது, சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனைத் தரிசிக்க வருவார்களாம்!
கார்த்திகைப் பெண்களால் வளர்ந்து, கார்த்திகேயன் எனும் திருநாமமும் பெற்ற ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை கார்த்திகை தீபத் திருநாளில் வணங்குங்கள். ஒளிமயமான வாழ்வைத் தந்தருள்வான் கந்தக் கடவுள்!
No comments:
Post a Comment