இந்த உலகின், ஈடு இணையில்லாத உறவில், மிகவும் உன்னதமானது தோழமைதான்! நல்லதொரு நட்பு கிடைத்துவிட்டால், மனதுள் எந்தத் துக்கமும் தங்காமல் ஓடிவிடும்; எப்பேர்ப்பட்ட காயங்களுக்கும் நண்பனின் ஒற்றை வார்த்தையே மருந்தாகிவிடும்!
தாய்- தந்தை அன்பானவர்களாக இருக்கலாம். நம் மீது அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால், தலைமுறை இடைவெளியில், நம்மைப் புரிந்துகொள்ளாத நிலை ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. சகோதர கூட்டம் இருப்பினும், ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்துப் பாசம் காட்டுவதும், பரிகசிப்பதும் பல இடங்களில் அரங்கேறுவது நாம் அறிந்ததுதானே? ஆனால், உண்மையான நண்பன் என்பவன், ஒரு கண்ணாடியைப் போன்றவன். கண்ணாடிக்கு எதிரில் நின்றால், நம்முடைய முகம் தெரிவது போல், நம்மையும் நம்முடைய உணர்வுகளையும், மிகத் துல்லியமாக அறிந்து, உணரக்கூடியவன்; பாரபட்சமின்றி முகத்துக்கு நேராக எடுத்துச் சொல்லி நம்மை வழிநடத்துபவன். இதைத்தான் வள்ளுவரும் 'முகம்நக நட்பது நட்பு அன்று, நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு’ என்று சொல்கிறார்.
கைகோத்து நடக்கிறவர்கள் நண்பர்கள். அதே நேரம், 'உன் இலக்கு வேறு; என் இலக்கு வேறு’ என வெவ்வேறு திசையில் பயணிப்பார்கள். அந்த இலக்கை அடைவதற்கான பணியில் இருக்கும்போது, நண்பர்களைச் சந்திப்பதற்கும் அளவளாவுவதற்கும் குறைவான நேரம் மட்டுமே ஒதுக்குவார்கள். எனினும், நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம்தான்! அவர்கள் இருவரும் ஒரே திசையில் பயணிப்பவர்களாக, ஒத்த கருத்துக்கள் கொண்டவர்களாக, ஒரே இலக்கை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டவர்களாக அமைந்துவிட்டால், அதைவிடப் பேரின்பம் வேறில்லை!
அப்பேர்ப்பட்ட இனிய நண்பர்கள் அவர்கள். அந்த இரண்டு பேரின் இலக்கும் ஒன்றுதான். அது, கடவுளை அடைவது; சதாசர்வகாலமும் சதாசிவத்தை நினைத்தபடியே வாழ்ந்து, முக்தி பெறுவது! அவர்கள்... வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும்!
திருப்பிடவூரில் இருந்து, நண்பர் வியாக்ரபாதர் அழைத்ததும், துள்ளிக் குதித்து எழுந்த பதஞ்சலி முனிவர், உடனே புறப்படத் தயாரானார். அவரது முகத்தில் அப்படியரு பரவசம்; அவரது மனத்தில் தாங்கொணாத எழுச்சி. ஒருபக்கம் நண்பனைப் பார்த்து நாளாகிவிட்டது... இதோ, பார்க்கப் போகிறோம் எனப் பூரிக்கிறது அவருடைய நெஞ்சம். இன்னொரு பக்கம்... தென்னாடுடைய சிவனாரின் லீலைகளை எண்ணிச் சிலிர்க்கிறது அவரின் திருவுடல்.
'சிவனாரே... நமசிவாயனே... தென்னாடுடைய என் ஈசனே! உமக்குத்தான் எங்கள் மீது என்னவொரு கருணை; எங்கள் மீது எவ்வளவு பிரியம்! உமக்குக் கோடானுகோடி நன்றிகளை, இந்த ஜென்மம் இருக்கும்வரை சொல்லிக் கொண்டே இருப்போம். நீ என்னை ஆட்கொள்ளும்வரை, சிவநாமத்தை உச்சரிப்பதே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருவேன்’ என்று சொல்லிவிட்டுக் கழுத்தில் இருந்த ருத்திராட்சத்தைத் தொட்டுக்கொண்டே, கண்களை மூடித் திளைத்தார் பதஞ்சலி முனிவர். அவருடைய கண்களில் இருந்து கரகரவென வழிந்த நீர், கன்னங்களைத் தொட்டு, அவரது நெடிய தாடிகளுக்குள் புகுந்தது.
'அடேய் நண்பா... என்னைவிட அதிர்ஷ்டக்காரனடா நீ!’ என்று உள்ளுக்குள், வியாக்ரபாதரைப் பாராட்டிக் கொண்டார் பதஞ்சலி மகரிஷி.
'தில்லை மூவாயிரம்; திருப்பிடவூர் மூவாயிரத்து ஒன்று’ என்பார்கள். அதாவது, தில்லையில் 3,000 அந்தணர்கள் உண்டு; திருப்பிடவூர் திருத்தலத்தில் அதைவிடக் கூடுதலாக, 3,001 அந்தணர்கள் வாழ்கின்றனர் என்பது பொருள். அத்தனை அந்தணர்களும், வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ய... அதில் உண்டான அதிர்வலைகள் காற்றில், மரம், செடி-கொடிகளில், விதைகளில், தண்ணீரில், பூக்களில், பூக்களின் நறுமணங்களில், பூமியில் உள்ள புற்களில், கற்களில், முட்களில், மண்ணில்... என அங்கிங் கெனாதபடி எங்குமாக, இன்றைக்கும் பரவிக் கிடப்பதாக ஐதீகம். அப்பேர்ப்பட்ட புண்ணிய பூமி, திருப்பிடவூர். திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில் திருப்பட்டூராக மருவியதாகச் சொல்வர்.
இந்தப் பெருமைகளைக் கொண்ட திருத்தலத்தில் இருந்து, வியாக்ரபாதர் அழைக்கிறார் என்றால், அநேகமாக அந்த இடம், தவம் செய்வதற்கும், தவத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து போவதற்கும் ஏற்ற இடமாக இருக்கும் என்று உள்ளுக்குள் நினைத்துப் பூரித்தார் பதஞ்சலி முனிவர்.
அதிகாலையில் எழுந்து, ஆற்றில் நீராடிவிட்டு, இரண்டு கைகளாலும் தண்ணீரை அள்ளும்போது, அந்த நீரில் சூரியனின் பிம்பம் தெரிந்தது. கிட்டத்தட்ட, அந்தச் சூரியனை, பெருஞ்சுடரொளியை கைக்குள் கொண்டுவந்து விட்டது போன்ற பிரமை ஏற்பட்டது. இதுவொரு நல்ல சகுனம் என்பதாக எண்ணிப் பூரிக்கும்போதே, சூட்சும ரூபமாக அங்கே பிரத்யட்சமானார் வியாக்ர பாதர். 'காவிரிக்கரையை ஒட்டியே நடந்து வந்து, வடக்குப் பக்கமாகத் திரும்பினால், அங்கே, காவிரியைக் கடந்து, கொள்ளிடத்தையும் கடந்து இன்னும் வடக்கில் பயணித்தால், திருப்பிடவூர் திருத்தலம் வந்துவிடும். அங்கே வா; அருள் பெறுவோம்!’ என அவர் சொல்லிவிட்டு மறைய... நிமிர்ந்து, வானம் பார்த்து, சூரிய பகவானை வணங்கினார் பதஞ்சலி முனிவர். குனிந்து, காவிரி நீரை அள்ளியெடுத்து கண்களில் விட்டுக்கொண்டார். உடலும் மனமும் குளிர்ந்து போயின!
'திருப்பிடவூர், திருப்பிடவூர்...’ என்று உள்ளுக்குள் இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தது அவருடைய உள்ளம். கால்கள், வியாக்ரபாதர் சொன்ன திசையில் பயணிக்கத் துவங்கின.
'நாராயணா, இந்த மண்ணுலகுக்கு என்னை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தீர்கள். தங்களின் ஆசீர்வாதத்தால், சிவனருளைப் பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது’ என திருமாலை, ஸ்ரீநாராயணபெருமாளை கண்கள் மூடி வணங்கினார், பதஞ்சலி முனிவர். அடுத்த கணம் சட்டென்று பாம்பாக உருவெடுத்தார் அவர்!
- பரவசம் தொடரும்
No comments:
Post a Comment