Saturday, 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 37


                                  சக்ரதானர்
தர்வண வேதத்தில் காணப்படும், 'சரபோபநிஷத்தில் 'எவருடைய இடப் பாதத்தில், விஷ்ணு தம் கண் மலரை அர்ச்சித்து, சுதர்சனம் எனும் சக்கரம் பெற்றுக் கொண்டாரோ அந்த உருத்திர மூர்த்திக்கு வணக்கம்' (யோ வாம பதார்ச்சித விஷ்ணு நேத்ரஸ் தஸ்மை ததௌ சக்ர தீவ ஹ ருஷ்ட தஸ்மை ருத்ராய நமோ அஸ்து) என்று வருகிறது.
மகாபாரதத்தில், இந்த வரலாறு குறிப்பிடப் பெறுகிறது. தமிழில் கூர்ம புராணத்தில் உள்ள 'மாயோன் நேமி பெற்ற அத்தியாயம்' என்ற பகுதியிலும் திருமால் சக்கரம் பெற்ற வரலாறு விவரிக்கப்படுகிறது.
உத்தர காமிக ஆகமம், ஸ்ரீதத்வநிதி ஆகியனவும் ஸ்ரீசக்ரதான மூர்த்தியின் வடிவமைப்பை விளக்குகின்றன. இந்தத் திருவடிவில் சிவபெருமான், நான்கு கரங்களுடன் ஜடாமகுடம் புனைந்து சாந்த மூர்த்தியாகத் திகழ்வார். தன் வலக் காலை மடக்கி, இடக் காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். பின் இரு கரங்களில் மானும், டங்கமும் (உளி) இருக்க, முன் வலக் கரத்தில்- சக்கரம் உள்ளது. இவரின் இடப் பக்கம் ஸ்ரீஉமாதேவி அமர்ந்திருப்பார். வலப்புறம் நான்முகனும், எதிரில்... சிவனாரை வழிபடும் திருமாலும் காட்சி தருவர். இந்த அமைப்பு, உத்தர காமிக ஆகமத்தில் காணப்படுகிறது.
ஸ்ரீதத்துவ நிதி என்ற சிற்ப நூலின்படி சக்ரதானமூர்த்தி யின் கரத்தில் டங்கம் (உளிக்கு) கருவிக்கு பதிலாக பரசு (கோடரி) இருத்தல் வேண்டும். இவரின் இடப் பக்கம்...சிவபெருமானை வழிபட்டு வரம் பெறவும் சக்கரத்தைப் பெறவும் தயாராக திருமால் நின்றிருப்பார். இந்த அமைப்பில் சிவபெருமான், பீதாம்பரம், கௌத்துவ மணி மற்றும் சக்கரம் ஆகியவற்றை திருமாலுக்கு வழங்கும் நிலையில் காட்சி தருவார்.
காஞ்சி ஸ்ரீகயிலாசநாதர் கோயில், மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கோயில்- நந்தி மண்டபம் ஆகிய இடங்களில் உள்ள சக்ரதான மூர்த்தி வடிவம் சிறப்பாக உள்ளன. சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் ஸ்ரீசக்ரதானர் வடிவம் வண்ண ஓவியங்களாக உள்ளது.
கஜமுக அனுக்ரஹர்
ஒரு முறை, உமாதேவியுடன் பொழில்கள் நிறைந்த பகுதிக்கு உலாவச் சென்றார் சிவனார். அங்குள்ள மண்டபங்களில், பலவகையான ஓவியங்களைக் கண்டு இருவரும் மகிழ்ந்தனர்.
ஓர் இடத்தில் ஆண் யானையும், பெண் யானையும் இணைந்து இருப்பது போல் ஓர் ஓவியம்! உமாதேவி- பெண் யானை ஓவியத்தையும், சிவபெருமான்- ஆண் யானையின் ஓவியத்தையும் பார்த்து... அதிலேயே லயித்திருந்தனர். அப்போது, அதிலிருந்து ஓம்கார வடிவினராகிய ஆனைமுகக் கடவுள் அளவற்ற பேரொளியுடன் தோன்றி, சிவபெருமானையும் உமாதேவியையும் பணிந்து வணங்கினார்.
மிகவும் மகிழ்ந்த சிவ பெருமான் அவரிடம்,''மகனே! நீ வேறு நான் வேறு என்றில்லாமல், என்னுடன் ஒன்றியவனாகத் திகழ்வாய். உன்னை வணங்கி வழிபடுப வர்களது இடையூறுகளைத் தீர்த்து, அவர்கள் விரும்பிய காரியத்தை விரைவில் முடித்து அருள்வாயாக. கணங்களுக்கெல்லாம் தலைமையேற்று, 'கணபதி' என்று எல்லோராலும் போற்றப் பெறு வாயாக. எல்லோரும், உன்னைப் போற்றிய பிறகே எந்த செயல்களையும் துவங்குவர். அவர்களது துன்பங்களை போக்கி அருள்புரிய வேண்டும்!'' என்று வாழ்த்தினார்.
அத்துடன், ''தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் விளைவிக்கும் கொடியவனான கஜமுகன் எனும் அசுரனைக் கொன்று தேவர்களது துன்பத்தையும் போக்க வேண்டும்!'' என்றும் அறிவுறுத்தினார். பிறகு, கயிலாய வாசலில் முன்னே இருக்குமாறு கணபதியைப் பணித்தார் சிவனார். அதன்படி அமர்ந்த கணபதியை, நந்திதேவர் முதலிய அனைவரும் பணிந்து போற்றினர்.
ஒரு முறை, தேவேந்திரனால் போரில் தோற் கடிக்கப்பட்ட அசுரர் தலைவன் மிகுந்த கவலை யுடன் சுக்ராச்சார்யாரிடம் சென்றான். அவரிடம், ''நம் குலத்தில், தேவேந்திரனை வெற்றி பெற தகுதியுள்ள ஒருவரும் இல்லையே!'' என்று கூறி வருந்தினான்.
அவனிடம் சுக்ராச்சார்யார், ''வசிஷ்ட முனிவர் மரபில் வந்த மாகதர் என்ற முனிவர், தவம் செய்து கொண்டிருக்கிறார். அவரை வசப்படுத்திச் சேருமாறு உன் குலப்பெண் ஒருத்தியை அனுப்பி வை. அவள் வயிற்றிலிருந்து யானை முகத்துடன் ஒருவன் பிறப்பான். அவன், தேவேந்திரனை அடக்கி அசுர குலத்தை தழைத் தோங்கச் செய்வான்!'' என்று அறிவுறுத்தினார்.
அதன்படி, அசுர குலத்தைச் சேர்ந்த விபுதை என்பவளை அழைத்து, அவளிடம் தனது நோக்கத்தைக் கூறி அனுப்பி வைத்தான் அசுரர் தலைவன். மாகத முனிவர் தவமிருக்கும் இடத்தை அடைந்த விபுதை, அவரது தவத் தைக் கண்டு வியந்தாள். அவருக்கு அருகில் தானும் தவம் இருக்க முற்பட்டாள்.
ஒரு நாள், தவத்திலிருந்து கண் விழித்தார் மாகத முனிவர். அவர் எதிரில் விபுதை தோன்றி, 'தங்களை அடையவே தவம் செய்கிறேன்' என்றாள். அவள் மீது மோகம் கொண்ட முனிவர், அவளைப் பெண் யானை ஆகும்படி கட்டளையிட்டு, தாம் ஆண் யானையாகி அவளது விருப் பத்தை பூர்த்தி செய்தார். விபுதைக்கு ஒரு மகனும் பிறந்தான்.
நீண்ட துதிக்கையும், இரண்டு கொம்புகளுடனும் திகழ்ந்த அவன் பெருங் குரலுடன் கர்ஜித்தான்! அவனுக்குக் 'கஜமுகன்' என்று பெயரிட்டாள் விபுதை. குழந்தை பருவத்திலேயே பேராற்றல் கொண்டவனாகத் திகழ்ந்த கஜமுகன், பெரியதொரு கத்தியை வீசியபடி திரிந்தான்! அவனுடன் கணக்கற்ற அரக்க வீரர்களும் தோன்றினர்.
தம் பிள்ளைகளைக் கண்டு அஞ்சிய மாகத முனிவர், அவர்களையும் விபுதையையும் அங்கிருந்து அனுப்பி விட்டு மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். தன் கூட்டத்தாருடன் கிளம்பிய கஜமுகன் தேவர்களைத் தேடி தேடிப் பிடித்துக் கொன்றான். அவர்களுக்கு பலவாறு தொல்லைகள் தந்தான். இந்த நிலையில் கஜமுகனை அழைத்த சுக்கிராச்சார்யார், தவம் செய்து இந்திரன் முதலானவர்களை வெல்லும் ஆற்றல் பெறுமாறு அறிவுறுத் தினார். கஜமுகாசுரன் அழியா வரம் வேண்டி சிவபிரானை தியானித்து தவத்தில் ஆழ்ந்தான்!
-(தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment