Sunday, 10 September 2017

பீமனுக்கு வாள் தந்த பிள்ளையார்!

வினை தீர்க்கும் விநாயகனே..!

ர்நாடக மாநிலம், உடுப்பியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது கும்பாசி கிராமம். வறட்சி மிகுந்த இந்தப் பகுதிக்கு சீடர்களுடன் வந்த அகத்தியர், இங்கே மழை பெய்து, பூமி குளிர வேண்டும் என மிகப் பெரிய யாகத்தில் ஈடுபட்டார்.
கும்பாசுரன் என்பவன் யாகத்தைத் தடுக்க முயற்சித்தான். இதையறிந்த தருமர், தம்பி பீமனை அழைத்து, அசுரனை அழிக்கும்படி ஆணையிட்டார். ஆனால், பீமனால் கும்பாசுரனை வெல்ல முடிய வில்லை. அப்போது... 'கணபதியை வணங்கு; அசுரனை அழிக்கும் பலம் பெறுவாய்!’ என்று அசரீரி கேட்டது. அதன்படி விநாயகரை தியானித்து பீமன் வழிபட, எதிரில் உள்ள குன்றின் மீது யானையின் வடிவாய் காட்சி தந்தார் பிள்ளையார்; பீமனுக்கு வாள் ஒன்றையும் தந்து ஆசீர்வதித்தார்.
அதையடுத்து, அசுரனை அழித்தான் பீமன். அகத்தியரின் யாகமும் தடையின்றி நடைபெற்றது. தேசம் செழித்தது. துவாபர யுகத்தில் 'கும்பாசி’ எனும் பெயருடன் திகழ்ந்த இந்தத் தலம், தற்போது 'ஆனே குட்டே’ எனப்படுகிறது. ஸ்ரீவிநாயகர் யானையாகக் காட்சி தந்த குன்றும், அவரின் கோயிலும் பெரிய வழிபாட்டுத் தலங்களாக திகழ்கின்றன.கர்நாடக மாநிலத்தின் ஏழு முக்தி ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இங்கே திருமணம், குழந்தைக்கு பெயர் சூட்டல் ஆகிய வைபவங்கள் நடந்தால், ஆயுசு முழுவதும் விநாயகர் அவர்களைக் காத்தருள்வார் என்பது ஐதீகம்!
மலையடிவாரத்தில் ஸ்ரீஹாரிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, ஸ்ரீபார்வதிதேவியின் மடியில் கிடக்கும் குழந்தை விநாயகர் திருமேனி, அழகு! மலையில் ஸ்ரீஸித்தி விநாயகரின் அற்புதத் தரிசனம். 'என்னைச் சரணடைந்தால், உங்களைக் காத்தருள்வேன்’ என அடியவர்களுக்குச் சொல்லும் பாவனையில், அலங்கார திருக்கோலம் காட்டுகிறார்  பிள்ளையார். இந்த ஐந்துகரத்தானை வழிபட... பீமனுக்கு அருள்புரிந்தது போன்று, நற்காரியங்கள் நடந்தேற நமக்கும் துணை நிற்பார்!

No comments:

Post a Comment