புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ளது நமன சமுத்திரம். இந்த ஊரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் மலையக்கோவில். புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்துகள், மலையக்கோவில் வழியே செல்லும். இங்கேயுள்ள மலைக்கோயிலில் அமர்ந்து, அருளாட்சி நடத்தி வருகிறார் ஸ்ரீகாளீஸ்வரர்!
கொட்டங்கச்சி சித்தர், அருணகிரிநாதர் ஆகியோர் வந்து ஸ்ரீவிநாயகரையும், ஸ்ரீமுருகரையும் போற்றி வழிபட்டதாகக் கூறுகின்றனர். வருடம்தோறும் இங்கு அருணகிரிநாதருக்கு குருபூஜை சிறப்புற நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவலம்புரி விநாயகர் கிழக்கு நோக்கி அருள, ஸ்ரீகாளீஸ்வரர் (திருவருள் காளீஸ் வரர் என்றும் அழைப்பர்), மேற்கு நோக்கி அருள்கிறார். ஆக, தந்தையும் மகனும் ஒருவரையருவர் பார்ப்பது போல் சந்நிதி கொண்டிருப்பது விசேஷம் எனப் பெருமிதத்துடன் சொல்கிறார் கோயில் அர்ச்சகர், சுப்ரமணிய குருக்கள்.
இந்தக் கோயிலில், வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வருகிற சதுர்த்தி நாளில், சிறப்பு அபிஷேக - ஆராதனைகள், பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், சங்கடஹர சதுர்த்தி திருநாளில் விரதம் மேற்கொண்டு, அன்று மாலை ஸ்ரீவலம்புரி விநாயகரைத் தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர், புதுக்கோட்டை மாவட்ட அன்பர்கள் பலர்! அன்றைய நாளில், கொழுக்கட்டை, எள்ளுருண்டை, அவல் பொரி என ஏதேனும் ஒன்றை விநாயகப் பெருமானுக்குப் படையலிட்டு, வணங்கிச் சென்றால், நஷ்டத்தில் இயங்கி கஷ்டத்தைத் தந்த வியாபாரம், சிறப்புறும்; லாபம் கொழிக்கும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.
'கல்யாண வரம் இன்னும் தகையலையே...’, 'குழந்தை பாக்கியம் இன்னும் கிடைக்கலியே...’ எனக் கலங்கித் தவிக்கும் பெண்கள், விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, கொழுக்கட்டை, எள் உருண்டை படைத்து, ஐந்து அல்லது ஏழு சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து வழிபட்டால், விரைவில் திருமண யோகம் கிடைக்கப்பெறுவர்; பிள்ளை பாக்கியம் பெற்று சிறப்புடன் வாழ்வர் எனப் பூரிப்புடன் சொல்கின்றனர், பெண்கள்!
விநாயகர் சதுர்த்தி நன்னாளில், வலம்புரி விநாய கருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம், கரும்புச்சாறு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் என மலையக்கோவில் கிராமமே அமர்க்களப்படுமாம்! இந்த நாளில் ஸ்ரீவலம்புரி விநாயகருக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபட்டால், நம் வாழ்க்கையும் இனிக்கும்; சிறக்கும் என்கின்றனர் பக்தர்கள்!
ஸ்ரீவலம்புரி விநாயகரை பௌர்ணமி நாளில் மாங்கனி படைத்து வணங்கினால், இழந்த பதவியைப் பெறலாம்; வியாபாரம் சிறக்கும்; இல்லறத்தில் இனிமை நிறைந்திருக்கும் எனத் தெரிவிக்கிறார் சுப்ரமணி குருக்கள்.
No comments:
Post a Comment