Saturday, 16 September 2017

அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை – நாகப்பட்டினம்

அன்னை பார்வதி மயில் வடிவில் வழிபட்ட திருத்தலம் ; இறைவன் ஆண் மயிலாகி கௌரிதாண்டவம் ஆடிய தலம் ; துலா நீராடல்  மூலம் பாவம் நீக்கும் தலம் ; திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், கலைமகள், சப்தமாதர்கள் வழிபட்ட ஆலயம் ; நந்திதேவர் தன் துணைவியோடு திருமணக்கோலத்தில் காட்சி தரும் அரிய தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்ட சிவஸ்தலம்…

🔵⚜🔵⚜ BRS🔵⚜🔵⚜🔵

தொலைபேசி எண் : +91- 4364 -222 345 , 223 779 , 94439 21034 , 93451 49412 , 94422 36436

🦋🎸🦋🎸 BRS🦋🎸🦋🎸🦋

மூலவர் : மாயூரநாதர் சுவாமி, வள்ளலார், கௌரி மயூரநாதர், கௌரி தாண்டவரேசர்.

அம்மன்/தாயார் : அபயாம்பிகை, அஞ்சொல்நாயகி

தல விருட்சம் : மாமரம்

தீர்த்தம் : இடபம், பிரம்ம, அகத்திய தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : மாயூரம், திருமயிலாடுதுறை

ஊர் : மயிலாடுதுறை

பாடியவர்கள் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், அருணகிரிநாதர்

🅱 தேவாரப்பதிகம்:🅱

ஊனத்து இருள்நீங்கிட வேண்டில் ஞானப்பொருள் கொண்டு அடிபேணும் தேனொத்து இனியான் அமருஞ்சேர் வானம் மயிலாடு துறையே.  –திருஞானசம்பந்தர்

🌱 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 39வது தலம். 🌱

🅱 திருவிழாக்கள் :🅱

🌻 ஐப்பசி விழாவில் சிவன் அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது,

🌻 வைகாசி வசந்த உற்சவம்,

🌻 கந்தர் சஷ்டி விழா.

🌻 இது தவிர மாத உற்சவம், பட்ச உற்சவம், பிரதோஷம், சஷ்டி, வசந்த காலத்தில் நடைபெறும் சைத்ரோற்சவம் போன்றவை விசேஷமாக நடைபெறும் விழாக்களாகும்.

🌻 ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று லட்ச தீப பெருவிழாவும், நவராத்திரியில் ஒன்பது நாள், ஒன்பது விதமான அலங்காரம் அம்பாள் காட்சியளிப்பதும் சிறப்பான ஒன்றாகும்.

🌻 வைகாசி திருவிழாவில் பிரம்ம தீர்த்தத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடத்தப்படும்.

🅱 தல சிறப்பு:🅱

🎭  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🎭 மயில் வடிவில்  சிவபெருமானும் அம்பிகையும் காட்சி தருகின்றனர்.  பெண் மயிலான அம்பிகையின் இருபுறமும் இரண்டு சிறிய மயில்கள்  சரஸ்வதி, திருமகளாக விளங்குகின்றன.

🎭 காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் ,5. திருசாய்க்காடு  ஆகும்.

🎭 மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும்.

🎭 ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.

🎭 அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை ஆகும்.

🎭 மாயூரநாதர் சன்னிதிக்குத் தென்புறத்தில் கருவறையை ஒட்டி, குதம்பைச் சித்தர் ஜீவ  சமாதி அமைந்துள்ளது.  சமாதி மீது சந்தன  விநாயகர் எழுந்தருள, சிறிய ஆலயமாக அமைந்துள்ளது.

🎭 கோவில் தல விருட்சமாக மாமரம் உள்ளது. தலவிருட்சம் அமைந்துள்ள இடத்தை சூதவனம் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன. இந்த மாமரத்திற்கு அடியில் மாமரத்து விநாயகர் என்னும் பெரிய விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

🎭 இந்த திருக்கோவிலில் நடைபெறும் மிகப்பெரிய உற்சவம் துலா உற்சவம் ஆகும்.

🎭 ஐப்பசி மாதம் முழுவதும் இந்த உற்சவத்தின் போது கோவில் களை கட்டி இருக்கும். இந்த நாட்களில் மயிலாடுதுறையில் உள்ள அய்யாரப்பர், காசி விஸ்வநாதர், ஸ்ரீபடித்துறை விஸ்வநாதர், வேதாரண்யேஸ்வரர் ஆகியோரும் துலாக் கட்டத்திற்கு வந்து தீர்த்தவாரியில் கலந்து கொள்வார்கள்.

🎭 சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம்.

🎭 கோயில் உட்சுற்றில் இந்திரன், அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

🎭 கந்தபுராணத்தில் வழிநடைப் படலத்தில் இத்தலம் பற்றிய குறிப்பு வந்துள்ளது சிறப்புடையது.

🎭 மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தலபுராணம், அபயாம்பிகை மாலையும், அபயாம்பிகை அந்தாதியும் பாடியுள்ளார்.

🎭 கல்வெட்டில் இத்தல இறைவன் "மயிலாடுதுறை உடையார் " என்று குறிக்கப் பெறுகின்றார்.

🎭 இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 102 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடை திறப்பு:🅱

🗝 காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 🗝

பூஜை விவரம் : 6 கால பூஜை.

🅱 பொது தகவல்:🅱

🦋 இங்கு மூலவருக்கு மேல் உள்ள விமானம் திரிதளம் எனப்படும்.

🦋 இத்தல விநாயகர் அகத்திய விநாயகர் எனப்படுகிறார்.

🦋 இங்குள்ள கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

🦋 இங்கு நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் அருள்புரிகிறார்.

🅱 கல்வெட்டு: 🅱

🎸 இத்தலத்தைப் பற்றிப் படியெடுக்கப்பட்டதாகப் பதினாறு கல்வெட்டுக்கள் உள்ளன. பணிசெய்த அரசர்கள்
குலோத்துங்கன் I,
இராசாதிராசன் II,
குலோத்துங்கன் III,
இராஜராஜன் III,
சடையவர்மன் சுந்தரபாண்டியன் இவர்களாவர்.

🎸 இக்கல்வெட்டுக் களால் நிலம் பொன் அளிக்கப்பெற்றமை அறியப்பெறுகின்றன.

🎸இறைவன் திருமயிலாடுதுறை உடையார் எனவும் குறிக்கப்பெறுவர்.

🎸 இக்கல்வெட்டுகளில் ஐந்துபோக ஏனையவை ஐயாறப்பரைப் பற்றியன.

🎸 இத்தலத்து ஐயாறப்பர் கோயில் தனியே மாயூரநாதர் கோயிலுக்குத் தென்மேற்கில் உள்ளது.

🎸 இந்த ஐயாறப்பர் ஜயங் கொண்ட சோழவளநாட்டுத் திருவழுந்தூர்நாட்டு குலோத்துங்க சோழன் குற்றாலமாகிய திருவையாறுடையார் எனக் குறிக்கப் பெறுவர்.

🎸 இத்தலத்து விக்கிரமசோழன் திருமடம் என ஒன்றிருப்பதாகக் குறிக்கப்பெறுகின்றது.

🎸 முதற் குலோத்துங்கன் சுங்கம்தவிர்த்த சோழன் எனப்படுகின்றான்.

🎸 ஐயாறப்பர் கோயில் ஐயாறப்பரைப் பிரதிஷ்டை செய்தது போன்ற சிறந்த நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பெறு கின்றன.

Ⓜ வழிபட்டோர்: Ⓜ

♻ அம்பாள், திருமால், திருமகள், பிரம்மா, இந்திரன், கலைமகள், சப்தமாதர்கள், கங்கை, யமுனை.

🅱 பிரார்த்தனை:🅱

🌹 செய்த தவறுக்கு மனம் வருந்தி, மன்னிப்பு வேண்டுபவர்கள் காவிரியில் நீராடி சிவனை வழிபட்டு மனஅமைதி பெறலாம். இங்கு நடனம் பயில்பவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 பிரார்த்தனை நிறைவேறியதும் சிவன், அம்மனுக்கு புது வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

🅱 தலபெருமை:🅱

🔥 இக்கோயிலில் ஆதி மாயூரநாதருக்கு பிரகாரத்தில் தனி சன்னதி இருக்கிறது.

🔥 இங்கு சுவாமி லிங்கமாக இருக்க, அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள்.

🔥 சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார்.

🔥 பெரும்பாலான சிவாலயங்களில் கந்த சஷ்டியின்போது, முருகன் அம்பாளிடம் தான் வேல் வாங்குவார். ஆனால், இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷம்.

🔥 சிவனது கௌரி தாண்டவத்தை, "மயூரதாண்டவம்' என்றும் சொல்கிறார்கள். இந்த நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னதி இருக்கிறது. இதில் அம்பாள், சிவன் இருவரும் மயில் வடிவத்தில் இருக்கின்றனர்.

🔥 ஐப்பசி விழாவில் சிவன், அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது.

🔥 கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு மயில் மற்றும் குரங்குகள் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பது விசேஷமான அமைப்பு. இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது.

Ⓜ  சேலை கட்டிய சிவன்: Ⓜ

🍄 நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் ஐப்பசி கடைசிகட்ட துலா ஸ்நானத்திற்காக இத்தலத்திற்கு வந்தனர். அவர்கள் வருவதற்குள் 30ம் நாள் ஸ்நானம் முடிந்து விட்டது. எனவே, வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில் கார்த்திகை முதல்நாளன்று, அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது. தம்பதியர்களுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை, "முடவன் முழுக்கு' என்கின்றனர்.

🔥 அத்தம்பதியர் இக்கோயிலில் சிவனுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி, அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம், அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் "அனவித்யாம்பிகை' என்ற பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர். ஆணும், பெண்ணும் சமம் என்பதை இந்த வடிவம் உணர்த்துவதாக சொல்கிறார்கள். இவரது சன்னதி கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி சற்றே இடப்புறம் சாய்ந்து, இடது காலை மடித்து வைத்தபடி காட்சி தருகிறார்.

Ⓜ ஆடிப்பூர அம்பாள்: Ⓜ

🔥 தன்னை நாடி வந்த மயிலை காத்தவள் என்பதால், "அபயாம்பிகை' என்று அம்பாள் அழைக்கப்படுகிறாள். இவள் வலது கையில் கிளியுடன் இருக்கிறாள். ஆடிப்பூர அம்பாள், வீரசக்தி வடிவமாக தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் ஆடிப்பூரத்தன்றும், ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் காவிரிக்கரையில் எழுந்தருள்கிறாள்.

🔥 பிரகாரத்தில் சந்தன விநாயகர் சன்னதி இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவரை, "அகத்திய சந்தன விநாயகர்' என்றும் அழைக்கிறார்கள்.

Ⓜ துலாஸ்நானம்: Ⓜ

🍁 சிவன், இத்தலத்தில் நந்தியின் கர்வத்தை போக்கி அருள் செய்தாராம். இந்த நந்தி காவிரியின் நடுவில் இருக்கிறது. இந்த தீர்த்தமும் "இடபதீர்த்தம்' எனப்படுகிறது. ஐப்பசி மாதத்தின் 30 நாட்களும், கார்த்திகை முதல் நாளிலும் இவ்விடத்தில் நீராடி வழிபடுவது விசேஷம். இந்நாட்களில் தினமும் சுவாமி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். கங்கை, இங்கு நீராடிதான் தன் பாவங்களை போக்கிக்கொண்டதாம். இந்நாள் ஐப்பசி அமாவாசையாக (தீபாவளி) கருதப்படுகிறது. அன்று நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Ⓜ சனி சிறப்பு:Ⓜ

 🍁 இக்கோயில் பிரகாரத்தில் நவக்கிரக சன்னதியில் உள்ள சனிபகவான், தலையில் அக்னியுடன் "ஜுவாலை சனி'யாக இருக்கிறார். இவருக்கு அருகில் தனியே சனீஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து வடக்கு திசையை நோக்கி, சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். இந்த அமைப்பை காண்பது அபூர்வம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் பார்வை குறையும் என்பது நம்பிக்கை.

🍁 இங்குள்ள கணக்கடி விநாயகரிடம் வேண்டிக்கொண்டால் கணக்குகளை சிறப்பாக பார்த்துக் கொள்வார் என்பது நம்பிக்கை.

🌤 காவிரி புஷ்கரம் என்றால் என்ன ? 🌤

🍁 புஷ்கரம் என்பது ஒவ்வொரு வருடமும் ஒரு புனித நதியின் கரையில் நடைபெறும் ஆன்மிகத் திருவிழா. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி இந்த விழா நடத்தப்படுகிறது. குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு.

🌤 காவிரி புஷ்கரத் திருவிழா: 🌤

⚜ புராணப்படி, ஒவ்வொரு புண்ணிய நதிக்கும் ஒரு ராசி உண்டு. மேஷ ராசி கங்கைக்கும்; ரிஷப ராசி நர்மதைக்கும்; மிதுன ராசி சரஸ்வதிக்கும்; கடக ராசி யமுனைக்கும்; சிம்ம ராசி கோதாவரிக்கும்; கன்னி ராசி கிருஷ்ணா நதிக்கும்; துலாம் ராசி காவிரிக்கும்; விருச்சிக ராசி தாமிரபரணிக்கும்; தனுசு ராசி சிந்து நதிக்கும்; மகர ராசி துங்கபத்ரா நதிக்கும்; கும்ப ராசி பிரம்மபுத்ரா நதிக்கும்; மீன ராசி பரணீதா நதிக்கும் உரியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

⚜ குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கரம் கொண்டாடப்படும். சென்ற வருடம் குருபகவான் கன்னி ராசியில் பிரவேசித்தபோது, கன்னி ராசிக்கு உரிய கிருஷ்ணா நதியில் புஷ்கர விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறியிருக்கிறார்.

⚜ அதனால், துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கர விழா, இந்த வருடம் 12-வது முறையாகக் காவிரியில் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. 144 வருடங்கள் ஆனதால் இதை 'மகா புஷ்கரம்' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.

🌺 புஷ்கர விழாவுக்குப் பின்னால் ஒரு புராண சம்பவம் இருக்கிறது. 🌺

⚜ புஷ்கரம் என்பது பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புனித தீர்த்தம். உலக மக்கள் நீராடிப் புண்ணியம் பெறுவதற்காக அந்தத் தீர்த்தத்தைப் பெற விரும்பினார் குருபகவான். அதற்காக பிரம்மதேவரை வேண்டி தவம் இருந்தார். குருபகவானின் தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர், அவருக்கு முன்பு தோன்றி, ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார். குருபகவானும் 'பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர தீர்த்தம் வேண்டும்' என்றார்.

⚜ புஷ்கர தீர்த்தத்தை குருபகவானுக்குத் தருவதில் பிரம்மதேவருக்கு சம்மதம்தான். ஆனால், புஷ்கரமோ பிரம்மதேவரை விட்டுப் பிரிய சம்மதிக்கவில்லை. அதேநேரம் குருபகவானுக்கு ஏமாற்றம் அளிக்க விரும்பாத பிரம்மதேவர், புஷ்கரத்துக்கும் குருபகவானுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை செய்துவைத்தார். அதன்படி குருபகவான் எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் குறிப்பிட்ட காலம் புஷ்கரம் சேர்ந்திருக்கும் என்றும், அப்போது அந்த நதியில் நீராடினால் அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்றும் முடிவானது.

🌺 காவிரி புஷ்கரத் திருவிழா தொடங்கியது: 🌺

⚜ இதுதான் புஷ்கர விழாவின் தாத்பர்யம் ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை, தொடர்ந்து இரண்டு நதிகளில் புஷ்கர விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. குருபகவான் துலாம் ராசியில் இருக்கும்போது காவிரியில், நடைபெறுவது போலவே, அடுத்தாண்டு அவர் விருச்சிக ராசிக்குச் செல்லும்போது விருச்சிக ராசிக்கு உரிய தாமிரபரணியில் புஷ்கர விழா நடைபெற இருக்கிறது.

⚜ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம் போலவே அளவற்ற புண்ணியம் சேர்க்கும் விழாதான் இந்த புஷ்கர விழா.

🌺 ரிஷப தீர்த்த சிறப்பு: 🌺

🔥 உலகநலனுக்காக பார்வதிதேவி மயிலாக மாறி மாயவரத்தில் தவம் இருந்தாள். இதைக் காண  மகாவிஷ்ணு, பிரம்மா, தேவர்கள் ஆகியோர் அவரவர் வாகனங்களில் வந்த போது ரிஷபம் மட்டும் வேகமாகச் சென்று மாயூரத்தை அடைந்தது. தன்னால்தான் பரமன் விரும்பிய இடங்களுக்கு எல்லாம் செல்கிறார், நான் இல்லை என்றால் அவர் இல்லை என்று ஆணவம் அடைந்தது. இதை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த ஈசன், தன் தலைமுடி ஒன்றை எடுத்து அதன் முதுகின்மேல் வைத்திட, அந்த பாரம் தாங்க முடியாமல் மயங்கிச் சாய்ந்தது. பின் எழுந்து ஆணவம் கொண்ட பாவம் தொலைய வழி கேட்டது.

🔥 மயிலாடுதுறை துலாக்காவிரி கட்டத்தில் நீராடி, சிவலிங்கம் செய்து  வில்வத்தால் அர்ச்சனை செய்தால்,  தட்சிணாமூர்த்தி குருவடிவாய் வந்து ஏற்போம் என்றார். ரிஷபம் பூஜித்ததால் துலாக்கட்டத்துக்கு ரிஷப தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.

🔥 ரிஷபம் வழிபட்ட சிவன், வதான்யேஸ்வரர் என்ற பெயருடன் வள்ளல் சிவனாக (வள்ளலார் கோயில்) அருள் தருகிறார். காவிரி நதி வடகரையில் புஷ்கர தீர்த்த நீராடல் செய்து, பித்ரு பூஜை, கன்யா பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் செய்து மாயூரநாதர் கோயில், வள்ளலார் கோயிலை தரிசிக்கவேண்டும். அதன் பிறகு மூன்று  கி.மீ., தொலைவில் உள்ள 108 திருப்பதிகளில் ஒன்றான பரிமளரங்கநாதரையும் திருஇந்தளூர் சென்று தரிசிக்க வேண்டும்.  இதுவே புஷ்கர நீராடல் விதியாகும்.

🌺 காவிரி புஷ்கர திருவிழா: 🌺

🔥 காவிரி புஷ்கரத் திருவிழா, ஒவ்வொரு வருடமும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம்பெயரும் பொழுது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழா.

🔥 மூன்றரைக்கோடி தீர்த்தத்துக்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குருப்பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் பன்னிரண்டு நாட்கள் பிரவேசம் செய்வதாக வரலாறு.

🔥 குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம்பெயரும் பொழுது துலாம் ராசிக்கு உரியவரான காவிரி நதியில் புஷ்கரமானவர், இந்த ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 27ம் தேதி  செவ்வாய்க்கிழமை முதல் புரட்டாசி மாதம் 8ம் தேதி (24.9.2017) ஞாயிறு வரை வாசம் செய்வதாக ஐதீகம். இந்த புஷ்கரம், மகாபுஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.

🔥 காவிரி நதியின் ராசி, துலாம். 144 வருடங்களுக்கு ஒரு முறை இந்த மகா புஷ்கரம் வரும். இப்போது இந்த மகாபுஷ்கரத் திருவிழா காவிரி பாயும் எல்லா இடங்களிலும் அரசு உதவியுடன் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் துலாக்கட்டக்காவிரியில் மகாபுஷ்கர விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

🔥 இந்த புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்தப் புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், அன்னதானம், ஆடைதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனைத் தந்து நம்மை மோட்சத்துக்கு போக வழிவகுக்கும் என்பதும் ஐதீகம். மேலும் இங்கு நீராடி, பிதுர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பிதுர் சாபம் நீங்கி நல்வாழ்க்கை  வாழவும் வழிவகுக்கும்.

🅱  கோவில் அமைப்பு: 🅱

🌻 இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரியது. நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற 3 பக்கமும் மொட்டை கோபுரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

🌻 கிழக்கிலுள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும், அழகான சிற்பங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. உட்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் திருக்குளமும், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகமும் உள்ளன.

 🌻 கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்திற்கு அருகில், ஜுரதேவர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இவருக்கு அருகில் ஆலிங்கன மூர்த்தி இருக்கிறார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். துர்க்கையின் இந்த வடிவத்தை காண்பது அரிது.

🌻 இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர்.

🌻 பிரகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார்.

🌻 நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததின் பொருட்டு அவர்களுக்கு அம்பாள் சந்நிதியின் தெற்கே சன்னிதி உள்ளது. தம்பதியரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி வழங்கிய இறைவன், அதுமட்டுமன்றி "அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன் கிடைக்கும்" என்ற வரத்தையும் அவர்களுக்கு ஈசன் அருளினார்.

🌻 இத்தலத்திலுள்ள முருகன் சந்நிதி ( குமரக்கட்டளை) மட்டும் தருமையாதீனத்திற்குரியது. பிராகாரத்தில் இடதுபுறம் குமரக்கட்டளைக்குரிய (தருமையாதீனத்திற்குரிய) ஆஸ்தான மண்டபம் உள்ளது. மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமியின் திருக்கோவில் உள்ளது. இந்த முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

🌻 குமரக்கட்டளை மண்டபத்தில் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர். வெளிப் பிரகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.

🅱 தல வரலாறு:🅱

🌺  மயிலாடுதுறையில் உள்ள “பெரிய கோவிலாக”  ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.  மாயூரத்தின்  கணவர் என்ற பொருளுடைய “மாயூரநாதசுவாமி” இக்கோவிலின் முதன்மை கடவுளாவார்.  இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப்  பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன.  அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே  புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்குகிறது.

🔵 பார்வதியை மகளாகப் பெற்ற (தாட்சாயினி) தட்சன் வேள்விக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.  வேள்விக்கு சிவபெருமானை  அழைக்கவில்லை, இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை வேள்விக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தார்.  பார்வதி  மனம் கேளாமல் சிவபெருமான் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக தட்சனின் வேள்வியில் கலந்து கொண்டு  அவமானப்பட்டாள்.

🔵 இதனால் சினமுற்ற சிவன் வீரபத்திர வடிவம் கொண்டு வேள்வியைச் சிதைத்தார்.  அப்போது வேள்வியில் பயன்படுத்தப்பட்ட  மயில் ஒன்று அம்பாளைச் சரணடைந்தது.  நாடி வந்த மயிலுக்கு அடைக்கலம் அளித்து காத்ததால் அபயாம்பிகை, அபயப்பிரதாம் பிகை, அஞ்சல் நாயகி, அஞ்சலை என பலவாறு அழைக்கப்படுகின்றாள்.  சிவபெருமானை பார்வதியை மயிலாக மாறும்படி  சபித்து விடுகிறார்.  அம்பிகை மயில் உருவம் கொண்டு இத்தலத்தில் இறைவனை நோக்கித் தவம் செய்தாள்.

🔵 மனம் இளகிய ஈசன் மயில் வடிவிலேயே தோன்றி கௌரிதாண்டவ தரிசனமும் அம்பிகைக்கு அருள்கிறார். சிவனது கௌரி  தாண்டவத்தை, "மயூரதாண்டவம்” என்றும் கூறுகிறார்கள்.  சிவன் மயில் உருவில் வந்து அருள்புரிந்ததால், மாயூரநாதர் என்று  அழைகப்படுகிறார்.  மாயூரநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மயில் ரூபத்தில் அம்பிகை சிவனை வழிபட்டதால்  மயிலாடுதுறை எனப் அழைக்கப்படுக்கிறது. சிவநிந்தனையுடன் செய்யப்பட்ட தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட தேவர்கள்  யாவரும் தண்டிக்கப்பட்டனர்.  அவர்கள் தாம் செய்த பாவம் நீங்க மயிலாடுதுறை வந்து மாயூரநாதரை வழிபட்டு அருள்  பெற்றனர்.

🔵 புண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறைபடிந்து உள்ளதால், தங்களைப்  புனிதப்படுத்த வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டினர்.  சிவபெருமான், “மாயூரத்தில் ஓடும் காவிரியில் துலா மாதத்தில்  (ஐப்பசி மாதம்) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நதியாக நீராடித் தங்கள் பாவச் சுமைகளை நீக்கிப் புனிதம் பெறலாம்” என்று  அருளினார்.

🔵 அதன்படி ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட நதிகள் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடி, தங்களைத்  தூய்மைப்படுத்திக் கொண்டு புனிதம் அடைந்தன.  தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோர்  மாயூரத்திலுள்ள காவிரிக்கரையில் நீராட வருகின்றனர்.  ஆகையால் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில்  காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

🔵 கங்கைக்கே புனிதம் தரும் நதியாக காவிரி விளங்குவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.  ஐப்பசியில் முதல் நாளன்று முதல் முழுக்கு,  அமாவாசையன்று அமாவாசை முழுக்கு, மாத நிறைவு நாளன்று கடைமுழுக்கு என மூன்று நாட்களிலும் காவிரி தென்கரையில்  மாயூரநாதர், மாயூரம் ஐயாறப்பன், காசி விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர், பஞ்சமூர்த்திகளுடனும், வட கரையில்  வேதாரண்யேஸ்வரர் எனும் வள்ளலார், பஞ்சமூர்த்திகளுடனும் காவிரி துலாக்கட்டத்தில் காட்சித்தரும் சிறப்பு நிகழ்ச்சி  நடைபெறும்.

🅱 சிறப்பம்சம்:🅱

Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

♻ இக்கோயிலின்  நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

♻ பௌர்ணமி அன்று  இத்திருக்கோவிலை 16 முறை வலம் வந்தால் திருவண்ணாமலையை கிரிவலம் செய்த பயனை அடையலாம்.

🅱 இருப்பிடம்:🅱

✈ கும்பகோணத்தில் இருந்து நாற்பது கி.மீ வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது.

✈ சென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சை ஊர்களிலிருந்து பேருந்து வசதிகளும், இருப்புப்பாதையும் உள்ள தலம்.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
 🏹 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

No comments:

Post a Comment