Saturday 23 September 2017

சிந்தனை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 40

            சண்டேச அனுக்ரஹர்

விசாரசர்மர் வீசியெறிந்த கோல், 'மழு'வாக மாறி அவரின் தந்தையின் கால்களை வெட்டி வீழ்த்தியது. ஆனால் விசாரசர்மர், எந்தப் பதற்றமும் இல்லாமல் தனது வழிபாட்டைத் தொடர்ந்தான்.
இந்த நிலையில், விசாரசர்மருக்குக் காட்சி கொடுத்த சிவபெருமான், ''நம் பொருட்டால், ஈன்ற தாதை (தந்தை) விழ எறிந்தாய்; அடுத்த தாதை இனி உனக்கு நாம்!'' என்று அருளி, கருணையுடன் அவனைத் தழுவி, உச்சி மோந்து மகிழ்ந்தார். இறைவனின் திருக்கரங்கள் தீண்டியதும், விசாரசர்மரின் மாயாமலங்கள் நீங்கி சிவ மயமான ஒளிவடிவம் பெற்றார்!
விசாரசர்மரை தன் தொண்டர்களுக்கெல்லாம் தலைவன் ஆக்கினார் சிவனார். அத்துடன், ''எமக்கு நிவேதனம் செய்த பொருட்களும், யாம் உடுத்திய ஆடைகளும், சூடிய மாலைகள் முதலானவையும் இனி உனக்கே உரிமை உடையன. உனக்குச் 'சண்டீசம்' எனும் பதம் தந்தோம்'' என்றும் அருள் புரிந்தார். அதற்கு அடையாளமாகத் தன் சடை முடியினின்று கொன்றை மாலையை எடுத்து, விசாரசர்மருக்குச் சூட்டினார். சண்டீசப் பதம் என்பது தெய்வீகத் தன்மையுடைய ஒரு பதவி.
இவ்வாறு சேய்ஞலூர் விசாரசர்மருக்கு, சிவபெருமான் சண்டீசப் பதம் அளித்து அனுக்கிரஹம் புரிந்த கோலமே 'சண்டேச அனுக்ரஹ மூர்த்தி' எனப்படும்.
சண்டேசர் (சண்டிகேஸ்வரர்) பற்றி அறிவது அவசியம். எல்லா சிவாலயங்களிலும் சண்டேசருக்கென தனிச் சந்நிதி இருக்கும். இது, வடக்குப் பிராகாரத்தில்... மூலவர் கருவறைக்கு வெளிப்புறம் அபிஷேக தீர்த்தம் விழும் கோமுகிக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும்.
சிவாலய மூர்த்திகளில்... ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீநடராஜர் மற்றும் சண்டேசர் ஆகியோர் தெற்கு நோக்கி வீற்றிருப்பார்கள். ஸ்ரீசண்டேசர் எப்போதும் தியானத்தில் இருப்பார். சிவ வழிபாட்டின்போது பெறும் பூமாலை, பரிவட்டம் முதலிய சிவ நிர்மால்ய (சிவபெருமானுக்கு அணிவித்த) பொருட்களை சண்டேசர் சந்நிதியில் சேர்த்து, 'சிவதரிசனப் பலனைத் தர வேண்டும்' என்று அவரைப் பிரார்த்தித்து, அங்கு தரப்படும் திருநீற்றை அணிய வேண்டும் என்பது சமய நூல்களின் விதி.
இதை அறியாத பலர், தமது ஆடைகளில் உள்ள நூல் இழைகளையும் நூல் திரியையும் சண்டேசர் சந்நிதியில் எடுத்துப் போடுகின்றனர். இது பெரும் தவறு.
சண்டேசர், இடையறாத தியானத்தில் இருப்பவர். அவரிடம் நமது வருகையையும் பிரார்த் தனையையும் தெரிவிக்கும் வகையில் அவரது சந்நிதியில் நின்று மெள்ளத் தட்டுதல் வேண்டும். இதைப் புரிந்துகொள்ளாமல் சண்டேசரை, 'செவிட்டுச் சாமி' என்றும், கைகளைப் பெரிதாகத் தட்டியும், சொடுக்கவும் செய்தால்தான் அவரது அருள் கிடைக்கும் என்றும் கூறுவது தவறு!
சண்டேசர் சந்நிதியை முழுமையாக வலம் வரக் கூடாது. சந்நிதிக்கு வலமாகச் சென்று சண்டேசரைத் தரிசித்து விட்டு, வந்த வழியே (அரை வட்டமாக) திரும்ப வேண்டும்.
பக்தர்களுக்கு அனுமதியளித்து, அவர்களை கோயிலுக்குள் அனுப்பும் அதிகாரம் உடையவர் நந்திதேவர். அது போல், சிவபுண்ணியப் பலனை பக்தர்களுக்கு அளிக்கும் அதிகாரம் சண்டேசருக்கு உரியது.
சிலர், 'சண்டேசர் சந்நிதி இடுக்கில் உள்ளது; சென்று தரிசிக்க சிரமமாக உள்ளது' என்று, அவரைத் தரிசிக்கா மலேயே கோயிலை வலம் வருவர். இவரை அவசியம் வழிபட வேண்டும். கோயிலில் முதலில் விநாயகரையும் நிறைவாக சண்டேசரையும் வழிபட்டால் தான் சிவ வழிபாடு முழுமை பெறும்.
சிவாலய திருவிழாக்களில், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு எனும் திருவீதி உலா நிகழும். அப்போது, ஸ்ரீகணபதி, ஸ்ரீமுருகன், ஸ்வாமி, அம்பாள் எனும் வரிசையில் சண்டேசர் கடைசியாக வருவார். சிவாலயங்களில் வரவு- செலவு கணக்குகளை சண்டேசர் பெயரில் எழுதுவதுதான் பழங்கால மரபு. கோயில் சொத்துகளைப் பாதுகாப்பவர் சண்டேசர் என்ற காரணத்தால் இவரது பெயரில் சொத்துகளைப் பதிவு செய்வது வழக்கம். இதுகுறித்த தகவல்களைச் சொல்லும் வெண்பாக்களை, சில சிவாலயங்களில்- கல்வெட்டுகளில் காணலாம்.
இத்தகைய கல்வெட்டு தகவல்கள்... திருவாமாத்தூர் ஸ்ரீஅபிராமேஸ்வரர் கோயில், திருமயம் கள்ளம்பட்டி மதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் மாவட்டம் திருக்களாவுடைய மகாதேவர் கோயில் மற்றும் பெறும்பேறு தலம்-- ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் கோயில்களில் காணப்படுகின்றன.
சண்டேசருக்கு, சிவபெருமான் திருவருள் புரிந்ததை தேவாரத் திருமுறைகள் பெரிதும் போற்றுகின்றன. 'விண்ட தாதையைத் தாளற வீசிய சண்டநாயனுக்கு அருள் செய்தவன்' என்று திருநாவுக்கரசரும், 'தாதை தாளற எறிந்த சண்டிக்குன் சடைமிசை மலரருள் செயக்
கண்டு' என்று சுந்தரரும் போற்றுகிறார்கள். சிவனடியார் அனைவருக்கும் தலைமையான சண்டேசரை, 'தொண்டர் நாயகம்' என்று திருப்பல்லாண்டில் குறிப்பிடுகிறார் சேந்தனார்.
நாயன்மார்களில் மிக மிக இளைய வர் சண்டேச நாயனார். காலத்தால் முந்திய நாயனாரும் இவரே என்பர். சண்டேசரை 'தண்டி' என்றும் இவர், பஞ்ச கவ்வியத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தார் என்றும் திரு மந்திரத்தில் போற்றுகிறார் திருமூலர்.
மூத்த பிள்ளையார்- விநாயகர்; இளைய பிள்ளையார் - முருகன்; காழிப் பிள்ளையார் - சம்பந்தர் என்பது போல்... சண்டேசரை, 'சேய்ஞலூர்ப் பிள்ளையார்' என்று போற்றுவர். அந்தணர் குலத்தில் அவதரித்தாலும் ஆயர் குலத்துக்குரிய பசுக் குலத்தை மேய்க்கும் தொழிலை
ஆசையுடன் மேற்கொண்டு சண்டேசப் பதம் அடைந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், சண்டேசப் பதம் அடைந்த திருவாப்பாடி திருத்தலத்தில், (சேய்ஞலூர் அருகில் உள்ளது) மூலவர் லிங்கம் வீற்றிருக்கும் கருவறையில், சண்டேசர் திருமேனி விளங்குவது தனிச் சிறப்பு!
ஸ்ரீசண்டேச அனுக்ரஹ மூர்த்தி திருவடிவை, அம்சுமத் பேதாகமம் விவரிக்கிறது. இந்த வடிவில், சிவபெருமான் உமாதேவியுடன் உமாசகித மூர்த்தியைப் போல அமர்ந்திருப்பார். இவரின் திருமுகம் சற்றே இடப் புறம் திரும்பியிருக்கும். இவரின் வலக் கரம்- வரதமாகவும், இடக் கரம்- சண்டேசர் தலை மீது வைத்தும் காணப்படும். சண்டேசர், பணிவுடன்- இரு கரம் குவித்து வணங்கிய நிலையில், பத்மாசனத்தின் மீது நிற்பார்.
(தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment