விஷயம் வேறொன்றுமில்லை. பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே கயிலாயம் வந்து விட்டார் திருமால். அடிக்கடி சிவனாரைப் பார்க்காமலும், வம்பிழுத்துப் பரிகாசப் பேச்சு பேசாமலும் அவரால் இருக்கமுடியாது. அதுதான், வெகு விரைவாகவே புறப் பட்டு வந்துவிட்டார். அவரைக் கண்டவுடன் சிவனாருக்கும் கொள்ளை மகிழ்ச்சி!
''சிவனடியார்கள் சற்றே மாறுபட்டவர்கள்தாம். அவர்கள் பக்தியைக் காட்டும் விதமே அலாதியானது!'' என்று அன்றைய உரையாடலைத் துவக்கி வைத்த திருமால், ''ஒருத்தர் காலால் உதைப்பார்; ஒருத்தர் கல்லால் அடிப்பார்; ஒருத்தர் தலையில் தட்டுவார்; இதெல்லாம் போக ஒருத்தர், ஊரிலில்லாத மலர்களைத் தேடிப் பிடித்து அர்ச்சிப்பார். அப்பப்பா..! வித்தியாசமான பக்தர்கள்!'' என்று தொடர்ந்தார்.
அடுத்த வார்த்தையை அவர் பேசுவதற்குள் இடைமறித்த சிவனார், ''ஆமாமாம்! அலாதியானவர்கள்தான். ஆயிரம் தாமரைகளுக்குப் பதிலாக 999 தாமரைப்பூக்கள்தாம் கிடைத்தன என்பதற்காகத் தம்முடைய விழியையே பறித்துவைத்து, நயனமலர் காணிக்கை தருவார் ஒருவர்...'' என்றார்.
அப்போதுதான் இருவரும் உற்றுப் பார்த்துக்கொண்டனர். ஆயிரம் தாமரைகளால் சிவனாரை அர்ச்சிக்கிறேன் என்று விரதம் பூண்ட நிலையில், மலரொன்று குறைந்தபோது, தம்முடைய கண்ணையெடுத்து அதற்கு ஈடுகட்டியது வேறு யாருமல்ல; சாட்சாத் திருமாலான தாம்தான் என்பதையும், சிவனார் அதைத்தான் குறிப்பிடுகிறார் என்பதையும் உணர்ந்த திருமால், வெட்கச் சிரிப்பை மறைத் துக்கொண்டார்.
''அது சரி! உங்கள் குடும்பத்துக்கே இப்படி யெல்லாம் குறுக்கு புத்தியுண்டு. தினமும் ஒரே காலைத் தூக்கிக்கொண்டு ஒரே ஆட்டத்தை ஆடுகிறீர்கள். ஆட்டம்தான் சரி யில்லை; அரங்கமாவது சரியாக இருக்கிறதா? சுடுகாட்டில் போய் என்ன ஆட்டம் வேண்டிக்கிடக்கிறது?'' என்று திருமால் தன் பங்குக்கு கேலிப் பேச்சு பேச...
''ஆமாம் மைத்துனரே, நானும் நல்ல அரங்கம் கிடைக்குமா என்றுதான் தேடி னேன். என்ன சங்கடம்... எல்லாவற்றிலும் நீர் காலை நீட்டிக் கிடக்கிறீர். உம்மைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல்தான், நான் ஒதுங்கிக்கொண்டேன்'' என்று சிவனார் மடக்க... இருவருக்கும் இடையில் வந்து அமர்ந்தார் விநாயகர்.
அவ்வளவுதான்... திருமாலுக்கு வாய்ப்பு கூடியது. ''நல்ல பிள்ளை! அப்பன்தான் கூத் தாடியென்றால், பிள்ளை அருகம்புல்லையும் எருக்கம்மாலையையும் கட்டிக்கொண்டு ஆடுகிறான்'' என்று அங்கலாய்த்தார்.
''என்னை ஏன் உங்கள் வம்புக்கு இழுக்கிறீர்கள்? கேலி செய்வது போல் பேசிவிட்டு, இரண்டு பேரும் சேர்ந்து உலா புறப்பட்டுவிடுவீர்கள்! மாமா, எனக்காவது எருக்கம்பூ. எங்கள் அப்பாவுக்குக் கள்ளிப் பூ. தெரியுமா உங்களுக்கு?'' - இது விநாயகப் பிள்ளையின் விளையாட்டுக் குரல்!
''என்னது கள்ளிப் பூவா? அதுவும் அர்ச்சனை மலரா? இப்படியரு வேடிக்கை எங்கே? எனக்குத் தெரியாமல் போயிற்றே!'' என்று திருமால் நையாண்டி செய்ய...
''எல்லாம் நீர் தருகிற இடம். நானென்ன செய்வேன்?
பிருகு முனிவர் வைகுந்தம் வந்தாராம். பிராட்டியோடு உரையாடிய உற்சாகத்தில் அவரை நீர் கவனிக்கவில்லை யாம். காலால் எட்டி உதைத்தாராம். உடனே, அவர் காலைப் பிடித்துக்கொண்டு, மன்னிப்புக் கேட்டீராம். உம்மைத் தலையில் வைத்துக் கொண்டாடும் அவர், என்னையும் பிரம்மாவையும் கண்டுகொள்வதேயில்லை. எப்படியோ மனம் வந்து பூவுலகில், தொண்டை மண் டலத்தில், கள்ளிக்காட்டில் என் லிங்க வடிவைக் கண்டு விட்டார். கள்ளி மலர்களாலேயே அர்ச்சிக்கிறார். சரி, இதுவாவது கிடைக்கிறதே என்று ஏற்றுக்கொண்டேன்'' என்று விளக்கினார் சிவனார்.
பக்தர்கள் எதைக் கொடுத்தாலும் அதையே அக மகிழ்ந்து ஆனந்தத்துடன் ஏற்கும் சிவனாரின் பெருந் தன்மையை எண்ணிய திருமால், ''எங்கே அது நடக்கிறது? எனக்கும் அங்கு போய் பார்க்கவேண்டும் போலுள்ளது!'' என்றார்.
''ஆகா! அதற்கென்ன?'' என்று சிவனார் சொல்ல, இருவரும் பூலோகம் புறப்பட்டுவிட்டார்கள்.
திரிசூலதாரியும் சக்ரதாரியும் மேகக் கூட்டத்துக்குப் பின்னால் மறைந்துகொண்டு பார்த்தபோது, மனமுருகி, கண்ணின் நீர் கடைபெருக, கள்ளி மலரெடுத்து, சிவலிங் கத்தின்மீது இட்டுக்கொண்டிருந்தார் பிருகு முனிவர்.
சிவனும் திருமாலும் வானவீதியில் வந்து நோக்கி னார்கள். நாமோ சாதாரண மானுடர்கள்; வாருங்கள், சாலை வழியாகவே போகலாம். எங்கே என்கிறீர்களா?
தொண்டைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றானதும், தொண்டை மண்டலத் தேவாரத் தலங்களில் 18-வதும், தற்காலத்தில் கண்டலம் (திருக்கண்டலம்) என்று அழைக்கப்படுவதுமான திருத்தலம் நோக்கிப் புறப்படுவோம், வாருங்கள்!
சென்னையிலிருந்து சுமார் 38 கி.மீ தூரத்தில், சென்னை- பெரியபாளையம் மார்க்கத்தில் உள்ளது கண்டலம். பெரியபாளையம் சாலையில், கன்னிகைப் பேர் என்று இப்போது வழங்கப்படுகிற கன்னிப் புத்தூரை அடைந்தால், அங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் திருக்கண்டலம். திருவள்ளூர்- செங் குன்றம் சாலையில் வந்தால், தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு- வெங்கல் கிராமம் வழியாகத் திருக்கண்டலம் அடையலாம். செங்குன்றம், புழல் பகுதிகளிலிருந்து அத்திப்பேடு வந்து, அங்கிருந்தும் குசஸ்தலை ஆற்றின் குறுக்காகச் சென்று, திருக்கண்டலத்தை அடையலாம். திருக்கள்ளில், கள்ளில் போன்ற பெயர்களே இலக்கி யத்தில் காணப்பட்டாலும், இன்றளவில், திருக்கண்ட லம் என்பதே இத்தலத்தின் பெயர். கண்டலம், தண்ட லம் போன்ற பெயர்களோடு நிறைய ஊர்கள் இருப்ப தால், திருக்கண்டலம் என்கிற சுட்டுப்பெயர் அவசிய மானது.
சின்னஞ்சிறிய கிராமம். ஊர்க்கோடியில் சிவன் கோயில். எதிரில் பெரிய குளம். அழகாகவும் தூய்மை யாகவும் பராமரிக்கப்படுகிறது. அப்படியே இறங்கி அமிழ்ந்து நீராடலாம் என்கிற எண்ணத்தை ஏற் படுத்துகிற குளம். இதுவே நந்தி தீர்த்தம்.
குளக்கரையில் நின்று, கோயில் ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறோம். அவ்வளவாக உயரம் இல்லை என்றாலும், எழிலார்ந்த ஐந்து நிலைகள். சமீப காலக் கட்டுமானம். ஆங்காங்கே சிலைகள். கூத்தாடும் கயிலைநாதர், தட்சிணாமூர்த்தி, அம்பாளும் முருகனும், தண்டபாணித் தெய்வம், அம்பாள் திருக்கல்யாணம், திரிலோகக் குடும்பியாக சிவனாரின் குடும்பம், கஜலட்சுமி, அடியார்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று வண்ண வண்ணக் காட்சிகள். கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்பதை நினைவு கூர்ந்த படியே உள்ளே நுழை கிறோம். கோயிலின் புறத்தும் உள்ளும் உள்ள தூய்மை, உள்ளத்தைக் கொள்ளைகொள்கிறது.
கோயிலின் உள்பகுதியாகவும் பிராகாரமாக வும் அமைந்திருக்கிற விசாலமான இடம்.
திருப்பணிகள் மிகச் செவ்வனே நடந்துள்ளமை யைக் காட்டும் வகையில் வண்ணமயமாக மிளிரும் சந்நிதிகள், விமானங்கள். சந்நிதிகளைச் சுற்றிலும் புல்வெளிகள் அமைக்கப்பட்டு, மலர்ச் செடிகளும் நடப்பட்டுள்ளன.
கோபுர வாயிலுக்கு நேர் எதிரே செப்புக் கவச மிட்ட கொடிமரம். அதன் முன்பாக பலிபீடம், நந்தி மண்டபம். இங்கிருந்து மூலவர் சந்நிதி வரை, முன்மண்டபம் அமைத்திருக்கின்றனர். மண்டபத்தின் முகப்பின் மேற்பகுதியில், பார்வதி- பரமேஸ்வரரின் ரிஷபாரூட கயிலைக் கோலம். நவீனகாலக் கட்டுமானம் என்றாலும், பிற்காலச் சோழர் பாணியையும், விஜயநகர பாணியையும் நினைவூட்டுகிறது.
மூலவர் சந்நிதியும் பிற சந்நிதிகளும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளன. தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதி. இங்கிருந்து மேற்குப் பிராகாரப் பகுதியில் நடந்தால், மூலவர் சந்நிதிக் குப் பின்புறமாக வந்துவிடுவோம். அப்படியே தொடர்ந்தால், மூலவருக்கு இடது பக்கத்தில், ஆனால் சற்றே தள்ளி, முருகன் சந்நிதி. அதையும் தாண்டி, அம்பாள் சந்நிதி. இந்த இரண்டு சந்நிதி களுக்கும், தென்மேற்கு விநாயகர் சந்நிதிக்கும் சிறிய சிறிய முன் மண்டபங்கள் உள்ளன. சந்நிதி களின் அமைப்பேகூட சோமாஸ்கந்த வடிவில் இருப்பது கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. இதைப் பற்றி, செவிவழிச் செய்தி ஒன்று நிலவுகிறது.
அகத்தியர் இங்கே வந்த போது, சோமாஸ்கந்த வடிவில் சந்நிதிகள் அமைந்திருப்பதைக் கண்டு வியந்துபோனார். இறை வனும் இறைவியும் இருவருக்கும் இடையே முருகனுமாக அமை யும் வடிவமே சோமாஸ்கந்த மூர்த்தம். இத்தகைய அமைப்பைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த அம்முனிவர், அடியார்களுக்கு ஆனந்தத்தைத் தரவல்ல இத்தகைய வடிவிலேயே இத்திருக் கோயிலில் எப்போதும் அருளவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். பரமனாரும் அதற்குச் செவிசாய்த்து, அவ்வாறே காட்சி தருகிறார். சிவானந்தம் தரக்கூடிய வகையில் ஆண்டவன் இங்கே அருள் காட்சி தருவதால், அருள்மிகு சிவானந்தேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாளுக்கும் ஆனந்த வல்லி என்றே திருநாமம்.
விநாயகரையும் முருகரையும் வழிபட்டு, அம்பாளையும் வணங்கி, மூலவர் சந்நிதி அடைகிறோம். அருள்மிகு சிவானந்தேஸ்வர ருக்கு, அருள்மிகு கள்ளீஸ்வரர் என்றும் ஒரு திருநாமம் உண்டு.
முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ்சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடிவிளைந்த
கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒருதலையே
விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலும் எதிர்கொள்ள வூரா ரம்மாக்
கரையார் பொன்புனல் வேலிக்கள்ளில் மேயான்
அரையார் வெண் கோவணத்த அண்ணல்தானே
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடிவிளைந்த
கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒருதலையே
விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலும் எதிர்கொள்ள வூரா ரம்மாக்
கரையார் பொன்புனல் வேலிக்கள்ளில் மேயான்
அரையார் வெண் கோவணத்த அண்ணல்தானே
- என்று திருஞானசம்பந்தர் இவரைப் போற்றுகிறார். 'கள்ளில் மேயான்’ என்றும், 'கள்ளின் மேயான்’ என்றும் ஊர்ப்பெயரை வைத்துப் பாடுகிறார்.
கள்ளில் என்று இந்தத் தலத்துக்குப் பெயர் வந்த காரணம்? அதைத்தான் சிவனாரும் திருமாலும் உரையாடிய போதே தெரிந்துகொண்டோம். இந்தப் பகுதி முழுவதும் ஒருகாலத்தில் கள்ளிச் செடிகள் நிறைந்த இடமாக இருந்தது. அப்போதுதான், கள்ளிக் காட்டில் எழுந்தருளியிருந்த சிவலிங்க ஸ்வரூபத்தை பிருகு முனிவர் வழிபட் டார். கள்ளிக்காட்டுக்காரர் என்ப தால், சிவலிங்க நாதருக்கு 'கள்ளீஸ் வரர்’ என்னும் திருநாமம் ஏற்பட்டது. ஊரும் கள்ளில் என்றானது. கள்ளில் என்கிற ஊர்ப்பெயரே, காலப் போக்கில் கள்ளம், கன்னம் என்றெல்லாம் வழங்கலானது. கள்ளில் என்பது செடி வகையிலிருந்து வந்த பெயரானாலும், இதற்கு சுவாரசியமான கர்ணபரம்பரைக் கதை ஒன்றும் உள்ளது.
திருஞானசம்பந்தர், திருவெண்பாக்கத் திலிருந்து திருக்காளத்தி செல்லும் வழியில், இந்தத் தலத்துக்கு வந்தார். அப்போதுதான் வியாழக்குறிஞ்சிப் பண்ணில் பதிகம் பாடினார்.
குசஸ்தலை ஆற்றில் இறங்கி நீராடி வழிபட்டாராம் சம்பந்தர். அப்போது, கரையில் வைத்திருந்த அவரு டைய பூஜைப் பெட்டியும், வழிபாட்டுச் சிலையும் காணாமல் போய்விட்டனவாம். தம் 'உள்ளம் கவர்ந்த கள்வன்’ சிவனாரை, மீண்டும் 'கள்ளம் மேயான்’ என்று அவர் பாடியதும், பெட்டியையும் சிலையையும் கவர்ந்த கள்வனான பெருமான், அவற்றை மீண்டும் கொடுத்தாராம்.
இப்படியரு சம்பவம் உண்மையில் நடந்ததற்கான ஆதாரங்களோ அகச்சான்றுகளோ இல்லை. கள்ளில் என்னும் பெயரையும், கள்ளம் என்னும் சொல்லையும் ஒன்றுக்கொன்று பொருத்திக்கொண்டதால் ஏற்பட்ட கதை இது. தம்முடைய முதல் பாடலிலேயே 'உள்ளம் கவர் கள்வன்’ என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடி யுள்ளதும் துணையாக, அனைத்தையும் ஒருங்கிணைத்து சுவாரசியமான கதையன்று உருவாகிவிட்டது!
அழகான சிவலிங்கத் திருமேனி; சதுர பீட ஆவுடையார். 'நள்ளிப் பதியே நலந்தரும் என்று அன்பர் புகும் கள்ளிற்பதி’ என்று வள்ளலார் பாடுகிற நாதர். நெஞ்சார வழிபட்டு நிற்கிறோம். மூலவர் விமானம், தூங்கானை மாட அமைப்பைக் கொண்டுள்ளது.
மூலவரை வணங்கிவிட்டு வரும்போது, கோயிலின் தூய்மையும் அழகும் அமைதியான கம்பீரமும் நம்மை வசப்படுத்துகின்றன. நூறு வயதைத் தாண்டிய சிவாச்சார்யரின் பராமரிப்பு, ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் மிளிர்கிறது.
பிராகாரப் பகுதியின் பெரும்பாலான இடங் களில் புல்வெளிகளை அமைத்துவிட்டு, சந்நிதிகளை ஒட்டினாற்போல நடப்பதற்குத் தரை அமைத்திருக் கிறார்கள். அவ்வாறு சுற்றி வலம்வரும்போது, கோயிலின் வடக்குச் சுற்றில், மதிலை ஒட்டினாற் போல உள்ளது ஸ்ரீதட்சிணாமூர்த்தி சந்நிதி. இவர் சற்றே வித்தியாசமானவர். தாமரையில் அமர்ந்திருக் கிறார்; நான்கு கரங்கள் கொண்டு, மேல் கரங்களில் அக்ஷ மாலையும் அமுதக் கலசமும் தாங்கியிருக் கிறார்; வலது கீழ்க்கரம் தட்சிணாமூர்த்திக்கே உரிய முறையில் சின்முத்திரை தாங்க... அடடா... இதென்ன, இடது தொடையில் அமர்ந்தபடி, சக்தி தேவி! ஆமாம், இவர் சக்தி தட்சிணாமூர்த்தி!
திருக்கள்ளீஸ்வரரை 1000 கள்ளி மலர்கள் கொண்டு பிருகு முனிவர் வணங்க, அவருக்கு இந்தத் திருக்கோலத்தில் இறைவன் காட்சி கொடுத்தாராம். வெண்ணிற தேகம், சிரசில் சந்திரப் பிறை, ருத்திராக்ஷ மாலை, சின்முத்திரை, அமுத பாத்திரம், புத்தகம் ஆகியன ஏந்திய வடிவம் என்று தட்சிணாமூர்த்திக்கான தன்மைகளோடு, அம்பாளையும் தாங்கியவராகக் காட்சி கொடுப்பது வெகு விசேஷமானது!
உபநிஷதங்கள், தட்சிணாமூர்த்தியை 'ஸாம்ப சிவாய துப்யம்’ என்றே வணங்கும். ஸ அம்ப சிவன் என்றால், அம்பாளோடு கூடிய சிவன். அம்பாளே ஆசாரிய நிலையிலிருந்து ஐயனிடம் அழைத்துச் செல்கிறாள் என்று ஐதீகம் உண்டு. இங்கே ஐயனும் ஆசாரிய வடிவம் தாங்கி, அம்பிகையையும் உடனிருத்திக்கொண்டு, அதிசய ஆனந்த வடிவம் காட்டுகிறார். இதற்கு அருகில் உள்ள பைரவர் சந்நிதியையும் வணங்கி, மறுவலம் வருகிறோம்.
ராமபிரானுடைய மகன்களான லவ- குசர்களை யும்கூட இந்தத் தலத்தோடு தொடர்புபடுத்து கிறார்கள். குசன் ஏற்படுத்தியதால் குசஸ்தலை ஆறு (கொரட்டலை ஆறு என்று சில குறிப்புகள் உள்ளன) என்று பெயர் வந்ததாகச் சொல்லப் படுகிறது. அருகிலுள்ள சிறுவாபுரி என்னும் திருத் தலம், சிறுவர்களான லவ- குசர்கள் வழிபட்டதால், சிறுவர்புரி என்று வழங்கப்பட்டுப் பின்னர் பெயர் மாறியதாகவும் உரைக்கப்படுகிறது. அகத்தியருக்காக நந்திதேவர் அமைத்ததுதான் நந்தி தீர்த்தமானது.
இந்தத் தலத்தின் தூய்மையைப் போல், 'எங்கள் உள்ளமும் எப்போதும் தூய்மையாகத் திகழ வேண்டும் ஐயனே’ என்று விண்ணப்பித்தபடியே நகர்கிறோம்.
No comments:
Post a Comment