Sunday, 10 September 2017

வாழ்வை உயரச் செய்வார் ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர்!

வினை தீர்க்கும் விநாயகனே..!

சிங்காரச் சென்னையின் பல பகுதிகள், அந்தக் காலத்தில் வயலும் வாழையுமாகப் பச்சைப் பசேலெனக் காட்சி அளித்தது. குளங்களும், ஏரிகளும் நிறைய உண்டு!
ஒருநாள், அன்பர் ஒருவர் குளத்தில் இறங்கிக் குளிக்கும்போது, காலில் ஏதோ இடறியது. அதை எடுக்கலாம் என்றால், நகர்த்தக் கூடமுடியவில்லை! அருகில் இருந்தவர்களின் துணையுடன் அதனை தண்ணீருக் குள்ளிருந்து வெளியே எடுத்துப் பார்க்க... அது, செம்பினால் ஆன விநாயகர் விக்கிரகம்! பக்தியுடன் விநாயகரை எடுத்து வந்து, வயல்வெளியில் பிரதிஷ்டை செய்து, சிறிய கோயிலும் கட்டி வழிபடத் துவங்கினர். இவருக்கு ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர் என்று திருநாமமும் சூட்டப்பட்டது.
நாளடைவில்... விளைச்சல் பூமி, சிறுசிறு ஊர்களாக மாறிப்போனது. மடிப்பாகம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய 3 ஊர்களுக்கும் பொதுவாக இந்த விநாயகர் வீற்றிருப்பதால், இவரை வணங்கிவிட்டே, பொழுதைத் துவக்குகின்றனர், பக்தர்கள்! 1965-ல் கோயில் விரிவு படுத்தப்பட்டது. நடிகர் சிவாஜிகணேசன், இந்த விநாயகர் மீது கொண்ட பக்தியால், 'ஆலய மணி’யை வழங்கி, வழிபட்டுள்ளார். சென்னை நங்கநல்லூருக்கு அருகில் உள்ளது உள்ளகரம் - புழுதிவாக்கம். இங்குதான் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபாதாள விக்னேஸ்வரர். விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள், கும்பாபிஷேகம் செய்த ஆண்டு விழா என்பதால், வருஷாபிஷேகம், அன்னதானம் என ஆலயம் களை கட்டும். விநாயகர் சதுர்த்தியன்று, அலங்கார ஆராதனை களுடன் வழிபாடுகள் அமர்க்களப்படுமாம்!
இங்கே, ஸ்ரீகாமாட்சி அம்மன் மற்றும் நவக்கிரகங்களும் உள்ளனர். ஸ்ரீபாதாள விக்னேஸ்வரருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, கொழுக்கட்டை அல்லது அவல் பொரி அல்லது சுண்டல் நைவேத்தியம் படைத்து, மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்த காரியங்கள் யாவும் இனிதே நடந்தேறும்; பள்ளத்தில் இருக்கிற நம்மை உயரத்தில் கொண்டு வந்து, நம் வாழ்க்கையை உயர்த்துவார் என்றுப் போற்றுகின்றனர், பக்தர்கள்!

No comments:

Post a Comment