Saturday 23 September 2017

திருப்பட்டூர் அற்புதங்கள்! - 2

'பக்தர்களைச் சோதனைக்கு உள்ளாக்கிப் பார்ப்பதில்தான், சிவனாருக்கு எத்தனை சந்தோஷம்?!’ என்று சிவனார்மீது செல்லக் கோபம் கொண்டிருந்தார் வியாக்ரபாதர்.
'ஏழெட்டு நாட்களாகவே, இந்த வனத்தில் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது. அபிஷேகத்துக்கு என்ன செய்யப்போகிறோம் என்று கவலையாக இருந்தது. இருந்தாலும், நேற்றிரவுகூடக் கொஞ்சம் தண்ணீர் இருந்ததே! நாளைய அபிஷேகத்துக்கு இதுபோதும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு தூங்கி எழுந்தால்,  இன்று அத்தனையும் காய்ந்துவிட்டிருக்கிறதே! இதென்ன சோதனை?! சிவனாருக்கு எப்படி அபிஷேகம் செய்யப் போகிறேன்?!’ என்று வியாக்ரபாதர் தவித்து மருகிய வேளையில்தான், வானத்தில் கங்கை நீரைச் சுமந்தபடி, பறந்து சென்றுகொண்டிருந்தது ஒரு யானை.
சந்தோஷமானார் வியாக்ரபாதர். தவித்த வாய்க்குத் தண்ணீர் தருகிற உலகில், சிவலிங்க அபிஷேகத்துக்குத் தண்ணீர் கிடையாது என்று எவரேனும் சொல்வார்களா? அதிலும், பக்திக்குப் பெயர் பெற்ற மிருகங்களில் முக்கிய இடத்தில் உள்ள யானையார், தண்ணீர் தராமல் இருப்பாரா, என்ன? - யோசித்த வியாக்ரபாதர், ''யானையே!  கொஞ்சம் இறங்கி வா! உன்னால் ஒரு உதவி ஆக வேண்டியிருக்கிறது!'' என்றார்.
அதற்கு அந்த யானை, ''மன்னிக்கவேண்டும் முனிவரே! நான் அவசர ஜோலியாகச் சென்றுகொண்டு இருக்கிறேன். எனக்கு நேரமில்லை'' எனச் சொல்லியபடி பறந்தது. ''சரி... ஒரே ஒரு சின்ன உதவியை மட்டும் செய்து விட்டுப் போ! உனக்கும் புண்ணியமாக இருக்கும். அடியேன் அனுதினமும் சிவலிங்க பூஜை செய்து வருகிறேன். இந்த வனத்தில் இருந்த தண்ணீர் மொத்தமும் வறண்டுவிட்டது. உன்னிடம் உள்ள நீரில் கொஞ்சம் தந்து உதவினால், பூஜையில் இறங்கிவிடுவேன்’ என்றார் முனிவர் உருக்கமாக.
அந்த யானை சட்டென்று கோபமானது. ''நானும்தான் அன்றாடம் சிவபூஜை செய்கிறேன். நீங்களாவது அங்கே இங்கே அலையாமல், இருந்த இடத்திலேயே இந்த வனத்தின் நீரைக் கொண்டு அபிஷேகம் செய்கிறீர்கள். ஆனால், நான் தினமும் கங்கை வரை பறந்து சென்று, அந்த நீரை எடுத்து வந்து, ஜம்புகேஸ்வர மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறேன்! மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு வந்த இந்தக் கங்கை நீரில் இருந்து ஒரு துளிகூட எவருக்கும் தரமாட்டேன். இது, ஜம்புகேஸ்வரருக்கானது!'' என்று சொல்லிவிட்டு, வேகமாகப் பறந்தது. அந்த யானை, ஒரு குருவியின் அளவுக்குச் சிறுத்து, பின்பு கண்ணிலிருந்து மறைகிற வரைக்கும் ஆவேசமும் ஆத்திரமும் பொங்க, வெறித்துப் பார்த்தபடியே இருந்தார் முனிவர்.
பின்னர், இயலாமை கலந்து சோகத்துடன், கண்களை மூடி, சிவனாரை வேண்டினார். 'இவை அனைத்தும் உமது விளையாட்டு என்பதை அறிவேன். அதற்காக, ஒரு யானையிடம் தண்ணீர்ப் பிச்சை கேட்கும் அளவுக்கு என்னைக் கொண்டுவந்துவிட்டீர், அல்லவா? நான் உம்மீது வைத்திருக்கிற பக்தி உண்மையானால், இறைவன் அடியவர் மீது உண்மையான அன்பு காட்டுவான் என்பது சத்தியமானால், இதோ... இந்த இடத்தில், கட்டாந்தரையில், தண்ணீர் பெருக்கெடுக்க வேண்டும்; அதுவும், அந்தப் புனித நதியாம் கங்கையே இங்கு பொங்கிப் பிரவாகிக்கவேண்டும். அப்படி இல்லையெனில், இனி இங்கே சிவபூஜை செய்யமாட்டேன்!'' என்று ஆவேசத்துடன் அந்த வெறும் தரையைத் தன் புலிக் கால்களால் ஓங்கி மிதித்தார். தனது கைகளால், அந்தப் பூமியை அப்படியே பெயர்த்தெடுத்துத் தூக்கிப் போட்டார்.
அந்த இடத்தில், மெள்ள ஊற்றெடுத்தது; கொஞ்சம் கொஞ்சமாக, தண்ணீர் வரத் துவங்கியது; கண்கள் மூடி கடும் உக்கிரத்துடன் சிவனாரை நோக்கி தவமிருந்த வியாக்ரபாதரின் முகத்தில், பீறிட்டு வந்த ஊற்று நீரானது பட்டுத் தெறித்தது. சற்று நேரத்தில், அந்த இடம் அழகிய திருக்குளம் போன்று காட்சியளித்தது. அந்தப் பள்ளம், வியாக்ரபாதரின் புலிக்கால் வடிவிலேயே அமைந்திருந்தது. குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பியிருக்க, வியாக்ரபாதரின் மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தது. அது சாதாரண நீர் அல்ல; ஊற்றில் இருந்து பிரவாகித்தது கங்கா தீர்த்தமே! பசியுடன் இருப்பவனுக்குத் தலைவாழை இலையுடன் விருந்தென்றால், கசக்கவா செய்யும்?!
இரண்டு கைகளாலும் கங்கை நீரை அள்ளியெடுத்தார் முனிவர்; அப்படியே சிரசில் வைத்து, வழியவிட்டார்; இன்னொரு முறை அள்ளிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, முகத்தில் சப்சப்பென்று தண்ணீரால் அடித்துக் கொண் டார்; திரும்பவும் இரண்டு கைகளாலும் தண்ணீரை அள்ளினார்; கழுத்தில் ஊற்றிக்கொண்டார். இப்போது அவரது கோபம் காணாமல் போய்விட்டிருந்தது; சின்னக் குழந்தைபோல், துள்ளிக் குதிக்கலானார் வியாக்ரபாதர்.
அந்த சிவலிங்கத் திருமேனிக்கு, கை வலிக்க வலிக்க, அபிஷேகம் செய்தார். சட்டென்று ஓடி, வில்வ மரத்தில் ஏறி, மொத்த வில்வங்களையும் பறித்து வந்து, அர்ச்சித்தார். பூஜையின் நிறைவில், வில்வம் மொத்தமும் லிங்கத் திருமேனியை மறைத்திருந்தது. 'தென்னாடுடைய சிவனே! எனக்கு வரமே தேவையில்லை; இதைவிட பெரிதான வரமேதும் இல்லை!’ என்று நெகிழ்ந்தார்; கண்ணீர்விட்டு அழுதார்; அந்த சிவலிங்கத்தை அப்படியே எடுத்து, நெஞ்சில் வைத்துக்கொண்டு, கண்மூடிக்கிறங்கினார்; 'என் சிவனே... என் சிவனே’ என அரற்றினார்.
'இதோ... இந்த அடியவனால், கங்கை நீரே இங்கு வந்துவிட்டது. என்னே உனது கருணை?! கங்கை இங்கே வந்துவிட்டதென்றால், காசியம்பதியின் நாயகன் நீதானே?! அப்படியெனில் உன்னுடைய திருநாமம்- விஸ்வநாதன். நீதான் காசிவிஸ்வநாதன்; என் அன்புக்கு உரிய காசிவிஸ்வநாதன் நீதான்; நீயேதான்!
கங்கையும் வந்துவிட்டாள்; காசிவிஸ்வநாதனான நீயும் வந்துவிட்டாய். இனி, இந்தத் தலம் காசிக்கு நிகரான தலமாக அமையட்டும். இந்தத் தலத்துக்கு நாடி வரும் அனைவருக்கும், காசிக்குச் சென்ற புண்ணியம் கிடைக்கட்டும்; இந்தத் தீர்த்தக் குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன்கள் கிடைக்கட்டும்.
என் இனிய விஸ்வநாதரே! அனைவரையும் காத்தருள்வீர்; இந்தத் திருத்தலத்திலேயே தங்குவீராக!'' என்று மெய்யுருகி வேண்டினார் வியாக்ரபாதர்.
அங்கே... மெள்ள, மேகமூட்டம் எட்டிப் பார்த்தது. இடியும் மின்னலுமாக, மளமளவென வெளுத்து வாங்கியது, மழை! அந்த வனம், அதாவது திருப்பட்டூர் திருத்தலம்...  பெரு மழையில் நனைந்தது; அந்தத் தலத்தின் பள்ளங்களெல்லாம் நீரால் நிரம்பின. வியாக்ரபாதரால் உருவான அந்தப் பள்ளத்தில் கங்கை நீர் நிரம்பியிருக்க... தற்போது மழைநீரும் அதில் கலக்க... இரண்டறக் கலந்த நீர், திருப்பட்டூர் தலம் முழுவதும் பரவியது; காடு-கரையெல்லாம் நிரம்பிற்று.
மரங்களுக்கும் செடிகொடிகளின் வேர்களுக்கும் நீர் போய்ச் சேர்ந்தது. அத்தனை தாவரங்களும் புத்துணர்ச்சி பெற்றுச் செழித்துச் சிரித்தன. இவை அனைத்தையும் பார்த்தபடி, மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு, நெஞ்சில் சிவலிங்கத் திருமேனியை வைத்தபடி, உன்மத்த நிலையில் ஆடிக் கொண்டிருந்தார், வியாக்ரபாதர்.
தில்லையம்பதியில், தனக்காகவும் தனது தோழன் பதஞ்சலிக்காகவும் சிவனார் ஆடிய ஆட்டத்தை நினைவுபடுத்திக்கொண்டே ஆடினார்; தில்லையம்பதியின் திசையை நோக்கியபடி, 'திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்’ என்று உரக்கக் குரல் கொடுத்துக்கொண்டே ஆடினார். அங்கே, திருப்பட்டூரை நோக்கி, அந்தத் தலத்தின் பூமியை நோக்கி, மீண்டும் பிரவாகமெடுத்துப் பெய்தது பெருமழை!
- பரவசம் தொடரும்

No comments:

Post a Comment