அகத்தியர், காலாங்கிநாதர், சட்டை நாதர், போகர் முதலான எண்ணற்ற சித்தர் பெருமக்கள் சதுரகிரியில் தவ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். சத்சங்கம் கூட்டி இருக்கிறார்கள். உலக மக்கள் வளமாக வாழ, எத்தனையோ யோகங்களையும் தவங்களையும் மலைகளில் மேற்கொண்டிருக்கிறார்கள்.
நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்தக் கலி யுகத்தில் 'ஒரே ஒரு மகானின் தரிசனமாவது நமக்குக் கிடைக்காதா... அவர்களின் திருப்பாதம் நம் இல்லத்தில் படாதா...' என்று பணத்தை செலவழித்து படாடோபமாகத் திரியும் பகட்டு மனிதர்களுக்கு இடையே, சதுரகிரியில் சாமான்யனும் சந்தோஷப்படுகிற அளவுக்கு சித்த புருஷர்களின் தரிசனம் அவனுக்குக் கிடைக்கிறது. அதுதான் இறைவனின் திருவருள்! தான் பெற்ற சந்தோஷத்தையும் அனுபவத்தையும் அனைவரும் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறான் அந்த சாமான்யன்.
அப்படிப்பட்ட சாமான்யன், இந்த மலையின் ஒவ்வொரு அடியையும் சித்தர்கள் பாதம் பட்ட புண்ணிய பூமியாகவே பார்க்கிறான். பயபக்தியுடன் அதைத் தொட்டு பூரிக்கிறான்; மனதால் வணங்குகிறான். பக்தியின் உயர்ந்த நிலையாக, இதைத்தான் சொல்லிச் சென்றார்கள் பரம புருஷர்கள்.
காற்றைக் கைப்பிடிக்குள் அடக்க முடியாது. அதுபோல், 'இறைவன் இங்கே மட்டும்தான் இருக் கிறான்' என்று, இரண்யன் கேட்டதற்கு ஏற்ப இடம் சுட்டிக் காட்ட முடியாது. பரந்த வெளி எங்கும் பரம்பொருள்; எங்கெங்குமே அவன் திருவருள்.
கயிலை மலை எங்கும் கண்ணுதலோனின் (சிவபெருமான்) காட்சி தெரிய... காரைக்கால் அம்மையாரின் மனம் மலை ஏற மறுத்து விட்டது. 'சிவசிவா... உன் திருமேனி மேல் என் பாதங்கள் படலாமா?' என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார். காணக் கிடைக்காத சிவபெருமானின் திருக்காட்சி தெரிகிற மலை மீது, தன் காலடித் தடம் படலாமா என்று தவித்தார். தலைகீழாக நடந்து சென்று கயிலைவாசனின் தரிசனம் பெற்றார் என்று 'பெரிய புராணம்' கூறும்.
எந்தக் கண்ணோட்டத்தில் எதை நினைத் துக் கொண்டு ஒரு பொருளைப் பார்க்கிறோமோ, அந்த நேரத்தில் அது நம் கண்களுக்கு அதுவாகவே தெரியும் என்பது சித்தாந்தம். சதுரகிரியும் அப்படியே! நம் பின்னே வருகிற ஒரு நாய், நம் கண்களுக்கு வெறும் நாலு கால் பிராணியாகவே தெரியும். ஆனால், இன்னொரு பக்தரோ அந்த நாயைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார். அதற்கு பிஸ்கட் தருகிறார். அந்த பக்தரின் கண்களுக்கு நாயும் ஒரு சித்த புருஷராகத் தெரிகிறது. சதுரகிரியில் இருக்கிற ஒவ்வொரு மரங்களையும் வணங்கும் ஆசாமிகள் இருக்கிறார்கள். 'இந்தக் கலியுகத்தில் சித்த புருஷர்கள் மரமாகவும் செடியாகவும் புல்-பூண்டாகவும் பறவையாகவும் விலங்காகவும் பாம்பாகவும்... எப்படி வேண்டுமானாலும் தரிசனம் தருவார்கள்' என்கிறது சதுரகிரி தலபுராணம். எனவேதான், சதுரகிரிக்குச் செல்கிற சில அன்பர்கள் தங்களது காலணிகளைத் தாணிப்பாறையிலேயே கழற்றி வைத்து விட்டு, வெற்றுக் கால்களுடன் நடந்து செல்கிறார்கள்.
சமீப காலங்களில், மகான்கள் இந்த சதுரகிரியில் எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என்பதற்கு சில நிகழ்வுகளைக் கடந்த சில இதழ்களில் பார்த்தோம். சந்தன மகாலிங்கம் சந்நிதிக்கு மேலே சித்தருடன் பேசிய சிருங்கேரி ஸ்வாமிகளின் அனுபவம், சுந்தர மகாலிங்கத்திடம் நேரடியாகப் பேசிய முனியாண்டி ஸ்வாமிகளின் அனுபவம் _ இவை நாம் படித்த உதாரணங்கள். நம் கண்களுக்குத் தெரியாதவையும், சுவடிகளில் பதியாதவையும் ஏராளம். இன்னும் பல அதிசயங்கள் சதுரகிரியில் எஞ்சி இருக்கின்றன. பேராசை துறந்து, சுய லாபம் மறந்து, சதுரகிரிக்கு வந்து செல்கிற ஒவ்வொரு பக்தருக்கும் இறை அனுபவத்தை உணரும் அந்த அதிசயம் காத்திருக்கிறது. அதற்கு, சித்தமெல்லாம் சிவமயமாக இருக்க வேண்டும்.
வாருங்கள், அடுத்து வல்லநாடு சித்தரான சாது சிதம்பர ஸ்வாமி களைப் பார்ப்போம்.
வள்ளலார் வழி வந்தவர் இவர். தன் காலத்தில் சுமார் 15 வருடங்களில் பல முறை சதுர கிரிக்கு வந்து சென்றிருக்கிறார் என்கிறார்கள் இவரது பக்தர்கள். சதுரகிரியில் சிதம்பர ஸ்வாமிகள் சந்தித்திராத மரங்கள் இல்லை. சுற்றாத இடம் இல்லை. அங்கு இருக்கும் எல்லா உருப்படியும் இவருக்கு அத்துப்படி. அங்கு வசிக்கும் மனிதர்கள் மீதும், விலங்குகள் மீதும் அலாதிப் பிரியம் கொண்டவர்.
வல்லநாடு சாது சிதம்பர ஸ்வாமிகள் இப்போது நம்மிடையே இல்லை. இவர் சமாதி ஆகி, சுமார் 27 வருடங்கள் ஆகின்றன. வல்லநாடு என்பது திருநெல்வேலி- தூத்துக்குடி பேருந்து வழித் தடத்தில் தாமிரபரணி நதியை ஒட்டி இருக்கும் ஊர். அங்கே இவர் சமாதி ஆகி உள்ளார். ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் வல்லநாட்டில் இவருக்கு நடக்கும் குருபூஜையில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு செல்வது, இவரது தவத்துக்கும் புனிதத்துக்கும் கிடைத்த ஒரு சான்று!
கனத்த சரீரம். தீட்சண்யமான கண்கள். முழங்கால் தெரியும்படி ஒரு வேஷ்டியை, முண்டு மாதிரி இடுப்புக்கு மேல் கட்டி இருப்பார். எதிராளிக்கு என்ன சிக்கல் என்று பார்த்த மாத்திரத்தில் உணர்ந்து, தீர்வும் சொல்வார். 'சதுரகிரியில் சாது சிதம்பர ஸ்வாமிகள் இருந்த காலத்திய சம்பவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்' என்று சதுரகிரியின் அடிவார கிராமத்துப் பழமை ஆசாமிகளிடம் கேட்டால், பொக்கைவாய் தெரிய அவர்கள் அனைவருமே சொன்னது- ஒற்றைக் கொம்பு யானை கதையைத்தான்! ஒற்றைக் கொம்பு என்று இங்கே குறிப்பிடுவது- ஒற்றைத் தந்தம் உள்ள யானையை!
சாது சிதம்பர ஸ்வாமிகள் எப்போது மலைக்கு வந்தாலும் அவருடன் ஏராளமான பேர் உடன் வருவர். ஒரு கூட்டமாக இவர்கள் வரும்போது சமையலுக்குத் தேவையான சாமான்கள், உபகரணங்கள், மலையில் வசிக்கும் மக்களுக்கு உடைகள் என்று விமரிசையாகக் கொண்டு வருவார்கள். ஒரு முறை மலையில் ஏறினால் ஒரு மண்டலம், இரண்டு மண்டலம் என்று நெடு நாட்கள் வரை சதுரகிரியில் தங்கி இருப்பார் சாது சிதம்பர ஸ்வாமிகள்.
மலையில் இவர் இருக்கும் நாட் களில், வந்து செல்லும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் நடக்கும். "சொல்லப் போனால் சதுரகிரியில் முதல் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தவர் வல்லநாடு ஸ்வாமிகள்தான். அதன் பிறகுதான் இன்றைக்குப் பலரும் அந்தப் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்" என்கிறார் அவரின் பக்தர் ஒருவர்.
சுந்தர மகாலிங்கம் சந்நிதி அருகே சுறுசுறுப்புடன் சுற்றிக் கொண்டிருப்பார் சாது சிதம்பர ஸ்வாமிகள். 1975-ஆம் ஆண்டு சுந்தர மகாலிங்கத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தபோது அதில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவரது வழிபாடே வித்தியாசமாக இருக்கும். வள்ளலார் வழியில் வந்தவர் என்பதால் எந்த ஜீவனுக்கும் தொந்தரவு தரக் கூடாது என்பார். ஜோதி வழிபாட்டை மேற்கொள்வார். இறைவன் சந்நிதிகளில் தீபம் ஏற்றுவார்; மலைக்கு மேல் நடையாய் நடந்து சென்று சித்தர்களின் குகைகளில் தீபம் ஏற்றி வணங்குவார். வித்தியாசமான முறையில் நவக்கிரக பூஜை செய்வார்.
ஒவ்வொரு பக்தருக்கும் உரிய மரியாதையைத் தருவார். மரியாதைக் குறைவாக எவரையும் அழைக்க மாட்டார். அனைவரையும் 'சாமீ... சாமீ...' என்றுதான் பவ்யமாக அழைப்பார். 'அடியார்களுக்குத் தரும் மரியாதை, அந்த ஆண்ட வனுக்கே கொடுக்கும் மரியாதை' என்பார் முகம் நிறைய புன்னகையோடு.
ஒற்றைக் கொம்பு யானை கதைக்கு வருவோம். ஜீவன்களுக்கு எந்த வித தொந்தரவும் கொடுக் காதவர் இந்த ஸ்வாமிகள் என்று பார்த்தோம். ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் இவரை, அப்போது மலை மேல் இருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. காரணம்- மலை மேல் உள்ள சில விலங்குகளை வேட்டையாடுவது அவர்களின் வாடிக்கை. ஸ்வாமிகளுக்கு இது பிடிக்காது என்பதால் அன்புடன் அவர்களைக் கூப்பிட்டுக் கண்டிப்பார்.
சதுரகிரியில் வசித்து வந்த அந்த ஒற்றைக் கொம்பு யானை, பிரமாண்டமானது. காட்டில் அது நடந்து வரும்போது, அதன் அழகைப் பார்த் துப் பார்த்து வியந்திருக்கிறார் சிதம்பர ஸ்வாமிகள். இவரைப் பார்த்து விட்டால், அந்த யானை குஷி யாகி விடும். அதேபோல் யானையைப் பார்த்தால் இவருக்கும் உற்சாகம் பீறிட்டுக் கிளம்பும்.
தன் எதிரே அந்த யானை கால்களைத் தூக்கித் தூக்கி ஆடும்போது, இவரும் அதேபோல் தன் ஒரு காலை அந்தரத்தில் தூக்கி நின்று, கனத்த சரீரத்துடன் இப்படியும் அப்படியும் ஆடுவார். இதைப் பார்ப்பவர்கள் எல்லாம், 'இவர் எப்படி அந்த ஒற்றைக் கொம்பு யானையைத் தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு சொன்னபடி எல்லாம் கேட்க வைக்கிறார்' என்று வியந்து நிற்பார்கள். அந்த யானையின் மேல் இவர் கொண்ட பக்தி, அலாதி யானது. விநாயகரின் அம்சமாக அந்த யானையை எண்ணி, அதைச் சந்திக்கும் வேளைகளில் பூஜை கள் செய்து வழிபடுவார்.
'யானையை சாதுவாக நாம் பழக்கப்படுத்திக் கொண்டால், அதுவும் ஒரு சாதுதான்!' என்று சிரித்துக் கொண்டே சொல்வாராம் ஸ்வாமிகள். ஆனால், காட்டிலே மிருகங் களை வேட்டையாடுகிற சில ஆசாமிகளுக்கு இந்த யானையின் மேல் ஒரு வெறுப்பு இருந்து வந்தது. காரணம்- சாது சிதம்பர ஸ்வாமிகள் மாதிரியே, ஒற்றைக் கொம்பு யானைக்கும் ஜீவகாருண்யத்தில் ஒரு பிரியம் போலிருக்கிறது. துஷ்ட ஆசாமிகள், காட்டு மிருகங்களை வேட்டை ஆட வரும்போது, அவர்களைக் குறி வைத்துத் துரத்துமாம்! இதனால், தங்களால் நிம்மதியாக வேட்டை ஆட முடியவில்லையே என்கிற எரிச்சல் இந்த ஆசாமிகளுக்கு இருந்து வந்திருக்கிறது.
இந்த யானையின் தந்தத்தின் நீளம் மட்டும் சுமார் ஆறடி இருக்குமாம். துஷ்ட ஆசாமிகளின் கண்களை இதுவும் உறுத்தியது. 'தங்களுக்குத் தொந்தரவு தரும் இந்த யானையை எப்படியாவது கொன்று விட்டு, இதன் தந்தத்தைத் திருடி விற்றால், நல்ல பணம் கிடைக்கும்' என்று திட்டம் போட்டார்கள். இது, ஸ்வாமிகளுக்கும் தெரிந்து இருந்தது. எனினும், தன்னால் முடிந்த சந்தர்ப்பங்களில் யானையை காத்து வந்திருக்கிறார் ஸ்வாமிகள்.
ஆனால், கொடியவர்களின் சதித் திட்டம் ஒரு நாள் பலித்தே விட்டது. அந்த சதியில் அப்பாவி யான சாது சிதம்பர ஸ்வாமிகளையே சிக்க வைத்து விட்டார்கள் அந்தக் கயவர்கள்.
(அதிசயங்கள் தொடரும்)
|
Wednesday, 20 September 2017
சதுரகிரி யாத்திரை! - 16
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment