சரபர்
சரபர் தியானம்
பொருள் எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், மற்றும் இரண்டு இறக்கைகளுடன், பெருங்கோபமும் ஆரவாரமும் கொண்டு எதிரில் தோன்றி, ரத்தத்தைக் குடித்து செருக்குடன் வரும் நரசிம்மம் ஆவி அடங்கும்படி செய்து, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி திருவடிவம்!
தன் சகோதரனான இரண்யாட்சனைக் கொன்றதால், திருமால் மற்றும் அவரின் பக்தர்கள் மீது இரண்யகசிபு வன்மம் கொண்டு இருந்ததையும், இதன் பொருட்டு தன் மகன் பிரகலாதனையே அவன் கொல்லத் துணிந்ததையும், நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்டு இந்த அசுரனைக் கொன்ற கதையையும் நாமறிவோம்.
அப்படி, இரண்யகசிபுவின் உடலைக் கிழித்து அவனை அழித்த பிறகும் நரசிம்மரின் ஆக்ரோஷம் தணியவில்லையாம். திருமகளும் தேவர்களும் வேண்டித் தொழுதும்கூட அவரது கோபம் அடங்கவில்லை. கவலை கொண்ட தேவர்கள், சிவபெருமானைச் சரண் அடைந்தனர். அவர்களது பிரார்த்தனையை ஏற்று, நரசிம்மத்தின் வேகத்தையும் கோபத்தையும் அடக்க, சிவ பெருமான் எடுத்த கோலமே சரப மூர்த்தம் (நரசிம்மத்தை அடக்கி வருமாறு சிவனாரின் கட்டளைக்கு இணங்க வீரபத்திரரே சரபராக வந்தார் என்று லிங்க புராணமும் இன்னும் சில ஞான நூல்களும் குறிப்பிடுகின்றன).
'சரபம்' என்ற சொல்லுக்கு எட்டு கால்களைக் கொண்ட பறவை, இரண்டு தலைகளைக் கொண்ட பறவையின் வடிவம் என்றெல்லாம் பொருள் கூறுகின்றன நிகண்டுகள். இரண்டு சிம்ம முகங்கள், மனித உடல், இரண்டு இறக்கைகள், எட்டு கால்கள் மற்றும் நீண்ட வாலுடன்... விலங்கு- பறவையாகக் காட்சி தரும் அதிசய வடிவமே சரபம். பட்சிகளுக்கெல்லாம் அரசனாகவும், சிங்கத்தையே வெல்லும் வல்லமை கொண்டதாகவும் திகழும் இந்தத் திருவடிவை, 'சிம்மக்ன மூர்த்தி', 'சிம்ஹாரி' 'நரசிம்ம சம்ஹாரர்' என்றும் ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.
'பறவை போன்று பொன்னிறம், மேல் நோக்கிய இரண்டு இறக்கைகள், செந்நிறக் கண்கள் இரண்டு, கூரிய நகங்களுடன் கூடிய... சிங்கத்துக்கு இருப்பது போன்ற நான்கு கால்கள்,
மனித உடல், கிரீடம் தரித்த சிங்க முகம் மற்றும் தந்தங்களுடன் பயங்கரமான தோற்றத்தில் காட்சி தருவார் சரபர்' என்று விவரிக்கிறது காமிகாகமம்.
இந்த மூர்த்தியை 'ஆகாச பைரவர்' என்று உத்தர காமிகாகமம் குறிப்பிடுகிறது. 32 திருக்கரங்களுடன் கூடியதாக இந்தத் திருவடிவை சித்திரிக்கும் 'தத்வநிதி' என்ற சிற்ப நூல், 'இவரின் கரங்களில் ஒன்று துர்கையை அணைத்தவாறு இருக்கும்' என்று குறிப்பிடுகிறது.
சரபரின் மூன்று கண்கள்- சூரியன், சந்திரன், அக்னி; நாக்கு- நிலத்திலுள்ள பாதவலையம்; இறக்கைகள்- காளி மற்றும் துர்கை; நகங்கள்- இந்திரன்; வயிறு- காலாக்னி; தொடைகள்- காலன் மற்றும் மிருத்யுவாகத் திகழ்கின்றன என்றும், இவரின் வலிமை வாயுவைப் போன்றது என்றும் உத்தர காரணாகமம் கூறுகிறது. 'சரப மூர்த்தியை வழிபடுவதால் பகை அழியும்; போர்களில் வெற்றி கிடைக்கும்; நோய் நீங்கும்' என்று சரப வழிபாட்டின் சிறப்பையும் இந்த ஆகமம் விவரிக்கிறது.
'ப்ரத்யங்கரா எனும் காளியும், சூலினி எனும் துர்கையும் சரபரின் இறக்கைகளாகவும்; இவரின் இதயத்தில் பைரவரும், வயிற்றில் வடவாக்னியும், தலையில் கங்கையும் திகழ, தொடையில் நரசிம்மரைக் கிடத்தியவாறு காட்சியளிப்பவர் சரபர்' என்கிறது பிரம்மாண்ட புராணம். இந்தத் திருவடிவம் குறித்து சரப புராணமும் விவரிக்கிறது. இந்த மூர்த்தியின் சக்தி- அரிப்ரணாசினி.
'தீ, பூகம்பம், மண் மாரி, இடி, புயல், மின்னல் ஆகிய இயற்கைச் சீற்றங்கள்- பேராபத்துகள் நீங்கவும், பரிகாரம் செய்ய முடியாத கஷ்டம், வைத்தியர்களாலும் தீர்க்க முடியாத நோய் ஆகியன அகலவும், அகாலமிருத்யு, பைத்தியம், விஷ பயம், பூத- ப்ரேத- பைசாச உபாதைகள் ஆகியவற்றில் இருந்து நிவர்த்தி கிடைக்கவும் சரபரை வழிபட வேண்டும்' என்கிறார் வியாசர். சாரதா திலகம், மந்த்ர மஹார்ணவம், ஆகாசபைரவ கல்பம் போன்ற நூல்கள் சரப வழிபாட்டை விவரிக்கின்றன. சரபாஷ்டகம், தாருண ஸப்தகம், சரப புஜங்க ப்ரயாதம், சரபேஸ்வர அஷ்டகம்(பிரம்மன் துதித்தது), சரபேஸ்வர சஹஸ்ரநாமம் ஆகிய தோத்திரநூல்களும் உண்டு. சரப கவசம் மிகச்சிறந்த பாராயண நூல்.
சரபர் குறித்த நூல்கள் தெலுங்கில் அதிகம். எனவே, அந்தப் பகுதியை ஆட்சி செய்த சாளுக்கியர்களின் தொடர்பால், (பிற்கால சோழர்கள் காலத்தில்) தமிழகத்தில் சரபர் வழிபாடு பிரபலம் அடைந்தது. கும்பகோணம் அருகில் உள்ள ஊர் துக்காச்சி. இங்குள்ள விக்ரம சோழீச்வரம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில்தான் முதன் முதலில் சரபரின் சிற்பம் அமைக்கப்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். முதலாம் குலோத்துங்கனின் புதல்வன் விக்ரம சோழனின் (1118-1135) காலத்தில் இந்த சிற்பம் அமைக்கப்பட்டதாம்.
2-ஆம் ராஜராஜன் கட்டிய ராஜராஜேச்வரம் (தாரா சுரம்) ஐராவதேச்வரர் கோயில்- ராஜகம்பீர மண்டபத்தில் உள்ள சரபரின் திருவடியில் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார் நரசிம்மர். 3-ஆம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட திரி புவனம் (கும்பகோணம் அருகில்) கம்பஹரேஸ்வரர் கோயிலில் தனிச் சந்நிதி கொண்டுள்ளார் சரபர். இங்குள்ள சரபரின் பஞ்சலோக வடிவம், மேற்கரங்களில் பரசு (கோடரி)- மான்; கீழ்க் கரங்களில் பாசம்- அக்னியுடன் திகழ்கிறது.
திருவண்ணாமலை, மதுரை ஆகிய தலங்கள், சிதம்பரம்- நடராஜர் கோயில், சென்னை- குரோம்பேட்டை குமரன் குன்றம் கோயில், சோழிங்கநல்லூர்- ப்ரத்யங்கரா கோயில், திருமயிலை- வெள்ளீஸ்வரர் கோயில், சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் ஆகிய தலங்களிலும் சரப மூர்த்திக்கு தனிச் சந்நிதி உண்டு.
சென்னை- கோயம்பேடு, மாடம்பாக்கம், திரிசூலம் ஆகிய தலங்களின் சிவாலயங்களில் தூண் சிற்பமாகக் காட்சி தருகிறார் சரபர். திருவாரூர் ஆலய மேலைக் கோபுரம், வைத்தீஸ்வரன் கோயில் கிழக்கு கோபுரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரம் ஆகியவற்றில், சரபமூர்த்தியை சுதை சிற்பமாக தரிசிக்கலாம்.
|
Saturday, 23 September 2017
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 58
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment