Wednesday, 20 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 29



சென்னை- திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டை யில் (தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமி நாதய்யர் வாழ்ந்த இடம்) அமைந்துள்ளது திருவேட்டீஸ்வரர் திருக்கோயில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் திருவேட்டீஸ்வரர்; இறைவி- செண்பகாம்பிகை. அஷ்ட ருத்ர க்ஷேத்திரங்களில் 8-வது தலமான இதுவும், அர்ஜுனன் வழிபட்டு அருள் பெற்ற தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கும்பகோணம் அருகிலுள்ளது திருவைகாவூர். இதன் அருகில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளதும் பாடல் பெற்ற தலமுமான 'விஜயமங்கை'யும் அர்ஜுனன் வழிபட்ட தலமாகக் கருதப்படுகிறது. 

இங்கு கோயில் கொண்டிருக்கும்  மங்களாம்பிகை உடனுறை விஜய நாதேஸ்வரரை, 'பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து வேண்டு நல் வரங்கொள் விஜயமங்கை' என்று பாடுகிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். கோயிலின் அருகில் அர்ஜுன தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் 'மந்த்ரபீடேச்வரி'  மங்களாம்பிகை சந்நிதியில், தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அருளும் கிராத மூர்த்தியைப் பற்றி குடந்தைத் தல புராணம் குறிப்பிடுகிறது.
மகா பிரளயத்தின்போது, சிவபெருமா னின் ஆணைப்படி படைப்புக்குரிய ஜீவ வித்துகளை வைத்த குடத்தை அமுதத் தால் நிறைத்தார் பிரம்மா.
அந்தக் குடம், பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்தது. மீண்டும் உலக உற்பத்தி யைத் துவக்க திருவுளம் கொண்ட சிவனார் வேட உருக் கொண்டு வந்தார். பிறகு, அம்பெய்து, அமுதக் குடத்தை உடைத்து உலக சிருஷ்டியைத் தோற்றுவித்தார். உடைந்த குடத்தில் இருந்த அமுதம் மணலில் கலந்தது. அதைச் சிவலிங்கமாக்கி, விதிப்படி பூஜித்தார் பிரம்மன். அதுவே, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் லிங்க மூர்த்தமாகும்.
இதையட்டியே இத்தலத்துக்கு 'குடமூக்கு' என்று பெயர் வந்தது. குடம் வைக்கப்பட்டிருந்த இடம் குடவாயில் (குடவாசல்). இறைவன் வேட னாக நின்று பாணம் தொடுத்த இடம், தற்போது கும்பகோணத்தில் உள்ள பாணந்துறை (பாணாதுறை).
கும்பேஸ்வரர் கோயிலிலுள்ள கிராத மூர்த்தி (வேடன்) திருவடிவம் நான்கு கரங்க ளுடன் திகழ்கிறது. பின் இருகரங்களில் மான்- மழு; முன் வலக் கரத்தில்- அம்பு, இடக் கரத் தில் வில்லும் திகழ, ஜடா மகுடத்துடன் காட்சி யளிக்கிறார் இவர். இந்தத் தலத்தின் ஆதி மூர்த்தி இவரே. இவருக்கும் அர்ஜுனனுக்கு பாசுபதம் அளித்த கிராத மூர்த்திக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
அர்ஜுனன் தவம், அவனுக்கும் வேடனாகி வந்த சிவனாருக்கும் இடையேயான உரையாடல்கள், அர்ஜுனன் பாசுபதம் அஸ்திரம் பெற்றது முதலான நிகழ்ச்சிகள்... நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் தெருக்கூத்து வடிவில் பல்வேறு ஊர்களில் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. கிராதார்ஜுனியம் எனும் சம்ஸ்கிருத நூலும் இந்த வரலாறை விவரிக்கிறது.
கிராமங்களில் திரௌபதி- தருமராஜர் கோயில் களில் நடைபெறும் மகாபாரதக் கூத்தில், 'அர்ஜு னன் தபசு' என்ற பெயரில் நாடகமாகவும் தெருக் கூத்தாகவும் இந்தக் கதை நடிக்கப்படுகிறது.
தெருக் கூத்தில், அர்ஜுனன் மர உச்சியில் அமர்ந்து தவம் செய்ததாகக் காட்டுவர். கூத்தின் முதல் நாளன்று, பெரிய தென்னை அல்லது பனை மரத்தை நட்டு அதன் மீது பலகை பொருத் துவதுடன், மரத்தின் மீது ஏறுவதற்கு வசதியாக நூல் ஏணி அல்லது மரக்குச்சிகளால் வழி அமைப்பர். தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.
கூத்து நடைபெறும் நாளன்று கிருஷ்ணர், திரௌபதி மற்றும் தன் சகோதரர்களிடம் விடை பெறும் அர்ஜுனன் (வேடம் ஏற்பவர்), நள்ளிரவுக்கு மேல் மரம் ஏறுவார். படிக்கு ஒரு பாட்டாகப் பாடியபடி மரம் ஏறுபவர், மேலே உள்ள பலகையில் அமர்ந்து சிவனாரை பூஜிப்பார். பூஜையில் சமர்ப் பிக்கப்படும் பூக்கள் மற்றும் எலுமிச்சை பழங்களை மக்கள் பயபக்தியுடன் பெற்றுக்கொள்வர். தவிர, இந்தப் பிரசாதங்கள் தங்கள் மீது விழுந்தால், அர்ஜுனனைப் போன்று... ஆரோக்கியம், வீரம், சிவனருள் நிறைந்த குழந்தைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. விடியும் வேளையில், சிவ னார்- பார்வதி இருவரும் முறையே வேடன் மற்றும் வேடவர் மகளாகத் தோன்றுவர். வேடன், அர்ஜுனனுடன் சண்டையிடுவார். பிறகு, அஸ்திரம் வழங்கி அருள் புரிவார்.
தொண்டை நாட்டில் முன்பு பல ஊர்களில் அர்ஜுனன் தபசு நாடகமும் நடைபெற்றுள்ளது. அர்ஜுனனுக்கு அருள் செய்ததைப் போலவே, இன்னும் பல அடியார் களுக்கும் வேடனாக வந்து சிவனார் அருளியதாக தகவல்கள் உண்டு.
சுந்தரமூர்த்தி சுவாமிகள், தன் தோழரான சேரமான் பெருமாள் அளித்த பெரும் செல்வத்துடன், திருவாரூருக்குத் திரும்பினார். அவர், திருமுருகன் பூண்டியை (அவிநாசி அருகில்) அடைந்தபோது இரவாகி விட்டது. அப்போது, சிவனார் வேடராகவும், அவரின் கணங்கள் வேடர் படைகளாகவும் அங்கு தோன்றினர். சிவனார், சுந்த ரரின் செல்வத்தைக் கொள்ளை கொண்டார். உடனே சுந்தரர், அங்கிருந்த (முருகப் பெருமான் வழிபட்ட) திருமுருக நாத சுவாமி கோயிலுக்குச் சென்று, 'கொடுகு வெண் சிலை வடுக வேடுவர்' என்று தொடங்கும் பதிகம் பாடினார். 'முருகன் பூண்டி நகரில், கொடிய கள்வர்கள் வாழ்கிறார்கள்; இவர்களைத் தண்டிக்காமல், எத்துக்கு இருந்தீர் எம்பிரான் நீரே' என்று சுந்தரர் ஒவ்வொரு பாடலாகப் பாடி பதிகத்தை நிறைவு செய்ய... அவர் முன் தோன்றிய இறைவன், தாம் கவர்ந்த செல்வத்தை திரும்ப அளித்து சுந்தரரை மகிழ்வித்தார். இதையட்டி, ஆண்டுதோறும் இந்தக் கோயிலில், 'சுந்தர வேடு பறி' உற்சவம் நடைபெறுகிறது.
சீர்காழிக்கு அருகில் உள்ள திருக்குருகாவூர் வெள்ளடை தலத்திலும் ஓர் அருளாடல் நடை பெற்றுள்ளது. வேடர் வடிவில் வந்த இறைவன், சுந்தரருக்கு இங்குள்ள கோயிலுக்கு வழிகாட்டி மறைந்தாராம். இதை, 'வேடனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே' என்று இந்தத் தலப் பதிகத் தில் பாடுகிறார் சுந்தரர்.
- (தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment