Saturday 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 45

                                          சுகாசனர்
கன் மாதாவாகிய சர்வேஸ்வரி, தட்சனின் மகளாகத் தோன்றி, தவம் செய்து, சிவ பெருமானை மணந்தாள். தட்சன் சிவநிந்தை செய்ததால்... அவனால் வளர்க்கப் பெற்ற தன் உடலையும், அவனின் மகள் என்பதால் தான் பெற்ற தாட்சாயிணி என்ற பெயரையும் மாற்ற வேண்டினாள். ஈசனின் திருவருளால், இமாசல மன்னனுக்கு மகளாகத் தோன்றி, 'உமை' எனும் பெயருடன் வளர்ந்தாள். இமராஜகுமாரியான அவள், தவம் மேற்கொண்டு சிவபெருமானுக்கு மாலையிட்டாள்.
ஒரு நாள், ''எம்பெருமானே... எனக்கு மந்திர தீட்சை செய்து, சிவாகமங்களை உபதேசிக்க வேண்டும்'' என்று சிவனாரிடம் பிரார்த்தித்தாள் உமாதேவி. அதன்படி அவளுக்கு தீட்சை செய்து, பிரணவ ஸ்வரூபத்தை உபதேசித்தார் ஈசன். பிறகு, கமாலினி முதலான தோழியர்கள் கொண்டு வந்த மலர்களை அணிந்து தன்னை அலங்கரித்துக் கொண்ட உமாதேவி, சிவனாரின் இடப் புற மடியின் மீது அமர்ந்தாள்.
பின்னர் சிவபெருமானிடம், ''ஸ்வாமி! பிரணவ மந்திரம் உபதேசிக்கப் பெற்ற நான், அதன் பொருளையும் அறிய விரும்புகிறேன். பிரணவம் எப்படித் தோன்றியது? அதற்குப் 'பிரணவம்' என்ற பெயர் வந்தது எப்படி? பிரண வத்தில் இருந்து எத்தனை மந்திரங்கள் தோன்றின? அதனை, 'வேத ஆதி' என்பதற்கான காரணம் என்ன? பிரணவ மந்திரத்துக்குத் தேவன் யார்? அவரை எப்படி பூஜிப்பது போன்ற விவரங்களையும் கூறியருள வேண்டும்!'' என்று வேண்டினாள். அவளது கேள்விகளுக்கு விளக்கம் அளித் தார் சிவனார்!
பிரணவப் பொருளே சிவபெருமானின் ஸ்வரூபம். அது, எல்லா வித்தைகளுக்கும் விதை போன்றது; மிக சூட்சுமம் ஆனது. உலகில் எல்லா ரூபங்களிலும் காணப்படுவது. அதுவே பரப்ரம்மம் ஆகும். ஏகாட்சரம் என்றும், ஆதி மந்திரம் என்றும் சொல்லப்படுவது.
எனவே சிவபெருமானை, 'ஏகாட்சரரூபி' என்பர். 'அ'கார, 'உ'கார, 'ம'காரங்களாகிய மூன்றும் சேர்ந்து உச்சரிக் கப்படுவது பிரணவம். அதிலிருந்தே வேதங்கள் தோன்றின. 'அ'காரம்- ரஜோ குணத்துடன், நான்கு முகங்களுடைய பிரம்மனாக சிருஷ்டியை (உற்பத்தியை) செய்யும். 'உ'காரம்- ஸத்வ குணத்துடன், பிரகிருதி எனும் யோனியாகிய விஷ்ணு ரூபமாக உலகத்தைக் காக்கும். 'ம'காரம்- தமோ குணத்துடன், ருத்ரனாகிய புருஷனாக உலகத்தை சம்ஹரிக்கும். பிந்து (விந்து)- மகேஸ்வர சொரூபமாக, திரோ பாவத்தை (மறைத்தலை) செய்யும். நாதம் - சதாசிவ ரூபமாக எல்லாவற்றையும் அனுக்ரஹிக்கும் (அருளும்) சதாசிவ மூர்த்தி யாக விளங்கும்.'
மந்திரம், யந்திரம், தேவதை, பிரபஞ்சம்,குரு, சிஷ்யன் எனும் ஆறு வகை சாதனங்களால் சிவபெருமானை அறிந்து, ஐக்கிய அநுசந்தானம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான மந்திரம், தியானம் முதலியவற்றையும் உமாதேவிக்கு விளக்கி னார் சிவபெருமான்.
'இதய கமலத்தில் ஆதார சக்தி முதல், அந்தராகாசத்தில் 'ஓம்' எனும் ஏகாட்சர சொரூபியாக பிரம்மத்தையே தியானிப்பவர்கள், சிவலோகம் அடைந்து, சிவ ஞானத்தை
உணர்ந்து, சிவகதியைப் பெறுகிறார் கள். குருவை தியானித்து வணங்கி, அவர் மூலம் உபதேசம் பெற்று, தூய் மையான இடத்தில் பிரணவத்தை உச்சரித்து பஞ்சாட்சரம் ஜபித்து, பிறகு விதிப்படி பஞ்சாவரண பூஜை செய்ய வேண்டும்' என்று அம்பிகைக்கு உபதேசித்தார்.
அகரம், உகரம், மகரம் என்ற மூன்று எழுத்துகளால் ஆனது பிரணவம். அதாவது, அ+உ+ம எனும் எழுத்துகளின் சேர்க்கையால் ஆனது 'ஓம்'. 'அ' என்பது சிவனையும்; 'உ'- சக்தியையும்; 'ம'- சிவசக்தியரின் அருளையும் குறிக்கும். வரிசை முறையை மாற்றி உ+ம+அ என்று சேர்த்து உச்சரித்தால், 'உமா' என்ற சொல் உருவாகிறது. இதுவும் பிரணவத்தின் ஒரு வகையே. மந்திரங்களின் ஆதாரமாகவும் பொருளாகவும் பயனாகவும் இருப்பவள் சர்வேஸ்வரியே. எனவே இது, அவளது பெயராக அறியப்படுகிறது. இதனை, 'சக்தி பிரணவம்' என்றும் அழைப்பர்.
உமாதேவியின் வேண்டுகோளை ஏற்ற ஈசன் சுகாசனத்தில் அமர்ந்து, அவளுக்கு சிவாகமங்களை உபதேசித்த திருக்கோலமே சுகாசனமூர்த்தி. ஸ்வஸ்திகம், கோமுகம், பதுமம், வீரர், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் ஆகிய 9 வகை ஆசனங்களை ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. இடக்காலை இருக்கையில் மடித்து வைத்து, வலக் காலைத் தொங்க விட்டு அமர்ந்திருப்பதே சுகாசனம். சுகாசன மூர்த்தியின் சக்தி, 'தர்மார்த்த காம மோக்ஷ ப்ரதாயினி' என்று அழைக்கப்பெறுகிறாள்.
கயிலையில், உமாதேவிக்கு வேத ஆகமங் களை உபதேசித்த சிவபெருமான், ஒரு நாள்... தான் கூறிய மந்திரங்களுக்கு அவளிடம் விளக்கம் கேட்டார். உமாதேவியால் சொல்ல இயலவில்லை. கோபம் கொண்ட இறைவன், 'பூலோகத்தில் வேதியரின் மகளாகப் பிறந்து, மீண்டும் வேத ஆகமங்களை நன்கு பயின்று வர வேண்டும்' என்று அம்பிகைக்கு ஆணையிட்டார். உரிய காலத்தில் வந்து அவளை மணம் புரிந்து கயிலைக்கு அழைத்துச் செல்வதாகவும் அருளினார்!
ராஜமாணிக்க சதுர்வேதபுரம் என்ற ஊரில், வேதியர் ஒருவர் வாழ்ந்தார். இவர் பிள்ளை வரம் வேண்டி, தமது ஊருக்கு அருகில் உள்ள, 'இலந்தை வன'த்தில் கோயில் கொண்டிருக்கும் சிவனாரிடம் பிரார்த்தித்து விரதம் இருந்தார். அவர் முன் தோன்றி வரம் அளித்தார் இறைவன். அதன்படி வேதியருக்கு, மூன்று புதல்வர்களும், ஒரு பெண் ணும் பிறந்தனர். பெண் குழந்தைக்கு, 'மங்களநாயகி' என்று பெயரிட்டு வளர்த்தனர். தன் தந்தையிடம் வேத ஆகமங்களைப் பயின்றாள் மங்களநாயகி. அவள், திருமண பருவம் அடைந்ததும் இறைவனே மணமகனாக வந்து அவளை மணந்தார்.
கல்யாண கோலத்தில் இருந்த புதுமணத் தம்பதி, ஸ்ரீபார்வதி- பரமேஸ்வரனாக வேதியருக்குக் காட்சி தந்து அருளினர். ''உமது தவத்துக்கு மெச்சியே பார்வதியை உமக்கு மகளாக அளித்து வளர்க்கச் செய்தோம். அவளைத் திருமணம் புரிந்து மீண்டும் எம்மிடம் அழைத்துக் கொண்டோம். இனி, இந்த ஊரிலேயே கல்யாண சுந்தரியாகவும், கல்யாண சுந்தரனாகவும் கோயில் கொள்வோம். இந்த ஊருக்குக் கல்யாணபுரம் என்ற பெயர் வழங்கப்பெறும்'' என்று அருளினார் சிவபெருமான். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற தலம், 'திருஉத்தரகோசமங்கை' என்ற பெயரில் ராமநாதபுரம் அருகில் அமைந்து உள்ளது.
-(தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment