இந்த நிலையில், சிவபெருமானைக் குறித்து தவம் செய்து, திருமால் மீண்டும் சக்ராயுதம் பெற்றதாக சிவ மகாபுராணங்கள் குறிப்பிடுகின்றன.
கயிலை மலைச் சாரலில் பர்ணசாலை அமைத்து, சிவபூஜை செய்யத் தொடங்கினார் திருமால். அங் குள்ள 'மானச' (மானசரோவர்) தடாகத்திலிருந்து தினமும் ஆயிரம் தாமரைப் பூக்களைப் பறித்து வந்து சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தார் அவர். ஒரு நாள், ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்து விட்டார் சிவபெருமான். பூஜை நிறைவடையும் வேளையில், தாமரை மலர் ஒன்று குறைவதை அறிந்த திருமால் திகைத்தார். புதிய மலரைத் தேடிப் பறித்து வர முடியாத அந்த சூழலில்... மலர் போன்ற தன் கண்ணைப் பெயர்த்து அர்ச்சித்தார் (மலரைப் பிய்த்து அர்ச்சிக்கக் கூடாது; முழு மலரைக் கொண்டே அர்ச்சிக்க வேண்டும் என்ற விதியை இதன் மூலம் நாம் உணரலாம்!). திருமாலின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு வேண்டிய வரங்களையும், சக்ராயுதத்தையும் அளித்தார்.
சக்ராயுதம் பெற வேண்டி திருமால் அர்ச்சித்த சஹஸ்ரநாமம், சிவமகாபுராணத்தில் உள்ளது. இந்த ஆயிரம் பெயர்களால் அர்ச்சித்து சிவபெருமானை வழிபடுவோருக்கு சகல செல்வ யோகம் மிக்க பெரு வாழ்வு கிடைக்கும்.
சிவபெருமானை பூஜித்து திருமால் சக்ராயுதம் பெற்ற வரலாறு, 'திருவீழிமிழலை’ தலத்தில் நிகழ்ந்ததாக, அந்தத் தலத்தின் தலபுராணம் கூறுகிறது. கும்பகோணம் - பூந்தோட்டம் வழியில் அமைந்துள்ளது திருவீழிமிழலை. இந்தத் தலத்தின் தலவிருட்சம் வீழிச் செடி ஆதலால், இந்தப் பெயர் வந்தது. திருமால் வழிபட்ட தலம் ஆதலால், 'விஷ்ணுபுரம்’ என்றும் பெயர் (விஷ்ணுபுரம், தற்போது திருவீழிமிழலைக்கு அருகில் தனி ஊராக உள்ளது).
'வீழி வனத்தில்... வானுலகில் இருந்து கொண்டு வந்த விமானத்தில் ஜோதிர்லிங்க மூர்த்தியை எழுந்தருளச் செய்து வழிபட்டார் திருமால். இங்கு, 'மானச தடாகம' எனும் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் தாமரையை வளர்த்தார். தினந்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் வீழிஅழகரை அர்ச்சித்து வந்தார். ஒரு நாள், ஒரு மலர் குறைந்திருப்பது கண்டு தமது கண்ணையே பெயர்த் தெடுத்து சிவபெருமானை பூஜித்தார் திருமால்.
முன்பு ஜலந்தராசுரன் என்னும் அசுரனை வதைத்த சக்ராயுதத்தை தமக்கு அளிக்குமாறு சிவனாரிடம் வேண்டினார். (சிவபெருமான், சக்ராயுதத்தால் ஜலந்தரனை அழித்த வரலாறை, இந்தத் தொடரில் 'ஜலந்தராவத மூர்த்தி' பகுதியில் முன்பே விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம்) அந்த சக்கரமே சுதர்சனம் எனப்படும்.திருமால் வேண்டியபடியே ஜலந்தரனைக் கொன்ற சக்கரத்தை அருளினார் சிவபெருமான்’ என்று (திருவீழி மிழலை) திருத்தல மான்மியம் குறிப்பிடுகிறது.
திருமால் கண்ணைத் தந்து பூஜித்ததால், இங்குள்ள ஸ்வாமிக்கு
இந்தத் தலத்தில் நடைபெறும் பிரம்மோற்ச வத்தில் 2-ஆம் நாள்... திருமால், சிவபெருமானை பூஜித்து சக்ராயுதம் பெற்ற ஐதீக விழா கொண்டாடப்படுகிறது.
முதல் நாள் மாலை வேளையில், ஊருக்கு மேற்குப் புறம் உள்ள மானச திருக்குளக்கரையில் மலர்களை சேகரிக்கும் மகா விஷ்ணு இரவு கோயிலுக்கு வந்து சேர்வார்.
மறு நாள் மாலை வேளையில் ஆயிரத்தெட்டு பூக்களால் அர்ச்சனை செய்யும் வைபவம். அன்று முன்னிரவில், திருமாலுக்குக் காட்சி தந்து சக்ராயுதம் அருள்கிறார் மிழலை பிரான். இதைத் தொடர்ந்து, சிவ பெருமானின் சக்கர நடனத்தை திருமால் கண்டுகளிக்கிறார்!
தொண்டை நாட்டிலுள்ள ஒரு தலத்திலும் திருமால் சக்கரம் பெற்ற வரலாறு வழங்கப்பெறுகிறது.
காஞ்சிபுரம்- அரக்கோணம் வழியில் உள்ள தலம்- திருமாற்பேறு (தற்போது திருமால்பூர் எனப்படுகிறது). திருமால் வழிபட்டு பேறு பெற்ற தலம் ஆதலால், இந்தப் பெயர் பெற்றதாகக் கூறுவர். அரிச்சந்திரபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு.
'மாலினார் வழிபாடு செய் மாற்பேறு’ என்று திருஞானசம்பந்தரும், 'மணிவண்ணற்கு அருள் செய்தவர் மாற்பேறு' என்று அப்பர் பெருமானும் இந்தத் தலத்தைப் போற்றுகின்றனர்.
இங்கு, சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் ஸ்வாமி. மால்வணங்கீசர் மற்றும் மணிகண்டேச்வரர் ஆகிய திருநாமங்களுடன் திகழ்கிறார். அம்பிகையின் திருநாமம்
வலக் கரத்தில் தாமரை மலரும், இடக் கரத்தில் கண்ணையும் ஏந்தி சிவனாரை பூஜிக்கும் நிலையில்- நின்ற கோலத்திலான திருமாலின் உற்சவ விக்கிரகமும் இங்குண்டு.
திருச்சி அருகில் உள்ளதும் பாடல் பெற்ற திருத்தலமுமான திருப்பைஞ்ஞீலியில், 'முத்துமலை’ என்ற பாறையில் உள்ள சோமாஸ்கந் தருக்கும் 'சக்கரத்தியாகர்’ என்று பெயருண்டு.
இங்கும் விஷ்ணுவுக்கு, சிவபெருமான் சக்கரமளித்தார் என்ப தால், இப்பெயர் பெற்றதாக தல புராணம் குறிப்பிடுகிறது.
|
Saturday, 23 September 2017
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 36
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment