Saturday 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 46

                                        சுகாசனர்(தொடர்ச்சி..)


த்தரகோசமங்கை தலத்தில், இறைவன்- ஸ்ரீமங்கள நாதர் மற்றும் ஸ்ரீமங்களேஸ் வரர் ஆகிய நாமங்களிலும்; இறைவி- ஸ்ரீமங்களநாயகி மற்றும் ஸ்ரீபூண் முலையாள் என்ற நாமங்களுடன் அருள் பாலிக்கிறார்கள்.
'உத்தரம்' என்றால், மேலான உபதேசம் என்றும்; 'கோசம்' என்றால், வேதம் எனும் ரகசியம் என்றும்; மங்கை என்பது, ஸ்ரீபார்வதிதேவியைக் குறிக்கும் என்றும் கூறுவர். வேத ஆகம ரகசியங்கள், பார்வதிதேவிக்கு அருளிச் செய்யப்பட்ட இடம் ஆதலால் இந்தத் தலம், உத்தர கோசமங்கை என்று அழைக்கப்படுகிறது.
திருவாசகத்தில் 'நீத்தல் விண்ணப்பம்' என்ற பகுதியில், 'மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே!' என்று போற்றிப் பரவுகிறார் மாணிக்க வாசகர். இந்தத் தலத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கரையில், மணிவாசகர் சந்நிதி உள்ளது. இங்குள்ள கட்டுமலையில், சிவபெருமான் மடியில் அம்பிகை அமர்ந்திருக்க... அவளை அணைத்தபடி, வலக் கரத்தில் சின் முத்திரையுடன், உபதேசிக்கும் கோலத்தில் காட்சி தருகிறார் இறைவன் இதனை, 'மன்னுமாமலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளி யும்' என்று திருவாசகம்- கீர்த்தித் திருஅகவல் பகுதியில் மணிவாசகர் பாடுகிறார். 'மகேந்திர' என்பது, உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்று திரு வாசக உரையில் காண முடிகிறது.
சிவாகமங்களை உமாதேவிக்கே முதலில் உபதேசித்தார் சிவபெருமான். அம்பிகை அதை அருள்முகத்தால் பிற ஆன்மாக்களுக்கு உணர்த் தினாள் என்பர்.
இந்த வகையில், சிவபிரானுக்கு சிஷ்யையாகவும் ஆன்மாக்களுக்கு குருவாகவும் விளங்குகிறாள் அம்பிகை. சைவ மரபில் முதல் ஏழு குருமார்களில், அம்பிகையும் குருவாகப் போற்றப்படுகிறாள். இதன் அடிப்படையில்... உமாதேவியை அருகில் அமர்த்தி, அவளுக்கு ஆகமங்களை உபதேசிக்கும் மூர்த்தியை உமா உபதேச மகேஸ்வரர் என்றும் அழைப்பர்.
இந்தத் திருவடிவில், ஆறு திருக்கரங்களுடன் விளங்குகிறார் ஈசன். ஐந்து கரங்களில்... மான், சர்ப்பம் (பாம்பு), ஜப மாலை, தண்டம், மழு ஆகியன திகழ, மற்றொரு கரத்தில் சின்முத்திரை யுடன் காட்சியளிப்பார் என்று சிவபராக்ரமம் குறிப்பிடுகின்றது.
சில்ப ரத்னம், ஸ்ரீதத்துவநிதி ஆகியவற்றில் சுகாசன மூர்த்தி திருவுருவம் விவரிக்கப் பட்டுள்ளது. இந்த மூர்த்தி ஒரு முகமும், மூன்று கண்களும், நான்கு திருக்கரங்களும் கொண்டு பத்ர பீடத்தின் மீது அமர்ந் திருப்பார்.
இவர், சோமாஸ்கந்த மூர்த்தத்தில் தேவியும், கந்தனும் நீங்கிய வடிவமாகக் காட்சி தருவார் என்பர்.
காஞ்சி ஸ்ரீகயிலாயநாதர் கோயிலில், சுகாசன மூர்த்தி வடிவம் காணப் படுகிறது. சுகாசன மூர்த்தியை வழிபடுவோர் வாழ்வில் சகல சுகங்களையும் அடைந்து இன்புறுவர் என்கின்றன ஆகமங்கள்.
உமாசகிதர்
( உமா மகேசர் )
மயமலை அரசனான பர்வதராஜனும் (இமவான்), அவன் மனைவி மேனையும் புத்திரப்பேறு வேண்டி தவம் செய்தனர்.
'தான் மீண்டும் பூவுலகில் பிறந்து, சிவனாரை பூஜித்து அவரை மணக்க வேண்டும்!' என்று தன்னிடம் வேண்டிய பரமேஸ்வரியை, இமவான் தம்பதிக்கு மகளாகப் பிறக்குமாறு அருள் பாலித் தார் ஈசன். அத்துடன், உரிய நேரத்தில் தாம் வந்து அவளை மணப்பதாகவும் வாக்களித்தார்.
இமயமலையில், 'பத்மை' எனும் பொய்கையின் கரையில், தவம் செய்து வந்தான் பர்வத ராஜன் (இமவான்). ஒரு நாள்... ஆயிரத்தெட்டு இதழ்கள் கொண்ட தாமரை மலரின் மீது மரகத மேனியுடன் அழகுக் குழந்தையாகத் தோன்றினாள் அம்பிகை. அந்தக் குழந்தையைக் கண்ட அரசன் மகிழ்ந்தான். குழந்தையைத் தூக்கி வந்து தன் மனைவியிடம் கொடுத்தான். குழந்தைக்கு, 'பார்வதி' என்று பெயரிட்டு அணிமணிகள் சூட்டி, தங்கத் தொட்டிலில் இட்டு தாலாட்டி- சீராட்டி வளர்த்தனர். குழந்தைக்கு ஐந்து வயது நிரம்பியது. ''தந்தையே! சிவபெருமானைக் குறித்து தவம் செய்து, என்னை மணந்து கொள்ளுமாறு அவரிடம் பிரார்த்திக்கப் போகிறேன். அதற்கான தவச் சாலையை அமைத்துக் கொடுங்கள்!'' என்று பர்வதராஜனிடம் வேண்டினாள் பார்வதி.
பர்வதராஜன் துணுக்குற்றான். மகளுக்குப் பலவாறு அறிவுரை கூறினான். ஆனால், பார்வதி தேவி விடாப்பிடியாகத் தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டாள். அவள் தவம் செய்ய பர்ணசாலையை அமைத்துக் கொடுத்ததுடன், அவளுக்குக் காவலாக கன்னிப் பெண்கள் பலரையும் நியமித் தான் அரசன். பார்வதியாளின் கடுந்தவம் ஆரம்பமானது!
அம்பிகையைப் பிரிந்த பெருமான், கல்லால மரத்தடியில் யோக நிலையில் அமர்ந்தார்.
இந்த நிலையில்... சிவபெருமானிடம் அரிய வரங்களைப் பெற்ற சூரபத்மன் ஆயிரத்தெட்டு அண்டங்களையும், அரசாட்சி செய்யும் கர்வத்து டன், அட்டகாசம் புரியத் தொடங்கினான் அதைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் யோக நிலையில் இருந்த பெருமானிடம் தஞ்சம் புகுந்தனர்.
சிவபெருமான் தவம் மேற்கொண்டிருந்ததால் தேவர்களும், மனிதர்களும், விலங்குகளும் காம இச்சையற்று இருந்தனர். அதனால் உலகத்தில் சிருஷ்டி (படைத்தல்) யும் நடைபெற இயலவில்லை. பிரம்மா, விஷ்ணு ஆகியோருடன் சேர்ந்து 'இதற்கு வழி என்ன?' என்பதை தேவர்கள் யோசித்தனர். சிவபெருமான், பார்வதிதேவியை மணந்து ஒரு குமாரனைப் பெற்றால், இதற்கு விமோசனம் உண்டாகும் என்பதை உணர்ந்தனர்.
சிவபெருமானின் குமாரன் மட்டுமே சூரபத் மனை அழிக்க வல்லவர்! சிவனாரின் தவம் கலைந் தால்தான் தங்களது விருப்பத்தை சாதிக்க முடியும். ஆகவே மன்மதனை அனுப்பி, அவரது தவத்தைக் கலைக்கச் செய்வது என்று தீர்மானித்தனர்!
-(தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment